உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, January 17, 2011

2010 பங்கும் 2011 சந்தையும்


சென்ற 2010 ஜனவரியில் டிமேட் கணக்கை திறந்து மிக ஆர்வத்துடன் பங்குசந்தையினுள் நுழைந்தேன். இந்த ஒரு ஆண்டின் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவலில் உங்களுடன் இதோ.!

பங்கு சந்தையைப் பற்றி பலரைப்போல எனக்கும் மித்த ஆர்வம் இருந்தது அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள சோமவள்ளியப்பனின் நூல்கள் வழிகாட்டியாக எனக்கு உதவியது.

டிமேட் கணக்கை திறந்ததும் சென்ற ஜனவரியில் முதன் முதலில் மெட்ராஸ் சிமிண்ட் வாங்கினேன். அலுவலக ஒய்வு நேரத்தில் சந்தைநிலவரத்தை அவ்வபோது பார்த்துக் கொள்வேன். அதுமட்டுமின்றி காலை நேர தொலைக்காட்சியில் வணிகச் செய்திகளை தினம் பார்ப்பதும், அதிலிருந்து நோட்ஸ் எடுத்துக் கொள்வதும் இந்த ஒரு ஆண்டு கால அனுபவத்தில் முக்கியமானது.

வணிகச்செய்தியில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குசந்தை நிலவரங்களை ஓரளவு தெரிந்துக் கொள்ளமுடிந்தது. பங்கு பரிந்துரைகளும் அச்சமயத்தில் நடைபெறும், தற்போது வணிக விகடன் வார இதழாக வந்ததினால் வசதியாக இருக்கிறது. பல கம்பெனிகளை அனலைஸ் செய்து ரிப்போர்ட் தருகிறார்கள். அவர்களின் பரிந்துரை பங்குகள் என்னிடம் 75 சதவிகிதம் லாபத்தை தந்திருக்கிறது.

இத்தனை வழிகாட்டலையும் பெற்று எனது யோசனையின் பேரில் பங்குகளை வாங்குவதும் வாங்கிய பங்குகள் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் லாபத்தில் செல்லும்போது அதை விற்பதுமாக இப்படி ஒரு ஆண்டு விளையாடிப்பார்த்தேன்.

இந்த விளையாட்டில் எனக்கு லாபம் கிடைத்தது. ஆனால் நிபுணர்களின் ஆய்வில் அவர்களின் ரிப்போர்ட் எப்படி இருந்தது என்றால் சென்ற ஜனவரியில் வாங்கிய பங்குகளை டிசம்பர் வரை வைத்திருந்தவர்களுக்கு முப்பது சதவீதம் லாபம் கிடைத்திருக்கிறது என்று கூறினார்கள்.

எனது போர்ட் போலியோவில் இதை ஆய்வு செய்து பார்த்தேன். ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் 22 கம்பெனிகளை விற்றிருக்கிறேன் வாங்கியும் இருக்கிறேன். நிபுணர்களின் ஆய்வின்படி நான் விற்காமல் அப்படியே ஓராண்டு வைத்திருந்தால் எனக்கு 32 சதவீதம் லாபம் கிடைத்திருக்கும் ஆனால் அவ்வபோது விலை ஏற்றத்தில் நான் விற்றதால் எனக்கு 15 சதவீதம் மட்டுமே லாபம் கிடைத்தது.

பங்கு சந்தையை பொருத்தமட்டில் பொறுமை, நிதானம் மிகவும் அவசியம் என்பதை அனுபவரீதியாக தெரிந்துக் கொண்டேன். அவசரப்பட்டால் நாம் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.

இந்த ஆண்டு 2011 ல் பங்கு சந்தை சரிந்துக் கொண்டே வருகிறது (FI) அன்னியர்களின் முதலீடுகள் குறைந்ததினால், டாலரின் மதிப்பு அதிகரித்ததினால், இந்திய தொழில்துறை தகவல்கள் (ஐ.ஐ.பி)சரியில்லாததால் சந்தை சரிந்தது, அதனால் பெரும்பாலான வங்கிப் பங்குகள் சரிந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த சரிவு இன்னும் சில மாதங்களுக்கு தொடரலாம் என கணிக்கிறார்கள். அன்னிய முதலீடுகள் சில மாதங்கள் கழித்து இந்திய சந்தைக்குள் நுழையும் என்பது பல நிபுணர்களின் கனிப்பு.

இந்த சமயத்தில் நாம் என்ன செய்வது என்றால் பலருக்கும் தெரிந்த ஒரே லாஜிக், விலை இறங்கும்போது வாங்குவது விலை ஏறும்போது விற்பது இதை சரியாக செய்தால் லாபம் பார்க்கலாம்.

நல்ல கம்பெனிகளை தேர்வு செய்து இந்த விலை இறக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம் அதேபோல் ஏற்கனவே வாங்கிய பங்குகள் விலை இறங்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் வாங்கி விலை ஆவ்ரேஜ் செய்யலாம் என்பது நிபுணர்களின் ஆலோசனை ஆர்வமுள்ளவர்கள் நிதானமாக பங்குசந்தையில் இறங்கி விளையாடலாம்.

கையை சுடாதளவிற்கு கவனமாக இருக்கவேண்டும் இது ஒரு நல்ல வியாபாரம்.

