உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, April 17, 2011

காலத்தால் கரையாத காவியம் தீரன் திப்புசுல்தான்


நல்ல நட்பு கிடைப்பது அரிது அதுவும் இலக்கிய உலகில் சாதித்துக் கொண்டிருப்பவர்களுடன் நெருக்கமான உறவு கிடைப்பதும் அவர்களுடன் பழகுவதும் ஒரு அலாதியான இன்பம்.

சில வருடங்களுக்கு முன் துபையில் அறிமுகமான இலங்கையைச் சார்ந்த காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுடன் எனக்கு கிடைத்த நட்பை மிகவும் மதிக்கிறேன் என்றென்றும் நினைவுக் கொள்கிறேன்.

டாக்டர் ஜின்னாஹ்வைப் பற்றி தமிழகத்தில் பிரபலமான இலக்கியவாதிகளிடம் கேட்டால் அவருடைய சாதனைகளை பட்டியலிட்டு கூறுவார்கள். இலக்கிய வட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் இவர் ஒரு மருத்தவர்.

மருந்தகம் அமைத்து கூடுமானவரையில் ஏழைகளுக்கு இலவச வைத்தியங்களை செய்தும் மலைவாழ் மக்களிடத்திற்கு சென்று வைத்தியம் செய்ததும் இவருடைய வரலாற்று சுவடுகள். மருத்துவ தொழிலில் ஈடுப்பட்டிருந்த காலத்திலும் இலக்கியத்தின் மீது அளவிலா காதல் கொண்டிருந்ததற்கு காரணம் அவருடைய தந்தை புலவர்மணி M.K.ஷரீபுத்தீன் அவர்கள்.ஆனால் பத்திரிக்கைதுறை ஜம்பவான் அறிஞர் எஸ்.டி.சிவநாயகம் அவர்களை தனது குருவாக ஏற்றுள்ளார்.

அமீரகத்தில் ஜின்னாஹ் அவர்களின் புதல்வர்களும், புதல்வியும் இருப்பதினால் அடிக்கடி துபாய் வந்துபோவது அவரின் வழமை. வந்த இடத்திலும் இலக்கிய ஆர்வலர்களின் தொடர்பை துபாயில் இயங்கிக் கொண்டிருக்கும் சங்கமம் தொலைக்காட்சி நிறுவனர் கலையன்பன் மூலம் கிடைக்க அதன் வழி எனக்கும் கிடைத்தது.

பண்டார வன்னியன் காவியம் வெளியீட்டு விழாவிற்கு தொலைபேசி மூலம் என்னை அழைத்து உரையாடிய ஜின்னாஹ் அவர்களை அதே தினத்தில் சந்தித்தேன். அந்த சந்திப்பு இன்று வரை தொடர்கிறது இறைவனின் நாட்டத்தால் என்றும் தொடரவேண்டும்.

பண்டார வன்னியன் காவிய நூலை பெற்றபோதுதான் ஜின்னாஹ் அவர்களின் சாதனைகளை படிக்கத் தெரிந்தேன். 1965-ல் இலக்கியத்தில் பிரவேசித்துள்ள இவர் கவிதை சிறுகதை புதினம் சிறுவர் இலக்கியம் மொழிமாற்றம் (கவிதை) இவைகளில் ஆர்வம் கொண்டவரானார். இவர்வெளியிட்ட நூற்கள் முத்துநகை, பாலையில் வசந்தம் மஹ்ஜபீன் காவியம்,புனித பூமியிலே காவியம்,பணிமலையின் பூபாளம் கவிதை தொகுப்பு, கருகாத பசுமை (புதினம்),பிரளயம் கண்ட பிதா, தாய்க்கென வாழ்ந்த தனயன்,(குறுங்காவியங்கள்),கடலில் மிதக்கும் மாடி வீடு (சிறுவர் பாடல்கள்),அகப்பட்ட கள்வன் (சிறுவர் படக்கதை),பெற்றமனம் சிறுகதைத் தொகுப்பு,எங்கள் உலகம் (சிறுவர் பாடல்கள்),பண்டார வன்னியன் காவியம்,திருநபிக் காவியம்,திருமறையும் நபிவழியும்,வேரறுந்த நாட்கள், ராகுலுக்கு ஒரு புது வண்டி,ஆகிய நூற்களை வெளியீட்டுள்ளார்.இன்னும் வெளிவரவேண்டிய நூற்கள் ஏராளம் இருக்கின்றன. இதுவரையில் ஏழு காவியங்களை எழுதி வெளியீட்டுள்ளார்.இதில் டாக்டர் கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பண்டார வன்னியன் நாவலை 1500 பாடல்களாக காவியமாக்கியவர். அந்த காவியத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் மிக உயர்வானவிருது சாகித்ய மண்டலம் அவருக்கு 2005-ல் வழங்கப்பட்டது.

