உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, January 17, 2010

தமிழ்மணம் 2009 விருதும் அமிதமான சந்தோசமும்

பிரபலமான தமிழ்மணம் என்ற இணையதள வலைப்பதிவு இதழ் பலராலும் எழுதப்பட்ட 7000 பதிவுகளை உள்ளடக்கி சராசரியாக தினம் 350 இடுக்கைகளை பல நாடுகளிலிருந்து தமிழ் எழுத்தார்வலர்களால் எழுதப்பட்டு அதை அனைவராலும் வாசிக்கப்பட்டும் வருகிறது.

ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தமிழ்மணத்தில் எழுதப்பட்ட பதிவுகளில் அந்தாண்டின் சிறந்த பதிவு என வலைப்பதிவர்களாலும் வாசகர்களாலும் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுத்த பதிவுகளை முதல் இரண்டு என்ற பரிசின் அடிப்படையில் அறிவிக்கப்படுகிறது.

தமிழ்மணம் 2009 விருது இந்த ஆண்டு நடந்தேறியதில் மொத்தம் 16 பிரிவுகளில் 500 க்கும் அதிகமான இடுக்கைளுக்கு மேல் கலந்துக் கொண்டுள்ளன. இதில் முதல் கட்ட வாக்கெடுப்பு பதிவர்களுக்காக மட்டும் வைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு பிரிவுக்கும் பத்தும் பன்னிரெண்டும் என்ற கணக்கில் தேர்வு செய்யப்பட்டது.

இந்த தேர்வில் நானும் கலந்து எனது இரு கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தேன்.
முதல் கட்ட வாக்கெடுப்பில் ஒரு கட்டுரை மட்டும் பொருளாதாரத்தைப் பற்றி நான் எமுதிய தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும் என்ற தொடர் கட்டுரை மட்டும் வலைப்பதிகளால் வாக்குகளிட்டு தேர்வு பெற்றது.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் வாசகர்களும் பதிவர்களும் ஒருங்கிணைந்து வாக்குகளித்து எனது பொருளாதார கட்டுரைக்கு முதல் பரிசை பெற்று தந்துள்ளார்கள். மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது.

அமீரகத் தமிழ் பதிவர்களில் நகைச்சுவை பிரிவில் முதல் பரிசைப் பெற்ற நண்பர்கள் குசும்பன் ஆதவன் இவர்களும் இடம் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

எழுத்துலகில் நான் பிரவேசிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
ஒன்று படிப்பியலும் பல நூல்களும் பல எழுத்தாளர்களின் எழுத்துக்களும் எனக்குள் என்னை தேடவைத்தது.
இரண்டு அந்த தேடுதலில் கிடைத்தவர்கள்தான் எனது ஆன்மீக குரு. அவர்கள் என்னை எனக்கு காண்பித்து தந்தார்கள்.

எழுதுகின்றளவுக்கு கல்லூரிவாசம் இல்லை என்றாலும் ஏதோ திக்கி திணறி முட்டி மோதி எதையாவது எழுதவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றியமைத்த பாதையில் இதைத்தான் எழுதவேண்டும் என்ற ஒரு கோட்பாட்டை எனக்குள் உருவப்படுத்தியது என்றால் அது என் குருவிடம் நான் கற்றுக் கொண்ட ஞானம்.
என்னை இவ்வுலகிற்கு ஞானியாக காண்பிப்பதற்குகாக அல்ல. எடுத்த பிறவியில் மனிதனாக வாழ்வதற்கு.

பத்திரிக்கை உலகை நம்பிக்கொண்டிருந்த காலங்களில் காதலிக்கு கடிதம் கொடுத்துவிட்டு பதில் வருமா வராதா என்று பதட்டத்துடன் காத்திருப்பதுபோல் பத்திரிக்கையில் பிரசுரமாகுமா ஆகாதா என்ற பரிதவிப்பு ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஏற்படுத்தியது.

இன்று இணையதளங்களில் படைக்கப்பட்ட படைப்புகளை பத்துநிமிடங்களுக்குள் பத்தாயிரம் கண்கள் மேய்ந்து விடுகிறது அறிவு ஆய்ந்துவிடுகிறது. இணையதளத்தில் இலவசமாக கோகில் வலைப்பூக்கள் என்ற நிலத்தை தந்ததால் இன்று பலரோடு நானும் அதில் எழுத்து பயிர்களை அறுவடை செய்ய முடிகிறது.

