உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, June 26, 2010

விட்டாச்சி விடுமுறை...இரயில் பயணம் இணையதள முன்பதிவு...

விடுமுறை என்பது அயல்நாட்டில் வாழக்கூடியவர்களுக்கு விடுதலையைப் போன்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகைஅல்ல.

எத்தனை சுகம் எத்தனை சுதந்திரம் இது பிரம்சாரிகளுக்கு மட்டுமல்ல குடும்பச்சாரிகளுக்கும் தான்.

ஓவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி என்னுடைய விடுமுறை ஆரம்பம் முப்பது தினங்கள் உல்லாசமாய் உறவுகளுடன் உலாவும் நாட்கள்...

இப்போதெல்லாம் 30, தினங்களை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை இங்கு துபாயில் உள்ள பள்ளிக்கூடங்களில் கோடைவிடுமுறை ஒவ்வொரு ஆண்டும் மாறுதல்கள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.

சென்ற ஆண்டு ஜூன் 6, ரில் காலாண்டு தேர்வு துவங்கி 16, ரில் முடிந்தது அச்சமயம் நான் மட்டும் ஜூன் 3, னில் புறப்பட்டு இந்தியா சென்றேன் தேர்வு எழுதிவிட்டு எனது பிள்ளைகள் மனைவி 16, ரில் சென்னை வந்தார்கள்.
அங்கிருந்தபடியே சிங்கை மலேசியான்னு சுற்றுலா புறப்பட்டு 17, தினங்கள் சுற்றிவிட்டு அவர்களை சென்னையில் இறக்கி விட்டு நான் மட்டும் துபாய் வந்துவிட்டேன்.

ஆனால் இந்த முறை கொஞ்சம் மாற்றம் காலாண்டுத் தேர்வு ஜூன் 16,க்கு துவங்கி 27, லில் முடிகிறது. எனது விடுமுறை தேதியையும் ஜூன் 15,க்கு மாற்றிக் கொண்டுள்ளேன்.

தாயகத்தில் நிறைய தேவைகள் மற்றும் கல்யாண விருந்துகள் இதிலெல்லாம் கலந்துக் கொள்ளவேண்டும் அடுத்து இந்த முறை சுற்றுலா நம்நாட்டிலேயே பார்க்க வேண்டிய பல இடங்களில் சில இடங்களை சுற்றிப்பார்க்க ஒரு பட்டியலைத் தயார் செய்துள்ளேன்.

இந்த சுற்றுலா எனது குடும்பமும் எனது நண்பர் குடும்பமும் இணைந்து சுற்றுவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம்.

சென்னையிலிருந்து இரயிலில் இந்த சுற்றுலாவை ஜூன் இறுதியில் துவங்க இருக்கிறோம்.

முதலில் ஆக்ரா, பின்னர் டெல்லி, பின்னர் அஜ்மீர் பின்னர் ஜெய்பூர் பின் ஜெய்பூரிலிருந்து சென்னைக்கு வந்தடைகிறோம்.மொத்தம் பத்து தினங்கள்.

இந்த இரயில் பயணத்தை இணையதளத்தின் மூலம் முன் பதிவு செய்வதைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.அத்துடன் எனக்கு கிடைத்த முன் பதிவு செய்தபோது கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.

நாம் இரயில் ஸ்டேஷனில் கால் கடுக்க நின்று முன் பதிவு செய்யும் வேலையை இப்பொழுது எந்த நாட்டிலிருந்தும் நமது இந்திய இரயில் பயண இருக்கையை இணையதளத்தின் மூலமாக முன் பதிவு செய்துக் கொள்ளலாம்.

இந்தியன் இரயில்வே என்ற முகவரியை சொடுக்கினால் போதும் இரயிலைப்பற்றி காலம் நேரம் மற்றம் எங்கு செல்லவேண்டும் போன்ற விபரங்கள் முழுவதையும் தெரிந்துக் கொள்ளலாம்.

நமது பயணம் 90 தினங்களுக்குள் நிகழ்வதாக இருக்கவேண்டும்.இந்த பயண இருக்கையை பதிவு செய்வதற்கு நமது விபரங்களை கீழ்காணும் இணையதள முகவரியில் பதிவு செய்து உபயோகப் பெயர் கடவுச்சொல்லையும் நிறுவவேண்டும்.அதன் பிறகே நாம் இரயிலின் முன் பதிவு செய்ய முடியும்.
www.irctc.co.in.

