உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, November 1, 2010

வலைச்சரம்

வலைச்சரத்தில் முதல்நாள்
வலைச்சரத்தில் 2 நாள்
வலைச்சரத்தில் 3 நாள்
வலைச்சரத்தில் 4 நாள்
வலைச்சரம் 5வது நாள்
வலைச்சரம் 6வது நாள்
வலைச்சரம் 7வது நாள்
வலைச்சரம் 8வது நாள்




முதற்பேறு

வலைச்சரத்திற்கு வாசகனாக வந்து சென்றுள்ளேன் ஆனால் வாசகனே வாத்தியாரக வருவது என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.

பதிவர்களை பட்டைதீட்டுவதற்கு இப்படியொரு பாட்டையை அமைத்திருப்பது வரவேற்கதக்கது.
இந்த வாய்ப்பைத் தந்த ஐயா சீனா அவர்களுக்கும் குழுமத்தினர்களுக்கும் இனி ஒரு வாரக்காலத்திற்கு வாசிக்கப்போகும் பதிவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை சமர்பித்துக் கொண்டு...

மாணவ அனுபங்களை ஆசிரியராக உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

என்னைப்பற்றி சொல்வதற்கு இருந்தாலும் இல்லை என்றாலும் நான் என்னை அறிந்த விதத்தை இங்கு கூறலாம்.

நிகழ்வுகளின் நிழல்கள் இது எனது வலைதளம் பல அனுபவங்களை சுற்றுலாக்களை தொடராக தொட்டிருக்கிறேன் அப்படி தொட்டதில் என் மனதை கவர்ந்த நாடுகளை சுற்றிருக்கிறேன்.கதைகளையும் கட்டுரைகளையும் கட்டிருக்கிறேன்.
நகைச்சுவை உணர்வு என்பது எல்லோருக்கும் உண்டு ஆனால் என்னால் சிரிக்கத்தான் முடியும் உங்களை சிரிக்கவைக்க முடியுமா? என்றால் ஒரே ஒரு இடுக்கையில் முயற்சி செய்தேன் சிரித்தீர்களா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

கவிதை எழுதவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் எனக்கு இருந்தாலும் கவிதைக்கும் என்னுடன் வருவதற்கு ஆர்வம் இருக்கவேண்டும் அல்லவா
6வது அறிவு இது கவிதைக்காக ஆரம்பிக்கப்பட்ட வலை. அதில் விளைந்திருப்பது கவிதைதானா? என்பதெல்லாம் அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன். (அப்பா..தப்பிச்சேன்)

கிளிக்..கிளிக்..கிளிக்.. யாரோ எடுத்த புகைப்படங்களாக இருந்தாலும் நானும் நீங்களும் இரசிப்பதற்கு இந்த வலையை விரித்திருக்கிறேன்.
(ஓசில பிளாக் கொடுக்குறாங்கங்குறதுனால இத்தனையான்னு கேட்கப்படாது)
இந்த மூன்றும் என் எண்ணங்களை பிரதிபலிக்கும் தளமாக இருக்கிறது.
மனிதர்களுக்கு இருக்கும் மகா திறமைகளை வார்த்தைகளால் மட்டுமல்ல புகைப்படங்களிலும் வண்ணமலர்களாய் வடிவம் காட்ட முடிகிறது.

இந்த வலைதளங்களின் மூலமாக எனக்கு நல்ல இதயங்கள் கிடைத்திருக்கிறது. இதோ(ஐயா சீனாவின் மூலம்) கிடைக்கவும் போகிறது.
நமக்கு கிடைக்ககூடிய நண்பர்களை பொருத்துதான் நமது வாழ்க்கையில் பெறக்கூடிய நன்மைகள்.

எழுத்தின் மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் இருந்தாலும் அந்த ஆர்வத்திற்கு தண்ணீர் ஊற்றி கலையெடுத்து உரம்போட்டது வளர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் என்று சொல்வது மிகையல்ல.

புத்தருக்கு ஞானம் வந்தது போதிமரம் என்பார்கள் ஆனால் என்னைப்போன்ற பலர் கற்பதற்கு பாலைவனம் இன்றும் போதித்துக் கொண்டுதானிருக்கிறது.
மனிதநேயத்தை காக்கும் மனிதர்களாய்.

பாலை எனக்கும் தமிழுக்கும் சாலைப்போட்டது இங்கு பொருள் சம்பாதித்தோமோ இல்லையோ தமிழை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் என்ற மனதிருப்தி அமீரகப் பதிவர்களின் உள்ளத்தில் இல்லம் அமைத்திருக்கிறது.

பெருசா தத்துவம் சொல்றதா யாரும் நினைக்க வேண்டாம் இதெல்லாம் பாலைவன உலறல்கள். வறட்சியான பூமியாக இருந்தாலும் பலருக்கு வளமான வாழ்க்கையை தந்துக் கொண்டிருக்கிறது.

இதுமுதல்பேறு
அது சுகப்பேறாக இருக்கவேண்டும் என்பதில்
அக்கரை எனக்கு
இக்கரை வந்து
நீங்கள் தரும் சக்கரையை
சுவைப்பதற்கு நான்
வைகரை வருகிறேன்.

நன்றி.........என்னுடன் இவ்வளவு தூரம் வந்தமைக்கு.!
--------------------------------------------------------------

வலைச்சரம் 2வது நாள்
2.இகுளையின் எண்ணங்கள்

வலைசரத்திற்குள் நுழைந்ததுமே வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கும்
முதல்நாளில் தைரியமூட்டிய பாசக்கார பதிவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றின்னு மட்டும் சொல்லிட்டு போய்விடாமல்...

உங்கள் அனைவருக்கும் ஏதாவது அன்பளிப்பு கொடுக்கனும்னு நினைக்கிறேன் அது மின்னூலாக கொடுக்கலாம்னு இருக்கிறேன்...
அது எப்போன்னு கேட்கிறீங்களா? ஏழாம்நாள் அதுவரைக்கும் பின் தொடருங்கள்.

மின்னூல் பிடிஎப்(PDF) பைலில் இருப்பதினால் உங்கள் கணினியில் இடம் சேகரித்து வையுங்கள் நான் கொடுக்கப்போகும் மின்னூல் எவ்வளவு தெரியுமா? முன்னூருக்கும் அதிகமானது.

