உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, August 31, 2010

வடமாநிலச் சுற்றுலா - 10 (முடிவு)


இரவு உறங்கி விழித்த எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது இன்று பாரத பந்த் ஆதலால் கடைகள் அடைக்கப் பட்டிருக்கின்றன எங்கும் பொருட்களை வாங்க செல்ல முடியாது ஆதலால் விடுதியிலேயே இன்றைய பொழுதை கழிக்கவேண்டும் என்ற நிலை உருவானது.

விடுதி பொறுப்பாளர்கள் வெளியில் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்கள் ஆதலால் பெண்கள் குழந்தைகளை விடுதியில் விட்டுவிட்டு நானும் நண்பர் ஹாஜாவும் கடைத்தெருவை சுற்றிப்பார்க்க புறப்பட்டோம்.

அரசியல் வாகனங்கள் நிறைய ஊர்ந்தன ஒவ்வோரு முக்கிட்டிலும் காவலர்கள் தடியுடன் கூட்டம் கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தார்கள் மக்கள் அவசரஅவசரமாக அங்குமிங்கும் அழைந்துக் கொண்டிருந்தார்கள் பரபரப்பு அதிகமாகவே இருந்தது உணவு விடுதிகளைத் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தது சிலர் சொன்னார்கள் மதியத்திற்குள் கடைகள் திறந்துவிடுவார்கள்.

இந்த பரபரப்பைக் காணும்போது பீம்சிங் மன்னருடைய ஆட்சி நடப்பதுபோல் ஒரு பிரமை எனக்குள் ஏற்பட்டது. மன்னர் ஊரைச் சுற்றி வலம் வருகிறார் என்றால் சிப்பாய்கள் சுறுசுறுப்புடன் வீதியிலே அணிவகுத்து நிற்பதுபோல காவலர்கள் நின்றார்கள்.
அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒலிப் பெருக்கியில் ஆளும்கட்சியை குறைக்கூறிக் கொண்டு காரில் சென்றார். ஒருநாள் அடைப்பில் எத்தனையோ ஆயிரம்கோடி நஸ்டம் என்று தொலைக் காட்சிக்காரர்கள் கணக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் வியாபாரத்தை இந்திய வணிகர்கள் ஏழைகளுக்கு வழங்கினால் வறுமையின் நிறம் சிவப்புளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறுபடலாம்.

மாலையில் வெளியில் புறப்பட்டோம் ஆட்டோக்கள் ஓடின சில கடைகள் மட்டும் திறந்திருந்தது மீண்டும் ஜல்மஹால் சென்றோம் அன்று மழை பெய்திருந்ததால் குளுமையாக இருந்தது வாண்டுகள் ஒட்டகசவாரி செய்ய ஆசைப்பட்டார்கள் ஆசை நிறைவேறியது.

அங்கிருந்து ஹவா மஹால் சென்றோம் அதன் உள்ளே ஒன்றும் இல்லை வெறும் கட்டிடமாகவே நின்றது ஹவா என்றால் காற்று."காற்று வீசும் அரண்மனை" அல்லது "தென்றல் வீசும் அரண்மனை"),இது 1799ஆம் ஆண்டு மஹாராஜா ஸவாய் ப்ரதாப் ஸிங் என்பவரால் கட்டப்பட்டது, மேலும் ஹிந்து கடவுள் கிருஷ்ணாவின் கிரீடத்தின் அமைப்பில் லால் சந்த் உஸ்தா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சிக்கலான பின்னல் வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஜரோகாக்கள் எனப்படும் சிறிய ஜன்னல்கள் 953 உள்ள வெளியிலுள்ள அதனுடைய சிறப்பான ஐந்தடுக்குக் கட்டடம்கூட, தேன்கூட்டிலுள்ள அறுகோணவடிவ அமைப்புவகையைச் சார்ந்ததாகும். தொடக்கத்தில், பின்னல் வேலைப்பாட்டின் நோக்கம், மேல்நிலைப் பெண்கள் கடுமையான "பர்தா" (முகத்திரை). முறையைப் பின்பற்றவேண்டியிருந்ததால், அவர்கள் இருப்பதை மற்றவர் பார்க்காவண்ணம் இருந்து கீழே சாலையில் நடைபெரும் அன்றாட நிகழ்வுகளைக் கவனிப்பதேயாகும்.

சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ண மணல்கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மணை, ஜெய்ப்பூர் வணிகப்பகுதியின் முக்கிய இடத்தின் பொது வழியில் அமைந்துள்ளது. அது நகர அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்குவதுடன், ஜினானா அல்லது பெண்களின் அறைகள், அந்தப்புரம் வரை பரவியுள்ளது. குறிப்பாக அது அதிகாலை வேளையில் சூரியனின் பொன்னிற ஒளியுடன் மின்னுவதைப் பார்க்கும்போது மிக்க மகிழ்வூட்டுவதாக உள்ளது.