வலைதளத்தின் வருகையால் இன்று பலரும் பல நாடுகளிலிருந்து எழுத்துலகில் வெகு இலகுவாக தூரங்களை கடந்து தமிழ் அழுதை ஆர்வத்துடன் அருந்துகிறார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலரும் பல விதமான கருத்துக்களை எழுதுகிறார்கள்.பலர் எழுத்துப் போர்களை நடத்துகிறார்கள்.
யாருக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவரவர்களுக்கு அவரவர்கள்தான் கட்டுபாடாக எழுதவேண்டும் இருக்கவேண்டும் என்ற நிலையில் இணையதள வலைதளத்தின் வளர்ச்சி இருந்துவருகிறது.

ஒவ்வொரு வலைப்பதிவர்களையும் வசிகரித்த எழுத்துக்களுக்கு அவரவர்கள் எழுதியவர்களை ஊக்கப்டுத்தும் முகமாக விருதுகளையும் பின்னூட்டங்களில் பாராட்டுகளையும் கொடுத்துக் கொண்டிருப்பது எழுத்துலகின் ஆரோக்கியத்தை காட்டுகிறது.

எனது வலைதளத்தில் சுற்றுலா கட்டுரைகளை தொடராக எழுதி வந்தேன் அதன் நிமித்தம் உலகம் சுற்றும் வாலிபன் என்ற முதல் விருதை அன்பிற்குரிய நண்பர் அமீரகப்பதிவர் நாஞ்சில் பிரதாப் வழங்கி என்னை உற்சாகமூட்டியதை நினைவுகூர்ந்து நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

வானலை வளர் தமிழ் அமைப்பின் மூலம் கவிஞராக அறிமுகமாகி என் இதயத்தில் இடம் பிடித்த அமீரகப்பதிவர்களின்
தளபதி குறும்பட இயக்குனர் கீழைராஸா எனக்களித்த இன்ட்ரஸ்டிங் பிளாக்விருதும் என்னை உற்சாகப்படுத்தியது என்று கூறுவதில் பெருமையடைகிறேன். நண்பர் கீழைராஸாவிற்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

கவிஞர் அன்புடன் மலிக்கா இவரும் வானலையில் வளம் வரும் நீரோடை. ஐந்து நபர்களுக்கு வழங்கியதில் எனக்கும் “2009 பிளாக்கர் அப்ரிக்ஸன் விருதை அளித்து ஊக்கமளித்த அன்பு சகோதரி மலிக்கா அவர்களுக்கு மனமிக்க நன்றியை உரித்தாக்குகிறேன்.

பரிசுப் பெற்ற கட்டுரையை எழுதுவதற்கு தூண்டுதல் தந்த பதிவர் பராரி அவர்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

இணையதள இதழான தமிழ்மணம் பல ஆண்டுகளாக வலைதள பதிவர்களை ஒருங்கிணைத்து எழுதுபவர்களை ஊக்கவித்து வருவது வழக்கமாக கொண்டிருக்கிறது. தமிழுலகிற்கு ஆற்றிவரும் தொண்டாக செய்துவருகிறது. இந்த ஆண்டில் நானும் போட்டியில் பங்கெடுத்து எனது படைப்பிற்கு பதிவர்களும் வாசகர்களும் வாக்களித்து முதல் இடத்தை பெற்று தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.அத்துடன் தமிழ்மணம் குழுவினருக்கும் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

சிங்கை நாதனுக்கு இதயம் தந்த நல்லுள்ளங்கள் நிறைந்த வலைஉலகில் நானும் இருக்கிறேன் என்று எண்ணும்போது மனம் நிறைகிறது.

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கூறி பின்னூட்டமிட்டவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும் நன்றி !நன்றி ! நன்றி!

முதல் பரிசுப் பெற்ற “தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்” தொடர் கட்டுரையை நூலாக அச்சில் வெளியிட உள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

இந்த இடுக்கையை வாசித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

Wednesday, January 13, 2010

பாக்ஸர் நாயின் காதல் பிரிவு

பிராணிகள் வளர்ப்பதில் மனிதர்களில் பலருக்கு மித்த ஆர்வம். செல்லப் பிராணியாக நாய் பூனை அதிகமானவர்களின் இல்லங்களில் அவர்களின் உள்ளங்கங்களில் வாழ்ந்துக் கொண்டு வருகிறது.