அதெல்லாம் சரி.. அதென்ன இகுளை புரியாத வார்த்தையாக இருக்கிறதேன்னு எனக்கு தோணுவதைப்போல உங்களுக்கும் தோணும். இதற்குதான் நம் கையில எப்பவும் தமிழ் அகராதி வைத்திருக்கனும். இப்பல்லாம் அகராதி பிடித்தவர்கள் என்னைமாதிரி அதிகமாக இருக்காங்க அதனால நீங்களும் அகராதி வைத்துக்கொள்ளுங்கள். இகுளை என்றால் நட்பு என்னைச் சூழ்ந்த நட்புகளை கொஞ்சம் காட்டப்போறேன்.

என்னுடன் பணிப்புரியும் சிரியா நாட்டைச் சார்ந்த மைக் மிக்காலியன் என்ற இளைஞனின் முன்னோர்கள் அர்மீனியா நாட்டைச் சார்ந்தவர்கள். இந்த இளைஞன் சிரியாவில் பிறந்து வளர்ந்து அறபு மொழியை பேசினாலும் இல்லத்தில் அர்மீனிய மொழியைத்தான் தாய்மொழியாகப் பேசுகிறான்.
தங்கள் நாட்டின்மீதும் மொழியின் மீதும் அதீத பற்றுடையவர்களாக அர்மீனியர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த இளைஞன் சாட்சியாகின்றான்.
அர்மீனியர்களுக்கும் நமது சென்னையின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக படித்தேன்.1772 ல் கட்டப்பட்ட புனித மேரி தேவாலயம் சென்னையில் இருக்கிறது.

இந்த செய்தியை மைக் மிக்காலியனிடம் கூறியதும் மிகுந்த சந்தோசமடைந்து என்னைத் தழுவிக் கொண்டான்.

காரணம் புனிதமேரி தேவாலயம் இந்தியாவில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இந்தியாவில் எங்கு என்று தெரியவில்லை சென்னையில் இருக்கிறது என்ற செய்தி எனக்கு மகிழ்வைத்தருகிறது நான் சென்னைக்கு வருவேன் என்றான். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றிச் சொன்னேன்.

வலைப்பதிவர்கள் ஒவ்வொரு கோணத்தில் தங்களின் படைப்புகளை பதிவுசெய்கிறார்கள் ஆனால் ஒரே தளத்தில் எல்லாவிதமான பதிவுகளையும் பதிவிட்டவரின் பெயருடன் பார்க்கவேண்டுமானால் நீடூர்சீசனில் பார்த்துக் கொள்ளலாம்.
வேறுபாடு இல்லாத வேரான மனிதரிவர் என்பதை நேரில் சந்தித்தபோது விளங்கிக்கொண்டேன்.
சிலருக்கு காடுவாவா என்று அழைக்கும் ஆனால் இந்த இளைஞருக்கு இணையதளம் வாவா என்று அழைத்துக் கொண்டிருக்கிறது நம் அகத்திலும் முகபுத்தகத்திலும் இருப்பார் நீர்மைக் கொண்ட நீடூர் முதியவரை நீங்களும் சந்திக்கதான் வேண்டும்.

பூ ஒன்று புயலானது என்று படித்திருக்கிறேன் ஆனால் இந்த பூ ஒன்றல்ல இரண்டு. இது பூங்காவனம் சஞ்சிகையாக மலர்ந்திருக்கிறது. பொருள்ளவில் ஏழைகளாக இருந்தாலும் இலக்கிய உள்ளத்தில் மகாஇராணிகளாய் தமிழ் இவர்களை வாழவைத்திருக்கிறது. முட்களுக்கு மத்தியில் ரோஜாக்களின் ராஜாங்கம் நடத்துகிறார் ரிம்ஸா. காதல் இல்லாத காலம் இல்லை என்று சொல்லுமளவு காதல் இவர்களின் எழுத்துக்களில் மலிந்திருக்கிறது காதலுக்குதடையாயிருக்கும் கடிகாரம் மீது ரிஸ்னா கடும்கோபம் கொண்டிருக்கிறார் சிறுகதைகளும், கவிதைகளும் இவர்களின் வலைகளில் கொட்டிக்கிடக்கின்றன. இவர்களின் முயற்சி வெல்லும்.

நம் உடலை சேதப்படுத்தவோ அதன் உறுப்புகளை குழைப்பதற்கோ நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று உரிமையுடன் கூறுவது நிலாமலர்கள் நண்பர் ராஜாகமால்.
விஞ்ஞானத்தின் மீதும் மெய்ஞ்ஞானத்தின் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவர் மனித உடல்களைப் பற்றிய பல தகவல்களை தந்துக் கொண்டிருக்கிறார்.
இவருடைய கவிதைகளில் எதார்த்தமும் ஞானமும் மிளிரும்.

இறக்கவேமாட்டோம்
என்பதுபோல்
வாழும் மனிதர்கள்
வாழவே இல்லை
என்பதுபோல்
இறக்கும் மனிதர்கள்
என்று வாழ்க்கையின் வழுக்கல்களை கூறுகிறார்.

நிலவுக்கு மலர்சூட்டி அழகுபார்க்கும் இவர் காதல் என்பது கருத்து பறிமாற்றம் அல்ல என்கிறார்.
இவருடைய வலைக்குள் சென்றால் கதை கவிதை கட்டுரை என பல்சுவையும் நாம் பருகலாம்.

ஒரு எழுத்தாளனின் அவதார் என்ற தலைப்பில் சிறுகதையை எழுதிய ஆசிரியர் மட்டுமல்ல திறமையான குறும்பட இயக்குனர். அமீரகப்பதிவர்களின் சுற்றுலாவை குறும்படமாக மாற்றி அதற்கு அண்ணாச்சி அழைக்கிறார் என்று தலைப்பும் வைத்து வெளியீட்டுவிழாவும் செய்தவர். கவிஞரான இவர் சாருகேசி என்று வலைவிரித்திருக்கும் இவர் கீழைராஸா.

குண்டப்பா மண்டப்பா அப்படின்னா என்னப்பா? வேறென்ன நகைச்சுவைதான் கலக்கி இருக்கிறார் நிஜாம் பல்சுவை பக்கங்கள். பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமிக்கவர்.


நாகூர் மண்வாசனையில் 1929 ல் எழுத்துலகில் பிரவேசித்த இஸ்லாமிய முதல் பெண் எழுத்தாளர் சித்தி ஜூனைதாபேகத்தின் அறிமுகம் படிக்ககிடைத்தது. அதுமட்டுமின்றி தமிழில் வெளியான முதல் சிறுகதை நாவல்கள் என பலதகவல்களை உள்ளடக்கி இருக்கிறார்.