Wednesday, January 12, 2011

அத்திக்கடை நண்பர்கள்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர்- 11

இது ஒரு பாலை அனுபவம்

நண்பன் சிகாபுதீனின் வகுப்புத்தோழன் அஜீஸ்ரஹ்மான். இவன் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி சிகாபுதீனுக்கு கடிதம் எழுதுவான் இவர்களுக்கிடையில் என்னையும் கடிதத்தில் அறிமுகம் செய்து எழுதினான்.

எங்களுக்குள் நட்பு வளர்ந்தது ஒருவரை யொருவர் நாங்கள் அறிந்துக் கொள்ள புகைப்படங்களை பறிமாறிக்கொண்டோம் இதில் என்ன விசேஷம் என்றால் அஜீஸ்ரஹ்மான் தன்னுடைய புகைப்படத்தை நான்கு பாதியாக கட் செய்து ஒவ்வொரு பகுதியாக எனக்கு கடிதத்தில் அனுப்பிவைத்தான் அவன் தோற்றத்தை காண ஆவர்வமாக இருக்கும். முழுமையாக நான் காண்பதற்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

ஒருவிடுமுறையில் சென்னைக்கு சென்று அவன் தங்கிருந்த வாடகை அறையில் இரு தினங்கள் அவன் கல்லூரி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு தங்கியிருந்து சினிமாவிற்கெல்லாம் சென்று வந்தோம். அந்த நாட்கள் நான் கல்லூரியில் படித்ததைப்போன்ற உணர்வைக் கொடுத்தது. கடிதத்தில் மட்டுமே உரையாடிய நாங்கள் நேரடியாக சந்தித்த போது நீண்ட நாட்கள் பழகிய நண்பனைப் போன்றே பழகினோம்.
அந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

இந்த கட்டுரையையும் கூட அவன் படித்துவிட்டு எனக்கு தொலைபேசி செய்வான். ஆம் இந்த தொடரை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறான்.
அந்த நாட்களில் எனக்கு அதிகமான நண்பர்களாக பழகியவர்கள் அத்திக்கடை இளைஞர்கள். சிகாபுதீன், அஜீஸ்ரஹ்மான், நைஸ்காதர், நஜ்முதீன் ,சிராஜ்தீன் இவர்களைத் தொடர்ந்து பாவா வீட்டு ஹாஜா.

இவர்களில் பாவா வீட்டு ஹாஜாவைத் தவிர மற்றவர்கள் துபாயில் தான் இருக்கிறார்கள். சிகாபுதீனும் தங்க மார்கெட்டில் இருப்பதால் அவ்வபோது சந்தித்துக் கொள்வதுண்டு ஆனால் அதிகமாக பேசுவதுகிடையாது காரணம் வியாபார கடையில் கதைகள் பேசமுடியாதே.
அடுத்து அஜீஸ்ரஹ்மான் இவனும் ஜீவல்லரியில் ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடை என்பதால் அதிகமான வாடிக்கையாளர் தொந்தரவு இருக்காது என்றாலும் அவ்வபோது தொலைபேசியில் உரையாடுவோம்.

மலேசியாவில் முதலாழியாக வாழ்ந்தவன் பொருளாதார சுனாமியினால் மீண்டும் துபாயில் பணிப்புரிய வேண்டிய காலசூழ்நிலை என்றாலும் மனதளவில் அவன் எதையும் இலக்கவில்லை. நிறைய விசயங்களை தெரிந்திருக்கிறான் அந்த அறிவே அவனுக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. பொருள் அவனை இழந்தாலும் அவன் தன்னை இழக்கவில்லை. இழந்ததை விரைவில் மீட்டுவிடுவான்.

எனது தாய்மாமன் மகன் ஆக்கூர் ஜெகபர்அலி இவனும் நானும் உயிர் நண்பர்களைப் போல சிறுபிள்ளையிலிருந்து பழகிவந்தோம். நான் துபாய் வந்து சில வருடங்களில் ஹவுஸ்பாயாக இவனும் வந்தான். வெள்ளிவிடுமுறையில் நாங்கள் சந்தித்துக் கொள்வோம் அவனுடைய பணியில் பிரச்சனை வரவே அவனை சிகாபுதீன் தனது அரபியிடம் பேசி வேலைவாங்கி கொடுத்தான். நானும் அவர்களுடன் இணைந்துக் கொண்டதால் எங்களின் நாட்கள் இனிமையாக சென்றது.

ஒருநாள் இரவு செகண்ட்ஷோ சினிமா பார்த்துவிட்டு மூன்றுபேறும் சைக்கிளில் பின் படல்போட்டு நம் ஊரில் வருவதைப்போல மிதித்து வந்தோம். வரும் வழியில் போலீஸ் வாகனம் வரவே எங்களைக் கண்ட போலீஸ் ஆச்சரியப்பட்டார்கள். மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் என்று கூறினார்கள்.

மூன்றுபேர் சைக்கிளில் மிதித்து செல்வதை அப்போதுதான் அந்த போலீஸ்காரர்கள் கண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். எங்களை உற்சாகப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.
ஆனால் ஜெகபர்அலிக்கு சிங்கப்பூரில் செட்டில் ஆகனும் என்ற ஆவல் அவனிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அவனுடைய அந்தக் கனவும் 1986 க்கு பிறகு நனவாகி இன்று சிங்கை பிரஜையாக மனைவி மக்களோடு வாழ்ந்துவருகிறான்.

