உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, April 14, 2010

பூஜியமாகும் சூனியம்


சில தினங்களுக்கு முன் எனது ஆன்மீக ஆசிரியரின் சொற்பொழிவைக் கேட்க சென்றிருந்தேன்.
ஆண்டுக்கு ஒருமுறை பத்து அல்லது பதினைந்து தினங்களுக்கு துபாயில் சொற்பொழிவாற்றுவார்கள்.

பலதரபட்ட கேள்விகள் பலரும் கேட்பார்கள்.எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்.ஆனால் கேட்கப்படும் கேள்வியை விளங்கி கேட்கப்படும்போது அதற்கான பதிலும் நம் மனதில் பதியும் இருள் விலகி அறிவுத் தெளியும்.
எல்லோரும் கேட்கிறார்கள் என்று நாமும் எதையாவது கேட்டால் பதில் கிடைக்கும் ஆனால் அந்த பதில் நம் மனதில் தரிபடாது.

ஏத்தனையோ நூற்களை நாம் வாசிக்கின்றோம் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு நூலும் ஒரு அறிவுதான்.ஆனால் அந்த நூற்கள் அறிவின் பூரணத்தை விளக்குவதில்லை.ஏட்டுக்கல்வியினால் எல்லாவற்றையும் விளக்க முடியாது.
விளக்கம் கொடுப்பதற்கு ஒரு ஆசான் தேவை.விளக்கமில்லாத படிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

ஞானிகளிடம் பூரணத்தை கேட்டு தெளியலாம்.கேட்கப்படும் நம்மிடம் தேடல் இருக்கவேண்டும்.இல்லையெனில் எந்த பதிலும் நம்மை திருப்தி படுத்தாது.
எல்லாவற்றிகும் ஒரு வழி இருக்கிறது.அந்த வழியில் தான் எதையும் பெறவேண்டும்.வழிமாறினால் வாழ்க்கையும் மாறிவிடும் சிந்தனையும் மாறிவிடும்.

இது அவசரக்காலம் எதையும் அவசரமாக செய்யப் பழகுகிறோம்.இந்த அவசரம் மனிதனை போட்டி மனப்பான்மையை உண்டாக்கி பொறாமைகளை வளர்த்து வருகிறது.

இந்த பொறாமை ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அழிப்பதற்கும் அவனைக் கெடுப்பதற்கும் பல யுக்திகளை கையாளுகிறான்.
அப்படிப்பட்ட யுக்திகளில் ஒன்று தான் செய்வினை செய்வதும் சூனியம் வைப்பதும்.இதில் பெரும்பாலும் பெண்கள் கவரப்படுகிறார்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

உண்மையில் ஒரு மனிதனுக்கு சூனியமோ செய்வினையோ செய்யமுடியுமா? அப்படி செய்வதினால் அதில் மனிதன் பாதிக்கப்படுகிறானா?

இந்த கேள்விகள் என் ஆன்மீக ஆசிரியரிடம் கேட்கப்பட்டது.

ஒரு கதை மூலம் விளக்கம் அளித்தார்கள்.

ஒரு சாலை ஓரத்தில் இருவர் எதிர் எதிரே ஒரேவிதமான கடை வைத்திருந்தார்கள்.ஒருவருக்கு நல்லவியாபாரம் அவர் நியாயமான விலையில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.மற்றவருக்கோ அந்தளவு வியாபாரமில்லை.எதிர் கடைக்காரனைக் கண்டு அவர் பொறாமைக் கொண்டார்.

ஒரு நாள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.உன்னை என்ன செய்கிறேன் பார் உனக்கு சூனியம் வைக்கிறேன் என்று வியாபாரம் இல்லதவர் கூற உன்னால் முடிந்ததை செய் என்றார் நியாயக் கடைக்காரர்.

மறுதினம் காலையில் கடைத் திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி.அவர் கடை வாசலில் கருப்பாக மணி உதிர்ந்து கிடைப்பதைப் போல கடுகு கிடைப்பதைக் கண்டதும் பொறாமை கடைக்காரர் ஏதோ சூனியம் செய்வினை வைத்துவிட்டார் என்று இவரே ஒரு பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டு கவலையடைந்தார்.அந்த கவலை வியாபார சிந்தனையிலிருந்து அவரை திசைத்திருப்பியது.அவருக்கு வியாபாரம் மந்தமானது அவர் உடல் நிலையும் மோசமானது.

இவரின் நண்பர் இவரைக்காண வந்தபோது தனக்கும் தனது எதிரி கடைக்காரனுக்கும் நடந்த பிரச்சனையை கூறி அவர்தான் எனக்கு செய்வினை செய்துவிட்டார்.என்னுடைய வியாபாரமும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்று அவர் கூறியதும் அந்த நண்பர் கூறினார்
உன்னுடைய எதிரையை பார்த்துவிட்டுதான் உன்னைக்காண வந்துள்ளேன்.
அவர் உனக்கு செய்வினையோ சூனியமோ வைக்கவில்லை. ஆனால் ஒரு ஐம்பது கிராம் கடுகை மட்டும் உன் கடை வாசலில் கொட்டிஇருக்கிறார் அதைக்கண்ட உனக்கு பயம் உண்டாகி நீயே உனக்கு சூனியத்தை செய்வினையை வைத்துக் கொண்டுள்ளாய் என்றார்.
இப்படித்தான் பலர் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.என்ற கதையை ஆன்மீக ஆசிரியர் கூறினார்கள்.

பல பெண்களிடம் சூனியத்தின் நம்பிக்கை நிறைந்திருக்கிறது.எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்.சூனியம் என்றாலே ஒன்றும் இல்லை என்பதுதானே பொருள்.ஒன்றுமில்லத ஒன்றினால் என்ன செய்ய முடியும். ஆனால் நம்பிக்கை எதையும் செய்யும்.
இறைவன் ஆதியில் சூனியமாக இருந்ததை அமாவாக இருந்தேன் என்கிறான்.ஒன்றுமில்லா ஒன்றுதான் இந்த பிரபஞ்சமாக இருக்கிறது.

செய் என்றால் செயல்பாடு
வினை என்றாலும் செயல்பாடுதான்; செய்வினை என்ற சொற்சொடருக்கு செயல் என்பதுதான் பொருளாக இருக்கிறது.

