உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, August 19, 2010

வடமாநிலச் சுற்றுலா - 7


காலை 6.00 மணிக்கு டெம்போ தயாராக நின்றது எங்களுடன் இன்னும் நான்கு நபர்கள் அதில் பயணிகளாக வந்தார்கள் அதில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி மற்ற இருவர் சேலத்தைச் சார்ந்த தமிழர்கள்.

எங்களின் டெம்போ ஜெய்பூரை நோக்கி புறப்பட்டது டெல்லி ஜெய்பூரின் தேசிய நெடுஞ்சாலையில் பலவிதமான தொழிற்சாலைகள் இருந்தன.

எங்கள் குழந்தைகளுடன் நேபாள் இளசுகளும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள்.

வரும் வழியில் காலை சிற்றுண்டிற்காக நிறுத்தப்பட்டு உணவருந்தினோம்.

சூரியபகவான் கொஞ்சம்கூட எங்கள் மீது இரக்கம் காட்டவில்லை ஏசி வசதி இருந்ததினால் பயணத்தை இரசிக்க முடிந்தது.

ஜெய்பூரை நெருங்க, நெருங்க விளை நிலங்கள் அதிகமாக தென்பட்டது ஆனால் நிலங்கள் தண்ணீருக்காக வானத்தை நோக்கி கையேந்தி நின்றது.
மழையை நம்பித்தான் ஜெய்பூரின் விவசாயிகள் இருக்கிறார்கள்.நிலத்தடி நீரெல்லாம் அங்கு ஆயிரம் அடிகளை தாண்டி இருக்கிறதாம் அதனால் ஜெய்பூரில் நிலங்கள் மிகமலிவு (ரியல் எஸ்டேட் பிஸினஸ் காரர்களுக்கு இது டிப்ஸ் வாங்குவதற்கு ஆள்கிடைப்பார்களா? என்பதை யோசனை செய்துக்கொள்ளுங்கள்)

நம்ம ஊர்களில் மாட்டு வண்டியைப் பார்த்திருப்போம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டக வண்டியை அதிகம் காணமுடிகிறது.அதேப் போன்று ஜீப்கள் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள்.மலை,வயல்,பாலை இவைகளில் பயணம் செய்வதற்கு இளகுவாக இருக்கிறாதாம்.

ஜெய்பூரின் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம் சூரியன் வெட்கப்பட்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டது ஆனால் மேகம் எங்களை கொடைவிரித்து வரவேற்றது.ராஜஸ்தான் மாநிலம் எங்களை அன்புடன் அழைத்தது.

ஜெய்பூர் எல்லையில் ஆடம்பரமான அரண்மனை வடிவில் ரிஸோர்ட்கள் இருந்தன.அதைப்பார்த்ததும் அங்கு தங்கவேண்டும் என ஆசைவந்தது ஆனால் ஜெய்பூர் காட்கேட்டில் ஹோட்டல் புக் செய்துவிட்டபடியால் பார்வையால் அந்த ரிஸோர்ட்டில் தங்கிக் கொண்டேன்.

மன்னர் பீம்சிங்கின் அரண்மனைக்குள் செல்வதற்கு எங்களை டெம்போவிலிருந்து ஜீப்பிற்கு மாற்றினார்கள்.மலையின் மேல்புறத்தில் மன்னரின் அரண்மனை இருக்கிறது.நாம் கீழிருந்து அதைப் பார்ப்பதற்கே அந்த பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

ஜீப்பில் எங்களை ஏற்றும்போதே கைடும் எங்களுடன் ஏறிக்கொண்டார் எல்லா வகையிலும் ஏமாற்ற துடிக்கும் ஆக்ரா,டெல்லி மக்களுக்கு மத்தியில் ஜெய்பூர் வாசிகள் பலகுவதற்கு வியாபார நோக்கமில்லாத மனிதர்களாக ஆங்காங்கே காணப்பட்டார்கள்.

மன்னர் பீம்சிங் அரண்மனைக்குள் எங்களின் ஜீப் திணறி,திணறி ஏறியது வாகனமே இவ்வளவு திணறி ஏறும்போது அந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த சிப்பாய்கள் இந்த மன்னர்களுக்காக எத்தனைமுறை ஏறி இறங்கிருப்பார்கள்.

அரண்மனை வாசலில் குல்பி வியாபாரம் சூடாக நடந்தது அதை வாங்கி சுவைத்து நாங்கள் குளிர்ந்தோம்.அந்த அரண்மனையினுள் கண்ணாடி மஹால் இருக்கிறது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுக் கொண்டு கேமராவில் கண்ணாடியை நோக்கி கிளிக் செய்தால் பிரேம் போட்டது போன்று நம் தோற்றம் விழுகிறது...இதோ நீங்கள் காண்பது நேபால் தம்பதி...

இந்த அரண்மனையில் நமது புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இன்றைய நடிகர்கள் என பலரின் சினிமா சூட்டிங் இங்கு நடந்ததாம், நடக்குமாம்.

