உங்கள் வருகைக்கு நன்றி...
Showing posts with label பயணங்கள். Show all posts
Showing posts with label பயணங்கள். Show all posts

Thursday, February 23, 2012

நேசப் பயணம்

இந்த மாதம் துவக்கத்தில் அமீரகத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து பேர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இலங்கைக்கு பயணமானோம். இது சுற்றுலா பயணம் அல்ல. அண்ணல் நபிகள் மீது கொண்ட நேசப்பயணம். இங்கு நான் பகிர்வது பயணத்தின் நோக்கத்தை அல்ல. பயணத்தில் ஏற்றபட்ட சில அனுவத்தை பகிரந்துக் கொள்கிறேன்.
இந்த குழுவை ஒருங்கிணைத்த பொருப்பாளர்களில் நானுமிருந்தேன்.

துபாயிலிருந்து இரவு 10.55 மணிக்கு சிரிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் எங்களின் பயணம் நிச்சயமாகி இருந்தது. அனைவரிடமும் 8.30 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்ற தகவல் கூறப்பட்டிருந்தது.

8.30 மணிக்கு விமான நிலையத்தில் சிலர் மட்டுமே நின்றுக் கொண்டிருந்தோம். மற்றவர்களின் நிலை தெரிந்துக் கொள்ள கைபேசியில் தொடர்புக் கொண்டு துரிதப்படுத்தினேன். வழியில் இருக்கிறோம் வாகன நெரிசலில் மாட்டியிருக்கிறோம் என்றார்கள் அவர்கள் வரும் வரையில் காத்திருந்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்தே போடிங் கவுண்டருக்கு சென்றோம்.

ஒவ்வொருவரிடமும் தங்களுக்கு தேவையான லக்கேஜ் மற்றும் சிலரிடம் 40 கிலோவிற்கும் அதிகமான லக்கேஜ் இருந்தது. அதை அதிக எடை இல்லாதவர்களோடு சேர்த்து போட்டு போடிங் பெறுவதற்குள் 10 மணி ஆகிவிட்டது.

அடுத்து இமிக்கிரேஷன் முடிக்கவேண்டும் கூட்டம் அதிகமாக நின்றுக் கொண்டிருந்தது. அப்படி இருந்தும் 15 நிமிடங்களில் இமிக்கிரேஷன் என்னோடு நின்றவர்களுக்கு முடிந்துவிட்டது. அங்கிருந்து விமானத்தை நோக்கி நடந்து செல்வதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். பேட்டரிகார் வசதியும் இருக்கிறது அதில் நாங்கள் அமர்ந்துக் கொண்டோம்.
இறங்குமுன் எனக்கு டெலிபோன் வந்தது எங்கள் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தை இமிக்கிரேஷனில் திருப்பி விட்டார்கள். என்றார் ஏன் என்று வினவியதற்கு அவருடைய பையன் பாஸ்போர்ட் மிஸ்சிங் என்றார்!

எனக்கு ஒன்றுமே புரியவில்லை எங்கு எப்படி தொலைந்தது என்றேன்.
போடிங் கவுண்டரில் அவர் கொடுத்த பாஸ்போர்ட் பழைய மற்றும் புதுப்பித்த பாஸ்போர்ட்டும் சேர்த்து பின் செய்திருந்தது. திரும்ப வாங்கும்போது பின் கலண்டு இருந்ததால் பழைய பாஸ்போர்ட்டை பேக்கில் வைத்து லக்கேஜில் போட்டுவிட்டு புதிய பாஸ்போர்ட்டுடன் இமிக்கிரேஷன் சென்றிருக்கிறார். இமிக்கிரேஷன் அதிகாரி பாஸ்போர்ட்டை வாங்கி அமீரக குடியுரிமை பக்கத்தை தேட அது பழைய பாஸ்போர்ட்டில் உள்ளதால் அதை அதிகாரி கேட்க அதை லக்கேஜில் போட்டுவிட்டேன் என்று கூற அந்த பாஸ்போர்ட்டை எடுத்துவா என்று அதிகாரி திரும்ப அனுப்பிவிட்டார்.

அவசரஅவசரமாக போடிங் கவுண்டருக்கு சென்று விசயத்தை கூறி லக்கேஜை கேட்டால் அது இன்னேரம் விமான தளத்திற்கு சென்றிருக்கும் அதை திரும்ப பெற்று இந்த விமானத்தில் பயணம் செய்வது முடியாதது என்று கூறிவிட்டார்கள்.
இந்த லக்கெஜ் இலங்கை சென்று அங்கிருந்து பாஸ்போர்டை எடுத்து கூரியர் மூலம் துபாய் வந்து பிறகு தான் பயணிக்க முடியும் என்றும் நீங்கள் குரூப் டிக்கேட் ஆதலால் ரீபுக்கிங் செய்யஇயலாது என்றும் கூறினார்கள்.

நான்கு தினங்கள் பயணமாக செல்லும் எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியாத சூழலில் எங்கள் குழுவில் உள்ளவரில் ஒருவர் துபாய் விமான நிலையத்தில் பணிப்புரியக் கூடியவர் அவர் உடனே அவருடைய பணிப் பழக்கத்தை வைத்து ஏர்லைன்ஸ் அதிகாரியிடம் பேசியதில் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றாலும் அவருடைய லக்கேஜ் எடுத்து கொடுத்துவிடுகிறோம் அதை அவர் பெறுவதற்கு சில மணிநேரங்கள் ஆகும் அது வரையில் விமானம் காத்திருக்க முடியாது இந்த லக்கேஜ் கொடுப்பதற்கே முப்பது நிமிடங்கள் தாமதமாகக்கூடிய சூழ்நிலை இருக்கிறது என்றார். அதுபோதும் அவருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிட்டால் அடுத்த விமானத்தில் மறுதினம் வரட்டும் என்று முடிவுசெய்தோம்.

10.55மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 11.25 மணிக்கு புறப்பட்டது.ஆனால் அவரும் அவர் குடும்பமும் வர முடியவில்லை.

அவர் மறுதினம் ஏர்லைன்ஸ் அலுவலகம் சென்று அவர்களிடம் பேசி அதே விமான டிக்கேட்டில் பயணம் செய்து எங்களுடன் சேர்ந்துக் கொண்டார்.

பயணத்தின் போது சிலருக்கு பதட்டம் இருப்பது இயல்பு ஆனால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமலும் கவனமில்லாமலும் பதட்டப்பட்டால் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஆளாக நேரிடும்.
கவனம் எப்போதும் தேவை.

Thursday, October 6, 2011

கல்லூரி மாணவிகளோடு கிஸ்கிந்தா


நீண்ட நாட்களுக்கு பிறகு...

தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர் எழுதி, அதை தொடர முடியாமல் படர்ந்து விட்டேன். இந்த சோர்வு எல்லோருக்கும் வரலாம், ஆனால் இந்த நாட்களை வீணாக்கி விடவில்லை வீணையாக்கி விடுவேன்.

எழுதுவது ஒரு கலை நம்மருகில் பதில் பேசாத நண்பனை அமரவைத்து, நம் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பது போல, எண்ணத்திற்கும், எழுத்திற்கும் மத்தியில் எது வேண்டுமானாலும் சிந்திக்கலாம், எழுதலாம், எழுதியதை சிதறாமல் திருத்தலாம் திருந்தலாம் எழுத்து மனித வாழ்க்கையின் வடிகால்.


Tuesday, July 26, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 3

* அமீரகத்திலிருந்து எனது நண்பர்களில் சிலர் தாயகத்திற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். அப்படி வந்தவர்களில் இலக்கிய நண்பர் ராஜகிரியைச் சேர்ந்த அண்ணன் அப்துல்கதீம் அவர்கள்.

அமீரகக் கவிஞர் பேரவையை பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பின் உதவி தலைவரும் இல்மு அமைப்பின் தலைவருமாவார்கள்.

Saturday, July 23, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 2



அன்னியநாட்டில் சம்பாதித்து வந்து சிலவு செய்பவர்களைவிட தாயகத்திலேயே சம்பாதிக்கின்றவர்கள் தாராளமாக சிலவு செய்கிறார்கள் எல்லோரிடமும் காசு சரளமாக புரலுகிறது ஒரு லட்சத்திற்கு விலை பேசிய இடமெல்லாம் இன்று இருபது முப்பது லட்சம்,கோடி என்கிறார்கள்.

Thursday, July 21, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 1



(இந்த பதிவை மிக நீலமான பதிவாக பதிவிட எண்ணினேன் படிப்பதற்கு சிரமமாக இருக்கலாம் என எண்ணி தொடராக எழுதுகிறேன்.)

இது ஒரு விடுமுறை அனுபவம்

Tuesday, June 14, 2011

அமீரகத்திற்கு கோடைக்காலம்! மயிலாடுதுறையில் பதிவர்களை சந்திக்க ஆவல்!


