உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, February 1, 2011

ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 13
இது ஒரு பாலை அனுபவம்
1987 -லில் விற்பனைக்கு வந்த கற்பனைக் கதைகள் என்றொரு சிறுகதை தொகுப்பை துபையில் வெளியிட்டேன். இந்த நூல் தமிழகத்தின் பல ஊர்களைச் சார்ந்த நண்பர்களின் அறிமுகத்தை கொடுத்தது ஆனால் எனது ஊரைச் சார்ந்த சகோதரர் முஹம்மது சபீர்ருடைய அறிமுகமும் கிடைத்தது; இந்த அறிமுகம்தான் என்னை ஞானப் பாட்டைக்கு அழைத்துச் சென்றது.

புதிய கொள்கையில் தீவிரமாக இருந்த எனக்கு முஹம்மது சபீர் காட்டிய ஞானப்பாட்டை என்னை யோசிக்க வைத்தது.

நம்பிக்கை என்பது இரண்டு விதம் ஒன்று நன்னம்பிக்கை இரண்டாவது மூடநம்பிக்கை ஆனால் நாம் எந்த நம்பிக்கையில் இருக்கிறோம் என்பது அவரவர் அறிவுக்கே விட்டுவிடலாம் காரணம் இது எனது பாலைப் பயணம்.

எந்த நம்பிக்கையில் நான் இருந்தேன் என்ற வினா ஞானப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவுப்படுத்தியது.இந்த தெளிவுக்காக இரண்டு ஆண்டுகள் முழுமையாக சிலவு செய்திருக்கிறேன்.

ஏனெனில் என் மனப்பாட்டையில் நான் எதையெல்லாம் விளங்கி வைத்திருந்தனோ அதையெல்லாம் நானே அழிக்கவேண்டியதாகி விட்டது. கணக்கு தவறு என்றால் அழித்துதானே ஆகவேண்டும்.

படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு பலர் படைத்தவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.வணங்கிவிட்டால் போதும் கடமையை முடித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் நானுமிருந்தேன்.

இறைவன் எண்ணத்தில் இருக்கிறானா? அல்லது என்னிடமும் இருக்கிறானா(?) என்ற கேள்வி என்னைப்பற்றி நான் அறியும்போது எழுந்த சந்தேகங்கள். இறைவன் மேலானவன் என்பதற்காக ஆகாயத்தில் அமர்ந்திருப்பதாக பலரைப்போல் நானும் மேலேப் பார்த்த காலமும்முண்டு.

இறைவனின் அசலான பெயரை உச்சரிக்கும் பலர் இன்னும் கற்பனையாகத்தான் அவனை வைத்திருக்கிறார்கள்.அஸ்திவாரம் சரியாக இல்லாததினால்தான் இன்றும் பல அமைப்புகளாய் ஒன்றுமையில்லாமல் உலகளவில் சாந்தியாளனாக திகழவேண்டியவர்கள் தீவிரமாக வாழ்கிறார்கள்.

எதையுமே பயில்வதற்கு ஒருவர் வேண்டும் அந்த ஒருவர் குருவாக விளங்க வேண்டும் அந்த குருவிடம் தன்னைபடிக்க வேண்டும் தன்னைப்படிக்காமல் வேறு எதைப்படித்தாலும் அதில் சாந்தம் இருப்பதில்லை சாந்தமில்லா மனிதனிடம் மனிதம் நிலைப்பதில்லை.
ஞானம் என்பது கடல் அள்ள அள்ள வந்துக்கொண்டே இருக்கும் தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஏனெனில் மனிதன் ஒரு புதையல்.தன்னிடம் இருப்பதை விட்டுவிட்டு வெளியில் தேடுகிறான்.

அப்படி வெளியில் இருந்த என்னை உள்ளுக்குள் அழைத்த நண்பர் முஹம்மது சபீரை நான் எப்படி மறப்பேன்.இவர் படித்தவர் தன்னையும் இன்னும் படித்துக் கொண்டிருப்பவர் ஞானத்தையும் ஆனால் வங்கியின் மேலாளராக வளைகுடாவைச் சுற்றி பல நாடுகளில் பணிப்புரிந்தாலும் கனடா இவரை தனது பிரஜையாக்கி தற்போது அவர் அங்கே தொழிலதிபராக திகழப்போகின்றவர் அவருடைய வளமான வாழ்விற்கும் நிறைவான மனதிற்கும் வாழ்த்துக்கள்.

ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படி கிடைத்தவர்கள் அதைப்பயிலாமல் சென்றால் அவர்களின் வாழ்க்கையில் சாந்தி நிலைப்பதில்லை.

எதையும் புதிதாக கேள்விப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனம் அவ்வளவு எளிதில் வருவதில்லை.பல ஆராய்ச்சிகள் பலரிடம் அதைப்பற்றிய வாதங்கள் செய்து விதண்டாவாதங்களும் செய்வோம் அப்படித்தான் ஞானப்பாட்டையின் ஆரம்ப நாட்கள்.

