உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, March 23, 2010

போலி மனிதர்களும், போலி மருந்துகளும்


இன்றைய நவீன உலகில் சம்பாத்தியம் என்பது போட்டிகளாக மக்கள் மனதில் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

சம்பாத்தியம் என்பது வாழ்வதற்கு அவசியமான அத்தியவாசயமான ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் எப்படி சம்பாதிக்கிறோம் என்பதில் பலவித கருத்துக்கள் இருக்கிறது என்றாலும் சம்பாத்தியத்தில் நேர்மை என்பது ஒவ்வொருவரும் பேனவேண்டியது அவசியமான ஒன்று என்பது பொதுவிதி.

நாம் எப்படி சம்பாதிக்கிறோம் என்பது அவரவருக்கு மட்டுமே தெரிந்த இரசியமாக இருக்கிறது.

ஒருமனிதனுடைய இரகசியமான செயல்கள் பகிரங்கமாகும்போது மற்றவர்களுக்கு மத்தியில் அவன் பொதுவிதியை நேர்மையை மீறியவனாக காட்சி அளிக்கிறான். பலருடைய விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுகிறான்.
இந்த விமர்சனங்கள் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதற்கும் தவறிலிருந்து திருந்துவதற்கும் வாய்ப்பை கொடுக்கிறது.ஆனால் தவறு செய்யக் கூடியவர்கள் அதை தவறு என்று உணரும்பட்சத்தில் மட்டுமே அந்த தவறு களையப்படும்.நாட்டின் சட்டம் கடுமையாக தண்டிக்கப்படக் கூடியதாக இருந்தால் தவறுகளிலிருந்து மனிதர்களை குறைக்கலாம்.ஆனால் சட்டம் படித்தவர்களே குற்றவாளிகளை நிரபராதி என்று வாதாடி தங்களின் பொருளீட்டை பெருக்குவதற்கு சட்டத்தை ஏமாற்றுகிறார்கள்.

கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் யாரை எப்படி ஏமாற்றலாம் என்று இன்றைய நவீன உலகம் ஆசைகளை தூண்டி பலரையும் யோசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தனிமனித நேர்மை மனிதர்களிடம் இல்லாதவரையில் ஏமாறவும் ஏமாற்றவும் செய்வார்கள் என்பது திண்ணம்.

தெருவுக்கு ஒரு ஆலயம் வீட்டுக்குள் வணக்க வழிபாடு இப்படி பரவிவரும் பக்தி நிலையில் இறையை தொழுகின்ற மனிதர்கள் அந்த இறையிடம் பொருளைத்தான் வேண்டுகிறார்களேலொழிய நேர்மையை வேண்டுவதில்லை.

ஓவ்வொரு மனிதனும் ஒரே உண்மையிலிருந்து வெளிப்பட்டவன் தான் என்பதை வேதப்படிப்போடு நிறுத்திக் கொள்வதால் அனுவபப் படிப்பில் ஏமாற்றவும் ஏமாறவும் செய்கிறார்கள்.

சமீபத்தில் காலவாதியான மருந்துகளை போலி முத்திரையுடன் மீண்டும் மக்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்றச் செய்தி பலரையும் அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது.

யாரோ ஒருவர் இந்த மருந்தை வாங்கி அவதிப்படுவதைப் பற்றி அதை விற்ககூடியவனுக்கு துளியும் கவலையில்லை.அவனுக்கு தேவை பணம் மட்டும்தான். இப்படி பணத்தின் மீது குறியாய் இருப்பவர்களுக்கு நேர்மை என்பதோ ஒழுக்கம் என்பதோ துளியும் இல்லை என்றுதான் கூறவேண்டும். பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.மனித உயிர்களை விட பணம் மதிப்பு வாய்ந்ததாக பலரின் மனதிலும் குடிக் கொண்டுள்ளதால் தவறுகள் எளிமையாக நடந்துக் கொண்டிருக்கிறது.இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

காலாவாதியான மருந்துக்களை விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் கால தண்டனை வழங்க சட்டம் கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சட்டம் வருவதற்குள் எத்தனை உயிர்கள் பறிப்போகும் என்பது யாருக்குத் தெரியும்.

