உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, December 26, 2010

ஆடும் பொறுமையும்

சென்ற 24/12/2010 துபாய் வானலை வளர் தமிழ் இலக்கிய அமைப்பின் தமிழ்தேரின் 47வது மாதஇதழ் வெளியீட்டு விழாவில் எனது இலக்கிய நண்பர் கீழைராஸா தனது உரையிலே நான் எழுதிவரும் இந்த பாலை அனுபவ கட்டுரையைப் பற்றி அறிமுகம் கொடுத்தார்.
அவர் கூறிய சிலவரிகள் “எதையும் மறைக்காமல் எழுதிவருகிறார் நானாக இருந்தால் மறைத்துதான் எழுதி இருப்பேன்” - என்று என்னைவிட வெளிப்படையாக அவர் சொன்னவிதம் அவரை உயரப்படுத்தியது.

மறைத்து எழுதினால் அதில் அனுபவம் வெளிப்படாது கற்பனை மிகைத்து கதையாக இருக்கும். எதை மறைப்பது? மறைக்குமளவு அதில் என்ன இருக்கிறது. மறைக்கப்பட வேண்டிய விசயங்கள் எத்தனையோ அம்மணமாக உலாவரும்போது அம்மணமாக சொல்லவேண்டிய விசயங்களுக்கு ஏன் பட்டுத்திரை? தமிழ்தேர் நிகழ்ச்சியில் அறிமுகம் தந்தமைக்கு நன்றி ராஸா.

* அத்திக்கடை சிகாபுதீன் எனக்கு டெலிபோன் செய்து பேசினான். இவன் பேசும்போது
நாசூகா எழுதக்கூடாதா? என்றான்.
செய்த வேலையை சொல்வதில் என்ன நாகரிகம்? நாம் நாகரிகமாக செய்தவேலைகள்தானே அது! இன்று வேலைமாறினாலும் நம்முடைய நினைவில் அது மறையவில்லையே. அதை நினைத்துப்பார்க்கும்போது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது நண்பா!
*************************************************************************************

எனக்கு 30 அமீரகத்திற்கு 39

இது ஒரு பாலை அனுபவம்

நண்பன் சிகாபுதீன் வேலைசெய்யும் அரபியின் உறவினர்ருக்கு ஆள் தேவைப்பட்டதால் அங்கு பணியில் அமர்ந்தேன். இது வீட்டுவேலை அல்ல ஆட்டு மந்தை அதாவது ஆடு வியாபாரம்.
துபாய் ஹமரியா போர்ட் பக்கத்தில் ஆட்டுச் சந்தை இருந்தது பெரும்பாலும் இதில் ஈரானியர்கள் தான் அதிகமாக வேலைசெய்தார்கள் அதில் சில இந்தியர்களில் நானும் ஒருவன்.

ஆட்டுமந்தையில் என்னுடன் பணிப்புரிந்த மதுக்கூர் ஜலீல் இவரை எனது அரபி கேப்டன் என்று தான் அழைப்பார். இவரை மதுக்கூர் மக்கள் எம்ஜியார் என்று அழைப்பார்கள். இவர் எம்ஜிஆரின் தீவிர விசிறி அதனாலேயே இவருக்கு இந்த செல்லப்பெயராம். ஏதாவது நான் எழுதிக் கொண்டே இருப்பதினால் என்னை குருஜி என்று அழைக்கும் பழக்கம் கேப்டனிடம் இருந்தது. இப்பவும் இவர் துபையில் தான் இருக்கிறார் சில தருணங்களில் சந்தித்துக் கொள்வதுண்டு இப்பவும் அதே குருஜி தான்.

பலநாடுகளிலிருந்து ஆடுகள் இறக்குமதி செய்து வணிகம் செய்வோம். பெரும்பாலம் இந்தியா குஜராத்திலிருந்தும் பாக்கிஸ்தானிலிருந்தும் தான் ஆடுகள் அதிகமாக கப்பலில் வரும்.

இந்திய ஆட்டைவிட பாக்கிஸ்தான் ஆடு விலை அதிகம்; அதேபோல் இந்திய ஆட்டைவிட ஆஸ்தேரிலியா ஆட்டின்விலை குறைவு; ஆஸ்தேரிலியா ஆடு கம்பளி போர்த்தியதைபோல இருக்கும் ஆனால் கொழுப்பு ரொம்ப அதிகம் அதனாலேயே இந்தியர்களை அவ்வபோது தாக்குகிறது.

ஹவுஸ்பாய் வேலையைவிட இந்த வேலை பிடித்தமானதாக இருந்தது வெளிஉலகை பார்க்க ஏதுவாக இருந்தது. தீர்க்கதரிசிகள், மகான்கள் எல்லாம் பெரும்பாலும் ஆடுகள் மேய்த்திருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன்; பொறுமையுடையவர்கள் மட்டுமே ஆடுகள் மேய்க்க தகுதியானவர்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்துக் கொண்டேன் அதனாலேயே நீண்டநாள் இந்த வேலையில் நீடிக்கவில்லை.

இந்த பணிகளுக்கிடையே முதன்முதலாக 23வது வயதில் “டெலிபோன் டைரி” என்ற நாவலை எழுதினேன். இது முழுக்க முழுக்க ஆட்டு மந்தைகளுக்கிடையில் எழுதப்பட்ட துப்பறியும் நாவல்.

அதை நூல் வடிவில் கொண்டுவருவதற்கு மயிலாடுதுறை அசோகன் என்ற ஆசிரிய நண்பர் பெரிதும் உதவினார். இன்று அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை அவருடைய தொடர்பு தொடரவுமில்லை. அந்த நாவல் நூலாக கொண்டு வந்து துபையில் பல கடைகளில் விற்பனைக்கு போட்டுள்ளேன். அந்த நூல் சிலரை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் மாற்றி இருக்கிறது.

அப்படி என்ன பெரிய விசேசமான நூல்ன்னு நினைக்கிறீங்களா? எந்த விசேசமுமில்ல இவனெல்லாம் நாவல்ன்னு எதையோ கிறுக்கிருக்கான்னு என்னை விமர்சித்து புனைப்பெயரில் கடிதம் எழுதிய தஞ்சைக்கு அருகில் வல்லத்தைச் சேர்ந்த ஷேக்அப்துல்லா துபையில் நல்ல நண்பனாக மாறினார். எனது நாவலைக்கண்டு அவர் ஒரு கவிதை நூல் வெளியிட்டார்.

எனது சகோதரனின் திருமணத்திற்காக மற்றும் விடுமுறையை கழிப்பதற்கும் தாயகம் செல்ல தயாரானேன் சென்னைக்கு நேரடி விமானம் அப்போது இல்லை.

பம்பாய் (மும்பை) வழி செல்வதற்கு PANAM AIRLINE சில் பயணச்சீட்டு தயாரானது.(இப்போது இந்த விமானச் சேவை இல்லை) இரவு 10.30 மணிக்கு என்னை வழியனுப்ப வந்த நண்பன் சிகாபுதீன் மற்றும் சில நண்பர்களுடன் விமான நிலையத்தில் உடமைகளை எடைபோட்டு விமானத்தில் அமர்வதற்கான இருக்கை எண் அட்டையை பெற்றுக் கொண்டு நண்பர்களிடமிருந்து பிரியா விடைப்பெற்று செல்லுமுன் சிகாபுதீன் சொன்னான் "டேய் எங்க வீட்டுக்கு மறக்காமல் போய்வரனும்" என்று சம்பர்தாயமாக அவன் கூறினாலும் அவனுடைய வீட்டுக்கு வாங்கித்தந்த சாமான்களை கொடுப்பதற்கு மட்டுமல்ல சிகாபுதீனின் அன்பு தகப்பனார் செவத்தப்பிள்ளை முஹம்மது ஹனீபா அவர்களின் அன்பை கடிதத்தின் மூலம் பெற்றவன் என்பதினாலும் அவரை தந்தையாக நான் எண்ணுவதனாலும் கட்டாயம் சென்று வருவேன் என்ற உறுதி மொழியுடன் நண்பர்களிடமிருந்து விடைப்பெற்று சுங்க பரிசோதனைக்கு தாயகம் செல்கிறேன் என்ற சந்தோச எண்ண அலையில் சென்றேன்.