நான் விளங்கி வைத்திருந்த வாதங்கள் தலைக்குனிந்தது மரத்தின் வேர்களைக் காணவேண்டுமானால் தோண்டித்தான் பார்க்கவேண்டும் மரத்திற்கு வேரே இல்லை என்பது மடமை அப்படித்தான் பல விசயங்களை தோண்டாமலேயே விதண்டா வாதம் செய்தேன்.
இதற்கெல்லாம் பதிலளித்தார் சபீரின் நண்பர் மதுக்கூர் முஹம்மது காலீது. (பின் நாட்களில் எனக்கும் நண்பரானவர்)

ஹவுஸ்பாய் பணியில் ஓய்வு நேரத்தில் முஹம்மது காலீது அலுவலகத்திற்கு சென்றுவிடுவேன்.அந்த சமயத்தில் அவரின் அலுவலகத்தில் அவர் மட்டுமே இருப்பார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக தினமும் எங்களின் வாதங்கள் தொடந்தது.
ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் இருவரும் வாதம் புரிந்துள்ளோம்.
ஞானப்பாட்டைக்கு கைகாட்டியவர் முஹம்மது சபீர் அதனுள் அழைத்துச் சென்றவர் முஹம்மது காலீது அவர்கள்.

இவர்கள் இருவரின் நட்பு இறைவன் எனக்களித்த கொடை.

அமீரகம் என்னை ஆளாக்குவது தொடர்வோம்…

Wednesday, January 26, 2011

நேரம் தவறினால் நேரமும் தவறிடும்


காலம் பொன்போன்றது என்பது பழமொழி ஆனால் அது வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய வழியும் கூட.பலருக்கும் நேரந்தவறியதினால் ஏற்பட்ட கஸ்டங்கள் நிறையவே இருக்கும்.
குறிப்பிட்ட நேரத்தில் செல்லாததால் வேலையை இழந்திருப்பார்கள் சிலர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாததால் உயிரும் போயிருக்கும்.

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நேரத்தை மதிக்காத காரணத்தினால் பலருக்கு தவறிபோயிருக்கிறது. இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் பதினைந்து தினங்கள் விடுமுறையில் தாயகம் செல்ல ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து ஏர்அரேபியா பட்ஜட்விமானத்தில் டிக்கேட் போட்டிருந்தேன். இரவு 10.45 க்கு விமானம் புறப்படும் நேரம். பயணிகள் மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இருக்கவேண்டும் என்பது விதிமுறை.

நான் துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு செல்வதற்கு எனது மைத்துனரிடம் ஏழு மணிக்கு வரச் சொல்லியிருந்தேன். அவர் ரென்ட்டிய காரில்(Rent a car) பணிப்புரிவதால் அவரிடம் எப்போதும் கார் கைவசம் இருந்துக் கொண்டிருக்கும்.

அன்று காலையிலிருந்து மிதமான மழை பெய்துக் கொண்டிருந்தது.மதியம் ஒரு மணிக்கெல்லாம் பணியிலிருந்து அறைக்கு வந்தும் விட்டேன்.மழை நின்றபாடில்லை மாலை ஐந்து மணிக்கு எனது மைத்துனருக்கு டெலிபோன் செய்து ஆறுமணிக்கெல்லாம் நீ வந்துவிடு என்றேன்.

தற்போது கையில் கார் இல்லை ஏழுமணிக்கு தான் கார் வரும் வந்ததும் வருகிறேன் என்றார்.நானும் சரி எப்படியும் ஏழு மணிக்கு வந்துவிடுவார் ஏழுக்கு புறப்பட்டாலும் எட்டு அல்லது ஒன்பது மணிக்குள் விமான நிலையம் சென்றுவிடலாம் புறப்படுவது 10.45க்குத்தானே என்று அலட்சியமாக இருந்தேன்.

மணி 6.45 ஆகிவிட்டது மைத்துனருக்கு டெலிபோன் செய்தேன். இன்னும் கார் வரவில்லை ஏதோ ஓரிடத்தில் டிராப்பிக்கில் மாட்டி இருக்கிறார் அதனால் காரை எதிர்பார்க்க வேண்டாம் என்றார். எனக்கு கோபம் வந்தது இதை முன்னாடியே நீ சொல்லி இருக்கலாமே என்று அவரிடம் நொந்துக் கொண்டு அவசரமாக டெக்ஸியை தேடினேன். அன்று மழை பெய்ததால் எல்லா டெக்ஸியும் பயணிகளுடன் சென்றது கிடைக்கவில்லை.

உடனே எனது பக்கத்திலுள்ள நண்பரிடம் தொடர்புக் கொண்டு அவருடைய காரை எடுத்துக் கொண்டு போக எனது மைத்துனரை அழைத்து நாங்கள் புறப்படுவதற்குள் மணி 7.35தை தாண்டி விட்டது.

துபாய் ஷார்ஜா பிரதான சாலையில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்க அதனால் பல கார்கள் அதில் சிக்கி ஸ்டார்ட் ஆகாமல் திணறிக் கொண்டிருந்தது. அதனால் டிராப்பிக் ஜாம் மாலை ஐந்து மணியிலிருந்து பல வழிச் சாலைகளும் அடைப்பட்டு ஆங்காங்கே கார்கள் பல மைல் தூரத்திற்கு நின்றுக் கொண்டிருந்தன.