சிட்டி பேலஸ் இது முபாரக் மஹால் மற்றும் சந்திரா மஹால் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் உட்புறத்தில் அழகிய தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெய்பூர் நகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


இரவுவரையில் திறந்திருந்த சிலகடைகளில் கிடைத்தப் பொருட்களை பார்வையிட்டோம் பல கடைகள் அடைப்பு என்பதினால் விலைகளில் ஏற்றமிருந்தது அதனால் எங்கள் மனதில் மாற்றம் வந்தது நாளை வாங்கலாம்.

பொழுது விடிந்தது ஆனால் என் உடம்பு விடியவில்லை. பின்னிரவிலிருந்து வயிற்றுப்போக்கு ஒருமுறை இருமுறையல்ல பலமுறை. எண்ணெய் பண்டங்களை உண்டதினால் அது அஜீரணகோளாறை ஏற்படுத்திவிட்டது. முதலுதவிக்காக எடுத்துவந்த மாத்திரைகளை விழுங்கிப் பார்த்தேன் திறந்த அணை மூடுவதாக இல்லை.

இன்று மாலை ஜெய்பூரிலிருந்து கோயமுத்தூர் சூப்பர்பாஸ்ட் இரயிலில் சென்னை புறப்பட்டாகவேண்டும் ஆனால் வாங்கவேண்டிய பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததினால் காலை 10 மணிக்கு என்னைத்தவிர மற்றவர்களை கடைத்தெருவிற்கு அனுப்பிவிட்டு நான் மட்டும் விடுதியில் தங்கிக் கொண்டேன்.
நின்றபாடில்லை பெய்கின்ற மழையும் வயிற்றுப் போக்கும் நிற்காமல் இருந்தால் ஆபத்துதான். பலமிலந்தவனாய் படுத்திருந்த நான் மெல்ல எழுந்து பக்கத்தில் இருந்த கிளினிக் சென்றேன். மருத்துவர் இல்லை செவிலியர் இருந்தார் நிலமையைச் சொன்னேன் அவர் கைபேசியில் மருத்துவரை அழைத்து என்கையில் கொடுத்தார் சொன்னேன் சிலமருந்துகளை செவிலியர் தருவார் சாப்பிடுங்கள் என்றார் இது கைப்பேசி கிளினிக் எனக்கு மருந்து கிடைத்தது சிலமணி நேரங்களுக்குப் பின் வயிற்றுப் போக்கு சரியானது ஆனால் உடல் ரொம்பவும் பலஹீனமாக இருந்தது. வெளி ஊர்களுக்குச் சென்றால் எண்ணெய் பண்டங்களை தவிர்ப்பது நல்லது என தீர்மானித்துக் கொண்டேன்.எண்ணெயில் செய்யாத பண்டங்கள் கிடைத்தாலும் ருசி எண்ணெயில்தானே இருக்கிறது.

கடைவீதிகளை முடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுக்களை தயார்செய்து இரயில்நிலையம் செல்வதற்கு ஆயத்தமானோம். உள்ளுர்வாசிகளின் பரிந்துரையில் விடுதி அறை முன்பதிவு செய்திருந்ததால் தள்ளுபடி கிடைத்தது.

சிறப்பான முறையில் வாடிக்கையாளரை கவனித்து அவர்களை கவர்ந்ததினால் இணைய வலையிலும் வளம் வருகிறது மதினா விடுதி.
மாலை 6.00 மணிக்கு புறப்பட்டோம்.

ஜெய்பூரின் இரயில் நிலையம் எங்களை கூட்டத்துடன் வரவேற்றது. கோயமுத்தூர் விரைவு வண்டி தளத்தில் அப்போதுதான் நுழைந்தது எளிதாக எங்கள் பெட்டியைத்தேடி ஏறிக் கொண்டோம்.

சென்னையில் நடந்ததைப் போன்றே இங்கும் எங்களின் இருக்கை முன்னும் பின்னும் மாறியிருந்தது பாசத்திற்குரிய பயணிகள் எங்களுக்காக தங்களை இடம் மாற்றிக் கொண்டு சந்தோசமளித்தார்கள். அந்த அத்தனை பயணிகளுக்கும் எங்களின் சுற்றுலா குழுவினர்கள் சார்பில் நன்றியை சமர்ப்பிக்கின்றோம்

வயிற்றுப்போக்கினால் உடல் அசதி அதிகமாகவே இருந்தது ஆனாலும் சமாளித்தேன் அன்றைய இரவு நல்ல உறக்கம்.


மீண்டும் சென்னையை நோக்கியது எங்கள் பயணம் ஆனால் ஒரு வித்தியாசம் ஜெய்பூரிலிருந்து மழையை கூடவே சென்னைவரையில் அழைத்துச் சென்றோம்.

இந்த சுற்றுலாவை நாங்கள் நினைத்தபடி மனம் நிறைவுடன் நிறைவு செய்தோம்.