என்னை வழியனுப்பிவிட்டு கனத்த மனதுடன் நண்பர்கள் வீடு திரும்பினார்கள். நான் எல்லா சோதனைகளிலிருந்தும் விடுபட்டு விமானத்தில் அமர்ந்தேன். குறித்த நேரத்தில் விமானம் புறப்பட்டது அரைமணி நேரம் பறந்திருப்பேன் உணவு வழங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென நிறுத்திவிட்டு எல்லோரையும் பெல்ட் போடும்படி அறிவுறுத்தினார்கள் விமானப் பணிப் பெண்களிடம் ஒருவித பதட்டம் தெரிந்தது.

அவசரமாக விமானம் மீண்டும் துபை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது…

ஏதோ பிரச்சனை இருக்கு தொடர்வோம்….

Tuesday, December 21, 2010

வேதம் தந்த வேகம்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர்- 7

இது ஒரு பாலை அனுபவம்

தாயகத்தை விட்டு வந்து இரண்டு ஆண்டுகளை கடத்தி விட்டேன் ஆனால் சம்பாதிப்பு ஒன்றும் பெரிதாக இல்லை பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவல் ஆர்வமும் இல்லை அலைச்சல் தான் அதிகம் இருந்தது என்றாலும் இளம் கன்றுக்கு களைப்பு தெரியவில்லை.

இந்த நேரத்தில் சரியாக எனக்கு யாரும் வழிகாட்டவுமில்லை அப்படிபட்டவர்களை நான் சந்திக்கவுமில்லை.

அந்த இளம்வயதில் யாருடைய கட்டுப்பாட்டையும் அறிவுரையும் ஏற்றுக்கொள்ளும் மனோ நிலை எனக்கு இல்லை ஆனால் மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்தக்கூடிய வழியில் என் வழி இல்லை.
இப்படி இல்லை இல்லை என்று நாத்திகர் மாதிரி சொன்னாலும் ஏதும் இல்லாமல் இல்லை என்று சொல்லவில்லை.அதாவது இருந்தால்தானே எதையும் இல்லை என்று சொல்லமுடியும்.

வெறும்பாறையில் தான் சிற்பம் இருக்கிறது என்பார்கள் நான் பாறையாக இருக்கிறேன் என்னை செதுக்குவது யார்?

இதோ அன்னையின் மடியில் சப்பி பால் குடித்திக் கொண்டிருக்கும் சிசுவிடம் சப்பினால்தான் பால் வரும் என்ற வழிகாட்டலை சொல்லிகொடுத்தது யார்?

இப்படி வழிகாட்டல் என்னிடமே வைத்துக்கொண்டு எனக்கு யாரும் வழிகாட்டவில்லை என்று இங்கு நான் புலம்புவது எவ்வளவு பெரிய அபத்தம்.
என் பிடரியின் நரம்பிற்கும் மிக சமீபமாக இப்பவனைவிட எனக்கு சமீபம் வேறு யார் இருக்கமுடியும்?

மேல்நோக்கியே சிந்தனையையும், எண்ணத்தையும் வளர்க்க பழக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான் இறைவா என்ற வார்த்தை வெளியில் வந்த உடனே கைகள் ஆகாயத்தை நோக்குகிறது. உலகக் கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஆன்மக் கல்விக்கு கொடுக்கப்படாததால் அனாச்சாரங்களும், அவநம்பிக்கைகளும் சமுதாயத்தில் மலிந்துவிட்டன.

துபை நைப் தமிழ்பஜாரில் ஒரு வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருநபர் கையில் திருக்குர்ஆன் இருந்தது அது குர்ஆன்தானா என்று உறுதி செய்வதற்கு அவரை அனுகியபோது அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் என்று அவர் கூறியதும் என்னை மீறிய ஆவல் அதை ஆட்கொண்டது அதை எனக்கு கொடுக்கும்படி கேட்டபோது அதை இந்தியாவிலிருந்து வரவழைத்தது என்றும் இதற்காக நீண்டநாட்கள் காத்திருந்ததாகவும் அந்த சகோதரர் கூறவே அதே ஆவல் என்னிடம் மிளிர்வதைக் கண்டு அந்த சகோதரர் என்னிடம் குர்ஆனைக் கொடுத்துவிட்டார்.

அன்று எனக்கு கிடைத்த ஆனந்தத்தை இங்கு வரிகளில் வார்த்தைகளில் கொண்டுவர முடியவில்லை. வீட்டு வேலையின் ஓய்வு நேரங்களில் திருக்குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை வாசிக்கத் தொடங்கினேன்.

அதுவரையில் அலட்சியமாக இருந்த தொழுகை அச்சத்தை ஏற்படுத்தியது.பொழுது போக்கு பட்டியலில் இருந்த சினிமாவிற்கு திரையிடப்பட்டது. தமிழ் குர்ஆன் என்னை ரொம்பவும் பயமுறுத்தியது. ஐந்து நேரத்தொழுகையை கண்ட நண்பன் சகாபுதீனுக்கு ஆச்சர்யம் அவ்வபோது அவனிடம் ஆலிமாக நடந்துக் கொண்டேன்.

எனது அரபு என்னிடம் மிக மரியாதையாக நடந்துக் கொள்ள ஆரம்பித்தார். இறைவணக்கம் என் இதயத்தை சுத்தம் செய்தது மனம் போனபோக்கில் சென்ற சிந்தனைக்கு கடிவாளம் போடப்பட்டது.

ஒருநாள் எனது அரபு மகளுக்கு முதல் பிரசவத்தின் வலி ஏற்பட திருக்குர்ஆனிலிருந்து சூரத்துல் மரியத்தை (அத்தியாயம்) ஓதி தண்ணீர் கேட்டார்கள்.ஓதிக் கொடுத்தேன். என் மீது அவர்களுக்கு நன் நம்பிக்கையை திருக்குர்ஆன் பெற்றுத்தந்தது.

எனது சகோதரர் திருமணத்திற்கு செல்ல விடுமுறைக்கிடைத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின் தாயகம் செல்ல தேதி முடிவானது. தாயகம் செல்ல அனைவருக்கும் துணிமணிகள் வாங்க பட்ஜெட் போட்டபோதுதான் பொருளாதாரத்தில் எனது பலஹீனம் என்ன என்பதை யோசிக்க முடிந்தது. நான் நினைத்தமாதிரி எனது குடும்பத்தினருக்கு சமான்கள் வாங்கமுடியவில்லை அப்படி வாங்க வேண்டுமானால் அதற்காக வாங்கப்படுகின்ற கடனை அடைக்க இரண்டு ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்ற கணக்கு புரிந்தது.

விளையாட்டுதனமான வாலிப வாழ்க்கையில் எதிர்கால லட்சியங்கள் என்னவென்று கேட்டால் ஒரு தீர்மானமும் இல்லாத நிறைய சம்பாதிக்கனும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லக்கூடிய இளைஞர்களை இன்றும் நான் பார்க்கிறேன்.

எல்லோருக்கும் பணக்காரனாக வாழ லட்சியமிருக்கிறது ஆனால் அவர்களில் பத்துகோடி சம்பாதிக்கனும் என்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய வாலிபர்கள் படித்தவர்களில் கூட குறைவாகதான் இருக்கிறர்கள்.

வாலிபம் தொடரும்....

Thursday, December 16, 2010

பாலை எல்லையில் கைதான தமிழர்கள்

எனக்கு 30 அமீரகத்துக்கு 39 - தொடர் 6

இது ஒரு பாலை அனுபவம்என்கையை பிடித்த அதே நேரம் எனது அரபியும் இன்னொரு அதிகாரியுடன் பேருந்தினுள் நுழைந்தார். என்னை அவருடைய பணியாள் என்று கூறி பார்டரை கடப்பதற்கு பாஸ்சயும் காண்பித்தார் என்னை விட்டார்கள் இந்த பத்தூ அரபிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்பதை அப்போது விளங்கிக் கொண்டேன்.
மீண்டும் அபுதாபியிலிருந்து அல்சிலா வரும்போது டெலிபோன் செய்யும் படி கூறினார் ஒருவழியாக பார்டரைக் கடந்து அபுதாபி சிட்டி வந்து சேர்வதற்கு சுமார் ஐந்து மணிதுளிகள் ஆகிவிட்டன.

பல நண்பர்கள் பணியின்றி ரூமில் இருக்கவே அவர்களிடம் அல்சிலாவின் மகிமையை எடுத்துக் கூறி உசுப்பேத்தினேன்.பலரும் அல்சிலாவிற்கு வருவதாக கூறினார்கள் அவர்களும் என்னைபோல கல்லி வல்லி கேஸ்.

