உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, July 29, 2010

வடஇந்திய சுற்றுலா-3
ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹாலுக்கு இரண்டரை கி.மீ தூரம்.அங்கிருந்து தாஜ்மஹாலுக்குச் செல்ல குதிரை வண்டி, ஓட்டக வண்டி, சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ இப்படி பலவிதமான வாகனங்கள் நிற்கின்றன.

யமுனை ஆற்றங் கரையோரம் தாஜ்மஹால் அமைந்திருக்கிறது.
தாஜ்மஹாலுக்குள் செல்ல இரு வழி அமைத்து சோதனைகள் செய்து போலிஸ்காரர்கள் ஒவ்வொரு பார்வையாளர்களையும் அனுப்புகிறார்கள் தினமும் காதல் சின்னத்தை காண்பதற்கு பலஆயிரம் காதலர்கள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.கூட்டம் அதிகமாகவே இருந்தது.சோதனைக்கூடத்திற்கு முன் பலவிதமான கடைகள் அமைத்து பலபொருட்களை விற்பனை செய்கிறார்கள் சொன்ன விலைக்கு அங்கு வாங்கக்கூடாது பொருட்கள் மட்டும் அல்ல தங்கும் விடுதிக்கும் தான்.
எல்லாமே பேரம் பேசப்படுமளவிற்கு தான் விலைகள் வைத்துள்ளார்கள்.பேச்சு திறமை உள்ளவர்களுக்கு ஆக்ரா சரியான சவாலாக இருக்கும்.

நவீன இயந்திரங்கள் வைத்து நம் உடம்பில் ஏதேனும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறோமா என்பதை கண்டறிய வைத்துள்ளார்கள் அது இருந்தாலும் அதையும் நம்பாமல் நம் உடம்பை தடவியும் பார்க்கிறார்கள்.

வெற்றிலைப் பாக்கு, சுவிங்கம், பான் வாயில் மென்று துப்பக்கூடிய பொருட்களை தடைசெய்துள்ளார்கள்.அதே போன்று பெண்களின் கை பேக்குகளை சோதனை செய்கிறார்கள். எனது நண்பர் ஹாஜாவிடம் ஆறு சுவிங்கம் பாக்ஸ் இருந்தது அதை அனுமதிக்கவில்லை நம் கையில் கொடுத்து நீங்களே எரிந்து விடுங்கள் என்று கொடுத்தபோது எரிவதற்கு மனமின்றி வெளியில் சென்று யாரிடமோ கொடுத்துவிட்டு வந்தார்.

இவைகளை யெல்லாம் எரிந்துவிட்டு காதல் சின்னத்தை காண்பதற்கு உள்ளே நுழைந்தால் பிரமாண்டமான நூழைவாயில் தாஜ்மஹாலை காண்பதற்கு தடையாக நிற்கிறது.இது ஷாஜகானின் பிரித்தியோக மூளை தனது காதல் சின்னத்தை வெறும் கட்டிடமாக அவர் நினைக்கவில்லை அந்த மஹாலில் மும்தாஜ் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பதைப்போன்ற உணர்வுக் கொண்டிருந்துள்ளார்.

மூன்று பிரமாண்ட நுழைவாயிழை பாதுக்காவலாக அமைத்து நடுவில் தனது காதல் சின்னத்தை உருவாக்கி இருக்கிறார்.கட்டிடக் கலையில் மிகவும் ஆர்வம் கொண்டவராக ஷாஜகான் திகழ்ந்துள்ளார்.அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் முகலாய கலை நயமிக்கதாய் உச்சநிலை அடைந்துள்ளதாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஷாஜகானின் கட்டிடக்கலை படைப்புகள் தாஜ்மஹால் மட்டுமல்ல ஏராளம்.
இன்னும் அவருடைய கலைகளில் மிச்சமிருப்பவை டெல்லியிலுள்ள செங்கோட்டை ஜூம்மா மஸ்ஜித் லாகூரின் ஷாலிமார் தோட்டங்கள் லாகூர் கோட்டையின் சில பிரிவுகள் (ஷீஸ் மஹால் மற்றும் நௌலாகா பெவிலியன் போன்றவை) அவருடைய தந்தையின் அடக்கஸ்தளம் இன்னும் ஆக்ராகோட்டையின் உட்புற வடிவங்களை தனது 16 வது வயதிலேயே தனது இஸ்டத்திற்கு மாற்றங்களை செய்து தனது தந்தையிடம் நற்பெயரைப் பெற்றவர் என்பது வரலாறு.

தாஜ்மஹால் உள்ளே செல்வதற்கு முன் அதைப்பற்றி ஒரு சிறிய குறிப்பை இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன்.

முகலாயர்களைப் பற்றி சரித்திரம் எழுதியவர்கள் தங்களின் விருப்பத்திற்கு எழுதியிருக்கிறார்கள்.ஷாஜகானைப் பற்றியும் அப்படிதான் எழுதப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஐந்தாவது மன்னராக வாழ்ந்தவர் ஷாஜகான்.இவர் லாகூரில் 1592-ல் பிறந்துள்ளார்.

