உங்கள் வருகைக்கு நன்றி...

Friday, July 31, 2009

மனம் கவர்ந்த மலேசியா...8

(தென்னைமரத்தைப்பற்றிய விடைக் கிடைக்காமல் சிறுகதை எழுத்தாளர் திருச்சிசையது டெலிபோன் செய்து கேட்டார்… தொடர்ந்து தொடரைப்படித்து வருவதினால் அவருக்குள் பெரிய ஆர்வம்…ம்…கூம் நான் சொல்லலைய்யே… பதிவுல படிங்கன்னு சந்தோசமா சொன்னேன்… என் பிரியாணிய சாப்பிட்டுவிட்டு முப்பத்திமூன்று முறை நல்லா இருக்குன்னு சொன்ன முனைவர் அவருதான்…அதனால நான் சொல்லிருப்பேன்னு நீங்க நினைச்சுட வேண்டாம்…)
மலேசியாவின் அழகே தனி அழகு…எங்குபார்த்தாலும் பசுமைப் புரட்சி…மிதமான சில இடங்களில் கொஞ்சம் அதிகமான வெப்பம்…வெப்பம் அதிகரித்தால் உடனே மழை…பஸ்சில் போகும் போதே வெப்பத்தையும் மழையையும் பார்த்தோம்…பாலைவனத்திலிருந்து வந்த எனக்கு இது சொர்க்க பூமியா தெரிகிறது…எல்லோரும் பஸ்சுல தூங்கினாங்க எனக்கு தூக்கம் வரல

பஸ் பினாங்கை நோக்கி பாய்ந்தது…சரியா சொன்னமாதிரி மாலை ஆறு மணிக்கெல்லாம் பினாங்கு பாலம் வந்தது…இந்த பாலம் “பட்டவர்த்” என்ற இடத்தையும் “பினாங்கு” ஐலாண்டையும் இணைக்க கூடியது. இது 16 கீமீ நீளம் கொண்டது…
இந்த பாலம் இருந்தாலும் இதைக் கட்டுவதற்கு முன் ப்பேரியில் தான் இக்கரைக்கும் அக்கரைக்கும் போக்குவரத்து நடைப்பெற்றது…ஆனால் அது தொடர்ந்து இன்று வரையிலும் நடந்துக் கொண்டு வருகிறது…பேரியில் கார் மோட்டார் சைக்கிள் சைக்கிள் இப்படி அனைத்தும் பயணம் செய்வதற்கு ஏதுவாக வசதிகள் செய்திருக்கிறார்கள்…30 நிமிடங்களில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு சென்றடைகிறது…மாலை நேரத்தில் பாலம் டிராபிக்னால் தினரும் அந்த சமயங்களில் பலர் ப்பேரியில் பயணம் செய்கிறார்கள்…
மலேசியாவை பொருத்தவரையில் அதிகமான டுவல்கேட் இருக்கிறது…காசை கறந்து விடுகிறார்கள்…காசு கொடுத்தாலும் ரோடு ரொம்ப சூப்பருங்க…நல்ல முறையில கொடுக்கின்ற காசுக்கு வேலை பார்க்கிறார்கள்…(லஞ்சமும் இருக்கு)
பினாங்கு பஸ்டாண்டில் இறங்குவதற்கு முன்னாடியே எனது மைத்துனர் பஸ்சைவிட்டு இறங்கி வெளியில் வரவேண்டாம் டெக்ஸிகாரர்கள் தொல்லை அதிகம் இருக்கும் என்று சிக்னல் கொடுத்தாரு…அதனால பஸ்சை விட்டு இறங்கி அங்கேயே நின்றுக் கொண்டிருந்தோம்…15 நிமிடங்களுக்குள் சென்னை எக்மோர் ஆட்டோகாரர்களை ஞாபகம் படுத்திட்டாங்க பினாங்கு டெக்ஸி ஒட்டுனர்கள்…
ஒரு வழியா அவர்களை சமாளித்தேன். என் மைத்துனர் குடும்பத்தோடு அழைக்க வந்தார். காரில் ஏறி வீடு வந்தோம்…என் மைத்துனரின் மாமனார் வீட்டில்தான் நாங்க தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…(பலே பார்ட்டிங்க…)
இதுவும் ஸ்டார் ஹோட்டல் மாதிரிதான்…முன்னாடியே சொன்னேன்ல..என் மனசுல அவங்க சூப்பர்ஸ்டார் மாதிரின்னு…(ரொம்ப சாம்ராணி போடாதடா…அப்டிங்கிறீங்களா..?)
14 மாடிக் கட்டிடம்…இவங்க பிளாட் 6வது மாடி…கீழே நீச்சல்குளம்…என்பிள்ளைகளுக்கு அதைப்பார்த்ததும்…ஐய்ய்யா…சந்தோசம் தாங்கல…அப்படியே அவங்க வாயை பொத்திட்டேன்ல…ஏற்கனவே சிங்கப்பூர்ல பட்டது போதும்டா சாமி…!...(இன்னும் வேக்குதே)
எங்களை வீட்டில் விட்டுவிட்டு அவர்கடைக்கு புறப்பட்டார்…இருப்பா நானும் வரேன்னு கூடவே கிளம்பினேன்.ஒய்வு எடுங்களேன்…நாளைக்கு வெளியில போகலாம்ன்னார்…பஸ்சுல ஒய்வாதான் வந்தேன்…எந்த கலைப்பும் தெரியலைன்னு…கொடுத்ததை வாங்கி குடிச்சுட்டு மைத்துனருடன் புறப்பட்டேன்.


“லிட்டில் இந்தியா”-இது இந்தியர்களுக்கான மார்க்கெட் இங்குதான் மைத்துனரின் மாமனாரின் அப்துல்சலாம் மசாலக்கடை இருக்கிறது…சில்லறை வியாபாரமும் மொத்தவியாபாரமும் சுமார் 30 வருடத்திற்கு மேல் செய்து வருகிறார்கள்…இவங்க இந்த மார்க்கெட்டில் நல்ல பெயருடன் வியாபாரம் செய்துவருகிறார்கள்…
மந்திரி பார்வையிடுவது போல நானும் அப்படியே பார்வையிட்டேன்…
சாமான்களையெல்லாம் வேனில் ஏற்றிக் கொண்டு உணவகங்களுக்கு டெலிவரிசெய்ய புறப்பட்டார்… என்னை கடையில் இருக்கும் படி கூறினார்… இல்ல நானும் வாரேன்னு அவர் கூடவே புறப்பட்டேன்…
போறவழியில் பினாங்கின் டிராப்பிக்கை பற்றியும் அங்குள்ள போலீஸ்காரர்களை பற்றியும் (கிட்டதட்ட நம்ம ஊர் போலீஸ்மாதிரி தான்) சொன்னாரு…எல்லாத்துக்கும் ஊம் போட்டேன்…ஆமா…அந்த தென்னமரம் என்ன மரம்ப்பான்னு கேட்டேன்…
சிரித்தார்…ஏன் தென்னமரம் பின்னாடியே நிக்கிறீங்க…?ன்னாரு…
தென்னமரம் மாதிரி இருக்கு ஆனா அது தென்னமரம் இல்ல..அது என்ன மரம் ன்னு தெரிஞ்சுக்கலாம்னு ஆர்வம் தான்…
“மச்சான் போனமாசம் சின்னப்பா பையன் வந்தான் அதுக்கும் முன்னால மாமா மகன் வந்தான்…இப்படி அடிக்கடி யாராவது வந்துபோறாங்க ஆனால் வருவாங்க சுத்தி பார்ப்பாங்க கிளம்பிடுவாங்க…இப்படி கேள்வி கேட்கமாட்டாங்க”…ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார்…
“டேய் அவனா நீ…தென்னமரம் மாதிரி இருக்கே அது என்னமரம்னு கேட்டது தப்பா…? நீயும் என்ன மாதிரிதானா”…? (அந்த புள்ளக்கிட்ட மாட்டிக்கிட்டு என்னப் பாடுபடுறியோ…பதிலைவச்சே கண்டு புடுச்சிடுவோம்ல).
“ஏம்ப்பா…நீ மலேசியா சிட்டிசன் தானே”…?ன்னேன்…
“அதுல என்ன சந்தேகம”;…?


லிட்டில் இந்தியா மார்க்கெட்


இல்ல ஒருதென்னமரத்தை பத்திக் கேட்டா பதில் சொல்லத் தெரியலைய்யே…ன்னே..?
நீங்க போறத்துக்குள்ள யாரிடமாவது விசாரித்து சொல்லிடுகிறேன்…?அதை விடுங்கன்னு…அப்படியே விட்டுட்டு வேற டாப்பிக் பேசிக்கொண்டே வேளைகளை முடித்துவிட்டு வீடு வந்தோம்…
பினாங்கில் பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன இருக்கிறது…எங்கு எப்படி எப்போது போவது என்று பெரிய திட்டமே தயார் ஆனது…10 நாட்கள் பத்தாது…குறைஞ்சது 1மாதமாவது தங்கி எல்லாவற்றையும் பார்க்கனும் …இல்லைன்னா அவசரம் அவசரமா பார்த்துட்டு அரக்குறைய போகிற மாதிரி இருக்கும்ன்னு அட்வைஸ் பண்ணினார்…
இங்கப்பாரு 10 நாள்ல என்ன பார்க்கனுமோ இதை ஒழுங்கா பார்த்தா போதுமன்னு சொன்னேன்…
சரி நாளைக்கி எங்கே போறோம்னு கேட்டேன்…
பினாங்கு ஹில் போறோம்னு சொன்னார் … அதனால… நாளை பினாங்கு ஹில்லில் சந்திப்போம்…!
தென்னமரம் என்ன மரம்ன்னு எப்படியாவது விசாரிச்சுடுறேன்…!

