உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, August 1, 2009

மனம் கவர்ந்த மலேசியா...9

காலையில் எனது சுட்டிகள் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு தயாரானார்கள்…
அவர்களை அழைத்துக்கொண்டு நானும் இறங்கினேன்…
ரொம்பவும் தூய்மையாக இருந்தது. நாங்கள் தங்கிருந்த அந்த கட்டிடத்திற்கு நல்ல பாதுகாப்பும் கொடுத்திருந்தார்கள்…வெளியிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் யார் எந்த வீட்டுக்கு வருகிறார்கள் போன்ற விபரங்களை கேட்டே அனுமதிக்கிறார்கள் செக்யூரிட்டிகள்…
பெரும்பாலோர் சொந்த வீட்டில் அல்லது பிளாட்டில் தான் வசிக்கிறார்கள். ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கு இரண்டு அறை கொண்ட பிளாட் விலைக்கு கிடைக்கிறது…வாடகையாக இருந்தால் 500 ரிங்கிட்டுக்கு 3 பெட்ரூம் பிளாட் கிடைக்கிறது.
இதே துபாயில் 200 சதுரஅடி கொண்ட ஸ்டுடியோ பிளாட் பாத்ரூம் மட்டும் தனி இதற்கு ஆண்டுக்கான வாடகையே நாற்பதுஆயிரம் திரஹம்-ரிங்கிட் வசூலிக்கிறார்கள்…அந்த 200 சதுரஅடி பிளாட் மலேசியாவில் 40000 ரிங்கிட்டிற்கு நாம் சொந்தமாக வாங்கியே விடலாம்.
மலேசியாவை பொருத்தவரையில் உணவு தங்குமிடம் மருத்துவம் இவைகளுக்காண சிலவுகள் மிகக்குறைவு…சிங்கப்பூரை இதோடு ஒத்துப் பார்த்தோமேயானால் மலேசியாவுக்கு தான் என் ஒட்டு…
அதேபோல் சம்பளமும் குறைவு என்கிறார்கள்…அது வேலையைப் பொருத்து இருக்கிறது…பெரும்பாலும் இந்தோனேசியா தாய்லாந்து இந்தியா பங்கலாதேஷ் போன்ற நாட்டினர்கள் அதிகமாக வேலைப்பார்க்கிறார்கள்…சம்பளம் குறைவுக்கு இதுவும் ஓரு காரணம்…!



மதியம் பினாங்ஹில் போவதற்கு கிளம்பினோம்…கைடு என் மைத்துனர்தான். அவர் கைடாக மட்டும் வரவில்லை பைனான்சியல் மினிஸ்டராகவே இருந்தாரு. (இப்படி சொன்னாத்தான் இன்னும் நல்லா எனக்கு சிலவு செய்வார்னு…யாரோ சொல்றீங்க) ஒவ்வொரு இடத்திலும் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு கட்டணம் செலுத்துவதில எனக்கும் அவருக்கும் போட்டியாகவே இருந்தது. தங்குவது தான் ஒசின்னா சுத்திபார்ப்பதிலும் ஒசியான்னு நீங்க கேட்டுடாதிங்க…விடமாட்டேங்குறான்…என் மனைவிக்கு ரொம்ப வருத்தம் என் தம்பி காசிலேயே ஊரை சுத்திறீங்களேன்னு…
சரி…சரி…துபாய் வரும்போது நாம கவனிப்போன்னு ஆறுதலா என் மனைவிகிட்ட ஒரு வார்த்தைக்காக சொன்னே…உடனே ஆமா மச்சான்…அடுத்த வருடம் துபாய் வருவதற்கு புரோகிராம் போட்டிருக்கோம்னு சொன்னாரு…என் மனைவிக்கு ரொம்ப சந்தோசம்…அப்ப எனக்கு…?
பினாங்ஹில் இரயில்வே ஸ்டேசனில் ஒரளவு கூட்டம் இருந்தது…பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நின்றுக் கொண்டிருந்தார்கள் இதில் வளைகுடாவிலிருந்து அரபியர்களின் குடும்பங்கள்; அதிகம். அவர்கள் பினாங்கில்
வீடு வாடகைக்கு எடுத்து இரண்டு மாதம் வரை தங்குவார்களாம்…அவர்கள் தங்கியிருக்கக்கூடிய பகுதியில் விலைகள் கொஞ்சம் அதிகம்…ம்…இருக்காதாபின்னே…பெட்ரோல் காசாச்சே…அதை கரைக்கினுமுல்ல…!


பினாங்கு ஹில் ரெயிலின் அழகு என்னன்னா…ரோடு செங்குத்தாக இருக்கிறது மெதுவாக தான் ஏறுகிறது…இது கீழிருந்து மேலே ஏறும் போது மேலிருந்து கீழே வருவதற்கு அங்கிருந்து ஒரு இரயில் புறப்படுகிறது…ஒன்வே ரோடு தான் …குறிப்பிட்ட தூரத்தில் இரண்டுடேக் இருக்கிறது…இந்த இரண்டு இரயில்களும் சரியான நேரத்தில் அந்த கிராசிங்கை அடையனும்…அப்படித்தான் அடைகிறது…இதில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் விபத்துதான் முடிவாக இருக்கும்.
இந்த இரயில் ஒரு 500 மீட்டர் தூரத்திற்கு செல்கிறது…அதன் பிறகு இங்கு இன்னொரு இரயிலுக்கு நாம் மாறனும்…அதுவும் இதே பார்முலாதான்… இந்த மலையின் உச்சிக்கு சென்றால் குளிர்ருகிறது…முழு பினாங்கு நகரத்தையே நம்மால் பார்க்க முடிகிறது…
அதன் உள்ளே…பறவைகள் பூங்கா இருக்கிறது…கடைகளும் இருக்கிறது…
அதுமட்டுமல்ல…அந்த மலையின் மேல் பள்ளிவாசலும் கோவிலும் மாதாகோவிலும் இருக்கிறது…இதைப் பார்த்ததும் சமய நல்லிணக்க ஒற்றுமையை ஓங்கச் செய்துள்ளதாக தோன்றியது…கோயில்களில் பஜனையும் பள்ளிவாசலில் தொழுகையும் தேவாலயத்தில் பிரார்த்தனையும் நடந்துக் கொண்டிருந்தது…


அங்கு வரக்கூடிய மனிதர்கள் அவரவர்களுக்கு எதுதேவையோ அதை எடுத்துக்கொள்கிறார்கள்…இந்த சூழல் என்மனதை மிகவும் கவர்ந்தது…
என் மைத்துனரின் பையனும் என்குழந்தைகளும் நன்றாக விளையாடினார்கள்…பல வண்ணங்களில் அடைக்கப்பட்டிருந்த பறவைகளுக்கு இந்த குழந்தைகள் அவர்கள் சாப்பிட்ட சிப்சை பறிமாறினார்கள் அந்த பறவைகளும் அதை வாங்கி கொறித்தது அந்த காட்சியைப் பார்த்து நாங்கள் ரசித்தோம்…
சிலமணி நேரங்களை சிலவு செய்து விட்டு கீழே இறங்கினோம்…துரியான் பழத்தின் மரத்தை இரயிலில் வரும்போது பார்த்தோம்ங்க…அதுல துணிகட்டி வச்சுருக்காங்க…அந்த பழத்தில் முட்கள் அதிகம்…அது விழும்போது யார் தலையிலாவது விழுந்தால் அவ்வளவுதான் மியூசிக் வாசிச்சிடுவாங்களாம்…
காட்டுப்பக்கம் போறவங்க கவனமா போங்ககண்ணு…
பினாங்குக்கு இன்னொரு பேரு இருக்குன்னு மைத்துனர் சொன்னாரு… என்னப்பேருன்னே…? … என்னப் பார்த்து சிரித்தார்… அந்த சிரிப்பிலேயே தெரிஞ்சுடுச்சு… அவருக்கு தெரியாதுன்னு…
நான் உன்னுகிட்ட இனிமே எதையும் கேட்கமாட்டேன்… நானாகவே தெரிஞ்சுக்கிறேன்…ன்னே…
ஏன் இவ்வளவு விரக்கதியாயிட்டீங்க…?ன்னாரு