மன்னர் பீம்சிங்கிற்கு பதினெட்டு மனைவியாம் அந்த 18 மனைவிகளுக்கு 18 அறைகளை தனித்தனியே அமைத்து அந்த அறைகளுக்கு செல்லக்கூடிய வழிகளையும் 18 அமைத்துள்ளார்.மன்னர் எந்த மனைவியுடன் இருக்கிறார் என்பது எந்த மனைவிக்கும் தெரியாதாம்.(மனுசன் பலே கில்லாடிதான்)

அந்த அரண்மனையில் பணிப்புரிபவர்களுக்கு உணவு புகைப்படத்தில் காணும் இந்த சட்டியில்தான் தினம் சமைப்பார்களாம்.

இதோ நீங்கள் பார்க்கும் இந்தப் புகைப்படம் மன்னரின் கஜானா பெட்டி இதில்தான் தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் என்று வகைப்பிரித்து வைத்துள்ளாராம்.

மன்னர் பீம்சிங் கட்டிக்கலையில் மிகுந்த ஆர்வங் கொண்டவர் மட்டுமல்ல மனித ஒன்றுமையை வேண்டி பலமாக சிந்தித்தவர்.அவர் சிந்தனையின் உருவம்தான் இன்றைய ஜெய்பூர் வணிக நகரம்.இந்த வணிக நகரத்திற்கு நான்கு முக்கிய வாயில்களை அமைத்து அந்த வாயிலுக்கு மிகப்பெரிய கதவலையும் போட்டிருக்கிறார்.அதுமட்டுமல்ல அந்த வணிக நகரத்தில் பள்ளிவாசல்,கோயில் கட்டி இருக்கிறார் கோயில் இருக்கும் தெருவிற்கு இஸ்லாமிய பெயரையும் பள்ளிவாசல் உள்ள தெருவிற்கு இந்துப் பெயரையும் சூட்டி மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார் ஜெய்பூரில் வெற்றியும் பெற்றுள்ளார் இது இன்றளவும் இருக்கிறது.

ஜெய்பூர் நகரத்தை ஆங்கிலத்தில் "பிங்க் சிட்டி" என்றழைப்பார்கள்.அந்த நகரம் முழுவதும் ஒரே வண்ணத்தில் ஒரே அளவில் கட்டிடங்களும் தெருக்களும் அமைத்திருக்கிறார் மன்னர் பீம்சிங்.

மக்கள் நெரிசல் இந்த வணிக நகரத்தில் அதிகமாக இருப்பதினால் அவர்களால் தூய்மைக்கு துணை நிற்க முடியவில்லை.தூய்மையைப் பற்றி விழிப்புணர்வு செய்வதற்கு போதிய அவகாசம் அந்த மாநில அரசினர்களுக்கு இல்லாமல் இருப்பது வருத்தமடையச் செய்கிறது.மன்னர் பீம்சிங் மட்டும் இந்த நிலையைக் கண்டால் தொதித் தெழுந்துவிடுவார்.
மன்னர் பீம்சிங்கின் அரண்மனையில் சுரங்கப்பாதை இன்னும் இருக்கிறது இந்த சுரங்கப்பாதை அரண்மனையிலிருந்து மன்னர் அவசரக்காலத்தில் யாருக்கும் தெரியாமல் மலைப்பகுதிக்குள் சென்று விடுவதற்கு மக்களுடன் கலந்துவிடுவதற்குகாக அமைத்துள்ளாராம்.

மதியம் இரண்டு மணியை கடந்துவிட்டதினால் எங்களின் வயிறு உணவகத்தை தேடியது.மலையிலிருந்து இறங்கியதும் கைடு எங்களை தென்னிந்திய உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.சில தினங்களுக்கு பின் நம்மஊரு சாப்பாட்டை ருசித்து உண்பதற்கு செல்கின்றோம்...

உங்களுக்கும் இப்போ பசிக்கும்தானே அதனால் நீங்களும் சாப்பிடுங்க சந்திப்போம்...

Saturday, August 14, 2010

அமீரகப்பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சி

அமீரகப்பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சி சென்ற ஆண்டைப்போல் சார்ஜா அண்ணாச்சி சத்திரத்தில் மிக சிறப்பாக இந்த ஆண்டும் நடைப்பெற்றது.

அமீரகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கம்போல் அனைத்து பதிவர்களும் சிலரைத்தவிர கலந்துக் கொண்டார்கள்.

இப்தார் நிகழ்ச்சிக்கான உணவுத்துறையை கீழைராஸா ஏற்றுக் கொள்ள நான் விட்டுக் கொடுக்காமல் பிரியாணியை எனது காரில் ஏற்றிக் கொள்ள(எனது கைப்பட்ட பிரியாணி எப்படி என்பதை அமீரகப்பதிவர்கள் அறிவார்கள்)…சட்டிக்கு பாதுகாவலர்களாய் முகிலும் ஊமையனும் (ஹக்கீம்)உடன் வந்தார்கள்.

வெள்ளி மாலை 5.00 மணிக்கு துபாயிலிருந்து வாகனம் ஊர்வலமாய் பிரியானி, நோன்பு கஞ்சி, சமூசாவுடன் அண்ணாச்சி சத்திரத்தை அடைந்தது.

ஆவலுடன் காத்திருந்த அனைத்து பதிவர்களும் இப்தாருக்கு தயாரானார்கள்.