Tuesday, July 28, 2009

மனம் கவர்ந்த மலேசியா....7

காலை நான்குமணிக்கே விழித்துக் கொண்டேன்…6.45 மணிக்கெல்லாம் பஸ்டாண்டு வந்திட்டோம்…பஸ்சும் ரெடியாக நின்றுக் கொண்டிருந்தது…சாமான்களை உரிய இடத்தில் வைத்துவிட்டு பஸ்சினுல் ஏறி அமர்ந்தேன்…
என்கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை… எனக்கு ஒரு சந்தேகம்… நாம எமிரெட்ஸ் பிளைட்டில் பஸ்ட்கிளாஸ் டிக்கேட் ஏதும் புக்பண்ணிட்டோமா…இது பஸ்சுதானா…? அல்லது பிளைட்டா…? பிளைட்டில் கூட இவ்வளவு பெரிய வசதி இருக்காதே…ன்னு தோனிச்சு…
பில்டப் ஏதும் நான் போடலைங்க…ஏதோ பஸ் ஒனரு என்னை ஒசியில அழைச்சுட்டு போறேன் உன் பிளாக்குல என்னைப்பற்றி ஒகோன்னு எழுதுன்னு சொன்னா மாதிரில பாக்குறீங்க…

அந்த பஸ்சுல மொத்த இருக்கையே 18 தாங்க… ஒவ்வொரு சீட்டுக்கும் இடைவெளி அதிகம் இருக்கைகள் அனைத்தும் எலக்ட்ரானிக் சிஸ்டம் … இதுல ஒவ்வொரு இருக்கையிலும் டிவிவேற…அதுல தமிழ் படம் பாடல்கள் கேம் இப்படி பல பொழுதுபொக்கு விளையாட்டுகள்…இந்தமாதிரி வசதிய பார்த்ததும் அட நாம கொடுக்குற காசு கொஞ்சமுன்னு மனசுல பட்டுச்சு… துபாயில இப்படியொரு பஸ்சை நான் பாக்கல…இந்த பெருமை சிங்கைக்கும் மலேசியாவுக்கும் மட்டும் தான்…
சொன்னபடி சரியா 7.30 மணிக்கு பஸ்புறப்பட்டுச்சு… சிங்கையிலிருந்து விடைபெறுவதற்கு முன்னால ஒருசில வார்த்தைகள்…

சிங்கை
என்சிந்தைக்கு
விருந்தளித்த
மங்கை…

தூய்மை உன்னிடம்
தாய்மையாய்
கண்டேன்…

உன்னைப் போல்தான்
உன் மக்களும்
தூய்மையானவர்கள்…

தமிழ் மீது
நீ கொண்டிருக்கும் பாசம்
தமையனாய் என்னை
எண்ணவைத்தது…

அவர்களிடம்
பலமத நம்பிக்கையிருந்தாலும்
உன்னைப் பற்றிய
அவநம்பிக்கை இல்லை…

மதங்களைக் காரணம் காண்பித்து
தங்களுக்குள்
மதம்பிடித்துக் கொள்ளவில்லை…

இனம் வேறுபட்டாலும்
மனம் அவர்களிடம்
ஒன்றுதான்
சிங்கைவாசிகள்
சித்திர மனிதர்கள்
சல்யூட்
சிங்கப்பூர்…!

பஸ் புறப்பட்டு சென்றுக் கொண்டிருக்கிறது…ஒரு மணிநேரத்தில் மலேசியா பார்டர்ரான ஜொஹர்பார் வந்தது…
அனைவரும் இறங்கி சிங்கை இமிக்கிரேசனில் எக்ஸிட் பண்ணினோம்… அப்போது சின்ன சிக்கல் எனக்கு ஏற்பட்டது…
சிங்கைக்கு நான் வந்தபோது விமான நிலைய இமிக்கிரேசனில் 30 நாட்கள் தங்குவதற்கு அனுமதித்து ஒரு வெள்ளை அட்டையில் ஸ்டாம் பண்ணி கொடுத்தாங்க…அதை நான் அலட்சியமாய் பாஸ்போர்ட்டுடன் வைக்காமல் அது தேவையில்லையென ஏதோ ஒரு பேக்கில் வைத்துவிட்டேன்…இப்போது எக்ஸ்ஸிடில் அதை கேட்டார்கள்…
அது பேக்கில் உள்ளது… பேக் பஸ்சில் உள்ளது என்றதும்… அந்த வெள்ளை அட்டை மிக அவசியம் நீங்கள் சிங்கப்பூரில் வெளியில் செல்லும் போது அதை வைத்திருக்க வேண்டும்…யாரும் சோதனைகள் செய்தால் அந்த அட்டையை காண்பித்தால் போதும்… அது உங்களின் அடையாள அட்டைஎன்று இமிக்கிரேசன் அதிகாரி கூற நான் பேந்த பேந்த முழிக்க…எங்க டேடி எப்பவும் இப்படித்தான்னு என்மகள் கருத்துச் சொல்ல…சில வினாடிகளில் டென்சனாகி அதிகாரியிடம் எஸ்க்கியூஸ் கேட்டு நான் மட்டும் பஸ்சுக்கு போய் பேக்கை எல்லாம் திறந்து கண்டுபிடிச்சதும் தான்…அப்பாடா..ன்னு பெருமூச்சு விட்டேன்…
அதிகாரி அந்த அட்டையை பெற்றபின்தான் எக்ஸிட் ஸ்டாம்பே குத்தினாரு…அசடுவலிய அவரைப்பார்த்து நன்றி சொன்னதும்…அவரு என்ன ஒருமாதிரியா பார்த்தாரு…அந்த பார்வையில இப்படி வெண்ணையா மலேசியாவுலேயும் இருக்காதேன்னு சொல்றாமாதிரி இருந்துச்சு…

இது முடிச்சதும் அடுத்த 10 நிமிடத்தில் மலேசியா எல்லை வந்தது… அங்கே இமிக்கிரேசனில் 30 தினங்கள் தங்குவதற்கு விசா கொடுத்தார்கள்… சிங்கையில் கொடுத்த அதேபோல அட்டையும் தந்தார்கள்…இந்தமுறை ரொம்ப கவனமாக இருக்கனும்னு யோசிப்பதற்குள்ளயே என் மனைவி என்னிடமிருந்து எல்லாத்தையும் வாங்கிட்டாங்க… என்ன…உங்கள யெல்லாம் இவ்வளவு தூரம் பத்திரமா அழைச்சுகிட்டு வந்திருக்கேன் இதை பத்திரமா என்னால வெச்சுக்க முடியாதான்னு கேட்டேன்…உடனே பதில் வந்துச்சு… வெச்சிகிட்ட லெட்சணத்தை தான் பாத்தோமேன்னு…

மீண்டும் பஸ்புறப்பட்டது பொற வழியில் காலை சிற்றுண்டி கழிக்க ஒரு ஹோட்டலில் பஸ்சை நிறுத்தினார்கள்… என்ன சாப்பிடுவதுன்னு ஒரே குழப்பம் எல்லாமே சீன மலாய் உணவுதான்…
ஒருகடையில் முட்டை வைத்திருந்தார்கள் அதைபார்த்ததும் எனக்குள் சந்தோசம்…முட்டைசேண்டுவீச் சாப்பிடலாம்னு கைசாடை காண்பித்து ஒரு முட்டை சேண்டுவீச்சும் பக்கத்தில் வைத்திருந்த பர்கரை காண்பித்து ஒரு பர்கரும் கொடுங்கன்னே…
உட்கார சொன்னாங்க…5 நிமிசத்துல ரெண்டு சாண்டுவீச் மொத்தமா கொடுத்தாங்க… இவ்வளவு பெரிசா இருக்கே…முட்டை சின்னதாக தானே இருந்துச்சுன்னு பிரிச்சு பார்த்தா …முட்டையும் பர்கரும் ஒரே பண்னில் வைத்து சேண்டுவீச் பண்ணிருக்காங்க…
என்பிள்ளைகள் அதைப் பார்த்ததுமே வேண்டாம்னு சொல்லிட்டாங்க…என் மனைவிக்கு கொடுத்தேன்…ம்…ஒரு சேண்டுவீச் ஒழுங்கா ஆர்டர் பண்ணத் தெரியுதான்னூங்க… ஹி…ஹி…உன்னை கல்யாணம் பண்ணுவதற்கு முன்னடி ஒழுங்காத்தான் ஆர்டர் பண்ணுனே…இப்போ கொஞ்சநாளா இப்படி ஆயிட்டேன்னு சொல்லலாம்னு நினைச்சேன்…அப்புறம் இன்பசுற்றுலா துன்பசுற்றுலாவா மாறிடோம்னு சொல்லல…

மீண்டும் பஸ் புறப்பட்டது…தசவதாரம் படம் பஸ்சுல பார்த்தேன்…என் பிள்ளைகள் கேம் விளையாடினாங்க…பகல் 12.45க்கு கோலாலம்பூர் வந்தது… சிலர் இறங்கினங்க சிலர் ஏறினார்கள் … 10 நிமிடத்திலேயே பஸ்புறப்பட்டது…


ஹைவே இருபக்கமும் தென்னைமரம்போல நிறைய்ய மரங்கள்…அந்த தென்னை மரத்தில் கொடிகள் பின்னி இருந்தது… தேங்காயோ அல்லது குடும்பையோ அந்த மரங்களில் இல்லை…
“என்னங்க தென்னைமரம் இப்படி இருக்குன்னு” மனைவிகேட்டாங்க…
“இதுவா மலேசியா தென்னை மரமெல்லாம் இப்படிதான் இருக்கும்னு” பதில் சொன்னேன்…
“தேங்காய காணுமே”ன்னு கேட்டாங்க…
“இது என்ன கேள்வி…? வேர்பலா மாதிரி வேர்ல தேங்கா மொலைக்கலாம்…இப்படியெல்லாம் கேள்வி கேட்டு என்ன சங்கடப்படுத்தக் கூடாது”ன்னு சமாளித்தேன்…
“தெரியலைன்னா தெரியலைன்னு சொல்ல வேண்டியது தானே…அதுக்கு ஏன் இப்படி”ன்னாங்க…
நான் விடுவேனா…என் மைத்துனருக்கு போன் போட்டேன்…
ஏம்ப்பா…வழிநெடுவுலயும் தென்னமரம் மாதிரி இருக்கே அது என்ன மரம்ப்பான்னு கேட்டேன்…
பினாங்குதானே வந்துகிட்டு இருக்கீங்க…அதுக்குள்ள என்ன அவசரம்…? சந்தேகத்தெல்லாம் தாள்ல எழுதிவச்சுக்குங்க வந்ததும் சொல்றேன்னு போனை கட்பண்ணிட்டார்(ன்)…
அடப்பாவி நான் என்ன ஐயேஎஸ் பரிச்சை எழுதுறத்துக்கா சந்தேகம் கேட்டேன்…இப்படி பதில் சொல்றானே…ன்னு என்மனைவியை பாத்தேன்…
அந்த பார்வையை புரிஞ்சுக்கிட்டு நீங்க நினைக்கிற மாதிரி எங்க குடும்பம் ஒன்னும் இல்ல…
அதெப்படி மனசுல உள்ளத அப்படியே சொல்லி….டா…பொம்பளைங்களே இப்படித்தான் … மனசுல உள்ளத ஈஸியா புரிஞ்சுக்குவாங்க ஆனா புரியாத மாதிரி நடிப்பாங்க…!(இதுக்கு மேல சொன்னா...உருட்டுக்கட்டை நிச்சம்)

அது போகட்டும்… தென்னமரம் என்னமரம்…?