இவருடைய மஹ்ஜபீன் காவியம், புனித பூமியிலே காவியம் ஆகிய இரு காவியங்களும் இந்திய தமிழ்நாட்டின், வேலூர் மாவட்ட மேல்விசாரம் அப்துல்ஹக்கீம் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.முஹம்மதுஅலி அவர்களால் ஈழக்கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டு சென்னைப் பல்கலைகழகத்தில் 2006-ம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இன்னும் தமிழகத்தில் பல இலக்கிய நிகழ்வுகளில் மு.மேத்தா, வைரமுத்து, வாலி, கவிக்கோ போன்றவர்கள் இவருடைய காவியங்களை கவிதைகளை விமர்சித்துள்ளார்கள். சென்னையில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக்கழகம் துவங்குவதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கியவர். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துக் கொண்டிருப்பவர் இருபதுக்கும் அதிகமான விருதுகளை பெற்றவர்.

இவருடைய சாதனைகள் மிக நீளமானது 68 வயதை தொட்டிருந்தாலும் இவர் இன்றும் இளைஞராகவே திகழ்கிறார் இவருடைய எழுத்துக்களுக்கு வயதாகவில்லை. இன்னும் காவியங்கள் படைத்தவண்ணமிருக்கிறார்.இறைவனின் அருளால் நிறைய நிறைய காவியங்களை இவர் படைக்கவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.

2011 ஏப்ரல் 14 வியாழன் மாலை துபாயில் இவருடைய தீரன் திப்பு சுல்தான் காவியம் வெளியிடப்பட்டது.

தீரன் திப்பு சுல்தானைப்பற்றி அறிந்துக் கொள்வதற்காக இலங்கையிலிருந்து மூன்றுமுறை கர்நாடகா மாநிலத்திற்கு விஜயம் செய்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்டு பல நூற்களை ஆய்வு செய்து தீரன் திப்பு சுல்தானின் முழுமையான உண்மையான வரலாற்றை காவியமாக 1607 பாடல்களில் பாடியிருக்கிறார்.

இவர் அன்னிய நாட்டுக்காரராக இருந்தாலும் தன் இன மன்னனின் கரையைபோக்குவதற்கு தன்னாலான முயற்சியாக இந்த காவியத்தை இவர் செய்திருப்பது இஸ்லாமிய வரலாற்றில் பதிவுச்செய்யப்பட வேண்டிய ஒரு விசயமாக இருக்கிறது. இவர் இலங்கை மன்னன் பண்டாரவன்னியனின் காவியத்தையும் மதபேதமின்றி எழுதி இருப்பது இவருடைய மனிதநேயத்தை பறைசாற்றுகிறது.

இந்த விழாவிற்கு இலக்கிய ஆர்வமிக்கவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் டாக்டர் ஜின்னாஹ் அவர்களைப் பற்றிய ஒரு கவிதையை நான் வாசித்தளித்தேன்.