நோன்பின் மாண்பை அறிந்திருந்த அனைத்துப் பதிவர்களும் உணவுகள் பறிமாறப்பட்டு நோன்பு திறப்பதற்குரிய அந்த பாங்குடைய நேரம் வரையில் அமைதியாக அமர்ந்திருந்து கண்ணியம் செய்தனர்.

இப்தாருக்குப் பின்னர் மஹ்ரிப் தொழுகையை பதிவர் சுல்தான் இமாமாக இருந்து தொழவைத்தார்.தொழுகைக்குப் பின் பதிவர்கள் குழு கூடினார்கள்.

சென்ற மாதம் தாயகம் சென்று திரும்பிய அண்ணாச்சி மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற யாஸ்மீன் படித்த நகராட்சி பள்ளிக்கூடத்திற்கு(திருநெல்வேலி) தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு கணினியை புதிதாக அமீரகப்பதிவர்களின் சார்பில் வழங்குவதற்கு ஏகமனதுடன் முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துடன் தனது பணி மாற்றத்தின் காரணமாக இனி சந்திக்க இயலாது என பிரியாவிடை பெற்ற பதிவர் அஹமது சுபைர்ருக்கு அனைவரும் வாழ்த்துக்களை வழங்கி இனி மெயிலில் சந்தித்துக் கொள்ளலாம் என விடை கொடுத்தார்கள்.

பதிவர் சுந்தரின் பொதுநல தொண்டை அங்கு நினைவுக்கூர்ந்து பாராட்டை அனைவரும் வழங்கினர்.

பெண் பதிவர்களில் ஜெஸிலாவைத் தவிர்த்து மற்ற யாரும் வரவில்லை என்றாலும் குசும்பன் கீழைராஸா செந்தில்நாதன் நவ்புல் இவர்களின் குடும்பமும் வந்ததினால் பதிவர் ஜெஸிலாவிற்கு ஆறுதலாக இருந்தது.
இந்த இப்தார் நிகழ்ச்சியில் மிக பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தார் ரியாஸ் அவருக்கு அமீரகப்பதிவர்களின் சார்பாக வாழ்த்துக்களை வழங்குகிறோம்.
இனி அடுத்த சந்திப்பு சுற்றுலாவாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


பழம் நறுக்கும் முகில்

சமூசாவுடன் ஊமையன் ஹக்கீம்


நோன்பு கஞ்சியை கலக்கும் ரியாஸ்


இஸ்மத்பாய் உங்கள தட்டையபார்த்துக்க சொன்னா கேமராவ பாக்குறீங்க...இதான் சமயமுன்னு கீழைராஸா ஒரு தட்டைய ஆட்டைய போடுறாரு





ஆலோசனைக் கூட்டம் எந்த தட்டில் யார் அமர்வது


கோல்கேட் விளம்பரத்திற்கு என்னுடன் சென்ஷி


உணவுக்குமுன் உணர்வுடன் காத்திருக்கும் நோம்பாளிகள்


அண்ணாச்சி கேட்டா கொடுக்கனும் சுபைர்...இப்படி அடம்பிடிக்ககூடாது

இப்படியெல்லாம் லுக்கு விடப்படாது...ஒரு ஆளுக்கு ஒரு பிளேட்டுதான்...


கஞ்சிமேல சத்தியமா ஒரு தட்டுதான் வச்சிருக்கேன் சுபைர்...இதை உங்களுக்கு கொடுக்க முடியாது..


சீக்கிரமா சாப்பிடுங்க சுபைர் நம்ம தட்டைய பாக்குறார்...


குசும்பா உஷார்....சுபைர் தட்டு காலியாக இருக்கு..


எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்....என் தட்டுல உள்ள கறியை யார் எடுத்தது?


சின்னப்புள்ளயா இருக்கியேன்னு பாக்கிறேன் ஆமா... குசும்பன் தட்டுலேந்து நானா கறிய எடுத்தேன்...


கறிய எடுத்தது யாருங்க கண்டுபுடிச்சாச்சா அண்ணாச்சி


எலே முகிலு நீ கறிய எடுத்து துண்னுட்டு என்மேல வச்சிட்டியே...அதுக்கு தண்டனைதான் இந்த கொக்கு புடி...



குசும்பனுக்கு போட்டியா இந்த முயற்சி...

Thursday, August 12, 2010

வடமாநில சுற்றுலா - 6


பேருந்து தயாராக நின்றது நாங்கள் ஏறி அமர்ந்தோம் அப்போதுதான் தெரிந்தது இது ஏசி வசதி இல்லாத பேருந்து என..நாங்கள் கட்டிய தொகை ஏசி பேருந்திற்கு..

அங்குள்ள பொறுப்பாளனிடம் கேட்டேன் நாங்கள் ஏசி பேருந்துவிற்கு தான் புக்செய்தோம் என்றேன்.அவன் உடனே மன்னிக்கனும் எங்களுக்கு வந்த தகவல் சாதாரன பேருந்தில் பயணம் செய்வதுதான் என்றான்.