செய்வினை சூனியம் என்பது மனிதர்களை முட்டாளாக்குவதற்கும் பொருளை அபகரிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்று கண்கட்டு வித்தை.
சூனியம் மூலம் ஒருவரை பழிவாங்க முடியுமென்றால் நம்நாட்டு அரசியல்வாதிகளை எண்ணிப்பாருங்கள்.
சூனியம் வைத்தே ஒட்டையும் ஆட்சியையும் பிடித்துவிடுவார்கள் எதிர்கட்சி என்பதே இல்லாமலாகிவிடும்.எதிர்ப்பனுக்கெல்லாம் சூனியம்தான்.
இது சாத்தியமா?

சில இல்லங்களில் மாமியார் மருமகள் பிரச்சனை கூட சூனியம் என்ற பாட்டையில்தான் நடைப்பெறுகிறது.

இந்த நம்பிக்கையை பேணக்கூடியவர்களுக்கு சூனியம் எல்லாமும் செய்யும் இதை ஏற்காதவர்களுக்கு சூனியம் தனக்கே சூனியமாக்கிக் கொள்ளும்.

நம்பிக்கை என்பது மனிதன் தெளிவுவடைவதற்குதானே தவிர மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கல்ல.!

Tuesday, March 23, 2010

போலி மனிதர்களும், போலி மருந்துகளும்


இன்றைய நவீன உலகில் சம்பாத்தியம் என்பது போட்டிகளாக மக்கள் மனதில் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

சம்பாத்தியம் என்பது வாழ்வதற்கு அவசியமான அத்தியவாசயமான ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் எப்படி சம்பாதிக்கிறோம் என்பதில் பலவித கருத்துக்கள் இருக்கிறது என்றாலும் சம்பாத்தியத்தில் நேர்மை என்பது ஒவ்வொருவரும் பேனவேண்டியது அவசியமான ஒன்று என்பது பொதுவிதி.

நாம் எப்படி சம்பாதிக்கிறோம் என்பது அவரவருக்கு மட்டுமே தெரிந்த இரசியமாக இருக்கிறது.

ஒருமனிதனுடைய இரகசியமான செயல்கள் பகிரங்கமாகும்போது மற்றவர்களுக்கு மத்தியில் அவன் பொதுவிதியை நேர்மையை மீறியவனாக காட்சி அளிக்கிறான். பலருடைய விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுகிறான்.
இந்த விமர்சனங்கள் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதற்கும் தவறிலிருந்து திருந்துவதற்கும் வாய்ப்பை கொடுக்கிறது.ஆனால் தவறு செய்யக் கூடியவர்கள் அதை தவறு என்று உணரும்பட்சத்தில் மட்டுமே அந்த தவறு களையப்படும்.



நாட்டின் சட்டம் கடுமையாக தண்டிக்கப்படக் கூடியதாக இருந்தால் தவறுகளிலிருந்து மனிதர்களை குறைக்கலாம்.ஆனால் சட்டம் படித்தவர்களே குற்றவாளிகளை நிரபராதி என்று வாதாடி தங்களின் பொருளீட்டை பெருக்குவதற்கு சட்டத்தை ஏமாற்றுகிறார்கள்.

கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் யாரை எப்படி ஏமாற்றலாம் என்று இன்றைய நவீன உலகம் ஆசைகளை தூண்டி பலரையும் யோசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தனிமனித நேர்மை மனிதர்களிடம் இல்லாதவரையில் ஏமாறவும் ஏமாற்றவும் செய்வார்கள் என்பது திண்ணம்.

தெருவுக்கு ஒரு ஆலயம் வீட்டுக்குள் வணக்க வழிபாடு இப்படி பரவிவரும் பக்தி நிலையில் இறையை தொழுகின்ற மனிதர்கள் அந்த இறையிடம் பொருளைத்தான் வேண்டுகிறார்களேலொழிய நேர்மையை வேண்டுவதில்லை.

ஓவ்வொரு மனிதனும் ஒரே உண்மையிலிருந்து வெளிப்பட்டவன் தான் என்பதை வேதப்படிப்போடு நிறுத்திக் கொள்வதால் அனுவபப் படிப்பில் ஏமாற்றவும் ஏமாறவும் செய்கிறார்கள்.

சமீபத்தில் காலவாதியான மருந்துகளை போலி முத்திரையுடன் மீண்டும் மக்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்றச் செய்தி பலரையும் அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது.

யாரோ ஒருவர் இந்த மருந்தை வாங்கி அவதிப்படுவதைப் பற்றி அதை விற்ககூடியவனுக்கு துளியும் கவலையில்லை.அவனுக்கு தேவை பணம் மட்டும்தான். இப்படி பணத்தின் மீது குறியாய் இருப்பவர்களுக்கு நேர்மை என்பதோ ஒழுக்கம் என்பதோ துளியும் இல்லை என்றுதான் கூறவேண்டும். பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.மனித உயிர்களை விட பணம் மதிப்பு வாய்ந்ததாக பலரின் மனதிலும் குடிக் கொண்டுள்ளதால் தவறுகள் எளிமையாக நடந்துக் கொண்டிருக்கிறது.இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

காலாவாதியான மருந்துக்களை விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் கால தண்டனை வழங்க சட்டம் கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சட்டம் வருவதற்குள் எத்தனை உயிர்கள் பறிப்போகும் என்பது யாருக்குத் தெரியும்.

கல்வித்துறையும் வியாபாரமாகிவிட்டது அதில் பயிலும் மாணவர்களும் வியாரா நோக்கிலேதான் பயின்றுக் கொண்டிருக்கிறார்கள்.நாளை இவர்களின் எதிர்காலம் மனித நேயத்தைவிட வியாபாரநேயமே அதிகரிக்கும்.

எதையுமே லாபநோக்கில் பார்க்க கூடிய மனோநிலையை இந்த சமூகம் உருவாக்கிவருகிறது. இந்த நிலை மாறாத வரையில் எல்லாப் பொருள்களிலும் எல்லா மனங்களிலும் கலப்படம் இருக்கத்தான் செய்யும்.