அதென்ன கல்லி வல்லி என்கிறீர்களா? பாஸ்போர்ட் ஐடி ஏதும் இல்லாதவர்களை இப்படி அழைப்பது வழக்கம் இதன் பொருள் விட்டுதள்ளு என்பதே.

இந்த கல்லி வல்லி நண்பர்கள் பணியின்றி இருப்பதை பார்த்து சிலரைமட்டும் அழைத்துப்போக முடிவு செய்தேன் பார்டர் பிரச்சனையால் அனைவரையும் அழைத்துப்போக முடியவில்லை. அடுத்தக்கட்ட பயணத்தில் இன்னும் சிலரை அழைத்துப்போக ஏற்பாடு செய்தேன்.

மீண்டும் அல்சிலா செல்வதற்கு முன் அரபிக்கு டெலிபோன் செய்து நான் வருவதை உறுதி கூறவே அவரும் பார்டரில் நின்றார் எனது புதிய நண்பர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் சேர்த்து பாஸ் வாங்கி சென்றோம்.

புதிய நண்பர்களுக்கு உடனடியாக வேலையும் கிடைத்தது அல்சிலா ஏரியாவில் தமிழ் அலை வீசத் தொடங்கியது. மலையாள சகோதரர்களுக்கு பெருத்த ஆச்சரியம்
ஒரு அண்ணா வந்த இடத்துல இப்போ இத்தன அண்ணாவ அழைத்து வந்துறிக்கீங்களே ஆச்சரியமாக கேட்டார்.

இது ஒன்னும் அச்சரியமில்ல அண்ணா! சந்திரமண்டலத்துக்கு போன நீல் ஆர்ம்ஸ்டிராங் அங்கு ஆச்சிரியப்பட்டு போனாராம்…ஏன்னா அவருக்கு முந்தி மலையாளி அங்கு சாயா வித்தாரதாம். நாங்க இங்கு வருவதற்கு முந்தி நீங்கதானே இருக்கீங்க. அதனால உங்களுக்குதான் லாபம் எங்களிடமிருந்து வியாபாரம் நடக்குமே என்றதும் ஆமா ஆமா என்று அமோதித்தார்.

சில தினங்களில் அபுதாபியிலிருந்து சில புதிய தமிழ் நண்பர்கள் அல்சிலா வருவதற்கு முன் அறிவிப்பின்றி பஸ்சில் வந்து பார்டரில் இறங்கி பாஸ் வாங்காமல் அதைக் கடந்து செல்ல அதை பார்த்த சிஐடி அவர்களை கைது செய்தார் என்ற செய்தி கிடைத்தது உடனே எனது பத்தூ இடம் கூறினேன் அவரும் அவர்களை வெளியில் எடுக்க முயற்சித்து ஒரே ஒருவரை மட்டும் விடுவதாக கூறினார்கள்.

ஏன் ஒருவரை மட்டும் என்றால் அந்த ஒருவர் இங்கு பணி புரிகிறார் அவர் அபுதாபி சென்று திரும்பும்போது வேலை இல்லாதா புதியவர்களை அழைத்து வந்துள்ளார் வருவதற்கு முன் சொல்லி இருக்கவேண்டும் மாட்டிக்கொண்டார்கள்.

அவர்களை வெளி எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மனசுக்கு ரொம்பவும் கஸ்டமாக இருந்தது மலையாள சகோதரர்கள் கிண்டல் அடித்தார்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அல்சிலா வளர ஆரம்பித்தது நிறை அரபு குடும்பங்கள் அங்கு வாழ்வதற்கு வருகைத்தந்தார்கள். பள்ளிக்கூடம் மருத்துவமனை எல்லா இயங்கத் தொடங்கின.
வெறும் பாலைவனமாக இருந்த அந்த இடம் மனித நடமாட்டங்களை பெற்றது.
அங்குள்ள அரபிகள் தங்களுக்கு தேவையான சாமான்களை மாதம் ஒருமுறை அபுதாபியிலும் சிலர் டோஹா கத்தாரிலும் சென்று வாங்கி வருகிறார்கள்.

அபுதாபி நகரத்தைவிட அல்சிலாவிலிருந்து டோஹா கத்தார் மிக நெருக்கம்.
அரபு சிறுவர்கள் கார் ஓட்டும் அதிசயத்தை அங்குதான் பார்த்தேன். சுமார் பத்து பன்னிரெண்டு வயது சிறுவர்கள் படு சூப்பராக நின்றுக் கொண்டு அதாவது லேண்ட் குரோஸர் 4 வீல் டைரைவ் கார்களை ஓட்டினார்கள் அதன் தாக்கத்தில் ஓருமுறை எனது அரபு காரை எடுத்து ஒட்டி சுவற்றில் மோதவேண்டிய கட்டத்தில் எப்படியோ தப்பித்தேன்.

அந்த அல்சிலா கிராமத்தில் பலரும் கார் ஓட்டுகிறார்கள் சிலருக்கு லைசன்சு கிடையாது அந்த கிராமத்திற்குள் லைசன்சு சோதனைக் கிடையாது.

அங்குள்ள கட்டுமான பணியாளர்கள் தங்கும் இடங்களில் வீடியோவில் திரைப்படங்கள் திரையிடுவார்கள் பெரும்பாலும் ஹிந்திப்படங்கள் மட்டுமே. நாங்கள் சிரத்தை எடுத்து அபுதாபியிலிருந்து தமிழ்பட கேஸட்டுகளை வாங்கி அங்கு திரையிட்டோம் 300க்கும் அதிகமானவர்கள் படம் பார்ப்பார்கள் அதில் தமிழர்கள் பத்துபேர்கள் மட்டுமே.
கமல்ஹாசன் அப்போது ஹிந்திக்கு வந்த புதிது என்பதால் பலரும் கமலை நன்றாக தெரிந்திருந்தார்கள். அவர்கள் படம் பார்த்து இரசிக்கும்போது எனக்கு சந்தோசமாக இருக்கும் ஏதோ நானே ஹீரோவாக நடிப்பதுபோல எண்ணிக்கொள்வேன்.

சிலமாதங்களுக்குப் பின் அல்சிலாவிற்கு குட்பை சொல்லிவிட்டு நான் மட்டும் துபாய் வந்தேன். நண்பன் அத்திக்கடை சகாபுதீனைக் கண்டதும் சந்தோசம் கொண்டேன் நீண்ட நாள் பிரிந்த அந்த நட்பின் வலியும் மீண்டும் சந்தித்ததில் மனம் உண்டாக்கிய அதிர்வில் ஏற்பட்ட ஒளியும் எங்களின் நட்பை பலப்படுத்தியது.

இனிதான் எனது வாழ்க்கையின் திருப்புமுனைகள் அதனால் தொடர்வோம்.

Sunday, December 12, 2010

தமிழனைச் சந்தித்த தமிழர்கள்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 - தொடர் 5


இது ஒரு பாலை அனுபவம்


மீண்டும் அண்டாவில் முழு ஆடுகளை வேகவைத்து தனியாக எடுத்து, பின் அரிசியை கொட்டி தம்போட்டு, இரண்டு நாட்களாக தண்ணீரில் ஊறிய கோதுமையை கறியுடன் கிளறி, ஹரீஸ் என்ற ஒருவகை கஞ்சி செய்து அதை துடுப்பால் நெஞ்சு வலிக்க கறியின் முள் கரையும் வரையில் கிண்டி, பதம் பார்த்து இரண்டு நாட்களில் இரண்டு மாதவேலையை மூன்று பேர்கள் செய்து முடித்தோம்.

வேர்வை உளருமுன் அவர்களின் கூலியை கொடுத்துவிடுங்கள் என்று அருமை நபிகள் நாயகம் (ஸல் அலை)கூறி இருக்கிறார்கள் அவர்களின் பொன்மொழிக்கேற்ப அந்த கூலியை நாங்கள் கையில் பெற்றதும் எங்களின் உழைப்பு கலைப்பு அத்தனையும் பறந்து மறந்து போயின.

