உங்கள் வருகைக்கு நன்றி...
Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Tuesday, February 21, 2012

கபீர்தாசரின் காந்தன் காதல்


என் நண்பர் திருச்சி சையது சில நூல்கள் எழுதியும், தொகுத்தும் உள்ளார். அதில் சமீபத்தில் வெளியீட்ட “கபீரின் 100 பாடல்கள்” என்ற நூலை எனக்கு தந்தார்.
படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது 100 பாடல்களும் நம்மிலே சுய சிந்தனையை ஏற்படுத்தக்கூடிய வரிகள்… இந்த பாடல்களை படிக்கும்போது எனக்கு நினைவில் தோன்றிய நபி மொழி
“தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிவான்”
இறைவனை அறியவேண்டுமானால் மனிதன் தன்னை அறிய வேண்டும் என்ற தத்துவத்தையே அந்த நூல் கூறுகிறது.

கபீர்தாசன் என்று பெயர் வைத்திருக்கும் இவர்
வாழ்ந்த காலம் (கி.பி.1398 - 1518) இவருடைய கவிஞானங்கள் இந்தி பக்தி இலக்கியத்தில் தனி சிறப்புக்குரியதாகும்.
கபீர் என்பது அரபிச் சொல்லாகும் அதற்கு பெரியது என்று பொருளாகும். பெரியது என்பது இறைவனைக் குறிப்பிடுகிறது

இவரை சிறுவயதில் ஓர் இஸ்லாமிய நெசவாளர் எடுத்து வளர்த்ததாக கூறப்படுகிறது. மனைவியோடும், குடும்பத்தோடும் இஸ்லாமியச் சூழலில் நெசவுத் தொழிலைச் செய்து வாழ்ந்த இவர் இளமை முதலே இறைநேயம் உடையவராய் விளங்கினார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது.

இவருடைய பாடல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் பேராசிரியர் எழில்முதல்வன் எளிய தமிழில் நமக்கு தந்துள்ளார்.
கபீர்தாசரின் சிந்தனையை அறிவதற்கு இந்நூல் வாய்ப்பை அளித்திருக்கிறது. அதிலிருந்து சில வரிகள்..

ஓ!
பணியாளனே என்னை நீ எங்கே தேடுகிறாய்?
இதோ நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.

நான் திருக்கோயிலிலும் இல்லை மசூதியிலும் இல்லை காஃபாவிலும் இல்லை கைலாயத்திலும் இல்லை.

நான் சடங்குகளிலோ அவை சார்ந்த சம்பிரதாயங்களிலோ இல்லை. யோகப் பயிற்சியிலோ துறவிலோ இல்லை.

நீ என்னை நாடும் உண்மை ஆர்வலனாக இருப்பின் உடனடியாகக் காணமுடியும். கண்ணிமைப் போதிலோ கைநொடிப் போதிலோ என்னைச் சந்திக்க முடியும்.
கபீர் கூறுகிறார். ஓ சாதுவே இறைவன் உயிரினுக்கும் உயிராக விளங்குகிறான்.!

இறைவனைப் பற்றி மிகத் தெளிவாக இந்த கவிதை வரிகள் கூறுகிறது. இறைவனை நாம் எங்கே தேடுகிறோம் என்பதை இக்கவிதை சொல்கிறது.
இதையே திருமறையில் “உம் பிடரி நரம்பிற்கும் மிக சமீபமாக இருக்கிறேன்” என்று இறைவன் கூறியுள்ள நுன்மைமிக்க
அந்த திருவசனம் நம் சிந்தையில் நிழலாடுகிறது.

ஒவ்வொரு கவிதையிலும் இறைக்காதலை வெளிப்படுத்தியுள்ளார். கவிதையின் இறுதி வரிகளில் கபீர் சொல்கிறார் என்ற “நச்” வரிகள்..