நாளைக்கு விடை கிடைச்சுடுங்க…

Monday, July 27, 2009

மனம் கவர்ந்த மலேசியா...6

சந்தோசா ஐலாண்டிற்கு உள்ளே செல்வதற்கு இரண்டு வழிகள்…
1. கேபிள் கார் வழியாக செல்லலாம்
2. பிரிஜ் (பாலம்) வழியாகவும் செல்லலாம்
புதிதாக வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கேபிள் கார் வழியாக போவதற்கு மிகவும் ஆர்வம் கொள்வார்கள்… கேபிள் காரில் மட்டும் செல்வதற்கு ஒரு நபருக்கு 19 சிங்கை டாலர்… ( துபாய் கிரிக் பார்க்கில் உள்ள கேபிள் காருக்கு ஒரு நபருக்கு 25 திரஹம் ) குழந்தைகளுக்கு 15 டாலர்…குழந்தைகள் இந்த கேபிள் காரில் போனாங்கன்னா…நல்லா ஜாலியா சந்தோசப்படுவாங்க…
பிரிஜ் வழியா உள்ள வருவதற்கு சந்தோசா நிறுவனம் தனியாக இலவசமாக பஸ் வசதி செய்திருக்கிறார்கள்…அதுமட்டுமல்ல இரயில் வசதியும் உண்டு…
தங்களின் சொந்த வாகனங்களில் வருபவர்களுக்கு 2 டாலர் நூழைவுக் கட்டணம் செலுத்தவேண்டும்…
அதை சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் முழுசா வேணும்…ஞாயிற்றுகிழமைப் போனால்தான் ஒரளவு கூட்டத்தைப்பார்க்கலாம்…

அங்கேயே பீச்சும் இருக்கிறது…குளிக்கின்ற மாதிரி ஏற்பாட்டுடன் சென்றால் இன்னும் ஜாலியா இருக்கும் ( குளிக்கின்றவர்களுக்கு மட்டும்தாங்க பயப்புடவேண்டாம் )…

எங்க உறவினர்கள் ஒருபட்டாளம் காரில் வந்தங்க…நாங்க கேபில் கார்லபோனோம்…இந்த இடத்துல மலேசியா லங்காவி கேபில் காரை கம்பேர் பண்ணும்போது இது ஒன்றும் பெரிசா தெரியலை…மலேசியா போகாமல் சிங்கையை மட்டும் சுற்றி பார்க்க வந்தவங்களுக்கு இந்த கேபில்kaர் ஒகேங்க…
நாங்க போனநேரம் வானிலை நல்ல சூடுங்க…சூடா இருக்குன்னுதான் பீச்சுல குளிச்சேன்…இல்லென்னா…வேணாங்க ரகசியத்தையெல்லாம் சொல்லப்படாது

குளிச்சுட்டு சாப்பிட ரெடியானோம்…நல்லபசி…இவ்வளவு கூட்டத்துக்கும் ஹோட்டல்ல வாங்கினா கொண்டுவந்த காசு காலியாகிடும்னு…சூப்பர் பிரியாணி ரெடி பண்ணிருந்தாங்க…பெரிய பண்டாரி ஆக்கினது…அவர் ரொம்பபேமஸானஆளுன்னாங்க…பேருக்கூடஏதோ சொன்னாங்க…ம்…ஞாபகம் வந்திடுச்சிஇஸ்மத்...ன்னாங்க…என்ன அப்படிபாக்குறீங்க…சாச்சாத்…நானேதான்…
(நம்ம கீழைராஸா சாப்பிட்டுட்டு நாளுநாளா படுக்கையை விட்டு எழுந்திருக்கலேண்ணா பார்த்துக்கோங்க…அவ்வளவு மோசமான்னு கேக்கிறீங்களா… சாப்பிட்டா நான் சமைச்ச பிரியாணிதான் சாப்பிடுவேன் இல்லைன்னா எனக்கு சாப்பாடே வேணான்னுட்டார்…)
சுhப்பாட்டு வேலை முடிஞ்சுது…மீண்டும் சுற்ற ஆரம்பித்தோம்…அங்கு நிறைய்ய நிகழ்ச்சிகள் செய்யிறாங்க…அதெல்லாம் மாலை நேரத்துல…
கிளிசைக்கிள் ஒட்டுகிறது…பிஸ் அக்குவாரியம்…இது துபாயில் அட்லாண்டிக் ஹோட்டல்ல உள்ள அக்குவாரியத்தை விட சின்னதுதான் ஆனால் துபாய்க்கு முன்னால் இவங்கதான் முதலில் அதை பிரகடணம் படுத்திருக்காங்க…


சந்தோசாவுல பெரிய சிங்கம் இருக்கு…அதன் உள்ளே போவதற்கு 18 டாலர் வாங்குறாங்க…இது கொஞ்சம் கொல்லையடிக்கிற மாதிரி தெரியுதுங்க…லிப்டில் ஏறிபார்ப்பதற்கு இவ்வளவு காசு கொடுக்க கொஞ்சம் கஸ்டமாதான் இருந்துச்சு…

இதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றப்ப…எனது மைத்துனர் போன்போட்டு மலேசியாவுக்கு உடனே கிளம்ப உத்தரவு போட்டாரு…
நாளைகிளம்பலாம்னு யோசனை பண்ணினேன்…

உறவுக்காரங்ககிட்டே கேட்டேன் பஸ்ல போகலாமா…அல்லது இரயிலில் போகலாமா…?ன்னு…
நீங்க பினாங்கு போறதுனால…பஸ்ல போங்க…இரயிலில் போனால் காலையில 7.15க்கு புறப்பட்டு இரவு 9.45க்கு போய் சேரும்…அவ்ளோ பாஸ்ட்…அதனால பஸ்ல போவது சிறந்தது..ன்னு சான்றிதழ் கொடுத்தாங்க…


டிக்கேட் எப்போ எங்கே எடுப்பதுன்னு கேட்டேன்…சந்தோசா முடிச்சுட்டு நேரா பஸ்புக்கிங் செய்துடலாம்ன்னாங்க ( ஆள் காலியான சரிதான்ன்னு…ச்சீச்சீ அப்படில்லாம் இல்ல…அவங்க ரொம்ம்ம்ப நல்லவங்க)

சந்தோசா சுற்றின களைப்புடன் நேரா… சாப்பாட்டுகடைக்கு அழைச்சுகிட்டு போனாங்க…(இது தான் கடைசி சாப்பாடு…இதோட இவனை ஒழிச்சடனும்ன்னு) மீங்கோரி நியூடல்ஸ், நாசிகுவைத்தி ,நாசிலாமா…eப்படி பல பெயர்களில்…எல்லாமே கருவாட்டு வாடையுடன்…விடுவேனா…ஒருகட்டு கட்டினே…(பாவி பாவி…போறநேரத்திலேயும் இப்படி திங்கிறானேன்னு நினைச்சுறுப்பாங்க தானே…அவங்க நனெச்சாஎன்ன…வயத்துக்கு வஞ்சனை செய்யக்கூடாதில்ல)
சாப்பாட்டை முடிச்சுட்டு…பஸ்புக்கிங்…

சிங்கையிலிருந்து கோலலம்பூர் போவதற்கு நிறைய்ய பஸ் இருக்கு ஆனால் பினாங்கு போவதற்கு காலையில் 7.30 மணிக்கும் இரவு 10 மணிக்கும் மட்டும் தான் இருக்கு…
காலைபஸ்சுல புக் பண்ணினோம்…ஒரு நபருக்கு 55 டாலர்…இதையே ஜொஹ_ர்பாரில் எடுத்தால் மலேசியா ரிங்கிட் 55 தான்…சிங்கை டாலர் இரண்டரைமடங்கு மலேசியாவை விட அதிகம்.
பிள்ளை குட்டிகளுடன்…(குட்டின்னதும் வேறமாதிரி நினைச்சுட வேண்டாம்)
போறதுனால சிங்கையிலிருந்தே கிளம்பிடலாம் ஜொஹ_ர் வேண்டாம்ன்னு டிக்கேட் எடுத்திட்டேன்…
டிக்கேட் எடுக்கும் போது இரவு மணி 10…காலையில் 7.30க்கு பஸ்சுல இருக்கனும்…இல்லேன்னா…

220 டாலர் டா..டா…காண்பிச்சுட்டு போயிடும்…அதனால நான் தூங்க போறேன்…மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாம்…!

Friday, July 24, 2009

மனம் கவர்ந்த மலேசியா....5

சனி ஞாயிறு என்றாலே சிங்கை மக்களுக்கு கொண்டாட்டம் தான்…விடுமுறை நாள் அல்லவா…! குடும்பத்தோடு நண்பர்களோடு உறவினர்களோடு சந்தோசமா விடுமுறையை கழிக்கிறாங்க…
பல தமிழர்களைத் தவிர…
நம்ம ஆளுங்க நல்லாவேலைப் பார்ப்பாங்க நல்லா சாப்பிடுவாங்க நல்லாத் தூங்குவாங்க…விடுமுறைன்னா சினிமாவுக்கு போவாங்க…அவ்வளவு தான்…


வெளியில் சுற்றினால் சிலவாகுமேன்னு சிலர் குடும்பத்துக்கு கொடுக்கனும்னு தன்னுடைய சந்தோசத்தை சுருக்கிக்கிறாங்க…( நைனா…துபாய்லியும் அப்படித்தான் கீராங்க…ம்…தெரியும்… தெரியும் ) சொந்த தொழில் வைத்திருப்பவர்களும் ஞாயிருக் கூட சிலர் விடுமுறை விடுவதில்லை…
ஆனால் அங்கு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருப்பது சீனர்களும் மலாயர்களும் தான்…!
நாம மூன்று வேலை சாப்பிடுவதை அவர்கள் அதை ஐந்து வேலையாக சாப்பிடுகிறார்கள்… உண்பது அவர்களுக்கு ஒரு கலை…அதனால்தான் சிங்கையில் எங்குப் பார்த்தாலும் அதிகமான உணவகங்கள்…!
அவர்களை மூலமாக வைத்து தான் நம்மவர்கள் முதலீட்டுகிறார்கள்...