வடமாநிச் சுற்றுலா பதிவை பதிவிட்டதிலிருந்து பின்தொடர்ந்து பின்னூட்டமளித்து ஊக்கம் தந்த பதிவர்கள்

நிஜாமுதீன்,
நாஞ்சில் பிரதாப்,
அப்துல்பாஸித்,
நீடுர் அலி,
சுல்தான்,
ஜூவன்பென்னி,
ராம்ஜியாஹ_,
வித்யா சுப்ரமணியம்,
எம்.எம்.அப்துல்லா,
அப்துல்மாலிக்,
ஊமையன்,
ஜோ அமலன் ராயன் பர்னான்டோ,
மஞ்சூர் ராஜா,
ஜோதிஜி,
குசும்பன்,
ஆக்கூரான் தமிழ்,
சிநேகிதி,
ஸாதிகா,
அப்துல்கதீம்,
சிம்மபாரதி,
க.நா.சாந்திலெட்சுமணன்,
துளசிகோபால்,

உங்களின் வருகைக்கும கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

Thursday, August 26, 2010

வடமாநிலச் சுற்றுலா - 9


மழைத்தூறல் அதிகமானது வாகனங்கள் வேகத்தை குறைத்துக் கொண்டன செல்லும் வழியெல்லாம் தரிசான விளைநிலங்களில் விழுந்த மழையின் நீரை தன் தேகத்தில் தாங்கியதுமே விழுங்கிக் கொண்டது மண். உணவுக்காக அலைந்த ஏழையைப்போல ராஜஸ்தானின் விளை நிலமும் மழைக்காக ஏங்கும் ஏழையாகவே இருக்கிறது.

கரும் மேகங்கள் எங்கே கலைந்து விடுமோ என்ற கவலை எனக்கு பெய்யட்டும் மழை பெய்யட்டும் எத்தனை ஏழைகள் இதற்காக ஏங்கினார்களோ பகலெல்லாம் தூங்கினார்களோ அவர்களுக்காக பெய்யட்டும். தண்ணீரின் தாகம் மனிதனுக்கு மட்டுமல்ல பூமிக்கும் இருக்கிறது பூமிக்குள்ளும் தண்ணீர் இருக்கிறது.

ஜெய்பூர் அஜ்மீரின் பிரதான சாலை மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது வாகனங்களுக்கு எந்த இடையூரும் இல்லாமல் இருவழிப் பாதையில் மூன்று பாத்திகளாய் பிரித்திருந்தார்கள் வாழ்க்கையைப் போல் வாகனங்களின் வேகமும் அதிகரித்துக் கொண்டிருந்தன.

அஜ்மீர் செல்லும் வழியில் கிரானைட் பாறைகளை அறுக்கும் தொழிற்சாலைகள் வரிசையாக நிறைந்திருந்தது பல மாநிலங்களுக்கு இங்கிருந்துதான் சலவைக் கற்கள் அனுப்பப்படுகிறது. இங்கு விலைக்குறைவு ஆனால் இங்கிருந்து எடுத்துச் செல்லும் வாகனத்திற்கான வாடகைதான் அதிகம். பணத்தைவிட பொருள்தேவை உடையவர்களுக்கு வாடகை ஒரு பொருட்டே அல்ல வாங்கிவிடுவார்கள்.

நாங்கள் அஜ்மீரை நெருங்கிக் கொண்டிருந்தோம் மழையின் வேகம் குறைந்துக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் பெய்த மழையினால் பலரைப்போல நாங்கள் மகிழ்ந்தோம். மனிதனுக்கு எதுவெல்லாம் சுகம் தருகிறதோ அதில் மனம் மகிழ்கிறது.

அஜ்மீர் என்றாலே மஹான் ஹஜ்ரத் கரீப் நவாஸ் என்றழைக்கப்படும் மஹான் கவாஜ் மொய்னுதீன் ஹஸன் சிஸ்ட்டி அவர்களின் புனித அடக்கஸ்தளமே அனைவரின் நினைவுக்குள் வரும்.

மதபேதமில்லாமல் இங்கு பிரார்த்தனைக்காக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வருகைப் புரிகிறார்கள். இன்னும் பல நாடுகளிலிருந்தும் அதாவது அமெரிக்கா ஆப்ரிக்கா ஐரோப்பா பாக்கிஸ்தான் ஈரான் பங்களாதேஷ் இலங்கை மலேசியா சிங்கப்பூர் பர்மா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வருகைப்புரிகிறார்கள்.

இந்த இடம் புனித பூமியாக பல நூற்றாண்டுகளுக்கு முன் மஹான் ஹஜ்ரத் கரீப் நவாஸ் அவர்களினால் மாறிப்போனது இந்திய இஸ்லாமிய வரலாற்றில் அஜ்மீருக்கு அன்றும் இன்றும் என்றும் நீங்காத இடம்.
இன்னும் தமிழகத்தில் இஸ்லாமிய கிராமங்களில் அஜ்மீரை சின்ன மக்கா என்றும் அழைக்கின்றார்கள்.

நாம் சில இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்போம் ஆனால் காலச்சூழ்நிலையினால் போகமலேயே காலம் கடத்திவிடுவோம் ஆனால் சில இடங்களுக்கு எந்த திட்டமும் இல்லாமல் நினைத்த நேரத்தில் சென்று வந்துவிடுவோம் அது நமக்கு ஆச்சிரியத்தை அளிக்கும் அப்படித்தான் அஜ்மீரின் பயணம் எனக்கு ஆச்சிரியத்தை கொடுத்தது.

