உங்கள் வருகைக்கு நன்றி...

Friday, October 22, 2010

கண்ணாமூச்சி ரேரே…

சின்னபிள்ளையில் விளையாடிய கண்ணாமூச்சி ரேயை நாம் மறந்திருக்க முடியாது இப்பவும் கூட சிலர் அல்லது பலர் விளையாடலாம் நமது குழந்தைகள் விளையாடுவதை நாம் பார்க்கவும் செய்யலாம்.

கண்ணாமூச்சி ரேரே என்பது ஒரு விளையாட்டு ஒருவர் கண்ணை பொத்திக்கொள்ள வேண்டும் மற்றவர்கள் ஓடி ஒளிந்துக்கொள்வார்கள். ஒளிந்துக்கொண்டவர்கள் ஜூட் சொன்னதும் அவர்களை கண்டுப்பிடிப்பதுதான் இந்த விளையாட்டின் சுவாரஸ்யம்.

ஓளிந்துக்கொண்டிருப்பவர்களை கண்டுபிடிப்பது கஸ்டமில்லை என்றாலும் அவர்களை கண்டுப்படிக்கும் வரையில் களத்தில் உள்ளவர் அங்குமிங்கும் தேடிக்கொண்டிருப்பார். அந்தத்தேடலில் ஆர்வமும் நம்பிக்கையும் மிகைத்திருக்கும் .

இதைபோலதான் வாழ்க்கையும்; கண்ணாமூச்சி விளையாடுவதைபோல நாம் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறோம் வாழ்க்கை ஒளிந்துக்கொண்டு இருக்கிறது அதைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வழியில் செல்கின்றோம்.
நம்மில் எத்தனைபேர்கள் ஒளிந்திருக்கும் வாழ்க்கையை கண்டுபிடித்துக் கொண்டோம் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.

மனிதன் தனது உண்மையை அவன் தன்னிடம் தேடப்படுவானாகில் அவனிடம் ஒளிந்திருக்கும் சுயம் வெளிப்படும் தன்னைவிட்டு வெளியில் தேடினால் அவன் ஆயுட்காலம் அவனுக்குபோதாது.

கண்ணை பொத்திக் கொள்வது அறியாமை தேடலில் கண்டுப்பிடிக்கப்படுவது அறிவுடமை.
நம் வாழ்க்கை கண்ணாமூச்சிதான் அதனால் நம்மை வெளியில் தேடவேண்டாம் நம்மில் தேடுவோம்.
நாம் தொலைந்துவிட்டிருக்கிறோம் அதனால்தான் ஒவ்வொன்றிலும் வித்தியாசங்களை காணுகின்றோம் எல்லாவற்றையும் பிரித்துப்பார்க்கின்றோம் ஒருவருக்கு துன்பம் என்றால் இன்னொருவர் சந்தோசப்படுவதை பார்க்கிறோம்.

நம்மிடம் நிறையசுயநலம் இருக்கிறதே தவிர கொஞ்சம்கூடசுயம் இல்லை; சுயம் ஒன்று நம்மிடம் இருப்பதே பலருக்கு தெரியவில்லை. இப்படி தெரியாத விசயங்கள் எவ்வளவோ இருக்கிறது. தெரியாத விசயங்கள் தெரியாமலேயே போவதினால் தெரியாதவர்களிடம் தெரிந்ததை பேசும்போதுகேட்பவர்களுக்கு பேதமாக தெரிகிறது.

தனக்கு புரியாத விசயங்களை நாம் மறுப்பதால் அவைகள் இவ்வுலகில் இல்லாமலில்லை இன்று புரியாத ஒரு விசயம் இன்னொரு நாள் புரியும்போது புலங்காயிதம் அடைவோம்.
இதுவும் அப்படியாகக்கூட இருக்கலாம் புரியும்போது பூரித்துக்கொள்ளுவோம்.

அதுவரையில் இது மொக்கைதானே?

Tuesday, October 19, 2010

தங்கம் விலை இன்னும் ஏறுமா? இறங்குமா?