கல்வித்துறையும் வியாபாரமாகிவிட்டது அதில் பயிலும் மாணவர்களும் வியாரா நோக்கிலேதான் பயின்றுக் கொண்டிருக்கிறார்கள்.நாளை இவர்களின் எதிர்காலம் மனித நேயத்தைவிட வியாபாரநேயமே அதிகரிக்கும்.

எதையுமே லாபநோக்கில் பார்க்க கூடிய மனோநிலையை இந்த சமூகம் உருவாக்கிவருகிறது. இந்த நிலை மாறாத வரையில் எல்லாப் பொருள்களிலும் எல்லா மனங்களிலும் கலப்படம் இருக்கத்தான் செய்யும்.

மனிதநேயத்தை பயிற்றுவிக்கக் கூடியவர்களும், பயில்கிறன்றவர்களும், அதைப் பேணுகின்றவர்களும் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். இது அதிகமாகத வரையில் பல திடுக்கிடும் செய்திகளை தினசரிகளில் தினம் கண்டுக் கொண்டுதானிருப்போம்.

Saturday, March 20, 2010

மார்ச் 20


1988 மார்ச் 20 லிருந்து 2010 மார்ச் 20 வரையில் சுமார் 22 வருடங்கள் கழிந்திருந்தாலும் எங்களுடைய வாழ்க்கையில் கூட்டல்களை வகுத்தல்களை கணக்கியலை திருமண பந்தம் கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஆம் இன்று நான் எனது மனைவி பிள்ளைகளுடன் திருமணநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

எனது இருமகள்களும் அலுவலகத்திற்கு தொலைப்பேசி செய்து என்னிடம் வாழ்த்துக்களை வழங்கினார்கள்.

எங்களின் 22 வருட வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் நிறைய இருந்தாலும் அவை இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு இப்படி எல்லாம் கலந்த மசாலாவாக இருந்துக் கொண்டிருக்கிறது.

உணவுக்கு மசாலா எவ்வளவு அவசியம் என்பது உங்களுக்கும் தெரியும்தானே. அதில் எந்த ஒன்றும் அதிகமானாலும் ருசி மாறிப்போகும்.ருசி மாறினால் பசி தீராதே. பசிக்காக ருசியே இல்லாமல் என்றோ ஒரு நாள் சாப்பிடலாம் தினம் சாப்பிட முடியுமா?தினம் ருசியில்லாமல் சமைக்கத்தான் முடியுமா? காலம் கற்றுக் கொடுத்துவிடும். வாழ்க்கையும் அப்படித்தான் கற்றுக் கொடுக்கிறது விட்டுக் கொடுக்கும் பட்சத்தில்.

எங்கள் வாழ்க்கையை கற்றுக் கொண்டுவாழ்கிறோம், நிறைய எங்களுக்குள் விட்டுக் கொடுத்தும் வாழ்கிறோம்.

மாப்பிள்ளை ஊர்வலத்தில் மாலையும் கழுத்துமாய் அம்பாஸிட்டரில் அமர்ந்திருந்தபோது என் உறவினர் தேரிழந்தூர் அப்துல் மஜீது அவர்கள் என்னிடம் உதிர்த்த வார்த்தைகள் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

நேற்று வரையில் நீ அரை மனிதன் இன்று முதல் நீ முழு மனிதன் என்றார்.

திருமணம் பந்தத்தின் மூலம் மனிதன் முழு மனிதனாகின்றான்.அதுவரையில் என்னதான் கற்றறிந்தாலும் அந்த மனிதன் முழுமை அடைவதில்லை.

அன்று எங்கள் திருமணத்தில் கலந்துக் கொண்ட பலரை இன்று நாங்கள் இழந்திருக்கிறோம். வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் இருக்கத்தானே செய்கிறது.

எப்படி பிறந்தோம் என்றறிந்தால் எப்படி வாழ்வது என்பதறிவோம் என்ற வரிகளை இங்கு பதிவு செய்ய எனது 22 வருட மணவியல் வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது.

திருமணமான சில நாட்களில் மகானைக் காண நான் சென்றபோது எனது தாயார் வருந்தினார்கள். இந்த வயசுல எதுக்கு இதுவெல்லாம் என்றார்கள்.

அறிவைத்தேட வயதிருக்கிறதா? புரிந்துக் கொள்வதற்குத்தான் வயது தேவைப்படுகிறது.

அந்த தருணத்தில் எனது மனைவி பயந்திருக்கிறாள். பயத்தை போக்குவதற்கு தெளிவைக் கொடுத்தேன்.