இந்த நட்புவட்டத்திற்கு மத்தியில் எனது தேடல் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டே வந்தது அந்த நேரங்களில் எனது சிறுகதை தொகுப்பான “விற்பனைக்கு வந்த கற்பனைக் கதைகள்” சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருந்தேன்.

எனது எழுத்தும் இலக்கிய ஆர்வமும் புதிய நண்பர்களை எனக்கு அறிமுகத்தைத் தந்தது அந்த அறிமுகம் எனக்கு ஞானப்பாட்டையை காண்பித்தது.
என்னை ஒருகொள்கையில் ஈடுபத்திக் கொண்டிருந்த போது அதை மறுபரிசீலனை செய்யுமளவு ஆன்மத்தேடல் என்னை மாற்றியது.
அந்த மாற்றத்தை நீங்களும் தெரிந்துக் கொள்ளத்தான் வேண்டும்…தொடர்வோம்.

Saturday, January 8, 2011

வலைப்பூவில் இருக்கும் வைரஸ்சை நீக்குவது எப்படி?

அன்பின் பதிவர்களே!

எத்தனையோ தெரியாத விசயங்களை வலைப்பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பினை இந்த இணையதளம் நமக்கு உருவாக்கி இருக்கிறது.

ஒன்றைப்பற்றி அறிய வேண்டுமானால் நூல்களை தேடி அல்லது அறிந்தவர்களை தேடி அலைந்தக் காலம் மலைஏறிவிட்டது.அறிவியலின் வளர்ச்சில் இருக்கும் நாம் அறையில் இருந்துக்கொண்டே இந்த உலகை சுற்றி வந்துவிடலாம் பல சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றுவிடலாம்.

இது எல்லாம் சரிதான் விசயத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைப்புவிடுப்பது தெரிகிறது.

நாம் பதிவு செய்துக்கொண்டிருக்கும் நமது வலைப்பூவில் வைரஸ்தாக்குதல் இருந்தால் அதை எப்படி நிவர்த்தி செய்வது(?) என்பதை தெரிந்த பதிவர்கள் தயவுசெய்து எனக்கு சொல்லிக் கொடுங்கள் அல்லது லிங்க் கொடுங்கள்.

பலவாசகர்கள் எனது வலைதளத்திற்குள் வரமுடியவில்லை தலைப்புடன் நின்றுவிடுகிறது என்று புகார் செய்கிறார்கள். பலரால் கமாண்ட்டும் போடமுடியவில்லை என்று கூறுகிறார்கள் இதற்கெல்லாம் வைரஸ்தானே காரணம்? தெரிந்தவர்கள் தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்.

இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் உபயோகமாக இருக்கும்...இதற்கு முன்னால் யாரும் வைரஸை நீக்குவதைப்பற்றி கட்டுரைகள் எழுதி இருக்கலாம் அவர்களுடைய லிங்க் கிடைத்தால் எனக்கு பெரிதும் உதவியாக இருக்கும்..

இதை வாசித்த உதவி செய்ய போகின்ற பதிவர்களுக்கு மிக்க நன்றியினை சமர்பிக்கின்றேன்.

நன்றி...நன்றி....நன்றி..!!!

Thursday, January 6, 2011

எமிரேட்ஸ் ஏர்லைன்சின் கவனத்திற்கு


சென்ற மாதம் டிசம்பரில் மருத்தவ பரிசோதனைக்காக சென்னைக்கு நானும் எனது மனைவியும் எமிரேட்ஸ் (EMIRATES AIRLINES)சில் இரண்டு தினங்களுக்காக சென்றோம். குறிப்பிட்ட தினத்தில் மருத்துவ பரிசோதனை முடியாததால் ஒரு தினம் தாமதமாக வரக்கூடிய சூழல் ஏற்படவே எங்களது விமான பயணச்சீட்டை மாற்றுவதற்கு சென்னையிலுள்ள எமிரேட்ஸ் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.

பயணச்சீட்டை மாற்றுவதற்கு 500 இந்திய ரூபாய் கட்டவேண்டும் என்று கூறினார்கள்.(தற்போது தேதி மாற்றத்திற்கு பணம் கட்டவேண்டும்) கடன் அட்டை மூலம் கட்ட வேண்டும் என்றார்கள் நானும் சரி என ஒப்புக்கொண்டு கடன் அட்டையின் 16 இலக்க எண்ணை கூறினேன்.

கடன் அட்டையின் முடிவுகால வருடம், தேதி கேட்க்க அதையும் கூறினேன். பின்னர் கடன் அட்டையின் பின் பக்க உள்ள ரகசிய எண் (ccv)3 இலக்க எண்னை கேட்டதும் எனக்கு கோபம் வந்தது.

மன்னிக்கனும் என்னால் அந்த எண்ணை கூற இயலாது அப்படி நான் கூறுவம் பாதுகாப்பு கிடையாது என்றேன். அதற்கு அவர் எங்களுடைய வழக்கமும், பழக்கமும் இதுதான் என்றார்.
இருக்கலாம் ஆனால் வங்கி எங்களை எச்சரிக்கைப் படுத்தி இருக்கிறது என்று கூறிவிட்டு
சரி நான் விமான நிலையத்தில் பணமாகவே கட்டிவிடுகிறேன் என்றேன் அவரும் சரி என்றார்.