தனது முதல் மனைவியான மும்தாஜ் மீது அவர்கொண்டிருந்த அன்பு காதல் வேறு எந்த மனைவியின் இடத்திலும் அவர் வைத்திருக்கவில்லை.14 பிள்ளைகளை பெற்றெடுத்த அந்த அம்மணி மிகவும் அடக்கமான, அமைதியான, அரசாட்சியில் தலையிடாமல், குடும்பப் பொறுப்புடன், தனது கணவருக்கு எல்லாக் கட்டத்திலும் நல்ல மனைவியாக நடந்துள்ளார் இறுதிவரையில் அவர்களுக்கிடையிலான உறவு வலுவானதாக இருந்தது என்று இணையத்தில் சரித்திரத்தை பதிவு செய்து வைத்திருக்கும் விக்கிப்பீடியா கூறுகிறது.

தாஜ்மஹாலை கட்டுவதற்கு 22 வருடங்கள் ஆகியிருக்கிறது; அதை 23 ஆயிரம்பேர்கள் கட்டியிருக்கிறார்கள். தாஜ்மஹாலை கட்டி முடித்தவுடன் அதன் பணியாளர்களின் கைகளை துண்டித்ததாக சில சரித்திர ஆசிரியர்கள் கதை கட்டி இருக்கிறார்கள். விக்கிமீடியாவில் அதற்கு ஆதாரம் இல்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
ஐரோப்பியர்கள் அங்காடி வதந்திகளை வைத்தே சரித்திரத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஷாஜகானின் 19 ஆம் நூற்றாண்டு வரைபடம்

ஷாஜகான் மரணிக்கும் தருவாயில் கலிமா மற்றும் திருக்குர்ஆனை ஒதியவராகவே மரணித்துள்ளார்.அவருடைய இறுதி ஊர்வலத்தில் மேம்பட்ட பிரபுக்கள் தூக்கிச்செல்லவும் அவர்களைப் பின்தொடர்ந்து ஆக்ராவின் முக்கிய குடிமக்களும், ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்குக் காசுகளை இறைத்து வர அவர்களின் பின்னால் அதிகாரிகள் ஊர்வலமாக கொண்டு செல்வதுடன் தேசிய மரியாதைக்கும் ஜஹானாரா (ஷாஜகானின் மூத்தமகள்) திட்டமிட்டிருந்தார்.ஒளரங்கசீப் அத்தகைய பகட்டு ஆரவாரங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை அவருடைய உடல் இஸ்லாமிய முறைப்படி கழுகப்பட்டு ஒரு சந்தன சவப்பெட்டியில் தாஜ்மஹால் வரையில் ஆற்றில் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு அவருடைய பிரியத்திற்குரிய மனைவி மும்தாஜ் மஹாலின் உடலுக்கு அடுத்து புதைக்கப்பட்டார்.

ஷாஜகான் மும்தாஜ் அடக்கஸ்தளம்

ஷாஜகான் மும்தாஜ் இருவர்களை தாங்கி அவர்களின் உண்மையான காதலை இவ்வுலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக அதிசிய சின்னமாக நம் எல்லோர் எண்ணத்திலும் திண்ணமாக அழகுக்கு அழகுசேர்த்து யமுனை ஆற்றங்கரையோரம் தாஜ்மஹால் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

நுழைவாயிலுக்குள் நுழைந்ததுமே அந்த வாயிலை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தேன்.அந்த வாயிலில் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கிறது அந்த எழுத்துக்கள் வெறும் கவிதைகள் அல்ல திருக்குர்ஆனின் இறைவசனங்கள்.
அந்த வசனங்கள் வருபவர்களை வரவேற்றுக் கொண்டே அதன் பொருள் தெரிந்தவர்களுக்கு அருளளித்துக் கொண்டிருக்கிறது.

இதோ தாஜ்மஹாலை என் கண்களால் காணப்போகிறேன் அந்த அழகை என் கண்கள் இரசிக்கப் போகிறது புகைப்படங்களிலும் திரைப்படங்களிலும் கண்ட தாஜ்மஹால் இதோ என் கண்முன்னால் நிஜமாக என்னை வரவேற்கிறது.

அன்று பெய்த வெய்யிலில் நனைந்து உடல் உலர்ந்த நிலையில் நுழைந்த எங்களை ஒரு நொடியில் உடலுக்கும் உள்ளத்திற்கும் தாஜ்மஹால் உரம் ஊட்டியது உள்ளத்தில் மகிழ்வூட்டியது.

அந்த அழகை நீங்களும் ரசிக்க வேண்டும்

ரசனைத் தொடரும்...