பெற்ற பிள்ளையை பேணுவதைப்போல வீட்டு பிராணிகளை சிலர் பேணி வளர்க்கிறார்கள். பிராணிகள் எப்பவுமே நன்றி உள்ளவைகள். அவைகளிடம் நாம் அன்பு செலுத்தி விட்டால் நம்மை விட பல மடங்கு அன்பை நம்மேல் பொழிந்துக் கொண்டிருக்கும்.

நம் வீட்டில் வளர்கக் கூடிய பிராணிகள் பெருசுகளுக்கு பிடிக்காமல் எங்கேயாவது கொண்டுப் போய் விட்டு வரச் சொல்வார்கள். நாமும் சில மைல் தூரத்தில் விட்டு வருவோம் மறுநாள் நம் வீட்டுவாசலில் வந்து நிற்கும். அதற்கு எப்படி வழி தெரிந்தது என்று நானும் சின்ன வயதில் திகைத்திருக்கிறேன்.
மோப்பம் பிடித்தே நம் வீட்டுக்கு வந்துவிடும்.

நான் வளர்த்த நாய்குட்டியைப் பற்றி நன்றி உள்ள ஜீவன் என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன் எழுதி இருந்தேன். வளர்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவம். இந்த இடுக்கை என்னுடன் பணிப்புரியும் சிரியா நாட்டைச் சார்ந்த ராமி ஜப்ரியின் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை உங்களுக்கு பகிரப்போகிறேன்.

எனக்கு அவருடன் கிட்டதட்ட இருபது வருடகாலத் தொடர்பு இருக்கிறது அதனால் அவருடைய அனுமதி பெறாமலேயே அவர் வளர்த்த பிராணிகளைப் பற்றி எழுதப்போகிறேன்.

15 ஆண்டுகளுக்கு முன் அவரும் அவருடைய மனைவியும் பூனை வளர்த்து வந்தார்கள். ஒரு பூனையின் மீது இருவர் காதல் கொண்டனர். இருவரும் மாறி மாறி அந்த ப+னைக்கு வயிற்றை புடைக்க வைப்பார்கள். அதன் வாழ்நாளில் பசி என்பதே என்ன என்று தெரியாத அளவுக்கு உணவு கொடுப்பார்கள்.

சூப்பர் மார்கெட் சென்றால் வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவதை விட்டுவிட்டு பூனைக்கு எது பிடிக்கும் என்ன கொடுக்கலாம் என்றும் பூனையைப் பற்றிய நூல்கள் என்ன வந்திருக்கிறது என்றும் தேடுவார்கள். அந்த பூனையும் இந்த இருவர்களின் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தது.

ராமி தம்பதியனருக்கு குழந்தை இல்லை கணவனும் மனைவியும் பணிப்புரிகிறார்கள். இருவருமே தங்களின் பணி முடிந்ததும் அங்கு இங்கென்று சுத்தாமல் பூனைக்காக வேண்டி வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.

ஒருநாள் கணவன் மனைவிக்கிடேயே பிரச்சனை வந்தது. அந்த பிரச்சனை வளர்ந்து விவாகரத்து வரை போனது. கணவனும் மனைவியும் பிரியக் கூடிய தருணம் வந்தபோது பூனை யாரிடம் இருப்பது என்ற கேள்வி அவர்களுக்குள் எழவே மனைவி தன்னிடம் தான் இருக்கவேண்டும் என்று போராடினார். கணவரும் போராடினார். இந்த பிரச்சனை அவர்களின் உறவினரிடம் வந்தது.
பிறந்த குழந்தை யாரிடம் வளர்வது என்ற சர்ச்சையைத்தான் நாம் பார்த்திருக்கிறோம் இங்கு பூனை யாரிடம் வளரவேண்டும் என்ற சர்ச்சை வளர்ந்தது. மனைவியிடம் ஒரு வாரமும் கணவரிடம் ஒரு வராமும் வைத்துக்கொள்ளும்படி தீர்ப்பு கூறப்பட்டது.