புரிந்துக் கொண்டார் எனக்கு என் மனைவி புதியவரல்ல. மணம் புரிந்தப்பின் என் மனதில் புகுந்தவரல்ல. என் தந்தையின் சகோதரி மகள் என்றாலும் கூட இரு மனம் கலந்தால்தான் அது காதல். ஆனால் அந்தக் காதல் சில வருடங்கள் வாழ்க்கை ஒப்பந்தத்திற்காக காத்திருந்தது.

காலம் கடந்தது எங்கள் காதல் வளர்ந்தது. என் வீட்டில் எதிர்ப்பு நிறைந்தாலும் என் தந்தை மறுப்பு சொல்லவில்லை எங்களுக்காக விட்டுக் கொடுத்தார். அதுதான் எங்களுக்குப் பாடம்.

விட்டுக்கொடுத்தால் விரோதியும் நமக்கு நண்பனாகி விடுவான். விரோதியே நண்பனாகும்போது நமக்கே நமக்காக வாழும் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துவிட்டால்..... எழுதுவதற்கு எளிமையாக இருக்கிறது படிப்பதற்கும் அப்படித்தானிருக்கும் நடைமுறைப் படுத்தி வாழ்ந்துப் பார்த்தால் கடினம்மாதிரி இருந்தாலும் அது கஸ்டமாவதில்லை நம் வாழ்க்கையை நஷ்டமாக்குவதில்லை.

எங்கள் திருமணத்திற்கு பாலமாக நின்ற என் இனிய நண்பர் ஒலிமுஹம்மது.இவர் எங்கள் இரு வீட்டாருக்கும் தூதுச் சென்ற வெள்ளைப் புறா மறக்க முடியாத மனம்.

திருமணத்தை முன்னின்று நடத்திய என் அன்பிற்குரிய மாமா அப்துல்ஜப்பார்.என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்த மாவீரர்.

என் பிள்ளை ஆசைப்பட்டு விட்டான் என்பதற்காக என்னவளை மருமகளாய் ஏற்றுக் கொண்ட என் அன்னை.

என்றும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் என் தந்தை.

ஓடியாடி வேலைகளை செய்த என் உடன் பிறந்த சகோதரர்கள்.

பெற்ற பிள்ளையைப்போல் பாசங்காட்டிய என்நண்பன் அத்திக்கடை சிஹாபுதீனின் தந்தை செவத்தப்பிள்ளை முஹம்மது ஹனிபா.

எங்களை வாழ்த்துவதற்காக கூடிவந்த சொந்தங்கள், பந்தங்கள், உள்ளுர் வாசிகள்

இவர்களுக்கு மத்தியில் காதலுக்கு தூதுச் சென்ற எனது மைத்துனர் ஷேக்அலாவுதீன்.

நாங்கள் யாரையும் மறக்கவில்லை எங்கள் மனதில் மறைக்கவில்லை.

Thursday, March 11, 2010

விமானத்தில் ஒரு விவாதம்

சென்ற மாதம் எனது நண்பர்களுடன் துபாயிலிருந்து இலங்கைக்கு ஒரு விழாவிற்காக சென்றிருந்தேன்.

பல நாடுகளிலிருந்து பலரும் இவ்விழாவிற்காக வருகைத்தந்தார்கள்.

சார்ஜாவிலிருந்து எங்களது பயணம் ஏர் அரேபியாவில் தொடங்கியது.

நண்பர்களுடன் ஒருமித்து பயணம் செய்வது என்பது அலாதியான இன்பம்.

ஏர்அரேபியா விமானத்தில் இருக்கைகளில் நண்பர்களுடன் ஒன்றாக அமர்வதற்கு எண் கிடைக்கவில்லை.நான் மட்டும் தனித்து சகபிரயாணிகளுடன் அமரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இரவு நேரப் பயணம் என்பதால் அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.மூன்று பேர்கள் அமரக்கூடிய இருக்கையில் எனக்கு நடு இருக்கை அமலாகி இருந்தது.

எனது இருக்கையின் இடது பக்கம் இலங்கைவாசி அமர்ந்திருந்தார்.அவர் என்னிடம் பேசவில்லை நானும் பேசவில்லை.அவரவர் எண்ண ஓட்டத்தில் கற்பனையில் சிந்தனையில் ஓத்திகைகளை மனதில் காட்சிகளாக்கி படம் பார்த்துக் கொண்டிருந்திருப்போம்.