வலைதளங்களில் இதுபோன்ற அறியாவிசயங்களை அறியமுடிகிறது அதற்காக வேண்டியே இப்படி வலைச்சரத்தில் ஒவ்வொரு பதிவரும் பவனி வருவது வரவேற்கத்தக்கது ஐயா சீனா அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

எனது நண்பர் பரிந்துரைத்த வலை இது சென்று பார்த்தேன் இரு வரிகளில் இதயத்தை துளைக்கும் தோட்டாக்கள்

இது ஈழத்தமிழர்களின்
கண்ணீர்...
நீங்கள் குடைப்பிடித்தே
செல்லுங்கள்.!

என்கிறாள் தமிழினி.

இரண்டாம் நாளை கடந்துவிட்டேன் நாளை ஞானத்தை தொடுவேன்!

-------------------------------------------------------------------
வலைச்சரம் 3வது நாள்

3.மூதறிவாளன்


டெல்லி சாந்தினி சௌக்கில் மத்திய அரசில் பணிப்புரியும் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தார்.
கடவுளைக் காணமுடியுமா? என்று ஒருவன் கேட்க, ஓ... முடியுமே! உன் கோட்டை கழட்டிவிட்டு பத்தடி முன்னால் சென்று பார் கடவுள் தெரிவார் என்றான்.
அவனும் அப்படியே செய்து திரும்பி வந்து பிரகாசமான முகத்துடன் தாங்க்ஸ். நீங்கள் என் கண்களை திறந்துவிட்டீர்கள். கடவுளை நன்றாக பார்க்க முடிந்தது என்றானாம்.இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசு அலுவலர் கடவுளைப் பார்த்தவனை அணுகி எனக்கும் பார்க்க வேண்டும் என தன் கோட்டைக் கழற்றி அவனிடம் தந்துவிட்டு பத்தடி முன்னால் சென்று பார்த்தார். காக்காய் கூடுகட்டிய டெலிவிசன் ஆன்டெனாக்களைத் தவிர ஏதும் தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் அவர்கள் இருவரையும் காணவில்லை கோட்டில் அந்த மாதச் சம்பளம்.(சுஜாதா எழுதிய நூலில்)
இப்படித்தான் எதை எங்கு பார்ப்பது தேடுவது என்று தெரியாமல் இருப்பதையும் இழந்துவிடுகிறோம்.

ஓன்றை வாங்குவது என்றால் அதைப்பற்றி பெரும்பாலோர் அலசி ஆராய்ந்து நேரம், காலம், வாஸ்த்து இப்படி நிறைய சம்பர்தாயங்கள் பார்த்து வாங்குவார்கள்.
ஒரு பொருளுக்கே இவ்வளவு பார்க்கின்ற நாம் நம்மைப்படைத்த இறைவனை(?) அறியாமலேயே இருப்பது அமைதிக்கு பாதகம்.
இப்படி அறியாமலேயே இருப்பதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணமாகவும் இருக்கிறது.அப்படி அறிவதற்கு வாய்ப்பை நமக்கு தருவது ஞானிகள்
ஞானத்தை விளக்குவதற்கு பல கதைகள் உண்டு அதில் முல்லா நசூருதீன் கதைகளும் ஒன்று.

வாழ்வியல் என்பது கிட்டதட்ட ஞானம். பலர் வாழ்வியலை போதிக்கும் குருமார்களிடம் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்.காரணம் இந்த அவசர உலகில் அமைதி என்பதை ஒருவருக்கொருவர் தொலைத்துவிட்டு பொருள்தேடலில் அதைத் தேடுகிறார்கள்.அதை எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேடவேண்டும்.

நம்மில் தொலைத்துவிட்டு வெளியில் தேடினால் கிடைக்குமா?
எதைத் தேடுகிறோம் என்றே தெரியமால் தேடுகிறோம்
நம்மை நாம் அறிவதற்கு இந்ததளம் தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.

மூதறிவாளன் இறைவன் அவனின் முகவரியை ஞானிகளிடமிருந்துதான் இவ்வுலகம் பெற்றுக்கொண்டிருக்கிறது.
சுயத்தேடல் நிறைந்தவர்கள் சிதாகாசத்தை சித்தரித்து நம் சித்தம் தெளியத்தருகிறார்கள்.

ஞானம் என்றால் என்ன வென அறிந்துக்கொள்ள துடிப்பவர்களுக்கும் சூபியிசம் என்றால் என்ன என்றறிய துடிப்பவர்களுக்கும் ஞானவெட்டியானின் பதிவுகள் சம்பூரணத்தை விளக்குகிறது.ஞானத்தாகம் கொண்டவர்களுக்கு தாகிப்பிரபம் நீருற்றாய் விளங்குகிறது.

இந்திய விமானப்படையில் ஐந்தாண்டுகள் பணிமுடித்து ஸ்டேட் பேங்ஆப் இந்தியாவில் மேலாளராக பணிப்புரிந்து ஓய்வு பெற்ற
செயச்சந்திரன் B.SC A.M.I.E.R.E.(LOND).,C.A., I.C.W.A., M.B.A
இவர் சித்தன்னாக எல்லோருக்கும் சுயச்சிந்தனை ஊட்டுகிறார். ஞானிகளின் எழுத்துக்களுக்கும் சித்தர்களின் பாடல்களுக்கும் விளக்கம் கொடுத்து மின்னூலாக பதிவிடுகிறார்
இது ஞான ஊற்று மெய்ஞானக்காற்று அனுபவித்துப்பாருங்கள்.

புல்லாங்குழல் என்பது ஒரு மகத்தான ஆன்மீகக் குறியீடு நீங்களும் நானும் ஒருவகையில் புல்லாங்குழலைப் போன்றவர்கள் என்று மௌலானா ரூமி கூறுகிறார்கள் அதைதான் நூருல்அமீன் தனது வலைதளத்தில் ஞானமணம் பரப்புகிறார். படிக்க படிக்க நம் சிந்தனை சிறகில்லாமலேயே பறக்கிறது. விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என சந்தேகங்களுக்கு பின்னூட்டதில் கட்டுரையே வரைந்திருக்கிறார். பல ஆன்மீக சந்தேகங்களுக்கு இந்த வலைதளம் தெளிவு தருகிறது.


