இன்று காலை பணிக்கு புறப்படுமுன் தொலைக்காட்சியில் மகளிர் அரங்கத்தில் ஒரு சிறுமி பேசிக்கொண்டிருந்தாள் வயது அநேகமாக பத்துக்குள்ளாக இருக்குமென நினைக்கிறேன் கல்வியே அறிவைத் தரும் என்ற தலைப்பில் ஆவேசமாக பேசினாள்.
பணிக்கு புறப்பட்ட நான் ஐந்து நிமிடம் அந்த சிறுமியின் பேச்சை கேட்டுவிட்டு புறப்பட்டேன். சிந்தனை அந்த சிறுமியின் பேச்சில் சுழன்றது.
கல்வி மட்டுமே மனித சமுதாயத்தை மேம்படுத்தும் கல்வி ஒன்றே மனிதனை உயர்வடையச் செய்யும் என்றெல்லாம் பலரும் பேசுகிறார்கள் அவர்களின் பேச்சு உண்மையானதுதான் ஆனால் கற்கும் கல்வி?
ஒரு மாணவனின் வாழ்க்கை முன்னேற்றம் என்பது அவன் படித்து முடித்து வேலைக்கு சென்று நன்கு சம்பாதித்து எல்லா வசதிகளுடனும் வாழும்போது அவனை உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்று சமுதாயம் சொல்கிறது.
கல்வியினால் சமுதாயம் முன்னேறுகிறது என்பது மச்சி வீடு மாடி வீடாகவும், மாடி வீடு பங்களாக்களாகவும் இப்படி வசதிகள் கல்வியினால் மாற்றம் காண்கிறதே தவிர, மனித நேயத்தில், மனிதர்களின் குண நலன்களில் இன்றைய கல்வி மாற்றத்தை அதிகம் தருகிறதா(?) என்பது கேள்வியாகும்.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கிராமம் வரையில் இணையதளம் வளர்ந்து விட்டது என்னவோ உண்மைதான் ஆனால் கிராமத்தில் வாழ்ந்த பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதும், முதியோர் இல்லங்கள் வளர்ந்து வருவதும் கல்வியின் முன்னேற்றமா?
பொருளாதாரத்தை முன்வைத்து கல்விச் சாலைகளும், கற்பிக்கப்படும் ஆசிரியர்களும், கற்கும் மாணவர்களும், பெற்றோர்களும் செல்கிறார்கள் அவர்களின் சமுதாயம் எப்படிபட்டாதக இருக்கிறது என்றால் மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது என்பது மறந்து உதவி செய்வதற்கு ஆதாயம்தேடும் வியாபார சமுதாயமாக மாறி வருகிறது என்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.
அண்ணன் தம்பிக்கு மத்தியில் பாசத்தைவிட தங்களிடமுள்ள பணம்தான் யார் அண்ணன் யார் தம்பி என்பதையே இன்றை சூழல் நிர்ணயிக்கிறது.
இந்திய அரசியல்வாதிகள் எல்லாம் படிக்காதவர்களா? கல்வி கற்றவர்கள்தானே? இன்று பொறுப்பில் இருக்கக்கூடியவர்களின் சுரண்டல்கள் எத்தனை கோடிகள் என்பதை ஊடகத்துறை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறதே இவர்களிடம் பொருளாதார ஆசையை மட்டுமே வளர்த்திருப்பது எது?
இன்றைய காலத்தில் பெரிய தவறுகளை எல்லாம் கல்வி கற்கும் சில மாணவர்கள் சர்வ சாதரணமாக செய்கிறார்கள் அவர்களுக்கு கற்பிக்கும் அந்த ஆசிரியர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள்?