இந்த இணையதளத்தில் சீசன் டிக்கேட் மற்றும் ஐடிக்கேட் இடிக்கேட் இவைகளை பெறலாம்.எங்கள் சுற்றுலாவுக்கான டிக்கேட்டை ஐடிக்கேட்டாக அதாவது இன்டர்னெட் டிக்கேட்டாக புக் செய்தேன்.அதில் நமது இந்திய முகவரி தொலைப்பேசி எண் கேட்கப்பட்டிருக்கிறது பதிவு செய்தேன்.டிக்கேட் நிச்சயமானது உடனே இமெயில் வந்தது.அதில் நாங்கள் ஏறவேண்டிய ஸ்டேஷன் இறங்க வேண்டிய ஸ்டேஷன் கோட்ச் நம்பர் பிஎன்ஆர் எண் போன்ற விபரங்கள் மற்றும் தொகை விபரங்கள் இருந்தன.அத்துடன் 36 மணிநேரத்திற்குள் நீங்கள் தந்த முகவரிக்கு ஒரிஜினல் டிக்கேட் கூரியரில் வரும் பெற்றுக் கொள்ளவும் அப்படி வரவில்லை எனில் இந்த முகவரிக்கு இமெயில் அனுப்பவும் என்று மெயில் வந்தது.

36மணி நேரத்தையும் கடந்து 168வது மணிநேரத்தில் இமெயில் போட்டேன் உடன் பதில் கிடைத்தது அதில் சிப்பிங் எண் மற்றும் கூரியர் தொலைபேசி எண் எழுதி தொடர்புக் கொள்ள சொன்னார்கள்.

நானும் தொடர்புக் கொண்டேன் தஞ்சாவூரிலிருந்து என்னிடம் பேசியவர் இது திருச்சி மெயினுக்கு தான் வரும் நீங்க அங்க தொடர்புக் கொள்ளுங்கள் என்றார்.நம்பர் கேட்டேன் கொடுத்தார்.

திருச்சிக்கு போன்போட்டேன் சார் இது கோயமுத்தூர் டிவிசனில் இருக்கும் நீங்க அங்க போன்போட்டு கேளுங்க என்றார் நம்பர் வாங்கினேன்.இவ்வளவையும் துபாயிலிருந்து டெலிபோனில் செய்தேன்.

சுhர் இது விழுப்புரம் டிவிசன் நீங்க விழுப்புரத்திற்கு போட்டு கேளுங்க எனறதும் அதுவரை பொறுமையாக இருந்த எனக்கு கோபம் கொப்பளித்தது.

மீண்டும் முதல்லிருந்து தொடங்கினேன்.தஞ்சாவூர் சார் நான் தான் சொன்னேன்ல நீங்க திருச்சிக்கு பண்ணுங்க என்றார்.

ஏன்ன கிண்டல் பண்றீங்களா? ஊங்க பேரு என்ன? கேட்டேன் காளிமுத்து என்றார்.இரயில்வே டிபார்ட்மெண்டுல உங்க நம்பரத்தான் எழுதி இருக்காங்க இதுக்கு பதில் நீங்கதான் சொல்லனும்.என்றேன்

சார் புரிஞ்சுக்கோங்க இந்த சிப்மெண்ட் எங்களுக்கு வரலை திருச்சிக்கு போன் போட்டா விபரம் கிடைக்கும் என்றார் ஒரு விபரமும் சொல்லமாட்டேங்குறாங்க என்றேன்.மேனேஜர் நம்பர் தர்ரேன் அவரிடம் கேளுங்க என்றார் அதே கோபத்துடன் மேனேஜரை தொடர்புக் கொண்டேன் நான் வெளியில இருக்கேன் அலுவலகத்துக்கு போன்போட்டு கேளுங்க என்றார்.

கோபம் கொஞ்சம் அதிகமானது உங்க அலுவலகத்துக்கு போன்போட்டு கேட்டுவிட்டுதான் உங்களுக்கு போட்டிருக்கிறேன் என்றதும் ஒரு மணிநேரம் கழித்து தொடர்புக் கொள்ளுங்கள் என்றார்.

தோடர்புக் கொண்டேன் அந்த சிப்மெண்ட் விழுப்புரத்திற்கு அனுப்பி 6 நாட்கள் ஆகிடுச்சி என்றார்.