எனது வலதுப் பக்க இருக்கைக்கு தாடிவைத்த ஐம்பது வயதை கடந்தவர் வந்தமர்ந்தார்.அவர் தோற்றத்தை வைத்து இஸ்லாமியர் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.

மதத்தை அல்லது மார்க்கத்தை முழுமையாக பேணுகிறார்களோ இல்லையோ ஆடைகளில் தங்களை எந்தக் கொள்கையை எதைச் சார்ந்தவர்கள் என்பதை அடையாளம் காட்டிக் கொள்ளக்கூடியவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

அவர் என்னைக்கண்டு புன்முறுவல் பூத்தார். தன் பெயரைச் சொன்னார் என் பெயரைச் சொன்னேன்.

என்னிடம் கைகுலுக்கிக் கொண்டார் இந்த பரசஸ்பரம் நானும் இஸ்லாமியன் என்பதினால் அவரிடம் ஏற்பட்ட உந்தலாக இருந்தது.

இந்தியன் என்றார் நானும் என்றேன்.


அதோடு அவர் இருந்துவிட வில்லை.கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தார்.எங்கு போகிறீர்கள் எதற்கு போகிறீர்கள் ஏன் போகிறீர்கள் என்று துப்பறியும் காவலரைப்போல அவர் கேட்டது எனக்கு ஒருவித சலிப்பை கொடுத்தது.இருந்தாலும் பதில் கொடுத்தேன்.

விமானம் பறக்க ஆரம்பித்தது தன்னிடம் ஹைதராபாத் பிரியாணி அதிகமாகவே இருக்கிறது என்னோடு பங்கு போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

நன்றி... நான் சாப்பிட்டுவிட்டேன் என்றேன்.மீண்டும் அழைத்தார் மீண்டும் நன்றி சொன்னேன்.ஹைதராபாத் பிரியாணி ருசியாக இருக்கும் மிஸ் பண்ணாதீங்க என்றார்.

(உணவு ருசியாகத்தான் இருக்கும் உண்ணக்கூடிய நாம் ருசியாக இருக்கின்றோமா? என் உள்மனம் கேட்டது)

அவர் உண்பதற்கு ஆயத்தமானார் நான் எனது நண்பர்களின் இருக்கையைத் தேடி சென்றேன்.சிலர் உறக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்கள் உரையாடிவிட்டு எனது இருக்கைக்கு வந்தேன்.

பிரியாணியை முடித்துவிட்டு எனக்காகவே காத்திருப்பது போல் அமர்ந்திருந்தார்.
நான் அமர்ந்ததும் பேச்சை ஆரம்பித்தார்.

பொதுவான பேச்சல்ல.இறைவனைப் பற்றிய உரையாடல்.அவர் பேச பேச நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் இஸ்லாமியனாக இருப்பதினால் இவர் பேசுகிறாரா அல்லது இந்த இருக்கையில் வேறு யார் அமர்ந்திருந்தாலும் இவர் இப்படித்தான் பேசிக் கொண்டிருந்திருப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

பலரிடம் இறைவனைப்பற்றிய அறிவைவிட நம்பிக்கையே அதிகமாக இருக்கிறது.
தன் நம்பிக்கையை எப்படியாவது மற்றவர்களிடம் காட்டிவிட வேண்டும் என்பதில் பலர் ஆவர்வமாக இருக்கிறார்கள்.

ரொம்பவும் சுவாரஸ்யமாக பேசினார்.என்னிடம் தான் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது.அவர் பேசிய பகுதிகளை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் அதனாலும் கூட சுவாரஸ்யம் குறைந்திருக்கலாம்.

இவர் தனக்கு இதுவெல்லாம் தெரியும் என்று பேசினாரா அல்லது எனக்கு இவைகள் தெரியாது என்று பேசினாரா? ஏன்று விளங்கவில்லை.ஆனால் ஒன்று மட்டும் விளங்கியது சரியா இவரிடம் மாட்டிக் கொண்டோம் என்று.

இவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரே வழி நான் வாயை திறக்கனும் என்று முடிவு செய்தேன்.வாய்ப்பை எதிர்பார்த்தேன் அவர் பேச்சில் ஒரு சிறிய இடைவேளை கிடைத்தது உள்ளே புகுந்தேன்.