கல்விச் சாலைகளை மிக அழகாக வடிவமைத்து வருவதில் இன்று கவனமாக இருக்கும் இவர்கள் அதில் படிக்கும் மாணவர்களின் குண நலன்களை அழகுபடுத்த வேண்டிய பணி கல்விச் சாலைகளுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
அறிவைக் கற்கும் அனைத்துமே கல்விதான் ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலோர் அறிவு பெறுவதற்காக கல்வி கற்கவில்லை பொருளீட்டுவதற்காக மட்டுமே கல்வி கற்கிறார்கள். இந்த பொருள் கல்வியானால் இந்த சமுதாயத்தில் வசதிகள் பெருகலாம் ஆனால் ஒரு இயந்திரதனமான வாழ்க்கைமுறை வளர்ந்து மனிதம் ஏழையாகவே இருக்கும்.
பொருளாதாரத்தை வைத்து எதையும் செய்யமுடியும் என்ற எண்ணம் வளர்ந்து வரும் சமுதாயத்தில் அன்பு என்பது மினரல் வாட்டரைபோல பாட்டல்களில் அடைத்து ஒரு பாட்டில் அன்பு ஆயிரம் ரூபாய் என சூப்பர் மார்கெட்டுகளில் விற்பனை செய்யக்கூடிய காலம் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.
மனிதனை மனிதனாக வாழவைக்கக்கூடிய தன்னை அறியும் ஞானக்கல்வியை இணைத்து கல்லூரிகளில் அனைவரும் கற்பதற்கு வழிவகை செய்யவேண்டும். அன்பும் நேயமும்மிக்க இந்த கல்வியினால் மட்டுமே இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும்.
“சீன தேசம் சென்றாயினும் சீரான கல்வியைத்தேடு” என்று கூறும் அண்ணல் நபிகள் ஏட்டுக் கல்வியை கற்காதவர்கள். இறைவன் கற்பித்துக் கொடுத்த கல்வியைகற்று இந்த உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்விச்சாலையாகவே இருக்கிறான் அவன் அதை அறிந்துக் கொண்டானேயானால் மனிதம் மலரும் அன்பு ஓங்கும்.தினம் அரைமணித் துளியேனும் நம்மை நாம் சிந்திக்க முற்பட்டால் நம்மிலே மாற்றங்கள் நிகழும் அந்த மாற்றம் இந்த சமுதாயத்தை மாற்றும்.!
Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts
Sunday, February 26, 2012
Tuesday, February 21, 2012
கபீர்தாசரின் காந்தன் காதல்
என் நண்பர் திருச்சி சையது சில நூல்கள் எழுதியும், தொகுத்தும் உள்ளார். அதில் சமீபத்தில் வெளியீட்ட “கபீரின் 100 பாடல்கள்” என்ற நூலை எனக்கு தந்தார்.
படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது 100 பாடல்களும் நம்மிலே சுய சிந்தனையை ஏற்படுத்தக்கூடிய வரிகள்… இந்த பாடல்களை படிக்கும்போது எனக்கு நினைவில் தோன்றிய நபி மொழி
“தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிவான்”
இறைவனை அறியவேண்டுமானால் மனிதன் தன்னை அறிய வேண்டும் என்ற தத்துவத்தையே அந்த நூல் கூறுகிறது.
கபீர்தாசன் என்று பெயர் வைத்திருக்கும் இவர்
வாழ்ந்த காலம் (கி.பி.1398 - 1518) இவருடைய கவிஞானங்கள் இந்தி பக்தி இலக்கியத்தில் தனி சிறப்புக்குரியதாகும்.
கபீர் என்பது அரபிச் சொல்லாகும் அதற்கு பெரியது என்று பொருளாகும். பெரியது என்பது இறைவனைக் குறிப்பிடுகிறது
இவரை சிறுவயதில் ஓர் இஸ்லாமிய நெசவாளர் எடுத்து வளர்த்ததாக கூறப்படுகிறது. மனைவியோடும், குடும்பத்தோடும் இஸ்லாமியச் சூழலில் நெசவுத் தொழிலைச் செய்து வாழ்ந்த இவர் இளமை முதலே இறைநேயம் உடையவராய் விளங்கினார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது.
