உங்கள் வருகைக்கு நன்றி...
Showing posts with label அமீரகம் (துபாய்). Show all posts
Showing posts with label அமீரகம் (துபாய்). Show all posts

Sunday, March 18, 2012

“கின்னஸ் புத்தகத்திற்கு கிடைத்த கின்னஸ் ரிக்காட்”

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த சாதனையைப் போல் யாரும் செய்தது இல்லை என்பது இந்த உலகத்தின் பல நாடுகளில் வாழும் பல அறிஞர்களின் கருத்தாகும்.
மனித குலத்திற்கு விடிவெள்ளியாக மனித நேயத்திற்கு மாணிக்கமாகத் திகழ்ந்த கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு புதையலாகவே இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்துக் கொள்ளவதற்கு செய்யப்படும் ஆய்வுகள் அதிகமதிகம். அந்த ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை என்பதே உண்மை.
தினம் பல்லாயிரம் கோடி மக்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரே பெயர் “முஹம்மத்”(ஸல்) அவர்கள். அந்தளவு மக்களின் அன்பையும் மக்களின் ஆர்வத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களின் பெயரில் செய்யப்படும் ஒவ்வொரு வெளியீடும் அந்த வெளியீட்டாளருக்கே அல்லாஹ் கண்ணியத்தையும் கௌரவத்தையும் தந்துக் கொண்டிருக்கிறான்.

அந்த வகையிலே ஐக்கிய அரபு அமீரகம் பதினோரு மில்லியன் திரஹம் சிலவில் (இந்திய ரூபாய் மதிப்பு பதிநான்கு கோடியே என்பத்தைந்து லட்சம்) நானூற்று இருபது பக்கங்களில் ஆயிரம் கிலோ கிராம் எடையில் ஐந்து மீட்டர் நீலம் நான்கு மீட்டர் அகலம் கொண்ட இந்த உலகின் மிகப்பெரிய நூல் ஒன்றை அதிகமான செலவில் தயாரித்துள்ளது.
அந்த நூல் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறும் நூலாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நூலை ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியமைச்சர் ஷேக்ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்கள் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு உயர் அரசு அலுவலர்களும் மன்னர் குடும்பத்தினர்களும் மற்றும் பன்னாட்டு தொழிலதிபர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ஷேக்ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் சமூகம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஐம்பதாயிரம் சாதாரன பிரதிகளை தனது சொந்த செலவில் வெளியிடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நூலை வெளியீட்டாளர்களின் கருத்தானது “இஸ்லாத்தின் இறுதி நபியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் காணப்படுவதுடன்,சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் புத்தகம் இந்த உலகத்தில் நடந்த எத்தனையோ விசயங்களை சாதனைகளாக பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கின்னஸ் தனது புத்தகத்தில் இடம் பெறச்செய்து தனது புத்தகத்திற்கு கின்னஸ் ரிக்காட்டை தனக்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே சாலச் சிறந்தது.

இந்நூலை வெளியீட்டு பெருமானார் (ஸல்) அவர்களின் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தி இவ்வுலகிற்கு இஸ்லாமிய நபிநேச விழிப்புணர்வை ஏற்படுத்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு மற்றும் நூல் குழுவினர்களுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, January 19, 2012

தொல்.திருமாவளவனுடன் அமீரகத் தோழர்கள் சந்திப்பு


அமீரகத்தில் நான்கு தினங்கள் சுற்றுப் பயணமாக ஊடகத்துறையை தங்களுக்கென அமைத்துக் கொள்வதற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வருகைப் புரிந்திருந்தார்.

தாய்மண் வாசகர் வட்டத்தின் சார்பாக அவருக்கு துபாய் கராமாவில் உள்ள சுவிஸ்ட் ஸ்டார்பவனில் 18/1/2012 அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்நிகழ்சிக்கு நண்பர் குத்தாலம் அசரப்அலி அவர்களுடன் சென்றிருந்தேன். தொல்.திருமாவளவனுடைய சொற்பொழிவை அதிகம் நான் கேட்டதில்லை. தலித்துக்கள் முன்னேற்றத்திற்காக சட்டம், சமூகம், அரசியல் என பாடுபடக்கூடிய செயல் வீரர் என்பதை அறிந்திருக்கிறேன்.