Monday, July 26, 2010

வடஇந்திய சுற்றுலா - 2


அக்பர் கோட்டைக்கு செல்லும் வழியில் காலை சிற்றுண்டிக்கு ஒரு உபிகாரன் கடையில் வாகனத்தை நிறுத்தினார்.இட்லி தோசை கிடைக்குமா என்று வீட்டுக்காரம்மா என்னிடம் கேட்க
கடையின் முகத்திலேயே தெரிகிறதே சப்பாத்தி பூரியைத்தவிர வேறொன்றும் கிடைக்காது என்று என பதில் சொல்லும்போதே வாகன ஓட்டிக்கு இட்லி தோசை என்ற வார்த்தைப்புரிந்து தென்னிந்திய உணவகம் தூரமாக இருக்கிறது என்று கூறிவிட்டு இங்கு டிபன் ருசியாக இருக்கும் எனச் சான்றிதழ் வழங்க அனைவரும் காலை டிபனை அங்கு முடித்து பில் கொடுக்கும்போது தான் தெரிந்தது நாம் சாப்பிட்ட தொகையில் ஒட்டுனருக்கும் பங்கு உண்டு என்று.

வாகன ஒட்டிகள் எங்கு வாகனத்தை நிறுத்துகிறார்களோ அங்கு அவர்களுக்கு பங்கு இருக்கிறது என்பதை விளங்க முடிந்தது.

அக்பர்கோட்டைக்கு செல்லும் முன் அந்த கோட்டையைப் பற்றி நமக்கு விளக்குவதற்கு நிறைய கைடுகள் நம் வாகனங்களை வழிமறிப்பார்கள் ஆனால் வாகனவோட்டியோ அவருக்கு பங்கு தரக்கூடிய கைடுகளிடம் மட்டுமே அழைத்துச் செல்கிறார்.கடைகளைப்பற்றியோ ஆட்களைப்பற்றியோ சான்றிதழ் கொடுத்தால் வாகனஓட்டிக்கு வரும்படி இருக்கு என்று நாம் உசாராக இருக்கவேண்டும்.

இந்த உசாரான விசயங்களை எல்லாம் இங்கு என்னால் எழுதமுடிகிறதே தவிர அந்த இடங்களில் கோட்டையைப் பார்க்க கோட்டை விட்டேன்.

ஒரு நபருக்கு கைடு பண்ணுவதற்கு 100 ரூபாய் என அச்சடித்த அட்டையை காண்பிக்கின்றார்கள். எங்கள் குழுவிற்கு 500 ரூபாய் கேட்டார்கள் பெருசா அவர்களிடம் பேசி 100 குறைத்து 400 உறுதி செய்தேன்.எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு போகும் வழியில் யோசனை வந்தது அட கைடு விசயத்தில் ஏமாந்து விட்டோமே என்று.ஒரு நபருக்கு 100 என்றால் எங்கள் 9 நபரில் 2 பேருக்குதானே ஹிந்தி தெரியும் 100 ரூபாய்க்கு மேல் கொடுத்திருக்க கூடாதே என கொடுத்துவிட்டு வருத்தப்பட்டோம்.

சரியாக காலை 11 மணிக்கு அக்பர்கோட்டைக்குள் நூழைந்தோம்.மலையின் மீது கோட்டையை கட்டி ஆண்ட அக்பரை நினைத்து ஒரு கணம் திகைக்க வைக்கிறது. இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் இப்படியொரு கோட்டையை கட்டுவதற்கு முயற்சி செய்தால் பல ஆண்டுகள் ஆகும் எனத்தோன்றுகிறது.ஆனால் முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோட்டை இன்னும் புதிதாக சமீபத்தில் கட்டப்பட்;டது போல் காணப்படுகிறது.

மன்னர்கள் கோட்டைக்குள்ளும் அரண்மனைக்குள்ளும் வாழ்வதற்கு அந்த நாட்டின் மக்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நாங்கள் கண்ட கோட்டைகளும் அரண்மனைகளும் சாட்சிகளாக காணமுடிந்தது.

அந்த மன்னருடைய ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை காணமுடியவில்லை மக்கள் வசதியாக வாழ்ந்ததற்குரிய அடையாளங்கள் எங்கும் பாதுகாத்து வைக்கப்படவில்லை.

மன்னர் அக்பரின் கோட்டைக்குள் பல சமாதிகள் இருந்தன.மன்னரின் குடும்ப வம்சங்களும் வாரிசுகளும் அந்த கோட்டைக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள்.

ஆனால் அக்பரின் குரு சையது சலீம் சிஸ்தி என்ற மகானுக்கு தனியொரு அடக்கஸ்தளத்தை நிறுவி இன்றும் இப்பவும் அவர்களுக்காக பிரார்த்தனை (ஜியாராத்) செய்யப்படுகிறது.நாமும் பிரார்த்தனை செய்தோம்.

இந்த கோட்டைக்குள் செல்வதற்கு எந்த தொகையும் இல்லை காலணிகள் அணிந்து செல்ல அனுமதியில்லை.அதனால் கால்களில் காலுறை (சாக்ஸ்)அணிந்துக் கொள்வது நலம்.

வெப்பத்தின் தாக்குதல் அதிகமாக இருந்தது வெற்றுக்காலுடன் நடப்பது கஸ்டமாகவே இருந்தது நீளமான மிதியடிகள் போடப்பட்டிருக்கிறது அதையும் தாண்டி சூடும் இருந்தது.