பின்னே என்னப்பா… தென்னமரம் என்னமரம்னு இதுவரைக்கும் சொல்லலையே…ன்னே…!
ஆரம்பிச்சுட்டாரப்பா…?ன்னு என் மனைவிபக்கம் அவன்பார்க்க…
ஏங்க… தென்னமரம் என்னமரம்னு தெரிஞ்சு…இப்ப என்ன கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துக்க போறீங்களா?அவனை கேள்விமேல கேள்வி கேக்குறீங்க… ன்னாங்க.
எங்க… கோடிஸ்வரன் நிகழ்ச்சில கலந்து கோடிய வாங்கிபுடுவேன்னு உங்களுக் கெல்லாம் பொறாமை…?.ன்னு நான் தனியா பொலம்பிக்கொண்டே நடந்தேன்…
இவரு இப்படி தான் நீ கண்டுக்காத தம்பின்னு என் மனைவி மைத்துனர் இடம் சொல்ல…
எப்படிக்கா….துபாயில வச்சு சமாளிக்கிறே… தாங்க முடியலேயே…ன்னு வந்து ரெண்டே நாள்ல புரிஞ்சுக்கிட்டான்…
கூட்டு சேர்ந்துட்டாங்கடா…இனி ஞாக்கிரதையா இருக்கனும்…!

கேள்வி எண்.1. தென்னமரம் என்ன மரம்…?
கேள்வி எண்.2.பினாங்கின் மற்றொரு பெயர் என்ன…?
எழுதி வைச்சுகிட்டேன்… பதிலை கண்டுபிடிச்சுடுவேனில்ல…!

Friday, July 31, 2009

மனம் கவர்ந்த மலேசியா...8

(தென்னைமரத்தைப்பற்றிய விடைக் கிடைக்காமல் சிறுகதை எழுத்தாளர் திருச்சிசையது டெலிபோன் செய்து கேட்டார்… தொடர்ந்து தொடரைப்படித்து வருவதினால் அவருக்குள் பெரிய ஆர்வம்…ம்…கூம் நான் சொல்லலைய்யே… பதிவுல படிங்கன்னு சந்தோசமா சொன்னேன்… என் பிரியாணிய சாப்பிட்டுவிட்டு முப்பத்திமூன்று முறை நல்லா இருக்குன்னு சொன்ன முனைவர் அவருதான்…அதனால நான் சொல்லிருப்பேன்னு நீங்க நினைச்சுட வேண்டாம்…)
மலேசியாவின் அழகே தனி அழகு…எங்குபார்த்தாலும் பசுமைப் புரட்சி…மிதமான சில இடங்களில் கொஞ்சம் அதிகமான வெப்பம்…வெப்பம் அதிகரித்தால் உடனே மழை…பஸ்சில் போகும் போதே வெப்பத்தையும் மழையையும் பார்த்தோம்…பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு இது சொர்க்க பூமியா தெரிகிறது…எல்லோரும் பஸ்சுல தூங்கினாங்க எனக்கு தூக்கம் வரல

பஸ் பினாங்கை நோக்கி பாய்ந்தது…சரியா சொன்னமாதிரி மாலை ஆறு மணிக்கெல்லாம் பினாங்கு பாலம் வந்தது…இந்த பாலம் “பட்டவர்த்” என்ற இடத்தையும் “பினாங்கு” ஐலாண்டையும் இணைக்க கூடியது. இது 16 கீமீ நீளம் கொண்டது…
இந்த பாலம் இருந்தாலும் இதைக் கட்டுவதற்கு முன் ப்பேரியில் தான் இக்கரைக்கும் அக்கரைக்கும் போக்குவரத்து நடைப்பெற்றது…ஆனால் அது தொடர்ந்து இன்று வரையிலும் நடந்துக் கொண்டு வருகிறது…பேரியில் கார் மோட்டார் சைக்கிள் சைக்கிள் இப்படி அனைத்தும் பயணம் செய்வதற்கு ஏதுவாக வசதிகள் செய்திருக்கிறார்கள்…30 நிமிடங்களில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு சென்றடைகிறது…மாலை நேரத்தில் பாலம் டிராபிக்னால் தினரும் அந்த சமயங்களில் பலர் ப்பேரியில் பயணம் செய்கிறார்கள்…
மலேசியாவை பொருத்தவரையில் அதிகமான டுவல்கேட் இருக்கிறது…காசை கறந்து விடுகிறார்கள்…காசு கொடுத்தாலும் ரோடு ரொம்ப சூப்பருங்க…நல்ல முறையில கொடுக்கின்ற காசுக்கு வேலை பார்க்கிறார்கள்…(லஞ்சமும் இருக்கு)
பினாங்கு பஸ்டாண்டில் இறங்குவதற்கு முன்னாடியே எனது மைத்துனர் பஸ்சைவிட்டு இறங்கி வெளியில் வரவேண்டாம் டெக்ஸிகாரர்கள் தொல்லை அதிகம் இருக்கும் என்று சிக்னல் கொடுத்தாரு…அதனால பஸ்சை விட்டு இறங்கி அங்கேயே நின்றுக் கொண்டிருந்தோம்…15 நிமிடங்களுக்குள் சென்னை எக்மோர் ஆட்டோகாரர்களை ஞாபகம் படுத்திட்டாங்க பினாங்கு டெக்ஸி ஒட்டுனர்கள்…
ஒரு வழியா அவர்களை சமாளித்தேன். என் மைத்துனர் குடும்பத்தோடு அழைக்க வந்தார். காரில் ஏறி வீடு வந்தோம்…என் மைத்துனரின் மாமனார் வீட்டில்தான் நாங்க தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…(பலே பார்ட்டிங்க…)
இதுவும் ஸ்டார் ஹோட்டல் மாதிரிதான்…முன்னாடியே சொன்னேன்ல..என் மனசுல அவங்க சூப்பர்ஸ்டார் மாதிரின்னு…(ரொம்ப சாம்ராணி போடாதடா…அப்டிங்கிறீங்களா..?)
14 மாடிக் கட்டிடம்…இவங்க பிளாட் 6வது மாடி…கீழே நீச்சல்குளம்…என்பிள்ளைகளுக்கு அதைப்பார்த்ததும்…ஐய்ய்யா…சந்தோசம் தாங்கல…அப்படியே அவங்க வாயை பொத்திட்டேன்ல…ஏற்கனவே சிங்கப்பூர்ல பட்டது போதும்டா சாமி…!...(இன்னும் வேக்குதே)
எங்களை வீட்டில் விட்டுவிட்டு அவர்கடைக்கு புறப்பட்டார்…இருப்பா நானும் வரேன்னு கூடவே கிளம்பினேன்.ஒய்வு எடுங்களேன்…நாளைக்கு வெளியில போகலாம்ன்னார்…பஸ்சுல ஒய்வாதான் வந்தேன்…எந்த கலைப்பும் தெரியலைன்னு…கொடுத்ததை வாங்கி குடிச்சுட்டு மைத்துனருடன் புறப்பட்டேன்.