மனிதநேயத்தை பயிற்றுவிக்கக் கூடியவர்களும், பயில்கிறன்றவர்களும், அதைப் பேணுகின்றவர்களும் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இது அதிகமாகத வரையில் பல திடுக்கிடும் செய்திகளை தினசரிகளில் தினம் கண்டுக் கொண்டுதானிருப்போம்.

Saturday, March 20, 2010

மார்ச் 20


1988 மார்ச் 20 லிருந்து 2010 மார்ச் 20 வரையில் சுமார் 22 வருடங்கள் கழிந்திருந்தாலும் எங்களுடைய வாழ்க்கையில் கூட்டல்களை வகுத்தல்களை கணக்கியலை திருமண பந்தம் கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆம் இன்று நான் எனது மனைவி பிள்ளைகளுடன் திருமணநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

எனது இருமகள்களும் அலுவலகத்திற்கு தொலைப்பேசி செய்து என்னிடம் வாழ்த்துக்களை வழங்கினார்கள்.

எங்களின் 22 வருட வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் நிறைய இருந்தாலும் அவை இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு இப்படி எல்லாம் கலந்த மசாலாவாக இருந்துக் கொண்டிருக்கிறது.

உணவுக்கு மசாலா எவ்வளவு அவசியம் என்பது உங்களுக்கும் தெரியும்தானே. அதில் எந்த ஒன்றும் அதிகமானாலும் ருசி மாறிப்போகும்.ருசி மாறினால் பசி தீராதே. பசிக்காக ருசியே இல்லாமல் என்றோ ஒரு நாள் சாப்பிடலாம் தினம் சாப்பிட முடியுமா?தினம் ருசியில்லாமல் சமைக்கத்தான் முடியுமா? காலம் கற்றுக் கொடுத்துவிடும். வாழ்க்கையும் அப்படித்தான் கற்றுக் கொடுக்கிறது விட்டுக் கொடுக்கும் பட்சத்தில்.

எங்கள் வாழ்க்கையை கற்றுக் கொண்டுவாழ்கிறோம், நிறைய எங்களுக்குள் விட்டுக் கொடுத்தும் வாழ்கிறோம்.

மாப்பிள்ளை ஊர்வலத்தில் மாலையும் கழுத்துமாய் அம்பாஸிட்டரில் அமர்ந்திருந்தபோது என் உறவினர் தேரிழந்தூர் அப்துல் மஜீது அவர்கள் என்னிடம் உதிர்த்த வார்த்தைகள் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

நேற்று வரையில் நீ அரை மனிதன் இன்று முதல் நீ முழு மனிதன் என்றார்.

திருமணம் பந்தத்தின் மூலம் மனிதன் முழு மனிதனாகின்றான்.அதுவரையில் என்னதான் கற்றறிந்தாலும் அந்த மனிதன் முழுமை அடைவதில்லை.

அன்று எங்கள் திருமணத்தில் கலந்துக் கொண்ட பலரை இன்று நாங்கள் இழந்திருக்கிறோம். வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் இருக்கத்தானே செய்கிறது.

எப்படி பிறந்தோம் என்றறிந்தால் எப்படி வாழ்வது என்பதறிவோம் என்ற வரிகளை இங்கு பதிவு செய்ய எனது 22 வருட மணவியல் வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது.

திருமணமான சில நாட்களில் மகானைக் காண நான் சென்றபோது எனது தாயார் வருந்தினார்கள். இந்த வயசுல எதுக்கு இதுவெல்லாம் என்றார்கள்.

அறிவைத்தேட வயதிருக்கிறதா? புரிந்துக் கொள்வதற்குத்தான் வயது தேவைப்படுகிறது.

அந்த தருணத்தில் எனது மனைவி பயந்திருக்கிறாள். பயத்தை போக்குவதற்கு தெளிவைக் கொடுத்தேன்.

புரிந்துக் கொண்டார் எனக்கு என் மனைவி புதியவரல்ல. மணம் புரிந்தப்பின் என் மனதில் புகுந்தவரல்ல. என் தந்தையின் சகோதரி மகள் என்றாலும் கூட இரு மனம் கலந்தால்தான் அது காதல். ஆனால் அந்தக் காதல் சில வருடங்கள் வாழ்க்கை ஒப்பந்தத்திற்காக காத்திருந்தது.

காலம் கடந்தது எங்கள் காதல் வளர்ந்தது. என் வீட்டில் எதிர்ப்பு நிறைந்தாலும் என் தந்தை மறுப்பு சொல்லவில்லை எங்களுக்காக விட்டுக் கொடுத்தார். அதுதான் எங்களுக்குப் பாடம்.

விட்டுக்கொடுத்தால் விரோதியும் நமக்கு நண்பனாகி விடுவான். விரோதியே நண்பனாகும்போது நமக்கே நமக்காக வாழும் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துவிட்டால்..... எழுதுவதற்கு எளிமையாக இருக்கிறது படிப்பதற்கும் அப்படித்தானிருக்கும் நடைமுறைப் படுத்தி வாழ்ந்துப் பார்த்தால் கடினம்மாதிரி இருந்தாலும் அது கஸ்டமாவதில்லை நம் வாழ்க்கையை நஷ்டமாக்குவதில்லை.

எங்கள் திருமணத்திற்கு பாலமாக நின்ற என் இனிய நண்பர் ஒலிமுஹம்மது.இவர் எங்கள் இரு வீட்டாருக்கும் தூதுச் சென்ற வெள்ளைப் புறா மறக்க முடியாத மனம்.

திருமணத்தை முன்னின்று நடத்திய என் அன்பிற்குரிய மாமா அப்துல்ஜப்பார்.என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த மாவீரர்.

என் பிள்ளை ஆசைப்பட்டு விட்டான் என்பதற்காக என்னவளை மருமகளாய் ஏற்றுக் கொண்ட என் அன்னை.

என்றும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் என் தந்தை.

ஓடியாடி வேலைகளை செய்த என் உடன் பிறந்த சகோதரர்கள்.

பெற்ற பிள்ளையைப்போல் பாசங்காட்டிய என்நண்பன் அத்திக்கடை சிஹாபுதீனின் தந்தை செவத்தப்பிள்ளை முஹம்மது ஹனிபா.