எனது தந்தையைப் பற்றி இந்த இடத்துல நான் சொல்லியாகனும்…
அவர் சிங்கப்பூர் பிரஜை…55 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழ்ந்தவர்…

"காத்தோன்"- என்ற இடத்தில் 5அடிகடை வைத்திருந்தார்… 5அடி கடையென்றால் பில்டிங்கின் நடைபாதையில் 5அடிக்குள் செவிற்றில் ராக்கைகள் அடித்து அதில் பொருள்களை வைத்து சுமார் 45 ஆண்டுகள் அதில் வாழ்ந்தவர்…

ஏழு பிள்ளைகளுக்கு தந்தை… அதனால் அவர் எங்களுக்கு ஆலமரமாக இருந்து எங்களுக்கு நிழல் கொடுத்தவர்…இவருக்கு சிங்கையில் தெரிந்த இடம் மூன்று மட்டும் தான்.
ஏர்போர்ட்,இவர் தங்கியிருக்கும் வீடு,கடை எங்கும் செல்ல மாட்டார் உறவினர்கள் கூட இவரை வந்துதான் பார்ப்பார்கள்…
இறுதியாக சக்கரை நோயினால் காலில் புண் ஏற்பட்டு பக்கத்து கடைக்காரரகள்; இவரை வழுகட்டாயமாக அழைத்து போய் ஆஸ்பட்டலில் சேர்த்தார்கள்…டாக்டர்கள் அவர் காலை வெட்டி எடுக்கவேண்டும் என்று நாள் குறித்தார்கள்.

என் உறவினர்களின் தொலைபேசியின் செய்தியறிந்து பதற்றத்துடன் 2002-ல் சிங்கை சென்றேன்…அனாதையாக ஆஸ்பட்டலில் அவர் படுத்திருந்ததைப் பார்த்ததும்…அழுதேன்…இப்போது கூட என்னால் இந்த வாசகத்தை டைப் செய்யமுடியவில்லை…கண்ணீர் துளிகள் எழுத்துக்களை மறைக்கிறது.……………
எங்கள் குடும்பத்துக்காக இவரின் தியாகம் கொஞ்சமல்ல…ஏழு பிள்ளைகளுக்கும் தனித்தனி வீடு கட்டிகொடுத்தவர்…ஆனால் தன்னுடன் வேலைபார்ப்பவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு இவர் மழையின் சாரலில் சாக்கடைக்கும் அருகில்தான் இவரின் இரவு உறக்கம்…என் தந்தை ஹாஜி ஜே.கமாலுதீன்

ஒரே இரவில் 45ஆண்டுகள் உணவளித்த அந்தக் கடையை காலி செய்த போது என் மனம் ரனமானது…எனக்கே இப்படி என்றால் அதில் வாழ்ந்த என் தந்தைக்கு எப்படி இருந்திருக்கும் பக்கத்து கடைக்காரர்களெல்லாம் அனுதாபத்தோடு பார்த்தார்கள். அந்த தருணத்தில் என் உறவினர் மச்சான் ஜெகபர் அலி நிஜாமுதீன் அண்ணன் அவர்களின் உதவி பெரிதாக இருந்தது…என்றும் மறக்க முடியாதது…
சிங்கப்பூர் வாழ்க்கையை பற்றி சிங்கை மினிஸ்டர் மாண்புமிகு நாதன் அவர்கள் எழுதிய நூலில் என்தந்தையின் புகைப்படத்தையும் கடையையும் பற்றி குறிப்பிட்டிருந்தார்…

கால் ஆப்ரேசன் செய்யாமல் அவரை ஊறுக்கு அழைத்துக் கொண்டு போய்…நாகையில் டாக்டர் அன்சாரி என்பவரிடம் காண்பித்து வெட்டவேண்டிய காலின் புண்ணை குணமாக்கி என் தந்தையை நடக்க வைத்தார்…டாக்டர் அன்சாரி அவர்களுக்கு இந்த நிமிடத்திலும் என் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்…

2004-ல் என் தந்தை காலமாகி விட்டார்…அப்போது வயது 67….45ஆண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் தன் குடும்பத்தாரோடு எத்தனை ஆண்டுகள் வாழ்திருப்பார்…இரண்டாண்டுக்கு ஒருமுறை தாயகம் செல்லும் அவர் அதிகபட்சம் 4 மாதங்கள் மட்டுமே தங்கிருப்பார்…என் தந்தையின் மரணத்திற்கு பின் தான் அவர் சேர்த்து வைத்திருந்த பலகோடி சொத்தின் மதிப்பு எனக்கு தெரிந்தது…குடும்பம் குடும்பம் என்றே தன் வாழ்க்கையை தானம் செய்தவர்…
என் தந்தையைப் போன்று இன்னும் பலரின் தந்தைகள் இப்படித்தான் சிங்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்…பொருளீட்டுகிறார்கள்.
இப்படி ஒயாமல் சம்பாதிப்பே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் மனஉலைச்சலையும் சக்கரைநோய்யையும் இரத்த அழுத்தத்தையும் கூடுவே
சம்பாதித்துக் கொள்கிறார்கள்…வாழ்க்கையை திட்டமிடுதல் என்பது பலருக்கு புரியாததாகவே இருந்துக் கொண்டிருக்கிறது…

விடுமுறை நாட்களில் வெளியில் செல்வது மன உலைச்சலை குறைக்கும்; நடைகிடைக்கும் அதனால் உடலும்,மனமும் சீர்பெறும்…இன்னும் நகைச்சுவை உணர்வுமிக்க நண்பர்களுடன் சென்றால் நம்மை மறந்து சிரித்து மகிழலாம்…

எனது இலக்கியநண்பர் துபாயில் பல ஆண்டுகளாக பணிபுரிகிறார். அவர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழ்பவர். வெளியில் எங்கும் செல்வதில்லை… இந்த வாரம் தான் என் இலக்கிய சகாக்களுடன் பூங்காவிற்கு அழைத்துச் சென்றோம்… மிகவும் சந்தோசப்பட்டார்…
நமக்கு அமையும் நண்பர்களை பொருத்து தான் நம் பழக்கமும்.
நல்ல பழக்கங்களுடைய நண்பர்களை நாம் அமைத்துக் கொள்வதை பொருத்தே நம் உடலுக்கும், உள்ளத்திற்கும்,ஆரோக்கியமும்,அமைதியும் நமக்கு கிடைக்கும்…

இது அறிவுரை அல்ல வாழ்க்கையின் எதார்த்தம்…என்று நீங்கள் எடுத்துக் கொண்டால்…………இந்தப் பகுதியும் சுற்றுலாதான்…!

சிந்திப்போம்… மீண்டும் சந்திப்போம்…!

Thursday, July 23, 2009

மனம் கவர்ந்த மலேசியா...4

சனிக்கிழமை விடிந்து விட்டது…இன்று மாலையில் தானே திருமணம்…காலையில் எங்கே போகலம்னு…யோசனை செய்துக்கிட்டு இருக்கின்றப்ப…
“நாங்க ஷாப்பிங் போறோம்…. நீங்களும் வறீகளா சாயங்காலம் போற கல்யாணத்துக்காக ரெஸ்ட் எடுக்கப் போறீங்களா”…ன்னு என்மனைவியார் கேட்டாங்க…
“ரெஸ்டா…அதுக்கா இவ்வளவு சிலவு பண்ணி வந்தோம்…நானும் வாரேன்…ன்னு கிளம்பினேன்”…அந்த சமயத்துல என்மச்சான் (தாய் மாமன் மகன்) டெலிபோன் செய்தான்…
“என்ன மச்சான்…சொல்லு” ன்னே…
“இன்னைக்கு ராத்திரி சிங்கப்பூர் ஏகத்துவ மெஞ்ஞானசபையிலேந்து உன்னை சீப்கெஸ்டா அழைச்சிருக்காங்க…அதனால எங்கயும் போகாத 5 மணிக்கெல்லாம் உன்னை அழைக்க வருவேன”…னு சொன்னா…எனக்கு பகீர்ன்னது…
உடனே நான்… “மச்சான் கல்யாண நிகழ்ச்சி இருக்கேடா”…ன்னு சொன்னேன்…
“கல்யாணத்துக்கு தானே…நம்ப பொம்பளைங்கள போக சொல்லிட்டு நாம சபை நிகழ்ச்சிக்கு போய்டுவோம்”;…ன்னா…
“எது…பொம்பளைங்களை மட்டும் அனுப்புறதா…? நல்லா கதைய கெடுத்த…
நான் போகாட்டி நல்லா இருக்கும்மா… ( என்னமோ…கல்யாணமே நின்னுபோறா மாதிரி…) ச்சேச்சே..அங்க போய்ட்டு பின்னே எங்கே வேண்டுமானாலும் கூப்பிடு வர்றேன்…ன்னே”…( கண்ணுல பிரியாணி தட்டை )
“இப்ப என்ன தான் செய்ய”…ன்னு கேட்டான்…
“நிகழ்ச்சிய எட்டு மணிக்கு வைக்கச் சொல்லு…( என்னம்மோ…பெரிய ஸ்டாருன்னு நெனப்பு ) கல்யாணத்துல தலைய காண்பிச்சுட்டு அங்கிருந்து கிளம்பிடுவோம்”…ன்னு சொன்னதும் ஒகே சொன்னான்…( அப்பா…இன்னைக்கு பிரியாணி இருக்கு…)

மார்கெட்டுக்கு புறப்பட்டோம்…தேகா…இது நமது தமிழர்களின் வியாபார சந்தை…புடவை எடுக்கலாம்னு புடவை கடைக்கு போனோம்… கலெக்ஷன் நிறைய்ய இருந்தது… துணியும் சாப்ட்டாக இருந்தது… துபாயை கம்பேர் பண்ணாம என்னால இருக்க முடியல… எதைப்பார்தாலும் துபாயில என்ன விலை இங்கு என்ன விலை இப்படி பார்த்து பார்த்து தான் ஒவ்வொன்றையும் வாங்கினோம்…
புடவைகளை பொருத்த மட்டில் துபாயை விட சிங்கப்பூரில் விலைக்குறைவு..
துணியும் தரமாக இருந்தது…
என் மனைவிக்காக வேண்டிய சாமான்களை வாங்கி முடிச்சாசு …கிளம்பலாமான்னு கேட்டாங்க…
“ம்… கிளம்பலாம்… ஒரு சம்பர்தாயத்துக்காவது… ஏங்க ஒரு சட்டை வாங்கிக்க ங்களேன்னு ஒரு வார்த்தை சொன்னியா…நீ… பொம்பளைங்களே இப்படித்தானா…?ன்னு தைரியமா கேட்டதும்…கொரா…முரான்னு ஒரு சட்டை எடுத்து கொடுத்தாங்க…ஹி…ஹி…தேங்ஸ்ங்க…ன்னு ஒரு கூல தேங்ஸ் சொல்லிட்டு கிளம்பினோம்… ( நல்ல வேளை என் மனைவி பக்கத்துல இல்ல… ஊருக்கு போயிருக்காங்க… அதனால தைரியமா எழுதலாம்…என்ன அப்படி பாக்குறீங்க நா…நான் பயப்புட மாட்டேன்…ம்…தெரியுமுல்ல)