இந்த திருமண அனுபவம் புதியவை முன் அனுபவமே இல்லாமல் ஒரு கல்யாணத்தை முடித்துவிட்டோம் நம் ஊர்களில் பல திருமண இல்லங்களில் உணவு அருந்தியிருக்கிறோம் சமைப்பவர்களின் கஸ்டம் தெரியவில்லை அதை உணரும் வாய்ப்பு அரபு திருமணத்தில் கிடைத்தது

வழக்கம்போல சின்ன பண்டாறியாய் மாறிவிட்டோம். இனி எங்கு கல்யாணம் நடந்தாலும் எங்களை சமையலுக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமடைந்தோம்.
ஒருமுறை எங்கள் சமையலை உண்டவர்கள் மறுமுறை கூப்பிடுவார்களா என்ன?
(பாவம் அமீரகப்பதிவர் கூட்டம் என்னை பிரியாணிபாய் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்)

அல்சிலாவில் பொழுதுபோவது கஸ்டமாக இருந்தது அங்கு முனிசிபாலிட்டி கேம்பில் தமிழர் இருக்கிறார் என்ற செய்தியை மலையாளி கூறினார்.
எங்களுக்கு ஆர்வமாக இருந்தது நாம் அவரைபோய் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அவரே எங்களைத்தேடி வந்துவிட்டார். எங்களுக்கு ஆச்சர்யம் எப்படி? என்று வினவினோம் அவருக்கும் மலையாளிதான் சொன்னாராம் ஊர் கும்பகோணம் என்றார்.

ஒரு தமிழன் இனனொரு தமிழனை சந்திப்பதில் எவ்வளவு ஆர்வமிருக்கிறது இவ்வளவு ஆர்வமிருந்தும் ஈழத்தமிழர்களை இழந்துவிட்டோமே என்ற வருத்தமிருக்கத்தான் செய்கிறது.
அவருடைய பேச்சில் தமிழைவிட மலையாள வாடை அதிகமாகவே வீசியது அவரிடம் கேட்டேன் நீங்கள் தமிழரா? மலையாளியா?

ஏன் அப்படி கேட்கிறீங்க? நான் மலையாளிகளுடன் கலந்திருப்பதால் மலையாளமே சரளமாக வந்துவிடுகிறது தாயகம் சென்றபோது என் குடும்பத்தினர்களிடமும் இப்படிதான் பேசினேன் இப்போது நீங்கள் வந்துட்டீர்கள் இனி தமிழ் நன்றாக பேசுவேன் என்று தன் தாய் மொழியை மறந்த வேதனையை வெளிப்படுத்தினார்.

அந்த புதிய நண்பரிடம் பழைய வார இதழ்கள் கிடைத்தது மூன்று மாதத்திற்கொரு முறை அபுதாபி சென்று வருவாராம் அந்த சமயங்களில் தேவையான பொருட்களை வாங்கி வருவார் என்றார்.

எங்களைக் கண்டு ஆச்சர்யப்பட்டார் பாஸ்போர்ட், ஐடி ஏதும் இல்லாமல் இப்படி நீங்கள் வேலைப் பார்ப்பது ஆபத்தானது இந்த ஏரியாக்களில் சிஐடி அதிகம். இந்த பார்டரிலிருந்து சவூதி கத்தார் ஜோர்டான் செல்லக்கூடியது அதனால் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார் உங்களுக்கு ஏதும் தேவை என்றால் என்னிடம் கூறுங்கள் நான் வாங்கி வருகிறேன் என்று சகோதர பாசத்துடன் பழகிய அவரை என்மனம் மறக்கவில்லை.

எங்களை அழைத்து அவருடைய கேம்பில் விருந்தும் கொடுத்தார் அவருடன் அவருடைய அறை தோழர்கள் மலையாள சகோதரர்களும் அவருடன் இணைந்து விருந்தில் கலந்து எங்களை அவர்களுடைய உறவினர்களைப் போல் கவனித்தார்கள்.

அல்சிலாவில் இருந்த சிலமாதங்கள் வரையில் அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.
அரபு இளைஞர்களுடன் ஒருமுறை கொமட்டிப் பழம் (வாட்டர் மிலான்) தோட்டத்திற்கு சென்றேன். நம்ம ஊரில் யாரு வீட்டு கொல்லையிலே யாரோ மாங்காய் பறிப்பார்களே அப்படி கொமட்டிப் பழம் பறிக்க அரபு இளைஞர்களுடன் சென்று பறித்து காவலில் இருந்த பாக்கிஸ்தானி சாச்சா எங்களை விரட்ட நாங்கள் ஓட அந்த வயது ஜாலி எல்லாம் இப்போ கிடைக்காது கிடைத்தாலும் இனிக்காது.

ஒருமுறை விடுமுறை எடுத்துக் கொண்டு அபுதாபி செல்வதற்கு ஆயத்தமானோம். எப்படி செல்வது என்று புரியவில்லை. அல்சிலாவிலிருந்து அபுதாபிக்கு பஸ் செல்கிறது ஆனால் கையில் ஐடி இருக்கனும் இருந்தால் மட்டுமே பஸ்சில் பார்டரை கடக்க முடியும் அதனால் அரபியிடம் கூறினேன்.

நான் பார்டர் வரையில் வருகிறேன் என்றார் நாங்கள் தயாரானோம் பஸ்சில் ஏறி பார்டர் வந்தோம் பஸ் நின்றதும் எங்களுடன் வந்த அரபி இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு இறங்கினார்.

சற்று நேரத்தில் பஸ்சில் ஐடியை பரிசோதிக்க பார்டர் செக்யூரிட்டி ஏறி ஒவ்வொருவராக சோதனைச் செய்ய எங்களுக்கு பயம் வந்தது கூடவே செக்யூரிட்டியும் வந்து விட்டார்.
ஐடியை கேட்க நான் கையை விரிக்க செக்யூரிட்டி என்கையைப் பிடித்தார்…

தொடர்வோம்..

Friday, December 10, 2010

பாலைவனத்தில் தமிழ் பறவை

எனக்கு 30 அமீரகத்துக்கு 39 -தொடர் 4

இது ஒரு பாலை அனுபவம்
அபுதாபியிலிருந்து சவூதி பார்டர் அல்சிலா என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். சுமார் நாலரை மணிநேரம் காரில் பிரயாணம் செய்ய நேர்ந்தது. இந்த பார்டருக்கு வரவேண்டுமானால் பாஸ்போர்ட் அல்லது லேபர் கார்ட் என்ற அடையாள அட்டைகள் வைத்திருக்க வேண்டும் ஆனால் அரபி தனது செல்வாக்கை பயன்படுத்தி எங்களை அல்சிலா பாடருக்குள் அழைத்துச் சென்றுவிட்டார்.

அது ஒரு சின்ன கிராமம் மொத்தமே இருநூறு வீடுகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் இன்னும் முழுமையாக குடிகள் வரவில்லை. அங்கு வீடுகள் வருவதற்கு முன் மலையாள சகோதரர்கள் வந்துவிட்டார்கள். அங்கு மலையாள டீ கடையும், ஒரு சின்ன குரோசரி கடையும் வைத்திருந்தார்கள்.

அந்த இடத்திற்கு வீட்டு சமையளுக்கென்று முதன்முதலாக நாங்கள் இருவர் மட்டுமே சென்றுள்ளோம் என்பதை பிறகு தெரிந்துக் கொண்டோம்.அழைத்து வந்த அரபி தனது வீட்டுக்கு ஒரு ஆளையும் அவருடைய நண்பர்களின் வீட்டுக்கு ஒரு ஆளையும் அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

எங்களை மஜ்லிஸில் (விருந்தினர் ஹால்) அமர வைத்துவிட்டு அவருடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டார். நண்பர்களின் துணைவிமார்கள் நாங்கள் இருந்த இடத்திற்கு படையெடுத்து வந்துவிட்டார்கள்.

அவர்கள் எங்களை பார்த்தவிதம் நமது ஊரில் மாப்பிள்ளை பார்க்கும் பட்டாளம் போல இருந்தது இதில் போட்டிவேறு எனக்கு வேண்டும் உனக்கு வேண்டும் என்று!
ஏதோ ஒரு வழியாக முடிவாகி என்னையும் ஒரு அரபியும் எனது உறவினரான இக்பாலை ஒரு அரபியும் பக்கத்து பக்கத்து வீடுகளுக்கு பணியில் அமர்த்தினார்கள் எங்களின் பணிகள் துவங்கியது.

இந்த அரபிகளை காட்டுவாசிகள் அதாவது ஒரிஜினல் நாட்டுவாசிகள் என்று கூறுவார்கள் அதாவது பத்துஉ என்று அரபி மொழியில் கூறுவார்கள். பத்துஉ என்றால் கிட்டதட்ட ஒன்றுமே தெரியாதவர்கள் என்றும் நகரங்களை விரும்பாதவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
இந்த அல்சிலாவில் வாழக்கூடிய பெரும்பாலோர் பத்துஉ அரபிகள்தான். தினம் மாலையில் தங்களின் குடும்பத்தாருடன் பாலைவனத்திற்குள் சென்று விடுகிறார்கள்.