அமீரகத்தில் கோடைக்காலம் துவங்கியாச்சு வேர்வைக்காக நடக்க வேண்டிய அவசியமில்லை சும்மா இரண்டு நிமிடம் நின்றாலே நம் உடைகள் வேர்வையால் நனைந்து விடும். இந்த ஆண்டு கோடையின் துவக்கம் கொடூரகமாக இருக்கிறது.ஜஶலை முதல் வாரத்திலிருந்து பள்ளிகளுக்கு இரண்டு மாதங்கள் விடுமுறை துவங்க இருக்கிறது.

குழந்தைகள் கோடைக்கால விடுமுறையில் அமீரகத்தில் இருப்பதை விரும்புவதில்லை. தங்களின் நாட்டிற்கு செல்ல மிகவும் விரும்புகிறார்கள். நாங்கள் குடும்பத்துடன் ஆண்டுதோறும் இந்தியாவிற்கு சென்று விட்டு ஒரு மாதத்தில் நான் அமீரகத்திற்கு மீண்டு விடுவேன். ஆனால் எனது குடும்பத்தார்கள் இரண்டு மாதம் முழுசாக அங்கு இருந்து விட்டு தான் வருவார்கள்.

ஒரு மாறுதலுக்காக எனது துணைவியார் இந்த ஆண்டு தாயகம் செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால் நான்காவது படிக்கும் எனது இளைய மகளோ கட்டாயமாக ஊருக்கு போய்தான் ஆகவேண்டும் என்று கூறினாள். ஏன் போகனும் என்று கேட்டதற்கு உறவுகளை பார்க்க வேண்டும் அதாவது பாட்டிம்மா அத்தாவுடைய அம்மா அம்மாவுடைய அம்மா இவர்கள் தங்கள் பேரன் பேத்திகளுக்கு கொடுக்ககூடிய அன்பை இந்த குழந்தைகள் மிஸ் பண்ண விரும்புவதில்லை. அதுமட்டுமில்லை உறவுக்காரர்களின் குழந்தைகளுடன் விளையாடுவது ஊர்சுற்றுவது இப்படி நிறைய விசயங்களுக்காக இந்த குழந்தைகள் தாயகத்தை பெரிதும் விரும்புகிறார்கள்.

இவர்களுக்கா வேண்டி ஆண்டுதோறும் தாயகம் சென்று வருவது வழமையாக இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு நம்தாய் நாட்டின் இயல்பையும் இயற்கையையும் காட்டவேண்டியது பெற்றோர்களின் கடமையாகவும் இருக்கிறது. அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்பு நம் நாட்டில் இல்லை என்றாலும் நம் தாய்நாட்டின் சுவாசத்தை வளரும் குழந்தைகளுக்கு நாம் ஊட்டியே ஆகவேண்டும். வளைகுடா போன்ற நாடுகளில் எத்தனை ஆண்டுகள் பணிப்புரிந்தாலும் அந்த நாட்டின் குடியுரிமைப் பெற்றவராக நாம் ஆகமுடியாது. எந்த நேரத்திலும் நாம் நம் தாய் நாட்டிற்கு அனுப்பப்படுவோம் என்பது நிதர்சனம். அதை உணர்ந்து நாம் குழந்தைகளை தயார்படுத்த வேண்டும்.

சென்ற ஆண்டு அமீரக கோடைவிடுமுறையில் வடஇந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்ட எனது பிள்ளைகள் தங்களின் பாடத்தில் படித்ததை நேரடியாக காண்கின்ற போது அளவிலா ஆனந்தம் கொண்டார்கள்.

சுற்றுலா பெற்றோர்களுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. குழந்தைகளுடன் நாம் வாழ்ந்தாலும் குழந்தைகளுடன் நாம் முழு நேரத்தை கழிப்பதில்லை ஆனால் சுற்றுலா நமது முழு நேரத்தை குழந்தைகளுடன் கழிப்பதற்கு வாய்ப்பைத் தருகிறது. நம் வசதிக்கேற்ப ஆண்டுதோறும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதினால் பணம் சிலவானாலும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.

இந்த ஆண்டு கேரளா பக்கம் சுற்றுலா சென்றுவர உள்ளேன் வழக்கம் போல சுற்றுலா பதிவு எழுதுவேன்.

நிறைய திட்டங்களுடன் இந்த விடுமுறை நாட்களை கழிப்பதற்கு ஆயத்தமாகி உள்ளேன் எனது திட்டங்கள் இறைவனின் அருளால் நலமாய் நடந்தேர தாங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.

எப்பொழுதும் விடுமுறையில் ஊருக்கு செல்லும்போது உறவினர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்கு அமீரகத்திலிருந்து சாமான்களை வாங்கி கட்டிக்கொண்டு அதற்கு தனியாக லக்கேஜ் சார்ஜ் கொடுத்தும் சில நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் கஸ்டம்ஸில் தீர்வை கட்டியும் பெரிய போராட்டம்போல வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ( இப்போதும் சிலர் இப்படிதான் வருகிறார்கள்) ஆனால் சமீபகாலமாக எல்லா சாமான்களும் சென்னையிலேயே அமீரக விலைக்கும் அதைவிட குறைவாகவும் கிடைக்கிறது.
பெண்களுகான ஆடைகள், சிறுவர், சிறுமிகள், ஆண்களுக்கான சட்டை, டவுசர் இப்படி அனைத்துமே அங்கு கிடைப்பதால் நாம் அமீரகத்தில் அலைந்து திரிந்து பொருளை வாங்கிக் கொண்டு ஏர்போர்ட்டில் லக்கேஜ் கட்டி பணத்தை விரயம் செய்வதை விட, சென்னையில் தி நகருக்கு சென்று சில மணி நேரங்களில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு அழகாக வீடுபோய் சேர்ந்துவிடலாம்.
இதனால் நமக்கு நேரம், மனஉலச்சல், பணவிரயம் எல்லாம் மிச்சப்படும்.

என்னத்தான் இருந்தாலும் எங்க கிராமத்து பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. கட்ட விலக்கமாறாக இருந்தாலும் கப்பல் விலக்கமாறாக இருக்கனும்னு சொல்லுவாங்க. நாம மாறினாலும் இந்த பழமொழி மாறாது.

இந்த பதிவிற்கு பின் ஊர் சென்று பதிவு எழுதலாம் என எண்ணமிருக்கிறது அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப. மயிலாடுதுறை பதிவர்களை சந்திக்க ஆவல் தொடர்புக் கொள்ளுங்கள். 9486718827 இம் மாதம் 20 தேதிக்குபின் மொபைல் ரிங் ஆகும்.நன்றி

Wednesday, January 26, 2011

நேரம் தவறினால் நேரமும் தவறிடும்


காலம் பொன்போன்றது என்பது பழமொழி ஆனால் அது வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய வழியும் கூட.பலருக்கும் நேரந்தவறியதினால் ஏற்பட்ட கஸ்டங்கள் நிறையவே இருக்கும்.
குறிப்பிட்ட நேரத்தில் செல்லாததால் வேலையை இழந்திருப்பார்கள் சிலர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாததால் உயிரும் போயிருக்கும்.

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நேரத்தை மதிக்காத காரணத்தினால் பலருக்கு தவறிபோயிருக்கிறது. இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் பதினைந்து தினங்கள் விடுமுறையில் தாயகம் செல்ல ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து ஏர்அரேபியா பட்ஜட்விமானத்தில் டிக்கேட் போட்டிருந்தேன். இரவு 10.45 க்கு விமானம் புறப்படும் நேரம். பயணிகள் மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இருக்கவேண்டும் என்பது விதிமுறை.

நான் துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு செல்வதற்கு எனது மைத்துனரிடம் ஏழு மணிக்கு வரச் சொல்லியிருந்தேன். அவர் ரென்ட்டிய காரில்(Rent a car) பணிப்புரிவதால் அவரிடம் எப்போதும் கார் கைவசம் இருந்துக் கொண்டிருக்கும்.

அன்று காலையிலிருந்து மிதமான மழை பெய்துக் கொண்டிருந்தது.மதியம் ஒரு மணிக்கெல்லாம் பணியிலிருந்து அறைக்கு வந்தும் விட்டேன்.மழை நின்றபாடில்லை மாலை ஐந்து மணிக்கு எனது மைத்துனருக்கு டெலிபோன் செய்து ஆறுமணிக்கெல்லாம் நீ வந்துவிடு என்றேன்.