நாங்களும் நெரிசலில் மாட்டி தவித்துக் கொண்டிருந்தோம். இன்ஜ் பை இன்ஜ்சாக கார் நகர்ந்தது. நேரம் கடந்துக் கொண்டிருக்க அந்தக் குளிரில் எனக்கு நன்றாக வேர்வை வேர்த்தது.
விமானத்தை பிடித்துவிடுவோமா என்ற சந்தேக கேள்வி என்னுள் எழுந்தது. இது பட்ஜெட் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றால் நம்முடைய பணம் திரும்ப கிடைக்காது இதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

ஒருவழியாக டிராப்பிக்கை கடந்து விமான நிலையத்தை அடைந்தபோது நேரம் 10.30மணி.சென்னை கவுண்டர் மூடப்பட்டிருந்தது அங்கயே உள்ள ஏர்அரேபியா அலுவலகத்திற்கு சென்றேன் கூட்டமாக இருந்தது என்னைப்போலவே பலரும் டிராப்பிக்கில் மாட்டி தாமதமாகத்தான் வந்துள்ளார்கள். சென்னை செல்லக்கூடியவர்கள் 15 நபர்கள் இருந்தோம்.
அதிகாரியிடம் பேசினோம் விமானம் புறப்பட இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கிறது அதனால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் சரியான நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் மழைப்பெய்வதால் இன்னும் ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

நொந்துபோய் அமர்ந்திருந்தோம் விமானத்தை விட்டது ஒருபுறம் என்றாலும் பணம் திரும்பக் கிடைக்காதே என்ற வருத்தம் மறுபுறம்.என்ன செய்வது என்று என்னையே நான் நொந்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏர்அரேபியா விமான அதிகாரி எங்களை அழைத்து உங்கள் அனைவருக்கும் இந்த மழையின் காரணமாக விமான டிக்கேட்டை மறுபடியும் பயணிக்கும் வாய்ப்பை கொடுக்கின்றோம் நாளை உங்கள் தொலைபேசிக்கு அழைப்பு வரும் உங்கள் பயணத்தேதியை உறுதி செய்துக் கொள்ளுங்கள் என்றார் தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போனதே என்று நிம்மதியுடன் மகிழ்சியாக வீட்டுக்கு புறப்பட்டோம்.

முப்பதாண்டு அனுபவத்தில் இது போன்ற நிகழ்வு இரண்டாவது முறையாக இரண்டு மாதங்களுக்கு முன் ஜெட்ஏர்வேஸ்சில் ஏற்பட்டது.

நானும் துணைவியாரும் அவசரவேலையாக சென்னைக்கு கிளம்பினோம் 11.30 மணி விமானத்திற்கு 10.30மணிக்கு ஜெட் விமான கவுண்டருக்கு வந்துவிட்டோம் ஆனால் கவுண்டர் குளோஸ் செய்துவிட்டோம் என்று கூறிவிட்டார்கள்.இது எங்களுடைய அலட்சியம் தான் காரணம் இம்முறை மழை இல்லை.

சரியானபடி நேரத்தை மதித்திருந்தால் நமது பயணமும் சரியானபடி நடந்திருக்கும் அலட்சியத்தினால் பயணமும் ரத்தாகிவிட்டது மன உலைச்சல் இரத்த அழுத்தம் தேவையில்லாத குழப்பம் இத்தோடு முடிந்துவிட்டதா

நம்மை அழைப்பதற்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் காத்துக்கிடக்க அவர்களுடைய நேரம் அவர்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனத்தின் வாடகை இப்படி சூழலையே இந்த நேரம் தவறுவதினால் மாற்றிவிடுகிறது.

இது பயணத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பொறுந்தும்.
கொடுத்த வாக்கையும் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தையும் சரியாக பின் பற்றவேண்டும்.

கண்டிப்பாக இந்த கட்டுரை எனக்கு நானே எழுதிக்கொண்டது.

Sunday, January 23, 2011

அரபு தமிழன்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39- தொடர்- 12

இது ஒரு பாலை அனுபவம்

பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்து சம்பவங்களை கோர்வைப்படுத்துவதற்கு சற்றுசிரமம்தான். சிலதருணங்களில் நண்பர்களுடன் உரையாடும் போது பழைய நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ளும் போதும் சில சம்பவங்கள் நம் நினைவுக்குள் வந்துவிடும்.அப்படித்தான் சென்ற வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நண்பர்களுடன் திரும்பும்வேளை இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவர்களுடன் உரையாடினேன் இப்போது உங்களுடனும்...

ஹவுஸ்பாய்யாக இருந்த சமயத்தில் எனது அரபு முதலாழிக்கு பேரக்குழந்தை பிறந்திருந்தான்.அவன் பெயர் காலீது பின் ஜமான் ஒன்னரை மாதக்குழந்தையை கையில் அதன் தாய் வைத்திருந்தாள். அந்த குழந்தை கழுத்தை வளைத்து என்னைப் பார்த்தது சிரித்தது.இது எங்களுக்குள் நடந்த முதல் சந்திப்பு.