மதினாவைக் கண்ட என்கண்கள் அஜ்மீரையும் கண்டு குளிர்ந்தது ரோஜாவின் வாசனையை அஜ்மீர் எல்லையில் நுகர்ந்தேன். மஹான்கள் என்றும் சம்பூரண மனிதர்கள் இவர்களால் மனித குலத்திற்கு விமோசனமேத் தவிர மோசமில்லை.

உலகில் எத்தனையோ தீர்க்கதரிசிகளும் மஹான்களும் தோன்றி மறைந்திருக்கிறார்கள் இன்னும் மஹான்கள் தோன்றிக் கொண்டும் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால் மனிதன் இன்னும் மனிதனாக வாழவில்லை இந்த மனிதச்சமுதாயம் இந்த மண்ணில் வாழும் வரையில் மஹான்கள் தோன்றிக் கொண்டுதானிருப்பார்கள்.

மஹான் கரீப் நவாஸ் அவர்களின் புனித தர்ஹா ஷரீப்பிற்குள் நுழைந்தோம். பாதுகாப்பு பலமாக இருந்தது. புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை இருந்தாலும் ஆவலில் சிலப்படங்களை எடுத்தேன். காலை நேரம் கூட்டம் இருந்த வண்ணமாகவே இருந்தது அந்த தர்ஹா மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது தர்ஹாவை ஒட்டியே பள்ளிவாசலும் இருக்கிறது. பல மாநிலத்தர்கள் நிறத்தார்கள் மொழியார்கள் கடலில் கலக்கும் பல ஆறுகளைப்போல பல மனிதர்களும் இங்கு சங்கமிக்கிறார்கள்.

எங்களை வரவேற்று அழைத்து சென்றனர் தர்ஹாவின் கமிட்டியினர். அவர்களின் வழிகாட்டுதலில் இலகுவாக எங்களின் பிரார்த்தனையை முடித்துக் கொண்டோம்.

நன்றி சொன்னேன் இறைவனுக்கு நன்றி சொன்னேன். தர்ஹாவைச் சுற்றி கடைகள் அதைச்சுற்றி பலரின் நடைகள் நாகூரை நினைவுப் படுத்தியது. தர்ஹா வாயிலில் ஏழைகள் இங்கு காசு கேட்டவர்களை விட உணவு கேட்டவர்கள் அதிகம். இப்படி ஒரு புனித இடத்திற்கு வருபவர்களால் பல ஏழைகளின் வயிறு நிறைவதற்கு வாய்பளிக்கிறது இந்த மஹான்களின் தர்ஹாக்கள் இன்னும் பல புனித ஸ்தளங்கள்.

சில மணிநேரங்களை அங்கு கழித்துவிட்டு மீண்டும் ஜெய்பூர் செல்வதற்கு ஆயத்தமானோம்.

மனம் நிறைந்திருந்தது வானமும் தெளிந்திருந்தது மீண்டும் வாழ்நாளில் இன்னொருமுறை வருவோம் என மனம் சொன்னது புறப்பட்டோம் ஜெய்பூர் இளம் சிவப்பு நகரத்தை நோக்கி.

மழை பெய்ந்ததினால் பலர் வயலில் ஏர்கலப்பையை ஏந்தி நின்றார்கள் இருக்கும் ஈரத்தை வைத்து தங்கள் வயிற்றை காயவிடாமல் இருப்பதற்கு உழுதுக் கொண்டிருந்தார்கள் பல ஏழைகள் மழையின்றி அழுதுக் கொண்டு இருக்கிறார்கள்.

மாலையில் ஜெய்பூர் வந்தடைந்தோம் மீண்டும் மழையும் வந்தது.

Tuesday, August 24, 2010

வடமாநிலச் சுற்றுலா - 8உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பார்கள் அது எங்களுக்கும் உண்டானது. களைப்பை தீர்க்க எங்களின் கைடு ஜெய்மஹாலை காட்டினார். பெரிய ஏரியின் நடுவில் ஜெய்மஹால் அமைந்திருந்தது. இது மன்னர் பீம்சிங்கின் உல்லாச மஹால் இதனுல் அரச பெண்கள் அதாவது பீம்சிங்கின் குடும்பப் பெண்கள் உள்ளே அனுமதி இல்லை இந்த மஹால் முழுக்க முழுக்க மன்னருக்கு மற்றும் ஆண்களுக்கு உல்லாசத்தை கொடுப்பதற்காக வடிவமைத்திருக்கிறார்.


ஜெய்பூர் இளம் சிவப்பு நகர மையத்தில் ஜெய்மஹால் அமைந்திருக்கிறது. மாலை நேரங்களில் ஜெய்பூர் வாசிகள் இங்கு குழுமி உரையாடுகிறார்கள் நடைபயில்கிறார்கள். இவர்களின் வாய்களுக்கு ருசிபார்க்க பலதரப்பட்ட பலகாரங்கள் தள்ளுவண்டியில் தள்ளி விற்கிறார்கள்.