ஒரு வாரம் என்பது இருவருக்குமே மிகுந்த மனக்கஸ்டத்தை கொடுத்தது. நாளடைவில் மனைவி அந்த பூனையை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டார்.
இதை ராமியால் தாங்க முடியவில்லை அதை பெரிய இழப்பாக கருதினார். அந்த சமயத்தில் அவருடைய நண்பர் கூறிய ஆறுதலும் ஒரு நாய்குட்டியை வாங்கி நீ தனியே வளர்த்துக் கொள் என்ற வார்த்தையும் அவருக்கு பலமாக இருந்தது.

மறுநாளே ஜெர்மனி நாட்டைச் சார்ந்த “பாக்ஸர்” இன குட்டியை 25000 ரூபாய்க்கு வாங்கி வந்தார். இந்த சின்ன குட்டி இவ்வளவு விலையா ? என்றேன் இதன் வளர்ச்சி பெரிதாக இருக்கும் என்றார். அந்த சின்னக்குட்டி நான் பணிப்புரியும் அலுவலகத்தில் அங்கும் இங்கும் அழைந்தது. நான் தூக்கி மடியில் வைத்துக் தடவிக்கொள்வேன்.அதனுடைய ரோமம் மிருதுவாக இருந்தது. கருப்பும் காவியும் கலந்த நிறத்தில் அழகாக இருந்தது. அந்த குட்டிக்கு ரோக்கி என்று பெயரிட்டார்.

சிலமாதங்கள் கழித்து அந்த நாயை காண ராமியிடம் கூறினேன். ஒரு தினம் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. ஒரு கன்னுக்குட்டி அளவு வளர்ந்திருந்தது. கழுத்திலே பட்டைக்கட்டி வார் போட்டிருந்தார். முன் கால் இரண்டையும் தூக்கி அவரின் இடுப்பில் வைத்து அவரின் மோவாயை மோப்பிக்கும். அந்த தருணத்தில் ஆறடி ஆள் நிற்பது போல் காட்சி அளிக்கும்.அதன் வால் வெட்டுப்பட்டதைப் போல் சிறியதாக இருந்தது. “பாக்ஸர்” இன நாய்களின் வால் சிறிதாகவே இருக்கும்.

என் அலுவலகத்திற்கு சில நேரங்களில் ரோக்கியை அழைத்து வந்தாலும் அது ராமியுடன் தான் நிற்கும் நாங்கள் அதன் அருகில் செல்வது கிடையாது அதன் தோற்றமும் வளர்த்தியும் எனக்கு பயத்தை அளித்தது. ஒரு முறை ராமியிடம் நீ மறைவாக இருந்துக் கொள் ரோக்கி என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்றேன். அதுபோல மறைந்துக் கொண்டார். ஆனால் ரோக்கியோ அங்கும் இங்கும் அலைமோதியது ராமியைத்தேடி எல்லா இடத்திலும் அழைந்து இறுதியாக கழிவறை கதவளை சுறண்ட ஆரம்பித்தது. ராமி அங்குதான் மறைந்துக் கொண்டிருந்தார். அவரைப் பிரிந்து ரோக்கியாலோ ராமியாலோ இருக்க முடியாது என்ற நிலை அவர்களுக்குள் வளர்ந்து வந்துக் கொண்டிருந்தது.

ஒருமுறை ராமியின் தாயார் சிரியாவிலிருந்து வந்திருந்தார்;. இவர் நாய் வளர்ப்பது அவருக்கு பிடிக்கவில்லை. நேரடியாகவே ராமியிடம் கூறினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உன் மீது புகார் சொல்கிறார்கள் நீ நாய் வளர்ப்பது சரி அல்ல அதை விற்றுவிடு அல்லது எங்காயவது போய் விட்டு விடு என்று கூற ராமிக்கு வந்ததே கோபம் நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு என்று கோபமாக பேசி விட்டு அலுவலகம் வந்து விட்டார். சில மணி நேரங்கழித்து ராமியின் தாயார் தொலைபேசி செய்து உனது ரோக்கி எங்கோயோ ஒடிப்போயிடுச்சி என்று சொன்னதும் அலுவலகத்திலிருந்து அவசரமாக காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினார்.
அங்கே அவருடைய தாயார் மட்டும் ரொம்பவும் சோகமாக நின்றார்கள். ராமி நம்பிவிடுவார் என்று.