மாலை 5 மணிக்கு கல்யாணத்துக்கு போவதற்கு தயாரானோம்

மாலை 5 மணிக்கு கல்யாணத்துக்கு போவதற்கு தயாரானோம்…

ஒரு பெரிய ஹால் புக் பண்ணிருந்தாங்க…நாங்க போய் சேருவதற்கு 6 மணி ஆச்சு…ஹாலுக்குள்ள போனதும் புதுமண தம்பதிகளை வாழ்த்தி சிலவரிகள் எழுதனும்னு சொன்னாங்க…அங்கு பழக்கமாம்…வருகிறவர்கள் தங்களுடைய்ய வாழ்த்துக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த நோட்புத்தகத்தில் எழுதுவார்களாம்…
என்னையும் எழுதச்சொன்ன போது அந்த புத்தகத்தை திருப்பி பார்த்தேன் அனைவரும் ஆங்கில வாசகங்களையே வாழ்த்துச் செய்திகளாய் எழுதியிருந்தங்க…நானும் வாழ்த்தி எழுதினேன்… ஹி….ஹி…தமிழ்ல எழுதினா…எங்கே…கிராமத்தான்னு நினைப்பாங்களோன்னு ஆங்கிலத்துல அப்படியே காப்பி அடிச்சு எழுதிட்டேன்…
என்னை வரவேற்க…பெரிய பட்டாளம் எல்லோரும் என் சொந்தங்கள்…( துபாயிலேந்து வந்திருக்கான்… மொய் பெரிசா வப்பான்னு நினைச்சுரப்பாங்க) நல்லா கவனிச்சாங்க…
வந்து சொந்தங்களை விசாரிப்பதற்கு முன்னாடியே 6.30 மணிக்கெல்லாம் சாப்பாட்டை வச்சிட்டாங்க…உட்காருப்பா… சாப்பிடுப்பான்னு என் மாமா உட்கார வச்சிட்டாரு…( இல்லன்னா… சாப்பிட்ருக்காத மாதிரி)
அந்த சமயத்துல மைக்கில் அலொண்ஸ் பண்ணாங்க…எங்கள் பாசத்திற்குரிய துபாயிலேந்து வந்திருக்கும் மச்சான் இஸ்மத்தை வெறித்தனமா வரவேற்கிறோம்னு… சொன்னதும் எல்லோரும் என்னைப் பார்க்க… நான் கண்டுக்காம பிரியாணி சாப்பிடுறதுல மும்பரமா இருந்தேன்…
பந்திக்கு முந்து படைக்கு பிந்துங்கற மாதிரி…வந்த வேலைய ஒழுங்கா கச்சிதமா முடிச்சேன்…
துபாய்லிருந்து போறவங்க தயவு செய்து மினரல் வாட்டர் பாட்டலை கையில் எடுத்து போங்க…அங்கு சோறு கிடைக்கும் குடிக்க தண்ணிகிடைக்காது…ஆமாங்க…அவங்க வைக்கிற தண்ணி எது தெரியுமா…? பேப்ஸி கொக்கோகோலா…இப்படி உள்ள தண்ணிதான் வைக்கிறாங்க…


ஏகத்துவ மெய்ஞ்ஞானசபைக்கு போவதற்கு தயாரானேன்…
எட்டு மணின்னு சொல்லி 8. 30 க்கு தான் போனோம்…அங்குள்ள சகோதரர்கள் பாசத்தோடு வரவேற்றார்கள்…தமிழகத்தில் பல ஊர்களை சார்ந்தவர்கள்…ஆன்மீகத்தில் உள்ள ஈடுபாட்டால் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்திருக்கிறார்கள்…எனது ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை வலைப்பூவை பாhர்த்தால் அதன் விபரங்கள் தெரிந்துக் கொள்ளலாம்…
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்புவதற்கு இரவு 11 மணிக்கு மேல் ஆகி விட்டது…
(ரொம்ப மொக்கையா இருக்கோ...)
நாளை ஞாயிறு சந்தோசா என்ற ஓரு ஐலாண்ட் போகப்போறோம்…

Wednesday, July 22, 2009

மனம் கவர்ந்த மலேசியா...3

நேற்று குளித்துவிட்டு உறங்குனதுல…காலையில் எழுவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கிச்சு…ராத்திரி உறங்கவுவதற்கு முன்னாடியே மனைவி சொன்னங்க….
“ரெண்டு நாள் சிங்கப்பூர் போதும்…மலேசியா போய்டுவோம்…தம்பி போன் போட்டுகிட்டே இருக்கான்னு”….
மலேசியாவில் உள்ள சொந்தம்
என் துணைவியாரின் சகோதரர் எனது பாசத்திற்குரிய மைத்துனர் (படிச்சாலும் படிப்பா(ன்)ர்) பினாங்கில் குடும்பத்துடன் வசிக்கிறார்…அவருடைய தூண்டுதலும் எங்க பயணத்துக்கு ஓரு காரணம்…கிளம்பும் போதே… ரெண்டுநாளுக்கு மேலே சிங்கையில் பார்க்க இடமில்லை…மலேசியாவுல தான் அதிகமான இடம் இருக்குன்னு சொல்லிட்டாரு…
சிங்கைக்கு புதன் இரவு வந்தோம்…வியாழன் -வெள்ளி-சனி (இது முக்கியமான நாள்) –ஞாயிரு…திங்கள் அன்று மலேசியா கிளம்பிடலாம்னு…கணக்கு போட்டு சொன்னேன்…
அத்தனை நாள் என்ன பண்ணப் போறோம்னு என் துணைவி கேட்டாங்க…

இன்று வெள்ளி என் சொந்தபந்தங்களை பார்ப்போம்…

சனி…இது முக்கியமான நாள்…மாலையில் ஒரு கல்யாண நிகழ்ச்சி இருக்கு அதற்கு அவசியம் போய் வரனும் ( சிங்கையின் கல்யாண சாப்பாட்டை மிஸ் பண்ணலாமா…?)
“இந்த கல்யாணத்துக்கு அவசியம் போய்தான் ஆகனும்மா”…ன்னு கேட்டாங்க…
“ஆமாண்டி செல்லம்…தேடிவர்ற பிரியாணிய வேண்டாம்னு சொல்ல யாரும் பிரியப்படுவாங்களா…வந்த இடத்துல வருகிற வாய்ப்பை …நழுவவிடக்கூடாதம்மா”…!
“ம்…உங்களயெல்லாம் திருத்தவே முடியாதுங்க”…!
“தேங்ஸ்…மேடம்”…!


ஞாயிறு….சந்தோசா போறோம்….
திங்கள்…பறவைகள் பூங்கா போறோம்….இரவு மலேசியா போய்விடலாம்னு..எனது ஐசக் நீயூட்டனின் திட்டத்தை சொன்னேன்…
“ம்…கும்…சரி..இப்போ எங்கேப் போறோம்”-ன்னாங்க.
“என் மாமா வீட்டுக்கு போய்ட்டு…அப்படியே..தொழுகையை முடிச்சுட்டு சாயங்காலமா…சிங்கம் வாய்லேந்து தண்ணி ஊத்துமே ( இப்படி சொன்னா தாங்க புரியும் நாங்கலெல்லாம் கிராமமுங்க ) அந்த இடத்துக்கு போறோம்னு”- கிளம்பினோம்…

தொழுகையை முடித்தேன்…மாமா தந்த மாமிச பிரியாணியை சுவைச்சேன்…சொன்னா மாதிரி கிளம்பிட்டேன்…

துரியான் பழம் நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா…? துபாயில கேரிபோர் சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்…விலை அதிகம்… பச்சைநிறத்தில் நம்ம ஊரு பழாபழம் மாதிரி இருக்கும் ஆனா சின்னதா இருக்கும்…
விளைச்சல் மலேசியா… ஜூன் மாதம் தான் அந்த பழத்தோட சீசன்.. நிறையக் கடையில கிலோ 5 டாலருக்கு விற்பனை செய்தாங்க…மலேசியாவுல இந்த பழத்தின் விலை குறைவாம்…இதை ஆர்வத்துடன் வாங்குவதற்கு மக்கள் கூட்டம்…
புதுசா சாப்பிடுகிற சிலருக்கு அதன் வாடை பிடிக்காது…சாப்பிட சாப்பி;ட தான் அதன் ருசி தெரியும்ன்னு சொன்னாங்க…
ஒரு பழத்தை வாங்கி என்குடும்பதாரிடம் கொடுத்தேன்…ம்கூம்…யாரும் சீண்டக்கூட இல்லை…விடுவேனா…நானே எல்லாத்தையும் சாப்பிட்டேன்…( அதுதான் எங்களுக்கு தெரியுமேன்னு சொல்றீங்களா)
இப்ப எதுக்கு இந்த பழத்தை பற்றி சொல்றேன்னா…இந்த பழத்துடைய வடிவத்தில் ஒரு பில்டிங் கட்டிருக்காங்க…பார்பதற்கு எவ்வளவு அழகு…!
துபாயில இல்லாத பில்டிங்கான்னு நீங்க சொல்றீங்க…ஆனா இது கொஞ்சம் வித்தியாசம்…!
எந்த அழகையும் ரசிக்கனுமுங்க…
இயற்கையின் அழகையும்…மனித அறிவு வெளிப்பாட்டின் அழகையும் ரசிக்கனுமுங்க… அந்த இறைவனைனுக்கு தாங்க நன்றி சொல்லனும்…!

சிங்கையில ஒரு இடத்துக்கு போகனுமுன்னா கஸ்டம் இல்ல…எம்ஆர்டி ( நமக்கு வரப்போற மெட்ரோ ரயில் மாதிரி) இரயில் எல்லா இடத்துக்கும் போகுது…இடத்துடைய்ய பேரை மட்டும் நாம் கேட்டு வெச்சுக்கனும்…துணை தேவையே இல்ல…யாருக்கும் சிரமம் கொடுக்காம சிங்கை வருகிறவர்கள் அவர்களாகவே சுற்றி பார்க்கலாம்…அவ்வளவு எளிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள்…

மாலை நேரத்தில் சிங்கப்பூரின் சிங்கத்தைகான…சிங்க குட்டிகளா நாங்கப்போனோம்…பார்க்க…பார்க்க…அழகா இருந்தது…நேரம் போனதே தெரியலை…என் உறவு காரங்ககிட்ட… “சிங்கத்தோட தலை மட்டும் சிங்கமா இருக்கு…உடம்பெல்லாம் மீன் மாதிரி இருக்கே…இதனுடைய கதை என்னன்னு”…கேட்டேன்…
உடனே என் மகள்… “டேடி…நான்தானே உங்ககிட்டே கேட்டேன்…நீங்க கேட்கிற மாதிரி கேக்கிறீங்க”…?
ஹி…ஹி…ஹி….விடமாட்டேங்கிறாங்கப்பா…

கல்யாணத்துல சந்திப்போமுங்கோ….

துபாய் பதிவரின் தூறல்...