இவன்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை எனத் தெரிந்தது ஏமாறக்கூடியவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று கூறுவார்கள்.
வாழ்க்கை பயணத்தில் எத்தனையோ விசயங்களில் ஏமாறுகிறோம் ஏமாற்றம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம்
பொருளை ஏமாந்தால் தேடிக்கொள்ளலாம் ஆனால் தன்னிடமே ஏமாந்துபோவதுதான் கஸ்டமானது
அது என்ன தன்னிடம் ஏமாறுவது என்கிறீர்களா?
என்னை நான் என்று எண்ணி ஏமாறுவது தான் தன்னிடம் ஏமாறுதல் இங்கு அத்வைதம் வேண்டாம் தேவையானால் தொட்டுக்கொள்வோம்.

அந்த பேருந்தில் சில தமிழ் குடும்பங்கள் இருந்ததினால் ஆதரவாக பேசிக் கொண்டு வந்தோம்.
டெல்லியை பொறுத்தவரையில் டிராபிக் சட்டதிட்டங்களை ஒருவரும் மதிப்பதில்லை.கண்காணிக்க கூடிய காவலர்கள் தங்களின் பாக்கெட்களை நிரப்புவதில் கவனமாக கண்காணிக்கின்றார்கள்.

செனனையில் இருக்கக் கூடிய சுத்தம் கூட மத்தியில் தலைநகரத்தில் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம்.

பேருந்தில் குளிர்சாதனம் இல்லை என்றாலும் எங்களை அழைத்துச் செல்லுகின்ற இடத்தை மிக அழகாக தெளிவாக உரையாற்றிய கைடின் வாய் திறமை குளிர்ச்சியாக இருந்தது.

குத்புதீன்ஐபக்கினால் கட்டப்பட்ட குத்துபினார் சென்றோம் அந்த இடத்தை தூய்மையாக பராமரித்துவருகிறார்கள்.நுழைவுக் கட்டணம் உண்டு.

முகலாய மன்னர்கள் கட்டிடக் கலை நிபுணர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளை கடந்தப் பின்னும் வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னங்களாய் குதுப்பினார் இன்னும் நின்றுக் கொண்டிருக்கிறது.

குதுப்பினாரின் கோபுரத்தில் லாயிலாஹா இல்லல்லாஹ_ முஹம்மது ரசூலுல்லாஹ் என்று திருக்கலிமா (மூலமந்திரம்) அரபு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது.


அங்கிருந்து தாமரை தியானக்கூடத்திற்கு சென்றோம்.நீண்ட தூரம் நடக்கவேண்டி உள்ளது.அந்த கூடத்திற்கு செல்லுமுன் அதன் வாயிலில் நம்மை வரவேற்பதற்கு பணியாளர்கள் காத்திருக்கிறார்கள்.

கூடத்திற்குள் அமைதிகாக்கும்படியும் கேட்டுக் கொள்கிறார்கள் அந்தக் கூடத்தில் அமைதி நிலவி இருந்தது நான்கு புறத்திலிருந்தும் தென்றலின் தழுவல் இதமாக இருந்தது.என் சுவாசம் உயிர் பைவரையில் சென்று ஆன்மாவுடன் கலந்தது என்று சொல்லலாம்.மொத்தத்தில் மனம் அந்த சில நிமிடங்கள் அமைதி கண்டன.

அங்கிருந்து பாரளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.உள்ளே அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் அனுமதி இல்லை. பாதுகாப்பை கருதி தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திக் கொண்டார்கள்.
அந்த தூரத்திலிருந்து புகைப்படங்கள் மட்டும் எடுக்கமுடிந்தது.

பேருந்தில் செல்லும் வழியில் காங்கிரஸ்கட்சியின் அலுவலகம் மற்றும் சோனியாகாந்தியின் இல்லம் பிரதமர் மன்மேகான் சிங் அவர்களின் இல்லம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்கும் இல்லங்களையும் காண்பித்தார்கள்.

செங்கோட்டையில் பணிகள் நடைபெற்று வருவதால் உள்ளே செல்லமுடியவில்லை அங்கிருந்து இந்தியா கேட் சென்றோம்.மிக பிரமாண்டமாக இருந்தது.சுதந்திர தின விழா குடியரசுவிழா இங்கிருந்துதான் தொடங்கும் என்றார்கள்.

இரவுநேரத்தில் இந்தியாகேட் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.டெல்லியின் பெரிய பள்ளிவாசல் (ஜூம்மா மஸ்ஜித்) பார்த்தோம் இவைகளை ஷாஜகான் தனது ஆட்சியில் கட்டியிருக்கிறார்.


ராஜ்கோட் சென்றோம் மகாத்மா காந்திஜியின் அடக்கஸ்தளம் சென்று பார்த்தோம் அங்கு நிற்கும்போதே பரவசமாக இருந்தது மகாத்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்துவிட்டு புறப்பட்டோம்.
லஷ்மி நாராயணன் கோயில் மற்றும் மார்கெட் இவைகளை கண்டுவிட்டு டெல்லி நிஜாமுதீன் தர்ஹாவிற்கு அழைத்துச் செல்லாமல் விட்டுவிட்டார்கள்.

இறுதியில் இரவு ஏழு மணிக்கு டெக்ஸி அமைத்து நிஜாமுதீன் தர்ஹாவிற்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம்.