“லிட்டில் இந்தியா”-இது இந்தியர்களுக்கான மார்க்கெட் இங்குதான் மைத்துனரின் மாமனாரின் அப்துல்சலாம் மசாலக்கடை இருக்கிறது…சில்லறை வியாபாரமும் மொத்தவியாபாரமும் சுமார் 30 வருடத்திற்கு மேல் செய்து வருகிறார்கள்…இவங்க இந்த மார்க்கெட்டில் நல்ல பெயருடன் வியாபாரம் செய்துவருகிறார்கள்…
மந்திரி பார்வையிடுவது போல நானும் அப்படியே பார்வையிட்டேன்…
சாமான்களையெல்லாம் வேனில் ஏற்றிக் கொண்டு உணவகங்களுக்கு டெலிவரிசெய்ய புறப்பட்டார்… என்னை கடையில் இருக்கும் படி கூறினார்… இல்ல நானும் வாரேன்னு அவர் கூடவே புறப்பட்டேன்…
போறவழியில் பினாங்கின் டிராப்பிக்கை பற்றியும் அங்குள்ள போலீஸ்காரர்களை பற்றியும் (கிட்டதட்ட நம்ம ஊர் போலீஸ்மாதிரி தான்) சொன்னாரு…எல்லாத்துக்கும் ஊம் போட்டேன்…ஆமா…அந்த தென்னமரம் என்ன மரம்ப்பான்னு கேட்டேன்…
சிரித்தார்…ஏன் தென்னமரம் பின்னாடியே நிக்கிறீங்க…?ன்னாரு…
தென்னமரம் மாதிரி இருக்கு ஆனா அது தென்னமரம் இல்ல..அது என்ன மரம் ன்னு தெரிஞ்சுக்கலாம்னு ஆர்வம் தான்…
“மச்சான் போனமாசம் சின்னப்பா பையன் வந்தான் அதுக்கும் முன்னால மாமா மகன் வந்தான்…இப்படி அடிக்கடி யாராவது வந்துபோறாங்க ஆனால் வருவாங்க சுத்தி பார்ப்பாங்க கிளம்பிடுவாங்க…இப்படி கேள்வி கேட்கமாட்டாங்க”…ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார்…
“டேய் அவனா நீ…தென்னமரம் மாதிரி இருக்கே அது என்னமரம்னு கேட்டது தப்பா…? நீயும் என்ன மாதிரிதானா”…? (அந்த புள்ளக்கிட்ட மாட்டிக்கிட்டு என்னப் பாடுபடுறியோ…பதிலைவச்சே கண்டு புடுச்சிடுவோம்ல).
“ஏம்ப்பா…நீ மலேசியா சிட்டிசன் தானே”…?ன்னேன்…
“அதுல என்ன சந்தேகம”;…?


லிட்டில் இந்தியா மார்க்கெட்


இல்ல ஒருதென்னமரத்தை பத்திக் கேட்டா பதில் சொல்லத் தெரியலைய்யே…ன்னே..?
நீங்க போறத்துக்குள்ள யாரிடமாவது விசாரித்து சொல்லிடுகிறேன்…?அதை விடுங்கன்னு…அப்படியே விட்டுட்டு வேற டாப்பிக் பேசிக்கொண்டே வேளைகளை முடித்துவிட்டு வீடு வந்தோம்…
பினாங்கில் பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன இருக்கிறது…எங்கு எப்படி எப்போது போவது என்று பெரிய திட்டமே தயார் ஆனது…10 நாட்கள் பத்தாது…குறைஞ்சது 1மாதமாவது தங்கி எல்லாவற்றையும் பார்க்கனும் …இல்லைன்னா அவசரம் அவசரமா பார்த்துட்டு அரக்குறைய போகிற மாதிரி இருக்கும்ன்னு அட்வைஸ் பண்ணினார்…
இங்கப்பாரு 10 நாள்ல என்ன பார்க்கனுமோ இதை ஒழுங்கா பார்த்தா போதுமன்னு சொன்னேன்…
சரி நாளைக்கி எங்கே போறோம்னு கேட்டேன்…
பினாங்கு ஹில் போறோம்னு சொன்னார் … அதனால… நாளை பினாங்கு ஹில்லில் சந்திப்போம்…!
தென்னமரம் என்ன மரம்ன்னு எப்படியாவது விசாரிச்சுடுறேன்…!

Tuesday, July 28, 2009

மனம் கவர்ந்த மலேசியா....7

காலை நான்குமணிக்கே விழித்துக் கொண்டேன்…6.45 மணிக்கெல்லாம் பஸ்டாண்டு வந்திட்டோம்…பஸ்சும் ரெடியாக நின்றுக் கொண்டிருந்தது…சாமான்களை உரிய இடத்தில் வைத்துவிட்டு பஸ்சினுல் ஏறி அமர்ந்தேன்…
என்கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை… எனக்கு ஒரு சந்தேகம்… நாம எமிரெட்ஸ் பிளைட்டில் பஸ்ட்கிளாஸ் டிக்கேட் ஏதும் புக்பண்ணிட்டோமா…இது பஸ்சுதானா…? அல்லது பிளைட்டா…? பிளைட்டில் கூட இவ்வளவு பெரிய வசதி இருக்காதே…ன்னு தோனிச்சு…
பில்டப் ஏதும் நான் போடலைங்க…ஏதோ பஸ் ஒனரு என்னை ஒசியில அழைச்சுட்டு போறேன் உன் பிளாக்குல என்னைப்பற்றி ஒகோன்னு எழுதுன்னு சொன்னா மாதிரில பாக்குறீங்க…

அந்த பஸ்சுல மொத்த இருக்கையே 18 தாங்க… ஒவ்வொரு சீட்டுக்கும் இடைவெளி அதிகம் இருக்கைகள் அனைத்தும் எலக்ட்ரானிக் சிஸ்டம் … இதுல ஒவ்வொரு இருக்கையிலும் டிவிவேற…அதுல தமிழ் படம் பாடல்கள் கேம் இப்படி பல பொழுதுபொக்கு விளையாட்டுகள்…இந்தமாதிரி வசதிய பார்த்ததும் அட நாம கொடுக்குற காசு கொஞ்சமுன்னு மனசுல பட்டுச்சு… துபாயில இப்படியொரு பஸ்சை நான் பாக்கல…இந்த பெருமை சிங்கைக்கும் மலேசியாவுக்கும் மட்டும் தான்…
சொன்னபடி சரியா 7.30 மணிக்கு பஸ்புறப்பட்டுச்சு… சிங்கையிலிருந்து விடைபெறுவதற்கு முன்னால ஒருசில வார்த்தைகள்…

சிங்கை
என்சிந்தைக்கு
விருந்தளித்த
மங்கை…

தூய்மை உன்னிடம்
தாய்மையாய்
கண்டேன்…

உன்னைப் போல்தான்
உன் மக்களும்
தூய்மையானவர்கள்…

தமிழ் மீது
நீ கொண்டிருக்கும் பாசம்
தமையனாய் என்னை
எண்ணவைத்தது…

அவர்களிடம்
பலமத நம்பிக்கையிருந்தாலும்
உன்னைப் பற்றிய
அவநம்பிக்கை இல்லை…

மதங்களைக் காரணம் காண்பித்து
தங்களுக்குள்
மதம்பிடித்துக் கொள்ளவில்லை…

இனம் வேறுபட்டாலும்
மனம் அவர்களிடம்
ஒன்றுதான்
சிங்கைவாசிகள்
சித்திர மனிதர்கள்
சல்யூட்
சிங்கப்பூர்…!