டெம்போவில் அமர்ந்தபடியே கைடு வாயாலயே படம் காட்டினார். இளம் சிவப்பு நகரத்திற்குள் டெம்போ நுழைந்தது. அந்த நகரம் முழுக்க வணிகக் கடைகள். உணவு விடுதி வாசல்களில் வரிசையாக அமர்ந்திருந்த ஏழை பசிக்காரர்கள்;. தினமும் யாராவது ஏதாவது ஒரு நேர்த்திகடனை நிறைவேற்றினால் தான் இவர்களின் பசி தீரும் இல்லையெனில் ஐயோ பாவம் என யாராவது பணம் வைத்திருப்பவர் இரக்கப்பட்டால் அவர்களின் வயிற்றில் உணவு இறங்கும் அவர்களுக்காக இவர்கள் காத்திருக்கிறார்கள்.


கால்நடைகளுக்கு இளம்சிவப்பு நகரத்தில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. மனிதர்களோடு அவைகளும் நடக்கின்றன கழிக்கின்றன. சுத்தத்தை பற்றி மனிதர்களே கவலைப்படாத போது கால்நடைகளுக்கு எதற்கு கவலை.

இளம் சிவப்பு நகரத்திற்குள் மியுசியம் இருக்கிறது அதில் மன்னர் அணிந்த உடைகள் உபயோகித்த பொருட்கள் என பலபொருட்களை சிறை வைத்திருந்தார்கள்.

அரண்மனைக்குள் செல்வதற்கு அதிகத் தொகை என பயமூட்டினார் கைடு.பரவாயில்லை மூன்று தினங்கள் ஜெய்பூரில்தான் தங்குவோம் அப்போது பார்த்துக் கொள்கிறோம் என்றேன்.

நகரத்தை சுற்றிவிட்டு டெல்லிக்கு நகர்வதற்கு ஆயத்தமானது டெம்போ எங்களை இங்கேயே இறக்கி விடுங்கள் தங்கும் விடுதிக்கு செல்கிறோம் என்றதும் முகவரி கேட்டு ஆட்டோவில் அமர்த்தி அனுப்பி வைத்தார்கள்.

இளம் சிவப்பு நகரத்தின் காட்கேட்டில் உள்ள தங்கும் விடுதியில் முன்பதிவு செய்து வைத்திருந்தார் அப்துல்காதர். இவர் எனது உறவினரின் வணிக நண்பர் என்றாலும் எங்களை காண்பதற்காக தூரத்தை கடந்து வந்திருந்தார்.

இவர் ஜெய்பூர்வாசி ஒலிபெருக்கி தொழிலிற்சாலை வைத்துள்ளார். இருநூறு பணியாளர்களுக்கு இவர் ஒரே முதலாழி என்றாலும் தொழிலாளியாக இருந்து முன்னுக்கு வந்த முதலாழி. எங்களை ஓய்வு எடுக்கசொல்லி விட்டு நாளை சந்திப்பதாக கூறிச் சென்றார். சொன்னதுபோலவே மறுதினம் வந்து இரவு உணவை தன்னுடன் சேர்ந்து உண்கவேண்டும் என கட்டாயப்படுத்தினார். எனக்கு வியப்பாக இருந்தது. முன்பின் அறிமுகமில்லாத இவர் எங்களுக்காக தங்கும்விடுதியை முன்பதிவு செய்துவிட்டு அத்துடன் நகர்ந்துவிடலாம் ஆனால் விருந்து போடுமளவு அவரின் நெருக்கம் என்மனதிற்கு இருக்கத்தை கொடுத்தது. வேண்டாம் என்று கூறியும் விடுவதாக இல்லை நானும் நண்பர் ஹாஜாவும் அவருடன் சென்றோம். தரமான உணவகத்தில் அவருடன் உணவருந்தினோம் அவரின் கடந்தகால கஸ்டங்களை வார்த்தைகளாக்கினார்.

அவைகள் என் மனதிற்கு உரங்களாகியது நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். உற்சாகமாக இருந்தது கீழ்மட்டத்திலிருந்து புறப்பட்டவர் மனிதனை நேசிக்க கற்றுக் கொண்டவர் அவரிடம் அந்த நிமிடங்களில் நிறைய கற்றுக் கொண்டேன். பயன்களை முன்வைத்து பழகும் மனிதர்களிடையே இப்படிப்பட்ட பூரண மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவரின் வாழ்க்கை தரம் இன்னும் மென்மேலும் உயரும்.

மாலை ஆறுமணிக்கு விடுதிக்குள் வந்ததினால் சிலமணிகள் ஓய்வு எடுத்துக் கொண்டு கடைத்தெரு சென்றோம். கல்பதித்த புடவைகள் சுடிதார் துணிகள் என பலவண்ணங்களில் பெண்களின் எண்ணங்களில் நிழலாடிய ஆடைகளை ஆசை ஆசையாய் அள்ளினார்கள். விலை கொடுக்கும்போது மட்டும் நாங்கள் தலைகாட்ட வழக்கம்போல் பேரம்தான்.

விடுதியுடன் சேர்ந்த உணவகத்திலிருந்து எங்களின் அறைகளுக்கே உணவுகள் பறிமாறினார்கள். அசதிக்கு சந்தோசம் இதுவும் வசதியாகத்தான் இருந்தது.