மறுதினம் டெல்லியிலிருந்து ஜெய்பூர் செல்வதற்கு வாகனம் தயார் செய்வதற்கு டிராவல்சை அனுகினோம். இரயிலில் டிக்கேட் கிடைக்கவில்லை என்றார்கள் இறுதியாக ஏசி வசதியுடன் டெம்போ தயாரானது ஜெய்பூரின் முக்கிய இடங்களை சுற்றி காண்பித்துவிட்டு அங்கேயே இறக்கி விடுவதாக பேசி ஒப்பந்தம் செய்து முன்பணம் வழங்கினோம்.
ஏற்கனவே ஏமாந்த அனுபவம் இருந்ததால் இந்தமுறை ரொம்பவும் கவனத்துடன் செயல்பட்டோம்.
டெல்லியிருந்து ஜெய்பூருக்கு 260 கி.மீ சுமார் 5 மணிநேரம் பயணம் என்றார்.
அதிகாலை 6.00 மணிக்கு டெம்போ புறப்படும் என்றார்.நபர் 1க்கு 550 ரூபாய் என்றார் பேரம் பேசப்பட்டு 450க்கு இறுதியானது.

ஆதலால் அடுத்து ஜெய்பூரில் சந்திப்போமா?......

Sunday, August 8, 2010

வடமாநில சுற்றுலா - 5


ஹோட்டல் வாகன ஓட்டியை இரயில் நிலையத்தில் என் பெயர் எழுதிய பலகையுடன் நிற்கின்றானா எனத் தேடினேன் கிடைக்கவில்லை.
எனக்குள் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.புரோக்கர் நம்மை ஏமாற்றிவிட்டானோ? என எனக்குள் குழம்பிக் கொண்டு குடும்பத்தார்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று எனது நண்பர் ஹாஜாவை அழைத்து விபரத்தை கூறினேன்.

அவரும் என்னைப்போலவே நம்மை ஏமாற்றி விட்டார்களா? அவன் கொடுத்த ஹோட்டல் எண்ணுக்கு டெலிபோன் செய்து பாருங்கள் என்றார்.அதுவும் செய்தாகிவிட்டது மணி அடிக்கிறது ஆனால் யாரும் டெலிபோனை எடுக்கவில்லை.

புரோக்கருக்கு டெலிபோன் செய்தேன் பேசினான் கேட்டேன் எங்களை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை என்றேன் நீங்க எந்த ஸ்டேஷனில் இருக்கீங்க என்று கேட்டான்.

நிஜாமுதீன் என்றேன்

புதுடெல்லி ஸ்டேஷனில் இறங்கி இருக்கனும் அங்கே போங்க என்றான்.அப்போது மணி இரவு 11.15. இந்நேரத்திற்கு பிறகு புதுடெல்லி ஸ்டேஷனுக்கு செல்வதைவிட டெக்ஸி பிடித்து ஹோட்டலை தேடலாம் என ஏரியா பெயரைச்சொல்லி போகச் சொன்னேன் 500 ரூபாய் கேட்டான் பேரம் பேசப்பட்டு 400 க்கு சரியானது.

30 நிமிடத்திற்கு பின் பஹர்கான்ஜ் ஏரியா வந்தது பல நூறு விடுதிகள் அரச்சாசன் ரோட்டில் இருக்கின்றன ஆனால் எங்களுக்கு முன்பதிவு செய்த விடுதி மட்டும் கிடைக்கவில்லை ஓட்டுனரும் விடுவதாக இல்லை சந்து பொந்து என தேடி அசந்து போனார் இருந்தாலும் விடுவதாக இல்லை விசாரித்து சரியாக அந்த விடுதியை கண்டுப்பிடித்தார்.

ஹோட்டலுக்குள் நுழைந்ததுமே மேலாளரை அழைத்து வாகனம் அனுப்புவதாகச் சொல்லி எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏன் அனுப்பவில்லை டெலிபோன் செய்தேன் எடுக்கவும் இல்லை எனக் கேட்டேன்.
சாரி சார் எங்களுக்கு மூன்று ரூம்கள் மட்டும் புக் பண்ணச் சொல்லி தகவல் வந்தது அவ்வளவு தான் டெலிபோன் ரிப்பேரில் இருக்கிறது என்றார்.

அழைக்க வருவார்கள் என்பதெல்லாம் புரோக்கர் சொன்ன பொய்கள் அப்போதுதான் நாம் ஹோட்டல் புக் செய்வோம் என 5ஸ்டார் வசதிகளை வார்த்தைகளாய் நம்மிடம் உதிர்க்கின்றார்கள் என்பது புலப்பட்டது.

ஹோட்டலில் நாம் தங்குவதற்கு நம்மைப்பற்றிய விபரத்திற்கு ஐடி கேட்டார்கள்
பான் கார்டு கொடுத்தேன் வாங்க மறுத்துவிட்டார்.ஏன் எனக்கேட்டதற்கு இந்த டெல்லியில் பான் கார்டு யாரும் வாங்க மாட்டார்கள் ஓட்டு அட்டை அல்லது பாஸ்போர்ட் காப்பி ரேஷன் கார்டு இவை இருந்தால் கொடுங்கள் என்றார்.