ஆபிதீன் பக்கங்கள் அழிந்துக்கொண்டிருக்கும் இலக்கியங்கள் அழியாத மனிதர்கள் என பட்டியலிட்டு வைத்திருக்கிறார். நிறைய விசயங்களையும் வண்ணமில்லா மனிதர்களையும் வகைப்படுத்தியுள்ளார்.நிறைய விசயங்களை நிறைத்திருக்கிறார். பேதமில்லாமல் எதார்தத்தை எழுதுகிறார்.இவரின் பதிவுகளில் ஞானமும் ஞானிகளும் நிழலாடுகிறார்கள்.


தினம் ஒரு தகவல் என நல்லதொரு சிந்தனையை தினம் தந்து கொண்டிருக்கின்றார்
இவருடைய பதிவுகளில் பல பொக்கிசங்கள் பொதிந்திருக்கிறது.ஞானியும்குழந்தையும் நல்லதொரு சிந்தைமிக்க கதையாக தந்திருக்கிறார்.
கொல்லிமலைச் சாரல் ஆனந்த் பிரசாத். இமெயில் மூலம் சிலருக்கு மட்டும் பகிர்ந்த தகவலை வலைதளம் அமைத்து அனைவருக்கும் வழங்குகிறார்.

ஞானத்தில் சிறந்த ஞானம் எது? என்று தமிழ் நண்பர்கள் கேட்டனர் அவர்களின் இந்த கேள்விக்கு ஒரு கதை பதிலாகிறது.

உணரமுடியா மர்மங்களின்...
ஆதி முடிச்சிலும்...,
கற்பனைக்குள் எட்டா காரியங்களின்
கருவிலும், விளங்க முடியா விந்தைகளிலும்
பிணைந்திருக்கும் பருமனில்
புகுந்திருப்பது நானின்றி வேறு யார்?

தேடலில் கேட்பவர் தேவா



தொடர்வோம் நன்றி.!

--------------------------------------------------------------
வலைச்சரம் 4வது நாள்
4.பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை


நேற்று அருளைப் பற்றி பார்த்தோம்
இன்று பொருளைப் பற்றி பார்ப்போம்.

வியாபாரிகள் தான் இந்த உலகத்தில் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
நாம் வசதியுடன் வாழவே இத்தனை சிரமங்களை எடுக்கின்றோம் ஆனால் நாம் எப்போது வசதியுடன் வாழ்வது ? எப்படி வசதியுடன் வாழ பொருளீட்டுவது? அதை எப்படி வளர்ப்பது? என்பது தெரிந்தால் நாமும் பணக்காரர்களாக வாழலாம்தானே!

வேலை செய்தால் ஆயுல் முழுவதுமே வேலை செய்யவேண்டும் ஆனால் வியாபாரம் செய்தால் சில காலம் வேலைப்பார்ப்போம் அதன் பிறகு நாம் சம்பாதித்த பணம் நமக்கு வேலைப்பார்க்கும் என்கிறார் பங்குச் சந்தை நிபுணர்.

பங்கு சந்தை என்பது ஒரு சூதாட்ட கிளப்போ அல்லது லாட்டரி கம்பனியோ அல்ல என்பதை நாம் முதலில் தெளிவடைய வேண்டும்.
தெளிவான திட்டமிடலும் நேர்த்தியான அணுகுமுறை தொடர்ச்சியான ஆர்வமும் தளராத மனநம்பிக்கை இதனோடு கொஞ்சமே கொஞ்சமாய் பணமிருந்தால் போதும் சாதித்துவிடலாம் வாங்க ன்னு நிபுணர்கள் கைதட்டி கூப்பிடுகிறார்கள்.

இந்தியர்கள் தங்களின் சம்பாத்தியத்திலிருந்து 25 சதவீதம் சேமிக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. நமது சேமிப்பு பலன் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

நாம் சேமிக்கிறோமா அல்லது முதலீடு செய்கிறோமா என்பதை திட்டவட்டமாக தீர்மானிக்க வேண்டும் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் நிறைய வித்தியாமிருக்கிறது.

1985-ல் விப்ரோ என்ற சாப்ட்வேர் கம்பெனியில் 10000 ரூபாய் யாரேனும் முதலீடு செய்திருந்தால் இந்த ஆண்டில் அவர்களிடம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?
400 கோடி என்றதும் நம்பமுடிகிறதா? உங்களைப்போல நானும் நம்பவில்லை ஆனால் நிபுணர்கள் 400 கோடியாக எப்படி வளர்ந்தது என்று புள்ளிவிபரத்துடன் கணக்கு கொடுக்கிறார்கள்.

நமது சேமிப்பை பொருத்தே நமது பொருளாதார வளரச்சி இருக்கிறது.

சேமிப்பு என்பது வங்கியிலும் எல்ஐசியிலும் மனைகளாக வாங்கி வைப்பதிலும் மட்டுமில்லை அதையும் தாண்டி அதிகமான லாபங்களை தரக்கூடிய பங்குகள் தரமான கம்பெனிகள் நிறைய இருக்கிறது.

தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் இன்று நூறு சதவீத லாபத்தை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன் செய்தவர்கள் பெற்றார்கள்.

பங்கு சந்தையைப் பற்றி நமக்கு பயம் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு பல நூல்கள் தமிழில் வந்துவிட்டது.மதிப்பிற்குரிய நிபுணர் சோமவள்ளியப்பனின் நூல்கள் என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு வழிகாட்டுகிறது.
கோகுல் மாமாவிடம் பங்குசந்தையைப்பற்றி கேட்டால் நிறைய தளங்களை அள்ளித்தருகிறார்;.

சமீபகாலத்தில் யூலிப் என்ற ஒரு திட்டம் பங்கு சந்தையின் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டது பலர் அதில் முதலீடு செய்துவிட்டு தற்போது பங்குசந்தையை குறைக் கூறுகிறார்கள்.

மியூச்சுவல் பண்ட் பங்குசந்தையில் இன்னொரு முதலீடு. நாம் வங்கியில் மூன்றாண்டு ஐந்தாண்டு என்று டெபாஸிட் செய் வோமே அதுபோல் அதிக லாபம் தரக்கூடிய திட்டங்கள் நிறைந்தது.

தினசரி வர்த்தகம் என்பது எல்லோருக்கும் கைகூடாது அதில் பலர் கையை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பங்கு சந்தையில் பணத்தை இழப்பது ஏன் என்பதைப் பற்றி இவர் தெளிவுபடுத்துகிறார்.