இவருடைய பாடல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் பேராசிரியர் எழில்முதல்வன் எளிய தமிழில் நமக்கு தந்துள்ளார்.
கபீர்தாசரின் சிந்தனையை அறிவதற்கு இந்நூல் வாய்ப்பை அளித்திருக்கிறது. அதிலிருந்து சில வரிகள்..
ஓ!
பணியாளனே என்னை நீ எங்கே தேடுகிறாய்?
இதோ நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.
நான் திருக்கோயிலிலும் இல்லை மசூதியிலும் இல்லை காஃபாவிலும் இல்லை கைலாயத்திலும் இல்லை.
நான் சடங்குகளிலோ அவை சார்ந்த சம்பிரதாயங்களிலோ இல்லை. யோகப் பயிற்சியிலோ துறவிலோ இல்லை.
நீ என்னை நாடும் உண்மை ஆர்வலனாக இருப்பின் உடனடியாகக் காணமுடியும். கண்ணிமைப் போதிலோ கைநொடிப் போதிலோ என்னைச் சந்திக்க முடியும்.
கபீர் கூறுகிறார். ஓ சாதுவே இறைவன் உயிரினுக்கும் உயிராக விளங்குகிறான்.!
இறைவனைப் பற்றி மிகத் தெளிவாக இந்த கவிதை வரிகள் கூறுகிறது. இறைவனை நாம் எங்கே தேடுகிறோம் என்பதை இக்கவிதை சொல்கிறது.
இதையே திருமறையில் “உம் பிடரி நரம்பிற்கும் மிக சமீபமாக இருக்கிறேன்” என்று இறைவன் கூறியுள்ள நுன்மைமிக்க
அந்த திருவசனம் நம் சிந்தையில் நிழலாடுகிறது.
ஒவ்வொரு கவிதையிலும் இறைக்காதலை வெளிப்படுத்தியுள்ளார். கவிதையின் இறுதி வரிகளில் கபீர் சொல்கிறார் என்ற “நச்” வரிகள்..
சில உதாரண கவிதைகளையும் விளக்கத்திற்காக கூறியுள்ளார்
ஆறும் அதன் அலைகளும் ஒரே நுரைத்திரள் கொண்டனவே. அங்ஙனம் இருக்க ஆறும் அலைகளும் வேறு வேறாக முடியுமா?
அலைகள் மேலெழும் போதும் தண்ணீர். அது கீழே விழும் போதும் தண்ணீர்தான். சொல்லுங்கள் ஐயா வேறுபாடு என்ன இருக்கிறது?
அலைகள் என்று பெயர் பெற்றிருப்பதாலேயே அது தண்ணீரல்ல என்று யாராவது கருதுவார்களா?
தனிமுதலாம் பிரம்மத்தினுள் உலகங்கள் யாவும் மணிமிடைப் பவளம்போல் கோக்கப்பட்டுள்ளன. ஞானக்கண் உடையோர்க்கு இது ஜெபமாலையாகவே காட்சிதரும் என்கிறார்.
இறைவன் எங்கோ தனித்து இல்லை அனைத்திலும் சூழ்ந்துள்ளான் ஒவ்வொரு பொருளிலும் ஞானக் கண்ணுடன் பார்த்தால் இறைவனை கண்டுக் கொள்ள முடியும் ஜாதிமத வேறுபாடுகளினால் பிளவுபட்டிருக்கும் மனித சமுதாயம் ஒர் உண்மையிலிருந்து வெளியானவை நாமரூபங்களில் வேறுப்பட்டிருந்தலும் உண்மை ஒன்றுதான் என்பதையே கூறுகிறார்.
ஒருவர் இறைஞானத்தை யாரிடமிருந்து எப்படி பெறுவது அதை போதிக்கக் கூடிய குரு எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறார்.