பஸ் புறப்பட்டு சென்றுக் கொண்டிருக்கிறது…ஒரு மணிநேரத்தில் மலேசியா பார்டர்ரான ஜொஹர்பார் வந்தது…
அனைவரும் இறங்கி சிங்கை இமிக்கிரேசனில் எக்ஸிட் பண்ணினோம்… அப்போது சின்ன சிக்கல் எனக்கு ஏற்பட்டது…
சிங்கைக்கு நான் வந்தபோது விமான நிலைய இமிக்கிரேசனில் 30 நாட்கள் தங்குவதற்கு அனுமதித்து ஒரு வெள்ளை அட்டையில் ஸ்டாம் பண்ணி கொடுத்தாங்க…அதை நான் அலட்சியமாய் பாஸ்போர்ட்டுடன் வைக்காமல் அது தேவையில்லையென ஏதோ ஒரு பேக்கில் வைத்துவிட்டேன்…இப்போது எக்ஸ்ஸிடில் அதை கேட்டார்கள்…
அது பேக்கில் உள்ளது… பேக் பஸ்சில் உள்ளது என்றதும்… அந்த வெள்ளை அட்டை மிக அவசியம் நீங்கள் சிங்கப்பூரில் வெளியில் செல்லும் போது அதை வைத்திருக்க வேண்டும்…யாரும் சோதனைகள் செய்தால் அந்த அட்டையை காண்பித்தால் போதும்… அது உங்களின் அடையாள அட்டைஎன்று இமிக்கிரேசன் அதிகாரி கூற நான் பேந்த பேந்த முழிக்க…எங்க டேடி எப்பவும் இப்படித்தான்னு என்மகள் கருத்துச் சொல்ல…சில வினாடிகளில் டென்சனாகி அதிகாரியிடம் எஸ்க்கியூஸ் கேட்டு நான் மட்டும் பஸ்சுக்கு போய் பேக்கை எல்லாம் திறந்து கண்டுபிடிச்சதும் தான்…அப்பாடா..ன்னு பெருமூச்சு விட்டேன்…
அதிகாரி அந்த அட்டையை பெற்றபின்தான் எக்ஸிட் ஸ்டாம்பே குத்தினாரு…அசடுவலிய அவரைப்பார்த்து நன்றி சொன்னதும்…அவரு என்ன ஒருமாதிரியா பார்த்தாரு…அந்த பார்வையில இப்படி வெண்ணையா மலேசியாவுலேயும் இருக்காதேன்னு சொல்றாமாதிரி இருந்துச்சு…

இது முடிச்சதும் அடுத்த 10 நிமிடத்தில் மலேசியா எல்லை வந்தது… அங்கே இமிக்கிரேசனில் 30 தினங்கள் தங்குவதற்கு விசா கொடுத்தார்கள்… சிங்கையில் கொடுத்த அதேபோல அட்டையும் தந்தார்கள்…இந்தமுறை ரொம்ப கவனமாக இருக்கனும்னு யோசிப்பதற்குள்ளயே என் மனைவி என்னிடமிருந்து எல்லாத்தையும் வாங்கிட்டாங்க… என்ன…உங்கள யெல்லாம் இவ்வளவு தூரம் பத்திரமா அழைச்சுகிட்டு வந்திருக்கேன் இதை பத்திரமா என்னால வெச்சுக்க முடியாதான்னு கேட்டேன்…உடனே பதில் வந்துச்சு… வெச்சிகிட்ட லெட்சணத்தை தான் பாத்தோமேன்னு…

மீண்டும் பஸ்புறப்பட்டது பொற வழியில் காலை சிற்றுண்டி கழிக்க ஒரு ஹோட்டலில் பஸ்சை நிறுத்தினார்கள்… என்ன சாப்பிடுவதுன்னு ஒரே குழப்பம் எல்லாமே சீன மலாய் உணவுதான்…
ஒருகடையில் முட்டை வைத்திருந்தார்கள் அதைபார்த்ததும் எனக்குள் சந்தோசம்…முட்டைசேண்டுவீச் சாப்பிடலாம்னு கைசாடை காண்பித்து ஒரு முட்டை சேண்டுவீச்சும் பக்கத்தில் வைத்திருந்த பர்கரை காண்பித்து ஒரு பர்கரும் கொடுங்கன்னே…
உட்கார சொன்னாங்க…5 நிமிசத்துல ரெண்டு சாண்டுவீச் மொத்தமா கொடுத்தாங்க… இவ்வளவு பெரிசா இருக்கே…முட்டை சின்னதாக தானே இருந்துச்சுன்னு பிரிச்சு பார்த்தா …முட்டையும் பர்கரும் ஒரே பண்னில் வைத்து சேண்டுவீச் பண்ணிருக்காங்க…
என்பிள்ளைகள் அதைப் பார்த்ததுமே வேண்டாம்னு சொல்லிட்டாங்க…என் மனைவிக்கு கொடுத்தேன்…ம்…ஒரு சேண்டுவீச் ஒழுங்கா ஆர்டர் பண்ணத் தெரியுதான்னூங்க… ஹி…ஹி…உன்னை கல்யாணம் பண்ணுவதற்கு முன்னடி ஒழுங்காத்தான் ஆர்டர் பண்ணுனே…இப்போ கொஞ்சநாளா இப்படி ஆயிட்டேன்னு சொல்லலாம்னு நினைச்சேன்…அப்புறம் இன்பசுற்றுலா துன்பசுற்றுலாவா மாறிடோம்னு சொல்லல…

மீண்டும் பஸ் புறப்பட்டது…தசவதாரம் படம் பஸ்சுல பார்த்தேன்…என் பிள்ளைகள் கேம் விளையாடினாங்க…பகல் 12.45க்கு கோலாலம்பூர் வந்தது… சிலர் இறங்கினங்க சிலர் ஏறினார்கள் … 10 நிமிடத்திலேயே பஸ்புறப்பட்டது…


ஹைவே இருபக்கமும் தென்னைமரம்போல நிறைய்ய மரங்கள்…அந்த தென்னை மரத்தில் கொடிகள் பின்னி இருந்தது… தேங்காயோ அல்லது குடும்பையோ அந்த மரங்களில் இல்லை…
“என்னங்க தென்னைமரம் இப்படி இருக்குன்னு” மனைவிகேட்டாங்க…
“இதுவா மலேசியா தென்னை மரமெல்லாம் இப்படிதான் இருக்கும்னு” பதில் சொன்னேன்…
“தேங்காய காணுமே”ன்னு கேட்டாங்க…
“இது என்ன கேள்வி…? வேர்பலா மாதிரி வேர்ல தேங்கா மொலைக்கலாம்…இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்ன சங்கடப்படுத்தக் கூடாது”ன்னு சமாளித்தேன்…
“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்ல வேண்டியது தானே…அதுக்கு ஏன் இப்படி”ன்னாங்க…
நான் விடுவேனா…என் மைத்துனருக்கு போன் போட்டேன்…
ஏம்ப்பா…வழிநெடுவுலயும் தென்னமரம் மாதிரி இருக்கே அது என்ன மரம்ப்பான்னு கேட்டேன்…
பினாங்குதானே வந்துகிட்டு இருக்கீங்க…அதுக்குள்ள என்ன அவசரம்…? சந்தேகத்தெல்லாம் தாள்ல எழுதிவச்சுக்குங்க வந்ததும் சொல்றேன்னு போனை கட்பண்ணிட்டார்(ன்)…
அடப்பாவி நான் என்ன ஐயேஎஸ் பரிச்சை எழுதுறத்துக்கா சந்தேகம் கேட்டேன்…இப்படி பதில் சொல்றானே…ன்னு என்மனைவியை பாத்தேன்…
அந்த பார்வையை புரிஞ்சுக்கிட்டு நீங்க நினைக்கிற மாதிரி எங்க குடும்பம் ஒன்னும் இல்ல…
அதெப்படி மனசுல உள்ளத அப்படியே சொல்லி….டா…பொம்பளைங்களே இப்படித்தான் … மனசுல உள்ளத ஈஸியா புரிஞ்சுக்குவாங்க ஆனா புரியாத மாதிரி நடிப்பாங்க…!(இதுக்கு மேல சொன்னா...உருட்டுக்கட்டை நிச்சம்)

அது போகட்டும்… தென்னமரம் என்னமரம்…?