இலங்கை மண்ணில் உதயமானவர்
இலக்கிய விண்ணில் இதயமானவர்

தோற்றத்தில் எளிமையானவர்-கவி
ஏற்றத்தில் முதன்மையானவர்

பழக்கத்தில் இனிமையானவர்-தமிழ்
புழக்கத்தில் புதுமையானவர்

நாணயம் குறையாத நளினமானவர்
ஆணவம் நிறையாத அமைதியானவர்

புகழ்தேட அகல் ஏற்றாதவர்
பொருள் தேட மருள் கொள்ளாதவர்

காவியம் படைப்பதில் இளமையானவர்
ஆவியம் படைத்தவனுக்கு இசையானவர்

திரு நபிகள் மீது காதலானவர்
திறனாய்வு செய்து காவியமாக்கியவர்

அன்னியன் எழுத்தை ஏற்றவர்-அதனால்
பண்டார வன்னியன் கவியை சாற்றியவர்

மருத்துவம் படித்த மனிதரிவர்-என்றாலும்
கருத்துரை வடித்த தமிழறிஞரிவர்

தீரன் திப்பு சுல்தானை சொந்தமாக்கியவர்
தீ யறம் சுமத்தியவர்களை சிந்தையாக்கிவர்

ஏழுக் காவியங்களை எழவைத்தவர்- எட்டாத
சாகித்யமண்டலத்தை விழவைத்தவர்

தமிழ்மாமணி தமிழியலில் சின்னமானவர்
காவியத்திலகம் கவிக்கதிரோன்பெற்ற ஜின்னாஹ் அவர்

பல அமைப்புகளில் தலைமை ஏற்றவர்
தன் உழைப்பினால் திரவியம் பெற்றவர்

வாழ்நாள் சாதனையாளரென்ற விருதைப்பெற்றவர்
வாழ்க்கை சோதனைகளில் பொறுமைப்பெற்றவர்

வாழ்க்கைத் துணைவியோடு வளமானவர்-தன்
வாழ்க்கையை துணிவோடு வலம்வருபவர்

வள்ளலாய் பலகாப்பியங்களை வழங்கவேண்டுமிவர்
வலமான தேகத்தை தரவேண்டும் வல்லோனவர்

வாழ்க வாழ்கவென வாசனமாய் வாழ்த்துமிவர்
வாஞ்சையோடு இறைஞ்சுகின்றேன் இஸ்மத் இவர்!

என்று கவிதையைப் பாடி எனது அவாவை வெளிப்படுத்திக் கொண்டேன். இவருடைய காவியங்கள் மரபுக் கவிதைகளாக இருந்தாலும் அதைப்படிக்க, படிக்க மரபு மறைந்து, வசனநடையாக கருத்துக்களை புரிந்துக் கொள்ளுமளவிற்கு, எளிமையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்திற்கு தற்போது அவர் வருகைத் தந்து இரண்டு மாதங்கள் ஆகியிருக்கின்றன.இந்த நாட்களில் பல அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் மூஸாநபி காவியத்தை எழுதி முடித்திருக்கின்றார்.இது எட்டாவது காவியம்!

இதுவரையில் தமிழக வரலாற்றில் ஒரு புலவர் எட்டு காவியங்களை வெளியிட்டுள்ளாரா? என்பது கேள்வியாக இருக்கிறது.! ஆனால் இஸ்லாமிய இலக்கிய உலகில் இதுவரையில் இவரைவிட அதிகளவில் யாரும் காவியங்கள் வெளியிடவில்லை என்பது வரலாறாக இருக்கிறது.பல காவியங்களை தனது சொந்த பொருட்செலவில் செய்திருக்கிறார்.

தமிழ் மீது ஆர்வம் கொண்ட மதிப்பிற்குரிய டாக்டர் ஜின்னாஹ் அவர்கள் 1999-ம் ஆண்டு புதுச்சேரி கோட்டைக்குப்பத்தில் நடைப்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழ்மாமணி விருதை பெற்றிருக்கிறார்.இன்னும் தமிழியல், காவியத்திலம், கவிக்கதிரோன், கலாபூசணம், நற்கவிஞர், கவிமாமணி, காவியக் கவிமணி, கவிச் சக்கரவர்த்தி, காப்பியக்கோ என்று பல விருதுகளை குவித்துள்ளார். எத்தனை விருதுகளை பெற்றிருந்தாலும் தன்னடக்கம், எளிமை இவருடன் பிறந்த ஒன்றாகவே இருக்கிறது.

இவருடைய காவியங்களனைத்தும் பல்கலைகழகங்களில் பாடங்களாக விளங்குவதற்கு தகுதியானவை என்று பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.

பேராசிரியர்களும், முனைவர்களும் காவியங்களை வெளியிடுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில்; தைரியமாக ஆண்டுக்கு ஒரு காவியத்தை வெளியிடும் டாக்டர் ஜின்னாஹ் போன்ற தயாள இலக்கியமனம் படைத்தவர்களுடன் நட்புக் கொண்டிருப்பது எல்லாம் வல்ல இறைவன் எனக்களித்த வரம்.

இவர் இஸ்லாமியர் என்பதற்காக கொடுக்க வேண்டிய கௌரவங்களை மத துவேசமிக்க அரசியல்வாதிகளால் மறைக்கப்பட்டு வருகிறது; பல அமைப்புகள்தான் அதிகமான விருதுகளை வழங்கியிருக்கிறது ஆனால் அரசாங்கத்தினால் கிடைக்கவேண்டிய விருதுகள் தடுக்கப்பட்டே வருகின்றன. ஆனால் கௌரவங்களை எதிர் நோக்கி இன்று வரையில் இவர் எழுதவில்லை என்பதுதான் உண்மை.