தற்போது கையில் கார் இல்லை ஏழுமணிக்கு தான் கார் வரும் வந்ததும் வருகிறேன் என்றார்.நானும் சரி எப்படியும் ஏழு மணிக்கு வந்துவிடுவார் ஏழுக்கு புறப்பட்டாலும் எட்டு அல்லது ஒன்பது மணிக்குள் விமான நிலையம் சென்றுவிடலாம் புறப்படுவது 10.45க்குத்தானே என்று அலட்சியமாக இருந்தேன்.

மணி 6.45 ஆகிவிட்டது மைத்துனருக்கு டெலிபோன் செய்தேன். இன்னும் கார் வரவில்லை ஏதோ ஓரிடத்தில் டிராப்பிக்கில் மாட்டி இருக்கிறார் அதனால் காரை எதிர்பார்க்க வேண்டாம் என்றார். எனக்கு கோபம் வந்தது இதை முன்னாடியே நீ சொல்லி இருக்கலாமே என்று அவரிடம் நொந்துக் கொண்டு அவசரமாக டெக்ஸியை தேடினேன். அன்று மழை பெய்ததால் எல்லா டெக்ஸியும் பயணிகளுடன் சென்றது கிடைக்கவில்லை.

உடனே எனது பக்கத்திலுள்ள நண்பரிடம் தொடர்புக் கொண்டு அவருடைய காரை எடுத்துக் கொண்டு போக எனது மைத்துனரை அழைத்து நாங்கள் புறப்படுவதற்குள் மணி 7.35தை தாண்டி விட்டது.

துபாய் ஷார்ஜா பிரதான சாலையில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்க அதனால் பல கார்கள் அதில் சிக்கி ஸ்டார்ட் ஆகாமல் திணறிக் கொண்டிருந்தது. அதனால் டிராப்பிக் ஜாம் மாலை ஐந்து மணியிலிருந்து பல வழிச் சாலைகளும் அடைப்பட்டு ஆங்காங்கே கார்கள் பல மைல் தூரத்திற்கு நின்றுக் கொண்டிருந்தன.

நாங்களும் நெரிசலில் மாட்டி தவித்துக் கொண்டிருந்தோம். இன்ஜ் பை இன்ஜ்சாக கார் நகர்ந்தது. நேரம் கடந்துக் கொண்டிருக்க அந்தக் குளிரில் எனக்கு நன்றாக வேர்வை வேர்த்தது.
விமானத்தை பிடித்துவிடுவோமா என்ற சந்தேக கேள்வி என்னுள் எழுந்தது. இது பட்ஜெட் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றால் நம்முடைய பணம் திரும்ப கிடைக்காது இதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

ஒருவழியாக டிராப்பிக்கை கடந்து விமான நிலையத்தை அடைந்தபோது நேரம் 10.30மணி.சென்னை கவுண்டர் மூடப்பட்டிருந்தது அங்கயே உள்ள ஏர்அரேபியா அலுவலகத்திற்கு சென்றேன் கூட்டமாக இருந்தது என்னைப்போலவே பலரும் டிராப்பிக்கில் மாட்டி தாமதமாகத்தான் வந்துள்ளார்கள். சென்னை செல்லக்கூடியவர்கள் 15 நபர்கள் இருந்தோம்.
அதிகாரியிடம் பேசினோம் விமானம் புறப்பட இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கிறது அதனால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் சரியான நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் மழைப்பெய்வதால் இன்னும் ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

நொந்துபோய் அமர்ந்திருந்தோம் விமானத்தை விட்டது ஒருபுறம் என்றாலும் பணம் திரும்பக் கிடைக்காதே என்ற வருத்தம் மறுபுறம்.என்ன செய்வது என்று என்னையே நான் நொந்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏர்அரேபியா விமான அதிகாரி எங்களை அழைத்து உங்கள் அனைவருக்கும் இந்த மழையின் காரணமாக விமான டிக்கேட்டை மறுபடியும் பயணிக்கும் வாய்ப்பை கொடுக்கின்றோம் நாளை உங்கள் தொலைபேசிக்கு அழைப்பு வரும் உங்கள் பயணத்தேதியை உறுதி செய்துக் கொள்ளுங்கள் என்றார் தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போனதே என்று நிம்மதியுடன் மகிழ்சியாக வீட்டுக்கு புறப்பட்டோம்.

முப்பதாண்டு அனுபவத்தில் இது போன்ற நிகழ்வு இரண்டாவது முறையாக இரண்டு மாதங்களுக்கு முன் ஜெட்ஏர்வேஸ்சில் ஏற்பட்டது.

நானும் துணைவியாரும் அவசரவேலையாக சென்னைக்கு கிளம்பினோம் 11.30 மணி விமானத்திற்கு 10.30மணிக்கு ஜெட் விமான கவுண்டருக்கு வந்துவிட்டோம் ஆனால் கவுண்டர் குளோஸ் செய்துவிட்டோம் என்று கூறிவிட்டார்கள்.இது எங்களுடைய அலட்சியம் தான் காரணம் இம்முறை மழை இல்லை.

சரியானபடி நேரத்தை மதித்திருந்தால் நமது பயணமும் சரியானபடி நடந்திருக்கும் அலட்சியத்தினால் பயணமும் ரத்தாகிவிட்டது மன உலைச்சல் இரத்த அழுத்தம் தேவையில்லாத குழப்பம் இத்தோடு முடிந்துவிட்டதா

நம்மை அழைப்பதற்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் காத்துக்கிடக்க அவர்களுடைய நேரம் அவர்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனத்தின் வாடகை இப்படி சூழலையே இந்த நேரம் தவறுவதினால் மாற்றிவிடுகிறது.

இது பயணத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பொறுந்தும்.
கொடுத்த வாக்கையும் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தையும் சரியாக பின் பற்றவேண்டும்.

கண்டிப்பாக இந்த கட்டுரை எனக்கு நானே எழுதிக்கொண்டது.

Thursday, January 6, 2011

எமிரேட்ஸ் ஏர்லைன்சின் கவனத்திற்கு


சென்ற மாதம் டிசம்பரில் மருத்தவ பரிசோதனைக்காக சென்னைக்கு நானும் எனது மனைவியும் எமிரேட்ஸ் (EMIRATES AIRLINES)சில் இரண்டு தினங்களுக்காக சென்றோம். குறிப்பிட்ட தினத்தில் மருத்துவ பரிசோதனை முடியாததால் ஒரு தினம் தாமதமாக வரக்கூடிய சூழல் ஏற்படவே எங்களது விமான பயணச்சீட்டை மாற்றுவதற்கு சென்னையிலுள்ள எமிரேட்ஸ் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.

பயணச்சீட்டை மாற்றுவதற்கு 500 இந்திய ரூபாய் கட்டவேண்டும் என்று கூறினார்கள்.(தற்போது தேதி மாற்றத்திற்கு பணம் கட்டவேண்டும்) கடன் அட்டை மூலம் கட்ட வேண்டும் என்றார்கள் நானும் சரி என ஒப்புக்கொண்டு கடன் அட்டையின் 16 இலக்க எண்ணை கூறினேன்.

கடன் அட்டையின் முடிவுகால வருடம், தேதி கேட்க்க அதையும் கூறினேன். பின்னர் கடன் அட்டையின் பின் பக்க உள்ள ரகசிய எண் (ccv)3 இலக்க எண்னை கேட்டதும் எனக்கு கோபம் வந்தது.

மன்னிக்கனும் என்னால் அந்த எண்ணை கூற இயலாது அப்படி நான் கூறுவம் பாதுகாப்பு கிடையாது என்றேன். அதற்கு அவர் எங்களுடைய வழக்கமும், பழக்கமும் இதுதான் என்றார்.
இருக்கலாம் ஆனால் வங்கி எங்களை எச்சரிக்கைப் படுத்தி இருக்கிறது என்று கூறிவிட்டு
சரி நான் விமான நிலையத்தில் பணமாகவே கட்டிவிடுகிறேன் என்றேன் அவரும் சரி என்றார்.

விமான நிலையம் சென்று எமிரேட்ஸ் கவுண்டரில் பயணச்சீட்டைக் கொடுத்ததும் தேதி மாற்றத்திற்கு 500 கட்டவேண்டும் என்றார் நானும் சரி என்றேன்.
எமிரேட்ஸ் மேற்பார்வையாளரிடம் அவர்பேசிவிட்டு அந்த தொகையை நீங்கள் கடன் அட்டை மூலம் தான் கட்டவேண்டும் என்று கூறிவிட்டு தொடர்புக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

நான் பணமாக கட்டுகிறேன் கடன் அட்டை மூலம் என்னால் கட்ட இயலாது அவர்கள் இரசிய எண்ணை கேட்கிறார்கள் நான் எப்படி அதை கொடுக்க முடியும் எனது கடன் அட்டைக்கு பாதுகாப்பு கிடையாது அது உங்களின் ஊழியர்கள் தவறாக பயன்படுத்த காரணமாகிவிடும் என்றேன்.