பல அமைப்புகளிலிருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் துவக்கம் ஏழு மணி என்று அழைப்பு கொடுத்திருந்தனர்; ஆனால் ஏழு மணிக்கு பலர் வரவில்லை சொன்ன நேரத்திற்கு திருமாவளவன் வந்துள்ளார்; ஆனால் ஆட்கள் வராததினால் அரை மணி நேரத்திற்குள் மற்றொரு வேலையை முடித்து விட்டு வந்துவிட்டார் திருமா.
நேரத்தின் மீது அவர் கொண்டிருக்கும் பேணுதலை அறிய முடிந்தது.

அதே போன்று மேடையில் அமரும்போது தனது கட்சிக்காரர்களை மட்டும் அமரச் செய்யாமல் தன்னுடன் குத்தாலம் அசரப்அலியையும் அமர வைத்து இஸ்லாமிய சகோதரர்களுடன் நாங்கள் சமத்துவமாக சகோதரத்துமாக நட்புத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை அவர் வாய்வழி சொல்லாமல் நிலைநாட்டினார்.

தொல்.திருமாவளவனின் உரை மனம் திறந்த மடலாகவே இருந்தது. வளைகுடாவில் வாழும் தமிழர்களின் பிரச்சனைகள் மற்றும் நலனுக்காக எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் வயலார் ரவி ஆகியோருடன் பேசி இருப்பதாக கூறினார். சவூதி அரேபியா ஜித்தாவில் பாதிக்கப்பட்ட 200 க்கும் அதிகமான தமிழர்களை மீட்பதற்கு முயற்சி எடுத்து மீட்டுள்ளார் என்பதை தெரிவித்தார்.
என்னோடு S.M.பாரூக் மற்றும் ஹனீபா

இந்திய ஊடகங்கள் எங்கள் கட்சிகளின் நலப் பணிகளை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்ல மறுக்கிறது காரணம் நாங்கள் தலீத் என்பதற்காகவா? தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம் ஊர்களில் நான்கு தினங்கள் முகாமிட்டு ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, நேரடியாக பாதிப்புகளை கண்டு உரிய நிவாரணங்கள் பெறுவதற்கு போராடி இருக்கிறோம் இதை எந்த ஊடகம் செய்தியில் வெளியிட்டது? ஒரு பண்டிகையின் காலத்திலும் கூட வாழ்த்துச் செய்தியை பத்திரிக்கைகாரர்களை அழைத்து சொல்லும்போதும் கூட அனைவரும் அந்த செய்தியை வெளியிடுவதில்லை இருட்டடிப்பு செய்கிறார்கள்.

திருவாரூர் செல்லும் வழியில் ஒரு பத்து நிமிடங்கள் காரை நிறுத்தி காரிலிருந்தவாறு புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் கை அசைத்த தலைவரின் காட்சியை நாள் முழுவதும் அவர்களின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

நேற்று வந்த கட்சிகளின் செய்திகளை முதல் பக்கத்தில் முதல் வரியில் போடக்கூடிய ஊடகங்கள் அவர்களுக்கு முன்பிருந்தே இயங்கக் கூடிய எங்கள் கட்சி செய்திகளை இரண்டாம் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுவது ஏன்? (ஒரு சீனியாரிட்டி கிடையாதா?)

கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களின் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும் என பல முறை கலைஞரிடம் மனு கொடுத்துள்ளேன் ஆனால் இன்று வரையில் அதை நிறைவேற்ற வில்லை ஆனால் எங்கள் விடுதலை சிறுத்தை அமைப்பு சார்பாக நான்கு ஆண்டுகளாக கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களின் பெயரில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு விருது வழங்கி வருகிறோம். அதுமட்டுமல்ல ஆண்டுதோறும் நோன்புக் காலங்களில் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பதற்கு பல கட்சிக்காரர்களை அழைப்பார்கள் ஆனால் நாள் முழுவதும் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கட்சியின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் என்று இஸ்லாமியர்களுடன் தங்களுக்கு இருக்கும் இணக்கத்தை சொல்லிக் காண்பித்தார்.