எங்களை வாழ்த்துவதற்காக கூடிவந்த சொந்தங்கள், பந்தங்கள், உள்ளுர் வாசிகள்

இவர்களுக்கு மத்தியில் காதலுக்கு தூதுச் சென்ற எனது மைத்துனர் ஷேக்அலாவுதீன்.

நாங்கள் யாரையும் மறக்கவில்லை எங்கள் மனதில் மறைக்கவில்லை.

Thursday, March 11, 2010

விமானத்தில் ஒரு விவாதம்

சென்ற மாதம் எனது நண்பர்களுடன் துபாயிலிருந்து இலங்கைக்கு ஒரு விழாவிற்காக சென்றிருந்தேன்.

பல நாடுகளிலிருந்து பலரும் இவ்விழாவிற்காக வருகைத்தந்தார்கள்.

சார்ஜாவிலிருந்து எங்களது பயணம் ஏர் அரேபியாவில் தொடங்கியது.

நண்பர்களுடன் ஒருமித்து பயணம் செய்வது என்பது அலாதியான இன்பம்.

ஏர்அரேபியா விமானத்தில் இருக்கைகளில் நண்பர்களுடன் ஒன்றாக அமர்வதற்கு எண் கிடைக்கவில்லை.நான் மட்டும் தனித்து சகபிரயாணிகளுடன் அமரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இரவு நேரப் பயணம் என்பதால் அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.மூன்று பேர்கள் அமரக்கூடிய இருக்கையில் எனக்கு நடு இருக்கை அமலாகி இருந்தது.

எனது இருக்கையின் இடது பக்கம் இலங்கைவாசி அமர்ந்திருந்தார்.அவர் என்னிடம் பேசவில்லை நானும் பேசவில்லை.அவரவர் எண்ண ஓட்டத்தில் கற்பனையில் சிந்தனையில் ஓத்திகைகளை மனதில் காட்சிகளாக்கி படம் பார்த்துக் கொண்டிருந்திருப்போம்.

எனது வலதுப் பக்க இருக்கைக்கு தாடிவைத்த ஐம்பது வயதை கடந்தவர் வந்தமர்ந்தார்.அவர் தோற்றத்தை வைத்து இஸ்லாமியர் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

மதத்தை அல்லது மார்க்கத்தை முழுமையாக பேணுகிறார்களோ இல்லையோ ஆடைகளில் தங்களை எந்தக் கொள்கையை எதைச் சார்ந்தவர்கள் என்பதை அடையாளம் காட்டிக் கொள்ளக்கூடியவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

அவர் என்னைக்கண்டு புன்முறுவல் பூத்தார். தன் பெயரைச் சொன்னார் என் பெயரைச் சொன்னேன்.

என்னிடம் கைகுலுக்கிக் கொண்டார் இந்த பரசஸ்பரம் நானும் இஸ்லாமியன் என்பதினால் அவரிடம் ஏற்பட்ட உந்தலாக இருந்தது.

இந்தியன் என்றார் நானும் என்றேன்.


அதோடு அவர் இருந்துவிட வில்லை.கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தார்.எங்கு போகிறீர்கள் எதற்கு போகிறீர்கள் ஏன் போகிறீர்கள் என்று துப்பறியும் காவலரைப்போல அவர் கேட்டது எனக்கு ஒருவித சலிப்பை கொடுத்தது.இருந்தாலும் பதில் கொடுத்தேன்.

விமானம் பறக்க ஆரம்பித்தது தன்னிடம் ஹைதராபாத் பிரியாணி அதிகமாகவே இருக்கிறது என்னோடு பங்கு போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

நன்றி... நான் சாப்பிட்டுவிட்டேன் என்றேன்.மீண்டும் அழைத்தார் மீண்டும் நன்றி சொன்னேன்.ஹைதராபாத் பிரியாணி ருசியாக இருக்கும் மிஸ் பண்ணாதீங்க என்றார்.

(உணவு ருசியாகத்தான் இருக்கும் உண்ணக்கூடிய நாம் ருசியாக இருக்கின்றோமா? என் உள்மனம் கேட்டது)

அவர் உண்பதற்கு ஆயத்தமானார் நான் எனது நண்பர்களின் இருக்கையைத் தேடி சென்றேன்.சிலர் உறக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்கள் உரையாடிவிட்டு எனது இருக்கைக்கு வந்தேன்.

பிரியாணியை முடித்துவிட்டு எனக்காகவே காத்திருப்பது போல் அமர்ந்திருந்தார்.
நான் அமர்ந்ததும் பேச்சை ஆரம்பித்தார்.

பொதுவான பேச்சல்ல.இறைவனைப் பற்றிய உரையாடல்.அவர் பேச பேச நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் இஸ்லாமியனாக இருப்பதினால் இவர் பேசுகிறாரா அல்லது இந்த இருக்கையில் வேறு யார் அமர்ந்திருந்தாலும் இவர் இப்படித்தான் பேசிக் கொண்டிருந்திருப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

பலரிடம் இறைவனைப்பற்றிய அறிவைவிட நம்பிக்கையே அதிகமாக இருக்கிறது.
தன் நம்பிக்கையை எப்படியாவது மற்றவர்களிடம் காட்டிவிட வேண்டும் என்பதில் பலர் ஆவர்வமாக இருக்கிறார்கள்.

ரொம்பவும் சுவாரஸ்யமாக பேசினார்.என்னிடம் தான் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது.அவர் பேசிய பகுதிகளை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் அதனாலும் கூட சுவாரஸ்யம் குறைந்திருக்கலாம்.

இவர் தனக்கு இதுவெல்லாம் தெரியும் என்று பேசினாரா அல்லது எனக்கு இவைகள் தெரியாது என்று பேசினாரா? ஏன்று விளங்கவில்லை.ஆனால் ஒன்று மட்டும் விளங்கியது சரியா இவரிடம் மாட்டிக் கொண்டோம் என்று.

இவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரே வழி நான் வாயை திறக்கனும் என்று முடிவு செய்தேன்.வாய்ப்பை எதிர்பார்த்தேன் அவர் பேச்சில் ஒரு சிறிய இடைவேளை கிடைத்தது உள்ளே புகுந்தேன்.