இந்த கேள்வி பல மக்களிடையே தோன்றிக்கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது இதன் போக்கு எப்படி இருக்கும் எங்கு முடியும் என்று யாருக்குமே தெரியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். தங்க மார்கெட்டில் பணிப்புரிவதால் எனக்கு கிடைத்த தகவலின்படி சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் உங்களுக்கு பிரயோஜமாக இருக்கலாம்.

சென்ற ஆண்டு தங்கத்தில் முதலீடு சம்பந்தப்பட்ட தொடர் கட்டுரை எழுதியிருந்தேன் அந்த சமயம் தங்கத்தின் போக்கை சுட்டிக்காட்டி அதில் முதலீடு செய்யலாம் என பரிந்துரையும் செய்திருந்தேன் அதில் யாரேனும் முதலீடு செய்திருந்தார்களேயானால் இன்று அவர்கள் நூறு சதவீதம் லாபத்தை ஈட்டி இருப்பார்கள்.

2008 நவம்பரில் அவுன்ஸ்(31.10 கிராம்) 715 டாலராக விலை குறைந்திருந்தது (இந்திய ரூபாய் 1 கிராம் 1015 சுத்தமான் 24 கேரட் தங்கம்)அச்சமயத்தில் துபாய் தங்கமார்க்கெட்டில் தங்ககட்டிகள் (டிடி பார் 116.64 கிராம்) 24கேரட் தங்கம் ஸ்டாக் இல்லாமல் இருந்தது. பலர் என்னைத் தொடர்புக் கொண்டு வாங்கி கேட்டார்கள் அப்படி கேட்டவர்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளேன். இன்று அதை விற்காமல் வைத்திருப்பவர்கள் இன்னும் ஏறுமா? என்று கேட்கிறார்கள்.

முதலீடு என்ற பெயரில் தங்கத்தை வாங்கி வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு பணம் எப்பொழுது தேவைப்படுகிறதோ அதுவரையில் வைத்திருக்கலாம் தங்கத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது ஆனால் தங்கசுரங்கத்தில் தேவைக்கேற்ற தங்கம் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்காவில் சில சுரங்கங்களை மூடிவிட்டதாக செய்திகள் சொல்கின்றன.

இன்னும் இத்தனை ஆண்டுகளாக சீனா தங்கத்தை ஆன்லைனில் வர்த்தகம் புரியாமல் வைத்திருந்தது ஆனால் சென்ற இரு மாதங்களுக்கு முன் ஆன்லைன் தங்க வர்த்தகத்தை சீனா ஆரம்பித்துள்ளது அதனால் தங்கத்தின் விலை இன்னும் கூடும் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

பெரிய பணமுதலைகள் தங்களின் முதலீடுகளை அவ்வபோது டாலருக்கும் தங்கத்திற்கும் ஈரோவிற்குமாக மாற்றி மாற்றி சந்தையின் போக்கை அவர்களின் இஸ்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தங்கத்தின் முதலீடுதான் பாதுகாப்பானது என்று பெரிய முதலைகள் முதலீடுகள் செய்துக்கொண்டே செல்வதால் இன்னும் சில நாட்களுக்கு தங்கம் மேலே ஏறிக்கொண்டே இருக்கும்.

சென்ற பிப்ரவரி மாதத்தில் தங்கசப்ளையர் கூறினார் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் அவுன்ஸ் விலை 2000 டாலரைத் தொடும் என்றார். எனது நிறுவனத்தில் பலர் அவருடைய வாதத்தை ஏற்கவில்லை ஆனால் இன்று கிட்டத்தட்ட அவர் சொன்னது போலவே 1500 டாலரைத் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது.

தங்க சந்தையை பொருத்தவரையில் கிட்டதட்ட பங்குசந்தையை போலவே இயங்கிறது இந்த சந்தையும் அவ்வபோது ஏறுவதும் இறங்குவதும்மாகவே இருக்கிறது இது சர்கில்முறைதான்.