கீழைராஸா காலைல போன் செஞ்சாரு....பதிவை பாத்தீங்களா...?ன்னாரு...இன்னும் இல்லையே...ன்னே...பாருங்களேன்னாரு....பார்த்தேன்....படித்தேன்...வியந்தேன்....
வியக்கின்ற அளவுக்கு என்ன இருக்குன்னு நீங்க கேட்குறீங்க தானே.....
சுவிஸ்டார்ல பார்த்த கீழைராஸா ...அமீரகபதிவர்களின் மாநாட்டிற்கு போய்ட்டு வந்ததும்...சூப்பர் ஸ்டாரா ஆயிட்டாரேன்னு....வியப்பு.!
32 கேள்விகளுக்கு பதிவர்கள் எல்லாரும் பதிலைத் தரனும்னு...இதுவேண்டுகோளா தெரியலை...தராட்டி வெட்டிபுடுவேன்னு(கொலை வெறி அதிகமிருக்கு) சொல்றா மாதிரி இருந்ததினால.....
பயந்துதான் பதிலை சொல்லிருக்கேன்....அமீரகப்பதிவர்கள் அனைவருக்கும்னு சொன்னதுனால...கொஞ்சம் தைரியம் வந்திருச்சிங்க......அந்த தைரியம் தான் இந்த பதிலுங்க....


1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
K.லியாக்கத்அலி...இது அப்பா அம்மா வைத்தது
நான் பிறந்தது கிளியனூர்....எழுத்தின் மேல் உள்ள காதலால்...எழுந்தது...இஸ்மத் என்ற புனைப்பெயர்...இந்த இரண்டும் இணைந்தது தான்....கிளியனூர் இஸ்மத்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
ஆண்கள் அழக்கூடாது

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
அதுதான் என் தலை எழுத்து

4.பிடித்த மதிய உணவு என்ன?
மீன்குழம்பு

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நட்பு நட்பாக இருந்தால்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
குளிக்க ரொம்ப பிடிக்கும்

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
ஆர்வம்
கோபம்


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
காதல்
மோதல்

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் சுயத்தின் பக்கம்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெண்மையும் நீளமும்

12.என்ன பார்த்துஃஃகேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என்அலுவலக ஜன்னலை தாண்டி தெரியும் கடல்கரை
உண்மைகளை சொல்லி மாட்டிக்காதடா...என் உள்மனம்


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மனதை கவரும் வானவில்

14.பிடித்த மணம் ?
குழந்தையின் மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அதை கீழை ராஸாகிட்டத்தான் கேட்கனும்

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அமீரகப் பதிவர்கள்

17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கையே ஒரு விளையாட்டு

18.கண்ணாடி அணிபவரா?
கண்ணாடியாக இருக்க ஆசை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
வாழ்க்கையை படிக்கும் படம்

20.கடைசியாகப் பார்த்த படம்?
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்

21.பிடித்த பருவ காலம் எது?
கோடையும் வாடையும்

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
மனிதர்களை

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இனிமேல் தான் யோசிக்கனும்

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மலர்கள் மலரும் சத்தம்
மனித வெடிகுண்டுகளின் சத்தம்


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
தூரம் அதிகமில்லை என் மனதில்


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அதை நீங்கதான் சொல்லனும்

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தீவிரவாதம்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கவிதை எழுதுகிறான்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
கொடைக்கானல் - மலேசியா - மஸ்கடில் உள்ள சல்லல்லாஹ்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மனிதனாக

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சமையல்

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நாடகமேடை

Tuesday, July 21, 2009

மனம் கவர்ந்த மலேசியா....2

சென்னையிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சிங்கைக்கு தயாரானோம்…30கிலோதான் அனுமதி…அதுக்கு மேலபோன வெகுமதிங்க…

என்சொந்தக்காரங்க பிள்ளைகுட்டியுடன் சிங்கப்பூர் போகனும்னு என்கூட அனுப்பிவைச்சாங்க…அவங்க புதுசாபோறங்கலாம்…
அவங்களை வழியனுப்பிவைக்க வந்த கூட்டம்…என்னமோ என்முதுகிலே அவங்கள தூக்கிகிட்டு போறாமாதிரி ஒவர் அட்வைஸ்…(அட்வைஸ் என்றாலே எனக்கு அலர்ச்சி)….ஓருவழியா சமாளித்து அழைத்துக் கொண்டு போய்விட்டேன்…

சிங்கையில இறங்கினோம்…இஸ்லாமிய பெண்கள் தான் மூக்குவரை மூடி பர்தா அணிந்திருப்பாங்க…ஆனா சைனீஸ்காரர்கள் ஆண்கள் பெண்கள் வெள்ளை துணியாள் மூக்கை மூடிருந்தாங்க…
இது என்ன புதுகலாச்சாரமா இருக்கேன்னு யோசனை பண்ணிக்கிட்டே இமிக்கிரேசனை நோக்கி நடந்தேன்…

பெரிய கேமரா ஒவ்வொரு ஆளையும் படம் பிடிச்சது…என்னன்னு விசாரித்தா…சொல்றாங்க…ஏதோ பன்றிகாய்ச்சலாம்…வரக்கூடியவர்களுக்கு அது இருக்கான்னு பரிசோதிக்கிறார்களாம்…
அப்பத்தான் விளங்கினது ஏன் மூக்கிலே வெள்ளதுணிண்னு……மூக்கை மூடுனவனுக்கு நோய்இல்ல திறந்திருப்பவனுக்கு இருக்குன்னு நனப்பாங்களோன்னு….
நைசா பேண்ட் பாக்கெட்டுல கையவிட்டேன்…கர்ச்சிப்பை எடுத்தேன் பொத்திட்டேன்ல்ல…மூக்கை…!

இமிக்கிரேசன்ல 30 தினங்கள் சிங்கையில் தங்குவதற்கு அனுமதி தந்தாங்க…சாமான்களுடன் வெளியில் வந்தோம்…எங்களை வரவேற்க என்உறவினர்கள்…என்கூட வந்த குடும்பத்தை அழைப்பதற்கு அவருடைய கணவர்…அவர் என்னைக்கண்டதும்…அப்படியே கட்டி தழுவினார்…

அடா ரொம்ப நல்ல மனுசனா இருக்காரேன்னு நனெச்சேன்…தன் குழந்தை குட்டிக்கு உம்மா கொடுத்துவிட்டு…அப்படியே திரும்பி அவர் மனைவிக்கும் உம்மா கொடுத்தாருங்க…(அடப்பாவி என்குடும்பத்துக்கு நேராவா இதைக் கொடுக்கனும் இறங்கின உடனேயே என்குடும்பத்துல பிரச்சனைய உண்டாக்கிட்டாங்களய்யா)
நான் அப்படியே என் மனைவிபக்கம் திரும்பினேன்…அவங்கபார்த்த பார்வை ஏதோ ஒரு சீரியல்ல வடிவுக்கரசி கோபமா பார்த்தா மாதிரி இருந்துச்சு…அந்த பார்வையோட அர்த்தம்…ம்…நீங்களும்தான் இருக்கீங்களே…!(ரொம்ப மொக்கை போடுறேனோ…)


மறுநாள்…வெளியில் சுற்றுவதற்கு தயாரானோம்…என்உறவுக்காரங்களும் எங்கக்கூட வந்தாங்க…குளிக்கிறமாதிரி உள்ள இடத்துக்கு போகலாம்னு சொன்னேன்…துபாய் ஜூமேராவில் வயில்டு வாடி இருக்கே…அதே மாதிரி …
ஆனால் துபாயை விட அங்குள்ள வயில்டுவாடி நுழைவுக் கட்டணம் குறைவுதான்…துபாயில 150 திரஹம்…சிங்கையில 50 திரஹம் மட்டும்…

என்பிள்ளைகளிடம் குளிக்கப்போறோம்னு சொன்னேன்…அவ்வளவுதான்…கும்மாளம் தாங்கல…என்உறவுக்காரங்க கேட்டங்க…பொய்சொல்லாம சொல்லுங்க…நீங்க குளிச்சு எவ்வளவு நாளாச்சுன்னு…(துபாயில கோடையில் தண்ணிர் கடுமையா சுடும்மே… அதனால குளிச்சிருக்க மாட்டேன்னு நினைச்சிட்டாங்களோ)
அசடுவலிய சிரிச்சிட்டு…குளியல் விளையாட்டுன்னா… என்குழந்தைகளுக்கு பிடிக்கும்…அதான் இவங்க இப்படி அமக்களம் பண்றாங்கன்னு ஒப்பேத்தினே…

மதியம் குளிக்க இறங்கி மாலை 7 மணிக்குதான் கரையேறினோம்…பிள்ளைகள் நன்றாக விளையாடுனாங்க…குழந்தையோடு குழந்தையா நானும் விளையாடினேன்…

எந்நேரமும் வேலை டென்சன்…இப்படியே வாழ்ந்துக்கிட்டிருக்கிற நமக்கு இது மாதிரி ஒரு சூழலை உருவாக்கினால்…மனசுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும்…எல்லாத்தையும் மறந்திட்டு குழந்தைகளோடு குழந்தையா அவர்களுடன் விளையாடும்போது நம்ம முகத்துல சந்தோசம் தெரியும்போது அந்த குழந்தைகள் எவ்வளவு சந்தோசப்படுறாங்க…தெரியுமா?
பெற்ற குழந்தைகளிடம் அவங்க அளவுக்கு இறங்கி அவங்க நண்பர்களா மாறும்போது தான் அந்த குழந்தைகளின் தூய அன்பினை பெற்றோர்களால் உணரமுடியும்…( ம்…நிறுத்திட்டேன் காதுல விழுது )
சென்ற பதிவிற்கு பின்னூட்டமளித்து உற்சாகப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றிங்க….
இது தொடருமுங்க…….

Monday, July 20, 2009

மனம் கவர்ந்த மலேசியா...1

கோடை விடுமுறையை கழிக்க குளிர் காலத்தில் திட்டம் வகுத்தேன். குடும்பத்துடன் கூடி மலேசியா போகலாம்னு…பட்ஜெட் போட்டுபார்த்த டெம்பரேச்சர் அதிகமா காண்பிச்சது…
இருந்தாலும் இந்த மனசு இருக்கு பாருங்க அது… நாம சொல்லுறத கேட்பதே கிடையாது. நாம சொல்லி மனம் கேட்டா நாம வளர்ந்திருப்போமில்ல…மனம்சொல்லுக்குதானே ஆடுறோம்… மனைவி சொல்லுக்கு ஆடுவது போல…( ஹி…ஹி…நான் என்ன சொல்லிக்கல)

சரி ஆன்லைன் மூலமா பட்ஜெட் விமானத்தை பிடிக்கலாம்னு டிராவல்ஸ் நண்பர் அறிவுரையை ஏற்று தேடி கண்டுப்பிடிச்சேன்…
ஜூன் 15 க்கு அப்புறம் போவதற்கு மார்ச் மாதமே டிக்கேட் ஆன்லைனில் எடுத்தாச்சு…நீங்க தங்கப்போற இடம் 5ஸ்டார் ஹோட்டலா?...ன்னு நீங்க கேட்பது என்காதுல விழுகுது… ஆமா… எனது சொந்தங்கள் அங்கே இருக்காங்க… அவங்க ஸ்டார் ஹோட்டலை விட என் மனசுல சூப்பர் ஸ்டாரா இருக்காங்க…நான் ஹோட்டல்ல தங்கினா அவங்க கோச்சிக்க மாட்டாங்களா?(ஐஸ் வைக்கிறேன்னு மட்டும் நினைச்சுடாதீங்க)அவங்க வீட்டுல தங்கலாம்னு முடிவு.