விமான நிலையம் சென்று எமிரேட்ஸ் கவுண்டரில் பயணச்சீட்டைக் கொடுத்ததும் தேதி மாற்றத்திற்கு 500 கட்டவேண்டும் என்றார் நானும் சரி என்றேன்.
எமிரேட்ஸ் மேற்பார்வையாளரிடம் அவர்பேசிவிட்டு அந்த தொகையை நீங்கள் கடன் அட்டை மூலம் தான் கட்டவேண்டும் என்று கூறிவிட்டு தொடர்புக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

நான் பணமாக கட்டுகிறேன் கடன் அட்டை மூலம் என்னால் கட்ட இயலாது அவர்கள் இரசிய எண்ணை கேட்கிறார்கள் நான் எப்படி அதை கொடுக்க முடியும் எனது கடன் அட்டைக்கு பாதுகாப்பு கிடையாது அது உங்களின் ஊழியர்கள் தவறாக பயன்படுத்த காரணமாகிவிடும் என்றேன்.

அப்படி எல்லாம் யாரும் செய்யமாட்டார்கள் நீங்கள் அந்த தொகையை கடன் அட்டை மூலம்தான் கட்ட முடியும் நாங்கள் பணமாக வாங்கக் கூடாது எங்களிடம் வேறு வழி இல்லை என்று மேலாளர் கூற, வேறு வழிஇன்றி கடன் அட்டையின் மூலம் கட்டினேன்.

எமிரேட்ஸ் நிறுவனம் தனது சேவையை பயணிகளுக்கு சிறப்பாக செய்வதாக கூறுகிறது ஆனால் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது அதன் வளர்ச்சிக்கு ஒரு சரிவுதான்.

ஒருவரின் கடன் அட்டையின் முழுவிபரம் ஒரு ஊழியருக்கு தெரியும் பொழுது அவர்களால் அதை தவறாக பயன்படுத்த ஒரு வாய்ப்பை எமிரேட்ஸ் போன்ற நிறுவனம் வகுத்துக் கொடுக்கிறது.

வங்கிகளில் கடன் அட்டையின் ரகசிய எண்ணை மாற்றுவதற்கு நாம் தொலைபேசி மூலம் அந்த எண்ணை நசுக்கி பதிவு செய்வோம் அதுதான் பாதுகாப்பான முறை இப்படி வெளிப்படையாக எல்லா இலக்க எண்களையும் ஒருவரிடம் கொடுக்கவும் கூடாது அப்படி கொடுப்பது ஆபத்தானது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த முறையை மாற்றி அமைத்தால் பயணிகளின் பயம் நீங்கும் ஊழியர்களின் குறுக்கு சிந்தனையை போக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பி உள்ளேன்.

Wednesday, January 5, 2011

எழுதப்படிக்க தெரியவில்லை என்றாலும் பழகத்தெரிந்திருக்கிறார்கள்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 10

இது ஒரு பாலை அனுபவம்

இரண்டு மாதம் விடுமுறையில் தாயகம் சென்ற எனக்கு துபாய் திரும்பும் அந்த நாள் ஆவலைக் கொடுத்தது. கொண்டு போன காசு கரைந்துபோனதாலா? அல்லது நண்பர்களிடம் கடன் வாங்கியதாலா? என்றே தெரியாமல் துபாய் மீது தேடல் அதிகரித்து.

வெளிநாட்டிலிருந்து நம் தாய்நாட்டிற்கு செல்லும்போது நம்மை ஏதோ வேறு கிரகத்திற்கு சென்று வந்த மனிதரைப்போல அப்போதைய கிராம மக்கள் பார்த்தார்கள். மித்த மரியாதையும் வழங்குகினார்கள் நம்மிடம் நிறைய பணம் இருப்பதாக அவர்கள் எண்ணிக்கொண்டார்கள். தூரத்து உறவினர்கள் கூச்சப்படாமல் நம்மிடம் துணியும், மணியும் கேட்டார்கள்.

இன்று அப்படியே மாறிவிட்டது ஒவ்வொரு ஊர்களிலும் ஐம்பது சதவீத இளைஞர்கள் தங்களின் ஊர்களில் இல்லை; பலரும் படிப்புக்காகவும், சிலர் வேலைக்காகவும், நகரங்களை நோக்கி அன்னிய நாட்டை நோக்கி, பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் விமானப் பயணம் என்பது பெரிய விசயமாக இருந்தது. இன்று அது நம்மஊரு மினிபஸ் பயணம் மாதிரி ஆகிவிட்டது.
காலையில் சென்னையில் பார்த்தவரை சில மணி நேரங்கழித்து துபாயில் அல்லது சிங்கையில், சவுதியில் பார்க்கமுடிகிறது. தூரம் என்பதை இன்றைய விஞ்ஞானம் சுறுக்கிவிட்டது.

மீண்டும் துபாய் வந்தேன் நண்பன் சிகாபுதீன் ஆவலுடன் ஊர்செய்திகளை கேட்பான் அதை நாள் கணக்கில் சொல்லி காண்பிப்பேன். சொல்லுவதற்கும் அதை கேட்பதற்கும் மிக இனிமையாக இருக்கும்.