தமிழர்களிடம் ஒற்றுமை என்பது இல்லை; முல்லை பெரியார் விசயத்தில் கேரளா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர்களிடம் உள்ள ஒற்றுமை, 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர்களிடம் இல்லை. முல்லை பெரியார் விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தில்தான் இருக்கிறார்கள் ஆனால் அந்த கருத்தை பிரதமரிடம் வலியுறுத்துவதற்கு தனித்தனியே செல்கிறார்கள் எல்லா கட்சிகளும் ஒன்றாக செல்லலாம் என அழைத்தால் யாரும் முன்வரவில்லை என தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தினார்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையைப் பற்றி கேட்டபோது நாங்கள் அணு சக்திக்கு எதிரானவர்கள் ஆனால் மின் சக்திக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை ஆணித்தரமாகக் கூறினார்.

ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலையை 2020 க்குள் மூடப்போவதாக செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் ஏன் மூடவேண்டும்? அணு உலையின் கழிவுவை 15ஆயிரம் ஆண்டுகள் வரை பாதுகாக்க வேண்டுமாம். இல்லையெனில் மிகப்பெரிய ஆபத்துகள் மனித இனத்திற்கு இருக்கிறது. இன்று நாம் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்கா வரக்கூடிய புதிய முறையினருக்கு மிகப்பெரிய ஆபத்தை கொடுத்துவிட்டு போக வேண்டுமா? மின் சக்தி தயாரிப்பதற்கு மாற்று வழிகள் எவ்வளவோ இருக்கிறது காற்றாலை, சூரிய வெப்பத்திலிருந்தும் தயாரிக்கலாம்.

அணு உலையின் மூலம் கிடைக்கக் கூடிய பலன் வெறும் இரண்டரை சதவீதம் மட்டுமே? அணு உலையின் மூலம் அணு குண்டகள் தயாரிப்பதற்காக அணு உலைகளை அரசுகள் பயன்படுத்துகின்றன.

எப்படி இருந்தாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் அரசு செயல்படுத்தும். இந்த அணு மின் நிலையத்தை முதலில் கேரளா கொச்சியில் போடுவதற்கு இடமெல்லாம் தேர்வு செய்து முடிவானது ஆனால் கேரள மக்கள் அதை எதிர்க்கவே தமிழகத்தில் கூடங்குளத்தை தேர்வு செய்தார்கள். அப்போது அதை பத்து பேர்கள் கொண்ட ஒரு குழு மட்டுமே எதிர்த்தார்கள். வேறு யாரும் எதிர்க்கவில்லை. இன்று பலரும் எதிர்பதற்கு காரணம் அதில் அரசியலும் இருக்கிறது வியாபாரமும் இருக்கிறது.

ரஷ்யாவுடன் உள்ள அணுமின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு இத்தாலியுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. என்று வெளிப்படையாக பேசினார்.

ஈழத்தமிழர்களின் கேள்விகளும் கேட்டார்கள். தமிழ் மற்றும் தமிழ் தேசியம் இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவுப் படுத்தினார்.
குத்தாலம் அசரப்அலி

இந்நிகழ்ச்சியின் இறுதியில் குத்தாலம் அசரப்அலி பேசுகையில் கேரளர்களிடம் ஒற்றுமை இருந்ததினால் அணுமின் நிலையம் அங்குவரவில்லை தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாததினால் கூடங்குளம் இன்று பிரச்சனையாக இருக்கிறது என்று கூறினார்.

ஒரு அரசியல் தலைவரை பார்த்த திருப்பதியை விட ஒரு மனித நேயமிக்க மனிதரை சந்தித்த திருப்தியுடன் நன்றியுரையைக் கேட்களாளேன்.

Saturday, December 3, 2011

பங்கு சந்தை அமீரகத்தில் ஒரு விழிப்புணர்வு

இந்திய பங்கு சந்தையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அமீரகத்தில் பல அமைப்புகள் இருந்தாலும் அவைகள் தங்கள் ஆண்டு விழாக்களுக்கு சினிமா சம்பந்தப்பட்டவர்களையும் இலக்கிய சம்பந்தபட்டவர்களையும் மட்டுமே அழைத்து வந்து அமீரக தமிழ் மக்களுக்கு கேளிக்கைகளாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, December 1, 2010

எனக்கு 30 அமீரகத்துக்கு 39

டிசம்பர் 2 இது ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அமீரகத்தின் தேசியதினநாள் ஆனால் எனக்கும் அமீரகத்திற்கும் உறவு ஆரம்பித்தநாள் 1980 டிசம்பர் 2 அப்போது எனக்கு வயது 17.