அடுத்த சில தினங்களில் அதே பார்வை அதே சிரிப்பு எனக்கு அவனை தூக்க வேண்டும் போல இருந்தது அரபியிடம் கேட்டதும் எனது கையில் அந்தக்குழந்தையைத் தந்தார்கள். எப்படி தூக்குவது என்றே தெரியாமல் திணறினேன்.

உடனே அந்த குழந்தையை ஒருடவலில் வைத்து சுற்றி மிக எளிதாக ஒரு பொம்மையை தருவதைப்போல என்கையில் தந்தார்கள். தூக்கி கையில் வைத்திருந்த என்னையே உற்றுப் பார்த்தான். இந்த பார்வை அவன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது போலும்...

தினம் என்னை காண்பதில் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. நாட்கள் செல்ல செல்ல அவன் தேடல் அவன் பொற்றோர்களை விட என்னையே சுற்றி இருந்தது. தன் குழந்தையை யாராவது பார்த்துக் கொண்டால் போதும் என்ற மனோநிலையில் இருந்த அந்த அரபுதாய்க்கு நான் ஹவுஸ்பாய் மட்டுமல்ல இந்த குழந்தையை பாராமரிக்கும் செலித்தாய்யை போல பராமரித்தேன்.தாய்பால் கிடைக்காத அவனுக்கு புட்டி பால் நான் கொடுத்தால் மட்டும் குடிக்கும் பழக்கத்திற்கு உட்பட்டான்.

நான் புட்டிப்பாலை மட்டும் கொடுத்து வளர்க்க வில்லை அத்துடன் தமிழ்பாலையும் ஊட்டினேன். அ..ஆ வில் தொடங்கி 1...2.. என்று எண்களையும் உணவு பண்டங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தேன் எளிதில் கற்றுக் கொண்டான்.

அவன் தகப்பனாருக்கு ரொம்ப வருத்தம் என் குழந்தையை ஒரு இந்தியனாக மாற்றுகிறாய் என்று கூறி என்னிடமிருந்து அவனை பிரித்தார்கள். அரபுகாரர்களின் குழந்தைகளின் அட்டுளியம் அடாவடித்தனம் எப்படி இருக்கும் என்பதை அரபு நாடுகளில் பணிபுரிபவர்களுக்குத் தெரியும். அப்படித்தான் அடாவடித்தனம் செய்து மீண்டும் என்னிடம் வந்தான் இதனால் எனக்கு சிரமங்கள் எழுந்தது.

ஹவுஸ்பாய்கள் மாலையில் இரண்டு மணி நேரம்தான் வெளியில் சென்றுவர முடியும் அந்த இரண்டு மணி நேரத்தையும் அவனுடன்தான் கழிக்கவேண்டும் என்ற அவனுடைய அன்பு என்னை அவனிடமே பிணைய வைத்தது. சில தருணங்களில் அவனையும் அழைத்துக் கொண்டு மாலை நேரத்தில் நண்பர்களை சந்திக்க சென்று வருவேன்.

என் நண்பர்கள் அவனிடம் தமிழ்பேசி அழகு பார்ப்பார்கள். ஒருமுறை நண்பர்களிடம் அவன் முன் என்னை அடிப்பது போல் நடிக்கச் சொன்னேன். அவர்களும் அப்படியே செய்ய அவன் அழுதுக் கொண்டு கற்களை பொறுக்கி நண்பர்களை அடிக்க தொடங்கினான். அப்படியே அவனை வாரி அணைத்து முத்தமிட்டேன்.என்மேல் இத்தனை அன்பா! அவன்தாயிடம் தந்தையிடம் கிடைக்காத ஏதோ ஒன்று என்னிடம் கிடைக்கிறது.

விடுமுறையில் தாயகம் சென்று இரண்டுமாதங்கள் கழித்து வந்த என்னைக் கட்டிக்கொண்டு அழுதான்.அந்த இரண்டுமாதத்தில் என்னை பிரிந்த அவனுக்கு ரொம்பவும் கஸ்டமாக இருந்திருக்கிறது என்னைப்போல். அதற்காக அந்த பெற்றோர்கள் ரொம்பவும் கஸ்டப்பட்டதாக கூறினார்கள்.

இந்த இரண்டு மாதக்காலத்தில் அவனுக்கு நிகழ்ந்த அத்தனை விசயங்களையும் என்னிடம் பகிர்ந்துக் கொண்டான் அவனுக்கு பல் விழுந்ததிலிருந்து பல் முளைத்தது வரையில் கூறினான்.

இந்த இரண்டு மாதத்தில் அவனுக்கு நண்பர்கள் கிடைத்திருந்தார்கள் என்னை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. தமிழ்கூட பல வார்த்தைகளை மறந்திருந்தான்.எப்படியாவது இவனுக்கு முழுமையாக தமிழைக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஆனால் அது நிறைவேறவில்லை. குடும்பப் பிரச்சனையில் அந்த குழந்தை தனிக் குடித்தினத்ததிற்கு வேறு இடத்திற்கு சென்றுவிட்டான்.