ஒவ்வொரு அரபிகளுக்கும் ஒரு எல்லையை வகுத்து கூடாரங்கள் அமைத்து அங்கு அவர்கள் ஒட்டகங்கள் வளர்த்து வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கும் கூடாரங்கள் அமைத்திருக்கிறார்கள் மாலையில் வந்து தங்கிவிட்டு காலையில் புறப்பட்டு கிராமத்திற்கு வந்துவிடுவார்கள் இதுதான் இவர்களின் தின வேலையாக இருந்தது.

இதனால் எங்களுக்கு பெரிதும் வேலையில்லை நாங்கள் பாலைவனத்திற்குள் செல்வதில்லை. எங்கள் பணி சமையல் அதைசெய்துக் கொடுத்தால் போதும் அதிகமாக ஓய்வு கிடைத்தது அதனால் லைசன்சு இல்லாமல் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

அரபிக்கு திருமண ஏற்பாடு நடந்தது அப்போது எங்களை பாலைவனத்திற்கு அழைத்துச் சென்று சமைப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் யோசித்தோம் கல்யாணம் என்றால் கூட்டம் அதிகம் இருக்கும், முழு ஆடுகள், ஒட்டகம் என்று சமைக்க சொல்வார்கள் வேலை அதிகம் இருக்கும் நாம் இருவர் மட்டும் போதாது ஆதலால் அபுதாபியில் உள்ள எனது நண்பர் தேரிழந்தூர் பஷீர் (கொல்லி) அவரை அழைத்துவர ஏற்பாடு செய்தோம் அரபி அபுதாபி சென்று அவரை அழைத்தும் வந்தார்.

இந்த கல்யாணத்திற்கு சீப்கொக் நாங்கள் மூவர்தான் பெரிய தொகையை அரபியிடம் பேசி அட்வாண்ஸ் வாங்கியாச்சு ஆனால் கல்யாணம் பாலவனத்திற்குள் அங்குதான் சமைக்கவும் வேண்டும் நினைக்கவே பயமாக இருந்தது.

நம்பள நம்பி இவ்வளவு பெரிய பொறுப்ப கொடுத்திருக்கானுங்களே என்ற ஒரு பதட்டம் இருந்தது. பத்துஉ என்பது சரியாகதான் இருக்கு இவன்களுக்கு ரூசி, மணம், பதம் என்பது எல்லாம் தேவையில்லை எதை ஆக்கி வைக்கின்றோமோ அதை சாப்பிடுவார்கள். என்பது அனுபவப்பட்ட உண்மை அதனால் இப்போதைக்கு அவங்களுக்கு நாமதான் பெரிய கொக் என்று நாங்கள் எங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டு பாலைவனத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டோம்.

சிலமணி நேரங்களில் பாலைவனத்தின் மையப்பகுதியில் விடப்பட்டோம். எங்கு திரும்பினாலும் மணல் திட்டுக்கள் இங்கிருந்து தப்பித்து போகவேண்டுமென்றால் ரொம்ப சிரமம் இந்த சூழ்நிலையை பார்த்த பஷீருக்கு பயம் வர ஆரம்பிச்சது “மாப்பள இவ்ளோபேருக்கும் நம்மாள சமைக்க முடியுமா? ஏதாவது இசுகு பிசகா ஆனா நம்பள இங்கேயே புதைச்சுடுவானுவோ” என்று என்னை பயமுறுத்துகிற வார்த்தையை சொன்னதும் அதுவரையில் தைரியமாக இருந்த எனக்கு உள்ளுக்குள் சின்ன பயம் வரஆரம்பிச்சது.
டேய் ஏண்டா இப்படி பயப்புடுறீங்க தைரியமா வாங்கடான்னு இக்பால் வார்த்தைகளால் தைரியம் ஊட்டினாலும் பஷீருக்கு பயம் போகவில்லை. சரி அடுப்பை ரெடிபண்ணுவோம் வா என்று பெரிய கற்களை முக்கோணத்தில் வைத்து ராட்சஷ அண்டவை அதன் நடுவில் வைத்தோம்.சமையலை கிண்டுவதற்கு அகப்பை பெரிது எங்களிடம் இல்லாததால் சதுரமான மரச்சட்டத்தை அகப்பையாக மாற்றினோம்.


முதலில் எட்டு ஒட்டகம் அறுத்து சமையலுக்கு வரவே பஷீர் அலறினான். எனக்கு தலை சுற்றியது. எட்டு ஒட்டகத்தை எப்ப சமைச்சு முடிக்கிறது? இரண்டு கிலோ ஆட்டுக்கறிய ஆக்குவதறதுக்கே இரண்டு மணிநேரம் ஆகும் என்று புலம்பினேன்.

இக்பால் தைரியம் கொடுத்தான் முடியும் என்று சொல்லி அண்டாவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டோம்.தண்ணீர் சூடு வந்ததும் மூன்று ஒட்டகத்தை அதனுல் இறக்கி உப்பு மஞ்சள் தூள் பிஜார் பொடி போட்டு வேகவைத்தூம்.அவ்வபோது மரச்சட்டத்தால் ஒட்டகத்தை பிறட்டி பிறட்டி வேக வைத்தோம்.

சிலமணி நேரங்களில் ஒட்டகம் வெந்தமாதிரி தெரியவே மீதி உள்ள ஒட்டகத்தையும் அது மாதிரி செய்தோம்.ஒரு வழியாக ஒட்டகத்தை அவிச்சு பிரியாணிக்கு மேல் வைப்பதற்கு தயாராக இருந்தது.

அடுத்து ஆடுகள் வந்தது அதை பஷீர் எண்ணிக் கொண்டிருந்தான். டேய் எத்தனைடா என்றதும் இருப்பதஞ்சு என்றான். விழி பிதிங்கியது.

தொடர்வோம்...

Wednesday, December 8, 2010

எனக்கு 30 அமீரகத்துக்கு 39 - தொடர் 3

இது ஒரு பாலை அனுபவம்

ஒரு நபருடன் அன்சாரி எங்கள் அருகில் வந்து இவர்தான் எனது தம்பி என்று சொன்னபோது எங்களால் நம்பமுடியவில்லை. நாங்கள் திட்டம் தீட்டிய விசயத்தை கூறியபோது அன்சாரி நம்பவில்லை அவர் தம்பியிடமே நீங்க போன் செய்தீங்களா? என்று கேள்விகள் கேட்டு விளக்கம் அளித்து இறுதியாக ஏர்போர்ட் வந்துபோன சிலவை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் அதாவது நானே ஏற்றுக் கொண்டேன்.

இப்படி கலாட்டாக்கள் நிறைய நடந்தேறியக் காலம் அது. அரபி வீடுகளில் இரவு பத்து மணிக்கு மேல் எங்கும் வெளியில் செல்ல இயலாது சில நேரங்களில் வெள்ளிக்கிழமை அல்லாத நாட்களில் திரையிடப்படும் திரை படங்களுக்கு செல்வது கடினமாக இருக்கும் என்றாலும் அன்சாரி இடம் சினிமா டிக்கேட் பணத்தை லஞ்சமாக கொடுத்து விட்டு நான் கம்பியை நீட்டிவிடுவேன் அரபிகள் கேட்டால் நான் உறங்குவதாக சொல்லி சமாளிக்க கொடுத்த லஞ்சம் அது.

சினிமாவைப்பார்த்து விட்டு சுவர் ஏறிக் குதித்துதான் வீட்டுக்குள் வரவேண்டி இருக்கும் பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டுவதுபோல நானும் அரபி இடம் மாட்டி உள்ளேன்.
நமது ஊர்களில் அப்பாவிடம் திட்டுவாங்குவதுபோல இவர்களிடம் வாங்கிக் கொள்வது வழமையாகிவிட்டது.

எனது ஊர் நண்பர்கள் பக்கத்தில் ஓர் ஏரியாவில் பணிப்புரிவதாக சில நண்பர்கள் கூற அவர்களைத் தேடி கண்டுப்பிடித்து அலாவுவதில் எத்தனை இன்பம்.
சில ஹவுஸ்பாய்கள் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலில் தங்களின் ஸ்பான்சரை விட்டு வேறு இடத்தில் தெரியாமல் அதாவது ஓடிப்போய் வேலை செய்வார்கள் அப்படி செய்வதினால் மாதச்சம்பளம் ஸ்பான்சர் தருவதைவிட இரு மடங்கு மூன்று மடங்கு கூடுதலாக கிடைக்கும்.