விழுப்புரம் மயிலாடுதுறை எண்ணை கொடுக்க மயிலாடுதுறைகாரன் சிதம்பரத்தில் இந்த சிப்மெண்ட் மாட்டிகிடுச்சி நீங்க விழுப்புரத்திலேயே கேளுங்க என்றதும்

முடியல…முடியலப்பா முடியல ஒரத்தன் அடிச்சா தாங்கலாம் இப்படி மாவட்டம் மாவட்டமா அனுப்பி அடிச்சா எப்படி தாங்குறது…வலிதாங்காம ஒருத்தன் கிட்ட டேய் நான் இரயிவே டிபார்ட் மெண்ட்க்கு கம்ளைண்ட் பண்ணுவேன்னே செஞ்சுக்கோ எங்கவேணுன்னாலும் செஞ்சுக்கோன்னா.

எவ்வளோ தைரியம்! இருக்காதா பின்னே! பேசினவன் ஒனரு இல்லையே இருந்தாலும் டிபாட்மெண்ட்க்கு கம்ளைண்ட் அனுப்பினேன் அதை சம்பந்தப்பட்ட கூரியருக்கு பார்வேட் செய்திருக்காங்க மறுதினமே எனக்கு ரொம்பவும் பணிவாக மெயில் அனுப்பி நான் தந்த முகவரியில் டெலிவரியும் செய்தாங்க.

அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளில் பொடுபோக்கிதனமாக இருக்கிறார்கள் என்ற குறையை போக்குவதற்கு தனியாரிடம் சில பொறுப்புகளை கொடுத்து செய்ய சொன்ன அவங்களும் அரசு ஊழியர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிறுபிக்கிறார்கள்.

சரி எப்படியோ சுற்றுலா பயணத்திற்கான இரயில் முன் பதிவு செய்தாகிவிட்டாச்சி

இந்த வரியிலிருந்து இதை கிளியனூர் கிராமத்தில் டைப் செய்துக் கொண்டிருக்கிறேன்.

இரயில் முன் பதிவு விசயத்தில் ஐ டிக்கட்டைவிட (இண்டர்நெட்) இ டிக்கேட் எளிமையாக தெரிகிறது.ஆன் லைனில் பதிவு செய்து அதை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டால் போதுமானது பயணம் செய்யும் சமயத்தில் நம்மிடமுள்ள அடையாள அட்டை அதாவது ஒட்டு அட்டை ரேஷன் அட்டை பான் அட்டை டிரைவிங் லைசன்ஸ் இப்படி ஏதாவது ஒன்றை டிக்கேட் பரிசோதகரிடம் காண்பித்தால் போதுமானது.

ஆக உங்கள் இரயில் பயணங்களை முன்பதிவு செய்து சிரமங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சரி எங்கள் சுற்றுலா இனிமையாக அமைவதற்கு வாழ்த்துங்களேன்.

மீண்டும் சந்திப்போம்!

Tuesday, June 8, 2010

தீட்டுவதும் பார்க்குறதும் எனக்கு தெரியும்


கதைச் சொல்வதும் கதைக்கேட்பதும் தமிழர்களின் பண்பாடு.நிறைய விசயங்களை கதை மூலமாகவே நமக்கு எத்தி வைக்கப்படுகிறது.மனதில் பதிவதற்கு இலகுவாக இருக்குமென்று முன்னோர்கள் கதையை சொல்லித்தந்திருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக இஸ்லாமிய இல்லங்களில் கிஸாக்கள் டேப்ரிக்காடரில் ஒலித்துக் கொண்டிருந்தது.கிஸா என்றால் நபிமார்களின் சரிதைகளை தப்ஸ் இசைமூலம் பாடப்பட்டு கதைச் சொல்வது. இது அன்றைய இஸ்லாமிய பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
நூறுமசாலா, கிஸ்மத்நாச்சியா கிஸா, அய்புப் நபி கிஸா, இப்படி பல தலைப்புகளில் கிஸாக்கள் ஆடியோ கேஸட்டுகளில் வெளிவந்துள்ளன.