பணிமுடித்து இரவு நேரங்களில் பக்கத்து தெருவில் பணிப்புரியும் தேரிழந்தூர் கொல்லி பஷீர், தேரிழந்தூர் சபீருல்லா, அத்திக்கடை நைஸ்காதர் இவர்களுடன் கதைகள் பேசுவதுண்டு. நாங்கள் மட்டுமல்ல பலரும் அன்றாட அரபு வீடுகளில் நடைபெறும் கலாட்டாக்களை கூறுவார்கள் அங்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை போல் கலகலப்பாக இருக்கும்.
பல அரபு வீடுகளில் இலங்கை இளைஞிகளும் பணிப்புரிவார்கள் அதே வீட்டில் வாகனம் ஓட்டுனராக, சமையலராக பணிப்புரிவர்களிடையே காதல் மலர்ந்து சிலர் திருமணம் செய்துள்ளார்கள், சிலர் ஏமாற்றவும் செய்திருக்கிறார்கள்.

அரபிகளுக்கு இந்த காதல் விவகாரம் தெரிந்தால் உடனே இருவருடைய விசாவையும் ரத்து செய்து அவரவர்களின் நாடுகளுக்கு அனுப்பிவைத்து காதலைப் பிரித்து விட்டிருக்கிறார்கள்.
துபாய் தமிழ் பஜாரில் இருந்த ஹவாய் ஸ்டோரை எப்பவும் மறக்க முடியாது காரணம் தமிழ் வாரஇதழ்கள் புத்தகங்கள் அங்குதான் எனக்கு கிடைத்தது. அதில் பணிப்புரிந்த ஆக்கூர் அமீன் அன்று நண்பராக இருந்தார் இன்று குடும்ப நண்பராக இருக்கிறார்.

புத்தகங்களை பறிமாறிக் கொண்டதினால் கிடைத்த நட்புதான் திருவாருர் ஒலிமுஹம்மது. எனது எழுத்து ஆர்வத்தை புரிந்துக் கொண்ட அவர் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார். நாளடைவில் எங்களின் நட்பு வளர்ந்து குடும்ப நட்பாக மாறியது. என்ன செய்ய! அந்த நட்பு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பின் முருங்கை மரம் போல முறிந்து போனதே!.
மனம் எப்பவும் குரங்குதான் கையில் தடியுடன்தான் நடக்க வேண்டும். அவ்வபோது மனதுக்கு ரெண்டு போடு போடவேண்டும் இல்லையென்றால் அது நம்மை போட்டுவிட்டு மனம் வலிக்குதே எனப் பாடவும் செய்யும் அதுதான் மனம்.

எழுத்து அல்லது படிப்பு இப்படி இருக்கும் எனக்கு இந்த வாடையே பிடிக்காத சில நண்பர்களின் பார்வையில் அரை கிருக்கனாகத் தெரியப்பட்டேன். புதிய நண்பர்களை கண்டால் நான் விடுவதில்லை எதையாவது நான் எழுதியதை கொடுத்து படிக்கச் சொல்லி கருத்துக் கேட்பேன் அதில் ஆர்வம் எனக்கு.

ஒருமுறை ஒரு நண்பர் கடிதம் எழுதிக்கேட்டார் நானும் எழுதிக் கொடுத்தேன் ரொம்பவும் கௌரவமாக பழகினார் நான் எழுதித் தந்து கடிதத்தை வைத்து என்னை புகழ்வார் அவருடைய புகழ்ச்சி என்னுடைய கதை கவிதைகளை அவரிடம் காண்பிக்க வேண்டும் என்ற ஆவலைக் கொடுத்தது.

ஒருநாள் எனது அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்தார் அப்போது இதுதான் சமயம் என எனது இரண்டாவது நாவலான யார் அந்தக் குற்றவாளி? –யை அவரிடம் நீட்டினேன். படித்துவிட்டு சொல்லுங்கள் என்றேன்.

எந்த ஆரவாரமுமில்லாமல் வாங்கி வைத்துக் கொண்டு இன்னொரு நாளைக்கி படிக்கிறேனே என்றார். அந்த வார்த்தை எனக்கு அவரிடமிருந்த ஆர்வத்தைக் குறைத்தது.
கடிதம் எழுதவேண்டும் என்றார் அடிக்கடி என்னிடம் கடிதம் எழுதிக் கேட்கிறாரே அவருக்கு எழுதத்தெரியாதா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒருமுறை உங்கள் கையெழுத்து அழகாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இன்னொருமுறை எனது கதையை படிக்க கொடுத்தபோது சொன்னார் எனக்கு எழுத படிக்கத் தெரியாது அதை உங்களிடம் சொல்ல வெட்கப்படுகிறேன் என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவரைப் பார்த்தால் படித்தவர்போல தோற்றமளித்தார். பாவம் அவருக்கு எழுத படிக்கத்தான் தெரியாது ஆனால் நன்றாக பழக்தெரிந்திருந்தார். அவரைவிட வயதில் குறைந்தவனாக இருந்தாலும் மரியாதையுடன் எப்பவும் நடந்துக் கொண்டார்.

சிலர் எழுதப் படிக்கத் தெரியாமல் தங்களின் குடும்பத்தினருக்கு மனைவிக்கு கடிதம் எழுதத் திண்டாடிக்கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில் டேப் ரிக்காடு பெரிதும் அவர்களுக்கு பாலமாக இருந்தது.

பெரும்பாலும் பூங்காக்களில் பாக்கிஸ்தானிகளும் இந்தியர்களும் டேப்ரிக்காடில் தங்களின் எண்ணங்களை கடிதங்களாகப் பதிவு செய்துக் கொண்டிருப்பார்கள்.