சில உதாரண கவிதைகளையும் விளக்கத்திற்காக கூறியுள்ளார்

ஆறும் அதன் அலைகளும் ஒரே நுரைத்திரள் கொண்டனவே. அங்ஙனம் இருக்க ஆறும் அலைகளும் வேறு வேறாக முடியுமா?

அலைகள் மேலெழும் போதும் தண்ணீர். அது கீழே விழும் போதும் தண்ணீர்தான். சொல்லுங்கள் ஐயா வேறுபாடு என்ன இருக்கிறது?

அலைகள் என்று பெயர் பெற்றிருப்பதாலேயே அது தண்ணீரல்ல என்று யாராவது கருதுவார்களா?

தனிமுதலாம் பிரம்மத்தினுள் உலகங்கள் யாவும் மணிமிடைப் பவளம்போல் கோக்கப்பட்டுள்ளன. ஞானக்கண் உடையோர்க்கு இது ஜெபமாலையாகவே காட்சிதரும் என்கிறார்.

இறைவன் எங்கோ தனித்து இல்லை அனைத்திலும் சூழ்ந்துள்ளான் ஒவ்வொரு பொருளிலும் ஞானக் கண்ணுடன் பார்த்தால் இறைவனை கண்டுக் கொள்ள முடியும் ஜாதிமத வேறுபாடுகளினால் பிளவுபட்டிருக்கும் மனித சமுதாயம் ஒர் உண்மையிலிருந்து வெளியானவை நாமரூபங்களில் வேறுப்பட்டிருந்தலும் உண்மை ஒன்றுதான் என்பதையே கூறுகிறார்.

ஒருவர் இறைஞானத்தை யாரிடமிருந்து எப்படி பெறுவது அதை போதிக்கக் கூடிய குரு எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறார்.

ஓ!
சகோதரனே ஓர் உண்மையான குருநாதருக்காக என் இதயம் ஏங்கி நிற்கிறது. அவரே உண்மை அன்பாம் கோப்பையை முற்றிலும் நிரப்பி தானும் பருகி எனக்கும் தருகிறார்.

என் விழிகளை மறைக்கும் படலத்தை விலக்கி பிரம்மத்தைத் தரிசிக்கும் பார்வையை வழங்குகிறார்.

அவர் தன்னுள்ளே அண்டங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். மீட்டப்படாத பரம்பொருளின் இராகத்தை நான் செவிமடுக்கும்படி செய்கிறார்.

சுகமும் துக்கமும் ஒன்றே என எனக்கு உணர்த்துகிறார். அன்பில் தோய்ந்த சொற்களால் என் இதயத்தை நிரப்புகிறார்.

கபீர் சொல்கிறார்… பாதுகாப்பான புகலிடம் நோக்கிப் பரிவோடு அழைத்தேகும் குருநாதரைப் பெற்றவனே பயமற்றவன் பாக்கியவான் என்று கூறுகிறார்.

மனித வாழ்க்கையில் எந்த ஒரு செயலும் குருயின்றி நடப்பதில்லை ஒவ்வொன்றிலும் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது.
குரு என்பது மனித வாழ்க்கையின் வழிகாட்டல்.

கபீர்தாசன் போன்ற ஞானிகளும், சூஃபியாக்களும் இன்றும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேடல் உள்ளவர்களின் கண்களுக்கு மாத்திரமே தென்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை!

நல்லதொரு நூலை வெளியீட்ட அன்பு நண்பர் திருச்சி சையது அவர்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் தந்த பேராசிரியர் எழில்முதல்வன் அவர்களுக்கும்தமிழ்அலை இஷாக் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

Tuesday, January 31, 2012

விருது பெற்ற தீரன் திப்புசுல்தான்

கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த மாதத்தை கௌரவிக்கும்முகமாக துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் சுப்ஹான மௌலிது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்புமிகு மவ்லிது மஜ்லிஸில் நேற்றைய தினம் (30/01/2012) சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கண்ணியமிக்க சகோதரர் டாக்டர் காவியத்திலம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கு சையதுஅலி மௌலானாவும் ஜாஹித் அலி மௌலானாவும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
இவர்களைப் பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் என்றாலும்
சாதனையளர்களை ஒவ்வொரு சாதனையின் போது எழுதுவதில் எழுதக்கூடியவர்களுக்கு ஊக்கமளிக்கிறது என்பதே உண்மை. அதனாலே என்னை ஊக்கப்படுத்திக் கொள்வதற்கு இதோ...