அப்படி ஒருநாள் நண்பன் சிஹாபுதீன் சகோதரர் ஒடிப்போய் வேலைப்பார்த்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள எனக்கும் அன்சாரிக்கும் அதே சிந்தனையாக இருந்தது.
இந்த சம்பளத்தில் வேலைப்பார்த்து நாம் எப்போது முன்னுக்கு வருவது அதனால் கம்பியை நீட்டிவிடலாம் என்று திட்டம் வகுத்தோம் நண்பன் சிஹாபுதீன் இடம் இதனால் உனக்கு ஏதும் பாதிப்புகள் வருமா? காரணம் நீ அடிக்கடி இங்கு வந்துபோவதினால் உனக்கு தெரியும் என்று அரபுகள் நம்புவார்கள் அல்லவா அப்படி வந்தால் நீ எப்படி சமாளிப்பாய் என்று பலவாறு கேள்விகள் கேட்டு அவன் கொடுத்த பதிலும் தைரியமும் அங்கிருந்து புறப்படுவதற்கு ஏதுவாக இருந்தது.

அன்சாரி சகோதரர் அபுதாபியில் பணிபுரிகிறார் அவருக்கு தகவல் சொல்லி எங்களை அழைத்துப்போவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஒருவெள்ளிக்கிழமை எப்பவும்போல் மதியம் பஜார் புறப்படுவதுபோல் சில பைகளில் மட்டும் துணிகளை எடுத்துக் கொண்டு - கொண்டு வந்த பேக்குகளை அங்கேயே விட்டு சென்றோம். பேக்குகளை மட்டுமா விட்டுச் சென்றோம் எங்கள் பாஸ்போர்ட்களையும் தானே விட்டுச் சென்றோம்.

இரவு புறப்பட்டு அபுதாபி வந்தடைந்தோம் தமிழர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து ஒரு பிளாட்டில் தங்கிருந்ததை பார்த்த மனம் சந்தோசமடைந்தது. தாயகத்தில் இருப்பதைப்போன்ற உணர்வைக் கொடுத்தது.

அங்கிருந்தவர்கள் பலரும் பல கம்பெனிகளில் வேலைப்பார்த்தார்கள் யார் யாருக்கு என்ன வேலை என்று கேட்டறிந்தேன். ஒவ்வொருவர்களும் ஒரு வேலையில் இருக்கிறார்கள் அவர்களுக்கென்று ஒரு வேலை இருக்கிறது ஆனால் எனக்கு நான் என்ன படித்தேன் எனக்கு என்ன வேலைத் தெரியும்? என்னுடைய எதிர்காலம் என்ன? எனக்கு யார் வழிகாட்டி? அப்போது தான் அம்மா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

“படிப்புடைய அருமை உனக்கு இப்பத் தெரியாது நீ கஸ்டப்படும்போது நீ உணர்ந்து பார்ப்பாய். உன்னை சம்பாதிக்க வேண்டி வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை புத்திபடிக்கத்தான் அனுப்புகின்றோம்” என்ற வார்த்தைகள் என் எண்ணத்தில் வந்துபோயின.
தனது பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு பெற்றோர்களிடமும் இருக்கிறது ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றமாக மாற்றிக் கொள்வதும் பெற்றோர்களே தான்.

பிள்ளைகளின் மேல் எதிர்பார்ப்புகளை மட்டும் வைத்திருந்தால் போதுமா? அவர்களுக்கு ஆர்வம் கொடுத்து வழிகாட்டுவது யார்? பிள்ளையை கண்கானிப்பது யார்? பள்ளிக்கூடம் சென்றானா? அல்லது வெளியில் சுற்றுகிறானா? படிக்கிறானா? பிட்அடிக்கிறானா? கட் அடிக்கின்றானா? அவனுக்கு அல்லது அவளுக்கு எதன் மீது அளவுகடந்த ஆர்வம்?அவனுடைய நண்பர்கள் யார்? அதிகமாக எந்த விளையாட்டை விளையாடுகிறான்? இப்படி ஒவ்வொன்றையும் ஆய்வு செய்த பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கவில்லை.

இப்படி எல்லாம் இன்று எனது பிள்ளைகளுக்கு நாளை அவர்கள் பதிவுபோடாத வண்ணம் செயல்படுவதற்கு முயற்சிக்கிறேன்.

அபுதாபியில் அன்சாரியின் சகோதரர் யாரிடமோ விசாரித்து எங்களை பெனியாஸ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு சமையல் வேலைக்கு சேர்த்துவிட முயற்சி செய்தார்.
அந்த பெனியாஸ் என்ற ஊர் யமனிகள் அதிகம் வாழக்கூடிய இடமாக இருந்தது நம்மூர் அரசு காலனிகளைப்போல அபுதாபி மன்னர் அரசு ஊழியர்களுக்கு காலனிகள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேல் கட்டிக் கொடுத்துள்ளார் அங்கு பல வீடுகளில் தமிழ் நண்பர்கள் தான் சமையல்காரர்களாக பணிபுரிகிறார்கள்.அங்குதான் எங்களுக்கும் வேலை கிடைத்தது.
இங்கு எனது முன்னால் நண்பர்களும் பணிபுரிந்ததினால் அவர்களுடன் ஜாலியாக பொழுது போனது.
ஆனால் அங்கு புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்தது அப்படிபட்ட நண்பர்கள் அங்கு குறைவு அதனாலயே அதிக நாட்கள் அங்கு எனக்கு தாக்குபிடிக்கவில்லை.

அங்கிருந்து இன்னும் கூடுதலான சம்பளத்திற்கு அபுதாபி பார்டருக்கு என்னையும் எனது உறவினரையும் ஒரு அரபி அழைத்துச் சென்றார்.

தொடர்வோம்…

Saturday, December 4, 2010

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 - தொடர் 2


இளமைப் பருவம் அதாவது 17 முதல் 21 வயது வரையில் உள்ள இளைஞர்கள், இளைஞிகளிடம் கவனமாக பெற்றோர்கள் இருக்கவேண்டும்; அந்த வயதில் எடுக்கக்கூடிய முடிவுதான் அவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த வயதில் இளைஞர்கள் பெரும்பாலோர் தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்தில் தங்களது பெற்றோர்களுக்கு ஒன்றும்தெரியாது என்ற எண்ணத்தில் மிதப்பார்கள்.

இளைஞிகளோ தங்களைவிட அழகான பெண்கள் இந்த உலகில் யாரும் இல்லை என்ற மனோநிலையில் அடிக்கடி தங்களை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடிமுன் நின்று தங்களின் அழகை இரசித்துக் கொண்டு நிற்பார்கள்.
என்று மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் ஒருமுறை தனது உரையில் கூறினார்.

பெற்றோர்கள் என்செயல்களை கவனிக்க வேண்டிய வயதில் அவர்களிடமிருந்து வெகுதூரத்தில் நான் சம்பாதிப்பு என்ற பெயரில் இருந்துக் கொண்டிருந்தேன்.

இறைவனின் கருணையினால் எனக்கு கிடைத்த நல்ல நட்பும், எனது பெற்றோர்கள் நல்ல சூழ்நிலையில் வளர்த்த வளர்ப்பும், எனது மனோநிலையில் நல்ல சிந்தனைகள் தோன்றிக் கொண்டுடிருந்தன.

அந்த சிந்தனையின் தூண்டுதலே நல்ல நூல்களை படிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டேன்.

பருவ வயது குறும்புகள் நிறையவே என்னிடம் இருந்தது.

ஒரே வீட்டில் என்னுடன் ஹவுஸ்பாயாக சீர்காழியை அடுத்த கோவில்புத்தூரைச் சார்ந்த அன்சாரி என்பவரும் வேலைப்பார்த்தார். நாங்கள் ஒரே வயதுடையவர்கள் அதனாலேயே எங்களுக்குள் அடிக்கடி போட்டிகள் நிறைய வரும்.

ஒருமுறை காலைநேரம் அரபு முதலாழி எங்கள் இருவரையும் அழைத்து காரில் பழங்கள் இருக்கிறது எடுத்துவாருங்கள் என்று அனுப்பிவைத்தார்.இருவரும் சென்று பழங்களை தூக்கிவருவதற்கு முன் ஒரு வாழைப்பழத்தை அன்சாரி சாப்பிட்டார், அதைப்பார்த்த நானும் ஒன்றை சாப்பிட்டேன், மீண்டும் அவர் இன்னொரு பழத்தை சாப்பிட்டார், உனக்கு இரண்டா நானும் சாப்பிடுகிறேன் என்று இப்படி போட்டி போட்டு அந்த இடத்தில் ஒருடஜன் பழத்தை சாப்பிட்டு முடித்தோம்.