நாளைக்கு விடை கிடைச்சுடுங்க…

Monday, July 27, 2009

மனம் கவர்ந்த மலேசியா...6

சந்தோசா ஐலாண்டிற்கு உள்ளே செல்வதற்கு இரண்டு வழிகள்…
1. கேபிள் கார் வழியாக செல்லலாம்
2. பிரிஜ் (பாலம்) வழியாகவும் செல்லலாம்
புதிதாக வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கேபிள் கார் வழியாக போவதற்கு மிகவும் ஆர்வம் கொள்வார்கள்… கேபிள் காரில் மட்டும் செல்வதற்கு ஒரு நபருக்கு 19 சிங்கை டாலர்… ( துபாய் கிரிக் பார்க்கில் உள்ள கேபிள் காருக்கு ஒரு நபருக்கு 25 திரஹம் ) குழந்தைகளுக்கு 15 டாலர்…குழந்தைகள் இந்த கேபிள் காரில் போனாங்கன்னா…நல்லா ஜாலியா சந்தோசப்படுவாங்க…
பிரிஜ் வழியா உள்ள வருவதற்கு சந்தோசா நிறுவனம் தனியாக இலவசமாக பஸ் வசதி செய்திருக்கிறார்கள்…அதுமட்டுமல்ல இரயில் வசதியும் உண்டு…
தங்களின் சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு 2 டாலர் நூழைவுக் கட்டணம் செலுத்தவேண்டும்…
அதை சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் முழுசா வேணும்…ஞாயிற்றுகிழமைப் போனால்தான் ஒரளவு கூட்டத்தைப்பார்க்கலாம்…

அங்கேயே பீச்சும் இருக்கிறது…குளிக்கின்ற மாதிரி ஏற்பாட்டுடன் சென்றால் இன்னும் ஜாலியா இருக்கும் ( குளிக்கின்றவர்களுக்கு மட்டும்தாங்க பயப்புடவேண்டாம் )…

எங்க உறவினர்கள் ஒருபட்டாளம் காரில் வந்தங்க…நாங்க கேபில் கார்லபோனோம்…இந்த இடத்துல மலேசியா லங்காவி கேபில் காரை கம்பேர் பண்ணும்போது இது ஒன்றும் பெரிசா தெரியலை…மலேசியா போகாமல் சிங்கையை மட்டும் சுற்றி பார்க்க வந்தவங்களுக்கு இந்த கேபில்kaர் ஒகேங்க…
நாங்க போனநேரம் வானிலை நல்ல சூடுங்க…சூடா இருக்குன்னுதான் பீச்சுல குளிச்சேன்…இல்லென்னா…வேணாங்க ரகசியத்தையெல்லாம் சொல்லப்படாது

குளிச்சுட்டு சாப்பிட ரெடியானோம்…நல்லபசி…இவ்வளவு கூட்டத்துக்கும் ஹோட்டல்ல வாங்கினா கொண்டுவந்த காசு காலியாகிடும்னு…சூப்பர் பிரியாணி ரெடி பண்ணிருந்தாங்க…பெரிய பண்டாரி ஆக்கினது…அவர் ரொம்பபேமஸானஆளுன்னாங்க…பேருக்கூடஏதோ சொன்னாங்க…ம்…ஞாபகம் வந்திடுச்சிஇஸ்மத்...ன்னாங்க…என்ன அப்படிபாக்குறீங்க…சாச்சாத்…நானேதான்…
(நம்ம கீழைராஸா சாப்பிட்டுட்டு நாளுநாளா படுக்கையை விட்டு எழுந்திருக்கலேண்ணா பார்த்துக்கோங்க…அவ்வளவு மோசமான்னு கேக்கிறீங்களா… சாப்பிட்டா நான் சமைச்ச பிரியாணிதான் சாப்பிடுவேன் இல்லைன்னா எனக்கு சாப்பாடே வேணான்னுட்டார்…)
சுhப்பாட்டு வேலை முடிஞ்சுது…மீண்டும் சுற்ற ஆரம்பித்தோம்…அங்கு நிறைய்ய நிகழ்ச்சிகள் செய்யிறாங்க…அதெல்லாம் மாலை நேரத்துல…
கிளிசைக்கிள் ஒட்டுகிறது…பிஸ் அக்குவாரியம்…இது துபாயில் அட்லாண்டிக் ஹோட்டல்ல உள்ள அக்குவாரியத்தை விட சின்னதுதான் ஆனால் துபாய்க்கு முன்னால் இவங்கதான் முதலில் அதை பிரகடணம் படுத்திருக்காங்க…


சந்தோசாவுல பெரிய சிங்கம் இருக்கு…அதன் உள்ளே போவதற்கு 18 டாலர் வாங்குறாங்க…இது கொஞ்சம் கொல்லையடிக்கிற மாதிரி தெரியுதுங்க…லிப்டில் ஏறிபார்ப்பதற்கு இவ்வளவு காசு கொடுக்க கொஞ்சம் கஸ்டமாதான் இருந்துச்சு…

இதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றப்ப…எனது மைத்துனர் போன்போட்டு மலேசியாவுக்கு உடனே கிளம்ப உத்தரவு போட்டாரு…
நாளைகிளம்பலாம்னு யோசனை பண்ணினேன்…

உறவுக்காரங்ககிட்டே கேட்டேன் பஸ்ல போகலாமா…அல்லது இரயிலில் போகலாமா…?ன்னு…
நீங்க பினாங்கு போறதுனால…பஸ்ல போங்க…இரயிலில் போனால் காலையில 7.15க்கு புறப்பட்டு இரவு 9.45க்கு போய் சேரும்…அவ்ளோ பாஸ்ட்…அதனால பஸ்ல போவது சிறந்தது..ன்னு சான்றிதழ் கொடுத்தாங்க…


டிக்கேட் எப்போ எங்கே எடுப்பதுன்னு கேட்டேன்…சந்தோசா முடிச்சுட்டு நேரா பஸ்புக்கிங் செய்துடலாம்ன்னாங்க ( ஆள் காலியான சரிதான்ன்னு…ச்சீச்சீ அப்படில்லாம் இல்ல…அவங்க ரொம்ம்ம்ப நல்லவங்க)

சந்தோசா சுற்றின களைப்புடன் நேரா… சாப்பாட்டுகடைக்கு அழைச்சுகிட்டு போனாங்க…(இது தான் கடைசி சாப்பாடு…இதோட இவனை ஒழிச்சடனும்ன்னு) மீங்கோரி நியூடல்ஸ், நாசிகுவைத்தி ,நாசிலாமா…eப்படி பல பெயர்களில்…எல்லாமே கருவாட்டு வாடையுடன்…விடுவேனா…ஒருகட்டு கட்டினே…(பாவி பாவி…போறநேரத்திலேயும் இப்படி திங்கிறானேன்னு நினைச்சுறுப்பாங்க தானே…அவங்க நனெச்சாஎன்ன…வயத்துக்கு வஞ்சனை செய்யக்கூடாதில்ல)
சாப்பாட்டை முடிச்சுட்டு…பஸ்புக்கிங்…

சிங்கையிலிருந்து கோலலம்பூர் போவதற்கு நிறைய்ய பஸ் இருக்கு ஆனால் பினாங்கு போவதற்கு காலையில் 7.30 மணிக்கும் இரவு 10 மணிக்கும் மட்டும் தான் இருக்கு…
காலைபஸ்சுல புக் பண்ணினோம்…ஒரு நபருக்கு 55 டாலர்…இதையே ஜொஹ_ர்பாரில் எடுத்தால் மலேசியா ரிங்கிட் 55 தான்…சிங்கை டாலர் இரண்டரைமடங்கு மலேசியாவை விட அதிகம்.
பிள்ளை குட்டிகளுடன்…(குட்டின்னதும் வேறமாதிரி நினைச்சுட வேண்டாம்)
போறதுனால சிங்கையிலிருந்தே கிளம்பிடலாம் ஜொஹ_ர் வேண்டாம்ன்னு டிக்கேட் எடுத்திட்டேன்…
டிக்கேட் எடுக்கும் போது இரவு மணி 10…காலையில் 7.30க்கு பஸ்சுல இருக்கனும்…இல்லேன்னா…

220 டாலர் டா..டா…காண்பிச்சுட்டு போயிடும்…அதனால நான் தூங்க போறேன்…மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாம்…!