ஏழு ஆண்டுக்கு ஒருமுறை தங்கத்தின் விலை கடுமையாக சரியும் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.அப்படி பார்த்தால் 2003 –ல் ஒரு அவுன்சின் விலை 323 டாலராக இருந்தது இன்று 1370 டாலராக இருக்கிறது சரிவு என்பது பெரிய அளவில் இல்லை என்றாலும் 2008 நவம்பரில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது உண்மையே.

இன்று காலை எனது நண்பர் தங்கத்தில் மூன்று ஆண்டுக்கு முதலீடு செய்யப்போவதாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார்.ஓ...தராளமாக முதலீடு செய்யுங்கள் என்றேன். 2007- ல் தங்கத்தின் விலை அவுன்ஸ் 650 டாலர் அன்று மூன்று ஆண்டுக்கு முதலீடு செய்தவர்களுக்கு இன்று 110 சதவீதம் லாபத்தை தங்கம் தந்திருக்கிறது.

ஒரு சிறிய சரிவு வரும் சமயத்தில் தங்கம் வாங்கக்கூடியவர்கள் உள்ளே நுழையலாம். துபாயில் ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 155 திரஹம் இன்று விற்பனை ஆகிறது இது தீபாவளிக்குள் 160 திரஹம் வரையில் செல்லலாம் என நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தங்கத்தில் முதலீடாக செய்யக்கூடியவர்கள் எப்போதுமே ஆபரண நகைகளை வாங்கி முதலீடு செய்யவேண்டாம் அப்படி செய்தால் நஷ்டம் ஏற்படும் அதாவது நகைகள் வாங்கும்போது அதற்கு செய்கூலி சேதாரம் சேர்க்கப்படும் அதை மீண்டும் விற்கும்போது செய்கூலி சேதாரம் கழிக்கப்படும் அதனால் உங்கள் முதலீட்டில் கிடைக்ககூடிய லாபம் செய்கூலியிலும் சேதாரத்திலும் போய்விடும் ஆதலால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் 24 கேரட் பிஸ்கட் என்று சொல்லப்படிகின்ற டிடிபார்(டென் தோலா பார் 116.64 கிராம் ) அதை வாங்கி வைத்துக்கொள்ளலாம் தற்போது இந்திய ரூபாயில் அதன் மதிப்பு இரண்டு லட்சத்திற்கும் அதிகம் என்பதினால் இவ்வளவு முடியாதவர்கள் 4 கிராம் அல்லது 8 கிராம் தங்க நாணயங்களை வாங்கி சேமிக்கலாம்.

ஆதலால் தங்கத்தின் விலை ஏறுமா? இறங்குமா? என்று யோசிப்பதைவிட தேவை உடையவர்கள் வாங்குவதே நலன்.!

தங்கத்தைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1.தங்கத்தில் முதலீடு
2.தங்கத்தில் முதலீடு
3.தங்கத்தில் முதலீடு
4.தங்கத்தில் முதலீடு
5.தங்கத்தில் முதலீடு
6.தங்கத்தில் முதலீடு
7.தங்கத்தில் முதலீடு

Thursday, October 14, 2010

தேகப்பயிற்சியும் தேற்றவேண்டிய மனமும்நாளைமுதல் காலையில் எழுந்து உடற்பயிற்சி கட்டாயமாக செய்யனும் என்று நம் மனசுக்கு ஆர்டர் போடுவோம்.
மனசும் சரி நாளைக்கு செய்யலாம் என்று சம்மதிக்கும். காலையில் அலாரம் அடிக்கும்போது கண்விழித்து பார்ப்பதற்கு மனம் அனுமதி கொடுக்காது. கையால தடவி அலாரத்தை அடக்கிவிட்டு இன்னும் நன்றாக உறங்குவதற்கு ஒரு சுகத்தை மனம் நமக்கு காண்பிக்கும் அந்த சுகத்துடன் நாளைக்கு பார்த்துக்கலாம்ன்னு மீண்டும் உறங்கிவிடுவோம்.
சிலர் மனதிற்கு போக்கு காண்பித்துவிட்டு எழுந்து விடுவார்கள் சிலர் மனம் சொல்லுக்கு மாறமால் நடந்துக் கொள்வார்கள்.