பழங்களை கொண்டு வந்து வைத்ததும் அரபி எங்களை பார்த்தார். ஒருடஜன் வாழைப்பழம் குறைகிறதே என்று கேட்க; அன்சாரி என்னை கையை காண்பிக்க, நான் அவரைக் காண்பிக்க, அரபி எங்கள் இருவரையும் முறைக்க, இப்படி உண்பதிலிருந்து, உடுத்துவது வரையில் எங்களுக்குள் போட்டிகள் நிகழ்ந்துக் கொண்டே இருந்தது.

ஒருநாள் இரவு சாப்பாட்டுக்குப் பின் பழங்கள் சாப்பிடும் போது போட்டி வளர்ந்து ஒரு காட்டன் ஆரஞ்சு பழமும் காலியாகிவிட, காலையில் அரபுக்காரர் சாப்பிட்ட தோல்களை எல்லாம் வரிசையாக பரப்பி வைத்து “சூஆதா” என்று அரபுமொழியில் என்னஇது என்று கேட்க, நாங்கள் இருவரும் காட்டிலிருந்து பிடித்துவந்த குரங்கு குட்டியைப்போல பேந்த பேந்த விழிக்க, அந்த நேரத்தில் எனது நண்பன் அத்திக்கடை சிஹாபுதீன் அங்கு வர, அவனைக் கூப்பிட்டு இதோ பாரு உனது நண்பர்கள் எப்படி சாப்பிட்டு இருக்காங்க பாரு என்று காண்பிக்க..

டேய்! எனக்கு வெட்கமாக இருக்குடா! என்று என் நண்பன் சொல்ல, எல்லாம் அன்சாரியினால வந்துச்சு; நான் ஒன்னு சாப்பிட்டா அவன் இரண்டு சாப்பிடுகிறான், அவன் ரெண்டு சாப்பிட்டானேன்னு நானும் ரெண்டு சாப்பிட்டா அவன் மூனு சாப்பிடுகிறான் என்று நண்பனிடம் விளக்கம் கொடுக்க, அவன் எங்கள் இருவரையும் திட்ட இப்படியே திண்டிங்கன்னா சம்பளம் கொடுக்க மாட்டான் ஜாக்கிரதை என்று எச்சரித்தான்.

உணவு சமைப்பதில் ஒருநாள் நானும் ஒருநாள் அன்சாரியும் செய்யவேண்டும் இது அரபுகாரரின் கட்டளை.யார் சமைக்கிறார்களோ அவர் தான் சாப்பாட்டை பறிமாற வேண்டும். இந்த பறிமாற்றத்தில் அரபுகளுக்கு வைப்பதற்கு முன்னாடியே ஒருதட்டையில் சாப்பாட்டை வைத்து நல்ல துண்டுகளாக கோழி வருவல் அல்லது மீன் வருவல் என்றால் சோற்றுக்கு அடியில் மறைத்து ஒரு துண்டும் சோற்றுக்கு வெளியில் ஒரு துண்டும் வைப்பது எங்கள் இருவரின் அப்போதைய போட்டிச் செயல்.

ஒருநாள் மதியம் நான் சமைத்த மீன் வருவல். முன் சொன்னதுபோல சோற்றுக்கு அடியில் ஒரு துண்டும் சோற்றுக்கு மேல் ஒருதுண்டும் வைத்து எடுத்து போய் எங்கள் ரூமில் அன்சாரிவைத்துவிட்டு வர வேலைகளை முடித்துக் கொண்டு நாங்கள் இருவரும் சாப்பிட செல்ல எனது தட்டையில் சோற்றுக்கு வெளியில் வைத்த மீன் துண்டு காணமல்போக அன்சாரியிடம் கேட்க எனக்கு தெரியாது என்று சொல்ல அவன் தட்டையை பரிசோதிக்க அவன் கோபப்பட அந்த பதினெட்டு வயதில் நாங்கள் இருவரும் சோற்றுதட்டையுடன் கட்டி புரல சப்தம் கேட்டு அரபுகள் ஓடி வர ஒன்னுமே நடக்காத மாதிரி நாங்கள் மேல்மூசு;ச கீழ்மூச்சு வாங்கி நிற்க அங்கு இரைந்து கிடந்த சோற்றைப் பார்த்துவிட்டு அரபுகள் எங்களை திட்ட என் தட்டையில் வைத்த மீன் வருவளை பூனை தூக்கிச் சென்ற செய்தியை அரபு கிழவி சொல்ல நாங்கள் ஒருவரை ஒருவர் கடிந்துக் கொள்ள இப்படி சென்ற அந்த இளமைக் காலத்தை நான் எப்படி மறப்பேன்.

இதுமட்டுமல்ல இன்னும் இருக்கிறது அன்சாரிக்கு சிலவை உண்டாக்க வேண்டும் என்று எனது நண்பன் சிஹாபுதீனிடம் கூற ஆமா எப்படி வைப்பது என்று யோசிக்கையில் அவனுடைய தம்பி ஊரிலிருந்து துபாய் வர இருந்த நேரம் அப்போதெல்லாம் நம்தமிழ்நாட்டு கிராமங்களில் தபால் ஆபிசைத் தவிர தொலைபேசி வேறு எங்கும் இருக்காது. அந்த சமயங்களில் டெலிகிராம் தந்தி கொடுப்பது வழக்கம்.

துபாயிலிருந்து ஊருக்கு செல்வதாக இருந்தாலும் வருதாக இருந்தாலும் நம்மை அழைப்பதற்கு தந்திக் கொடுப்போம் அதைப் பார்த்துதான் ஏர்போர்ட் சென்று அழைத்து வருவது வழக்கம்.

அன்சாரியின் தம்பி துபாய் வந்து இறங்கி ஏர்போரட்;டிலிருந்து அன்சாரி வேலைப்பார்க்கும் அரபு வீட்டுக்கு டெலிபோன் செய்வதை போல சிஹாபு இடம் நீ டெலிபோனில் பேசனும் என்று கூறி செட்டப் செய்தோம்.

மதியம் 3 மணிக்கு எங்களுக்கு ஒய்வு நேரம் அந்த நேரத்தில் சிஹாபுதீன் போன் செய்து அன்சாரியிடம் அவன் தம்பி பெயரைச் சொல்லிப் பேச அன்சாரி பதட்டத்துடன் ஏர்போர்ட்டிலேயே இரு கொஞ்ச நேரத்தில் நான் வந்திடுகிறேன் என்று கூறி பரப்பரப்பாக என்னிடம் செய்தியைச் சொல்லிவிட்டு வா ஏர்போர்ட் போகலாம் என என்னை ஆர்வத்துடன் கூப்பிட சரி சிஹாபுதீனையும் அமைத்துப்போவோம் என்று நான் சொல்ல பக்கத்து தெருவில் வேலைப்பார்க்கும் சிஹாபுதீனை அழைத்துக் கொண்டு டெக்ஸி பிடித்து ஏர்போர்ட் வரும் வரையில் நானும் சிஹாபுதீனும் ஒருவரை யொருவர் பார்த்து சிரித்துக் கொண்டு வந்துச் சேர்ந்தோம்.

நாங்கள் ஏன் சிரிக்கின்றோம் என்று யூகிக்க முடியாத அன்சாரி உண்மையாகவே தனது தம்பி ஏர்போர்ட்டில் நிற்பதாக எண்ணி அங்கும் இங்கும் விமான நிலையத்தில் அலைந்ததைப் பார்த்த எங்களுக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது.

அந்த நேரத்தில் ஏர் இந்தியா விமானமும் பம்பாயிலிருந்து வந்திருந்தது. ஒருமணி நேரத்திற்குப் பின் அன்சாரி ஒரு நபருடன் எங்கள் அருகில் வந்தான்....

தொடர்வோம்......

Wednesday, December 1, 2010

எனக்கு 30 அமீரகத்துக்கு 39

டிசம்பர் 2 இது ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அமீரகத்தின் தேசியதினநாள் ஆனால் எனக்கும் அமீரகத்திற்கும் உறவு ஆரம்பித்தநாள் 1980 டிசம்பர் 2 அப்போது எனக்கு வயது 17.