பான் கார்டு எடுப்பதற்கு நமது ரேஷன்கார்டு பாஸ்போர்ட் காப்பி இவைகளை ஆதாரமாக கொண்டுதான் பான்கார்டு மத்தியஅரசு வழங்குகிறது ஆனால் அந்த பான் கார்டுக்கு மத்தியில் மதிப்பில்லை.வடமாநிலங்களுக்கு செல்லக்கூடியவர்கள் பாஸ்போர்ட் காப்பி அல்லது ஓட்டு அட்டை இவைகளை ஐடியாக உபயோகப்படுத்துங்கள்.

என்னிடம் பாஸ்போர்ட் காப்பி இருந்தது அதை ஐடியாக கொடுத்தேன்.

அந்த ஹோட்டலில் தரமும் இல்லை அதற்கு ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கலாம்.ஆனால் நாங்கள் தங்கி இருந்த பஹர்கான்ஞ் ஏரியாவில் எல்லா தரத்திலும் ஹோட்டல்கள் உள்ளன.

புதிதாக டெல்லி வரக்கூடியவர்கள் புதுடெல்லி ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து 15 நிமிடங்களில் பஹர்கான்ஞ் ஏரியாவுக்குள் நுழைந்து அரக்காசன் ரோட்டிற்கு வந்துவிடலாம்.தங்களுக்கு பிடித்தமாதிரி ஹோட்டல்களை தேர்வு செய்து தங்கிக்கொள்ளலாம்.

அல்லது இரயில் டிக்கேட் இணையதளத்தில் பதிவு செய்யும் போது அதே தளத்தில் ஹோட்டல்களையும் நம் வசதிக்கேற்ப பதிவு செய்துக் கொள்ளமுடியும்.

இவ்வளவும் தெரிந்தும் இணையத்தில் புக்செய்யாமல் அலட்சியமாக இருந்தது என்தவறு என்பதை அனுபவரீதியாக உணர்ந்தேன்.

மூன்று ஏசி ரூம்கள் தந்தார்கள் அதில் ஒரு ரூமில் ஏசி இருந்ததே தவிர குளிர்ந்த காற்று இல்லை.புகார் செய்தும் பலனில்லை அந்த ரூமை காலி செய்து இரு ரூம்களில் தங்கிக் கொண்டு சாவியை ரிசப்ஸனில் கொடுத்தேன் அவர் வாங்க மறுத்தார்.
நீங்க மூன்று ரூம்கள் புக் செய்துருக்கீங்க என்றார் ஆமா ஆனால் ஏசி வேலை செய்யவில்லையே என்றதும் அவர் மீண்டும் பழைய பல்லவியே பாடினான் எனக்கு சரியான கோபம் வந்தது அந்த ரூமின் சாவியை அவனிடமே கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன்.
மொழி தெரிந்த நம்மிடமே இப்படி நடக்ககூடிய இவர்கள் மொழி தெரியாதவர்களிடம் எப்படி எல்லாம் நடப்பார்கள்.

டெல்லி செல்வதற்கு முன் சில நண்பர்கள் அடித்த எச்சரிக்கை மணியை அனுபவரீதியாக ஒவ்வொரு சம்பவத்திலும் கண்டுக் கொண்டேன்.

வந்த அசதியில் நல்ல உறக்கம் காலையில் 9.00 மணிக்கு டெல்லி சைடுசீன் பார்ப்பதற்கு பேருந்து தயாரானது.அதற்கு முன் டெல்லியிலிருந்து ஜெய்பூருக்கு செல்வதற்கு இணையதளத்தில் டிக்கேட் பதிவு செய்வதற்கு புரோச்சிங் சென்டருக்கு சென்றேன் சர்தார்ஜி உற்சாகமாய் வரவேற்று ஐடி கேட்டார் பான் கார்டு கொடுத்தேன் வாங்க மறுத்துவிட்டார் ஆக டெல்லியில் எந்த இடத்திலும் பான் கார்டுக்கு மதிப்பே இல்லை அந்தளவு பான் கார்டை தவறாக விநியோகிக்கப் பட்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்துக் கொள்ளமுடிந்தது.

ரேஷன்கார்டு பாஸ்போர்ட் ஓட்டு அட்டை இவைகளை பெறுவதற்கு நாம் நேரடியாக ஆஜராகவேண்டும் ஆனால் பான் கார்டு பெறுவதற்கு எந்த அரசுஅதிகாரியிடமும் நேரடியாக காணவேண்டிய அவசியமில்லை ஆதலால் பான் கார்ட் பெறுவதில் பல தில்லுமுல்லுகள் இருப்பதாக இதைப்பற்றி விபரம் தெரிந்த ஆசாமி கூறினார்.