இருபதுக்கும் அதிகமான தமிழ் நூல்களை எழுதியவர் அதில் எட்டு காவியங்களை படைத்திருப்பவர். குறிப்பாக கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் சரிதையை “திருநபி காவியம்” என்ற பெயரில் எழுதி அமீரகத்தில் வெளியிட்டார்கள்.
அமர்ந்த இடத்தில் ஆயிரம் பாக்களை எழுதும் ஆற்றலைப் பெற்றவர்.
தமிழ்மீது கொண்ட ஆர்வத்தினால் மருத்துவ சேவையும் அத்துடன் தமிழ் இலக்கிய சேவையும் செய்பவர். தற்போது மருத்துவ சேவையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு தமிழ் இலக்கிய சேவையை மட்டும் தொடர்ந்து செய்துக் கொண்டு வருபவர்.

இலங்கையில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையமும் நீர்கொழும்பு இந்து மாமன்றமும் மன்னாரு தமிழ் சங்கமும் இவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

மதம் கடந்த மனிதநேயமிக்க மனிதராக திகழக்கூடிய இவர் பண்டாரவன்னியன் காவியத்தையும் படைத்துள்ளார்.

இந்திய சுதந்திர வீரர் தீரன் திப்புச்சுல்தானைப் பற்றி எழுதிய காவியத்திற்காக சென்ற ஆண்டு “அரச இலக்கிய விருது” இலங்கை அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. (இது இந்தியாவில் வழங்கப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு சமமானது).

இனி அடுத்து மூஸா நபி அவர்களைப் பற்றிய காவியத்தை எழுதி முடித்துள்ளார்கள். விரைவில் இந்த காவியம் நூல் வடிவம் பெறும். கிடைக்கும் ஒய்வு நேரத்தில் பல காவியங்களை படைத்துக் கொண்டிருக்கும் காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் ஒரு மருத்துவர்.

தமிழ் இஸ்லாமிய இலக்கிய உலகில் ஒன்பது காவியங்களை படைக்கும் ஆற்றலை எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு வழங்கியுள்ளான் எல்லா புகழும் இறைவனுக்கே!

அமீரகத்தில் இயங்கும் பல தமிழ் அமைப்புகளுக்கு பரிச்சயம் பெற்ற இவர்கள் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் என்ற அமைப்பை அமீரகத்தில் அமைப்பதற்கு காரணமாக இருந்து அந்த அமைப்பின் அங்குரார்பணராக இன்று வரை இருந்து செயல்பட்டு கொண்டிருப்பவர்.

அமைதியும், அடக்கமும், இனிமையும் எளிமையும் இவரின் சொத்துக்களாக வைத்திருப்பவர்.
இவரின் எழுத்துப் பணி தமிழ் உலகிற்கு என்றென்றும் தேவைக் கொண்டதாகவே இருக்கிறது. இன்னும் இன்னும் காவியங்களை தந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்திக்கிறேன்…!

Sunday, April 17, 2011

காலத்தால் கரையாத காவியம் தீரன் திப்புசுல்தான்


நல்ல நட்பு கிடைப்பது அரிது அதுவும் இலக்கிய உலகில் சாதித்துக் கொண்டிருப்பவர்களுடன் நெருக்கமான உறவு கிடைப்பதும் அவர்களுடன் பழகுவதும் ஒரு அலாதியான இன்பம்.