சரிபோறதுதான் போறோமே மலேசியா பக்கத்துல உள்ள சிங்கப்பூருக்கும் போய் விட்டு வந்திடலாம்னு ஒரு ஐடியா தோனுச்சு…ம்…முதல்ல சிங்கப்பூர் போய்விட்டு அங்கிருந்து ரோடு வழியாக மலேசியா போகலாம்னு திட்டம் வகுத்தேன்…(ஏதோ நாட்டையே பிடிக்கின்ற மாதிரி)

போட்ட திட்டமெல்லாம் சரிதாங்க…போற நாட்டுக்கு இங்கு (துபாயில்) விசா வாங்கனுமில்ல… முதல்ல சிங்கப்பூர் தூதரகத்துக்கு போன் செய்து விசாவைப்பற்றி விசாரித்தேன்…

விஎஸ்ஏ –என்ற தனியார் நிர்வனத்தின் மூலம் விசா அப்ளை செய்யவேண்டும்னு சொன்னாங்க. அது துபாயில ஷேக்ஜாயித் ரோட்டுல 2வது மெட்ரோ பிரிஜ் கிராஸிங் பக்கத்தில் ஹபீப் பேங் பில்டிங்கில் 14 வது மாடியில் அந்த நிருவனம் இருக்கு…கூட்டமா இருக்குமோன்னு யோசனை பண்ணிக்கிட்டு போனா நம்மளை அவங்க எதிர்பார்த்துக்கிட்டு உட்காந்திருப்பது போல இருந்தாங்க.

அப்ளிக்கேசன் ஆன்லைனில் எடுத்து புல் பண்ணி பாஸ்போர்ட் போட்டோ2 டிக்கேட் எடுத்துகிட்டு போனேன்…பாஸ்போர்ட்டை பார்த்துவிட்டு கையிலேயே கொடுத்திட்டாங்க…பாஸ்போர்ட் தேவை இல்ல…இது ஆன்லைன் விஸா…4 தினங்களில் விஸா கிடைக்கும்…டெலிபோன் செய்து கேட்டுக் கொண்டு வாங்கன்னு சொன்னாங்க…என்னையும் சேர்த்து 4 பேரு 500 திரஹம் கறந்திட்டாங்க…

நான்கு நாள் கழித்து விஸா வந்திடுச்சு..போய் வாங்கி பார்த்தால்…பெரிய அதிர்ச்சி…(சிங்கிள் எண்ட்றீக்கு) ஓரு முறை செல்ல தான் அப்ளை பண்ணிருந்தேன் ஆனால் (மல்ட்டி எண்ட்றீ) பலமுறை செல்ல விசா 2 வருடத்துக்கு கொடுத்திருக்காங்க…எனக்கு இன்ப அதிர்ச்சி அட நம்ம யோக்கியதை இவங்களுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு அதனால தான் நமக்கு பலமுறை போய்வர கொடுத்திருக்காங்ன்னு சந்தோசமா நினைச்சி என் நண்பனுக்கு போன் பண்ணி விசயத்தை சொன்னேன்…

சிங்கப்பூர் செல்ல துபாயில் யார் விசா அடித்தாலும் 2 வருடத்திற்கு மல்ட்டி எண்ட்றி விசா தற்காலியமா கொடுத்து வராங்க..நீரொம்ப அலட்டிக்க வேண்டாம்னு சொன்னாரு…சப்புண்ணு போச்சு…இருந்தாலும் 2வருடம் கிடைச்சுருக்குங்குற சந்தோசம் இருந்துச்சு…(ஒருமுறை போவதற்கே முழிபிதுங்குது)

மலேசிய தூதரகத்துக்கு போன் செய்து இடம் விசாரித்தேன்…துபாய் கராமாவில் லேம்ஸிபிளாசாவுக்கு பக்கத்தில் மலேசியன் டிரேடிங் பில்டிங் இருக்கிறது…அதில் கீழ் தளத்தில் துதரகம் இயங்கி வருகிறது.

மலேசியா விசா அடிக்க 1-பாஸ்போர்ட் 2-போய் வர டிக்கேட் 3- நம்முடைய கம்பெனி லட்டர் 4- மலேசியாவில் தங்குவதற்கான ஹோட்டல் புக்கிங் (உறவினர் இருக்காங்க அங்க தங்கப்போறோம்னு சொன்னா உறவினர்களுடைய விபரம் அவங்களுடைய அழைப்பிதழ்) 5- 2 புகைப்படம் இதைக் கொடுத்து ஒருமுறை செல்ல விசாவிற்கு 50 திரஹம் 3மாதம் மட்டுமே விசா காலம்...இன்று கொடுத்தால் மறுநாள் பாஸ்போர்ட்டில் விசா அடித்து கொடுத்திடுவாங்க…

மல்ட்டி எண்ட்றீ (பலமுறை செல்ல) விசாவிற்கு 100 திரஹம் ஆனால் 3மாதம் தான் விசா காலம்(ரொம்ப அநியாயமா இருக்குல்ல) விசா அப்ளிகேஷன் ஆன்லைனில் கிடைக்கிறது…

இதை எழுதவே மூச்சு வாங்குது…இன்னும் மலேசியாவை பற்றி பார்த்த இடங்களைப் பற்றி சொல்லனும்… இல்லைன்னா தலை வெடிச்சுடும்…
இப்போதைக்கு இது …அடுத்து சிலவு சம்பரதாயங்களை பற்றி சொல்லலாம்னு இருக்கேன்…

இருந்தாலும் பயமா இருக்கு இந்த பின்னுட்டக் காரங்க இருக்காங்கலே அதிலும் கீழை ராசா அப்பப்பா தாங்க முடியலைங்க எப்படித்தான் யோசிப்பாங்களோ தெரியலை… எதையாவது ஒரு பிட்டை போட்டு…கலக்கிடுறாங்க…ம்…கலக்குங்க ராசா கலக்குங்க…!(இப்படி சொன்னாதான் கலக்குவீங்களா?)

துபாயில் பதிவர்களின் பண்டிகை


துபாய் கராமாவில் நடக்கின்ற பதிவர்கள் மாநாட்டிற்கு போகலாம்னு நம்ம சாருகேசி ராசா சொன்னாரு...ஆனா அவர் புலிகேசின்னு எனக்கு தெரியும்...இருந்தாலும் அவருடன்தான் வந்தேன்...சும்மா வரலை பெரிய எதிர்பார்ப்போடு வந்தேன்...

பாத்தி பாத்தியாக பதிவர்கள் உட்காந்திருப்பாங்கன்னு வந்தால்...வட்டமா உட்காந்து நல்லா வடை சாப்பிட்டு கும்மி அடிச்சாங்க...

மொக்கைகளைப் பற்றி மொக்கையா பேசினாங்க...பாவம் அண்ணாச்சி மொக்கையா விழித்துக் கொண்டிருந்தார்....என்றெல்லாம்
எனக்கு எழுத தெரியாது(இந்த நேரத்திலாவது உண்மைய சொல்லிடனும்)...டைரி எழுதுறதா நினைத்து நான் பதிவு எழுதுவது இல்லை...

அதற்கொரு கண்ணியம் வேண்டும்...நான் எனக்காக எழுதனும்னா...பேசாமா நோட்டிலே எழுதிவைத்துக்கொள்ளலாம்...மத்தவங்க படிக்கனும்னு நினைக்கிறப்ப மத்தவங்களுக்கு பிரயோஜமா எழுதினா பயனாக இருக்கும்...ங்குறது எனது கருத்து (யாரும் என் கருத்தை கேட்கவில்லை என்பது வேறு விசயம்)

தனிமனித சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்க கூடாது...அது பதிவு உலகில் சர்வ சாதாரனமா நடக்குதுன்னு என்பக்கத்துல உட்காந்திருந்த அரைகால் டவுசரு (மன்னிக்கனும் அவரு பேரு தெரியலை)சொன்னாரு...சரியாத்தான் சொன்னாரு....

சில மொக்கையிலும் பிரயோஜனம் இருக்கு அதை படிச்சிட்டு சிரிப்பதினால்...சிரிப்பையாவது தந்தாங்களேன்னு....மனச ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்.ஆனா அந்த மொக்கையில இன்னொருவரை நையாண்டி பண்ணி நாம சிரிக்ககூடாது...இல்லையா?

பாதியிலேயே கிளம்பக்கூடிய சூழ்நிலை எனக்கு ...ஆனால் பல புதியவர்களின் அறிமுகம் கிடைத்த ஆனந்தத்துடன் (மனசுக்குள்ள கீழை ராசாவை வாழ்த்திக் கொண்டே) நகர்ந்தேன்...
கராமா சந்திப்பு காரம் இல்லைன்னாலும் புதிய பதிவர்களுக்கு அது காரணமா இருக்குன்னு சொல்லலாம்...

அமீரக பதிவர்கள் தரமானவர்கள் மற்ற பதிவர்களுக்கு உரமாகவும் உதாரணமாகவும் இருப்பார்கள் என்று நம்பலாம்...ஏன்னா நம்ம ...அண்ணாச்சி... அண்ணனுடைய சின்ன ஆசையை நிறைவேற்றுவார்...என்ற நம் பி கையில் இருக்கிறது.!