இனி வரக்கூடிய காலங்களில் எந்த கணக்கு திறப்பதற்கும் பான் கார்டு அவசியம் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கும் வேலையில் மத்தியில் அந்த பான் கார்டை எவருமே சீண்டுவதில்லை என்பதும் அதை பெறுவதற்கான வழிகளை எளிதாக வைத்து அயல்நாட்டினரும்கூட ஒரு சில பேப்பர் காப்பிகளை கொடுத்துவிட்டு தானும் இந்திய பிரஜைதான் என்று ஐடியை காண்பிக்கக் கூடிய அளவில்தான் பான் இருப்பது ஆச்சரியமான விசயம்
பங்கு வர்த்தகத்தில் நுழைபவர்களுக்கு பான் கார்டு கட்டாயம் ஆனால் அதை பெறுவதில் பாதுகாப்பின்மை நிறைந்திருக்கிறது வெகுவிரைவில் வல்லரசாகப் போகும் நம் இந்தியா இந்த விசயத்தில் அலட்சியமாக இருப்பது மிகவும் கவலையை அளிக்கிறது.

டெல்லி சைடுசீன் பார்ப்பதற்கு ஆக்ராவில் ஹோட்டல் புக் செய்தபோதே இதற்கும் சேர்த்து புக் செய்திருந்தோம்.எங்களை பேருந்திற்கு அழைத்துச் செல்வதற்கு ஒரு ஆள் வந்திருந்தான் அவனை பின் தொடர்ந்தோம்.

பேருந்து தயாராக நின்றது ஆனால் இதிலும் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம்.

ஏமாற்றம் தொடரும்....

Wednesday, August 4, 2010

வடமாநில சுற்றுலா - 4


தாஜ்மஹால் உள்ளே நுழைந்ததும் மனம் பரவசத்துடன் மகிழ்ந்தது, அந்த அழகைக் கண்கள் கண்டு பருகி, இதயத்திற்கு இரசனையை இதமாக அனுப்பிக் கொண்டிருந்தது.

என்னிடம் உள்ள சோனி சைபர்சாட் கேமிரா தனக்குள் தாஜ்மஹாலை அடக்குவதற்கு, விழுங்குவதற்கு ஆர்வப்பட்டு விழுங்கியது.

தாஜ்மஹாலுக்குள் மூவி கேமரா அனுமதி இல்லை என நண்பர் ஹாஜாவின் மூவி கேமராவை பாதுக்காவலர்கள் வாங்கி வைத்துக்கொண்டனர்.(திரும்பி செல்லும்போது கொடுத்துவிடுகிறார்கள்)

என்னிடமுள்ள சோனி சைபர்சாட்டில் மூவியும் எடுக்கலாம் என்பது பாதுகாவலர்களுக்கு தெரியாது. புகைப்படத்துடன் மூவியையும் அதிகமாக எடுத்தோம்.

தாஜ்மஹாலுக்கு கோடைக் காலத்தில் செல்லக்கூடியவர்கள் காலில் அணிவதற்கு உறை (சாக்ஸ்) மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.காலணிகள் அனுமதி இல்லாததால் பலிங்கு தரையில் வெறுங்கால் சூடேறுகிறது குழந்தைகள் வெறுங்காலுடன் அவதிப்படுவார்கள்.

மாலை நேர வெய்யிலில் எங்களின் தாஜ்மஹால் சுற்றுலா சுறுசுறுப்புடன் இருந்தது.

தாஜ்மஹாலின் உள்ளே நுழையுமுன் அந்த வாயில் இருபக்க மதில் சுவருகளில் திருக் குர்ஆனின் வசனங்கள் பதிக்கப்பட்டிருக்கிறது.உள்ளே நுழைந்ததுமே இரு கல்லரைகள் இருந்தன.தாஜ்மஹாலின் நுழைவாயிலை கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

ஷாஜகான் மும்தாஜ் அடக்கஸ்தளம் என்றார்கள்.ஆனால் தாஜ்மஹாலின் கீழ்தளத்தில் தான் ஷாஜகான் மும்தாஜின் உண்மையான கல்லரைகள் இருக்கின்றன.மேல்தளத்தில் இருப்பது டம்மி என்பதுதான் உண்மை.

தாஜ்மஹாலின் உட்புறத்தில் நல்ல காற்றோட்டமாக இருக்கிறது.அங்கு நீண்டநேரம் நிற்பதற்கு மனம் எண்ணினாலும் அன்று இரவே டெல்லி புறப்படவேண்டி இருந்ததால் அவசரப் பார்வைகளாய் பார்த்து வந்தோம்.

தாஜ்மஹாலின் பின்புறம் யமுனை ஆற்றங்கரையோரம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.இந்த யமுனையின் வரலாறு மிகப்பெரியதுபோல இந்த ஆற்றின் தூரமும் நீளமானது.சுமார் 1500 கி.மீ தூரம் இந்த ஆற்றின் நீளம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் தாஜ்மஹால் அதன் பின் பக்கமாக அமைந்திருக்கிறது.அந்த ஆற்றங்கரையை உ.பி.அரசு தூய்மைப்படுத்தி அழகுபடுத்தினால் இந்திய தூய்மையை நிலைநாட்டிய பெரும் பெயரை அந்த அரசு பெற்றுச் செல்லும்.(ஆள்பவர்களுக்கு பெயரைவிட பொருளே முக்கியமாக இருக்கிறது)

இரவு நேரத்தில் நிலவின் வெளிச்சத்தில் தாஜ்மஹாலைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்குமாம்.ஆனால் பாதுகாப்பைக் கருதி மாலை 7.00 மணியுடன் பார்வையாளர்களுக்கு தாஜ்மஹால் அடைக்கப்படுகிறது.