இறைவனைப்பற்றி நிறையவே பேசினீர்கள் உங்களிடம் இறை நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது சந்தோசம்.
இறைவனை நம்ப வேண்டுமா அறிய வேண்டுமா? முதல் கேள்வியை வைத்தேன்.
அவர் மௌனமாகவே என்னைப்பார்த்தார்.மீண்டும் தொடர்ந்தேன் இந்த உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் மட்டுமே இருந்ததாக வேதம் கூறுகிறது.
ஓன்றை படைக்க எண்ணினால் ஆகுக என்று இறைவன் கூறுவான் அது ஆகிவிடும் என்று வேதம் சொல்கிறது அப்படியான படைப்பில் இறைத் தன்மை இருக்கிறதா?இல்லையா? என்று கேட்டேன்.

மௌனமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மன்னிச்சுடுங்க! நம்மைப்போன்ற பலரிடம் இஸ்லாமிய வெளிரங்க ஞானம் அதிகமாக இருக்கிறதே தவிர உள்ரங்க ஞானம் இல்லை.இஸ்லாம் ஒரு பகுதி அல்ல அது முழுமையானது.இஸ்லாம் தர்க்கத்திற்குரியது அல்ல வாழ்வதற்குரியது ஆனால் அதை தர்க்கதிற்குக்கென்று பலரும் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு இஸ்லாமியன் தன்னை அறியப்படும்போது தன் இறைவனை அறிகிறான்
இறைவன் மீது நம்பிக்கை மட்டும் வைத்திருப்பவர்கள் தன்னை அறிவதில்லை.அவர்கள் இறைவனை தன்னை விட்டும் பாரதூரத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்று கூறி முடித்தேன்.

மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் மதங்களும் மார்க்கமும் ஆனால் நாம் அதிகமாக இறைவனைப்பற்றி பேசுகிறோம் அதிகமாக மனிதர்களை நேசிக்கின்றோமா?

சரிதான் சரிதான் என்று மெல்ல இந்த வாதத்திலிருந்து விலகுவதைப் போல தனதிருக்கையில் சாவசமாக சாய்ந்தார்.

அப்பாடா தப்பித்தோம் என நானும் இருக்கையை சாய்த்துக் கொண்டு கண்களை மூடினேன்.

இலங்கை போய் சேரும் வரை அவரும் நானும் எதுவும் பேசவில்லை.இறங்குவதற்கு முன் இருவரும் கைக் குலுக்கி விடைப் பெற்றோம்.

இந்த பதிவு விவாதத்திற்காக அல்ல

Thursday, March 4, 2010

காவிக்குள் காமம்

காவி உடைக்குள் காமம் இல்லை என்று யார் சொன்னது.?
பச்சைக்காயில் பழத்தின் ருசி இருக்காது பழத்தில் பச்சைக்காயின் வீரியம் இருக்காது.

காய்களை வாங்கிவிட்டு பழம் என்று சொன்னால் அது யார் தவறு.?

பூத்து காயாகி கனிவதற்கு முன் காய் தன்னை கனி என்று எண்ணிக் கொண்டால் அது பழமாகி விடுமா.?

இரு தினங்களாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுவது காவிக்குள் நுழைந்த காமம்.

மனிதனாக பிறந்த மனிதன் வேதங்களை கற்று மனனம் செய்து அதை பிறருக்கு உபந்நியாசம் செய்துவிட்டால் சமூகத்தில் பலரால் அவர்களை மகானாக பார்ப்பதற்கு பட்டங்களை வழங்குவதற்கும் தயாராகிவிடுகிறார்கள்.
தங்களின் தேவைகளை குறை நிறைகளை அவர்களிடம் கூறி மனஆறுதலை தேடுகிறார்கள்.

மனித உடலுக்கு எல்லாத் தேவைகளும் தேவையாக இருக்கிறது.அந்த தேவைகளை பூர்த்திச் செய்யாமல் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை.

பசிக்கின்றபோது புசிக்கவேண்டும் புசித்துவிட்டால் வயிற்று பசி அடங்கி காமப்பசி தலைத்தூக்கும்.தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி என்ற அந்தஸ்துடன் வாழ்க்கைநெறியை பேணவேண்டும்.அதை அணைப்போட்டு தடுப்பது என்பது தற்கால சாத்தியம் என்றாலும் அது நிரந்தரம் அல்ல.அணைக்குப் பின்னால் தேக்கம் இருந்துக் கொண்டுதானிருக்கும்.
மனிதனை கடவுளாக பார்க்கும் தன்மை மிருகங்களுக்கு கிடையாது ஆனால் மிருகமாக நடக்கும் தன்மையும் கடவுளாக பார்க்கும் பார்வையும் மனிதனிடம்தான் இருக்கிறது.

கடவுளை ஒவ்வொரு மனிதனும் ஒரு அளவுகோள்வைத்து நம்பிக் கொண்டிருக்கின்றான்.இறைவனை அறிபவர்களைவிட நம்புகின்றவர்களே இவ்வுலகில் அதிகம்.நம்பிக்கை அறிவாகுவதில்லை ஆனால் அறிவு நம்பிக்கையை வழுப்படுத்தும்.

இறைவனை இறைவனாக பார்ப்பவர்கள் இவ்வுலகில் மிகச் சொற்பபேர்கள்தான்.
பலர் தன்னை கடவுளாக எண்ணிக் கொண்டு பிறரை எண்ணவைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தன்னை அறியாத இவர்கள் தன்னை கடவுள் என்று சொல்லி இந்த உலகில் எதைப் படைத்தார்கள்.?

பல ஊர்களில் நாடுகளில் ஆசிரமங்களை வளர்தார்கள்.தங்களின் வங்கி கணக்கில் கோடிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உடல் நோய்களை குணப்படுத்த மருத்துவரிடம் செல்லக் கூடியவர்கள் மருத்துவரை கடவுளாகப் பார்ப்பதில்லை.அதில் தெளிவாக இருக்கிறார்கள்.
ஆனால் காவியை கண்டுவிட்டால் பலருடைய கண்களுக்கு சாமியாகத் தெரிவதுதான் வியப்பு.