தமிழுக்காக உயிர் கொடுப்போம் இன்னும் எதையெல்லாம் கொடுப்போம் என்று வாய்கிழிய மேடைகளில் பேசுகிறார்களேயொழிய ஒரு உண்மையான தமிழ் அறிஞரை கண்ணியப்படுத்தவோ மரியாதை செய்யவோ தெரியாதவர்காளவே அதிகாரமிக்கவர்கள் திகழ்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது.

இன்றைய காலத்தில் காவியம் படைப்பவர்களை காண்பது அரிது அந்த அரிதான அறிஞர்களுக்கு தக்க ஊக்கமும் உற்சாகமும் தருவது ஒவ்வொரு தமிழனின் கடமையாக இருக்கிறது.

இந்தியாவில் தீரன் திப்புசுல்தான் காவியம் கிடைக்குமிடம்
சமநிலை சமுதாயம் பப்ளிக்கேஷன் பிரைவேட் லிமிட், எண் 5 கிரீண்ரோடு, தவ்ஸன் லைட், சென்னனை – 600006.
தொலைபேசி - +91-9840277450

Wednesday, April 6, 2011

தரம் தரமாக இருக்கும் வரையில் தரத்தை யாராலும் குறைக்க முடியாது!

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 14

இது ஒரு பாலை அனுபவம்

ஹவுஸ்பாய் பணியிலிருந்து முதன்முதலாக வியாபாரத்தில் சேல்ஸ்மேன் பணிக்கு மாற்றத்தை கொடுத்தவன் நண்பன் சிஹாபுதீன்.

பூதமங்கலம் அப்துல்கரீம் சிஹாபுதீனுக்கு தெரிந்த நண்பர். அவர் பணிப்புரியும் இமிட்டேசன் ஜீவல்லரி கடையில் எனக்கு வேலைகிடைக்க துபாய் அல்குரேயர் சென்டருக்குள் நுழைந்தேன்.
அப்போது எனக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் மனமெல்லாம் மனைவியின் மணம் வீசியது.காதல் என்னிடம் கதை படித்தது.

என்ன வாழ்க்கை இது இப்படிதான் வாழ வேண்டுமோ என்றெல்லாம் மனம் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் புதிய அறிமுகங்களை நான் எழுதிய நாவல் டெலிபோன்டைரி எனக்கு கொடுத்தது.

அல்குரேயர் சென்டருக்குள் ஐநூறுக்கும் அதிகமான கடைகள் இருந்தன.பல கடைகளில் விற்பனையாளர்களாக தமிழர்கள் பணிபுரிந்தார்கள்.

அப்படித்தான் ஜெய்னா ஜீவல்லரியில் பணிப்புரிந்த மூவருடைய அறிமுகம் கிடைத்தது. ஆயங்குடி இனியவன் ஹாஜிமுஹம்மது, கீழக்கரை அபுதாஹிர், அத்திக்கடை ஹாஜா.
இனியவனின் சந்திப்பு இலக்கியம் சார்ந்திருந்தது அந்த தருணத்தில் நம்பிக்கை என்ற கையேட்டு பத்திரிக்கையை துவங்கினார் அதில் என்னை இணைத்துக் கொண்டார் அதில் கவிதைகள் எழுதினேன். ஆனால் இனியவனின் வேகம் அசுரமானதாக இருந்தது.
இன்று அவர் டோஹா கத்தாரில் பணியில் வணிகத்தில் தலைசிறந்து விளங்குகிறார் பன்மொழிகளை கற்று பலரிடமும் பழகுகிறார் அவரிடம் தமிழ்தாகம் தழைத்திருந்தது அத்தருணங்களில் எனது மெய்ஞ்ஞானசபைக்கு அழைத்துச் சென்றேன் ஆனால் மெய்ஞ்ஞானம் மறைந்துக் கொண்டு அவரிடம் கேள்வி ஞானம் முன்னின்றது.அதனால் தான் சொன்னேன் ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

கீழக்கரை அபுதாஹிர் என் எழுத்தின் மூலமே இணைந்தவர் என் வாழ்க்கையின் திருப்பு முனை இவர்தான். இவருடைய நண்பர் ஹிலால் முஹம்மதின் அறிமுகம் பெற்றுத்தந்தார். பணிமுடிந்த தருணங்களில் இரவில் ஒன்றுக்கூடுவோம் ஞானம் பேசுவோம் அவர்களுக்கு மத்தியில் நான் இளையவன் ஆனாலும் அதிகமாக பேசி இருக்கிறேன்.