எனக்கு பங்கு சந்தையில் ஆர்வம் அதிகமிருப்பதால் கடந்த சனவரியில் டிமேட் கணக்கை துவங்கி நேரடியாக பங்கு வணிகத்தில் இறங்கினேன். இந்த 11 மாதத்தில் நிதானமாக நான் சென்றுக் கொண்டிருப்பதால் லாபத்தை மட்டுமே அறுவடை செய்து வருகிறேன்.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதுபோல என்னுடன் பணிப்புரியும் நண்பர்களுக்கும் பங்குசந்தையைப் பற்றி பாடம் நடத்த ஆரம்பித்தேன்.
முதலில் அவர்களுக்கு மணிக்கண்ட்ரோல் என்ற தளத்தில் போர்ட்போளியோவை நிறுவி டம்மியாக அவர்களுடைய விருப்பத்திற்கு சில கம்பெனிகளை வாங்கியதைப்போன்று ஆட் பண்ணச் சொன்னேன் தினம் அதை பார்த்தார்கள் விலையில் ஏற்றம் இறக்கம் இருந்துக்கொண்டே இருந்தது மூன்று மாதத்திற்குப் பின் நண்பர் சொன்னார் எனது போர்ட்போலியோவில் நான் டம்மியாக வாங்கிவைத்த பங்குகள் சுமார் நாற்பது சதவீதம் லாபத்தை காட்டுகிறது என்றார் அதே என்னுடைய போர்ட்போலியோவில் இருபதுக்கும் குறைவான சதவீதமே லாபம் காட்டியது.

நாம் தேர்ந்தெடுக்கும் கம்பெனியை பொருத்தமட்டில் நமது லாபமும் இருக்கிறது இன்று ஒவ்வொரு கம்பெனியைப் பற்றியும் இணையத்திலும் தொலைக்காட்சியிலும் விபரமாக கூறுகிறார்கள்.ஆதலால் நாம் முதலில் டம்மியாக ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் அதில் பலனைக் கண்டதும் நமக்கு தானாகவே ஆர்வம் வந்துவிடும். இது எல்லோருக்கும் அல்ல நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மட்டும் இந்த வழி.

ஏஸ்ஐபி(SIP) என்ற திட்டத்தில் முதலீடு செய்வதில் பலன் அதிகம் என்று நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதென்ன எஸ்ஐபி என்கிறீர்களா?
அதாவது சிஸ்டமெட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்.
தினம் ஒரு தொகை அல்லது வாரம் ஒரு தொகை அல்லது மாதம் ஒரு தொகை அல்லது வருடம் ஒரு தொகை என்று நம்மால் எப்படி முடியுமோ அந்தவகையில் நமது சேமிப்பை தொடங்கலாம்.

ஒருவர் மாதம் 5000 எஸ்ஐபி முறையில் சேர்த்தால் மாதமாதம் நாம் செலுத்துகின்ற தொகைக்கு ஏதாவது ஒரு பங்கை வாங்குவார்கள் ஒரு மாதம் இறங்கியும் ஒருமாதம் ஏறியும் இருக்கலாம் ஒரு ஐந்தாண்டு அல்லது பத்தாண்டு சேமிப்பை தொடர்ந்தால் நமது சேமிப்பின் அளவு மிகப்பெரிதாக வளர்ந்திருக்கும் என்பது உறுதி

எனவே இதுவரையில் சேமிக்காதவர்கள் பங்குசந்தை பக்கம் வராதவர்கள் இனி வரலாம் நாணயவிகடனில் பங்கைப்பற்றிய பரிந்துறைகள் கிடைக்கின்றன்.
வரும் நவம்பர் 14ம் தேதி அன்று தி.நகர் வாணி மகாலில் முதலீட்டாளர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது அதில் கலந்துக் கொள்ள NAVCH(space) 562636 என்ற எண்னுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உங்கள் இருக்கையை பதிவுசெய்துக் கொள்ளுங்கள்.

120 கோடி மக்கள் தொகையை எட்டிருக்கும் நம் இந்தியாவில் ஒருகோடி நபர்கள் மட்டுமே பங்குசந்தையில் முதலீடு செய்கிறார்கள் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவானது. ஆதலால் இந்த சதவீதத்தை கூட்டுவதற்கும் உங்கள் வாழ்க்கையின் அமைப்பை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கும் நீங்கள் முதலீட்டாளராக ஆகுங்கள் அதற்கு அதைப்பற்றிய அறிதலில் ஆர்வம் காட்டுங்கள்.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தைரியமாக இவரைப்போன்று.

நாளை சந்திப்போம்.

--------------------------------------------------------------

வலைச்சரம் 5வது நாள்
5.சுற்றுலா தரும் சுகங்கள்

(இன்றைய தினம் தீபாவளி கொண்டாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்)

நேற்று பொருளாதாரத்தைப் பற்றி பார்த்தோம்
சம்பாதித்துக் கொண்டே இருந்தால் எப்படி கொஞ்சம் மூளைக்கும் மனசுக்கும் ஓய்வு கொடுக்கனும்தானே அதற்கு சுற்றுலாதான் சரியான வழி.

சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் மனம் ப்ரெஸ் ஆகிவிடும் புதிதாய் பிறந்த உணர்வுக் கூட சிலருக்கு ஏற்படும் என்று சுற்றுலா பிறந்தக் கதையைச் சொல்கிறார் நெல்லைச்சாரல்.

சுற்றுலா என்பது மனசுக்கு சுகமான ஒன்று பலரும் சுற்றுலா செல்ல வேண்டும் என்று மனசுக்குள் பெரிதும் விரும்புவார்கள் ஆனால் விருப்பத்திற்கு மாற்றமாக வேலை அல்லது வேறு ஏதாவது காரணங்கள் சம்பவங்கள் நடந்து சுற்றுலா செல்லமுடியாமல் சில காலங்கள் அதை மறந்தே கூட போயிருப்போம். சுpல தருணங்களில் நமது நண்பர்கள் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி சுவாரஸ்யமாக பேசும்போது நாமும் செல்ல வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். வருகின்ற ஆசைகள் அனைத்தையுமே நாம் நிறைவேற்றி விடுகின்றோமா?

சிறுவயதிலிருந்தே சுற்றுவதற்கு எனக்கு மிக விருப்பம் ஆசை. நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் புறப்பட்டேன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் என்னையும் சென்னையும் சுற்றிப்பார்க்க சென்றேன்.இதுதான் எனது முதல் சுற்றுலா.