அப்படி எல்லாம் யாரும் செய்யமாட்டார்கள் நீங்கள் அந்த தொகையை கடன் அட்டை மூலம்தான் கட்ட முடியும் நாங்கள் பணமாக வாங்கக் கூடாது எங்களிடம் வேறு வழி இல்லை என்று மேலாளர் கூற, வேறு வழிஇன்றி கடன் அட்டையின் மூலம் கட்டினேன்.

எமிரேட்ஸ் நிறுவனம் தனது சேவையை பயணிகளுக்கு சிறப்பாக செய்வதாக கூறுகிறது ஆனால் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது அதன் வளர்ச்சிக்கு ஒரு சரிவுதான்.

ஒருவரின் கடன் அட்டையின் முழுவிபரம் ஒரு ஊழியருக்கு தெரியும் பொழுது அவர்களால் அதை தவறாக பயன்படுத்த ஒரு வாய்ப்பை எமிரேட்ஸ் போன்ற நிறுவனம் வகுத்துக் கொடுக்கிறது.

வங்கிகளில் கடன் அட்டையின் ரகசிய எண்ணை மாற்றுவதற்கு நாம் தொலைபேசி மூலம் அந்த எண்ணை நசுக்கி பதிவு செய்வோம் அதுதான் பாதுகாப்பான முறை இப்படி வெளிப்படையாக எல்லா இலக்க எண்களையும் ஒருவரிடம் கொடுக்கவும் கூடாது அப்படி கொடுப்பது ஆபத்தானது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த முறையை மாற்றி அமைத்தால் பயணிகளின் பயம் நீங்கும் ஊழியர்களின் குறுக்கு சிந்தனையை போக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பி உள்ளேன்.

Tuesday, August 31, 2010

வடமாநிலச் சுற்றுலா - 10 (முடிவு)


இரவு உறங்கி விழித்த எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது இன்று பாரத பந்த் ஆதலால் கடைகள் அடைக்கப் பட்டிருக்கின்றன எங்கும் பொருட்களை வாங்க செல்ல முடியாது ஆதலால் விடுதியிலேயே இன்றைய பொழுதை கழிக்கவேண்டும் என்ற நிலை உருவானது.

விடுதி பொறுப்பாளர்கள் வெளியில் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்கள் ஆதலால் பெண்கள் குழந்தைகளை விடுதியில் விட்டுவிட்டு நானும் நண்பர் ஹாஜாவும் கடைத்தெருவை சுற்றிப்பார்க்க புறப்பட்டோம்.

அரசியல் வாகனங்கள் நிறைய ஊர்ந்தன ஒவ்வோரு முக்கிட்டிலும் காவலர்கள் தடியுடன் கூட்டம் கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தார்கள் மக்கள் அவசரஅவசரமாக அங்குமிங்கும் அழைந்துக் கொண்டிருந்தார்கள் பரபரப்பு அதிகமாகவே இருந்தது உணவு விடுதிகளைத் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தது சிலர் சொன்னார்கள் மதியத்திற்குள் கடைகள் திறந்துவிடுவார்கள்.

இந்த பரபரப்பைக் காணும்போது பீம்சிங் மன்னருடைய ஆட்சி நடப்பதுபோல் ஒரு பிரமை எனக்குள் ஏற்பட்டது. மன்னர் ஊரைச் சுற்றி வலம் வருகிறார் என்றால் சிப்பாய்கள் சுறுசுறுப்புடன் வீதியிலே அணிவகுத்து நிற்பதுபோல காவலர்கள் நின்றார்கள்.
அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒலிப் பெருக்கியில் ஆளும்கட்சியை குறைக்கூறிக் கொண்டு காரில் சென்றார். ஒருநாள் அடைப்பில் எத்தனையோ ஆயிரம்கோடி நஸ்டம் என்று தொலைக் காட்சிக்காரர்கள் கணக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் வியாபாரத்தை இந்திய வணிகர்கள் ஏழைகளுக்கு வழங்கினால் வறுமையின் நிறம் சிவப்புளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறுபடலாம்.

மாலையில் வெளியில் புறப்பட்டோம் ஆட்டோக்கள் ஓடின சில கடைகள் மட்டும் திறந்திருந்தது மீண்டும் ஜல்மஹால் சென்றோம் அன்று மழை பெய்திருந்ததால் குளுமையாக இருந்தது வாண்டுகள் ஒட்டகசவாரி செய்ய ஆசைப்பட்டார்கள் ஆசை நிறைவேறியது.

அங்கிருந்து ஹவா மஹால் சென்றோம் அதன் உள்ளே ஒன்றும் இல்லை வெறும் கட்டிடமாகவே நின்றது ஹவா என்றால் காற்று."காற்று வீசும் அரண்மனை" அல்லது "தென்றல் வீசும் அரண்மனை"),இது 1799ஆம் ஆண்டு மஹாராஜா ஸவாய் ப்ரதாப் ஸிங் என்பவரால் கட்டப்பட்டது, மேலும் ஹிந்து கடவுள் கிருஷ்ணாவின் கிரீடத்தின் அமைப்பில் லால் சந்த் உஸ்தா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சிக்கலான பின்னல் வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஜரோகாக்கள் எனப்படும் சிறிய ஜன்னல்கள் 953 உள்ள வெளியிலுள்ள அதனுடைய சிறப்பான ஐந்தடுக்குக் கட்டடம்கூட, தேன்கூட்டிலுள்ள அறுகோணவடிவ அமைப்புவகையைச் சார்ந்ததாகும். தொடக்கத்தில், பின்னல் வேலைப்பாட்டின் நோக்கம், மேல்நிலைப் பெண்கள் கடுமையான "பர்தா" (முகத்திரை). முறையைப் பின்பற்றவேண்டியிருந்ததால், அவர்கள் இருப்பதை மற்றவர் பார்க்காவண்ணம் இருந்து கீழே சாலையில் நடைபெரும் அன்றாட நிகழ்வுகளைக் கவனிப்பதேயாகும்.

சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ண மணல்கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மணை, ஜெய்ப்பூர் வணிகப்பகுதியின் முக்கிய இடத்தின் பொது வழியில் அமைந்துள்ளது. அது நகர அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்குவதுடன், ஜினானா அல்லது பெண்களின் அறைகள், அந்தப்புரம் வரை பரவியுள்ளது. குறிப்பாக அது அதிகாலை வேளையில் சூரியனின் பொன்னிற ஒளியுடன் மின்னுவதைப் பார்க்கும்போது மிக்க மகிழ்வூட்டுவதாக உள்ளது.

சிட்டி பேலஸ் இது முபாரக் மஹால் மற்றும் சந்திரா மஹால் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் உட்புறத்தில் அழகிய தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெய்பூர் நகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


இரவுவரையில் திறந்திருந்த சிலகடைகளில் கிடைத்தப் பொருட்களை பார்வையிட்டோம் பல கடைகள் அடைப்பு என்பதினால் விலைகளில் ஏற்றமிருந்தது அதனால் எங்கள் மனதில் மாற்றம் வந்தது நாளை வாங்கலாம்.

பொழுது விடிந்தது ஆனால் என் உடம்பு விடியவில்லை. பின்னிரவிலிருந்து வயிற்றுப்போக்கு ஒருமுறை இருமுறையல்ல பலமுறை. எண்ணெய் பண்டங்களை உண்டதினால் அது அஜீரணகோளாறை ஏற்படுத்திவிட்டது. முதலுதவிக்காக எடுத்துவந்த மாத்திரைகளை விழுங்கிப் பார்த்தேன் திறந்த அணை மூடுவதாக இல்லை.

இன்று மாலை ஜெய்பூரிலிருந்து கோயமுத்தூர் சூப்பர்பாஸ்ட் இரயிலில் சென்னை புறப்பட்டாகவேண்டும் ஆனால் வாங்கவேண்டிய பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததினால் காலை 10 மணிக்கு என்னைத்தவிர மற்றவர்களை கடைத்தெருவிற்கு அனுப்பிவிட்டு நான் மட்டும் விடுதியில் தங்கிக் கொண்டேன்.
நின்றபாடில்லை பெய்கின்ற மழையும் வயிற்றுப் போக்கும் நிற்காமல் இருந்தால் ஆபத்துதான். பலமிலந்தவனாய் படுத்திருந்த நான் மெல்ல எழுந்து பக்கத்தில் இருந்த கிளினிக் சென்றேன். மருத்துவர் இல்லை செவிலியர் இருந்தார் நிலமையைச் சொன்னேன் அவர் கைபேசியில் மருத்துவரை அழைத்து என்கையில் கொடுத்தார் சொன்னேன் சிலமருந்துகளை செவிலியர் தருவார் சாப்பிடுங்கள் என்றார் இது கைப்பேசி கிளினிக் எனக்கு மருந்து கிடைத்தது சிலமணி நேரங்களுக்குப் பின் வயிற்றுப் போக்கு சரியானது ஆனால் உடல் ரொம்பவும் பலஹீனமாக இருந்தது. வெளி ஊர்களுக்குச் சென்றால் எண்ணெய் பண்டங்களை தவிர்ப்பது நல்லது என தீர்மானித்துக் கொண்டேன்.எண்ணெயில் செய்யாத பண்டங்கள் கிடைத்தாலும் ருசி எண்ணெயில்தானே இருக்கிறது.