சில வருடங்களுக்கு முன் துபையில் அறிமுகமான இலங்கையைச் சார்ந்த காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுடன் எனக்கு கிடைத்த நட்பை மிகவும் மதிக்கிறேன் என்றென்றும் நினைவுக் கொள்கிறேன்.

டாக்டர் ஜின்னாஹ்வைப் பற்றி தமிழகத்தில் பிரபலமான இலக்கியவாதிகளிடம் கேட்டால் அவருடைய சாதனைகளை பட்டியலிட்டு கூறுவார்கள். இலக்கிய வட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் இவர் ஒரு மருத்தவர்.

மருந்தகம் அமைத்து கூடுமானவரையில் ஏழைகளுக்கு இலவச வைத்தியங்களை செய்தும் மலைவாழ் மக்களிடத்திற்கு சென்று வைத்தியம் செய்ததும் இவருடைய வரலாற்று சுவடுகள். மருத்துவ தொழிலில் ஈடுப்பட்டிருந்த காலத்திலும் இலக்கியத்தின் மீது அளவிலா காதல் கொண்டிருந்ததற்கு காரணம் அவருடைய தந்தை புலவர்மணி M.K.ஷரீபுத்தீன் அவர்கள்.ஆனால் பத்திரிக்கைதுறை ஜம்பவான் அறிஞர் எஸ்.டி.சிவநாயகம் அவர்களை தனது குருவாக ஏற்றுள்ளார்.

அமீரகத்தில் ஜின்னாஹ் அவர்களின் புதல்வர்களும், புதல்வியும் இருப்பதினால் அடிக்கடி துபாய் வந்துபோவது அவரின் வழமை. வந்த இடத்திலும் இலக்கிய ஆர்வலர்களின் தொடர்பை துபாயில் இயங்கிக் கொண்டிருக்கும் சங்கமம் தொலைக்காட்சி நிறுவனர் கலையன்பன் மூலம் கிடைக்க அதன் வழி எனக்கும் கிடைத்தது.

பண்டார வன்னியன் காவியம் வெளியீட்டு விழாவிற்கு தொலைபேசி மூலம் என்னை அழைத்து உரையாடிய ஜின்னாஹ் அவர்களை அதே தினத்தில் சந்தித்தேன். அந்த சந்திப்பு இன்று வரை தொடர்கிறது இறைவனின் நாட்டத்தால் என்றும் தொடரவேண்டும்.

பண்டார வன்னியன் காவிய நூலை பெற்றபோதுதான் ஜின்னாஹ் அவர்களின் சாதனைகளை படிக்கத் தெரிந்தேன். 1965-ல் இலக்கியத்தில் பிரவேசித்துள்ள இவர் கவிதை சிறுகதை புதினம் சிறுவர் இலக்கியம் மொழிமாற்றம் (கவிதை) இவைகளில் ஆர்வம் கொண்டவரானார். இவர்வெளியிட்ட நூற்கள் முத்துநகை, பாலையில் வசந்தம் மஹ்ஜபீன் காவியம்,புனித பூமியிலே காவியம்,பணிமலையின் பூபாளம் கவிதை தொகுப்பு, கருகாத பசுமை (புதினம்),பிரளயம் கண்ட பிதா, தாய்க்கென வாழ்ந்த தனயன்,(குறுங்காவியங்கள்),கடலில் மிதக்கும் மாடி வீடு (சிறுவர் பாடல்கள்),அகப்பட்ட கள்வன் (சிறுவர் படக்கதை),பெற்றமனம் சிறுகதைத் தொகுப்பு,எங்கள் உலகம் (சிறுவர் பாடல்கள்),பண்டார வன்னியன் காவியம்,திருநபிக் காவியம்,திருமறையும் நபிவழியும்,வேரறுந்த நாட்கள், ராகுலுக்கு ஒரு புது வண்டி,ஆகிய நூற்களை வெளியீட்டுள்ளார்.இன்னும் வெளிவரவேண்டிய நூற்கள் ஏராளம் இருக்கின்றன. இதுவரையில் ஏழு காவியங்களை எழுதி வெளியீட்டுள்ளார்.இதில் டாக்டர் கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பண்டார வன்னியன் நாவலை 1500 பாடல்களாக காவியமாக்கியவர். அந்த காவியத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் மிக உயர்வானவிருது சாகித்ய மண்டலம் அவருக்கு 2005-ல் வழங்கப்பட்டது.