Friday, July 24, 2009

மனம் கவர்ந்த மலேசியா....5

சனி ஞாயிறு என்றாலே சிங்கை மக்களுக்கு கொண்டாட்டம் தான்…விடுமுறை நாள் அல்லவா…! குடும்பத்தோடு நண்பர்களோடு உறவினர்களோடு சந்தோசமா விடுமுறையை கழிக்கிறாங்க…
பல தமிழர்களைத் தவிர…
நம்ம ஆளுங்க நல்லாவேலைப் பார்ப்பாங்க நல்லா சாப்பிடுவாங்க நல்லாத் தூங்குவாங்க…விடுமுறைன்னா சினிமாவுக்கு போவாங்க…அவ்வளவு தான்…


வெளியில் சுற்றினால் சிலவாகுமேன்னு சிலர் குடும்பத்துக்கு கொடுக்கனும்னு தன்னுடைய சந்தோசத்தை சுருக்கிக்கிறாங்க…( நைனா…துபாய்லியும் அப்படித்தான் கீராங்க…ம்…தெரியும்… தெரியும் ) சொந்த தொழில் வைத்திருப்பவர்களும் ஞாயிருக் கூட சிலர் விடுமுறை விடுவதில்லை…
ஆனால் அங்கு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருப்பது சீனர்களும் மலாயர்களும் தான்…!
நாம மூன்று வேலை சாப்பிடுவதை அவர்கள் அதை ஐந்து வேலையாக சாப்பிடுகிறார்கள்… உண்பது அவர்களுக்கு ஒரு கலை…அதனால்தான் சிங்கையில் எங்குப் பார்த்தாலும் அதிகமான உணவகங்கள்…!
அவர்களை மூலமாக வைத்து தான் நம்மவர்கள் முதலீட்டுகிறார்கள்...

எனது தந்தையைப் பற்றி இந்த இடத்துல நான் சொல்லியாகனும்…
அவர் சிங்கப்பூர் பிரஜை…55 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்தவர்…

"காத்தோன்"- என்ற இடத்தில் 5அடிகடை வைத்திருந்தார்… 5அடி கடையென்றால் பில்டிங்கின் நடைபாதையில் 5அடிக்குள் செவிற்றில் ராக்கைகள் அடித்து அதில் பொருள்களை வைத்து சுமார் 45 ஆண்டுகள் அதில் வாழ்ந்தவர்…

ஏழு பிள்ளைகளுக்கு தந்தை… அதனால் அவர் எங்களுக்கு ஆலமரமாக இருந்து எங்களுக்கு நிழல் கொடுத்தவர்…இவருக்கு சிங்கையில் தெரிந்த இடம் மூன்று மட்டும் தான்.
ஏர்போர்ட்,இவர் தங்கியிருக்கும் வீடு,கடை எங்கும் செல்ல மாட்டார் உறவினர்கள் கூட இவரை வந்துதான் பார்ப்பார்கள்…
இறுதியாக சக்கரை நோயினால் காலில் புண் ஏற்பட்டு பக்கத்து கடைக்காரரகள்; இவரை வழுகட்டாயமாக அழைத்து போய் ஆஸ்பட்டலில் சேர்த்தார்கள்…டாக்டர்கள் அவர் காலை வெட்டி எடுக்கவேண்டும் என்று நாள் குறித்தார்கள்.

என் உறவினர்களின் தொலைபேசியின் செய்தியறிந்து பதற்றத்துடன் 2002-ல் சிங்கை சென்றேன்…அனாதையாக ஆஸ்பட்டலில் அவர் படுத்திருந்ததைப் பார்த்ததும்…அழுதேன்…இப்போது கூட என்னால் இந்த வாசகத்தை டைப் செய்யமுடியவில்லை…கண்ணீர் துளிகள் எழுத்துக்களை மறைக்கிறது.……………
எங்கள் குடும்பத்துக்காக இவரின் தியாகம் கொஞ்சமல்ல…ஏழு பிள்ளைகளுக்கும் தனித்தனி வீடு கட்டிகொடுத்தவர்…ஆனால் தன்னுடன் வேலைபார்ப்பவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு இவர் மழையின் சாரலில் சாக்கடைக்கும் அருகில்தான் இவரின் இரவு உறக்கம்…



என் தந்தை ஹாஜி ஜே.கமாலுதீன்

ஒரே இரவில் 45ஆண்டுகள் உணவளித்த அந்தக் கடையை காலி செய்த போது என் மனம் ரனமானது…எனக்கே இப்படி என்றால் அதில் வாழ்ந்த என் தந்தைக்கு எப்படி இருந்திருக்கும் பக்கத்து கடைக்காரர்களெல்லாம் அனுதாபத்தோடு பார்த்தார்கள். அந்த தருணத்தில் என் உறவினர் மச்சான் ஜெகபர் அலி நிஜாமுதீன் அண்ணன் அவர்களின் உதவி பெரிதாக இருந்தது…என்றும் மறக்க முடியாதது…
சிங்கப்பூர் வாழ்க்கையை பற்றி சிங்கை மினிஸ்டர் மாண்புமிகு நாதன் அவர்கள் எழுதிய நூலில் என்தந்தையின் புகைப்படத்தையும் கடையையும் பற்றி குறிப்பிட்டிருந்தார்…

கால் ஆப்ரேசன் செய்யாமல் அவரை ஊறுக்கு அழைத்துக் கொண்டு போய்…நாகையில் டாக்டர் அன்சாரி என்பவரிடம் காண்பித்து வெட்டவேண்டிய காலின் புண்ணை குணமாக்கி என் தந்தையை நடக்க வைத்தார்…டாக்டர் அன்சாரி அவர்களுக்கு இந்த நிமிடத்திலும் என் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்…

2004-ல் என் தந்தை காலமாகி விட்டார்…அப்போது வயது 67….45ஆண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் தன் குடும்பத்தாரோடு எத்தனை ஆண்டுகள் வாழ்திருப்பார்…இரண்டாண்டுக்கு ஒருமுறை தாயகம் செல்லும் அவர் அதிகபட்சம் 4 மாதங்கள் மட்டுமே தங்கிருப்பார்…என் தந்தையின் மரணத்திற்கு பின் தான் அவர் சேர்த்து வைத்திருந்த பலகோடி சொத்தின் மதிப்பு எனக்கு தெரிந்தது…குடும்பம் குடும்பம் என்றே தன் வாழ்க்கையை தானம் செய்தவர்…
என் தந்தையைப் போன்று இன்னும் பலரின் தந்தைகள் இப்படித்தான் சிங்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்…பொருளீட்டுகிறார்கள்.
இப்படி ஒயாமல் சம்பாதிப்பே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் மனஉலைச்சலையும் சக்கரைநோய்யையும் இரத்த அழுத்தத்தையும் கூடுவே
சம்பாதித்துக் கொள்கிறார்கள்…வாழ்க்கையை திட்டமிடுதல் என்பது பலருக்கு புரியாததாகவே இருந்துக் கொண்டிருக்கிறது…

விடுமுறை நாட்களில் வெளியில் செல்வது மன உலைச்சலை குறைக்கும்; நடைகிடைக்கும் அதனால் உடலும்,மனமும் சீர்பெறும்…இன்னும் நகைச்சுவை உணர்வுமிக்க நண்பர்களுடன் சென்றால் நம்மை மறந்து சிரித்து மகிழலாம்…

எனது இலக்கியநண்பர் துபாயில் பல ஆண்டுகளாக பணிபுரிகிறார். அவர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்பவர். வெளியில் எங்கும் செல்வதில்லை… இந்த வாரம் தான் என் இலக்கிய சகாக்களுடன் பூங்காவிற்கு அழைத்துச் சென்றோம்… மிகவும் சந்தோசப்பட்டார்…
நமக்கு அமையும் நண்பர்களை பொருத்து தான் நம் பழக்கமும்.
நல்ல பழக்கங்களுடைய நண்பர்களை நாம் அமைத்துக் கொள்வதை பொருத்தே நம் உடலுக்கும், உள்ளத்திற்கும்,ஆரோக்கியமும்,அமைதியும் நமக்கு கிடைக்கும்…

இது அறிவுரை அல்ல வாழ்க்கையின் எதார்த்தம்…என்று நீங்கள் எடுத்துக் கொண்டால்…………இந்தப் பகுதியும் சுற்றுலாதான்…!