கதைக் கேட்கும் பழக்கம் தமிழனுக்கு பெரிய ஆர்வத்தை இன்றளவும் கொடுக்துக் கொண்டிருக்கிறது.கதையை கேட்பதுமட்டுமல்ல பலர் இன்று கதையும் விடுகிறார்கள்.
அப்படி சிறுவயதில் மனதில் பதிந்த ஒரு எதார்த்தமான கதையை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிறு வயதில் இரவில் உறங்குமுன் கதைக் கேட்பது வழக்கம் யாராவது கதைச் சொல்லியாக வேண்டும்.சில தருணங்களில் அம்மா சொல்லுவார் சில தருணங்களில் எங்கள் வீட்டுக்கு வருகைப்புரிந்த உறவினர்கள் கூறுவார்கள்.யாரையும் விட்டுவைப்பதில்லை பேதமில்லாமல் எல்லோரிடமும் கதை கேட்பதில் தனி அலாதி.

ஒருமுறை எனது உறவினர் ஒரு கதைச் சொன்னார்.

ஒரு ஊரில் முட்டாள் இருந்தானாம் எந்த வேலைக்கும் செல்லமாட்டானாம் அவனுக்கு திருமணம் முடித்தார்கள் சில தினங்களில் மனைவி அவனை வேலைக்கு செல்லும்படி கூறினாள்.

எனக்கு எந்தவேலையும் தெரியாது என்றான் அடப்பாவி உன்னைபோய் கல்யாணம் கட்டிவிட்டார்களே என்று அவள் நொந்துப்போவாளாம்.
ஒருநாள் தனது தோழியிடம் தன் கணவர் எந்த வேலைக்கும் செல்வதில்லை ஒன்றுமே தெரியாத முட்டாளாக இருக்கிறார் என்று வருத்தப்பட்டு கூறினாள்.அதற்கு அவள் என் புருஷனும் அப்படித்தான் இருக்கார் நேற்று வீட்டைவிட்டு விரட்டிவிட்டேன் மன்னனுக்கு கவிதை எழுதி கொடுத்துட்டு காசு வாங்கி வந்தார் நீயும் விரட்டிவிடு என்றதும் என் புருஷனுக்கு எந்தவேலையும் தெரியாது கவிதை எப்படி எழுதுவாரு என்று அவளிடம் கேள்வி கேட்க நீ வீட்டை விட்டு விரட்டி பாரு எல்லாமே வரும் என்றாள்.

தன் கணவரை விரட்டினாள் மன்னனுக்கு கவிதை எழுதிக் கொடுத்துவிட்டு காசோட வீட்டுக்கு வா இல்லையெனில் வராதே என்றாள்.
அவன் என்ன செய்வதென்றே தெரியாமல் தெரு தெருவாய் சுற்றினான் கவிதை வரவில்லை.

மழைத்தூரல் ஆரம்பித்தது ஒதுங்கினான் அந்த மழையில் நனைந்தவாறு எருமை மாடுகள் வந்தன வந்த மாட்டில் ஒன்று தனது கொம்பினால் செவிற்றில் தீட்டுவதும்; அதை பார்ப்பதும் மீண்டும் தீட்டுவதும் அதைப்பார்ப்பதுமாய் செய்துக் கொண்டிருந்தது இதை பார்த்த அவன் கவிதை எழுதினான்

தீட்டுவதும் பார்க்குறதும் எனக்கு தெரியும்
தீட்டுவதும் பார்க்குறதும் எனக்கு தெரியும்

என்று இதே வரிகளை ஒரு பக்கம் முழுவதும் எழுதி மன்னரிடம் சென்றான்.
அங்கு பலரும் கவிதைகளுடன் நின்றிருந்தார்கள்.இவனோ தனது கவிதையை யாரும் படித்துவிடக் கூடாது என்று தாளை மடித்து வைத்துக் கொண்டு பயந்தபடி நின்றான்.

இவனுடைய முறை வந்ததும் மன்னர் கவிதைத் தாளை வாங்கிக் கொண்டு பொற்காசுகளை கொடுத்தார்.இவனுக்கு சந்தோசம் தாளமுடியவில்லை தனது கவிதைக்கும் காசு கிடைத்துவிட்டதே என்று மனைவியிடம் பொற்காசுகளை கொடுத்தான்.
மனைவி ஆனந்த மடைந்தாள்.

மறுதினம் மன்னருக்கு முகச்சவரம் செய்வதற்கு பரியாரி வந்தான்.
மன்னர் எப்போதும் சவரம் செய்வதற்கு நாற்காழியில் சாய்ந்தபடி மேலே தொங்கவிடப் பட்டிருக்கும் கவிதைகளை வாசித்துக் கொண்டே சவரம் செய்துக் கொள்வார் இது அவருடைய வழக்கம்.