என்னுடன் பணிப்புரியும் மும்பையைச் சார்ந்த நண்பன் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வருவான் அவன் சுற்றிய இடங்களை புகைப்டத்தில் பார்க்கும்போது எனக்கு ஆசையாக இருக்கும் ஆனால் ஆண்டு விடுமுறையில் சுற்றுலா செல்ல திட்டம் இல்லாமல் அது தட்டிபோகும்.

அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்க்கையை துவங்கிய பிறகு சுற்றுவதற்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கிறது. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கூட்டு குடும்பம் போல அண்டை நாடுகளுக்கும் தூரமான ஊர்களுக்கும் காரில் சென்று வருவது அலாதியான நிகழ்வு.

அதுபோல் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி தொடர்கதை எழுதுகிறார் அன்புடன் ஆனந்தி அதில் ஆனந்த அனுபவம் இருக்கிறது.

எப்பவுமே வேலை வேலை என்று பார்த்துக் கொண்டிருந்தால் நிறைய சம்பாதிக்கலாம் ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது சம்பாதித்ததை நமக்காக கொஞ்சமாவது சிலவு பண்ணக்கூடிய இடம் சுற்றுலாவில்தான். கணவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு வாரம் சுற்றுலா சென்றால் அந்த ஒருவாரக் காலத்திற்கு ஒருவரையொருவர் பிரியாமல் ஒவ்வொரு மணித்துளியிலும் இணைந்தே இருப்பதற்கு சுற்றுலா மிகப்பெரிய வாய்ப்பை கொடுக்கிறது.

பள்ளியில் கல்லூரியில் என சக நண்பர்களுடன் அரட்டை அடித்து சுற்றிருப்போம் அந்த நிகழ்வை அசைபோட்டால் இன்றும் கூட அது சுகமாகவே இருக்கும். அப்படி அசைப்போடுகிறார் பூமகளின் பூக்களம்.

கல்லூரியில் சுற்றுலா செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தில்லை ஆனால் அமீரகப்பதிவர்களுடன் சென்ற சுற்றுலா மறக்க முடியாதது.

இன்று நாம் இருக்கும் இடத்திலிருந்தே நமது சுற்றுலா தளங்களை தேர்வு செய்யலாம் அங்கு தங்குவதற்கு விடுதி மற்றும் வாகனங்களை ஏற்பாடு செய்யலாம் நாம் தேர்வு செய்திருக்கும் சுற்றுலா தளத்திற்கான சிலவினங்கள் எவ்வளவு? ஆகும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துவிடக் கூடிய அளவிற்கு இணையதளத்தில் வழிகாட்டிகள் நிறைந்து இருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு எனது குடும்பத்தார்களுடன் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்றேன். மூன்று மாதத்திற்கு முன்பாகவே ஆன்லைன் மூலமாக எனது பயணத்தினை பதிவு செய்தேன் அந்த சுற்றுலாவின் அனுபவம் தான் மனம்கவர்ந்த மலேசியா கட்டுரை.

இந்த ஆண்டு ஜூலையில் நமது இந்தியாவின் வடமாநில சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டு இரயில் டிக்கெட்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து திட்டமிட்டபடி சுற்றுலாவை நிறைவு செய்தேன்.

இவைகளைப் பற்றி இங்கு குறிப்பிடக் காரணம் சுற்றுலா செல்வது கடினமல்ல அதற்காக நேரத்தை நாம் ஒதுக்கினால் எந்த நாட்டுக்கும் செல்லலாம் அதுமட்டுமல்ல அந்த நாட்டைப் பற்றிய விபரங்களையும் முன்னரே நாம் தயார் செய்துக் கொள்ளலாம் அவ்வளவும் எளிமையே.

இந்த உலகம் நமது உள்ளங்கையில் இருக்கிறது அமெரிக்கா முதல் ஆப்ரிக்காவரை எங்கு செல்லவேண்டுமோ அங்கு சென்று வரலாம் பணமும் மனமும் இருந்தால் மட்டும்.

அந்தமான் சுற்றுவதற்கு ஆசை நேபாளும் சுற்றுவதற்கு ஆசை ஆனால் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆண்டு தோறும் சுற்றிக் கொண்டிருப்பது மனசுக்கும் உடலுக்கும் வயசு குறையும் என்று சொல்வது உண்மை.

தமிழர்களின் சிந்தனை களத்திற்குள் சென்றால் தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களை முழுமையாக காணமுடிகிறது.

இந்த சுட்டிகளை முழுவதும் படித்தீர்கள் என்றால் சுற்றுலா இதுவரையில் செல்லாதவர்கள் இனி செல்வார்கள் என்று உறுதியுடன் என்னால் கூறமுடியும்.

-----------------------------------------------------------------

வலைச்சரம் 6வது நாள்
6.அமுதம் வற்றாத அன்னை

பல்வேறு கலாச்சாரங்கள் உலகநாடுகளில் அவ்வபோது தலைத் தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்ததும் பாசமும் பெருகிவரும் கலாச்சாரங்களால் வெற்றிக் கொள்ளமுடியாதவை என்கிறார் ஹிசாம்.

பத்துமாதம் சுமந்து
பெற்றெடுத்த அன்னையை
நெஞ்சம் கொள்ளளவு நேசிக்க
என்நெஞ்சத்தில்
இடம் போதவில்லையே
இறைவா!
என்று பிரார்தித்தவனாய்…
தாயைப் பற்றி பலரும் தங்களின் பாச எண்ணங்களை பதிவுகளில் பதித்திருக்கிறார்கள். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வலைச்சரத்தில் ஆறாம் நாளில் அடிவைக்கிறேன்.

சம்பாதிப்பதற்காக வேண்டி தாயையும் தாய்நாட்டையும் பிரிந்து வேலைப்பார்ப்பவர்களுக்கு மத்தியில் தாயைவிட எனக்கு வேலை முக்கியமல்ல என்று உதறிய நல்உள்ளத்தின் உண்மைக்கதைதான் தாயிற் சிறந்ததோர் வேலையுமில்லை.

இம்சை அரசி தனது 100வது பதிவில் என் அம்மாவிடம் முதல் சம்பளத்தில் முதல்முதலாய் உங்களுக்குத்தான் வாங்கினேன் என்று தரும்போது அந்த முகத்தில் வரும் சந்தோசத்தைப் பார்க்க காலமெல்லாம் கம்மல் வாங்கவும் நான் தயாரானது யாருக்குத் தெரியப்போகிறது என்கிறார்.