பதிவைத் தொடர்வோம்…

Sunday, January 2, 2011

பாதுகாப்பில்லாத சுதந்திரத்தாய்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் 2011 ல் புதுப்பொலிவுடன் நாம்மலர்வோம்…

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 9

இது ஒரு பாலை அனுபவம்

அவசரமாக விமானம் மீண்டும் துபை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது ஏதோ சிறிய பிரச்சனை அதை ஒருமணி நேரத்தில் சரிசெய்துக் கொண்டு நமது பயணத்தை தொடரவோம் என்று அறிவிப்பு செய்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்குப்பின் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் ஓய்வு எடுங்கள் என்று கூறி இறக்கிவிட்டார்கள். ஓய்வில் அமர்ந்த எனக்கு உறக்கம் வரவே உறங்கிப்போனேன் சில மணிநேரங்கள் நன்றாக உறங்கிய எனக்கு திடீரென விழித்துப் பார்க்க என்னுடன் விமானத்தில் வந்த ஒருவரையும் அங்கு காணவில்லை.

ஆஹா…நம்மள தவிக்கவிட்டுட்டு பறந்துட்டாங்களேன்னு என்னை நானே நொந்துக் கொண்டு செய்வதறியாது திண்டாடி அங்குமிங்கும் அழைந்த எனக்கு ஒரு பெரிய வரிசையில் பயணிகள் நிற்பதைக் கண்டு எனக்கு நிம்மதி பிறந்தது.

அந்த வரிசையில் நானும் என்ன ஏது என்று கேட்காமல் நின்றேன். இறுதியாக அந்த வரிசை எங்களின் பாஸ்போர்ட்களை சேகரித்துக் கொண்டிருந்தது அப்போதுதான் வாய்திறந்து ஏன் என்று கேட்க விஸா கேன்சல் ஆகாதவர்கள் தங்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டு மதியம் 2.00 மணிக்கு வந்தால்போதும் என்று அதிகாலை 4.00 மணிக்கு கூறினார்கள்.

நானும் பலரைப்போல பாஸ்போர்ட்டை கொடுத்து விட்டு நண்பன் சிகாபுதீன் ரூமிற்கு சென்று கதவைதட்ட அவன் திறப்பதற்கு அஞ்ச பல சத்தியங்களை சொல்லி திறந்துவிடக்கோரி திறந்த அவனுக்கு பெருத்த ஆச்சர்யம் அதிர்ச்சி.

நடந்த விசயங்களை சொன்னதும் மதியம் சாப்பாட்டைக் கொடுத்து என்னை மீண்டும் விமானம் நிலையம் அனுப்பி வைத்தான். மாலை ஆறுமணிக்கு விமானத்தில் அமர்ந்து அது புறப்படுவதற்கு முன் டமாரென சப்தம் வரவே பயணிகள் கூச்சலிட்டார்கள் மீண்டும் அந்த விமானம் ஓரங்கட்டப்பட்டு விமான நிலையத்திற்குள் அனைவரையும் போகச் சொல்ல அப்போதுதான் பலரும் சப்தமாக பேசினார்கள்.

வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பார்களே அப்படி வாய்உள்ளவர்கள் ஏர்லைசன்கார்களிடம் சண்டைபிடித்து வேறு விமானத்தில் பறந்தார்கள். என்னைப்போன்ற வேடிக்கை மனிதர்கள் சிலர் எப்போதும்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
அடுத்தது என்ன என்பதை தெரிந்துக் கொள்ள முயற்சி செய்தேன் ஏர்லைன்ஸ் பணிப்பெண் கூறினாள் இன்று இரவு நீங்கள் அனைவரும் தங்குவதற்கு ஹயாத் ரிஜென்ஸி ஹோட்டல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இன்னும் சற்று நேரத்தில் உங்களை அழைத்துச் செல்வோம் நாளை காலையில் அமெரிக்காவிலிருந்து புதிய விமானம் வருகிறது அதில் நீங்கள் அனைவரும் பத்திரமாக அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்றார்கள்.

அவ்வளவு பெரிய ஹோட்டலில் தங்குவதற்கு ஆசையோ ஆவலோ என்னிடம் இல்லை ஆனால் இப்படியொரு வாய்ப்பை இறைவன் தந்திருக்கிறான் அதை மறுக்க முடியுமா என்ன?
எனது நண்பனுக்கு மிக்க சந்தோசம் அவனே இந்த ஹோட்டலில் தங்கியதைப்போன்ற உணர்வைப்பெற்றான்.

ஹயாத் ரிஜென்ஸி ஹோட்டலின் சுழற்சி உணவகத்தில் இரவு உணவருந்திவிட்டு துபையின் அழகை கண்டபோது இருட்டாகவே இருந்தது. அன்று இருண்டு போயிருந்த பலருடைய வாழ்க்கைக்கு துபை ஒளிகொடுத்து இன்று பிராகசப்படுத்திக் கொண்டிருக்கிறது தன் நகரத்தைப்போல என்றாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வளர்ச்சி என்பது அவர்கள் சென்ற வழியைப்பொருத்தும் இருக்கிறது.