இன்றும் அப்படித்தான் மன்னர் நாற்காழியில் சாய்ந்தபடி கவிதையை பார்வையிட்டார்.
பரியாரி சவரம் செய்வதற்கு முன் கத்தியை எடுத்து நன்றாக தீட்டிக் கொண்டிருந்தான் சுனை பிடித்திருக்கிறதா என்று தனது கட்டை விரலால் உரசிப்பார்த்தான் மீண்டும் தீட்டிக் கொண்டிருந்தான் வழக்கத்திற்கு மாறாக பரியாரி கத்தியை தீட்டிக் கொண்டிருப்பது மன்னருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் கவிதை படிப்பதில் ஆர்வம் அதிகமிருந்தது.

முட்டாள் எழுதிய கவிதையை படிக்க ஆரம்பித்தார் மௌனமாக படித்துக் கொண்டிருந்த மன்னருக்கு கடும்கோபம் வந்தது.இதை கவிதை என்று எழுதி என்னை ஏமாற்றி பொற்காசை வாங்கிசென்றுவிட்டானே ஆத்திரம் தாங்காமல் அந்த கவிதையை உரக்க படித்தார்.
தீட்டுறதும் பார்க்குறதும் எனக்கு தெரியும் என்றார்.
பரியாரி பதறினான் மன்னா என்று கூவினான் மீண்டும்
தீட்டுறதும் பாக்குறதும் எனக்கு தெரியும் என்று மறுபடியும் சப்தமாக வாசித்ததும் பரியாரி மன்னரின் காலைப்பிடித்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று ஓலமிட்டு அழ ஆரம்பித்தான்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை இந்த கவிதை பரியாரியை அழவைத்துவிட்டதே இந்த கவிஞனை கழுகு மரத்தில் ஏற்றவேண்டும் என்று நினைத்த நேரத்தில்

அழுதுக் கொண்டிருந்த பரியாரி மன்னா! மன்னித்துவிடுங்கள் என்னை வைத்து உங்களை கொலைச் செய்ய சொன்னது உங்கள் மந்திரிதான்.
சவரம் செய்யும்முன் கத்தியை பலமுறை தீட்டி ஒரே இழுப்பில் கழுத்தை அறுத்திடவேண்டும் என்று மந்திரி கூறினார் அதனால்தான் கத்தியை பலமுறை நான் தீட்டிக் கொண்டிருந்தேன் தீட்டுறதும் பாக்குறதும் எனக்கு தெரியும் என்று எங்கள் சதியை தாங்கள் தெரிந்துக் கொண்டுவிட்டீர்கள் என்னை மன்னித்து உயிர் பிச்சைக் கொடுங்கள் என்று பரியாரி கூறியதும் மன்னர் திடுக்கிட்டு போனார்.

உடனே பரியாரியையும் கொலை செய்ய சொன்ன மந்திரியையும் கைது செய்ய உத்தரவிட்டு தீட்டுறதும் பாக்குறதும் எனக்கு தெரியும் கவிதையை எழுதிய கவிஞனை அழைத்து வரச்சொன்னார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முட்டாளிடம் அவன் மனைவி மன்னர் உன்னை கூப்பிடுகிறாராம் என்று சொன்னதும் முட்டாளுக்கு வயிற்கை கலக்கியதாம் தான் எமுதிய கவிதைக்காத்தான் தன்னை கூப்பிடுகிறார் ஐயோ மன்னன் இன்று உயிருடன் சமாதி கட்டிவிடுவான் என்று பயந்து நடுநடுங்கி போனான்.கூடவே அவன் மனைவியும் என்கணவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று அழுதுக்கொண்டே பின் தொடர்ந்தாள்.

மன்னர் அவனை அழைத்து தனது சிம்மாசானத்தில் அமரவைத்து தங்க நாணயத்தால் அபிஷேகம் செய்வதை காரணமறியாமல் முட்டாளும் அவன் மனைவியும் ஆனந்தத்துடன் பார்த்தார்களாம்.

முட்டாளின் வரிகள் ஒருநாட்டு மன்னரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.
முட்டாள் என்று யாரும் யாரையும் தீர்மானித்துவிட முடியாது.

அறிவு என்பது காணாமல்போன ஒட்டகமாக இருக்கிறது அதை எங்கு கண்டாலும் கட்டிபோட்டுவிடுங்கள் என்பது அண்ணல் நபிகளின் அழகிய பொன்மொழி.