காய்ச்சலில் நெற்றித் தொடும்போதும்
மழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்
தோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த
ஆளில்லாத போதும்
நினைவுகளில் நிழலாடுகிறது அம்மாவின் அன்புக்கை…
ராஜவம்சத்தில்
நிலாரசிகனின் பாசக்கவிதை இது.

அம்மா என்றால் அன்புமட்டும்தானா? அதையும் தாண்டி யோகிராமானந்த குரு தனது அனுபவக் கவிதையை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.

ஒருமுறை நமது முன்னால் ஜனாதிபதி மரியாதைக்குரிய அப்துல்கலாம் அவர்கள் ஆஸ்தெர்லியா நாட்டுக்கு பயணம் சென்றிருந்தார். மாணவ மாணவிகள் நமது ஜனாதிபதியிடம் கேள்விகள் கேட்னர். அதில் ஒரு மாணவி அப்துல்கலாம் அவர்களிடம் நீங்கள் பிறந்த ஊர் எது என்று கேள்வி கேட்டார் அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் சொர்க்கம் என்று!
இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத மாணவி திகைப்புடன் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு இந்திய வரைப்படத்தை காண்பித்து இது எங்களின் தேசத்தாய் இதில் எனது பிறந்த ஊர் வரைப்படத்தில் கீழே இராமேஸ்வரம் இருப்பதினால் தேசத்தாயின் காலடியில் எனது ஊர் இருக்கிறது தாயின் காலடியில்தானே சொர்க்கம் இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

தாயின் காலடியில்தான் சுவர்க்கமிருக்கிறது என்று அருமை நபிகள் நாயகம் (ஸல் அலை) அவர்கள் கூறினார்கள்.அந்த காலடிகளை கலங்கப்படுத்திய கால்களின் நிலையை இந்தச் சிறுகதை விளக்குகிறது

அன்னையின் அன்பைப் பற்றி எவ்வளவு உதாரணங்கள் சொன்னாலும் அது முடிவில்லாதது இவர் கவிதையில் தாய்யன்பை இப்படி எல்லாம் ஒப்பிடுகிறார்.

தாயின் வயிற்றில் கருதோன்றிய சிலவாரங்களிலேயே கருவின் மூளையில் நியுரான்களின் உற்பத்தி ஆரம்பமாகி விடுகிறது. அதனால்தான் என்னவோ இன்றைய மருத்துவ உலகம் குழந்தை வயிற்றில் இருக்கும் போழுதே ஆக்கப்பூர்வமான சில பல செயல்களை கருவுற்ற தாய்மார்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. குழந்தை பிறந்து உலகின் முதல் சுவாசத்தை ஆரம்பித்த உடனேயே நமது கடமைகளும் ஆரம்பமாகிவிடுகிறது என்று சகோதரி ஸாதிகா அறிவான சந்ததிகளை உருவாக்க ஆலோசனை வழங்குகிறார்.

ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு தாய் எப்படி எல்லாம் கஸ்டப்படுகிறாள் என்பதை அம்மான்னா சும்மாவா? அபிஅப்பா எழுதுகிறார்.

என் ஒவ்வொரு அணுவிலும்
கலந்த என்னுயிர் அன்னையே
எப்படி மறப்பேன்
ஒரு நொடியிலும் நின்னையே!

எனக்கு தேவையில்லை தனியொரு தினம்.! என்கிறார்.



குழந்தைகள் நன்கு படிப்பதற்கும் நல்ல பண்புகளுடன் விளங்குவதற்கும் தாயே முக்கியக் காரணம். ஆவளின் அதி கவனமும் கவனிப்பும் இல்லையேல் குழந்தைகள் சிறப்புறவளர மாட்டார்கள்.என்று தன்னம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.




அந்தளவு தாயுடைய பொருப்பும் கவனமும் தன் பிள்ளையின் மீது சதா இருந்துக்கொண்டே இருக்கிறது ஒரு தாய் தனது பிள்ளையை அன்னை என்ற ஸ்தானத்தில் வளர்க்கும் பொருப்பைவிட இந்த உலகில் எந்த ஒரு பதிவியும் உயர்ந்தது அல்ல.

இப்படி எண்ணெற்ற பதிவுகளை தாயைப்பற்றி உள்ளத்திலும் எண்ணத்திலும் எழுத்திலும் எழுதுகிறார்கள் தங்களின் தாய்மேல் வைத்திருக்கும் அன்பை செயலில் காண்பித்தால் முதியோர் இல்லங்களின் தேவை தேவையற்றதாக ஆகிவிடும்.

மீண்டும் நாளை நன்றி.

------------------------------------------------------------------
வலைச்சரம் 7வது நாள்

7.மானிடம் தேடும் மனிதநேயம்

இன்றைய காலத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மிகக்கடினமாக இருக்கிறது. ஆனால் மனிதநேயம் தளர்ச்சியடைந்து வருகிறது. நமது தேவைகளுக்காக வேண்டி எத்தனையோ மறியல்களை போராட்டங்களை செய்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம்மிடம் மனிதநேயத்தை வளர்க்க பேதங்களை களைக்க இன்னும் போதிய போராட்டங்கள் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை.

தேடல் இன்றி வந்தப் பொருள்
வாழ்வில் நிலைப்பதுமில்லை
தேடிதேடி கிடைத்தப் பொருள்
எளிதில் தொலைந்ததுமில்லை
என்பது பாடல் வரிகள்

இன்று தேடப்படுவது மனிதநேயம்
அது கிடைப்பதற்கு அனைவரும் சேரவேண்டும்;.
அனைவரும் ஒன்று சேருவதற்கு மனம் வேண்டும்
அந்த மனதில் தெளிவுவேண்டும்
இவைகளை பெறுவதற்கு மனிதன் மனிதனாக வேண்டும்.

மனிதர்களிடத்தில் இருக்கும் மனிதமும் மனிதநேயமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சுயநலம் மட்டுமே இருந்துவருவதாக எனக்கு பட்டது நீங்கள் சொல்லுங்கள் இந்த மனித நேயமில்லாத உலகில் வருங்கால சந்ததிகள் எப்படி வாழப்போகிறார்கள்? என்ற கேள்வியுடன் சாலை விபத்தில் நடந்த சம்பவத்தை விவரிக்கிறார் சக்திவேல்.