ஓ!
சகோதரனே ஓர் உண்மையான குருநாதருக்காக என் இதயம் ஏங்கி நிற்கிறது. அவரே உண்மை அன்பாம் கோப்பையை முற்றிலும் நிரப்பி தானும் பருகி எனக்கும் தருகிறார்.
என் விழிகளை மறைக்கும் படலத்தை விலக்கி பிரம்மத்தைத் தரிசிக்கும் பார்வையை வழங்குகிறார்.
அவர் தன்னுள்ளே அண்டங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். மீட்டப்படாத பரம்பொருளின் இராகத்தை நான் செவிமடுக்கும்படி செய்கிறார்.
சுகமும் துக்கமும் ஒன்றே என எனக்கு உணர்த்துகிறார். அன்பில் தோய்ந்த சொற்களால் என் இதயத்தை நிரப்புகிறார்.
கபீர் சொல்கிறார்… பாதுகாப்பான புகலிடம் நோக்கிப் பரிவோடு அழைத்தேகும் குருநாதரைப் பெற்றவனே பயமற்றவன் பாக்கியவான் என்று கூறுகிறார்.
மனித வாழ்க்கையில் எந்த ஒரு செயலும் குருயின்றி நடப்பதில்லை ஒவ்வொன்றிலும் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது.
குரு என்பது மனித வாழ்க்கையின் வழிகாட்டல்.
கபீர்தாசன் போன்ற ஞானிகளும், சூஃபியாக்களும் இன்றும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேடல் உள்ளவர்களின் கண்களுக்கு மாத்திரமே தென்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை!
நல்லதொரு நூலை வெளியீட்ட அன்பு நண்பர் திருச்சி சையது அவர்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் தந்த பேராசிரியர் எழில்முதல்வன் அவர்களுக்கும்தமிழ்அலை இஷாக் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
Monday, February 20, 2012
மின்னுவதெல்லாம் நட்சத்திரமல்ல!
இந்த வாரத்தின் நட்சத்திரப் பதிவராக இருப்பதற்கு தேர்வு செய்த தமிழ்மணத்திற்கு மனமார்ந்த நன்றியுடன்…
தமிழ்மணம் உறவு சுமார் மூன்றாண்டுகளைக் கடந்தது.
அங்கு கற்றுக் கொண்டது கொஞ்சம் கற்க வேண்டியது மிச்சம்.
நான்கு ஆண்டு காலமாக வலைதளத்தை சுற்றி வருகிறேன். சாலையைப் போல எத்தனையோ மேடுப் பள்ளங்கள்.
அறிவுமிருக்கிறது அழிவுமிருக்கிறது, கற்றுக் கொள்வதற்கும், கற்க கூடாததற்கும் ஒரே இடம் இணையதளம்.
யாருக்கு எது தேவையோ அது கிடைக்கிறது. குடுமிபிடி சண்டையும் குழாயடி சண்டையும் தெருக்களில் மட்டுமல்ல வலைகளில் வளைகுடா போரைப் போல அவ்வபோது காணமுடிகிறது.
பேனா நண்பர்கள் மறைந்து இன்று வலைதள நண்பர்கள் மிகைத்தமைக்கு தமிழ்மணம் போன்ற இணையதளங்கள் பாலமாக இருப்பதே காரணம் என்று சொல்லலாம்.
பல நண்பர்களை இந்த இணையதளம் எனக்கு கொடுத்திருக்கிறது. அவர்களிடம் பழகுவதற்கு தினம் என்னைப் படித்துக் கொண்டிருக்கிறேன் தேர்வுகளில் “நான்” தோற்றுப்போய் விடுவதற்காக…
அமீரகத்தில் வாழும் தமிழன்பர்கள் பலர் பதிவு எழுதினார்கள் அவர்களுடைய பதிவுகள் என்னை ஊக்கப்படுத்தி இருக்கிறது.