கல்லூரிக்குள் பதிக்க வேண்டிய கால்களை பாலைவனத்தில் பதித்த அந்த வயதில் என்னிடம் எது இருந்திருக்கும் என்று இன்று நினைவுப் படுத்திப் பார்க்கின்றேன்.

அன்னை ஊட்டிய அமுதத்துடன் அன்னை மொழியாம் தமிழ்மொழியைத் தவிர ரொம்பவும் குறைவான ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு எந்த தைரியத்தில் வந்தேன் என்பது இன்னும் தெரியவில்லை.

வீட்டுவேலைக்கு பெண்கள் மட்டுமல்ல நான் அமீரகம் வந்தபோது என்னைப்போன்ற தமிழ் இளைஞர்கள் பெரும்பாலோர் ஹவுஸ்பாய்கள் தான். இதை இங்குபதிவு செய்வதில் நான் வெட்கப்படவில்லை.

முன் அனுபவமே இல்லாத எனக்கு இந்த வேலையை கற்றுக் கொள்வதற்கு கஸ்டமாக இருக்கவில்லை வேலையுடன் அரபு மொழியையும் கற்றுக் கொண்டேன்.

துபாய் விமானநிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது கண்ணெதிரே தெரிந்த பெரிய கட்டிடம் டிரேட் சென்டர்.(இன்று அது சிறிய கட்டிடமாக ஆகிவிட்டது) எங்கு பார்த்தாலும் மணல் திட்டுகள்.


இந்த 30 ஆண்டுகளில் அமீரகத்தின் வளர்ச்சி அபரிமிதமானது.பாலைவனத்தின் மணல் சோலைவனமாக சொர்க்க பூமியாக மாறிப்போனது.இந்த மாற்றத்திற்கு கடுமையான உழைப்பை இந்தியர்களைப் போல பலநாட்டவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

பாலைவனம் மட்டும் சோலைவனமாக மாறும்போது அதைமாற்றியவர்களின் வாழ்க்கையும் சோலைவனம்தான்.

எத்தனையோ வீடுகளில் கன்னியர்கள் கரையேறினார்கள் பலர் கடனிலிருந்து விடுதலையடைந்தார்கள் வாடகை வீடு சொந்த வீடானது வாகனங்கள் சொந்தமாகின விளைநிலங்கள் வீட்டுமனைகளாகின வங்கிக் கணக்குகள் அதிகரித்தன வாழ்க்கையில் ஆடம்பரங்களும் ஆர்பரித்தன இத்தனையும் இந்த வளைகுடாவிற்குள் நுழைந்தவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல் அன்னிய சிலவானி அதிகரிப்பில் அவர்களின் நாடுகளும் வளம்மடைந்துக் கொண்டிருக்கிறது.

இந்த முப்பது ஆண்டுகளில் என் நிலை என்ன?
கல்லூரி கற்றுத்தரவேண்டிய பாடங்களை பாலைவனம் கற்றுத்தந்தது.
ஹவுஸ்பாய் வேலை ஆனால் அதுதான் எனக்கு கற்றலின் ஆர்வத்தை கற்றுத்தந்தது எனக்குள் தேடலை ஏற்படுத்தியது தாய்மொழியை தழுவதற்கு தடம் அமைத்தது.


அமீரகத்தில் 1980-ல் அறிமுகமான முதல் நண்பன் அத்திக்கடை சிஹாபுதீன் இவனிடமிருந்து கற்றுக் கொண்டது பொறுமை பெற்றுக் கொண்டது நட்பு. அவனுடைய நண்பன் அஜீஸ்ரஹ்மான் சென்னைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான் இவன் நட்பை கடிதங்களில் வளர்த்து வளமாக்கினேன்
இவர்களின் தொடர்புகள் இன்றுமிருக்கிறது.

ஹவுஸ்பாய்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பண்டிகையாய் இருக்கும் அன்று மதியத்திற்கு பிறகு அரைநாள் விடுமுறையுடன் பத்து திரஹம் சிலவுக்கு தருவார்கள் நண்பனுடன் அல்சாப் தியேட்டரில் தமிழ்படம் பார்க்க ஆர்வத்துடன் செல்வோம். வரிசையில் நின்று டிக்கேட் எடுக்கும் பழக்கும் 3ஜி காலத்திற்குள் வந்தும்கூட அன்றும் மரபு மாறவில்லை.

நைப்ரோட் தமிழ் பஜாரில் மாலை 6.00 மணியிலிருந்து திருவிழா கூட்டம்போல் எங்குப் பார்த்தாலும் பிரமச்சாரிகளின் கூட்டமும் கூச்சலுமிருக்கும் மொத்த இந்தியாவையும் வெள்ளிக்கிழமை நைப் பஜாரில் கண்டுகளிக்கலாம்.

இரவு பத்து மணிக்குள் மீண்டும் ஹவுசுக்குள் பாய்கள் சென்றுவிடவேண்டும் நண்பர்களுடன் ஊர்கதைகளை ஒவ்வொருவரும் பறிமாறிக் கொள்வோம் ஊரில் இருக்கும் நண்பர்களின் கடிதங்கள் தங்களையும் ஹவுஸ்பாய்களாக அழைத்துக் கொள்ள வேண்டுவார்கள் விசாவிற்கு பேரம்பேசப்பட்டு வியாபாரம் நடக்கும்.

படிக்க வேண்டிய 17 18 வயது நிரம்பிய இளைஞர்கள் பறப்பதற்கு ஆசைப்பட்டு ஹவுஸ்பாய் வேலைகளில் அகப்பட்டு அவதிப்பட்டவர்களின் கதைகள் ஏராளம்.

அரபிகளின் அடக்கு முறைகளும் மனிதாபிமான மற்ற செயல்முறைகளும் சிலருக்கு முதலாழியாக வாய்த்திருக்கிறது அவர்களின் கதைகளைக் கேட்டால் கண்களில் கண்ணீரல்ல செந்நீர் வரும்.

ஹவுஸ்பாய் வாழ்க்கையில் எனது ஒய்வுநேர பொழுதுபோக்கு புத்தகம் வாசித்தலாக இருந்தது வார இதழ்களை தவறால் வாசிப்போம் சில நேரங்களில் சிறுவயதில் அம்மா சொன்ன கதைகளை நினைவுப் படுத்தி எழுதுவேன்.

அந்த எழுத்துப்பழக்கம் எழுத்தாளனாகவேண்டும் என்ற எண்ணத்தை துளிரவிட்டது.1979 – 80 களில் தமிழகத்தில் பெரும்பாலான இஸ்லாமிய இல்லங்களில் டேப்ரிக்காடரில் கிஸாக்கள் ஒலித்துக் கொண்டிருந்தது இரவு நேரத்தில் அந்த கிஸாக்களை அம்மாவுடன் கேட்பேன் அந்தத் தருணங்களில் மனம் பதிவு செய்த கதைகளை நினைவுப் படுத்தி கதைகளாக எழுதினேன்.

1984 –லில் டெலிபோன்டைரி என்ற நாவலை 140 பக்கங்களில் எழுதி புத்தகமாக்கி துபாயில் தமிழ் கடைகளில் விற்பனைக்கு போட்டேன் அதற்கு விளம்பரம் செய்யவேண்டி அல்சாப் தியேட்டரில் சிலேடு போட்டேன்.

இந்த நாவல் பல நண்பர்களை அறிமுகப்படுத்தியது.எல்லா தரப்பு நண்பர்களுடன் நட்பு இருந்தாலும் மனம் எல்லா நட்புகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருமுறை வெள்ளிக்கிழமை தமிழ்பஜாரில் ஒருநபர் கைகளில் சில புத்தகங்களை வைத்துக் கொண்டு நின்றார் அது என்கண்களை உருத்தியது அவரிடம் சென்று அந்த நூல்களை எங்கு வாங்குனீர்கள் என்று கேட்க ஊரிலிருந்து வரவழைத்தேன் என்றார் படிப்பதற்கு தருகிறீர்களா? என்று கேட்டதும் என்கையில் உள்ள புத்தகங்களை வாங்கிக் கொண்டு கொடுத்தார் அது பெரியவர் ராம்மூர்த்தி என்பவர் எழுதிய மனமே நீவா என்ற நூல்.

இந்த நூல் என்னிடம் ஒரு மாற்றத்தை தேடலை கொடுத்தது.

குறிப்பு – முப்பதாண்டு அமீரக வாழ்க்கை அனுபவங்களை தொடராக தொடர்கிறேன்.