இவருடைய மஹ்ஜபீன் காவியம், புனித பூமியிலே காவியம் ஆகிய இரு காவியங்களும் இந்திய தமிழ்நாட்டின், வேலூர் மாவட்ட மேல்விசாரம் அப்துல்ஹக்கீம் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.முஹம்மதுஅலி அவர்களால் ஈழக்கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டு சென்னைப் பல்கலைகழகத்தில் 2006-ம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இன்னும் தமிழகத்தில் பல இலக்கிய நிகழ்வுகளில் மு.மேத்தா, வைரமுத்து, வாலி, கவிக்கோ போன்றவர்கள் இவருடைய காவியங்களை கவிதைகளை விமர்சித்துள்ளார்கள். சென்னையில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக்கழகம் துவங்குவதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கியவர். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துக் கொண்டிருப்பவர் இருபதுக்கும் அதிகமான விருதுகளை பெற்றவர்.

இவருடைய சாதனைகள் மிக நீளமானது 68 வயதை தொட்டிருந்தாலும் இவர் இன்றும் இளைஞராகவே திகழ்கிறார் இவருடைய எழுத்துக்களுக்கு வயதாகவில்லை. இன்னும் காவியங்கள் படைத்தவண்ணமிருக்கிறார்.இறைவனின் அருளால் நிறைய நிறைய காவியங்களை இவர் படைக்கவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.

2011 ஏப்ரல் 14 வியாழன் மாலை துபாயில் இவருடைய தீரன் திப்பு சுல்தான் காவியம் வெளியிடப்பட்டது.

தீரன் திப்பு சுல்தானைப்பற்றி அறிந்துக் கொள்வதற்காக இலங்கையிலிருந்து மூன்றுமுறை கர்நாடகா மாநிலத்திற்கு விஜயம் செய்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்டு பல நூற்களை ஆய்வு செய்து தீரன் திப்பு சுல்தானின் முழுமையான உண்மையான வரலாற்றை காவியமாக 1607 பாடல்களில் பாடியிருக்கிறார்.

இவர் அன்னிய நாட்டுக்காரராக இருந்தாலும் தன் இன மன்னனின் கரையைபோக்குவதற்கு தன்னாலான முயற்சியாக இந்த காவியத்தை இவர் செய்திருப்பது இஸ்லாமிய வரலாற்றில் பதிவுச்செய்யப்பட வேண்டிய ஒரு விசயமாக இருக்கிறது. இவர் இலங்கை மன்னன் பண்டாரவன்னியனின் காவியத்தையும் மதபேதமின்றி எழுதி இருப்பது இவருடைய மனிதநேயத்தை பறைசாற்றுகிறது.

இந்த விழாவிற்கு இலக்கிய ஆர்வமிக்கவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் டாக்டர் ஜின்னாஹ் அவர்களைப் பற்றிய ஒரு கவிதையை நான் வாசித்தளித்தேன்.