அந்த சாமிகள் தானும் ஆசாமிதான் என்பதை அவ்வபோது நிருபிக்கும்போது அவரை வணங்கியவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

தான் தவறு செய்யலாம் ஆனால் தான் வணங்கக்கூடியவர் எந்தவிதத்திலும் தவறிழைப்பதை பொருந்திக் கொள்ளமுடியாது என்பதை ஆசிரமங்கள் அடித்து நொருக்கப்பட்டதில் தெரிகிறது.

இவர் தவறு செய்ததற்கு அவரை வணங்கியர்களும் அவரை வளர்த்தவர்களும்தான் காரணம்.

நேற்றுவரையில் ஊடகங்கள் அவருக்கு குடைப்பிடித்து அவருடைய சொற்பொழிவுகளை தொடராக பலரை தொடவைத்தது.
இன்று அதே ஊடகம் அவரை கூவமாக்குகிறது.

ஒரு போலி வளர்வதற்கு காரணமாக இருந்த ஊடகங்களை ஏன் இந்த மக்கள் முற்றுகை இடுவதில்லை.?

ஆறறிவுள்ள மனிதன் தனது ஆறாம் அறிவை பிரயோகிக்காத வரையில் இது போன்ற நிகழ்வுகளை அவன் சந்தித்துக் கொண்டுதானிருப்பான்.

ஒரு பொருளை வாங்கக்கூடியவர்கள் அந்த பொருளின் தரம் மணம் நிறம் இவைகளை அலசி ஆராய்ந்து வாங்குவதில் கவனமாக இருக்கிறார்கள்.
தங்களின் குழந்தைகளை எந்தப்பள்ளியில் எந்த கல்லூரியில் எந்த படிப்பில் சேர்ப்பது படிக்கவைப்பது என்று ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்.
ஆனால் இறைவனுடைய விசயத்தில் அறிவைவிட நம்பிக்கைக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் எளிதாக ஏமாந்துவிடுகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களால் உண்மையான மகானும் உண்மையான ஞானமும் மக்களிடம் சென்றடைவதில் சுனக்கம் ஏற்படுகிறது.
மனிதனை மனிதனாக வாழவைத்தவர்கள் மற்றவர்களுக்கு மத்தியில் மனிதனாக வாழ்ந்ததாகத்தான் சரித்திரம் சொல்கிறது அவர்கள் கடவுளாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

திரைப்படங்களை கண்டுவிட்டு தங்களின் நாட்டையே தாரைவார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விசயமல்ல.

இதுவும் கடந்து போகும்.!

Thursday, February 4, 2010

காலடியில் சொர்க்கம் (சிறுகதை)


‘தாத்தா எழுந்திறிங்க’ என்று பேரன் பாசித் கூப்பிட்டதை பொறுட்படுத்தாமல் விட்டத்தைப்பார்த்துக் கொண்டு படுத்திருந்தார் உஸ்மான்பாய்.

எழுந்திருங்க என்று கூப்பிடுவது ஆஸ்பத்திரி போவதற்கு பதினைந்து வருடங்களாக எல்லாம் மருந்தும் சாப்பிட்டாச்சு ஆனால் இரண்டு காலிலும் உள்ள புண் மட்டும் குணமாகவில்லை.

இப்பவும் பேரன் அதுக்குதான் கூப்பிடுகிறான் என்பது தெரிந்திருந்தாலும் ஆஸ்பட்டல் போவதற்கு மனசு அலுப்புதட்டியது.

‘உடம்பு சரியில்லையா’ என கரசனையோடு அவரருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டே அவர் நெற்றியில் கைவைத்து சுடுகிறதா என்று பார்த்தான் பாசித்.

உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு மனசுதான் சரியில்ல என்று பேரனிடம் கூறுவதற்கு அவரிடம் தைரியமில்லை.

எந்த குறையும் இல்லாமல் தன்னை பேணிகாத்து வரும் பேரனிடம் மனசு சரியில்லை என்று கூறினால் அவனால் தாங்க முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தார்.

‘தாத்தா நேரமாகுது ஆஸ்பத்திரியில கூட்டமாகிடும் கிளம்புங்க’ என்று துரிதப்படுத்தினான் பாசித்.

பேரனின் நச்சரிப்புக்காக அவன் மனம் திருப்திக்காக புறப்பட்டார் உஸ்மான் பாய்.

‘அம்மாவை பார்க்க எப்போ போறே?' கேட்டார் உஸ்மான்.

“அம்மாவை பார்த்து வந்து இரண்டு நாள்தானே ஆச்சு எப்பவும் அம்மாவைப் பற்றியே அதிகமா எனக்கு ஞாபகம் மூட்டிக்கிட்டு இருக்கீங்க... அப்பாவுடன்தானே அம்மா இருக்காங்க நான் வேலைக்காக வேண்டி இப்படி தூரமா குடும்பத்துடன் இருக்கிறதுனால உங்களை துணைக்கி வைத்துக் கொண்டு வார விடுமுறையில நான் போகலைன்னாலும் வம்பிப்பா என்னை போகச்சொல்லி கட்டாய படுத்துறீங்...சில நேரம் எனக்கு எரிச்சலாக இருக்கு.”என்றான்

‘தாயை பார்ப்பதற்கு உனக்கு எரிச்சலாக இருக்கா’? கேட்டார் உஸ்மான்.

‘பார்பதற்கு இல்ல...நீங்க இப்படி அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பதற்கு’ என்றான்.

மருத்துவமனையில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.வரிசையில் உஸ்மானை அமரவைத்துவிட்டு பாசித் பெயர் பதிவு செய்ய சென்றான்.
வயதான மூதாட்டி ஒருவரை கைத்தாங்களாக ஒருவர் அழைத்துவர அங்கு அமர்வதற்கு இருக்கை காலியாக இருக்கவில்லை.அழைத்து வந்தவர் சுற்றும் முற்றும் பார்க்க பலரும் குழந்தைகளுடனும் வயதானர்களாகவும் இருந்தார்கள் உஸ்மான் பாய் சடாரென எழுந்து தன் இருக்கையில் அமரும்படி சைகை செய்தார்.