பார்க்க பார்க்க பிரமிப்பையே ஏற்படுத்தியது இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை.அதை விட்டுபுறப்படுவதற்கும் மனம் இல்லை இருந்தாலும் தாஜ்மஹாலை காணவேண்டும் என்ற ஆவலினால் அங்கிருந்து ஆக்ரா கோட்டைக்கு புறப்பட்டோம்.

நடப்பதற்கு கால்கள் வாடகைக்கு கிடைத்தால் நலமாக இருந்திருக்கும் என மேல்ழூச்சு கீழ்மூச்சு வாங்க ஆக்ரா கோட்டைக்குள் நடந்தபோது தோன்றியது.நுழைவு கட்டணம் 20ரூ செலுத்தினோம்.வெளிநாட்டினருக்கு 250 என்றும் 500ரூ என்றும் 750ரூ என்றும் இடத்திற்கு தகுந்தாற்போல் வசூலிக்கன்றார்கள்.

தாகத்தின் தாக்குதலால் எத்தனை விதமான பானங்கள் விற்கப்பட்டதோ அத்தiயையும் வாங்கி குடித்தாயிற்று தாகம் தீர்ந்த பாடில்லை.(பானம் என்றதும் போதைத் தரக்கூடியது என்று யாரும் எண்ணி விட வேண்டாம்.நாம் அதை தீண்டுவதில்லை)

குடித்த பானங்கள் அனைத்தும் வேர்வையாகவே வெளியேறியது.ஆக்ரா கோட்டையின் மேல்தளத்திலிருந்து தாஜ்மஹாலின் பின்புறத்தை காணமுடிகிறது.மேல்புறத்தில் நாம் நின்றபோது நல்ல காற்றோட்டம் இருந்தது.
மதிய சாப்பாட்டிற்கான பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.

ஆக்ரா கோட்டையினுள் பலிங்கு கற்கலால் கட்டப்பட்ட சிறிய பள்ளிவாசல் இருக்கிறது. சுற்றுலா பயணிகள் அனைவரும் அந்தப்பள்ளிக்குள் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள் அந்த பள்ளிவாசலில் தொழுகை நடைபெறவில்லை. அங்குள்ள குளீருட்டப்பட்ட தண்ணீர் குடத்திற்கு முன் நீண்ட வரிசை நின்றுக் கொண்டிருந்தது.

ஒருமணி நேரத்தில் ஆக்ராகோட்டையை சுற்றிவிட்டு ஒட்டுனர் எங்களை மதிய சாப்பாட்டுக் கடைக்கு அழைத்துச்சென்றார் மறக்காமல் அவருக்கு பங்குதரக்கூடிய கடையாகவே அதுவும் இருந்தது.

நாங்கள் பசிக்கா சாப்பிட்டோமே தவிர யாரும் ருசிக்காக சாப்பிட வில்லை மூன்று வேலையும் சப்பாத்தி என்றால் எப்பூபூடி.

அந்திமாலையில் தாஜ்மஹாலின் நுழைவாயிலில் நுழைந்தோம் எங்கள் மனம் எல்லாம் பரபரப்பாக இருந்தது இன்னும் எங்கள் கண்களில் தாஜ்மஹால் தென்படவில்லை ஆனாலும் அதன் அருகில் நின்றுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே சும்மா ஜிம்முன்னு பறப்பது போல் இருந்தது.

தாஜ்மஹாலை பார்ப்பவனுக்கே இப்படி என்றால் இதை இரசித்து கட்டிய ஷாஜகானின் எண்ணமும் சிந்தனையும் உள்ளமும் உணர்வும் எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்கள் தாஜ்மஹாலை நேரில் காணும்போது மட்டுமே உணரமுடியும் புகைப்படங்களில் கண்டு அதை இரசிக்க முடியாது சக்கரையை தாளில் எழுதி அதை ருசிக்க முடியாததைப் போல..
இரசனை தொடரும்..

வடஇந்திய சுற்றுலா-1
வடஇந்திய சுற்றுலா-3
வடஇந்திய சுற்றுலா-4

வடஇந்திய சுற்றுலா-5
வடஇந்திய சுற்றுலா-6

வடஇந்திய சுற்றுலா-7
வடஇந்திய சுற்றுலா-8
வடஇந்திய சுற்றுலா-9
வடஇந்திய சுற்றுலா-10

Thursday, July 22, 2010

இந்திய வடமாநில சுற்றுலா– 1


இரவு 10 மணிக்கு சென்னை சென்டரலிருந்து டெல்லி செல்வதற்கு தினமும் தமிழ்நாடு விரைவு இரயில் தாயராக இருக்கிறது.முன்பதிவு செய்பவர்கள் ஒருமாதம் முன்பே செய்துக் கொள்வது நலம்.

எனது மற்றும் நண்பரின் குடும்பம் குழந்தைகளுடன் ஒன்பது நபர்கள் ஆக்ரா, டெல்லி, ஜெய்பூர் மற்றும் அஜ்மீர் சுற்றுவதற்கு புறப்பட்டோம்.குளிர்சாதன வசதி கொண்ட இரயில் பெட்டியில் முன்பதிவு இணையத்தின் மூலம் செய்திருந்ததால் கணினி அது இஸ்டத்துக்கு இருக்கையை தேர்வுச் செய்திருந்தது.இருக்கையை நம் விருப்பத்திற்கு தேர்வுசெய்யும் வாய்ப்பை இன்னும் இந்திய இரயிவே மக்களுக்கு வழங்கவில்லை என நினைக்கிறேன்.

இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்திருந்ததால் மேல் இருக்கை இரண்டும் ஜன்னலோர இருக்கைகள் மேலும் கீழும் எங்களுக்கு வழங்கி இருந்தார்கள்.

எங்களுடைய வசதிக்கு அமர்வதற்கு பயணிகளிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களும் விட்டுக் கொடுத்து நாங்கள் தந்த இருக்கையில் அமர்ந்து எங்களை சந்தோசப்படுத்தினார்கள்.

விட்டுக்கொடுக்கும் மனோநிலை இந்தியர்களான நம்மிடம் நிறையவே இருக்கிறது. முகந்தெரியாத பழக்கமே இல்லாதவர்களுக்கு நாம் விட்டுக் கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துகிறோம் அதுவே நம் குடும்பத்தார்களுக்கு நம்மை விட்டுக் கொடுத்தால் நம்வாழ்க்கை அளவிலா ஆனந்தத்தை அடையும் என்பதை நாம் தெரிந்திருந்தாலும் மனம் ஈகோ என்ற கவசத்தை தலையில் மாட்டிக்கொண்டு கழட்டத்தெரியாமல் திணருகிறோம் என்பதானே உண்மை.

எங்கள் பயணம் இனிமையாக அமைவதற்கு இரயில் பயண இருக்கைள் எங்களின் விருப்பத்திற்கு மாற்றிக் கொண்டதால் குழந்தைகள் குதுகூலம் அடைந்தார்கள்.

முதலில் நாங்கள் சுற்றவேண்டிய இடம் ஆக்ரா என தீர்மானித்தோம். சென்னையிலிருந்து ஆக்ராவிற்கு சுமார் 1980 கி.மீ தூரம். இரு இரவுகள் ஒரு பகல் இரயில் பயணம். இரயிலில் தலையாணை போர்வை மற்றும் மெத்தை விரிப்பு இவைகளை முதல் இரண்டாம் மூன்றாம் வகுப்பு குளிர் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு தருகிறார்கள் சுகமாக தூங்கலாம்.

நம் வீட்டில் கூட இவ்வளவு நேரம் தூங்க மாட்டோம் ஒய்வு எடுக்கமாட்டோம் ஆனால் நெடுந்தூர இரயில் பயணத்தில் நமக்கு கிடைக்க கூடிய ஒய்வு அலாதியானது அனுபவிக்க வேண்டியது.வாய்ப்பு கிடைக்கக் கூடியவர்கள் அதை அனுபவிப்பார்கள்.

நெடுந்தூர இரயில்பயணத்தில் பயணிகளுக்கு உணவு குழந்தைகளுக்கான உணவு இவைகள் அனைத்தும் இரயிலில் ஒரு பெட்டியில் அடுப்பங்கறையை உருவாக்கி அதில் சமைத்து சூடாக வழங்குகிறார்கள்.டீ காபி குளிர்பானங்கள் நொறுக்கு தீணிகள் விற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

இரயில் செல்லும் பாதையில் நகரம் கிராமம் மலை என்று இயற்கையின் பன்முகங்களை கண்டு இரசிக்க முடிகிறது. சென்னையிலிருந்து ஆக்ரா செல்வதற்கு நான்கு மாநிலங்களை கடக்கவேண்டி இருக்கிறது.
இந்த நான்கு மாநிலங்களின் சீதோசனத்தை நம்மால் கண்டு இரசிக்க இயலுகிறது வெப்பத்தையும், மழையையும், மிதமான குளிரையும் அனுபவிக்க முடிகிறது.

இரயில் நிறுத்தும் இடங்களில் அந்தந்த ஊர்களின் பெயர்பெற்ற திண்பன்டங்கள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். விலையை மட்டும் நாம்தான் தீர்மானிக்கனும் சொன்ன விலையில் எதையும் வாங்கக் கூடாது விற்கக்கூடியவர்களும் அப்படிதான் விலையை நிர்ணயிக்கிறார்கள்.

நெடுந்தூரப் பயணத்திற்கு இரயில் சுமார் 24 பெட்டிகளை கோர்த்து செல்வதினால் 1 கி.மீ தூரத்திற்கு இரயில் நிற்பதைப்போன்ற பிரம்மை தோன்றுகிறது. ஓரு நிறுத்தத்தில் நின்றால் குளிர் சாதனப்பெட்டி நிறுத்தத்தின் கடைசியில் தான் நிற்கிறது அதனால் கடைகளில் ஏதும் பொருட்கள் வாங்க முடிவதில்லை சில நிமிடங்களில் இரயில் புறப்பட்டு விடுகிறது.

முதல் இரண்டாம் வகுப்புகளில் பாதுகாப்பு இருக்கிறது மற்ற வகுப்புகளில் செல்லக்கூடியவர்கள் உடமைகளில் மிக கவனமாக இருக்கவேண்டும் இருக்கிறார்கள் நீண்ட இரும்பு சங்கலியால் தங்கள் உடைமைகளை பூட்டி வைத்துக் கொள்கிறார்கள்.