காதிகிராப்ட் கடைகளில் பெரிய உருவத்தில் தாஜ்மஹாலை செய்து நிலவின் வெளிச்சத்தில் தாஜ்மஹால் எப்படி இருக்கும் என்பதை விளக்கின் வெளிச்சத்தில் காண்பிக்கிறார்கள்.தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் அதே பலிங்கு கற்களால் இந்த தாஜ்மஹாலை செய்து கண்ணாடி கூண்டுக்குள் சிறை வைத்திருக்கிறார்கள்.பல வடிவங்களில் விற்பனையும் செய்கிறார்கள்.
நாமும் வாங்கினோம்.விலையில் பேரம் இல்லை.நீங்கள் காணும் இந்த புகைப்படம் அந்த கடையில் எடுத்தது.

சிலமணி நேரங்கள் தாஜ்மஹாலுடன் கழித்தாலும் அந்த பலிங்கு கற்களில் அமர்ந்து சிலநிமிடங்கள் உடலை சாய்த்தும் பார்த்தேன்.அங்கு வீசிய மாலை தென்றல் என்னை தழுவியபோது எனக்கு சுகமா அல்லது அதற்கு சுகமா என்பது தெரியவில்லை.

இரவு 8.00 மணிக்கு தாஜ் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஆக்ராவிலிருந்து டெல்லி செல்வதற்கு புரோக்கர் மூலம் டிக்கேட் பெற்றதில் ஒரு டிக்கேட்டுக்கு 100 ரூபாய் அதிகம் கொடுக்கப்பட்டது.இதை முன்னாடியே திட்டமிட்டு இணையதளத்தில் எடுத்திருக்க வேண்டும் தவறிவிட்டேன் அந்த தவறுக்கு 1000 ரூபாய் நஷ்டம்.(செல்லக் கூடியவர்கள் முன்கூட்டியே டிக்கட்டுகளை பதிவுசெய்து வைத்திருப்பது நலன்)

டெல்லி புறப்படுவதற்கு முன் அங்கு செல்வதைப்பற்றி துபாய் பதிவர் சென்ஷி தந்த சில விபரங்கள் எனக்கு உதவியாக இருந்தது நண்பருக்கு நன்றி.

பனிக்கர் டிராவல்ஸ் ஆல் இந்தியாவில் தங்களின் சேவைகளை இணையதள மூலம் செய்துவருகிறார்கள்.அவர்களிடம் வாகன வசதி நன்றாக இருக்கிறது.
இணையதளத்தின் மூலம் நமது சுற்றுலாவை பதிவுசெய்ய வேண்டும்.பனிக்கர் விபரங்களை அவர்களுடைய தளத்தில் இதை சொடிக்கினால் தெரிந்துக் கொள்ளலாம்.

ஆக்ராவிலிருந்து டெல்லி புறப்படுவதற்கு முன் எங்களது புரோக்கர் டெல்லியில் தங்குவதற்கு ஹோட்டல் நாங்களே தயார் செய்கிறோம் உங்களை டெல்லி நிஜாமுதீன் ஸ்டேஷனில் அழைப்பதற்கு எங்கள் ஆட்கள் தயாராக இருப்பார்கள் என்றும் மறுதினம் டெல்லியை சுற்றிப் பார்ப்பதற்கு வாகன வசதி பனிக்கர் டிராவல்சை விட சிறப்பானதாக குளிர் சாதன வசதியுடன் தயார் செய்வதாகவும் கூறி எங்களிடமிருந்து 40 சதவீதம் தொகையை பெற்றுக் கொண்டு அதற்கான இரசீதுகளை தந்தார்.

இரவு 8.00 மணிக்கு தாஜ் எக்ஸ்பிரஸ் இரயிலில் உட்கார்ந்து செல்லக் கூடிய இருக்கையில் அமர்ந்து இரவு பத்து முப்பது மணிக்கு டெல்லி நிஜாமுதீன் ஸ்டேஷன் வந்தடைந்தோம்.வரும் வழியிலேயே குழந்தைகள் உறங்கி விட்டார்கள் எங்களுக்கும் நல்ல அசதி இருந்தது.

இதற்கு முன் டெல்லி வந்ததுமில்லை ஸ்டேஷனில் கூட்டம் அதிகமாக இருந்தது கூட்டம் குறையும் வரையில் காத்திருந்து மெல்ல பிளாட்பார்ம் படிகள் ஏறி பயணிகள் ஓய்வு அறை பகுதிக்கு வந்து அனைவரையும் அமரவைத்துவிட்டு எங்களை அழைக்க வந்த ஹோட்டல் வாகன ஓட்டி என்பெயர் தாங்கிய பலகையை வைத்து நிற்பார் எனத் தேடினேன்.

சிலர் நின்றார்கள் அதில் என்பெயர் இல்லை இங்கு அங்கு என தேடினேன் ஆள்யாரும் அப்படி நிற்கவில்லை.எனக்குள் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

சந்தேகம் தொடரும்..