மறுநாள் காலை 8.00 மணிக்கு எங்களை மீண்டும் விமான நிலையம் அழைத்துப்போக புதிய விமானம் அமெரிக்காவிலிருந்து காலை 10.00 மணிக்கு வந்து எங்களை பம்பாய் நகரத்தில் கொண்டுச் சேர்த்தது இத்தனை ஆண்டு அனுபவத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்ததில்லை.
அங்கிருந்து சென்னை வந்துச் சேர்ந்தது பெரும்பாடு சென்னையிலிருந்து தனி ஆளாக வீடு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஏதோ அரபு நாட்டுல காசு ரோட்டிலே கிடந்து பொறுக்கிட்டு வருகிறமாதிரி நின்னவன், போறவன், பார்த்தவன், பேசினவன்னு காசை கறப்பதிலேயே குறியாக இருந்தார்கள். இதுமாதிரி சிமரங்களிலிருந்து விடுபடுவதற்குதான் உறவினர்கள் தங்கள் ஊர்களிலிருந்து வாடகைக் கார் அல்லது சொந்த வாகனத்துடன் வந்து அழைத்துச் செல்கிறார்கள்.

தற்போது சில டிராவல்ஸ்கள் அந்த வேலைகளை செய்துக் கொண்டும் வருகிறது. பாதுகாப்பு என்பது பிழைக்கபோன இடத்தில் கிடைக்குமளவு நம் சுதந்திர தாய் நாட்டில் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம்.

இது முப்பது ஆண்டுமுன்னாடி நடந்தது மட்டுமல்ல இன்றும் தனிமனித பாதுகாப்பு என்பது நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இது போன்ற பல உண்மைகளை இன்னும் பார்ப்போம்…

Sunday, December 26, 2010

ஆடும் பொறுமையும்

சென்ற 24/12/2010 துபாய் வானலை வளர் தமிழ் இலக்கிய அமைப்பின் தமிழ்தேரின் 47வது மாதஇதழ் வெளியீட்டு விழாவில் எனது இலக்கிய நண்பர் கீழைராஸா தனது உரையிலே நான் எழுதிவரும் இந்த பாலை அனுபவ கட்டுரையைப் பற்றி அறிமுகம் கொடுத்தார்.
அவர் கூறிய சிலவரிகள் “எதையும் மறைக்காமல் எழுதிவருகிறார் நானாக இருந்தால் மறைத்துதான் எழுதி இருப்பேன்” - என்று என்னைவிட வெளிப்படையாக அவர் சொன்னவிதம் அவரை உயரப்படுத்தியது.

மறைத்து எழுதினால் அதில் அனுபவம் வெளிப்படாது கற்பனை மிகைத்து கதையாக இருக்கும். எதை மறைப்பது? மறைக்குமளவு அதில் என்ன இருக்கிறது. மறைக்கப்பட வேண்டிய விசயங்கள் எத்தனையோ அம்மணமாக உலாவரும்போது அம்மணமாக சொல்லவேண்டிய விசயங்களுக்கு ஏன் பட்டுத்திரை? தமிழ்தேர் நிகழ்ச்சியில் அறிமுகம் தந்தமைக்கு நன்றி ராஸா.

* அத்திக்கடை சிகாபுதீன் எனக்கு டெலிபோன் செய்து பேசினான். இவன் பேசும்போது
நாசூகா எழுதக்கூடாதா? என்றான்.
செய்த வேலையை சொல்வதில் என்ன நாகரிகம்? நாம் நாகரிகமாக செய்தவேலைகள்தானே அது! இன்று வேலைமாறினாலும் நம்முடைய நினைவில் அது மறையவில்லையே. அதை நினைத்துப்பார்க்கும்போது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது நண்பா!
*************************************************************************************

எனக்கு 30 அமீரகத்திற்கு 39

இது ஒரு பாலை அனுபவம்

நண்பன் சிகாபுதீன் வேலைசெய்யும் அரபியின் உறவினர்ருக்கு ஆள் தேவைப்பட்டதால் அங்கு பணியில் அமர்ந்தேன். இது வீட்டுவேலை அல்ல ஆட்டு மந்தை அதாவது ஆடு வியாபாரம்.
துபாய் ஹமரியா போர்ட் பக்கத்தில் ஆட்டுச் சந்தை இருந்தது பெரும்பாலும் இதில் ஈரானியர்கள் தான் அதிகமாக வேலைசெய்தார்கள் அதில் சில இந்தியர்களில் நானும் ஒருவன்.

ஆட்டுமந்தையில் என்னுடன் பணிப்புரிந்த மதுக்கூர் ஜலீல் இவரை எனது அரபி கேப்டன் என்று தான் அழைப்பார். இவரை மதுக்கூர் மக்கள் எம்ஜியார் என்று அழைப்பார்கள். இவர் எம்ஜிஆரின் தீவிர விசிறி அதனாலேயே இவருக்கு இந்த செல்லப்பெயராம். ஏதாவது நான் எழுதிக் கொண்டே இருப்பதினால் என்னை குருஜி என்று அழைக்கும் பழக்கம் கேப்டனிடம் இருந்தது. இப்பவும் இவர் துபையில் தான் இருக்கிறார் சில தருணங்களில் சந்தித்துக் கொள்வதுண்டு இப்பவும் அதே குருஜி தான்.

பலநாடுகளிலிருந்து ஆடுகள் இறக்குமதி செய்து வணிகம் செய்வோம். பெரும்பாலம் இந்தியா குஜராத்திலிருந்தும் பாக்கிஸ்தானிலிருந்தும் தான் ஆடுகள் அதிகமாக கப்பலில் வரும்.