கல்லூரிக்குள் பதிக்க வேண்டிய கால்களை பாலைவனத்தில் பதித்த அந்த வயதில் என்னிடம் எது இருந்திருக்கும் என்று இன்று நினைவுப் படுத்திப் பார்க்கின்றேன்.

அன்னை ஊட்டிய அமுதத்துடன் அன்னை மொழியாம் தமிழ்மொழியைத் தவிர ரொம்பவும் குறைவான ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு எந்த தைரியத்தில் வந்தேன் என்பது இன்னும் தெரியவில்லை.

வீட்டுவேலைக்கு பெண்கள் மட்டுமல்ல நான் அமீரகம் வந்தபோது என்னைப்போன்ற தமிழ் இளைஞர்கள் பெரும்பாலோர் ஹவுஸ்பாய்கள் தான். இதை இங்குபதிவு செய்வதில் நான் வெட்கப்படவில்லை.

முன் அனுபவமே இல்லாத எனக்கு இந்த வேலையை கற்றுக் கொள்வதற்கு கஸ்டமாக இருக்கவில்லை வேலையுடன் அரபு மொழியையும் கற்றுக் கொண்டேன்.

துபாய் விமானநிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது கண்ணெதிரே தெரிந்த பெரிய கட்டிடம் டிரேட் சென்டர்.(இன்று அது சிறிய கட்டிடமாக ஆகிவிட்டது) எங்கு பார்த்தாலும் மணல் திட்டுகள்.


இந்த 30 ஆண்டுகளில் அமீரகத்தின் வளர்ச்சி அபரிமிதமானது.பாலைவனத்தின் மணல் சோலைவனமாக சொர்க்க பூமியாக மாறிப்போனது.இந்த மாற்றத்திற்கு கடுமையான உழைப்பை இந்தியர்களைப் போல பலநாட்டவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

பாலைவனம் மட்டும் சோலைவனமாக மாறும்போது அதைமாற்றியவர்களின் வாழ்க்கையும் சோலைவனம்தான்.

எத்தனையோ வீடுகளில் கன்னியர்கள் கரையேறினார்கள் பலர் கடனிலிருந்து விடுதலையடைந்தார்கள் வாடகை வீடு சொந்த வீடானது வாகனங்கள் சொந்தமாகின விளைநிலங்கள் வீட்டுமனைகளாகின வங்கிக் கணக்குகள் அதிகரித்தன வாழ்க்கையில் ஆடம்பரங்களும் ஆர்பரித்தன இத்தனையும் இந்த வளைகுடாவிற்குள் நுழைந்தவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல் அன்னிய சிலவானி அதிகரிப்பில் அவர்களின் நாடுகளும் வளம்மடைந்துக் கொண்டிருக்கிறது.

இந்த முப்பது ஆண்டுகளில் என் நிலை என்ன?
கல்லூரி கற்றுத்தரவேண்டிய பாடங்களை பாலைவனம் கற்றுத்தந்தது.
ஹவுஸ்பாய் வேலை ஆனால் அதுதான் எனக்கு கற்றலின் ஆர்வத்தை கற்றுத்தந்தது எனக்குள் தேடலை ஏற்படுத்தியது தாய்மொழியை தழுவதற்கு தடம் அமைத்தது.


அமீரகத்தில் 1980-ல் அறிமுகமான முதல் நண்பன் அத்திக்கடை சிஹாபுதீன் இவனிடமிருந்து கற்றுக் கொண்டது பொறுமை பெற்றுக் கொண்டது நட்பு. அவனுடைய நண்பன் அஜீஸ்ரஹ்மான் சென்னைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான் இவன் நட்பை கடிதங்களில் வளர்த்து வளமாக்கினேன்
இவர்களின் தொடர்புகள் இன்றுமிருக்கிறது.

ஹவுஸ்பாய்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பண்டிகையாய் இருக்கும் அன்று மதியத்திற்கு பிறகு அரைநாள் விடுமுறையுடன் பத்து திரஹம் சிலவுக்கு தருவார்கள் நண்பனுடன் அல்சாப் தியேட்டரில் தமிழ்படம் பார்க்க ஆர்வத்துடன் செல்வோம். வரிசையில் நின்று டிக்கேட் எடுக்கும் பழக்கும் 3ஜி காலத்திற்குள் வந்தும்கூட அன்றும் மரபு மாறவில்லை.