இலங்கை மண்ணில் உதயமானவர்
இலக்கிய விண்ணில் இதயமானவர்

தோற்றத்தில் எளிமையானவர்-கவி
ஏற்றத்தில் முதன்மையானவர்

பழக்கத்தில் இனிமையானவர்-தமிழ்
புழக்கத்தில் புதுமையானவர்

நாணயம் குறையாத நளினமானவர்
ஆணவம் நிறையாத அமைதியானவர்

புகழ்தேட அகல் ஏற்றாதவர்
பொருள் தேட மருள் கொள்ளாதவர்

காவியம் படைப்பதில் இளமையானவர்
ஆவியம் படைத்தவனுக்கு இசையானவர்

திரு நபிகள் மீது காதலானவர்
திறனாய்வு செய்து காவியமாக்கியவர்

அன்னியன் எழுத்தை ஏற்றவர்-அதனால்
பண்டார வன்னியன் கவியை சாற்றியவர்

மருத்துவம் படித்த மனிதரிவர்-என்றாலும்
கருத்துரை வடித்த தமிழறிஞரிவர்

தீரன் திப்பு சுல்தானை சொந்தமாக்கியவர்
தீ யறம் சுமத்தியவர்களை சிந்தையாக்கிவர்

ஏழுக் காவியங்களை எழவைத்தவர்- எட்டாத
சாகித்யமண்டலத்தை விழவைத்தவர்

தமிழ்மாமணி தமிழியலில் சின்னமானவர்
காவியத்திலகம் கவிக்கதிரோன்பெற்ற ஜின்னாஹ் அவர்

பல அமைப்புகளில் தலைமை ஏற்றவர்
தன் உழைப்பினால் திரவியம் பெற்றவர்

வாழ்நாள் சாதனையாளரென்ற விருதைப்பெற்றவர்
வாழ்க்கை சோதனைகளில் பொறுமைப்பெற்றவர்

வாழ்க்கைத் துணைவியோடு வளமானவர்-தன்
வாழ்க்கையை துணிவோடு வலம்வருபவர்

வள்ளலாய் பலகாப்பியங்களை வழங்கவேண்டுமிவர்
வலமான தேகத்தை தரவேண்டும் வல்லோனவர்

வாழ்க வாழ்கவென வாசனமாய் வாழ்த்துமிவர்
வாஞ்சையோடு இறைஞ்சுகின்றேன் இஸ்மத் இவர்!

என்று கவிதையைப் பாடி எனது அவாவை வெளிப்படுத்திக் கொண்டேன். இவருடைய காவியங்கள் மரபுக் கவிதைகளாக இருந்தாலும் அதைப்படிக்க, படிக்க மரபு மறைந்து, வசனநடையாக கருத்துக்களை புரிந்துக் கொள்ளுமளவிற்கு, எளிமையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்திற்கு தற்போது அவர் வருகைத் தந்து இரண்டு மாதங்கள் ஆகியிருக்கின்றன.இந்த நாட்களில் பல அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் மூஸாநபி காவியத்தை எழுதி முடித்திருக்கின்றார்.இது எட்டாவது காவியம்!

இதுவரையில் தமிழக வரலாற்றில் ஒரு புலவர் எட்டு காவியங்களை வெளியிட்டுள்ளாரா? என்பது கேள்வியாக இருக்கிறது.! ஆனால் இஸ்லாமிய இலக்கிய உலகில் இதுவரையில் இவரைவிட அதிகளவில் யாரும் காவியங்கள் வெளியிடவில்லை என்பது வரலாறாக இருக்கிறது.பல காவியங்களை தனது சொந்த பொருட்செலவில் செய்திருக்கிறார்.

தமிழ் மீது ஆர்வம் கொண்ட மதிப்பிற்குரிய டாக்டர் ஜின்னாஹ் அவர்கள் 1999-ம் ஆண்டு புதுச்சேரி கோட்டைக்குப்பத்தில் நடைப்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழ்மாமணி விருதை பெற்றிருக்கிறார்.இன்னும் தமிழியல், காவியத்திலம், கவிக்கதிரோன், கலாபூசணம், நற்கவிஞர், கவிமாமணி, காவியக் கவிமணி, கவிச் சக்கரவர்த்தி, காப்பியக்கோ என்று பல விருதுகளை குவித்துள்ளார். எத்தனை விருதுகளை பெற்றிருந்தாலும் தன்னடக்கம், எளிமை இவருடன் பிறந்த ஒன்றாகவே இருக்கிறது.

இவருடைய காவியங்களனைத்தும் பல்கலைகழகங்களில் பாடங்களாக விளங்குவதற்கு தகுதியானவை என்று பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.