இறைவனைப்பற்றி நிறையவே பேசினீர்கள் உங்களிடம் இறை நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது சந்தோசம்.
இறைவனை நம்ப வேண்டுமா அறிய வேண்டுமா? முதல் கேள்வியை வைத்தேன்.
அவர் மௌனமாகவே என்னைப்பார்த்தார்.மீண்டும் தொடர்ந்தேன் இந்த உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் மட்டுமே இருந்ததாக வேதம் கூறுகிறது.
ஓன்றை படைக்க எண்ணினால் ஆகுக என்று இறைவன் கூறுவான் அது ஆகிவிடும் என்று வேதம் சொல்கிறது அப்படியான படைப்பில் இறைத் தன்மை இருக்கிறதா?இல்லையா? என்று கேட்டேன்.

மௌனமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மன்னிச்சுடுங்க! நம்மைப்போன்ற பலரிடம் இஸ்லாமிய வெளிரங்க ஞானம் அதிகமாக இருக்கிறதே தவிர உள்ரங்க ஞானம் இல்லை.இஸ்லாம் ஒரு பகுதி அல்ல அது முழுமையானது.இஸ்லாம் தர்க்கத்திற்குரியது அல்ல வாழ்வதற்குரியது ஆனால் அதை தர்க்கதிற்குக்கென்று பலரும் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு இஸ்லாமியன் தன்னை அறியப்படும்போது தன் இறைவனை அறிகிறான்
இறைவன் மீது நம்பிக்கை மட்டும் வைத்திருப்பவர்கள் தன்னை அறிவதில்லை.அவர்கள் இறைவனை தன்னை விட்டும் பாரதூரத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்று கூறி முடித்தேன்.

மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் மதங்களும் மார்க்கமும் ஆனால் நாம் அதிகமாக இறைவனைப்பற்றி பேசுகிறோம் அதிகமாக மனிதர்களை நேசிக்கின்றோமா?

சரிதான் சரிதான் என்று மெல்ல இந்த வாதத்திலிருந்து விலகுவதைப் போல தனதிருக்கையில் சாவசமாக சாய்ந்தார்.

அப்பாடா தப்பித்தோம் என நானும் இருக்கையை சாய்த்துக் கொண்டு கண்களை மூடினேன்.

இலங்கை போய் சேரும் வரை அவரும் நானும் எதுவும் பேசவில்லை.இறங்குவதற்கு முன் இருவரும் கைக் குலுக்கி விடைப் பெற்றோம்.

இந்த பதிவு விவாதத்திற்காக அல்ல

Thursday, March 4, 2010

காவிக்குள் காமம்

காவி உடைக்குள் காமம் இல்லை என்று யார் சொன்னது.?
பச்சைக்காயில் பழத்தின் ருசி இருக்காது பழத்தில் பச்சைக்காயின் வீரியம் இருக்காது.

காய்களை வாங்கிவிட்டு பழம் என்று சொன்னால் அது யார் தவறு.?

பூத்து காயாகி கனிவதற்கு முன் காய் தன்னை கனி என்று எண்ணிக் கொண்டால் அது பழமாகி விடுமா.?

இரு தினங்களாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுவது காவிக்குள் நுழைந்த காமம்.

மனிதனாக பிறந்த மனிதன் வேதங்களை கற்று மனனம் செய்து அதை பிறருக்கு உபந்நியாசம் செய்துவிட்டால் சமூகத்தில் பலரால் அவர்களை மகானாக பார்ப்பதற்கு பட்டங்களை வழங்குவதற்கும் தயாராகிவிடுகிறார்கள்.
தங்களின் தேவைகளை குறை நிறைகளை அவர்களிடம் கூறி மனஆறுதலை தேடுகிறார்கள்.

மனித உடலுக்கு எல்லாத் தேவைகளும் தேவையாக இருக்கிறது.அந்த தேவைகளை பூர்த்திச் செய்யாமல் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை.

பசிக்கின்றபோது புசிக்கவேண்டும் புசித்துவிட்டால் வயிற்று பசி அடங்கி காமப்பசி தலைத்தூக்கும்.தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவி என்ற அந்தஸ்துடன் வாழ்க்கைநெறியை பேணவேண்டும்.அதை அணைப்போட்டு தடுப்பது என்பது தற்கால சாத்தியம் என்றாலும் அது நிரந்தரம் அல்ல.அணைக்குப் பின்னால் தேக்கம் இருந்துக் கொண்டுதானிருக்கும்.
மனிதனை கடவுளாக பார்க்கும் தன்மை மிருகங்களுக்கு கிடையாது ஆனால் மிருகமாக நடக்கும் தன்மையும் கடவுளாக பார்க்கும் பார்வையும் மனிதனிடம்தான் இருக்கிறது.