என்ரோக்கியை எங்கே விட்டே என்று காட்டுகத்து கத்தினார். அந்த கட்டிடத்தில் தங்கிருந்த அத்தனை பேரும் இவரின் பிளாட் வாசலில் கூடி விட்டார்கள். தான் யாரிடம் பேசுகிறோம் என்றுக் கூட தெரியாமல் தன் தாயை வாய்க்கு வந்தபடி பேசினார். இந்த சூழ்நிலையை அவரின் தாயார் எதிர்பார்க்கவில்லை தன் மகன் ரோக்கியின் மீது வைத்திருக்கும் வெறித்தனமான அன்பைக் கண்டு பயந்தே விட்டார். இதற்கு மேல் மூடிமறைத்தால் இவன் ஏதாவது செயயக் கூடும் என்பதை உணர்ந்தவராய் அவரின் உறவினர் வீட்டில் அடைத்து வைத்திருக்கும் உண்மையைக் கூறினார்.

அந்த நிமிடமே தனது தாயை அழைத்துச் சென்று ரோக்கியை மீட்டு கொண்டு வந்தார். மறுநாளே தன் தாயை சிரியாவிற்கு அனுப்பி விட்டார். ஓராண்டு காலம் கழித்து விடுமுறைக்காக சிரியா செல்வதற்கு ராமி தயாரானார். அந்த சமயம் ரோக்கியை கூடவே அழைத்துப்போக விருப்பமில்லை. தனது தாயார் ஏதாவது செய்து விடுவார் என்ற பயத்தில் எந்த நண்பர்களும் அதை வைத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லாததினால் நாய்களை பராமரிக்கும் பள்ளியில் 15 தினங்களுக்கு விட்டுச் செல்ல விசாரித்தார்.

நாய் பராமரிக்கும் பள்ளியில் ராமி அணிந்திருக்கும் துவைக்காத உடையுடன் நாயை ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். அந்த உடையை நாயுடன் வைத்திருப்பார்கள். அந்த உடையிலிருந்து வரும் வாடையை நாய் முகர்ந்து தனது எஜமான் பக்கத்திலேயே இருப்பதாக எண்ணிக் கொள்ளும் என்றும் விளக்கம் கொடுத்தார்கள்.

அதன்படி செய்து விட்டு சிரியா சென்ற ராமிக்கு ஒரே வாரத்தில் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. ரோக்கி இறந்து விட்டது என்று நாய் பராமரிக்கும் பள்ளியில் கூறியதும் அடுத்த சிலமணி நேரங்களில் பறந்து வந்தார்.

ரோக்கியை விட்டு சென்றதும் அது உணவருந்த வில்லை ரொம்பவும் சோகத்துடனே இருந்தது. மற்ற நாய்களுடன் பழகவிட்டும் அது தனித்தே இருந்தது. ஒவ்வொரு நாளும் அதனுடைய செயல்பாடுகள் குறைந்து இறந்து விட்டது என்று மருத்துவ சான்றிதழ் கொடுத்தார்கள்.

தன் எஜமானிடம் கொண்ட காதலால் ரோக்கிக்கு அவர் பிரிவை தாங்கும் சக்தியை இழந்து விட்டது.

ராமி கதறினார் அவருடைய துக்கத்தை யாருடைய ஆறுதலினாலும் மீளவைக்க முடியவில்லை. பல மாதங்களுக்கு பின் இன்றும் ரோக்கியின் புகைப்படத்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இறந்தது நாய்தானே என்று அவரால் எளிமைப் படுத்த முடியவில்லை . அவ்வபோது இந்த சம்பவங்களை அவர் மறந்திருந்தாலும் இந்த இழப்பு பெரிய அளவில் அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Monday, January 11, 2010