மறுதினம் காலையில் அஜ்மீர் செல்வதற்கு ஆயத்தமானோம் அதற்கு இனோவா வாகனத்தை விடுதியில் ஏற்பாடு செய்து தந்தார்கள். கிலோமீட்டருக்கு 7.50 என விலை நிர்ணயித்தார்கள்.

ஜெய்பூர் இளம் சிவப்பு நகரத்திலிருந்து சுமார் 130 கி.மீ தூரம் அஜ்மீர். நாங்கள் புறப்பட்டபோது எங்களுடன் மேகங்களும் புறப்பட்டது எங்கள் வருகையில் ஆனந்த கண்ணீரை மழையாய் பொழிந்து எங்களுக்கு ஆனந்தத்தை கொடுத்தது சந்தோசமாக பயணமானோம்.

சந்தோசப் பயணம் தொடரும்..

Thursday, August 19, 2010

வடமாநிலச் சுற்றுலா - 7


காலை 6.00 மணிக்கு டெம்போ தயாராக நின்றது எங்களுடன் இன்னும் நான்கு நபர்கள் அதில் பயணிகளாக வந்தார்கள் அதில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி மற்ற இருவர் சேலத்தைச் சார்ந்த தமிழர்கள்.

எங்களின் டெம்போ ஜெய்பூரை நோக்கி புறப்பட்டது டெல்லி ஜெய்பூரின் தேசிய நெடுஞ்சாலையில் பலவிதமான தொழிற்சாலைகள் இருந்தன.

எங்கள் குழந்தைகளுடன் நேபாள் இளசுகளும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள்.

வரும் வழியில் காலை சிற்றுண்டிற்காக நிறுத்தப்பட்டு உணவருந்தினோம்.

சூரியபகவான் கொஞ்சம்கூட எங்கள் மீது இரக்கம் காட்டவில்லை ஏசி வசதி இருந்ததினால் பயணத்தை இரசிக்க முடிந்தது.

ஜெய்பூரை நெருங்க, நெருங்க விளை நிலங்கள் அதிகமாக தென்பட்டது ஆனால் நிலங்கள் தண்ணீருக்காக வானத்தை நோக்கி கையேந்தி நின்றது.
மழையை நம்பித்தான் ஜெய்பூரின் விவசாயிகள் இருக்கிறார்கள்.நிலத்தடி நீரெல்லாம் அங்கு ஆயிரம் அடிகளை தாண்டி இருக்கிறதாம் அதனால் ஜெய்பூரில் நிலங்கள் மிகமலிவு (ரியல் எஸ்டேட் பிஸினஸ் காரர்களுக்கு இது டிப்ஸ் வாங்குவதற்கு ஆள்கிடைப்பார்களா? என்பதை யோசனை செய்துக்கொள்ளுங்கள்)

நம்ம ஊர்களில் மாட்டு வண்டியைப் பார்த்திருப்போம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டக வண்டியை அதிகம் காணமுடிகிறது.அதேப் போன்று ஜீப்கள் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள்.மலை,வயல்,பாலை இவைகளில் பயணம் செய்வதற்கு இளகுவாக இருக்கிறாதாம்.

ஜெய்பூரின் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம் சூரியன் வெட்கப்பட்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டது ஆனால் மேகம் எங்களை கொடைவிரித்து வரவேற்றது.ராஜஸ்தான் மாநிலம் எங்களை அன்புடன் அழைத்தது.

ஜெய்பூர் எல்லையில் ஆடம்பரமான அரண்மனை வடிவில் ரிஸோர்ட்கள் இருந்தன.அதைப்பார்த்ததும் அங்கு தங்கவேண்டும் என ஆசைவந்தது ஆனால் ஜெய்பூர் காட்கேட்டில் ஹோட்டல் புக் செய்துவிட்டபடியால் பார்வையால் அந்த ரிஸோர்ட்டில் தங்கிக் கொண்டேன்.

மன்னர் பீம்சிங்கின் அரண்மனைக்குள் செல்வதற்கு எங்களை டெம்போவிலிருந்து ஜீப்பிற்கு மாற்றினார்கள்.மலையின் மேல்புறத்தில் மன்னரின் அரண்மனை இருக்கிறது.நாம் கீழிருந்து அதைப் பார்ப்பதற்கே அந்த பிரமாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

ஜீப்பில் எங்களை ஏற்றும்போதே கைடும் எங்களுடன் ஏறிக்கொண்டார் எல்லா வகையிலும் ஏமாற்ற துடிக்கும் ஆக்ரா,டெல்லி மக்களுக்கு மத்தியில் ஜெய்பூர் வாசிகள் பலகுவதற்கு வியாபார நோக்கமில்லாத மனிதர்களாக ஆங்காங்கே காணப்பட்டார்கள்.

மன்னர் பீம்சிங் அரண்மனைக்குள் எங்களின் ஜீப் திணறி,திணறி ஏறியது வாகனமே இவ்வளவு திணறி ஏறும்போது அந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த சிப்பாய்கள் இந்த மன்னர்களுக்காக எத்தனைமுறை ஏறி இறங்கிருப்பார்கள்.