சிந்திப்போம்… மீண்டும் சந்திப்போம்…!

Thursday, July 23, 2009

மனம் கவர்ந்த மலேசியா...4

சனிக்கிழமை விடிந்து விட்டது…இன்று மாலையில் தானே திருமணம்…காலையில் எங்கே போகலம்னு…யோசனை செய்துக்கிட்டு இருக்கின்றப்ப…
“நாங்க ஷாப்பிங் போறோம்…. நீங்களும் வறீகளா சாயங்காலம் போற கல்யாணத்துக்காக ரெஸ்ட் எடுக்கப் போறீங்களா”…ன்னு என்மனைவியார் கேட்டாங்க…
“ரெஸ்டா…அதுக்கா இவ்வளவு சிலவு பண்ணி வந்தோம்…நானும் வாரேன்…ன்னு கிளம்பினேன்”…அந்த சமயத்துல என்மச்சான் (தாய் மாமன் மகன்) டெலிபோன் செய்தான்…
“என்ன மச்சான்…சொல்லு” ன்னே…
“இன்னைக்கு ராத்திரி சிங்கப்பூர் ஏகத்துவ மெஞ்ஞானசபையிலேந்து உன்னை சீப்கெஸ்டா அழைச்சிருக்காங்க…அதனால எங்கயும் போகாத 5 மணிக்கெல்லாம் உன்னை அழைக்க வருவேன”…னு சொன்னா…எனக்கு பகீர்ன்னது…
உடனே நான்… “மச்சான் கல்யாண நிகழ்ச்சி இருக்கேடா”…ன்னு சொன்னேன்…
“கல்யாணத்துக்கு தானே…நம்ப பொம்பளைங்கள போக சொல்லிட்டு நாம சபை நிகழ்ச்சிக்கு போய்டுவோம்”;…ன்னா…
“எது…பொம்பளைங்களை மட்டும் அனுப்புறதா…? நல்லா கதைய கெடுத்த…
நான் போகாட்டி நல்லா இருக்கும்மா… ( என்னமோ…கல்யாணமே நின்னுபோறா மாதிரி…) ச்சேச்சே..அங்க போய்ட்டு பின்னே எங்கே வேண்டுமானாலும் கூப்பிடு வர்றேன்…ன்னே”…( கண்ணுல பிரியாணி தட்டை )
“இப்ப என்ன தான் செய்ய”…ன்னு கேட்டான்…
“நிகழ்ச்சிய எட்டு மணிக்கு வைக்கச் சொல்லு…( என்னம்மோ…பெரிய ஸ்டாருன்னு நெனப்பு ) கல்யாணத்துல தலைய காண்பிச்சுட்டு அங்கிருந்து கிளம்பிடுவோம்”…ன்னு சொன்னதும் ஒகே சொன்னான்…( அப்பா…இன்னைக்கு பிரியாணி இருக்கு…)

மார்கெட்டுக்கு புறப்பட்டோம்…தேகா…இது நமது தமிழர்களின் வியாபார சந்தை…புடவை எடுக்கலாம்னு புடவை கடைக்கு போனோம்… கலெக்ஷன் நிறைய்ய இருந்தது… துணியும் சாப்ட்டாக இருந்தது… துபாயை கம்பேர் பண்ணாம என்னால இருக்க முடியல… எதைப்பார்தாலும் துபாயில என்ன விலை இங்கு என்ன விலை இப்படி பார்த்து பார்த்து தான் ஒவ்வொன்றையும் வாங்கினோம்…
புடவைகளை பொருத்த மட்டில் துபாயை விட சிங்கப்பூரில் விலைக்குறைவு..
துணியும் தரமாக இருந்தது…
என் மனைவிக்காக வேண்டிய சாமான்களை வாங்கி முடிச்சாசு …கிளம்பலாமான்னு கேட்டாங்க…
“ம்… கிளம்பலாம்… ஒரு சம்பர்தாயத்துக்காவது… ஏங்க ஒரு சட்டை வாங்கிக்க ங்களேன்னு ஒரு வார்த்தை சொன்னியா…நீ… பொம்பளைங்களே இப்படித்தானா…?ன்னு தைரியமா கேட்டதும்…கொரா…முரான்னு ஒரு சட்டை எடுத்து கொடுத்தாங்க…ஹி…ஹி…தேங்ஸ்ங்க…ன்னு ஒரு கூல தேங்ஸ் சொல்லிட்டு கிளம்பினோம்… ( நல்ல வேளை என் மனைவி பக்கத்துல இல்ல… ஊருக்கு போயிருக்காங்க… அதனால தைரியமா எழுதலாம்…என்ன அப்படி பாக்குறீங்க நா…நான் பயப்புட மாட்டேன்…ம்…தெரியுமுல்ல)

மாலை 5 மணிக்கு கல்யாணத்துக்கு போவதற்கு தயாரானோம்

மாலை 5 மணிக்கு கல்யாணத்துக்கு போவதற்கு தயாரானோம்…

ஒரு பெரிய ஹால் புக் பண்ணிருந்தாங்க…நாங்க போய் சேருவதற்கு 6 மணி ஆச்சு…ஹாலுக்குள்ள போனதும் புதுமண தம்பதிகளை வாழ்த்தி சிலவரிகள் எழுதனும்னு சொன்னாங்க…அங்கு பழக்கமாம்…வருகிறவர்கள் தங்களுடைய்ய வாழ்த்துக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த நோட்புத்தகத்தில் எழுதுவார்களாம்…
என்னையும் எழுதச்சொன்ன போது அந்த புத்தகத்தை திருப்பி பார்த்தேன் அனைவரும் ஆங்கில வாசகங்களையே வாழ்த்துச் செய்திகளாய் எழுதியிருந்தங்க…நானும் வாழ்த்தி எழுதினேன்… ஹி….ஹி…தமிழ்ல எழுதினா…எங்கே…கிராமத்தான்னு நினைப்பாங்களோன்னு ஆங்கிலத்துல அப்படியே காப்பி அடிச்சு எழுதிட்டேன்…
என்னை வரவேற்க…பெரிய பட்டாளம் எல்லோரும் என் சொந்தங்கள்…( துபாயிலேந்து வந்திருக்கான்… மொய் பெரிசா வப்பான்னு நினைச்சுரப்பாங்க) நல்லா கவனிச்சாங்க…
வந்து சொந்தங்களை விசாரிப்பதற்கு முன்னாடியே 6.30 மணிக்கெல்லாம் சாப்பாட்டை வச்சிட்டாங்க…உட்காருப்பா… சாப்பிடுப்பான்னு என் மாமா உட்கார வச்சிட்டாரு…( இல்லன்னா… சாப்பிட்ருக்காத மாதிரி)
அந்த சமயத்துல மைக்கில் அலொண்ஸ் பண்ணாங்க…எங்கள் பாசத்திற்குரிய துபாயிலேந்து வந்திருக்கும் மச்சான் இஸ்மத்தை வெறித்தனமா வரவேற்கிறோம்னு… சொன்னதும் எல்லோரும் என்னைப் பார்க்க… நான் கண்டுக்காம பிரியாணி சாப்பிடுறதுல மும்பரமா இருந்தேன்…
பந்திக்கு முந்து படைக்கு பிந்துங்கற மாதிரி…வந்த வேலைய ஒழுங்கா கச்சிதமா முடிச்சேன்…
துபாய்லிருந்து போறவங்க தயவு செய்து மினரல் வாட்டர் பாட்டலை கையில் எடுத்து போங்க…அங்கு சோறு கிடைக்கும் குடிக்க தண்ணிகிடைக்காது…ஆமாங்க…அவங்க வைக்கிற தண்ணி எது தெரியுமா…? பேப்ஸி கொக்கோகோலா…இப்படி உள்ள தண்ணிதான் வைக்கிறாங்க…