நைப்ரோட் தமிழ் பஜாரில் மாலை 6.00 மணியிலிருந்து திருவிழா கூட்டம்போல் எங்குப் பார்த்தாலும் பிரமச்சாரிகளின் கூட்டமும் கூச்சலுமிருக்கும் மொத்த இந்தியாவையும் வெள்ளிக்கிழமை நைப் பஜாரில் கண்டுகளிக்கலாம்.

இரவு பத்து மணிக்குள் மீண்டும் ஹவுசுக்குள் பாய்கள் சென்றுவிடவேண்டும் நண்பர்களுடன் ஊர்கதைகளை ஒவ்வொருவரும் பறிமாறிக் கொள்வோம் ஊரில் இருக்கும் நண்பர்களின் கடிதங்கள் தங்களையும் ஹவுஸ்பாய்களாக அழைத்துக் கொள்ள வேண்டுவார்கள் விசாவிற்கு பேரம்பேசப்பட்டு வியாபாரம் நடக்கும்.

படிக்க வேண்டிய 17 18 வயது நிரம்பிய இளைஞர்கள் பறப்பதற்கு ஆசைப்பட்டு ஹவுஸ்பாய் வேலைகளில் அகப்பட்டு அவதிப்பட்டவர்களின் கதைகள் ஏராளம்.

அரபிகளின் அடக்கு முறைகளும் மனிதாபிமான மற்ற செயல்முறைகளும் சிலருக்கு முதலாழியாக வாய்த்திருக்கிறது அவர்களின் கதைகளைக் கேட்டால் கண்களில் கண்ணீரல்ல செந்நீர் வரும்.

ஹவுஸ்பாய் வாழ்க்கையில் எனது ஒய்வுநேர பொழுதுபோக்கு புத்தகம் வாசித்தலாக இருந்தது வார இதழ்களை தவறால் வாசிப்போம் சில நேரங்களில் சிறுவயதில் அம்மா சொன்ன கதைகளை நினைவுப் படுத்தி எழுதுவேன்.

அந்த எழுத்துப்பழக்கம் எழுத்தாளனாகவேண்டும் என்ற எண்ணத்தை துளிரவிட்டது.1979 – 80 களில் தமிழகத்தில் பெரும்பாலான இஸ்லாமிய இல்லங்களில் டேப்ரிக்காடரில் கிஸாக்கள் ஒலித்துக் கொண்டிருந்தது இரவு நேரத்தில் அந்த கிஸாக்களை அம்மாவுடன் கேட்பேன் அந்தத் தருணங்களில் மனம் பதிவு செய்த கதைகளை நினைவுப் படுத்தி கதைகளாக எழுதினேன்.

1984 –லில் டெலிபோன்டைரி என்ற நாவலை 140 பக்கங்களில் எழுதி புத்தகமாக்கி துபாயில் தமிழ் கடைகளில் விற்பனைக்கு போட்டேன் அதற்கு விளம்பரம் செய்யவேண்டி அல்சாப் தியேட்டரில் சிலேடு போட்டேன்.

இந்த நாவல் பல நண்பர்களை அறிமுகப்படுத்தியது.எல்லா தரப்பு நண்பர்களுடன் நட்பு இருந்தாலும் மனம் எல்லா நட்புகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருமுறை வெள்ளிக்கிழமை தமிழ்பஜாரில் ஒருநபர் கைகளில் சில புத்தகங்களை வைத்துக் கொண்டு நின்றார் அது என்கண்களை உருத்தியது அவரிடம் சென்று அந்த நூல்களை எங்கு வாங்குனீர்கள் என்று கேட்க ஊரிலிருந்து வரவழைத்தேன் என்றார் படிப்பதற்கு தருகிறீர்களா? என்று கேட்டதும் என்கையில் உள்ள புத்தகங்களை வாங்கிக் கொண்டு கொடுத்தார் அது பெரியவர் ராம்மூர்த்தி என்பவர் எழுதிய மனமே நீவா என்ற நூல்.

இந்த நூல் என்னிடம் ஒரு மாற்றத்தை தேடலை கொடுத்தது.

குறிப்பு – முப்பதாண்டு அமீரக வாழ்க்கை அனுபவங்களை தொடராக தொடர்கிறேன்.