குளிர் காலச்சுற்றுலா


அமீரகம் துபாயிலிருந்து சுமார் 125 கிமீ தொலைவில் உள்ளது அல் அய்ன் என்ற சிறிய நகரம். இது அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நகரத்தில் சுற்றுலாவினர்களை கவரும் வண்ணம் பல இடங்கள் இருக்கிறது. அல்அய்னில் பிரதானமாக விளங்குவது ஜிபில் ஹபீட்(jebel hfeet) என்ற மலையடிவாரம். இந்த மலையின் உயரம் சுமார் 4000 அடி 21 வளைவுகள் 11.7 கிமீ தூரம். இந்த மலையின் உச்சியில் ஸ்டார் ஹோட்டல் உள்ளது. சுற்றுலா பயணியர்களின் வாகனங்களை சுமார் 1000 நிறுத்துவதற்கு செப்பனிட்டு அழகுப் படுத்தியிருக்கார்கள். இந்த மலையின் உச்சியில் நின்றுக் கொண்டு அல் அய்ன் நகரமுழுவதையும் காணமுடிகிறது. ஓமான் நாட்டு எல்லைகளையும் காணலாம்.

இந்த மலை அடிவாரத்தின் அடியில் ஒரு பசுமை கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கிராமத்தின் அழகே அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஓடைகள். இது வெண்ணீர் ஓடை ஆம். நான்கு புறமும் மலைகள் நடுவில் இந்த பசுமை கிராமம். வெண்ணீர் ஓடையில் கால்களை நனையவிட்டு அமர்ந்து ஓய்வெடுக்கலாம். குழந்தைகள் இந்த ஓடையில் விளையாடுவார்கள். சிலர் சறுக்கி விழுந்தும் இருக்கிறார்கள்.

நண்பர் சிராஜ்

இந்த வெண்ணீர் இயற்கையாகவே பூமியிலிருந்து வருகிறது. இந்த வெண்ணீரில் குளிப்பவர்களுக்கு மூட்டுவலி குறையும் என்று சில வயதானர்கள் கூறுகிறார்கள்.
குளிப்பதற்காக ஆண் பெண் தனித் தனிநீச்சல் குளங்கள் அமைத்து வைத்துள்ளார்கள். 5 திரஹம் குளியலுக்கான கட்டணம்.

குளிர் காலத்தில் குளிப்பதற்காகவேண்டியே பலரும் செல்வதைபோல் எனது குடும்பமும் எனது நண்பர் சிராஜ் குடும்பமும் கிளம்பினோம். புல முறை சென்றிருந்தாலும் இந்த முறை முதலில் அல் அய்னில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம்.


புதிய வரவாக ஆப்பிரிக்காவிலிருந்து வெள்ளை சிங்கம் வந்திருக்கிறது அதைக்காண மக்கள் கூட்டம். நாங்கள் காலை 11 மணிக்கு மிருகக் காட்சி சாலையினுல் நுழைந்தோம்.

அன்னப் பறவைகளும் வண்ணப் பறவைகளும் எங்களை வரவேற்றது. பல வகையான குரங்கின வகைகள். வால் இல்லாமலும் வாலோடும். நம் நாட்டு குரங்குகளும் வாழைப்பழத்தை காட்டியதும் பல் இளிக்க ஆரம்பித்தது.
வாழைப்பழத்தை கொடுக்கலாம் என்று கை நீட்ட குரங்கும் கை நீட்ட இடையிலே இன்னொரு கை நீட்டியது செக்யூரிட்டி(பாது காவலர்) கொடுக்கக் கூடாது என்று.
அந்த குரங்குகள் செக்யூரிட்டியை பார்த்த பார்வை மொவன நான் வெளியில வந்தா உன்னை கொதரிடுவேன்ன்னு சொல்றாமாதிரி உர் உர்னு உருமிக் கொண்டு பார்த்தது.

செக்யூரிட்டியின் கட்டுப்பாட்டையும் மீறி சில குழந்தைகள் சிப்ஸ்களை குரங்களுக்கு தூவிக் கொண்டிருந்தார்கள்.

சிங்கம் புலி நரி பாம்பு முதலை ஒட்டகச்சிவிங்கி ஆமை மான் இப்படி பல வகையான மிருகங்கள் பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு பராமரித்து வருகிறார்கள்.


நுழைவுக்கட்டணம் 15 திரகம் குழந்தைகளுக்கு 5 திரகம் வீதம் பெறுகிறார்கள்.

மாலை 6.30 மணிக்கு பறவைக் காட்சி ஸ்பெஷல் ஷோ காண்பிக்கிறார்கள்.