கடைவீதிகளை முடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுக்களை தயார்செய்து இரயில்நிலையம் செல்வதற்கு ஆயத்தமானோம். உள்ளுர்வாசிகளின் பரிந்துரையில் விடுதி அறை முன்பதிவு செய்திருந்ததால் தள்ளுபடி கிடைத்தது.

சிறப்பான முறையில் வாடிக்கையாளரை கவனித்து அவர்களை கவர்ந்ததினால் இணைய வலையிலும் வளம் வருகிறது மதினா விடுதி.
மாலை 6.00 மணிக்கு புறப்பட்டோம்.

ஜெய்பூரின் இரயில் நிலையம் எங்களை கூட்டத்துடன் வரவேற்றது. கோயமுத்தூர் விரைவு வண்டி தளத்தில் அப்போதுதான் நுழைந்தது எளிதாக எங்கள் பெட்டியைத்தேடி ஏறிக் கொண்டோம்.

சென்னையில் நடந்ததைப் போன்றே இங்கும் எங்களின் இருக்கை முன்னும் பின்னும் மாறியிருந்தது பாசத்திற்குரிய பயணிகள் எங்களுக்காக தங்களை இடம் மாற்றிக் கொண்டு சந்தோசமளித்தார்கள். அந்த அத்தனை பயணிகளுக்கும் எங்களின் சுற்றுலா குழுவினர்கள் சார்பில் நன்றியை சமர்ப்பிக்கின்றோம்

வயிற்றுப்போக்கினால் உடல் அசதி அதிகமாகவே இருந்தது ஆனாலும் சமாளித்தேன் அன்றைய இரவு நல்ல உறக்கம்.


மீண்டும் சென்னையை நோக்கியது எங்கள் பயணம் ஆனால் ஒரு வித்தியாசம் ஜெய்பூரிலிருந்து மழையை கூடவே சென்னைவரையில் அழைத்துச் சென்றோம்.

இந்த சுற்றுலாவை நாங்கள் நினைத்தபடி மனம் நிறைவுடன் நிறைவு செய்தோம்.

வடமாநிச் சுற்றுலா பதிவை பதிவிட்டதிலிருந்து பின்தொடர்ந்து பின்னூட்டமளித்து ஊக்கம் தந்த பதிவர்கள்

நிஜாமுதீன்,
நாஞ்சில் பிரதாப்,
அப்துல்பாஸித்,
நீடுர் அலி,
சுல்தான்,
ஜூவன்பென்னி,
ராம்ஜியாஹ_,
வித்யா சுப்ரமணியம்,
எம்.எம்.அப்துல்லா,
அப்துல்மாலிக்,
ஊமையன்,
ஜோ அமலன் ராயன் பர்னான்டோ,
மஞ்சூர் ராஜா,
ஜோதிஜி,
குசும்பன்,
ஆக்கூரான் தமிழ்,
சிநேகிதி,
ஸாதிகா,
அப்துல்கதீம்,
சிம்மபாரதி,
க.நா.சாந்திலெட்சுமணன்,
துளசிகோபால்,

உங்களின் வருகைக்கும கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

Thursday, August 26, 2010

வடமாநிலச் சுற்றுலா - 9


மழைத்தூறல் அதிகமானது வாகனங்கள் வேகத்தை குறைத்துக் கொண்டன செல்லும் வழியெல்லாம் தரிசான விளைநிலங்களில் விழுந்த மழையின் நீரை தன் தேகத்தில் தாங்கியதுமே விழுங்கிக் கொண்டது மண். உணவுக்காக அலைந்த ஏழையைப்போல ராஜஸ்தானின் விளை நிலமும் மழைக்காக ஏங்கும் ஏழையாகவே இருக்கிறது.

கரும் மேகங்கள் எங்கே கலைந்து விடுமோ என்ற கவலை எனக்கு பெய்யட்டும் மழை பெய்யட்டும் எத்தனை ஏழைகள் இதற்காக ஏங்கினார்களோ பகலெல்லாம் தூங்கினார்களோ அவர்களுக்காக பெய்யட்டும். தண்ணீரின் தாகம் மனிதனுக்கு மட்டுமல்ல பூமிக்கும் இருக்கிறது பூமிக்குள்ளும் தண்ணீர் இருக்கிறது.

ஜெய்பூர் அஜ்மீரின் பிரதான சாலை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது வாகனங்களுக்கு எந்த இடையூரும் இல்லாமல் இருவழிப் பாதையில் மூன்று பாத்திகளாய் பிரித்திருந்தார்கள் வாழ்க்கையைப் போல் வாகனங்களின் வேகமும் அதிகரித்துக் கொண்டிருந்தன.

அஜ்மீர் செல்லும் வழியில் கிரானைட் பாறைகளை அறுக்கும் தொழிற்சாலைகள் வரிசையாக நிறைந்திருந்தது பல மாநிலங்களுக்கு இங்கிருந்துதான் சலவைக் கற்கள் அனுப்பப்படுகிறது. இங்கு விலைக்குறைவு ஆனால் இங்கிருந்து எடுத்துச் செல்லும் வாகனத்திற்கான வாடகைதான் அதிகம். பணத்தைவிட பொருள்தேவை உடையவர்களுக்கு வாடகை ஒரு பொருட்டே அல்ல வாங்கிவிடுவார்கள்.

நாங்கள் அஜ்மீரை நெருங்கிக் கொண்டிருந்தோம் மழையின் வேகம் குறைந்துக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் பெய்த மழையினால் பலரைப்போல நாங்கள் மகிழ்ந்தோம். மனிதனுக்கு எதுவெல்லாம் சுகம் தருகிறதோ அதில் மனம் மகிழ்கிறது.

அஜ்மீர் என்றாலே மஹான் ஹஜ்ரத் கரீப் நவாஸ் என்றழைக்கப்படும் மஹான் கவாஜ் மொய்னுதீன் ஹஸன் சிஸ்ட்டி அவர்களின் புனித அடக்கஸ்தளமே அனைவரின் நினைவுக்குள் வரும்.

மதபேதமில்லாமல் இங்கு பிரார்த்தனைக்காக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகைப் புரிகிறார்கள். இன்னும் பல நாடுகளிலிருந்தும் அதாவது அமெரிக்கா ஆப்ரிக்கா ஐரோப்பா பாக்கிஸ்தான் ஈரான் பங்களாதேஷ் இலங்கை மலேசியா சிங்கப்பூர் பர்மா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வருகைப்புரிகிறார்கள்.

இந்த இடம் புனித பூமியாக பல நூற்றாண்டுகளுக்கு முன் மஹான் ஹஜ்ரத் கரீப் நவாஸ் அவர்களினால் மாறிப்போனது இந்திய இஸ்லாமிய வரலாற்றில் அஜ்மீருக்கு அன்றும் இன்றும் என்றும் நீங்காத இடம்.
இன்னும் தமிழகத்தில் இஸ்லாமிய கிராமங்களில் அஜ்மீரை சின்ன மக்கா என்றும் அழைக்கின்றார்கள்.

நாம் சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்போம் ஆனால் காலச்சூழ்நிலையினால் போகமலேயே காலம் கடத்திவிடுவோம் ஆனால் சில இடங்களுக்கு எந்த திட்டமும் இல்லாமல் நினைத்த நேரத்தில் சென்று வந்துவிடுவோம் அது நமக்கு ஆச்சிரியத்தை அளிக்கும் அப்படித்தான் அஜ்மீரின் பயணம் எனக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது.

மதினாவைக் கண்ட என்கண்கள் அஜ்மீரையும் கண்டு குளிர்ந்தது ரோஜாவின் வாசனையை அஜ்மீர் எல்லையில் நுகர்ந்தேன். மஹான்கள் என்றும் சம்பூரண மனிதர்கள் இவர்களால் மனித குலத்திற்கு விமோசனமேத் தவிர மோசமில்லை.

உலகில் எத்தனையோ தீர்க்கதரிசிகளும் மஹான்களும் தோன்றி மறைந்திருக்கிறார்கள் இன்னும் மஹான்கள் தோன்றிக் கொண்டும் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால் மனிதன் இன்னும் மனிதனாக வாழவில்லை இந்த மனிதச்சமுதாயம் இந்த மண்ணில் வாழும் வரையில் மஹான்கள் தோன்றிக் கொண்டுதானிருப்பார்கள்.