பதிவர்கள் சந்திப்பின் மூலம் அறிமுகங்கலாகி பதிவர் சுற்றுலா, குறும்படம் என்று கலக்கிய அமீரகப்பதிவர்களின் நட்பின் வரலாறு சுவாரஸ்யமானது.
சத்திரத்தில் சித்திரம் சமைத்தோம், நோன்பில் இஃப்தார் படைத்தோம், பிரியமுடன் பிரியாணி சுவைத்தோம், விழாக்களில் விலகிய நாட்களை எண்ணி வருந்தினோம்,
ஆனால் தற்போது அமீரகப்பதிவர்களின் சிலருடைய பக்கங்கள் வெண்மையாகவே இருக்கிறது.
பதிவர்களின் சந்திப்பு என்பது அமீரகத்தை பொருத்தவரையில் இன்னொரு கல்லூரி அனுபவம்போல் என்றாலும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள் நிறைய இருப்பதினால் நன்றாக சிரிக்க முடிகிறது சந்திப்பு என்னவோ மொக்கைதான்.
விஞ்ஞானத்தின் மீதும் மெய்ஞ்ஞானத்தின் மீதும் ஆர்வம் கொண்ட நிலாமலர்கள் என்ற பெயரில் பதிவு எழுதும் நண்பர் நாசர் சொன்னார் தரமான பதிவுகளுக்கு ஓட்டுகள் கிடைப்பதில்லையே மொக்கைப் பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றார்…
உண்மைதான் அது படிப்பவர்களைப் பொருத்திருக்கிறது… தரம் என்று நாம் நினைப்பது சிலருக்கு மொக்கையாக இருக்கலாம் மொக்கை என்று நாம் நினைப்பது சிலருக்கு தரமானதாக இருக்கலாம். படிப்பவரின் தேடலைப் பொருத்தே பின்னூட்டமும் ஓட்டளிப்பும் நடைபெறுகிறது.
நூறு பேர்கள் படித்துவிட்டு ஐந்து பேர்கள் பின்னூட்டமும் ஒருவர் மட்டும் ஓட்டும் அளித்துவிட்டு அல்லது எதுவுமில்லாமல் செல்லலாம்…
எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது. சுதந்திரமான எண்ணம்தான் உண்மைகளை எழுத முடியும்.
எனது வலைதளத்திற்கு புதிதாக வந்த அன்பர்களுக்கு
அதிகமாக பயணக்கட்டுரைகளை எழுதியிருக்கிறேன் மற்றும் அமீரக அனுபவங்களையும் எழுதியுள்ளேன் படித்துப்பாருங்கள்.
தங்கத்தைப் பற்றிய பதிவுமிருக்கிறது அது உங்களுக்கு தேவையான செய்திகளை தரக்கூடியதாக இருக்கலாம். எனது பதிவுகளுக்கு காலாவதி தேதி கிடையாது.
இந்த ஒரு வாரக்காலத்திற்கு தினம் ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது முடிந்தவரையில் முயற்சிக்கிறேன்
நன்றி!
Sunday, January 3, 2010
உங்களுக்கு பிடித்திருந்தால்

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.
தமிழ்மணத்தில் 2009-ல் பதிவர்களால் இடுக்கைளிடப் பட்ட அனைத்து கட்டுரைகள் கதைகள் கவிதைகள் மொழி சமுதாயம் பொருளாதாரம் இப்படி பதினாறு தலைப்புகளில் வரிசைப் படுத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இரண்டு எனது கட்டுரைகளில் ஒன்று மட்டும் முதல் கட்ட வாக்கெடுப்பில் பொருளாதாரம் தலைப்பில் “தங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும”; என்ற தொடர் கட்டுரையை பல வாசகர்கள் தேர்வு செய்து இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு தகுதி பெற வைத்துள்ளார்கள்.