பேராசிரியர்களும், முனைவர்களும் காவியங்களை வெளியிடுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில்; தைரியமாக ஆண்டுக்கு ஒரு காவியத்தை வெளியிடும் டாக்டர் ஜின்னாஹ் போன்ற தயாள இலக்கியமனம் படைத்தவர்களுடன் நட்புக் கொண்டிருப்பது எல்லாம் வல்ல இறைவன் எனக்களித்த வரம்.

இவர் இஸ்லாமியர் என்பதற்காக கொடுக்க வேண்டிய கௌரவங்களை மத துவேசமிக்க அரசியல்வாதிகளால் மறைக்கப்பட்டு வருகிறது; பல அமைப்புகள்தான் அதிகமான விருதுகளை வழங்கியிருக்கிறது ஆனால் அரசாங்கத்தினால் கிடைக்கவேண்டிய விருதுகள் தடுக்கப்பட்டே வருகின்றன. ஆனால் கௌரவங்களை எதிர் நோக்கி இன்று வரையில் இவர் எழுதவில்லை என்பதுதான் உண்மை.

தமிழுக்காக உயிர் கொடுப்போம் இன்னும் எதையெல்லாம் கொடுப்போம் என்று வாய்கிழிய மேடைகளில் பேசுகிறார்களேயொழிய ஒரு உண்மையான தமிழ் அறிஞரை கண்ணியப்படுத்தவோ மரியாதை செய்யவோ தெரியாதவர்காளவே அதிகாரமிக்கவர்கள் திகழ்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது.

இன்றைய காலத்தில் காவியம் படைப்பவர்களை காண்பது அரிது அந்த அரிதான அறிஞர்களுக்கு தக்க ஊக்கமும் உற்சாகமும் தருவது ஒவ்வொரு தமிழனின் கடமையாக இருக்கிறது.

இந்தியாவில் தீரன் திப்புசுல்தான் காவியம் கிடைக்குமிடம்
சமநிலை சமுதாயம் பப்ளிக்கேஷன் பிரைவேட் லிமிட், எண் 5 கிரீண்ரோடு, தவ்ஸன் லைட், சென்னனை – 600006.
தொலைபேசி - +91-9840277450

Sunday, March 6, 2011

நீண்ட நாட்களுக்கு பிறகு...


முப்பது தினங்களுக்கு பிறகு உங்களுடன் உரையாடுகிறேன்...தொடர் எழுதிக் கொண்டிருந்த நான் அதை தொடராமல் இப்படி நாட்களை விழுங்கிவிட்டு தொடர் எழுதினால் அது படிப்பவர்களுக்கு ஆவலை அளிக்காது என்பதை அறிகிறேன்.

பல வேலைகளின் பளுவால் வலைப்பக்கம் வரமுடியாத வந்தாலும் எழுதும் மனநிலை இல்லாத ஒரு அவசர உணர்வில் இந்த நாட்கள் என்னை கழித்தது.

பல அமைப்புகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் விழாக்காலங்களில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமே அதுவும் ஒரு காரணம், அடுத்து தங்கிருந்த கட்டிடத்திலேயே கீழ்தளத்திலிருந்து மேல்தளத்திற்கு நான்காவது மாடிக்கு வீட்டை மாற்றிக் கொண்ட காரணமும் கூட.

ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு மாறுவது என்பது எவ்வளவு பெரிய தலைவலி, தலைசுற்றல் என்பது வீடு மாறியவர்களுக்கு தெரியும்.ஆனால் எனக்கு அதெல்லாம் தெரியவில்லை காரணம் எனது மைத்துனர்களின் உதவி இருந்ததினால் நான் தப்பித்துக் கொண்டாலும் எனது துணைவியார் ரொம்ப கஸ்டப்பட்டதாக சொன்னார்கள்...அதில் நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தார்கள்.