அமீரகத்தில் கோடைகாலம் மாறி வாடைக்காலம் ஆரம்பமாகிறது அதனால் வாக்கிங் ஜாக்கிங் என்று பலரும் செய்துவருகிறார்கள்.

பெரும் முயற்சிக்கு பிறகு இந்த வாரத்திலிருந்து நடைபயிற்சி செய்துவருகிறேன். அதிகாலையில் இறைவணக்கத்திற்குப் பின் மம்ஸர் பார்க்கில் தினம் நடக்கின்றேன்.அங்கு கூட்டம் அதிகமில்லை நடந்து செல்வதற்கும் தேகப்பயிற்சி செய்வதற்குக்காண சாதனங்களும் கடற்கரையோரம் மணலில் வைத்திருக்கிறார்கள்
இரு தினங்களாக குளிர்ந்த காற்றுவீசுகிறது நடப்பதற்கு ஆனந்தமாக இருக்கிறது.
எல்லா வசதிகளும் இலவசமாக இருந்தாலும் நம்முடைய மனதை அதிகாலையில் தட்டி எழுப்புவதற்கு கஸ்டமாக இருக்கிறது என்பது உண்மை.

தொடர்ந்து செய்துவருகின்ற ஒரு செயலில் இருந்து மாறுவது என்பது மனதிற்கு பிடிக்காது. எப்பவும் எட்டு மணிவரை உறங்கிவிட்டு திடீரென ஐந்து மணிக்கு விழிக்கவேண்டும் என்றால் மனதிற்கு பிடிக்காது நாம் இழக்கும் சுகங்களை நமக்கு சொல்லிகாண்பிக்கும் அதை காதில்வாங்காமல் நாம் செய்யப்போகின்ற செயலில் கிடைக்கக்கூடிய சுகங்களை மனதில் நிறுத்தினால் அந்த மனம் நம் செயலுக்கு உடன்படும்.

மனம் எப்பவும் இச்சையை நோக்கியேதான் போகும் அதன் தன்மையே அப்படிதான். அதற்கு கடிவாளமிட்டு வைக்கவேண்டும்.
ஒன்றை மனம் ஆசைப்பட்டு விரும்பி விட்டால் அதை அடையும்வரை மனம் தூங்காது. மனம் ஆசைப்பட்ட ஒன்றை அறிவு ஆராயவேண்டும் அதில் நன்மை இருக்குமேயானால் மனதிற்கு நாம் கட்டுப்பட்டு அதன் விருப்பத்தை நிறைவேற்றலாம். அதில் தீமை இருக்கிறது என்று எண்ணிணால் அதை தவிர்க்கலாம் ஆனால் மனம் அதை ஏற்றுக் கொள்ளாது.

மனதை நம்கட்டுப்பாட்டில் வைப்பதற்கு யோகா தியானம் தொழுகை என பலவிதமான பயிற்சிகள் இருக்கிறது. பலர் இந்த பயிற்சியை நாடுகிறார்கள்.
பயில்கிறார்கள் மனம் ஒன்றித்தலுடன் செய்யப்படும் பயிற்சிகளில் மடடுமே வெற்றிகிடைக்கிறது.

மனதை பற்றி தீர்க்கதரிசிகளும் ஞானிகளும் நிறைய சொல்லி உள்ளார்கள்
மனம் சரியாக இருந்தால்தான் நம்முடைய வாழ்க்கை மணக்கும் மனம் சரியாக இல்லை என்றால் நமக்கு எதுவும் சரியாக இருக்காது
அதனால் மனதிற்குள் நல்ல அறிவுகளை வழங்கவேண்டும் அந்த அறிவுகளை மனம் அறியவேண்டும்.