வாக்குகளை வழங்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
தற்போது இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பு தமிழ்மணத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது இது ஜனவரி 12 ம்தேதி வரையில் நடக்கும்.
வாசகர்கள் ஆர்வத்துடன் படித்து தரமான கட்டுரைகளை தேர்வு செய்வது படிப்பாளிகளின் கடமையாக இருக்கிறது. நல்லக் கருத்துக்களை நாம் வரவேற்று ஊக்கப்படுத்துவது வலைப்பதிவர்களுக்கு பெரும் ஆதரவும் ஊக்கமுமாக இருக்கிறது என்பதை நினைவுப் படுத்துகிறோம்.
தங்க நகைகள் வாங்குவதில் நாம் எப்படி ஏமாற்றப்படப்படுகிறோம் என்பதைப் பற்றியும் எப்படி வாங்கப்படவேண்டும் என்ற வழிகளையும் அதன் தரத்தை பற்றியும் வைரத்தைப்பற்றியும் தொடராக நான் எழுதிய கட்டுரைதான்
“தங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும”; இதை நீங்கள் வாசித்து உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்கினை தமிழ்மணத்தில் சேர்ப்பிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
//பிரிவு: பொருளாதாரம் வணிகம் தொடர்பான கட்டுரைகள்//
வாக்களிப்புக்கு முன் உங்கள் சுய விபரங்களை தமிழ்மணத்தில் சேர்க்க வேண்டும்.
உங்களின் வருகைக்கு நன்றி.!
Tuesday, December 22, 2009
எகிப்து பேரழகி பேசும் தமிழ் அழகு
DANA
எனது இலக்கிய ஆர்வத்தின் ஊடாக பல நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது எனக்கு சந்தோசமான விசயம்.சென்ற ஆண்டு எனது கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு முன் அறிமுகமானார் திருவிடச்சேரி எஸ்.முஹம்மது பாருக். இவர் துபாய் தீவாவில்(Dewa) கணக்கு அதிகாரியாக பல ஆண்டுகளாய் பணிபுரிந்து வருபவர். ஈமான் என்ற அமைப்பில் தணிக்கையாளராக செயல்பட்டு வருபவர்.
பழகுவதற்கு நல்ல மனிதர்.பல அமைப்புகளின் விழாக்களில் பேச அழைத்தால் சுறுக்கமாக தெளிவாகப்பேசக் கூடியவர். இந்தளவில் தெரிந்துக் கொண்ட எனக்கு அவர்களின் குடும்பத்துடன் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது.
இவரின் துணைவியாரின் சாதனையை சொல்வதற்குதான் இந்தக் கட்டுரை.
வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழக்கூடிய தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் ஒரு பாடமாக உள்ள பள்ளிகளைத் தேடி குழந்தைகளை சேர்ப்பவர்கள் மிகக் குறைவு என்று தான் சொல்லவேண்டும்.பலரும் ஆங்கிலம் மட்டும் தன் குழந்தைப் படித்தால் போதுமானது என்ற கருத்தில் இருப்பதால் தங்களின் இல்லங்களில் கூட குழந்தைகளிடம் தமிழ் பேசுவதை தவிர்த்து ஆங்கிலம் பேசி வருகிறார்கள்.