மஹான் கரீப் நவாஸ் அவர்களின் புனித தர்ஹா ஷரீப்பிற்குள் நுழைந்தோம். பாதுகாப்பு பலமாக இருந்தது. புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை இருந்தாலும் ஆவலில் சிலப்படங்களை எடுத்தேன். காலை நேரம் கூட்டம் இருந்த வண்ணமாகவே இருந்தது அந்த தர்ஹா மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது தர்ஹாவை ஒட்டியே பள்ளிவாசலும் இருக்கிறது. பல மாநிலத்தர்கள் நிறத்தார்கள் மொழியார்கள் கடலில் கலக்கும் பல ஆறுகளைப்போல பல மனிதர்களும் இங்கு சங்கமிக்கிறார்கள்.

எங்களை வரவேற்று அழைத்து சென்றனர் தர்ஹாவின் கமிட்டியினர். அவர்களின் வழிகாட்டுதலில் இலகுவாக எங்களின் பிரார்த்தனையை முடித்துக் கொண்டோம்.

நன்றி சொன்னேன் இறைவனுக்கு நன்றி சொன்னேன். தர்ஹாவைச் சுற்றி கடைகள் அதைச்சுற்றி பலரின் நடைகள் நாகூரை நினைவுப் படுத்தியது. தர்ஹா வாயிலில் ஏழைகள் இங்கு காசு கேட்டவர்களை விட உணவு கேட்டவர்கள் அதிகம். இப்படி ஒரு புனித இடத்திற்கு வருபவர்களால் பல ஏழைகளின் வயிறு நிறைவதற்கு வாய்பளிக்கிறது இந்த மஹான்களின் தர்ஹாக்கள் இன்னும் பல புனித ஸ்தளங்கள்.

சில மணிநேரங்களை அங்கு கழித்துவிட்டு மீண்டும் ஜெய்பூர் செல்வதற்கு ஆயத்தமானோம்.

மனம் நிறைந்திருந்தது வானமும் தெளிந்திருந்தது மீண்டும் வாழ்நாளில் இன்னொருமுறை வருவோம் என மனம் சொன்னது புறப்பட்டோம் ஜெய்பூர் இளம் சிவப்பு நகரத்தை நோக்கி.

மழை பெய்ந்ததினால் பலர் வயலில் ஏர்கலப்பையை ஏந்தி நின்றார்கள் இருக்கும் ஈரத்தை வைத்து தங்கள் வயிற்றை காயவிடாமல் இருப்பதற்கு உழுதுக் கொண்டிருந்தார்கள் பல ஏழைகள் மழையின்றி அழுதுக் கொண்டு இருக்கிறார்கள்.

மாலையில் ஜெய்பூர் வந்தடைந்தோம் மீண்டும் மழையும் வந்தது.

Tuesday, August 24, 2010

வடமாநிலச் சுற்றுலா - 8



உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பார்கள் அது எங்களுக்கும் உண்டானது. களைப்பை தீர்க்க எங்களின் கைடு ஜெய்மஹாலை காட்டினார். பெரிய ஏரியின் நடுவில் ஜெய்மஹால் அமைந்திருந்தது. இது மன்னர் பீம்சிங்கின் உல்லாச மஹால் இதனுல் அரச பெண்கள் அதாவது பீம்சிங்கின் குடும்பப் பெண்கள் உள்ளே அனுமதி இல்லை இந்த மஹால் முழுக்க முழுக்க மன்னருக்கு மற்றும் ஆண்களுக்கு உல்லாசத்தை கொடுப்பதற்காக வடிவமைத்திருக்கிறார்.


ஜெய்பூர் இளம் சிவப்பு நகர மையத்தில் ஜெய்மஹால் அமைந்திருக்கிறது. மாலை நேரங்களில் ஜெய்பூர் வாசிகள் இங்கு குழுமி உரையாடுகிறார்கள் நடைபயில்கிறார்கள். இவர்களின் வாய்களுக்கு ருசிபார்க்க பலதரப்பட்ட பலகாரங்கள் தள்ளுவண்டியில் தள்ளி விற்கிறார்கள்.

டெம்போவில் அமர்ந்தபடியே கைடு வாயாலயே படம் காட்டினார். இளம் சிவப்பு நகரத்திற்குள் டெம்போ நுழைந்தது. அந்த நகரம் முழுக்க வணிகக் கடைகள். உணவு விடுதி வாசல்களில் வரிசையாக அமர்ந்திருந்த ஏழை பசிக்காரர்கள்;. தினமும் யாராவது ஏதாவது ஒரு நேர்த்திகடனை நிறைவேற்றினால் தான் இவர்களின் பசி தீரும் இல்லையெனில் ஐயோ பாவம் என யாராவது பணம் வைத்திருப்பவர் இரக்கப்பட்டால் அவர்களின் வயிற்றில் உணவு இறங்கும் அவர்களுக்காக இவர்கள் காத்திருக்கிறார்கள்.


கால்நடைகளுக்கு இளம்சிவப்பு நகரத்தில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. மனிதர்களோடு அவைகளும் நடக்கின்றன கழிக்கின்றன. சுத்தத்தை பற்றி மனிதர்களே கவலைப்படாத போது கால்நடைகளுக்கு எதற்கு கவலை.

இளம் சிவப்பு நகரத்திற்குள் மியுசியம் இருக்கிறது அதில் மன்னர் அணிந்த உடைகள் உபயோகித்த பொருட்கள் என பலபொருட்களை சிறை வைத்திருந்தார்கள்.

அரண்மனைக்குள் செல்வதற்கு அதிகத் தொகை என பயமூட்டினார் கைடு.பரவாயில்லை மூன்று தினங்கள் ஜெய்பூரில்தான் தங்குவோம் அப்போது பார்த்துக் கொள்கிறோம் என்றேன்.

நகரத்தை சுற்றிவிட்டு டெல்லிக்கு நகர்வதற்கு ஆயத்தமானது டெம்போ எங்களை இங்கேயே இறக்கி விடுங்கள் தங்கும் விடுதிக்கு செல்கிறோம் என்றதும் முகவரி கேட்டு ஆட்டோவில் அமர்த்தி அனுப்பி வைத்தார்கள்.

இளம் சிவப்பு நகரத்தின் காட்கேட்டில் உள்ள தங்கும் விடுதியில் முன்பதிவு செய்து வைத்திருந்தார் அப்துல்காதர். இவர் எனது உறவினரின் வணிக நண்பர் என்றாலும் எங்களை காண்பதற்காக தூரத்தை கடந்து வந்திருந்தார்.

இவர் ஜெய்பூர்வாசி ஒலிபெருக்கி தொழிலிற்சாலை வைத்துள்ளார். இருநூறு பணியாளர்களுக்கு இவர் ஒரே முதலாழி என்றாலும் தொழிலாளியாக இருந்து முன்னுக்கு வந்த முதலாழி. எங்களை ஓய்வு எடுக்கசொல்லி விட்டு நாளை சந்திப்பதாக கூறிச் சென்றார். சொன்னதுபோலவே மறுதினம் வந்து இரவு உணவை தன்னுடன் சேர்ந்து உண்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். எனக்கு வியப்பாக இருந்தது. முன்பின் அறிமுகமில்லாத இவர் எங்களுக்காக தங்கும்விடுதியை முன்பதிவு செய்துவிட்டு அத்துடன் நகர்ந்துவிடலாம் ஆனால் விருந்து போடுமளவு அவரின் நெருக்கம் என்மனதிற்கு இருக்கத்தை கொடுத்தது. வேண்டாம் என்று கூறியும் விடுவதாக இல்லை நானும் நண்பர் ஹாஜாவும் அவருடன் சென்றோம். தரமான உணவகத்தில் அவருடன் உணவருந்தினோம் அவரின் கடந்தகால கஸ்டங்களை வார்த்தைகளாக்கினார்.

அவைகள் என் மனதிற்கு உரங்களாகியது நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். உற்சாகமாக இருந்தது கீழ்மட்டத்திலிருந்து புறப்பட்டவர் மனிதனை நேசிக்க கற்றுக் கொண்டவர் அவரிடம் அந்த நிமிடங்களில் நிறைய கற்றுக் கொண்டேன். பயன்களை முன்வைத்து பழகும் மனிதர்களிடையே இப்படிப்பட்ட பூரண மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவரின் வாழ்க்கை தரம் இன்னும் மென்மேலும் உயரும்.