பெரிய ஊர்களில் நிறுத்தும்போது தனியார் நிறுவனங்கள் இரயிலின் கழிவறையை நவீன இயந்திரங்களின் மூலம் தூய்மைப்படுத்துகிறார்கள் வரவேற்க்ககூடியது. இது தொடந்து செய்து வந்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்.

நீண்ட தூர பயணமாக இருப்பதால் குளியலறை வசதியும் எல்லா இரயில்களிலும் செய்யப்படவேண்டும் நாங்கள் சென்ற தமிழ்நாடு விரைவு வண்டியில் குளியலறை வசதி இல்லை. இராஸ்தானி விரைவு வண்டியில் இருப்பதாக கூறுகிறார்கள்.

இன்னும் மடி கணினி கைபேசி இவைகளுக்கு மின்சார வசதி (ரீ சார்ஜ் செய்யும் வசதி) செய்திருக்கிறார்கள்.

இரயில் பயணத்தில் நல்ல ஓய்வு கிடைத்தது. நாங்கள் செல்லவேண்டிய ஆக்ரா விடியற்காலை 4.30 மணிக்கு வந்தடைந்தது.எங்களில் யாருமே இதற்கு முன் ஆக்ரா வந்ததில்லை தங்குவதற்கு விடுதியை இணையதளத்தின் மூலம் செய்துக்கொள்ள வசதி இருந்தும் அதை செய்யாமல் அலட்சியப்படுத்தியதால் சில அசவுரியங்கள் ஏற்பட்டது.

ஆக்ரா ஸ்டேசனில் இரயில் நின்றதுமே புரோக்கர்கள் நம்மை சூழ்ந்துக் கொள்கிறார்கள் அவர்கள் அழைத்துச் சென்ற விடுதியில் அறை எடுத்தோம அப்படி எடுக்கும் அறைகளின் விலை சற்று கூடுதலாக இருக்கும் காரணம் புரோக்கர்களுக்கு கமிஷன் நம் வாடகையில் விழும். வந்த புரோக்கர் விடுதியுடன் விட்டபாடில்லை சுற்றிபார்க்க வாகனமும் ஏற்பாடு செய்துதருவதாக கூறி குளிர் சாதன வாகனத்தை தயார்செய்தார்.நாங்கள் செலுத்திய அதற்கான தொகை ஒரு மடங்கு கூடுதல் என்பது பின்னர் விசாரித்ததில் தெரிந்துக் கொண்டோம்.

அதிகாலை 6.00 மணிக்கெல்லாம் விடுதிக்கு வந்து சேர்ந்தோம் அந்த வீதியில் பல விடுதிகள் இருந்தன.
விடுதியின் எதிரில் பெரிய எருமைமாட்டு பண்ணையே இருந்தது.சாலையெல்லாம் எருமையின் சகதி சூழ்ந்து ஈக்கள் மோய்த்து கப் அடித்தது.உலக அதிசய சின்னமான தாஜ்மஹால் இருக்கக் கூடிய ஆக்ராவில் இப்படியா என்று நம்பவே முடியாமல் உ.பி அரசை திட்டிக்கொண்டிருந்தோம்.

8.30 மணிக்கு சுற்றுவதற்கு வாகனம் வந்துவிடும் அதற்குள் தயாராக வேண்டும் குளித்துவிட்டு புறப்பட்டோம்.

எங்கள் எல்லோர் மனதிலும் முதலில் தாஜ்மஹாலை காணவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.ஆனால் வாகன ஓட்டுனரோ ஃபத்தேபூர் சிக்ரி(அக்பர் கோட்டைக்கு) தான் முதலில் அழைத்துச் செல்வேன் என அடம்பிடித்தார். சரி அவருடைய விருப்பத்திற்கு விட்டோம் அக்பர் கோட்டை ஆக்ரா நகரத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் இருக்கிறது.மதியம் 3.00 சுமாருக்கு தாஜ்மஹாலில் விடுகிறேன் என்றார்.

நாங்கள் சென்றநேரம் வெயில் அனலை கக்கியது அந்த கொடுர வெப்பத்தில் நன்றாக நனைந்தோம்...எங்கள் சிறுசுகளெல்லாம் வெப்பத்தில் குளித்தனர்.
எங்கள் வாகனம் ஆக்ரா நகரத்தினுல் நுழைந்தது எருமைமாடுகள் நகரத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது உ.பி அரசுக்கு எருமைகள் மீது தனி பாசங்காட்டி முழு சுதந்திரம் அளித்திருப்பார்கள் என நினைக்கத் தோன்றியது நகரில் எங்கு திரும்பினாலும் எருமைகள் மாநாடுதான். வாகன நெரிசலைவிட எருமைகளின் நெரிசல் அதிகம் காணப்பட்டன.

நகரில் ஒரு இடத்தில் கழுதைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படும் என பலகையும் வைக்கப்பட்டிருந்தது.கழுதையின் முதுகில் இருபக்கமும் பெரிய பைகளைப்போல் அமைத்து அதில் செங்கற்களை நுழைத்துக் கொண்டிருந்தார்கள்.