‘வேண்டாம்ங்க இப்படி தரையிலேயே உட்கார வைக்கிறேன’; என்று மூதாட்டியை அமைத்து வந்தவர் கூற

“தரையில வேண்டாம் சில்லுன்னு இருக்கும் இருக்கையில அமரவையுங்கள்” என்று கூறி தன் கைத்தடியின் துணையுடன் எழுந்து செவிற்றில் சாய்ந்து கொண்டார் உஸ்மான்.

மூதாட்டி கைகூப்பி நன்றி கூறினார்.

‘ஆத்தா நான் போய் டோக்கன் வாங்கியாறேன்’ என்று அழைத்துவந்தவர் உரக்க கூறிவிட்டு சென்றார்.

அவர் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றார் உஸ்மான்.
இந்த மூதாட்டி அவருடைய தாயாகதானிருக்கும் எப்படி அனுசரனையுடன் நடந்துக் கொள்கிறார் என்று அவரை நோக்கிய எண்ணம் பறந்தது.

உஸ்மானை நோக்கி வந்த பாசித் உஸ்மான் நிற்பதைக் கண்டு
“ஏன் தாத்தா நிக்கிறீங்க உங்கள உட்காரவச்சிட்டுதானே போனேன்” என்று கேட்க

“வயசானவங்க உட்காரட்டுமேன்னு நான் நின்னுகிட்டேன்” என்றார்.

“ஏன்ன வயசானவங்களா? அப்ப நீங்க வயசுப்பையனா...? உங்களுக்கே ஒரு ஆள் தூக்கிவிடனும் ஏன்தான் இப்படி இருக்கீ;ங்களோ தெரியல.சரிவாங்க டாக்டர் ரூமுக்கு போவோம்” என்று அழைத்துச் சென்றான் பாசித்.

வழக்கம்போல் புன்னகையுடன் வரவேற்றார் டாக்டர்

“பாய் ! எப்படி இருக்கீங்க புண்ணு ஆறி இருக்கா காலை ஸ்டுல் மேலே வைங்க” என்று காலைப்பார்த்தார்.புண் ஆறுவதற்கு பதிலாக அதிகமாக இருப்பதுபோல் டாக்டருக்கு தெரிந்தது.

“என்ன பாய் புண்ணு அதிகமா தெரியுதே ஒழுங்கா மருந்து சாப்பிட்டீங்களா? மருந்து போட்டீங்களா?” ஏன்று கேட்க... பாசித் முந்திக் கொண்டு வேலாவேலைக்கி சரியா நான்தான் சார் மருந்து கொடுக்கிறேன் என்றான்.

உஸ்மானைப் பார்த்து “பாய் கவலைப் படாதீங்க எப்படியும் குணப்படுத்திடுறேன் அடுத்தமாசம் பெங்களுருல பெரிய ஆஸ்பட்டலுக்கு பல நாட்டிலிருந்து டாக்டர்கள் வர்றாங்க நானும் போறேன் நீங்களும் வந்தீங்கன்னா மற்ற டாக்டர்களோடு கலந்து சரிபண்ணிடலாம்” என்று டாக்டர் கூறியதும்

பாசித் உடனே ‘நிச்சயமா கூட்டிவாரேன்’ என்றான்.

உஸ்மான் சிரித்துக் கொண்டே ‘அதெல்லாம் சரி வராது வேண்டாம்’ என்றார்.

“நோயாளி ஒத்துழைச்சாத்தான் நோயை குணப்படுத்த முடியும்” என்று டாக்டர் கூறியபோது

“குணமாகக் கூடிய நோயாக இருந்தா எப்பவோ குணமாகி இருக்கும் இது குணமாகாது சார் என்காலோடு போட்டி போட்டு உங்க நம்பிக்கையை கெடுத்துக்காதீங்க... வேண்டாம்னு சொன்னாலும் என் பேரனும் விடமாட்டேங்குறான்” என்றார்.

“தாத்த ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க டாக்டர் எப்படியும் குணப்படுத்திவிடுவார்” என்று நம்பிக்கை குரல் கொடுத்தான் பாசித்.

ஆஸ்பட்டலைவிட்டு புறப்பட்டனர்.

மூதாட்டியை சைக்கிள் ரிக்ஷாவில் அமரவைத்து அழைத்துவந்தவர் சைக்கிளை மிதிக்கலானார்.

அதைக் கண்ட உஸ்மான் கண்களில் கண்ணீர் கரைபுரண்டது

'தாத்தா ஏன் அழறீங்க' பதட்டத்துடன் பாசித்கேட்க

'தூசிப்பா' என்று கண்களை துடைத்தபடி குனிந்து நடந்தார்.

பேரன் என்மேல் வைத்திருக்கும் அன்பைப் போல் என்தாயிடம் நான் வைத்திருந்தால் எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா? கட்டியவளின் கட்டளைக்கா பத்துமாசம் சுமந்த வயிற்றை எட்டி உதைத்த கால்களுக்கு இந்த தண்டனை சிறியதுதான்.
ஏத்தனை டாக்டர்கள் பார்த்தாலும் மருந்துகள் கொடுத்தலும் இந்த நோய் தீராது என்தாய் மன்னிக்காதவரையில்.

Monday, February 1, 2010

பங்குச் சந்தை உஷார்


பங்கு சந்தையைப் பற்றிய செய்திகளும், பல நூல்களும் தற்போது மிகையாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது.அன்று படித்தவர்கள் கூட இதைப்பற்றிய விளக்கங்களை அறிவுகளை பெறாமல் காலத்தை கடத்தினார்கள்.இன்று சாதாரனமானவர்களும் பங்கு சந்தையில் நுழைந்து சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்கள்; என்றால் நம் நாட்டின் வளர்ச்சிப் பாதையை ஒரு கனம் திரும்பிப்பார்க்க வைக்கிறது.

இன்று பலரும் பங்கு சந்தையைப் பற்றி அறிவதற்கு மிகுந்த ஆவல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.தொலைசாட்சியிலும் கூட தனி நிகச்சியாக பங்கு சந்தையைப் பற்றிய விபரங்களை நிபுணர்களை வைத்து வாதிக்கிறார்கள்.