அரண்மனை வாசலில் குல்பி வியாபாரம் சூடாக நடந்தது அதை வாங்கி சுவைத்து நாங்கள் குளிர்ந்தோம்.அந்த அரண்மனையினுள் கண்ணாடி மஹால் இருக்கிறது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுக் கொண்டு கேமராவில் கண்ணாடியை நோக்கி கிளிக் செய்தால் பிரேம் போட்டது போன்று நம் தோற்றம் விழுகிறது...இதோ நீங்கள் காண்பது நேபால் தம்பதி...

இந்த அரண்மனையில் நமது புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இன்றைய நடிகர்கள் என பலரின் சினிமா சூட்டிங் இங்கு நடந்ததாம், நடக்குமாம்.

மன்னர் பீம்சிங்கிற்கு பதினெட்டு மனைவியாம் அந்த 18 மனைவிகளுக்கு 18 அறைகளை தனித்தனியே அமைத்து அந்த அறைகளுக்கு செல்லக்கூடிய வழிகளையும் 18 அமைத்துள்ளார்.மன்னர் எந்த மனைவியுடன் இருக்கிறார் என்பது எந்த மனைவிக்கும் தெரியாதாம்.(மனுசன் பலே கில்லாடிதான்)

அந்த அரண்மனையில் பணிப்புரிபவர்களுக்கு உணவு புகைப்படத்தில் காணும் இந்த சட்டியில்தான் தினம் சமைப்பார்களாம்.

இதோ நீங்கள் பார்க்கும் இந்தப் புகைப்படம் மன்னரின் கஜானா பெட்டி இதில்தான் தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் என்று வகைப்பிரித்து வைத்துள்ளாராம்.

மன்னர் பீம்சிங் கட்டிக்கலையில் மிகுந்த ஆர்வங் கொண்டவர் மட்டுமல்ல மனித ஒன்றுமையை வேண்டி பலமாக சிந்தித்தவர்.அவர் சிந்தனையின் உருவம்தான் இன்றைய ஜெய்பூர் வணிக நகரம்.இந்த வணிக நகரத்திற்கு நான்கு முக்கிய வாயில்களை அமைத்து அந்த வாயிலுக்கு மிகப்பெரிய கதவலையும் போட்டிருக்கிறார்.அதுமட்டுமல்ல அந்த வணிக நகரத்தில் பள்ளிவாசல்,கோயில் கட்டி இருக்கிறார் கோயில் இருக்கும் தெருவிற்கு இஸ்லாமிய பெயரையும் பள்ளிவாசல் உள்ள தெருவிற்கு இந்துப் பெயரையும் சூட்டி மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார் ஜெய்பூரில் வெற்றியும் பெற்றுள்ளார் இது இன்றளவும் இருக்கிறது.

ஜெய்பூர் நகரத்தை ஆங்கிலத்தில் "பிங்க் சிட்டி" என்றழைப்பார்கள்.அந்த நகரம் முழுவதும் ஒரே வண்ணத்தில் ஒரே அளவில் கட்டிடங்களும் தெருக்களும் அமைத்திருக்கிறார் மன்னர் பீம்சிங்.

மக்கள் நெரிசல் இந்த வணிக நகரத்தில் அதிகமாக இருப்பதினால் அவர்களால் தூய்மைக்கு துணை நிற்க முடியவில்லை.தூய்மையைப் பற்றி விழிப்புணர்வு செய்வதற்கு போதிய அவகாசம் அந்த மாநில அரசினர்களுக்கு இல்லாமல் இருப்பது வருத்தமடையச் செய்கிறது.மன்னர் பீம்சிங் மட்டும் இந்த நிலையைக் கண்டால் தொதித் தெழுந்துவிடுவார்.
மன்னர் பீம்சிங்கின் அரண்மனையில் சுரங்கப்பாதை இன்னும் இருக்கிறது இந்த சுரங்கப்பாதை அரண்மனையிலிருந்து மன்னர் அவசரக்காலத்தில் யாருக்கும் தெரியாமல் மலைப்பகுதிக்குள் சென்று விடுவதற்கு மக்களுடன் கலந்துவிடுவதற்குகாக அமைத்துள்ளாராம்.

மதியம் இரண்டு மணியை கடந்துவிட்டதினால் எங்களின் வயிறு உணவகத்தை தேடியது.மலையிலிருந்து இறங்கியதும் கைடு எங்களை தென்னிந்திய உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்.சில தினங்களுக்கு பின் நம்மஊரு சாப்பாட்டை ருசித்து உண்பதற்கு செல்கின்றோம்...

உங்களுக்கும் இப்போ பசிக்கும்தானே அதனால் நீங்களும் சாப்பிடுங்க சந்திப்போம்...

Saturday, August 14, 2010

அமீரகப்பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சி

அமீரகப்பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சி சென்ற ஆண்டைப்போல் சார்ஜா அண்ணாச்சி சத்திரத்தில் மிக சிறப்பாக இந்த ஆண்டும் நடைப்பெற்றது.

அமீரகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கம்போல் அனைத்து பதிவர்களும் சிலரைத்தவிர கலந்துக் கொண்டார்கள்.