அமீரகத்தில் கிரஸண்ட் இங்கிலீஸ் ஹைஸ்கூலில் பத்தாம் வகுப்பு வரையில் தமிழ் பாடத் திட்டத்தை வைத்துள்ளார்கள் என்று அதன் தலைமை ஆசிரியர் கலீபுல்லா கூறியபோது ஆச்சரியமாக இருந்தது.வரும் வருடங்களில் மேல் நிலை வகுப்புகளுக்கும் தமிழ் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக கூறினார். அந்தப் பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு நல்வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன்.(எனது இரு பெண்பிள்ளைகளும் அந்தப் பள்ளியில்தான் படித்து வருகிறார்கள்)
S.முஹம்மது பாருக் உடன் டானா(DANA)
எஸ்.முஹம்மது பாருக் அவர்களின் குடும்பத்தார் துபையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். கீழ்தளத்தில் எகிப்து நாட்டைச் சார்ந்த அகமது முஹம்மது ரிஸ்வான்னும் அவரது மனைவி ஜஹானும் அவர்களின் மூன்று பெண் குழந்தைகளும் அவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர்களின் மூன்றாவதாக பிறந்த டானா என்ற இரண்டுமாத பெண் கைக் குழந்தை அவர்களின் மனதை கொள்ளைக் கொண்டாள் . அடிக்கடி அந்த டானாவைப் பார்ப்பதற்கு பாருக் மகள் வருவார்.
குழந்தை டானாவிடம் ஏற்பட்ட அன்பினால் தன் வீட்டுக்கு அடிக்கடி தூக்கி வந்து விளையாடுவதும் அந்தக் குழந்தையிடம் தமிழில் பேசுவதுமாய் வளர்ந்த டானாவிற்கு தற்போது வயது எட்டு. இன்று டானா சுத்தமான தமிழில் உரையாடுகிறாள்.
உரையாடுவதுமட்டுமல்ல தினமும் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதும் அந்தக் கதைகளை பாருக் துணைவியாரிடம் சொல்வதுமாய் இருக்கிறாள். சின்னத்திரை நட்சத்திரங்களும் திரைப்பட நாயகர்கள் நாயகிகள் என பிரபலங்கள் அனைவரையும் தெரிந்து வைத்திருக்கிறாள்.
டானாவிடம் அம்மா யார் என்று கேட்டால் பாருக் துணைவியாரைத்தான் காட்டுகிறாள்.
அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட டானா தனது பள்ளிப் படிப்பும் அரபாக இருக்க தனது வீட்டில் தனது பெற்றோர்களுடன் அரபு பேசுகிறாள். குழந்தைகளுடன் விளையாடும்போது ஆங்கிலத்திலும் பாருக் வீட்டில் மட்டும் சுத்தமான தமிழ் பெண்ணாய் காட்சி அளிக்கும் டானா மிகவும் அழகான பெண்.
மற்றவர்களுடன் பேசும்போது கூட ரொம்பவும் மரியாதையுடன் பேசுவதும் நம் தமிழ் கலாச்சாரத்தை டானாவிற்கு கற்றுக் கொடுத்த பாருக் துணைவியாரின் தமிழ்பற்றை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
தான் பெற்ற குழந்தையை பராமரிப்பது போல் டானாவின் மேல் அளவிலா அன்பை வைத்துள்ளார். பாருக் தம்பதியருக்கு ஒரு பெண்குழந்தையும் இருக்கிறது.
வெளியில் எங்கு சென்றாலும் டானாவிற்கு மறக்காமல் ஏதாவது திண்பண்டங்கள் வாங்காமல் வருவதே இல்லை. டானாவை விட்டு அவர்களாலும் பிரிந்து இருக்கமுடியவில்லை.வீட்டில் எந்த தேவை வைத்தாலும் டானா இல்லாமல் எதையும் செய்வதில்லை என்று பாருக் துணைவியார் கூறுகிறார்கள்.
சென்ற ஈத்விடுமுறையில் பாருக் குடும்பத்தினருடன் எனது குடும்பத்தார்களும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தார்களுடன் மஸ்கட் சென்று ஒருநாள் தங்கி வந்தோம். அந்த சமயத்தில் பாருக்கின் துணைவியார் டானாவை நினைவு கூர்ந்துக் கொண்டே இருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அதன் நிமித்தம் சில தினங்களுக்கு முன் பாருக் அவர்களின் இல்லத்திற்கு டானாவை சந்திக்க எனது குடும்பத்தார்களுடன் சென்றிருந்தேன்.