பல நிபுணர்கள் பல மாவட்டங்களில் பங்கு சந்தை விழிப்புணர்வு கூட்டங்களை நிகழ்த்திக் கொண்டு வருகிறார்கள். பல நகரங்களில் சப் புரோக்கர்கள் அலுவலகங்கள் அமைத்து இணையதளம் மூலம் தினசரி வர்த்தகங்களையும் செய்யுமளவு பங்கு சந்தையின் வளர்ச்சி விரிவடைந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலோர் ஏஜண்ட்டுகளை நம்பியே தங்களின் முதலீடுகளை செய்து வருகிறார்கள்.பலருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலும், ஆசையும் அதிகம் இருக்கிறது அதே நேரத்தில் நாம் செய்யக் கூடிய முதலீடுகள் நல்ல கம்பெனியில் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தன்னால் உறுதியாக சொல்லமுடியாமல் ஏஜண்டுகளின் வாய்மொழிகளை நம்பியே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

பலரை நான் கைக்காட்டுவதை விட என்னையே இங்கு உதரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு மித்த ஆர்வம் என்னிடம் இருக்கிறது.
2007-ல் ஒரு ஏஜண்ட் என்னை அனுகினார்.இன்சுரன்ஸ்சுடன் நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் பணத்திற்கு முழுபாதுகாப்பு என்று கூறி யூலிப் என்ற ஸ்கீமை கூறினார்.

மூன்று வருடம் மட்டும் நீங்கள் தொகை செலுத்தினால் போதும் நான்காவது வருடம் உங்களுக்கு இரண்டுமடங்காக உங்கள் தொகை உங்களுக்கு கிடைக்கும் என்றார்.நானும் ஆர்வத்துடன் யூலிப் ஸ்கீமில்(ULIP) சேர்ந்தேன்.

பங்கு சந்தையைப் பற்றிய நூல்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன் அதன் பின் தொலைக்காட்சிகளில் பங்கு சந்தைப்பற்றிய செய்திகளை கேட்க ஆரம்பித்தேன்.

முதலீடு செய்த யூலிப்பைப் பற்றிய விபரங்களை அறிய ஆரம்பித்தேன் சந்தையில் மூன்றாண்டில் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று மனிக்கண்ரோல் என்ற இணையதள முகவரியல் ஆய்தேன்.

அதிர்ச்சியாக இருந்தது.மூன்றாண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 3 லட்சம் கட்டிருந்தேன். இந்த 3 ஆண்டில் அதன் வளர்ச்சி என்பது ஒன்றுமே இல்லை.
நான் கட்டிய தொகையிலிருந்து 30 சதவிகிதம் குறைவாகவே இருந்தது.
பங்கு சந்தையில் பலரும் பணம் பார்ப்பதாக கூறுகிறார்கள் ஆனால் நமக்கு ஏன் இப்படி குறைவாக இருக்கிறது என்று அலசினால் பல செய்திகள் வெளிவருகிறது.

யூலிப் என்ற இன்சூரன்சுடன் கட்டக்கூடிய ஸ்கீம் பத்து ஆண்டுகளுக்கு தொடந்து கட்டினால் இந்த 10 ஆண்டில் நம் பங்கு வளர்ந்து நல்ல நிலையில் இருக்கும். 4 வதுஆண்டில் இரு மடங்கு கூடும் என்பது ஏஜண்ட் கூறும் மாயை வார்த்தைகள். காரணம் யூலிப் ஸ்கீமில் கட்டக்கூடிய முதல் பிரிமியத்தில் ஏஜண்ட் கமிஷன் சுமார் 40 சதவிகிதம் கழித்து மீதி உள்ள 60 சதம் மட்டுமே முதலீட்டு செய்யப்படுகிறது.அதுமட்டுமல்ல அதில் நாம் எடுத்திருக்கும் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கழிவு போகும்.இந்த விபரங்களை எல்லாம் ஏஜண்ட் நம்மிடம் கூறமாட்டார்.அதில் கட்டக்கூடிய இன்சூரன்சில் நம் முதலீட்டிற்கு பாதுகாப்பு அல்ல.கட்டக்கூடியவர்களுக்கு ஏதும் நேர்ந்தால் நாமினியாளர்கள் கட்டியத் தொகையை வசூலிக்க முடியும் அவ்வளவுதான்.

ஆனால் பல அப்பாவிகள் (என்னைப்போன்றவர்கள்) இதில் மாட்டிக் கொண்டு பங்கு சந்தையைப் பற்றி தவறான ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அதனால் நாம் முதலீடு செய்யப்போகும் ஸ்கீமைப்பற்றி நிபுணர்களிடம் கேட்டு தெளிந்து பணத்தை போடுவது சிறந்தது.

பங்கு சந்தை முதலீடு என்பது ஒரே ஒரு ஸ்கீமில் மட்டுமல்ல.அது கடலைப் போன்றது.அதை முழுமையாக அறிவதென்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தினமும் அதை பார்வையிட்டு வந்தால் அதைப்பற்றிய விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

யூலிப் ஸ்கீமில் முதலீடு செய்வதைவிட மீச்சுவல் பண்ட்(MUTUAL FUNDS) மிகச்சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.(இதிலும் சிறு முதலீட்டை செய்து பலன் சொன்னமாதிரியே கிடைத்தது.)அதில் அதிகமான கமிஷன் யாருக்கும் செல்லுவதில்லை.நம்முடைய தொகை முழுவதும் முதலீடாகும்.

இன்னும் வங்கியில் டிமேட்(DEMAT) கணக்கை திறந்துக் கொண்டு நாம் நேரடியாகவே STOCK பங்குகளை வாங்கி நம் கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.இதனால் லாபமும் அதிகம் காணலாம், கண்கானித்து வந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.இதெல்லாம் செய்வதற்கு முன் பங்குசந்தையைப்பற்றிய அடிப்படையான விசயங்களை தெரிந்துக் கொண்டு இறங்குவது முதலீடு செய்வது சாலச்சிறந்தது.

பங்கு சந்தையில் பணம் பார்த்தவர்களும் உண்டு பணத்தை பறிகொடுத்தவர்களும் உண்டு அதனால் மிக கவனமாக நிதானமாக முதலீடு செய்ய வேண்டும்.