மனதிற்கு பயிற்சி என்பது நல்ல விசங்களை நாம்படிப்பதும் சிந்திப்பதும் செய்வதும்தான் அதன் மூலம் நம்மனதை நம்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் முயற்சிப்போம்.!

Monday, October 11, 2010

மறதி இல்லையெனில் இந்த உலகம் மயானம்


மரணம் எங்கிருந்து தொடங்குகிறது?
என்ற கேள்விக்கு பிறப்பு எங்கிருந்து தொடங்கியதோ அங்கிருந்துதான் மரணமும் தொடங்குகிறது என்ற பதில் கிடைக்கும்.

மரணம் என்பது பயமா? என்று கேட்டால் கிட்டதட்ட பலருக்கும் பயமாகவே தான் இருக்கிறது.
ஒன்றைப் பற்றி அறியாத போது பயமே அறிவாக இருக்கும்.பாம்பை கண்டு "பாம்"மை கண்டு
அச்சப்படுதலின் ஆணிவேர் என்ன? மரணம்தான்.

ஆனால் மரணத்தைக் கண்டு அச்சப்படாதவர்கள் யார்?

சூபியாக்கள் மஹான்கள். இவர்கள் அச்சத்தை அறிந்தவர்கள் துக்கத்தை துறந்தவர்கள்.
மரணம் என்பது ஒரு மாற்றம் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவது.

மகான் தாஹிர்பாவா கூறினார்கள்
“இருப்பது அழியாது இல்லாதது உருவாகாது”- இதுதான் இந்த பிரபஞ்சத்தின் தாரக மந்திரம். அழிவென்பது எதற்குமே இல்லை அனைத்திற்கும் மாற்றம் மட்டும்தான் உண்டு.
என்னதான் மரணம் ஒரு மாற்றம் என்று சொன்னாலும் அது நம்மைச் சார்ந்தவருக்கு நிகழும்போது நம்மையறியாத ஒரு அதிர்ச்சி கலக்கம் துக்கம் நமக்குள் ஏற்படத்தானே செய்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மரணத்தின் நிகழ்வை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.நாம் நடக்கும் போது நமக்கு முன்னும் பின்னும் வருவது நிழல் அல்ல மரணம்.

மரணம் என்பது நிச்சயம் என்பதை நாம் உணர்ந்திருந்தாலும் நமக்குள் இருக்கும் ஈகோ நம்மைவிட்டு மரணமாவதில்லையே. மனிதனுக்கு மறதி இல்லை எனில் இந்த உலகம் மயானம்தான். மறதியால் தான் மனிதன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.

எதைமறக்க வேண்டுமோ அதை மறந்து விட்டால் துக்கமும் துயரமும் பறந்துபோகும் நல்ல தூக்கமும் நிம்மதியும் நம்மிடம்நிறைந்துபோகும்.

முயற்சிப்போம் நம்மிடம் நிறைந்திருக்கிறது.

Thursday, October 7, 2010

உருப்படியான உரையாடல்


பலவருடங்களுக்கு முன் துபாயிலிருந்து தாயகத்திற்கு சென்றேன்.என்னை அழைப்பதற்கு எனது நண்பரும் எனது சகோதரரும் விமான நிலையம் வந்திருந்தனர்.

என்னை அழைத்துக் கொண்டு எக்மோர் வந்தார்கள். இரவு 10 மணிக்கு புறப்படும் இரயிலில் எங்கள் ஊருக்கு செல்லலாம் என்பது திட்டம் ஆனால் முன்பதிவு ஏதும் செய்திருக்கவில்லை.
நாங்கள் இரயில் நிலையம் வருவதற்கும் இரயில் புறப்படுவதற்கும் சரியாக இருந்ததினால் அவசரமாக ஏதோ ஒரு பொட்டியில் சாமான்களுடன் ஏறிவிட்டோம்.

சிறது நேரத்தில் டிடிஆர் வந்ததும்தான் எங்களுக்கு தெரிந்தது இது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி என்று.
டிடிஆரிடம் விசயத்தை கூற அவரும் அலட்சியமாக சீட்டு இருக்கு என்றார்.