அந்த ஞான நட்புதான் நகைக்கடையில் பணியமர்த்தி தந்தது என்று கூறுவதில் சந்தோசமடைகிறேன்.

நட்பு எல்லோருக்கும் உண்டாகலாம் ஆனால் எப்படி உண்டானது என்பதை பொருத்தே அந்த நட்பின் வலிமை நிறைந்திருக்கும் மனதில் என்றும் மலர்ந்திருக்கும். ஆனால் எனக்கு இவர்களிடம் மெய்ஞ்ஞானத் தேடலில் அதைப்பற்றிய வாதாடலில் உண்டானது.

ஞானம் நாடியவர்களுக்கு தான் கிடைக்கும்.

நம் கையில் கிடைத்திருக்கும் கல்லை கூலாங்கல் என தூக்கி வீசுவதற்கு எத்தனிப்போம் ஆனால் மகான்கள் அதில் வைரம் இருப்பதை உணர்த்துவார்கள்.
நாம் இறைவனை எங்கேயோ தூரமாக வைத்திருப்போம் ஆனால் மகான்கள் இறைவனை நம் பிடரியின் நரம்பிற்கும் சமீபமாக இருப்பதை உணர்த்துவார்கள்.

ஞானவேட்கை இருந்தாலேயொலிய அதைப்பற்றி பேச அல்லது அதைக் கேட்கமுடியாது.மகான்களிடம் படித்துக் கொண்டிருப்பவர்கள் தான் ஞானிகள்.
அந்த ஞானவேட்கை நிறைந்தவர்களாக திகழ்ந்தவர்கள் சகோதரர்கள் ஹிலால் மற்றும் அபுதாஹிர் இருவரும்.

நான் பணிப்புரிந்த அல்குரேயரில் பணி இழந்த போது ஹிலால் மற்றும் அபுதாஹிர் அவர்கள் என்னை நகைக்கடையில் பணியமர்த்த என்னிடம் ஒப்புதல் கேட்டார்கள். இரண்டு தினங்கள் அவகாசம் கேட்டேன். என்னிடம் பயம் நிறைந்திருந்தது என்னை தரம் குறைத்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தது.அச்சமயத்தில் ஹிலால் அவர்களின் தைரியமான வார்த்தைகள்தான் இன்றுவரையில் நகைக்கடையில் நடமாட வைத்துக்கொண்டிருக்கிறது.

நாம் தரமாக இருக்கும் வரையில் யாராலும் நம்தரத்தை குறைத்துவிட முடியாது வேண்டுமானால் உரசி பார்க்கலாம்.

நல்ல நட்புதான் ஒரு நல்லவேளையை பெற்றுத்தந்திருக்கிறது.தங்கக் கடையில் நுழைந்ததும் எங்களின் சந்திப்பில் இடைவெளி ஏற்பட்டது அது எனக்கு பணியினால் ஏற்பட்ட பளுவினாலும் ஹிலால், அபுதாஹிர் அவர்களுக்கு இறைத்தேடலின் சிந்தனையிலும் இடைவெளி நீண்டது.

ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் அவ்வபோது முகமுன் சந்திக்கொள்வோம் ஆனால் ஹிலால் அதிகமான பொருள் சம்பாதித்தளவு அருளையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். போதுமென்ற மனம் நிறைந்ததால் தனது இறை(காதல்) நேச வாழ்க்கைக்காக அமீரக வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தாய் மண்ணில் நிரந்தரமாக பாதம் பதித்துவிட்டார்.

அபுதாஹிர் அவர்கள் பி.பி.ஜீவல்லரியை நிர்வகித்து வருகிறார் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது நேற்றைய தினம் அவரை சந்தித்து உரையாடினேன். எங்களின் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டோம்.

இப்படிபட்ட தூய்மையான நண்பர்களை கிடைக்க செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஞானம் கற்றுக் கொள்ளுங்கள் நாம் ஞானியாக அல்ல மனிதனாக வாழ்வோம்.!

தொடர்வோம்...