கடவுளை ஒவ்வொரு மனிதனும் ஒரு அளவுகோள்வைத்து நம்பிக் கொண்டிருக்கின்றான்.இறைவனை அறிபவர்களைவிட நம்புகின்றவர்களே இவ்வுலகில் அதிகம்.நம்பிக்கை அறிவாகுவதில்லை ஆனால் அறிவு நம்பிக்கையை வழுப்படுத்தும்.

இறைவனை இறைவனாக பார்ப்பவர்கள் இவ்வுலகில் மிகச் சொற்பபேர்கள்தான்.
பலர் தன்னை கடவுளாக எண்ணிக் கொண்டு பிறரை எண்ணவைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தன்னை அறியாத இவர்கள் தன்னை கடவுள் என்று சொல்லி இந்த உலகில் எதைப் படைத்தார்கள்.?

பல ஊர்களில் நாடுகளில் ஆசிரமங்களை வளர்தார்கள்.தங்களின் வங்கி கணக்கில் கோடிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

உடல் நோய்களை குணப்படுத்த மருத்துவரிடம் செல்லக் கூடியவர்கள் மருத்துவரை கடவுளாகப் பார்ப்பதில்லை.அதில் தெளிவாக இருக்கிறார்கள்.
ஆனால் காவியை கண்டுவிட்டால் பலருடைய கண்களுக்கு சாமியாகத் தெரிவதுதான் வியப்பு.

அந்த சாமிகள் தானும் ஆசாமிதான் என்பதை அவ்வபோது நிருபிக்கும்போது அவரை வணங்கியவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

தான் தவறு செய்யலாம் ஆனால் தான் வணங்கக்கூடியவர் எந்தவிதத்திலும் தவறிழைப்பதை பொருந்திக் கொள்ளமுடியாது என்பதை ஆசிரமங்கள் அடித்து நொருக்கப்பட்டதில் தெரிகிறது.

இவர் தவறு செய்ததற்கு அவரை வணங்கியர்களும் அவரை வளர்த்தவர்களும்தான் காரணம்.

நேற்றுவரையில் ஊடகங்கள் அவருக்கு குடைப்பிடித்து அவருடைய சொற்பொழிவுகளை தொடராக பலரை தொடவைத்தது.
இன்று அதே ஊடகம் அவரை கூவமாக்குகிறது.

ஒரு போலி வளர்வதற்கு காரணமாக இருந்த ஊடகங்களை ஏன் இந்த மக்கள் முற்றுகை இடுவதில்லை.?

ஆறறிவுள்ள மனிதன் தனது ஆறாம் அறிவை பிரயோகிக்காத வரையில் இது போன்ற நிகழ்வுகளை அவன் சந்தித்துக் கொண்டுதானிருப்பான்.

ஒரு பொருளை வாங்கக்கூடியவர்கள் அந்த பொருளின் தரம் மணம் நிறம் இவைகளை அலசி ஆராய்ந்து வாங்குவதில் கவனமாக இருக்கிறார்கள்.
தங்களின் குழந்தைகளை எந்தப்பள்ளியில் எந்த கல்லூரியில் எந்த படிப்பில் சேர்ப்பது படிக்கவைப்பது என்று ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்.
ஆனால் இறைவனுடைய விசயத்தில் அறிவைவிட நம்பிக்கைக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் எளிதாக ஏமாந்துவிடுகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களால் உண்மையான மகானும் உண்மையான ஞானமும் மக்களிடம் சென்றடைவதில் சுனக்கம் ஏற்படுகிறது.
மனிதனை மனிதனாக வாழவைத்தவர்கள் மற்றவர்களுக்கு மத்தியில் மனிதனாக வாழ்ந்ததாகத்தான் சரித்திரம் சொல்கிறது அவர்கள் கடவுளாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.

திரைப்படங்களை கண்டுவிட்டு தங்களின் நாட்டையே தாரைவார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விசயமல்ல.

இதுவும் கடந்து போகும்.!