இந்திய ஆட்டைவிட பாக்கிஸ்தான் ஆடு விலை அதிகம்; அதேபோல் இந்திய ஆட்டைவிட ஆஸ்தேரிலியா ஆட்டின்விலை குறைவு; ஆஸ்தேரிலியா ஆடு கம்பளி போர்த்தியதைபோல இருக்கும் ஆனால் கொழுப்பு ரொம்ப அதிகம் அதனாலேயே இந்தியர்களை அவ்வபோது தாக்குகிறது.

ஹவுஸ்பாய் வேலையைவிட இந்த வேலை பிடித்தமானதாக இருந்தது வெளிஉலகை பார்க்க ஏதுவாக இருந்தது. தீர்க்கதரிசிகள், மகான்கள் எல்லாம் பெரும்பாலும் ஆடுகள் மேய்த்திருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன்; பொறுமையுடையவர்கள் மட்டுமே ஆடுகள் மேய்க்க தகுதியானவர்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்துக் கொண்டேன் அதனாலேயே நீண்டநாள் இந்த வேலையில் நீடிக்கவில்லை.

இந்த பணிகளுக்கிடையே முதன்முதலாக 23வது வயதில் “டெலிபோன் டைரி” என்ற நாவலை எழுதினேன். இது முழுக்க முழுக்க ஆட்டு மந்தைகளுக்கிடையில் எழுதப்பட்ட துப்பறியும் நாவல்.

அதை நூல் வடிவில் கொண்டுவருவதற்கு மயிலாடுதுறை அசோகன் என்ற ஆசிரிய நண்பர் பெரிதும் உதவினார். இன்று அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை அவருடைய தொடர்பு தொடரவுமில்லை. அந்த நாவல் நூலாக கொண்டு வந்து துபையில் பல கடைகளில் விற்பனைக்கு போட்டுள்ளேன். அந்த நூல் சிலரை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் மாற்றி இருக்கிறது.

அப்படி என்ன பெரிய விசேசமான நூல்ன்னு நினைக்கிறீங்களா? எந்த விசேசமுமில்ல இவனெல்லாம் நாவல்ன்னு எதையோ கிறுக்கிருக்கான்னு என்னை விமர்சித்து புனைப்பெயரில் கடிதம் எழுதிய தஞ்சைக்கு அருகில் வல்லத்தைச் சேர்ந்த ஷேக்அப்துல்லா துபையில் நல்ல நண்பனாக மாறினார். எனது நாவலைக்கண்டு அவர் ஒரு கவிதை நூல் வெளியிட்டார்.

எனது சகோதரனின் திருமணத்திற்காக மற்றும் விடுமுறையை கழிப்பதற்கும் தாயகம் செல்ல தயாரானேன் சென்னைக்கு நேரடி விமானம் அப்போது இல்லை.

பம்பாய் (மும்பை) வழி செல்வதற்கு PANAM AIRLINE சில் பயணச்சீட்டு தயாரானது.(இப்போது இந்த விமானச் சேவை இல்லை) இரவு 10.30 மணிக்கு என்னை வழியனுப்ப வந்த நண்பன் சிகாபுதீன் மற்றும் சில நண்பர்களுடன் விமான நிலையத்தில் உடமைகளை எடைபோட்டு விமானத்தில் அமர்வதற்கான இருக்கை எண் அட்டையை பெற்றுக் கொண்டு நண்பர்களிடமிருந்து பிரியா விடைப்பெற்று செல்லுமுன் சிகாபுதீன் சொன்னான் "டேய் எங்க வீட்டுக்கு மறக்காமல் போய்வரனும்" என்று சம்பர்தாயமாக அவன் கூறினாலும் அவனுடைய வீட்டுக்கு வாங்கித்தந்த சாமான்களை கொடுப்பதற்கு மட்டுமல்ல சிகாபுதீனின் அன்பு தகப்பனார் செவத்தப்பிள்ளை முஹம்மது ஹனீபா அவர்களின் அன்பை கடிதத்தின் மூலம் பெற்றவன் என்பதினாலும் அவரை தந்தையாக நான் எண்ணுவதனாலும் கட்டாயம் சென்று வருவேன் என்ற உறுதி மொழியுடன் நண்பர்களிடமிருந்து விடைப்பெற்று சுங்க பரிசோதனைக்கு தாயகம் செல்கிறேன் என்ற சந்தோச எண்ண அலையில் சென்றேன்.

என்னை வழியனுப்பிவிட்டு கனத்த மனதுடன் நண்பர்கள் வீடு திரும்பினார்கள். நான் எல்லா சோதனைகளிலிருந்தும் விடுபட்டு விமானத்தில் அமர்ந்தேன். குறித்த நேரத்தில் விமானம் புறப்பட்டது அரைமணி நேரம் பறந்திருப்பேன் உணவு வழங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென நிறுத்திவிட்டு எல்லோரையும் பெல்ட் போடும்படி அறிவுறுத்தினார்கள் விமானப் பணிப் பெண்களிடம் ஒருவித பதட்டம் தெரிந்தது.

அவசரமாக விமானம் மீண்டும் துபை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது…

ஏதோ பிரச்சனை இருக்கு தொடர்வோம்….