நாம் எந்த யுகத்தில் இருக்கிறோம் என்பதே ஒரு கணம் யோசிக்க வைத்தது.நம் ஊர் மினி பஸ்களைப் போல் அங்கும் கிராமங்களுக்கு செல்லக் கூடிய வாகனங்கள் இருந்தன ஆனால் பேருந்துக்குள் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ பெரும்பாலோர் பேருந்துக்கு மேல் அமர்ந்து பயணம் செய்யவே ஆர்வப்படுகிறார்கள். பெரும்பாலன வாகனங்களில் மேல் தளங்களில் அமர்ந்தே பயணம் செய்கிறார்கள்.விவசாய நிலங்கள் அதிகமாக வரண்டே இருந்தது மழையை நம்பிதான் வாழ்கிறார்கள்.

ஏழைகளின் கடினமான உழைப்பை அவர்களின் கஸ்டங்களை வடமாநிலங்களில் பார்க்கமுடிந்தது...எங்கள் சுற்றுலா இடங்களை மட்டும் பார்ப்பதற்கல்ல மனிதர்களையும் தான்...நீண்டுவிட்டது தொடர்வோம்....

Tuesday, July 20, 2010

நீர்மை கொண்ட நீடுர் பதிவர் - சந்திப்பு

முஹம்மது அலி ஜின்னாஹ்


விடுமுறையை விழுங்கிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியாச்சு...முப்பது தினங்களில் கிடைத்த அனுபவங்கள் நிறையவே இருக்கு.
தென்மாநில சுற்றுலாவைப்பற்றி தொடர்எழுதவேண்டும் மனம்தொட்டதை மனதில் பட்டதை எழுதவேண்டும்.

நாட்குறிப்பில் எழுதிய காலத்தில் கூட நிகழ்வுகளை முழுமையாக எழுதமுடியாமல் எழுத்துக்கு வறுமை இருந்தது ஆனால் இன்று இணையதளத்தில் இலவசமாக கிடைத்திருக்கும் வலையில் ஒன்றுவிடாமல் அனைத்தையும் எழுதலாம் ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் நாட்குறிப்பில் எழுதிய சுதந்திரம் வலையில் இல்லை எழுதுபவர்களுக்கு பர்தா தேவைப்படுகிறது.

பேனா நண்பர்களாக அறிமுகமானவர்களை சந்திக்கும் போது எற்படக்கூடிய அலாதி இன்று பதிவர்களை சந்திக்கும்போது இல்லை என்று ஒரு பதிவர் சொன்னார். அவர் சந்தித்த பதிவர் அப்படி ஆனால் எனக்கு அது நேர்மாற்றம். பதிவராக இருந்தாலும் அதிபராக இருந்தாலும் விரல்களைப் போல்தான் மனிதர்கள்.

இந்த விடுமுறையில் ஒரே ஒரு பதிவரை மட்டும் நான் துபாய் புறப்படுவதற்கு முதல் நாள் எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவலில் நீடுரை நோக்கிச் சென்றேன்.(எனது பக்கத்து ஊர்)

எனது நண்பரின் மகளுக்கு அன்று நீடுரில் திருமணம் நிகழ்ச்சி அதில் கலந்துக் கொள்வதற்கு முன் 70 வயதைக் கடந்த முஹம்மது அலி ஜின்னாஹ் (நீடுர் சீசன்) என்ற பழுத்த ஞானப்பழத்தை சந்திக்க காலை 11 மணிக்கு அவர் இல்லம் வந்தேன்.

(தமிழக இஸ்லாமியர்கள் அறிந்த காலம்சென்ற சிந்தனைச் செல்வர் நீடுர் அட்வகேட் சையது அவர்களின் அன்புச் சகோதரர் தான் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்)

வழக்கம்போல் அழைப்பு மணி..

வெள்ளை நிற ஆடையில் வெண்மை சிரிப்புடன் நரைத்த முடி என்றாலும் நிமிர்ந்த இராணுவச் சிப்பாயைப்போல் பளிச்சிட்ட முஹம்மது அலி ஜின்னாஹ் என்னைக் கண்டு யார் என்று கேட்பார் என எதிர்பார்த்தேன் அவரோ அடையாளங்கண்டு வாங்கோ என்று உற்சாகத்துடன் சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

சிறிய வரவேற்பரையில் அமரப்போன என்னை உள்ளே வாங்க என பெரிய வரவேற்பறைக்கு அழைத்து அமரச்செய்து கூச்சப்படவேண்டாம் எனக்கூறிக் கொண்டே தனது அன்புநிறைந்த துணைவியாரிடம் என்னை ஞாபகமூட்டினார்.(ஏற்கனவே சொல்லி வைத்துள்ளார்)

என்னைக் கண்டதில் அவருக்கு அளப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருப்பதை அவருடைய பரபரப்பில் காணமுடிந்தது.குடிப்பதற்கு டீ அல்லது காபி அல்லது சர்பத் எதுவேண்டுமோ சொல்லுங்க என்று உரிமையோடு கேட்டுக்கொண்டார் சர்பத் என்றதும் டீ அல்லது காபி வேண்டும் என்றாலும் கேளுங்க கூச்சப்படாதீங்க என்று கேட்டுக் கொண்டார்.