என்றாவது அவன் இங்கு வரும்போது சில நேரங்களில் நான் ஓய்வில் சென்றிருப்பேன்.நான் இருக்கும்போது வந்தால் அரபியில்தான் என்னிடம் உரையாடுவான்.நான் தமிழை ஞாபகம் படித்தினால் அவன் சிரித்துக் கொண்டே லா...லா...என்று அரபியில் இல்லை தமிழை பேசமாட்டேன் என்று அவன் கூறும்போது எனக்கு மன வருத்தத்தை கொடுத்தது.

சிலவருடங்களுக்கு பின் அந்த ஹவுஸ்பாய் வேலையிலிருந்து விடுதலை பெற்றாலும் அந்த அரபு குழந்தையின் அன்பு என் நெஞ்சத்தில் சிறைப்பட்டுதானிருக்கிறது.

என்னதான் இருந்தாலும் அன்னியநாட்டு குழந்தையிடம் தமிழை கற்றுக் கொடுத்திட ஆர்வம் கொண்டு அதில் வெற்றி தோல்வி ஏற்பட்டாலும் இன்று நம் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க அன்னிய நாட்டுக்காரன் தேவைப்படும் சூழல் உருவாகுவதைக் கண்டு வேதனையாகத்தானே இருக்கிறது.

Monday, January 17, 2011

2010 பங்கும் 2011 சந்தையும்


சென்ற 2010 ஜனவரியில் டிமேட் கணக்கை திறந்து மிக ஆர்வத்துடன் பங்குசந்தையினுள் நுழைந்தேன். இந்த ஒரு ஆண்டின் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவலில் உங்களுடன் இதோ.!

பங்கு சந்தையைப் பற்றி பலரைப்போல எனக்கும் மித்த ஆர்வம் இருந்தது அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள சோமவள்ளியப்பனின் நூல்கள் வழிகாட்டியாக எனக்கு உதவியது.

டிமேட் கணக்கை திறந்ததும் சென்ற ஜனவரியில் முதன் முதலில் மெட்ராஸ் சிமிண்ட் வாங்கினேன். அலுவலக ஒய்வு நேரத்தில் சந்தைநிலவரத்தை அவ்வபோது பார்த்துக் கொள்வேன். அதுமட்டுமின்றி காலை நேர தொலைக்காட்சியில் வணிகச் செய்திகளை தினம் பார்ப்பதும், அதிலிருந்து நோட்ஸ் எடுத்துக் கொள்வதும் இந்த ஒரு ஆண்டு கால அனுபவத்தில் முக்கியமானது.

வணிகச்செய்தியில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குசந்தை நிலவரங்களை ஓரளவு தெரிந்துக் கொள்ளமுடிந்தது. பங்கு பரிந்துரைகளும் அச்சமயத்தில் நடைபெறும், தற்போது வணிக விகடன் வார இதழாக வந்ததினால் வசதியாக இருக்கிறது. பல கம்பெனிகளை அனலைஸ் செய்து ரிப்போர்ட் தருகிறார்கள். அவர்களின் பரிந்துரை பங்குகள் என்னிடம் 75 சதவிகிதம் லாபத்தை தந்திருக்கிறது.

இத்தனை வழிகாட்டலையும் பெற்று எனது யோசனையின் பேரில் பங்குகளை வாங்குவதும் வாங்கிய பங்குகள் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் லாபத்தில் செல்லும்போது அதை விற்பதுமாக இப்படி ஒரு ஆண்டு விளையாடிப்பார்த்தேன்.

இந்த விளையாட்டில் எனக்கு லாபம் கிடைத்தது. ஆனால் நிபுணர்களின் ஆய்வில் அவர்களின் ரிப்போர்ட் எப்படி இருந்தது என்றால் சென்ற ஜனவரியில் வாங்கிய பங்குகளை டிசம்பர் வரை வைத்திருந்தவர்களுக்கு முப்பது சதவீதம் லாபம் கிடைத்திருக்கிறது என்று கூறினார்கள்.

எனது போர்ட் போலியோவில் இதை ஆய்வு செய்து பார்த்தேன். ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் 22 கம்பெனிகளை விற்றிருக்கிறேன் வாங்கியும் இருக்கிறேன். நிபுணர்களின் ஆய்வின்படி நான் விற்காமல் அப்படியே ஓராண்டு வைத்திருந்தால் எனக்கு 32 சதவீதம் லாபம் கிடைத்திருக்கும் ஆனால் அவ்வபோது விலை ஏற்றத்தில் நான் விற்றதால் எனக்கு 15 சதவீதம் மட்டுமே லாபம் கிடைத்தது.

பங்கு சந்தையை பொருத்தமட்டில் பொறுமை, நிதானம் மிகவும் அவசியம் என்பதை அனுபவரீதியாக தெரிந்துக் கொண்டேன். அவசரப்பட்டால் நாம் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.