ஒரு கவிஞன் சொல்கிறான்
சாதிக் கலவரத்தில்
மனிதர்கள் சாகும் முன்னே
அவர்களுக்குள் செத்துப்போனது
மனிதநேயம்.

உலகின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா உலகுக்கெல்லாம் நீதி சொல்ல ஆயுதங்களோடு புறப்பட்டுக் கொண்டிருக்கிறது வீட்டுக்குள்ளே நிறவெறியும் இனவெறியும் மரித்துப்போன மனிதாபிமானமுமாக வீச்சமடிக்கிறது என்று அமெரிக்காவின் மனிதநேயத்தைப் பற்றி அலசல் செய்திருக்கிறார்.

இளங்கோவனுக்கும் கார்த்திக்காயனிக்கும் பிறந்ததால் இந்துவானேன்.
டேவிட்டிற்கும் எலிசபத்திற்கும் பிறந்ததால் கிறிஸ்துவனானேன்
அன்சாரிக்கும் பேகத்திற்கும் பிறந்ததால் முஸ்லிம்மானேன்
யாருக்கும் யாருக்கும் பிறந்தால் மனிதனாவேன்.!
என்று செப்புப்பட்டயம் செப்புகின்றார்.

சென்ற ஆகஸ்ட்டில் சிலி நாட்டில் சுரங்கத்தில் நடந்த விபத்தில் மாட்டிக்கொண்ட மனித உயிர்களை அந்நாடு மனிதநேயத்துடன் கொடுக்கப்பட்ட கால அளவைவிட துரிதமாக காப்பாற்றிய நிகழ்வை இந்த உலகமே கண் கொண்டுப்பார்த்தது. இந்த மனிதநேய உணர்வு எல்லா நாடுகளிலும் பேதமில்லாமல் பேணப்படவேண்டும். சுரங்கமே வீடாக மாற்றிக் கொண்டு வாழ்ந்த நிகழ்வை விவரிக்கிறார் ஹுஸைனம்மா.

மனிதநேயமென்பது அடிப்படையில் தனிமனிதனின் கௌரவம் மற்றும் பெருமதியைக்குறித்த ஒரு தத்துவப்பார்வை அதன் அடிப்படைக்கூறு மனிதர்களுக்குள் செய்யப்படும் அறிவார்ந்த தன்மையையும் நல்லனவற்றிக்கும் உண்மைக்கும் பொறுப்பாக இருக்கும் குணங்களையும் கண்டறிந்து சொல்வதுமாகும் என்று ஒரு ஆய்வு கட்டுரையை வரைந்துள்ளார் அ.ராமசாமி.

முன்னேற்றத்திற்கு பல்வேறு மூலதளங்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கக்கூடியது மனிதநேயமாகும். ஆப்படி என்றால் மனிதநேயம் என்றால் என்ன? என்றக் கேள்வி எழுகிறதல்லவா?
சகமனிதர்களை நேசிக்கின்ற மாண்பு சகமனிதனை மனிதனாகப் பார்க்கின்ற அணுகுமுறை தனக்கு இருக்கிற அனைத்து உணர்வுகளும் தனக்குள்ள அனைத்து அடிப்படைத் தேவைகளும் அடுத்தவருக்கும் வேண்டும் என்று எண்ணி ஏற்று அங்கீகரிக்கின்ற தன்மை சகமனிதனைப் பாசத்தோடும் பரிவோடும் கருணையோடும் நோக்கும் அன்புநிலையே மனிதநேயம் என்கிறார் கடலோரம்.

மதம் மொழி நிறம் இவைகளுக்கு அப்பால் ஆழ்மனதிலிருந்து பொங்கிவரும் நேயத்தை பகிருபவர்கள்தான் மனிதர்கள்.ஆதலால் என்றும் எப்போதும் நம்மிடம் வளர்ப்போம் மனிதநேயம்.

இதோ விரைவில் நன்றியுரையுடன் …

-------------------------------------------------------------------------

நிறைவுடன் நவிழ்கின்றேன் நன்றி!

பதிவர்களுக்கு இலவச மின்னூல் தருவதாக கூறியிருந்தேன்.இந்த மின்நூல்களை மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
பல அரிய நூல்களை மின்நூலாக பிடிஎப் பைலில் கொடுத்துள்ளார்கள் அந்த மின் நூல்களை பெறுவதற்கு சில விதிமுறைகளை தற்போது ஏற்படுத்தி உள்ளார்கள் தங்களுக்கு தேவையான நூல்களை சுட்டி கொடுக்கப்பட்ட சுட்டியை கிளிக் செய்யவும்.

இந்த ஒரு வாரக்காலத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவுடன் நிறைவு செய்தேனா? என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த ஒரு வாரம் அதிகமாக இணையதளத்தில் நேரங்களை சிலவு செய்திருக்கிறேன். பல புதிய பதிவர்களையும் நற்கருத்துக்களையும் அறிந்துக் கொள்ள பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பு பெற்றிருக்கிறேன்
அதற்கு வலைச்சரக் குழுமத்தினர் ஐயா சீனா மற்றும் கயல்விழி முத்துலெட்சுமி
பொன்ஸ் பூர்ணா அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

இந்த ஒரு வாரக்காலத்தில் எனது இடுக்கைகளுக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்துக்களை வழங்கிய நல்லுள்ளங்கள்
ஐயா சீனா,
கலாநேசன்,
ராஜாகமால்,
நிஜாமுதீன்,
சகோதரி சாதிகா,
சகோதரி ஹ_ஸைனம்மா,
சகோதரி சித்ரா,
சகோதரி துளசி கோபால்,
சகோதரி பாத்திமா ஜொஹ்ரா,
சகோதரிஆசியா உமர்,
தேவா,
ஜோதிஜி,
ஒ.நூருல்அமீன்,
அன்பரசன்,
ஸ்டார்ஜன்,
நிகழ்காலத்தில்,
ஜெய்லானி,
சென்ஷி,
சே.குமார்,
அரவிந்தன்,
இராமசாமி கண்ணன்,
நட்புடன் ஜமால்,
அப்துல் மாலிக்,
செல்வராஜ் ஜெகதீசன்,
இராகவன் நைஜிரியா,
விஜய் ,
சுல்தான்
ஒருவரை மனம்விட்டு பாராட்டுவதும் வாழ்த்துச் சொல்வதும் மனிதநேயம்.!

அனைவருக்கும் நன்றி!