அவருடைய பேரக்குழந்தை துருதுருவென அங்கும் இங்கும் விளையாடிக்கொண்டிருந்தார்.பொருட்களை எடுத்து உரியவர்களிடம் கொடுப்பதில் திறமைவாய்ந்தவராக காணப்பட்டார்.

உரையாடினோம் அவருடைய பேச்சில் இந்திய மூத்த தலைவர்களைப் பற்றிய செய்திகள் நிறைந்திருந்தது.இத்தனை வயசிலும் இவ்வளவு விசயங்களை ஞாபத்தில் வைத்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.பல நாடுகளுக்கு சென்றுவந்தவர்.ஆங்கில புலமை நிறைந்தவர்.

தனது படுக்கையறையில் வைத்து கணினியை செயல்படுத்திக் கொண்டிருப்பதை காணமுடிந்தது.கணினிக்கு முன் இருந்த நாற்காழியின் கைப்பிடியில் தலையணைகள் கட்டப்படிருந்ததை வைத்து அதிகமாக இணையதளத்தில் வலம்வருவதை கிரகிக்க முடிந்தது.

வயதாகிவிட்டால் பலர் தங்கள் வாழ்க்கை முடிந்தே விட்டது என்ற கவலையில் பல நோய்களோடு படுத்த படுக்கையில் இருக்கும் பலருக்கு எழுபது வயசிலும் சுறுசுறுப்புடனும் தன்னார்வத்துடன் இளைஞர்களுடன் சரிசமாக பழகிவரும் மதிப்பிற்குரிய முஹம்மது அலி ஜின்னாஹ் பெரியவர்களுக்கு முன்னுதாரணமானவர்.

எனது கட்டுரைகளைப்பற்றி கூறினார் நிறைய அறிவுரைகள் கூறுவார் என எதிர்பார்த்தேன் அவரோ என்னை பேசவைத்து இரசித்துக் கொண்டிருந்தார்.
தத்துவத்தின் மீது எனக்கிருக்கும் ஆர்வத்தைக் கூறினேன்.

எந்த தேவைகளுக்குமே அதிகமாக செல்லாதவர் தனதூரில் நடக்கும் எனது நண்பரின் மகளார் திருமணத்திற்கு அழைப்பு இருந்தும் செல்வதற்கு மனமின்றி இருந்தவர் என்வருகையால் நானும் வருகிறேன் என காரில் செல்ல கூப்பிட நான் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளேன் எனக்கூறியதும் அதிலே போகலாம் என என்னுடன் வந்தார்.அவருடைய இந்த அனுசரனை எனக்குள் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

நாளை துபாய் புறப்படுகிறேன் என்றதும் வருத்தப்பட்டார்.சில தினங்களுக்கு முன்னாடியே நாம் சந்தித்திருக்க வேண்டும் நிறைய நேரங்களை சிலவழித்திருக்க வேண்டும் என தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தினார்.

எனக்கும் அதே ஆதாங்கம் தான் ஆனால் பத்து தினங்கள் தென்மாநில சுற்றுலாவில் கழிந்துவிட்டதினால் நாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என விளக்கமளித்தேன்.

வயது வித்தியாசமின்றி தனது மகன் வயதையொத்த என்னிடம் அவர் வெளிப்படுத்திய பண்பை, அன்பை எண்ணும்போது ஒரு குருவைச் சந்தித்த திருப்தி ஏற்பட்டது.துபாய் சென்றதும் எனது பையனுடன் தொடர்புவைத்துக் கொள்ளுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்.எனது தந்தைக்கு சமமான முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்.

இணையத்தில் முகப்புத்தகத்தில் வலம் வருவதும் வலைப்பூக்களை தொடங்கி பலரின் நல்ல பதிவுகளை அவர்களின் அனுமதிப்பெற்று தனது வலையில் மறுபதிவு செய்வதும் இவரின் வழமையாக இருக்கிறது. தன்னால் டைப் செய்யமுடியவில்லை என்னிடம் நிறைய கதைகள் இருக்கிறது டைப் செய்யமுடிந்தால் கதைகளை நிறைய பதிவுச் செய்வேன் என முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள் கூறினார்.

இந்த மூத்த பதிவரை சந்தித்ததில் மனம் மகிழ்ச்சியடைந்தது.இவரின் வயதிலும் சுறுசுறுப்புடன் வலம்வர வேண்டும் என்ற உரத்தை உள்ளத்தில் பதியவிட்டேன்.

எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் அவருக்கு என்றென்றும் வழங்க இறைஞ்சுகிறேன்.

என்னை சந்தித்த பாதிப்பு அவரின் இமெயில் வரிகளில் காணமுடிந்தது.

இது பதிவரை பார்த்துவிட்டு வந்த பிரிவு அல்ல
இரு உள்ளங்களுக்குள் எற்பட்ட உறவு.!