இந்த ஆண்டு 2011 ல் பங்கு சந்தை சரிந்துக் கொண்டே வருகிறது (FI) அன்னியர்களின் முதலீடுகள் குறைந்ததினால், டாலரின் மதிப்பு அதிகரித்ததினால், இந்திய தொழில்துறை தகவல்கள் (ஐ.ஐ.பி)சரியில்லாததால் சந்தை சரிந்தது, அதனால் பெரும்பாலான வங்கிப் பங்குகள் சரிந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த சரிவு இன்னும் சில மாதங்களுக்கு தொடரலாம் என கணிக்கிறார்கள். அன்னிய முதலீடுகள் சில மாதங்கள் கழித்து இந்திய சந்தைக்குள் நுழையும் என்பது பல நிபுணர்களின் கனிப்பு.

இந்த சமயத்தில் நாம் என்ன செய்வது என்றால் பலருக்கும் தெரிந்த ஒரே லாஜிக், விலை இறங்கும்போது வாங்குவது விலை ஏறும்போது விற்பது இதை சரியாக செய்தால் லாபம் பார்க்கலாம்.

நல்ல கம்பெனிகளை தேர்வு செய்து இந்த விலை இறக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம் அதேபோல் ஏற்கனவே வாங்கிய பங்குகள் விலை இறங்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் வாங்கி விலை ஆவ்ரேஜ் செய்யலாம் என்பது நிபுணர்களின் ஆலோசனை ஆர்வமுள்ளவர்கள் நிதானமாக பங்குசந்தையில் இறங்கி விளையாடலாம்.

கையை சுடாதளவிற்கு கவனமாக இருக்கவேண்டும் இது ஒரு நல்ல வியாபாரம்.

Wednesday, January 12, 2011

அத்திக்கடை நண்பர்கள்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர்- 11

இது ஒரு பாலை அனுபவம்

நண்பன் சிகாபுதீனின் வகுப்புத்தோழன் அஜீஸ்ரஹ்மான். இவன் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி சிகாபுதீனுக்கு கடிதம் எழுதுவான் இவர்களுக்கிடையில் என்னையும் கடிதத்தில் அறிமுகம் செய்து எழுதினான்.

எங்களுக்குள் நட்பு வளர்ந்தது ஒருவரை யொருவர் நாங்கள் அறிந்துக் கொள்ள புகைப்படங்களை பறிமாறிக்கொண்டோம் இதில் என்ன விசேஷம் என்றால் அஜீஸ்ரஹ்மான் தன்னுடைய புகைப்படத்தை நான்கு பாதியாக கட் செய்து ஒவ்வொரு பகுதியாக எனக்கு கடிதத்தில் அனுப்பிவைத்தான் அவன் தோற்றத்தை காண ஆவர்வமாக இருக்கும். முழுமையாக நான் காண்பதற்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

ஒருவிடுமுறையில் சென்னைக்கு சென்று அவன் தங்கிருந்த வாடகை அறையில் இரு தினங்கள் அவன் கல்லூரி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு தங்கியிருந்து சினிமாவிற்கெல்லாம் சென்று வந்தோம். அந்த நாட்கள் நான் கல்லூரியில் படித்ததைப்போன்ற உணர்வைக் கொடுத்தது. கடிதத்தில் மட்டுமே உரையாடிய நாங்கள் நேரடியாக சந்தித்த போது நீண்ட நாட்கள் பழகிய நண்பனைப் போன்றே பழகினோம்.
அந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

இந்த கட்டுரையையும் கூட அவன் படித்துவிட்டு எனக்கு தொலைபேசி செய்வான். ஆம் இந்த தொடரை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறான்.
அந்த நாட்களில் எனக்கு அதிகமான நண்பர்களாக பழகியவர்கள் அத்திக்கடை இளைஞர்கள். சிகாபுதீன், அஜீஸ்ரஹ்மான், நைஸ்காதர், நஜ்முதீன் ,சிராஜ்தீன் இவர்களைத் தொடர்ந்து பாவா வீட்டு ஹாஜா.

இவர்களில் பாவா வீட்டு ஹாஜாவைத் தவிர மற்றவர்கள் துபாயில் தான் இருக்கிறார்கள். சிகாபுதீனும் தங்க மார்கெட்டில் இருப்பதால் அவ்வபோது சந்தித்துக் கொள்வதுண்டு ஆனால் அதிகமாக பேசுவதுகிடையாது காரணம் வியாபார கடையில் கதைகள் பேசமுடியாதே.
அடுத்து அஜீஸ்ரஹ்மான் இவனும் ஜீவல்லரியில் ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடை என்பதால் அதிகமான வாடிக்கையாளர் தொந்தரவு இருக்காது என்றாலும் அவ்வபோது தொலைபேசியில் உரையாடுவோம்.