விளையாடிக் கொண்டிருந்த டானா பாருக் கூப்பிட்டதும் ஓடிவந்து நின்றாள். என்னை அறிமுகம் செய்ய கைகுலுக்கிய டானாவிடம் நீ நலமா என்றேன். அவள் புன்முறுவலுடன் நலம் என்றாள். எனது குழந்தைகளிடமும் கைக் குலுக்கிக் கொண்டாள். கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வருகிறேன் என்று பாருகிடம் கூறிவிட்டு செல்ல சற்று நேரத்தில் வீட்டுக்குள் வந்தாள் டானா.
நான் டானாவிடம் பேசினேன் புன்முறுவலுடன் பதில் பேசினாள். உன்னைப் பற்றி வலைதளத்தில் எழுதப்போகிறேன் அதனால் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று கூறியதும் சில வினாடிகளில் பாருக் மகளாரிடம் சென்று தலை சீவிக் கொண்டு ரெடியானாள்.
புதிதாக என்னைக் கண்டதால் அவளுக்கு வெட்கம்.அரபு பிள்ளைகள் அதிகம் வெட்கப்படுவதில்லை டானாவை பொருத்தவரையில் அரபு குலமாக இருந்தாலும் தமிழர்களிடம் பழுகும் போது தமிழ் கலதச்சாரம் அவளிடம் நிறைந்திருப்பதை காணமுடிந்தது.
பெரும்பாலோருக்கு தாய்மொழி என்பது ஒன்று தான் ஆனால் டானாவிற்கு இரண்டாக இருக்கிறது. தமிழ் பேசுவதற்கு பிரியப்படுகிறாள். அவளின் பெற்றோர்கள் இதற்கு எப்படி சம்மதித்தர்கள் என்று பாருக் துணைவியாரிடம் கேட்டேன்.
அவர்கள் ஒன்றுமே சொல்லவில்லை தனது மகள் இன்னொரு மொழியை கற்றுக் கொள்வதில் அவர்களுக்கு சந்தோசம்தான். காலையில் பள்ளிக் கூடம் சென்று விட்டு வந்ததுமே எம்புள்ள அம்மா என்று கூப்பிட்டபடி வந்துவிடுவாள். அவளுக்கு கோழிகறி ரொம்பவும் பிடிக்கும்.நான் கோழிக்கறி ஆக்கும்போதெல்லாம் எம்மகளை கூப்பிட்டு கொள்வேன்.தமிழ்நாட்டு உணவு மீது என்புள்ளைக்கி ரொம்ப பிரியம் என்று பாருக் துணைவியார் கூறினார்.
டானா மீது பாருக் குடும்பம் வைத்திருக்கும் அன்பு டானாவிடம் தெரிகிறது.
தமிழை தாய்மொழியாய் கொண்ட தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஆங்கில மோகத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எகிப்து நாட்டின் பேரழகிக்கு தமிழை ஊட்டி வளர்த்த பாருக் துணைவியார் நம் அனைவர் நெஞ்சிலும் நிற்கிறார்கள்.
உடல் நலம் சரியில்லாத நிலையில் டானாவை தன் பிள்ளைப் போல் பாவித்துவரும் பாருக் துணைவியார் அவர்கள் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல் அருளால் சுகமடைந்து எந்த நோயுமின்றி நீடோடி வாழ வேண்டுமாய் இறைஞ்சுகின்றேன்.
காலம் கடந்தாலும் டானா தமிழையும் பாருக் குடும்பத்தையும் மறந்திட மாட்டாள். பசுமரத்தாணியாய் தன்பிஞ்சு மனதில் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் பதித்து வைத்திருக்கிறாள்.
டானாவை அமீரகத்தில் இயங்கும் தமிழ் அமைப்புகள் தங்களின் விழாக்களில் மேடை ஏற்றி அவளுக்கு உற்சாகம் வழங்க முன் வர வேண்டுமாய் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)