இப்தார் நிகழ்ச்சிக்கான உணவுத்துறையை கீழைராஸா ஏற்றுக் கொள்ள நான் விட்டுக் கொடுக்காமல் பிரியாணியை எனது காரில் ஏற்றிக் கொள்ள(எனது கைப்பட்ட பிரியாணி எப்படி என்பதை அமீரகப்பதிவர்கள் அறிவார்கள்)…சட்டிக்கு பாதுகாவலர்களாய் முகிலும் ஊமையனும் (ஹக்கீம்)உடன் வந்தார்கள்.

வெள்ளி மாலை 5.00 மணிக்கு துபாயிலிருந்து வாகனம் ஊர்வலமாய் பிரியானி, நோன்பு கஞ்சி, சமூசாவுடன் அண்ணாச்சி சத்திரத்தை அடைந்தது.

ஆவலுடன் காத்திருந்த அனைத்து பதிவர்களும் இப்தாருக்கு தயாரானார்கள்.

நோன்பின் மாண்பை அறிந்திருந்த அனைத்துப் பதிவர்களும் உணவுகள் பறிமாறப்பட்டு நோன்பு திறப்பதற்குரிய அந்த பாங்குடைய நேரம் வரையில் அமைதியாக அமர்ந்திருந்து கண்ணியம் செய்தனர்.

இப்தாருக்குப் பின்னர் மஹ்ரிப் தொழுகையை பதிவர் சுல்தான் இமாமாக இருந்து தொழவைத்தார்.தொழுகைக்குப் பின் பதிவர்கள் குழு கூடினார்கள்.

சென்ற மாதம் தாயகம் சென்று திரும்பிய அண்ணாச்சி மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற யாஸ்மீன் படித்த நகராட்சி பள்ளிக்கூடத்திற்கு(திருநெல்வேலி) தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு கணினியை புதிதாக அமீரகப்பதிவர்களின் சார்பில் வழங்குவதற்கு ஏகமனதுடன் முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துடன் தனது பணி மாற்றத்தின் காரணமாக இனி சந்திக்க இயலாது என பிரியாவிடை பெற்ற பதிவர் அஹமது சுபைர்ருக்கு அனைவரும் வாழ்த்துக்களை வழங்கி இனி மெயிலில் சந்தித்துக் கொள்ளலாம் என விடை கொடுத்தார்கள்.

பதிவர் சுந்தரின் பொதுநல தொண்டை அங்கு நினைவுக்கூர்ந்து பாராட்டை அனைவரும் வழங்கினர்.

பெண் பதிவர்களில் ஜெஸிலாவைத் தவிர்த்து மற்ற யாரும் வரவில்லை என்றாலும் குசும்பன் கீழைராஸா செந்தில்நாதன் நவ்புல் இவர்களின் குடும்பமும் வந்ததினால் பதிவர் ஜெஸிலாவிற்கு ஆறுதலாக இருந்தது.
இந்த இப்தார் நிகழ்ச்சியில் மிக பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தார் ரியாஸ் அவருக்கு அமீரகப்பதிவர்களின் சார்பாக வாழ்த்துக்களை வழங்குகிறோம்.
இனி அடுத்த சந்திப்பு சுற்றுலாவாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.


பழம் நறுக்கும் முகில்

சமூசாவுடன் ஊமையன் ஹக்கீம்


நோன்பு கஞ்சியை கலக்கும் ரியாஸ்


இஸ்மத்பாய் உங்கள தட்டையபார்த்துக்க சொன்னா கேமராவ பாக்குறீங்க...இதான் சமயமுன்னு கீழைராஸா ஒரு தட்டைய ஆட்டைய போடுறாரு

ஆலோசனைக் கூட்டம் எந்த தட்டில் யார் அமர்வது


கோல்கேட் விளம்பரத்திற்கு என்னுடன் சென்ஷி


உணவுக்குமுன் உணர்வுடன் காத்திருக்கும் நோம்பாளிகள்


அண்ணாச்சி கேட்டா கொடுக்கனும் சுபைர்...இப்படி அடம்பிடிக்ககூடாது

இப்படியெல்லாம் லுக்கு விடப்படாது...ஒரு ஆளுக்கு ஒரு பிளேட்டுதான்...


கஞ்சிமேல சத்தியமா ஒரு தட்டுதான் வச்சிருக்கேன் சுபைர்...இதை உங்களுக்கு கொடுக்க முடியாது..


சீக்கிரமா சாப்பிடுங்க சுபைர் நம்ம தட்டைய பாக்குறார்...


குசும்பா உஷார்....சுபைர் தட்டு காலியாக இருக்கு..


எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்....என் தட்டுல உள்ள கறியை யார் எடுத்தது?


சின்னப்புள்ளயா இருக்கியேன்னு பாக்கிறேன் ஆமா... குசும்பன் தட்டுலேந்து நானா கறிய எடுத்தேன்...


கறிய எடுத்தது யாருங்க கண்டுபுடிச்சாச்சா அண்ணாச்சி


எலே முகிலு நீ கறிய எடுத்து துண்னுட்டு என்மேல வச்சிட்டியே...அதுக்கு தண்டனைதான் இந்த கொக்கு புடி...குசும்பனுக்கு போட்டியா இந்த முயற்சி...