மலேசியாவில் முதலாழியாக வாழ்ந்தவன் பொருளாதார சுனாமியினால் மீண்டும் துபாயில் பணிப்புரிய வேண்டிய காலசூழ்நிலை என்றாலும் மனதளவில் அவன் எதையும் இலக்கவில்லை. நிறைய விசயங்களை தெரிந்திருக்கிறான் அந்த அறிவே அவனுக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. பொருள் அவனை இழந்தாலும் அவன் தன்னை இழக்கவில்லை. இழந்ததை விரைவில் மீட்டுவிடுவான்.

எனது தாய்மாமன் மகன் ஆக்கூர் ஜெகபர்அலி இவனும் நானும் உயிர் நண்பர்களைப் போல சிறுபிள்ளையிலிருந்து பழகிவந்தோம். நான் துபாய் வந்து சில வருடங்களில் ஹவுஸ்பாயாக இவனும் வந்தான். வெள்ளிவிடுமுறையில் நாங்கள் சந்தித்துக் கொள்வோம் அவனுடைய பணியில் பிரச்சனை வரவே அவனை சிகாபுதீன் தனது அரபியிடம் பேசி வேலைவாங்கி கொடுத்தான். நானும் அவர்களுடன் இணைந்துக் கொண்டதால் எங்களின் நாட்கள் இனிமையாக சென்றது.

ஒருநாள் இரவு செகண்ட்ஷோ சினிமா பார்த்துவிட்டு மூன்றுபேறும் சைக்கிளில் பின் படல்போட்டு நம் ஊரில் வருவதைப்போல மிதித்து வந்தோம். வரும் வழியில் போலீஸ் வாகனம் வரவே எங்களைக் கண்ட போலீஸ் ஆச்சரியப்பட்டார்கள். மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் என்று கூறினார்கள்.

மூன்றுபேர் சைக்கிளில் மிதித்து செல்வதை அப்போதுதான் அந்த போலீஸ்காரர்கள் கண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். எங்களை உற்சாகப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.
ஆனால் ஜெகபர்அலிக்கு சிங்கப்பூரில் செட்டில் ஆகனும் என்ற ஆவல் அவனிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அவனுடைய அந்தக் கனவும் 1986 க்கு பிறகு நனவாகி இன்று சிங்கை பிரஜையாக மனைவி மக்களோடு வாழ்ந்துவருகிறான்.

இந்த நட்புவட்டத்திற்கு மத்தியில் எனது தேடல் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டே வந்தது அந்த நேரங்களில் எனது சிறுகதை தொகுப்பான “விற்பனைக்கு வந்த கற்பனைக் கதைகள்” சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருந்தேன்.

எனது எழுத்தும் இலக்கிய ஆர்வமும் புதிய நண்பர்களை எனக்கு அறிமுகத்தைத் தந்தது அந்த அறிமுகம் எனக்கு ஞானப்பாட்டையை காண்பித்தது.
என்னை ஒருகொள்கையில் ஈடுபத்திக் கொண்டிருந்த போது அதை மறுபரிசீலனை செய்யுமளவு ஆன்மத்தேடல் என்னை மாற்றியது.
அந்த மாற்றத்தை நீங்களும் தெரிந்துக் கொள்ளத்தான் வேண்டும்…தொடர்வோம்.

Saturday, January 8, 2011

வலைப்பூவில் இருக்கும் வைரஸ்சை நீக்குவது எப்படி?

அன்பின் பதிவர்களே!

எத்தனையோ தெரியாத விசயங்களை வலைப்பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பினை இந்த இணையதளம் நமக்கு உருவாக்கி இருக்கிறது.

ஒன்றைப்பற்றி அறிய வேண்டுமானால் நூல்களை தேடி அல்லது அறிந்தவர்களை தேடி அலைந்தக் காலம் மலைஏறிவிட்டது.அறிவியலின் வளர்ச்சில் இருக்கும் நாம் அறையில் இருந்துக்கொண்டே இந்த உலகை சுற்றி வந்துவிடலாம் பல சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றுவிடலாம்.

இது எல்லாம் சரிதான் விசயத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைப்புவிடுப்பது தெரிகிறது.

நாம் பதிவு செய்துக்கொண்டிருக்கும் நமது வலைப்பூவில் வைரஸ்தாக்குதல் இருந்தால் அதை எப்படி நிவர்த்தி செய்வது(?) என்பதை தெரிந்த பதிவர்கள் தயவுசெய்து எனக்கு சொல்லிக் கொடுங்கள் அல்லது லிங்க் கொடுங்கள்.

பலவாசகர்கள் எனது வலைதளத்திற்குள் வரமுடியவில்லை தலைப்புடன் நின்றுவிடுகிறது என்று புகார் செய்கிறார்கள். பலரால் கமாண்ட்டும் போடமுடியவில்லை என்று கூறுகிறார்கள் இதற்கெல்லாம் வைரஸ்தானே காரணம்? தெரிந்தவர்கள் தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்.

இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் உபயோகமாக இருக்கும்...இதற்கு முன்னால் யாரும் வைரஸை நீக்குவதைப்பற்றி கட்டுரைகள் எழுதி இருக்கலாம் அவர்களுடைய லிங்க் கிடைத்தால் எனக்கு பெரிதும் உதவியாக இருக்கும்..