ஒரு வீடு மாறுவதற்கே இவ்வளவு கஸ்டமாக பீல் பண்ணும் நாம், எந்த நேரத்திலும் நமது பின்னாடியே நிழலாக சுற்றிவரும் மரணம் தரும் மாற்றத்தை இந்த மனம் எப்படி ஏற்றுக் கொள்ளும்(?) என்ற சிந்தனை எனக்குள் வந்தது.இந்த உலகில் அழிவு என்பது எதுவும் இல்லை ஆனால் மாற்றம் மட்டுமே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை ஞானமாக படித்திருக்கிறேன்.
அதனால் எந்த மாற்றமானாலும் மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மாற்றமும் மகிழ்வுடன் மாறிவிடும்.

எங்கள் அமைப்பின் சார்பாக அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல் அலை) அவர்கள் அவதரித்த விழாவிற்காக இலங்கை வரை நண்பர்களுடன் நான்காம் வருடமாக சென்று வந்தேன்.ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒருவித ஆன்ம ஆனந்தம் இம்முறையும் அப்படித்தான் அதை எழுத்தில் கொண்டுவர முடியாது.

துபாயில் சென்ற வாரம் நடந்த எங்கள் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய அமைப்பின் விழாவிற்கு வருகைப் புரிந்த தமிழஞர்களுடன் பழுகும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முக்கியமாக கவிச்சித்தர் மு.மேத்தா அவர்களுடன்.

65 வயதைக் கடந்த மனிதராக இருந்தாலும் இன்னும் 50பதைப்போலவே காட்சியளிக்கிறார் எதை பேசினாலும் பல்தெரிய சிரித்து பேசுகிறார்.நிறைய பொறுமை நிதானம் அவரிடம் நிறைந்திருந்தது.எதையும் எதிர்பார்க்காத எண்ணத்தை கொண்டுள்ளார் அதனால் அவருடைய மனம் எப்பவும் எதார்த்தமாகவே இருக்கிறது.ஐந்து பெண்மக்களை பெற்றவர் என்றாலும் அதிகம் ஆசைப்படாதவராகவே காட்சியளித்தார்.

எங்கள் அமைப்பில் பேசும்போது கவிதையைப் பற்றியும் கூறினார் அதில் ஒரு கவிதை

குடியரசுதினம்
ஆளுநர் மாளிகையில்
அனைத்துக்கட்சி
தலைவர்களுக்கும்
விருந்து
பரிமாறிக் கொண்டிருந்த
பணியாளர்கள்
தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்
யார்
யாரைச் சாப்பிடப்போகிறார்களோ.!

இந்த கவிதையை கூறி நமது அரசியல்வாதிகளைப்பற்றிய கருத்தும் கூற அது நகைச்சுவையாக மாறி அனைவரையும் சிரிக்க(சிந்திக்க)வைத்தது.

தமிழறிஞர்களான இலங்கை காப்பிகோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சென்னையைச் சார்ந்த இனியதிசைகள் பத்திரிக்கையின் ஆசிரியர் தொண்டு நிறுவனர் பேராசிரியர் சே.மு.முகமதலி இவர்களுடன் சந்திப்பு சில தினங்களில் அடிக்கடி நடந்தது.

எங்கள் ஏகத்து மெய்ஞ்ஞான சபையின் மீலாதுவிழா பணி... இப்படி காலத்தை காரணத்துடன் கழித்துவிட்டதால் அவைகள் அத்தனையும் என்னிடம் அனுபவ ஆடையாக இருக்கிறது.

இப்படி சென்றமாதம் தொடர் இலக்கியவிழா மழையாக பொழிந்ததால் நனைந்துவிட்டேன்.

இனி இன்னொரு நிகழ்வு அடுத்த வாரத்தில் தொழில் சார்ந்த பயணம் துருக்கி வரை செல்லவேண்டி இருக்கிறது அதையும் முடித்துவிட்டால் நிம்மதியாக எனது தொடரை தொடருவேன்.