மாலை ஆறுமணிக்கு விடுதிக்குள் வந்ததினால் சிலமணிகள் ஓய்வு எடுத்துக் கொண்டு கடைத்தெரு சென்றோம். கல்பதித்த புடவைகள் சுடிதார் துணிகள் என பலவண்ணங்களில் பெண்களின் எண்ணங்களில் நிழலாடிய ஆடைகளை ஆசை ஆசையாய் அள்ளினார்கள். விலை கொடுக்கும்போது மட்டும் நாங்கள் தலைகாட்ட வழக்கம்போல் பேரம்தான்.

விடுதியுடன் சேர்ந்த உணவகத்திலிருந்து எங்களின் அறைகளுக்கே உணவுகள் பறிமாறினார்கள். அசதிக்கு சந்தோசம் இதுவும் வசதியாகத்தான் இருந்தது.

மறுதினம் காலையில் அஜ்மீர் செல்வதற்கு ஆயத்தமானோம் அதற்கு இனோவா வாகனத்தை விடுதியில் ஏற்பாடு செய்து தந்தார்கள். கிலோமீட்டருக்கு 7.50 என விலை நிர்ணயித்தார்கள்.

ஜெய்பூர் இளம் சிவப்பு நகரத்திலிருந்து சுமார் 130 கி.மீ தூரம் அஜ்மீர். நாங்கள் புறப்பட்டபோது எங்களுடன் மேகங்களும் புறப்பட்டது எங்கள் வருகையில் ஆனந்த கண்ணீரை மழையாய் பொழிந்து எங்களுக்கு ஆனந்தத்தை கொடுத்தது சந்தோசமாக பயணமானோம்.

சந்தோசப் பயணம் தொடரும்..

Thursday, August 19, 2010

வடமாநிலச் சுற்றுலா - 7


காலை 6.00 மணிக்கு டெம்போ தயாராக நின்றது எங்களுடன் இன்னும் நான்கு நபர்கள் அதில் பயணிகளாக வந்தார்கள் அதில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி மற்ற இருவர் சேலத்தைச் சார்ந்த தமிழர்கள்.

எங்களின் டெம்போ ஜெய்பூரை நோக்கி புறப்பட்டது டெல்லி ஜெய்பூரின் தேசிய நெடுஞ்சாலையில் பலவிதமான தொழிற்சாலைகள் இருந்தன.

எங்கள் குழந்தைகளுடன் நேபாள் இளசுகளும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள்.

வரும் வழியில் காலை சிற்றுண்டிற்காக நிறுத்தப்பட்டு உணவருந்தினோம்.

சூரியபகவான் கொஞ்சம்கூட எங்கள் மீது இரக்கம் காட்டவில்லை ஏசி வசதி இருந்ததினால் பயணத்தை இரசிக்க முடிந்தது.

ஜெய்பூரை நெருங்க, நெருங்க விளை நிலங்கள் அதிகமாக தென்பட்டது ஆனால் நிலங்கள் தண்ணீருக்காக வானத்தை நோக்கி கையேந்தி நின்றது.
மழையை நம்பித்தான் ஜெய்பூரின் விவசாயிகள் இருக்கிறார்கள்.நிலத்தடி நீரெல்லாம் அங்கு ஆயிரம் அடிகளை தாண்டி இருக்கிறதாம் அதனால் ஜெய்பூரில் நிலங்கள் மிகமலிவு (ரியல் எஸ்டேட் பிஸினஸ் காரர்களுக்கு இது டிப்ஸ் வாங்குவதற்கு ஆள்கிடைப்பார்களா? என்பதை யோசனை செய்துக்கொள்ளுங்கள்)

நம்ம ஊர்களில் மாட்டு வண்டியைப் பார்த்திருப்போம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டக வண்டியை அதிகம் காணமுடிகிறது.அதேப் போன்று ஜீப்கள் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள்.மலை,வயல்,பாலை இவைகளில் பயணம் செய்வதற்கு இளகுவாக இருக்கிறாதாம்.

ஜெய்பூரின் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம் சூரியன் வெட்கப்பட்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டது ஆனால் மேகம் எங்களை கொடைவிரித்து வரவேற்றது.ராஜஸ்தான் மாநிலம் எங்களை அன்புடன் அழைத்தது.

ஜெய்பூர் எல்லையில் ஆடம்பரமான அரண்மனை வடிவில் ரிஸோர்ட்கள் இருந்தன.அதைப்பார்த்ததும் அங்கு தங்கவேண்டும் என ஆசைவந்தது ஆனால் ஜெய்பூர் காட்கேட்டில் ஹோட்டல் புக் செய்துவிட்டபடியால் பார்வையால் அந்த ரிஸோர்ட்டில் தங்கிக் கொண்டேன்.

மன்னர் பீம்சிங்கின் அரண்மனைக்குள் செல்வதற்கு எங்களை டெம்போவிலிருந்து ஜீப்பிற்கு மாற்றினார்கள்.மலையின் மேல்புறத்தில் மன்னரின் அரண்மனை இருக்கிறது.நாம் கீழிருந்து அதைப் பார்ப்பதற்கே அந்த பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

ஜீப்பில் எங்களை ஏற்றும்போதே கைடும் எங்களுடன் ஏறிக்கொண்டார் எல்லா வகையிலும் ஏமாற்ற துடிக்கும் ஆக்ரா,டெல்லி மக்களுக்கு மத்தியில் ஜெய்பூர் வாசிகள் பலகுவதற்கு வியாபார நோக்கமில்லாத மனிதர்களாக ஆங்காங்கே காணப்பட்டார்கள்.

மன்னர் பீம்சிங் அரண்மனைக்குள் எங்களின் ஜீப் திணறி,திணறி ஏறியது வாகனமே இவ்வளவு திணறி ஏறும்போது அந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த சிப்பாய்கள் இந்த மன்னர்களுக்காக எத்தனைமுறை ஏறி இறங்கிருப்பார்கள்.

அரண்மனை வாசலில் குல்பி வியாபாரம் சூடாக நடந்தது அதை வாங்கி சுவைத்து நாங்கள் குளிர்ந்தோம்.அந்த அரண்மனையினுள் கண்ணாடி மஹால் இருக்கிறது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுக் கொண்டு கேமராவில் கண்ணாடியை நோக்கி கிளிக் செய்தால் பிரேம் போட்டது போன்று நம் தோற்றம் விழுகிறது...இதோ நீங்கள் காண்பது நேபால் தம்பதி...

இந்த அரண்மனையில் நமது புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இன்றைய நடிகர்கள் என பலரின் சினிமா சூட்டிங் இங்கு நடந்ததாம், நடக்குமாம்.

மன்னர் பீம்சிங்கிற்கு பதினெட்டு மனைவியாம் அந்த 18 மனைவிகளுக்கு 18 அறைகளை தனித்தனியே அமைத்து அந்த அறைகளுக்கு செல்லக்கூடிய வழிகளையும் 18 அமைத்துள்ளார்.மன்னர் எந்த மனைவியுடன் இருக்கிறார் என்பது எந்த மனைவிக்கும் தெரியாதாம்.(மனுசன் பலே கில்லாடிதான்)

அந்த அரண்மனையில் பணிப்புரிபவர்களுக்கு உணவு புகைப்படத்தில் காணும் இந்த சட்டியில்தான் தினம் சமைப்பார்களாம்.

இதோ நீங்கள் பார்க்கும் இந்தப் புகைப்படம் மன்னரின் கஜானா பெட்டி இதில்தான் தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் என்று வகைப்பிரித்து வைத்துள்ளாராம்.

மன்னர் பீம்சிங் கட்டிக்கலையில் மிகுந்த ஆர்வங் கொண்டவர் மட்டுமல்ல மனித ஒன்றுமையை வேண்டி பலமாக சிந்தித்தவர்.அவர் சிந்தனையின் உருவம்தான் இன்றைய ஜெய்பூர் வணிக நகரம்.இந்த வணிக நகரத்திற்கு நான்கு முக்கிய வாயில்களை அமைத்து அந்த வாயிலுக்கு மிகப்பெரிய கதவலையும் போட்டிருக்கிறார்.அதுமட்டுமல்ல அந்த வணிக நகரத்தில் பள்ளிவாசல்,கோயில் கட்டி இருக்கிறார் கோயில் இருக்கும் தெருவிற்கு இஸ்லாமிய பெயரையும் பள்ளிவாசல் உள்ள தெருவிற்கு இந்துப் பெயரையும் சூட்டி மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார் ஜெய்பூரில் வெற்றியும் பெற்றுள்ளார் இது இன்றளவும் இருக்கிறது.

ஜெய்பூர் நகரத்தை ஆங்கிலத்தில் "பிங்க் சிட்டி" என்றழைப்பார்கள்.அந்த நகரம் முழுவதும் ஒரே வண்ணத்தில் ஒரே அளவில் கட்டிடங்களும் தெருக்களும் அமைத்திருக்கிறார் மன்னர் பீம்சிங்.