அமீரகத்தின் தேசிய பறவையான ராஜாளியை வைத்து அது செய்யக் கூடிய சாசகங்கள் பார்பதற்கு பிரமிப்பாக இருந்தது. நல்ல பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

அவ்வளவு கூட்டத்திலும் அந்தப் பறவை காவலர்களின் கைகளில் மட்டும் வந்து அமர்கிறது.

மிருகக்காட்சி சாலையினுள் உணவு விடுதிகள் இருக்கின்றன.


ஆப்பிரிக்காவிலிருந்து வந்த விருந்தாளி வெள்ளை சிங்கத்தை காணமுடியவில்லை. அவர் காலையில் பத்து மணிக்கு வந்து விட்டு மதியம் 1 மணிக்கு கூண்டுக்குள் போய்விடுவாராம். இது தெரியாமல் குரங்குகளின் சேட்டைகளை பார்த்துக் கொண்டு நேரத்தை அதிகம் சிலவு செய்து விட்டோம்.


அமீரகத்தில் வாழக்கூடிய தமிழன்பர்கள் பெரும்பாலானோர் இந்த மிருக்காட்சி சாலைக்கு வந்திருப்பார்கள். அப்படி வராதவர்கள் அவசியம் வந்து பார்க்கலாம்.

இரவு 7 மணிக்கு மிருகக்காட்சி சாலையிலிருந்து புறப்பட்டு ஜபீல்அபீத் என்ற வெண்ணீர் ஊற்றுக்கு சென்றோம். வெண்ணீர் குளத்தில் குளிப்பதற்கு இந்த குளிர் காலம் தான் ஏற்றது. அதில் குளித்தவர்கள் அதன் சுகத்தை அனுபவிக்க அடிக்கடி வருவார்கள். (நான் அடிக்கடி குளித்து அனுபவிக்கறதுனால சொல்றேன்)

இந்த குளிர்கால சுற்றுலா வெதுவெதுப்பாக இருந்தது.


இதெல்லாம் நம்மக் கேமராவுல சிக்கியதுஉன் தொல்லை இங்கேயுமான்னு

Sunday, January 3, 2010

உங்களுக்கு பிடித்திருந்தால்


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.

தமிழ்மணத்தில் 2009-ல் பதிவர்களால் இடுக்கைளிடப் பட்ட அனைத்து கட்டுரைகள் கதைகள் கவிதைகள் மொழி சமுதாயம் பொருளாதாரம் இப்படி பதினாறு தலைப்புகளில் வரிசைப் படுத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இரண்டு எனது கட்டுரைகளில் ஒன்று மட்டும் முதல் கட்ட வாக்கெடுப்பில் பொருளாதாரம் தலைப்பில் தங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும; என்ற தொடர் கட்டுரையை பல வாசகர்கள் தேர்வு செய்து இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு தகுதி பெற வைத்துள்ளார்கள்.

வாக்குகளை வழங்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

தற்போது இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பு தமிழ்மணத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது இது ஜனவரி 12 ம்தேதி வரையில் நடக்கும்.

வாசகர்கள் ஆர்வத்துடன் படித்து தரமான கட்டுரைகளை தேர்வு செய்வது படிப்பாளிகளின் கடமையாக இருக்கிறது. நல்லக் கருத்துக்களை நாம் வரவேற்று ஊக்கப்படுத்துவது வலைப்பதிவர்களுக்கு பெரும் ஆதரவும் ஊக்கமுமாக இருக்கிறது என்பதை நினைவுப் படுத்துகிறோம்.

தங்க நகைகள் வாங்குவதில் நாம் எப்படி ஏமாற்றப்படப்படுகிறோம் என்பதைப் பற்றியும் எப்படி வாங்கப்படவேண்டும் என்ற வழிகளையும் அதன் தரத்தை பற்றியும் வைரத்தைப்பற்றியும் தொடராக நான் எழுதிய கட்டுரைதான்
தங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும; இதை நீங்கள் வாசித்து உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்கினை தமிழ்மணத்தில் சேர்ப்பிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

//பிரிவு: பொருளாதாரம் வணிகம் தொடர்பான கட்டுரைகள்//

வாக்களிப்புக்கு முன் உங்கள் சுய விபரங்களை தமிழ்மணத்தில் சேர்க்க வேண்டும்.

உங்களின் வருகைக்கு நன்றி.!