இதை வாசித்த உதவி செய்ய போகின்ற பதிவர்களுக்கு மிக்க நன்றியினை சமர்பிக்கின்றேன்.

நன்றி...நன்றி....நன்றி..!!!

Thursday, January 6, 2011

எமிரேட்ஸ் ஏர்லைன்சின் கவனத்திற்கு


சென்ற மாதம் டிசம்பரில் மருத்தவ பரிசோதனைக்காக சென்னைக்கு நானும் எனது மனைவியும் எமிரேட்ஸ் (EMIRATES AIRLINES)சில் இரண்டு தினங்களுக்காக சென்றோம். குறிப்பிட்ட தினத்தில் மருத்துவ பரிசோதனை முடியாததால் ஒரு தினம் தாமதமாக வரக்கூடிய சூழல் ஏற்படவே எங்களது விமான பயணச்சீட்டை மாற்றுவதற்கு சென்னையிலுள்ள எமிரேட்ஸ் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.

பயணச்சீட்டை மாற்றுவதற்கு 500 இந்திய ரூபாய் கட்டவேண்டும் என்று கூறினார்கள்.(தற்போது தேதி மாற்றத்திற்கு பணம் கட்டவேண்டும்) கடன் அட்டை மூலம் கட்ட வேண்டும் என்றார்கள் நானும் சரி என ஒப்புக்கொண்டு கடன் அட்டையின் 16 இலக்க எண்ணை கூறினேன்.

கடன் அட்டையின் முடிவுகால வருடம், தேதி கேட்க்க அதையும் கூறினேன். பின்னர் கடன் அட்டையின் பின் பக்க உள்ள ரகசிய எண் (ccv)3 இலக்க எண்னை கேட்டதும் எனக்கு கோபம் வந்தது.

மன்னிக்கனும் என்னால் அந்த எண்ணை கூற இயலாது அப்படி நான் கூறுவம் பாதுகாப்பு கிடையாது என்றேன். அதற்கு அவர் எங்களுடைய வழக்கமும், பழக்கமும் இதுதான் என்றார்.
இருக்கலாம் ஆனால் வங்கி எங்களை எச்சரிக்கைப் படுத்தி இருக்கிறது என்று கூறிவிட்டு
சரி நான் விமான நிலையத்தில் பணமாகவே கட்டிவிடுகிறேன் என்றேன் அவரும் சரி என்றார்.

விமான நிலையம் சென்று எமிரேட்ஸ் கவுண்டரில் பயணச்சீட்டைக் கொடுத்ததும் தேதி மாற்றத்திற்கு 500 கட்டவேண்டும் என்றார் நானும் சரி என்றேன்.
எமிரேட்ஸ் மேற்பார்வையாளரிடம் அவர்பேசிவிட்டு அந்த தொகையை நீங்கள் கடன் அட்டை மூலம் தான் கட்டவேண்டும் என்று கூறிவிட்டு தொடர்புக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

நான் பணமாக கட்டுகிறேன் கடன் அட்டை மூலம் என்னால் கட்ட இயலாது அவர்கள் இரசிய எண்ணை கேட்கிறார்கள் நான் எப்படி அதை கொடுக்க முடியும் எனது கடன் அட்டைக்கு பாதுகாப்பு கிடையாது அது உங்களின் ஊழியர்கள் தவறாக பயன்படுத்த காரணமாகிவிடும் என்றேன்.

அப்படி எல்லாம் யாரும் செய்யமாட்டார்கள் நீங்கள் அந்த தொகையை கடன் அட்டை மூலம்தான் கட்ட முடியும் நாங்கள் பணமாக வாங்கக் கூடாது எங்களிடம் வேறு வழி இல்லை என்று மேலாளர் கூற, வேறு வழிஇன்றி கடன் அட்டையின் மூலம் கட்டினேன்.

எமிரேட்ஸ் நிறுவனம் தனது சேவையை பயணிகளுக்கு சிறப்பாக செய்வதாக கூறுகிறது ஆனால் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது அதன் வளர்ச்சிக்கு ஒரு சரிவுதான்.

ஒருவரின் கடன் அட்டையின் முழுவிபரம் ஒரு ஊழியருக்கு தெரியும் பொழுது அவர்களால் அதை தவறாக பயன்படுத்த ஒரு வாய்ப்பை எமிரேட்ஸ் போன்ற நிறுவனம் வகுத்துக் கொடுக்கிறது.

வங்கிகளில் கடன் அட்டையின் ரகசிய எண்ணை மாற்றுவதற்கு நாம் தொலைபேசி மூலம் அந்த எண்ணை நசுக்கி பதிவு செய்வோம் அதுதான் பாதுகாப்பான முறை இப்படி வெளிப்படையாக எல்லா இலக்க எண்களையும் ஒருவரிடம் கொடுக்கவும் கூடாது அப்படி கொடுப்பது ஆபத்தானது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த முறையை மாற்றி அமைத்தால் பயணிகளின் பயம் நீங்கும் ஊழியர்களின் குறுக்கு சிந்தனையை போக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பி உள்ளேன்.