மக்கள் நெரிசல் இந்த வணிக நகரத்தில் அதிகமாக இருப்பதினால் அவர்களால் தூய்மைக்கு துணை நிற்க முடியவில்லை.தூய்மையைப் பற்றி விழிப்புணர்வு செய்வதற்கு போதிய அவகாசம் அந்த மாநில அரசினர்களுக்கு இல்லாமல் இருப்பது வருத்தமடையச் செய்கிறது.மன்னர் பீம்சிங் மட்டும் இந்த நிலையைக் கண்டால் தொதித் தெழுந்துவிடுவார்.
மன்னர் பீம்சிங்கின் அரண்மனையில் சுரங்கப்பாதை இன்னும் இருக்கிறது இந்த சுரங்கப்பாதை அரண்மனையிலிருந்து மன்னர் அவசரக்காலத்தில் யாருக்கும் தெரியாமல் மலைப்பகுதிக்குள் சென்று விடுவதற்கு மக்களுடன் கலந்துவிடுவதற்குகாக அமைத்துள்ளாராம்.

மதியம் இரண்டு மணியை கடந்துவிட்டதினால் எங்களின் வயிறு உணவகத்தை தேடியது.மலையிலிருந்து இறங்கியதும் கைடு எங்களை தென்னிந்திய உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.சில தினங்களுக்கு பின் நம்மஊரு சாப்பாட்டை ருசித்து உண்பதற்கு செல்கின்றோம்...

உங்களுக்கும் இப்போ பசிக்கும்தானே அதனால் நீங்களும் சாப்பிடுங்க சந்திப்போம்...

Thursday, August 12, 2010

வடமாநில சுற்றுலா - 6


பேருந்து தயாராக நின்றது நாங்கள் ஏறி அமர்ந்தோம் அப்போதுதான் தெரிந்தது இது ஏசி வசதி இல்லாத பேருந்து என..நாங்கள் கட்டிய தொகை ஏசி பேருந்திற்கு..

அங்குள்ள பொறுப்பாளனிடம் கேட்டேன் நாங்கள் ஏசி பேருந்துவிற்கு தான் புக்செய்தோம் என்றேன்.அவன் உடனே மன்னிக்கனும் எங்களுக்கு வந்த தகவல் சாதாரன பேருந்தில் பயணம் செய்வதுதான் என்றான்.

இவன்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை எனத் தெரிந்தது ஏமாறக்கூடியவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று கூறுவார்கள்.
வாழ்க்கை பயணத்தில் எத்தனையோ விசயங்களில் ஏமாறுகிறோம் ஏமாற்றம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம்
பொருளை ஏமாந்தால் தேடிக்கொள்ளலாம் ஆனால் தன்னிடமே ஏமாந்துபோவதுதான் கஸ்டமானது
அது என்ன தன்னிடம் ஏமாறுவது என்கிறீர்களா?
என்னை நான் என்று எண்ணி ஏமாறுவது தான் தன்னிடம் ஏமாறுதல் இங்கு அத்வைதம் வேண்டாம் தேவையானால் தொட்டுக்கொள்வோம்.

அந்த பேருந்தில் சில தமிழ் குடும்பங்கள் இருந்ததினால் ஆதரவாக பேசிக் கொண்டு வந்தோம்.
டெல்லியை பொறுத்தவரையில் டிராபிக் சட்டதிட்டங்களை ஒருவரும் மதிப்பதில்லை.கண்காணிக்க கூடிய காவலர்கள் தங்களின் பாக்கெட்களை நிரப்புவதில் கவனமாக கண்காணிக்கின்றார்கள்.

செனனையில் இருக்கக் கூடிய சுத்தம் கூட மத்தியில் தலைநகரத்தில் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம்.

பேருந்தில் குளிர்சாதனம் இல்லை என்றாலும் எங்களை அழைத்துச் செல்லுகின்ற இடத்தை மிக அழகாக தெளிவாக உரையாற்றிய கைடின் வாய் திறமை குளிர்ச்சியாக இருந்தது.

குத்புதீன்ஐபக்கினால் கட்டப்பட்ட குத்துபினார் சென்றோம் அந்த இடத்தை தூய்மையாக பராமரித்துவருகிறார்கள்.நுழைவுக் கட்டணம் உண்டு.

முகலாய மன்னர்கள் கட்டிடக் கலை நிபுணர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளை கடந்தப் பின்னும் வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னங்களாய் குதுப்பினார் இன்னும் நின்றுக் கொண்டிருக்கிறது.

குதுப்பினாரின் கோபுரத்தில் லாயிலாஹா இல்லல்லாஹ_ முஹம்மது ரசூலுல்லாஹ் என்று திருக்கலிமா (மூலமந்திரம்) அரபு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது.


அங்கிருந்து தாமரை தியானக்கூடத்திற்கு சென்றோம்.நீண்ட தூரம் நடக்கவேண்டி உள்ளது.அந்த கூடத்திற்கு செல்லுமுன் அதன் வாயிலில் நம்மை வரவேற்பதற்கு பணியாளர்கள் காத்திருக்கிறார்கள்.

கூடத்திற்குள் அமைதிகாக்கும்படியும் கேட்டுக் கொள்கிறார்கள் அந்தக் கூடத்தில் அமைதி நிலவி இருந்தது நான்கு புறத்திலிருந்தும் தென்றலின் தழுவல் இதமாக இருந்தது.என் சுவாசம் உயிர் பைவரையில் சென்று ஆன்மாவுடன் கலந்தது என்று சொல்லலாம்.மொத்தத்தில் மனம் அந்த சில நிமிடங்கள் அமைதி கண்டன.

அங்கிருந்து பாரளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.உள்ளே அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் அனுமதி இல்லை. பாதுகாப்பை கருதி தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திக் கொண்டார்கள்.
அந்த தூரத்திலிருந்து புகைப்படங்கள் மட்டும் எடுக்கமுடிந்தது.

பேருந்தில் செல்லும் வழியில் காங்கிரஸ்கட்சியின் அலுவலகம் மற்றும் சோனியாகாந்தியின் இல்லம் பிரதமர் மன்மேகான் சிங் அவர்களின் இல்லம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்கும் இல்லங்களையும் காண்பித்தார்கள்.

செங்கோட்டையில் பணிகள் நடைபெற்று வருவதால் உள்ளே செல்லமுடியவில்லை அங்கிருந்து இந்தியா கேட் சென்றோம்.மிக பிரமாண்டமாக இருந்தது.சுதந்திர தின விழா குடியரசுவிழா இங்கிருந்துதான் தொடங்கும் என்றார்கள்.

இரவுநேரத்தில் இந்தியாகேட் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.டெல்லியின் பெரிய பள்ளிவாசல் (ஜூம்மா மஸ்ஜித்) பார்த்தோம் இவைகளை ஷாஜகான் தனது ஆட்சியில் கட்டியிருக்கிறார்.


ராஜ்கோட் சென்றோம் மகாத்மா காந்திஜியின் அடக்கஸ்தளம் சென்று பார்த்தோம் அங்கு நிற்கும்போதே பரவசமாக இருந்தது மகாத்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்துவிட்டு புறப்பட்டோம்.
லஷ்மி நாராயணன் கோயில் மற்றும் மார்கெட் இவைகளை கண்டுவிட்டு டெல்லி நிஜாமுதீன் தர்ஹாவிற்கு அழைத்துச் செல்லாமல் விட்டுவிட்டார்கள்.

இறுதியில் இரவு ஏழு மணிக்கு டெக்ஸி அமைத்து நிஜாமுதீன் தர்ஹாவிற்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம்.

மறுதினம் டெல்லியிலிருந்து ஜெய்பூர் செல்வதற்கு வாகனம் தயார் செய்வதற்கு டிராவல்சை அனுகினோம். இரயிலில் டிக்கேட் கிடைக்கவில்லை என்றார்கள் இறுதியாக ஏசி வசதியுடன் டெம்போ தயாரானது ஜெய்பூரின் முக்கிய இடங்களை சுற்றி காண்பித்துவிட்டு அங்கேயே இறக்கி விடுவதாக பேசி ஒப்பந்தம் செய்து முன்பணம் வழங்கினோம்.
ஏற்கனவே ஏமாந்த அனுபவம் இருந்ததால் இந்தமுறை ரொம்பவும் கவனத்துடன் செயல்பட்டோம்.
டெல்லியிருந்து ஜெய்பூருக்கு 260 கி.மீ சுமார் 5 மணிநேரம் பயணம் என்றார்.
அதிகாலை 6.00 மணிக்கு டெம்போ புறப்படும் என்றார்.நபர் 1க்கு 550 ரூபாய் என்றார் பேரம் பேசப்பட்டு 450க்கு இறுதியானது.

ஆதலால் அடுத்து ஜெய்பூரில் சந்திப்போமா?......