உடனே எனது நண்பர் டிக்கேட்டை கொடுத்து பதிவுசெய்யப்பட்டதைப் போல் மாற்றி அதற்கான தொகையை கொடுத்து அத்துடன் டிடிஆருக்கு லஞ்சமாக அவர்கேட்ட தொகையும் கொடுத்துவிட்டோம்.

எனது நண்பருடன் பல அனுபவங்களை உரையாடிக் கொண்டிருந்தேன்.படித்தது படித்ததில் பிடித்தது பழகியது என பல விதமான தலைப்பில் எங்கள் உரையாடல் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.

டிடிஆர் தனது பரிசோதனையை முடித்துக் கொண்டு நாங்கள் அமர்ந்திருந்த வரிசையில் அவரும் அமர்ந்தார். எங்களின் சுவாரஸ்யமான உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார்.

சாதரணமாக சோதனையை முடித்துக் கொண்டு உறங்கும் அவர் எங்களின் உரையாடலில் உற்சாகமடைந்ததாக கூறினார்.

அதே தருணத்தில் இளைஞர்களான நீங்கள் இப்படிபட்ட உரையாடலை செய்வது அதை நான் கேட்பதும் எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது என்றார்.

அப்படி என்ன நாங்கள் பெருசா உரையாடினோம் என்று நீங்கள் கேட்கிறீர்களா?

ஆன்மீகம்.! ஆமாங்க.... இரு வாலிபர்கள் சினிமாவைப்பற்றி காதலைப்பற்றி பேசினால் அது ஆச்சரியமில்லை திருக்குர்ஆனைப் பற்றியும், பைபிளைப் பற்றியும், பகவத்கீதையை பற்றியும் பேசினால் யாருக்குதான் ஆச்சிரியமாக இருக்காது.

விழுப்புரம் ஸ்டேஷனில் டிடிஆரின் வற்புறுத்தலில் உணவகத்தில் விருந்தே வைத்துவிட்டு சொன்னார் உங்களிடம் லஞ்சம் வாங்கியது தவறு அதற்கு பிராயச்சித்தமாக இந்த விருந்து என்றார்.

எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது படித்ததை நாம் விவாதித்தோம் அது மற்றவர்களுக்கு எவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுக்கிறது புரிதல் சரியாக இருந்தால் எல்லா மனிதர்களும் இந்த டிடிஆரைப்போலதான் இருப்பார்கள் என்பதை அந்த தருணத்தில் எங்களால் விளங்க முடிந்தது.(கொடுத்த லஞ்சம் திரும்பிடுச்சில்ல)

கதி கலங்கவைக்கும் கசகசா


வெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தங்கள் தேவைக்காக அல்லது தங்கள் நண்பர்களுக்காக எடுத்துச் செல்லும் பொருட்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

சாதரன மளிகை பொருட்கள் கூட வளைகுடா நாடுகளில் தடையில் இருக்கிறது. அதுதெரியாமல் எடுத்துவரும்போது நாம் பல கஸ்டங்களுக்கு ஆளாக்கப்படுகிறோம் சிறைக்கு தள்ளப்படுகிறோம் என்பதை எனக்கு வந்த இமெயில் சுட்டிக்காட்டியது.

சமீப காலத்தில் துபாய் வளைகுடாவிற்கு கசகசா கொண்டு வந்த இந்தியர் ஒருவர் 20 வருட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என இமெயில் பரவளாக அனைவருக்கும் வந்தள்ளது.அதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

20 வருடங்கள் சிறை தண்டனை கொடுக்குமளவு கசகசா கொடிய பொருளா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

இந்தியர்களை பொருத்தமட்டில் கசகசா ஒரு பெரிய பிரச்சனைக்குரிய பொருளல்ல ருசி கூட்டும் மசால பொருளில் அதுவும் ஒன்று. ஆனால் வளைகுடா நாடுகளான துபாய் கத்தார் குவைத் ஓமான் சவூதி அரேபியா போன்ற அரபுநாடுகளுக்கு கசகசா போதைதரும் பொருள் அட்டவணையில் இடம் பெற்றிருக்கிறது என்பது இப்போதுதான் தெளிவாக பலருக்கும் தெரியவந்துள்ளது.
"உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் ‘பாப்பி விதை’ எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது.

இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றிஇ அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.
ஆனால்இ விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது… அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போதுஇ அந்த விதைப் பையைக் கீறி… அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்… அதுதான் ஓபியம்.

‘பாப்பி’ செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் ‘பாப்பி’ மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன."
- நன்றி ஜூனியர் விகடன்


கசகசா ஒரளவுக்கு மேல் உண்டால் அதில் போதை ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்ட உண்மை ஆதலால் அதை போதை வஸ்துக்களுடன் அதாவது கஞ்சா அபீன் போன்ற கொடிய போதைப் பொருள்களுடன் கசகசாவையும் வளைகுடா நாடுகள் சேர்த்திருக்கிறார்கள் என்பது இந்த பிரச்சனைக்குப் பின் தெரிய வந்துள்ளது.

மளிகைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கொண்டுச் செல்லும் அன்பர்கள் கவனமாக போதைத் தரக்கூடிய எந்த பொருளையும் எடுத்துச் செல்லாமல் இருப்பது நலன் மீறினால் சுங்கசோதனையில் மாட்டப்படும்போது அதனால் வாழ்க்கையே பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிவிடும்.

கசகசா வளைகுடாவில் மட்டும் தடையல்ல சிங்கப்பூரில் 20 ஆண்டுகாலமாக தடையில் இருக்கிறது அதேபோல் மலேசியாவிலும் தடையில் இருக்கிறது ஆதலால் கவனமாக இருக்கவேண்டும்.


மேலும் இஸ்லாமியர்கள் புனிதப் பயணமாகிய ஹஜ் உம்ரா போன்ற யாத்திரைகளுக்கு இந்தியாவிலிருந்து செல்லக்கூடியவர்கள் அங்கு சமைப்பதற்கு மளிகைப் பொருட்கள் கொண்டுச் செல்வது வழக்கம் அதில் பிரச்சனைக்குரிய கசகசா போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது.
அதுமட்டுமல்ல சவூதி அரேபியாவில் சில தைல வகைகளும் தடை செய்துள்ளார்கள். தமிழக இஸ்லாமியர்கள் தலைவலிக்காக அதிகமாக உபயோகம் செய்யும் கோடாலி தைலம் மற்றும் ஐஸ் ஒடிக்கலம் போன்ற தைல வகைகளையும் எடுத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தைல வகைகளில் ஸ்பிரிட் என்ற போதை கலந்திருப்பதால் இதை தடைசெய்துள்ளார்கள்.

சில தருணங்களில் விமான நிலையங்களில் சிலர் தங்களை உறவினர்களுக்கு ஒரு சிறிய கவரைக் கொடுத்து தொலைபேசி எண்ணையும் தந்து கொடுக்கும்படி கூறுவார்கள் அதை நாம்வாங்கி வந்தால் சுங்க இலாகா அதிகாரிகளினால் நாம் கைது செய்யப்படலாம் காரணம் அதில் போதை பொருட்கள் ஏதும் இருக்கலாம் அல்லது தடைச் செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் இருக்கலாம் ஆதலால் தெரியாதவர்கள் யாரும் எதையும் விமான நிலையத்தில் அல்லது உங்களுடனே வரக்கூடிய பயணிகள் இதை வைத்துக்துக் கொள்ளுங்கள் கொஞ்சநேரத்தில் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரியே.
சில தருணங்களில் உண்மையாகவே முடியாதவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் கூடபோய்விடலாம்.
சிலர் உதவி என்று நினைத்து செய்ய அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆதலால் இடம் பார்த்து உதவி புரியவேண்டும் எங்கும் எப்போதும் தெரியாதவர்களிடம் மிகக் கவனமாக இருப்பது நல்லது.