ஏகத்துவ மெய்ஞ்ஞானசபைக்கு போவதற்கு தயாரானேன்…
எட்டு மணின்னு சொல்லி 8. 30 க்கு தான் போனோம்…அங்குள்ள சகோதரர்கள் பாசத்தோடு வரவேற்றார்கள்…தமிழகத்தில் பல ஊர்களை சார்ந்தவர்கள்…ஆன்மீகத்தில் உள்ள ஈடுபாட்டால் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்திருக்கிறார்கள்…எனது ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை வலைப்பூவை பாhர்த்தால் அதன் விபரங்கள் தெரிந்துக் கொள்ளலாம்…
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்புவதற்கு இரவு 11 மணிக்கு மேல் ஆகி விட்டது…
(ரொம்ப மொக்கையா இருக்கோ...)
நாளை ஞாயிறு சந்தோசா என்ற ஓரு ஐலாண்ட் போகப்போறோம்…

Wednesday, July 22, 2009

மனம் கவர்ந்த மலேசியா...3

நேற்று குளித்துவிட்டு உறங்குனதுல…காலையில் எழுவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கிச்சு…ராத்திரி உறங்கவுவதற்கு முன்னாடியே மனைவி சொன்னங்க….
“ரெண்டு நாள் சிங்கப்பூர் போதும்…மலேசியா போய்டுவோம்…தம்பி போன் போட்டுகிட்டே இருக்கான்னு”….
மலேசியாவில் உள்ள சொந்தம்
என் துணைவியாரின் சகோதரர் எனது பாசத்திற்குரிய மைத்துனர் (படிச்சாலும் படிப்பா(ன்)ர்) பினாங்கில் குடும்பத்துடன் வசிக்கிறார்…அவருடைய தூண்டுதலும் எங்க பயணத்துக்கு ஓரு காரணம்…கிளம்பும் போதே… ரெண்டுநாளுக்கு மேலே சிங்கையில் பார்க்க இடமில்லை…மலேசியாவுல தான் அதிகமான இடம் இருக்குன்னு சொல்லிட்டாரு…
சிங்கைக்கு புதன் இரவு வந்தோம்…வியாழன் -வெள்ளி-சனி (இது முக்கியமான நாள்) –ஞாயிரு…திங்கள் அன்று மலேசியா கிளம்பிடலாம்னு…கணக்கு போட்டு சொன்னேன்…
அத்தனை நாள் என்ன பண்ணப் போறோம்னு என் துணைவி கேட்டாங்க…

இன்று வெள்ளி என் சொந்தபந்தங்களை பார்ப்போம்…

சனி…இது முக்கியமான நாள்…மாலையில் ஒரு கல்யாண நிகழ்ச்சி இருக்கு அதற்கு அவசியம் போய் வரனும் ( சிங்கையின் கல்யாண சாப்பாட்டை மிஸ் பண்ணலாமா…?)
“இந்த கல்யாணத்துக்கு அவசியம் போய்தான் ஆகனும்மா”…ன்னு கேட்டாங்க…
“ஆமாண்டி செல்லம்…தேடிவர்ற பிரியாணிய வேண்டாம்னு சொல்ல யாரும் பிரியப்படுவாங்களா…வந்த இடத்துல வருகிற வாய்ப்பை …நழுவவிடக்கூடாதம்மா”…!
“ம்…உங்களயெல்லாம் திருத்தவே முடியாதுங்க”…!
“தேங்ஸ்…மேடம்”…!


ஞாயிறு….சந்தோசா போறோம்….
திங்கள்…பறவைகள் பூங்கா போறோம்….இரவு மலேசியா போய்விடலாம்னு..எனது ஐசக் நீயூட்டனின் திட்டத்தை சொன்னேன்…
“ம்…கும்…சரி..இப்போ எங்கேப் போறோம்”-ன்னாங்க.
“என் மாமா வீட்டுக்கு போய்ட்டு…அப்படியே..தொழுகையை முடிச்சுட்டு சாயங்காலமா…சிங்கம் வாய்லேந்து தண்ணி ஊத்துமே ( இப்படி சொன்னா தாங்க புரியும் நாங்கலெல்லாம் கிராமமுங்க ) அந்த இடத்துக்கு போறோம்னு”- கிளம்பினோம்…

தொழுகையை முடித்தேன்…மாமா தந்த மாமிச பிரியாணியை சுவைச்சேன்…சொன்னா மாதிரி கிளம்பிட்டேன்…

துரியான் பழம் நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா…? துபாயில கேரிபோர் சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்…விலை அதிகம்… பச்சைநிறத்தில் நம்ம ஊரு பழாபழம் மாதிரி இருக்கும் ஆனா சின்னதா இருக்கும்…
விளைச்சல் மலேசியா… ஜூன் மாதம் தான் அந்த பழத்தோட சீசன்.. நிறையக் கடையில கிலோ 5 டாலருக்கு விற்பனை செய்தாங்க…மலேசியாவுல இந்த பழத்தின் விலை குறைவாம்…இதை ஆர்வத்துடன் வாங்குவதற்கு மக்கள் கூட்டம்…
புதுசா சாப்பிடுகிற சிலருக்கு அதன் வாடை பிடிக்காது…சாப்பிட சாப்பி;ட தான் அதன் ருசி தெரியும்ன்னு சொன்னாங்க…
ஒரு பழத்தை வாங்கி என்குடும்பதாரிடம் கொடுத்தேன்…ம்கூம்…யாரும் சீண்டக்கூட இல்லை…விடுவேனா…நானே எல்லாத்தையும் சாப்பிட்டேன்…( அதுதான் எங்களுக்கு தெரியுமேன்னு சொல்றீங்களா)
இப்ப எதுக்கு இந்த பழத்தை பற்றி சொல்றேன்னா…இந்த பழத்துடைய வடிவத்தில் ஒரு பில்டிங் கட்டிருக்காங்க…பார்பதற்கு எவ்வளவு அழகு…!
துபாயில இல்லாத பில்டிங்கான்னு நீங்க சொல்றீங்க…ஆனா இது கொஞ்சம் வித்தியாசம்…!
எந்த அழகையும் ரசிக்கனுமுங்க…
இயற்கையின் அழகையும்…மனித அறிவு வெளிப்பாட்டின் அழகையும் ரசிக்கனுமுங்க… அந்த இறைவனைனுக்கு தாங்க நன்றி சொல்லனும்…!

சிங்கையில ஒரு இடத்துக்கு போகனுமுன்னா கஸ்டம் இல்ல…எம்ஆர்டி ( நமக்கு வரப்போற மெட்ரோ ரயில் மாதிரி) இரயில் எல்லா இடத்துக்கும் போகுது…இடத்துடைய்ய பேரை மட்டும் நாம் கேட்டு வெச்சுக்கனும்…துணை தேவையே இல்ல…யாருக்கும் சிரமம் கொடுக்காம சிங்கை வருகிறவர்கள் அவர்களாகவே சுற்றி பார்க்கலாம்…அவ்வளவு எளிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள்…

மாலை நேரத்தில் சிங்கப்பூரின் சிங்கத்தைகான…சிங்க குட்டிகளா நாங்கப்போனோம்…பார்க்க…பார்க்க…அழகா இருந்தது…நேரம் போனதே தெரியலை…என் உறவு காரங்ககிட்ட… “சிங்கத்தோட தலை மட்டும் சிங்கமா இருக்கு…உடம்பெல்லாம் மீன் மாதிரி இருக்கே…இதனுடைய கதை என்னன்னு”…கேட்டேன்…
உடனே என் மகள்… “டேடி…நான்தானே உங்ககிட்டே கேட்டேன்…நீங்க கேட்கிற மாதிரி கேக்கிறீங்க”…?
ஹி…ஹி…ஹி….விடமாட்டேங்கிறாங்கப்பா…

கல்யாணத்துல சந்திப்போமுங்கோ….