Saturday, July 18, 2009

இலக்கிய நண்பர்களும் இனிய அறிமுகமும்

1.கீழைராசா 2.சந்திரசேகர் 3.அப்துல்வாஹித் 4.திருச்சிசையது


பழக்க
வழக்கம் என்பது நம்முடைய வாழ்க்கைக்கு மிக முக்கியமுன்னு நிறைய்ய பெரியவர்கள் சொல்லிருக்காங்க…நாம் யாரோட பழகுகிறோம் என்பது அவசியம். நமது அறிமுகம் தான் நட்பாக மாறுகிறது
சிலரிடம் பழகும் போது நம் மனதிற்கு சந்தோசமாக இருக்கும். காரணம் மனம் அவர்களை அங்கிகரிப்பது தான் . அதே தருணம் ஒத்தக் கருத்தை உடையவர்களின் நட்பு ஏற்பட்டுவிட்டால் அவர்களின் நட்பு மிக ஆழமானதாகிவிடும். நல்ல விசயங்களை ஒருவருக் கொருவர் பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்.
அந்த வகையில் என்னுடைய அனுபவத்தை கொஞ்சமா சொல்லலாம்னு நினைக்கிறேன்.
சில வாரங்களுக்கு முன் எனக்கு அறிமுகமானவர்கள். கீழை ராசா அப்துல் வாஹித் திருச்சி சையது சந்திர சேகர் இவர்களுடைய அறிமுகம் வானலை வளrத்தமிழ் அமைப்பில் கிடைக்கப்பெற்றது
இவர்கள் அனைவருமே இலக்கிய சிந்தனைவாதிகள்.

கீழைராசா
இவர் இன்ஜினியர் சாருகேசி என்ற பெயரில் இணையத்தில் வலைப்பூ வைத்திருக்கின்றார். கதை கவிதை கட்டுரை எழுதுவதில் திறமை படைத்தவர்
என்று தான் எண்ணியிருந்தேன்… ஆனால் அவைகளையும் தான்டி இவர் நல்ல இயக்குனர் அத்துடன் நடிகர் இவர் நண்பர்களோடு சுற்றுலா சென்றதை “நான் பயந்திட்டேன்” என்ற தலைப்பில் ஒரு லப்டப் படத்தை காண்பித்தார் உண்மையிலேயே திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது இவைகளோடு இவரிடம் மிகைத்திருப்பது நகைச்சுவை உணர்வு. இந்த உணர்வுத்தான் என்னை இவரிடம் ஈர்த்தது.
இவருடைய படைப்புகளை வலைப்பூவில் வாசித்தேன்.
சமுதாய சிந்தனையும் வழிகாட்டல் சிந்தனையும் சீர்திருத்தமும் இவரின் எழுத்துக்களில் மிகைத்திருக்கிறது. கீழைராசா கனமான உருவமாக இருந்தாலும்
பழகுவதற்கு மனமானவர்.

அப்துல்வாஹித்
இவர் அமீரகத்திற்கு புதுமுகம் ஆனால் பல இலக்கியவாதிகளுடனும் ஊடகத்துறையினருடனும் மற்றும் தொழிலதிபர்களுடனும் அறிமுகமானவர்.
பல பட்டிமன்ற மேடைகளை கலக்கியவர். இவர் பேசுவதெல்லாம் காமிடிபோலவே இருக்கும். இவரை பேசவிட்டு நாம் இவருக்கு முன் மௌனமாக இருக்க முடியாது. வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருப்போம். இறைவன் இவருக்கு கொடுத்திருக்கும் கொடை இது.
கதை கவிதை கட்டுரை எழுதுவதில் வள்ளவர். சங்கமம் தொலைக் காட்சியில் அடிக்கடி கலக்கிக் கொண்டிருப்பார்.
இவர் நெட்ஒர்க் படித்தவராக இருந்தாலும் பல உள்ளங்களுக்கு சர்வராக இருக்கிறார் நகைச்சுவையில்.

திருச்சிசையது
சிறுவயதிலிருந்தே எழுத்தார்வமிக்கவர் கல்லூரி வாழ்க்கையில் நண்பர்களுடன் இணைந்து சிறுகதை வானில் சிறுகதை நிழலில் அன்பைத்தேடி போன்றநூல்களை வெளியிட்டவர்.
நிழ்ச்சிகளை தொகுத்து வழங்கக் கூடிய ஆற்றலுடையவர் இவருடைய தனிசிறப்பு சிறுகதை எழுதுவதே.
முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களிடமும் மற்றும் தினத்தந்தி ஆசிரியர் வைரமுத்து பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் ஜின்னாஷரிபுத்தீன் போன்ற பெரியவர்களிடம்
தனது எழுத்திற்கு அங்கீகரம் பெற்றவர்.
கவிஞர்கள் கவிதை எழுதி அதை கரைசேர்க்க களம்தேடுவார்கள் ஆனால் இவர் எழுதும் கவிதைகள் கட்டிய மனைவிக்கும் பெற்றபிள்ளைகளுக்கும் மட்டு;மே . வலைப்பூ அமைத்து தன் மனைவிக்கு கவிப்பூ சூட்டிக் கொண்டிருப்பவர் இன்று வரை இவரின் இல்வாழ்க்கை புதுமண தம்பதிகளாய் மலர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆம் இவரின் பொறுமையான குணமும் அடக்கமும் அமைதியும் பிறரிடம் பணிவும் இவரின் சிறப்பு அம்சங்கள்.
பழகுகின்றவரிடம் உண்மையாக பழகக்கூடியவர்.


சந்திரசேகர்
இவர் இன்ஜினியர் புரஜக்ட் மேனேஜராக அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார்
வானலை வளர்த் தமிழ் அமைப்பில் பொருப்பாளராக இருக்கின்றார்.
சங்கமம் தொலைக்காட்சியில் திருக்குறள் விரிவுரை நிகழ்த்தக்கூடியவர். கவிதை எழுதுவதில் ஆர்வமிக்கவர். பலகவிதைகள் எழுதியுள்ளார்.
பழகுவதற்கு இனிமையாளர் நல்ல மனிதர்.

இவர்களை எனது இலக்கிய நண்பர்களாக பெற்றதில் மகிழ்கின்றேன்…
பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல் நானும் மணக்கலாம் தானே…!


இது தொடரும்..............

Friday, July 17, 2009

கவிக்கோவின் கருத்துரைகள்


துபையில் கிளியனூர் இஸ்மத் எழுதிய மருளில்லா மலர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாவில்
கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆற்றிய உரை…

கிளியனூர் இஸ்மத் அவர்கள் எழுதிய நூல் இப்போது வருகின்ற கவிதைகளிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது
ஆன்மீகமணம் கமழும் நூலாக மருளில்லா மலர்கள் அமைந்திருக்கின்றன.அதுவும் இஸ்லாமிய ஆன்மீகமணம் கமழுகின்ற மலராக அமைந்திருக்கின்றன.எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

சமுதாயத்தில் நடக்கின்ற பல பிரச்சனைகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார்.இன்றைக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களைப் பற்றி அதற்கு அறம் வழிகளைப் பற்றி அங்கிங்கு எழுதியிருக்கிறார்.

குறைந்த பட்சம் வயதானவர்கள் தான் தத்துவஞானத்தை எழுதுவார்கள் இஸ்மத்துக்கு எவ்வளவு வயது என்பது எனக்கு தெரியவில்லை.50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தத்துவஞானம் இல்லையென்று சொன்னால் ஏதோ அவர்களிடம் கோளாறு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

வாழ்க்கையை பிரித்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.இறைவனிடம் துவாகேட்கும் போது இந்த உலகத்தின் நன்மையையும் அந்த உலகத்தினுடைய நன்மையையும் எனக்கு அருள்வாய் யா அல்லாஹ் என்று தான் கேட்கிறோம்.இந்த உலகிற்கு சில ஆண்டுக் காலங்களை நாம் ஒதுக்குகின்றோம் ஒதுக்கவேண்டும் அதில் நாம் விதைக்கப்படுகின்றோம்.

சிலர் காலமுழுவதும் உழைக்கிறார்கள் சாகும் வரையில் சம்பாதிக்கிறார்கள் அப்படிபட்டவர்களிடம் கீழான இச்சையே மிகைத்திருக்கும்.சம்பாதிப்பதற்கு ஒரு காலம் உண்டு.அதற்கு பிறகு நாம் யார்…? ஏதற்காக இங்கு வந்திருக்கின்றோம் நம் வாழ்க்கை என்ன..?
என்ற கேள்வி பக்கம் கவனம் செலுத்தாதவன் மனிதன் அல்ல.அவன் கனியாக வில்லை காயாகவே இருக்கிறான் காயாகவே இருந்து இறந்தும் விடுகிறான்.

வாழ்வதின் நோக்கம் என்னவென்றுக் கேட்டால் மனிதன் மனிதனாவதற்காக தரப்படுகின்ற ஒரு வாய்ப்பு. பெரும்பாலும் மனிதனாகாமலேயே இறந்து விடுகிறான்.
ஒரு புதுக்கவிதை நான் படித்த ஞாபகம்

பக்கத்து வீட்டு பரமசிவம்
எம்எல்ஏ ஆனார்
எம்பி ஆனார்
அமைச்சரானார்
ஆனால்
இறுதியில் மனிதனாகாமலேயே
மரணித்து விட்டார்..
இதில் என்ன வியப்பு எனறு கேட்டால் எல்லாப் பதவிகளையும் விட உயர்ந்தது மனிதப்பதவி இதை புரிந்துக் கொள்ள மறுக்கின்றான்.பல உலக பதவிகளுக்கு நாயாக அழைகின்றான்.

உலகிற்கு மனிதனை அனுப்புவதாகச் சொல்லி இறைவன் மிகப்பெரிய பதவியை கொடுத்துதான் அனுப்புகின்றான்.எனது கலீபாக்களை படைக்கப்போகிறேன் என்று இறைவன் யாரைச் சொல்கின்றான் ஆதம் அலைஹிவஸல்லாம்மை பற்றி மட்டுமா சொல்கின்றான்…இல்லை நம்மை எல்லாம் சேர்த்து தான் சொல்கின்றான். இறைவன் தந்திருக்கும் மிகப்பெரிய பதவியை மனிதன் உணர்ந்தவனாக இல்லை.உலக அற்ப பதவிகளுக்கு அலைகிறான்.

இந்த உலகத்தை ஆளுகின்ற மாபெரும் பொறுப்பை அல்லாஹ் கொடுக்கின்றான் ஆளுகின்ற சக்தியை நாம் பெறவேண்டுமென்றால் அதற்கு என்ன வேண்டுமென்று அல்லாஹ் கூறுகிறான்.ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களுக்கு இஸ்முக்களை கற்றுக் கொடுத்தான்.பெயர்களை கற்றுக் கொடுத்தான் அதுமட்டுமல்ல படைப்புகளைப் பற்றியும் படைப்பின் நுணுக்கங்களைப் பற்றியும் அதன் தன்மையென்ன எவை எவைகள் எப்படி இயங்குகின்றன இவைகளை யெல்லாம் கற்றுக்கொடுக்கின்றான்.ஏன் என்று சொன்னால் இவைகளை தெரிந்துக் கொண்டால் தான் கலீபாவாக பிரதிநிதியாக இருந்து ஆளமுடியும்.இது ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களுக்கு மட்டும் தரப்படவில்லை.அவர் காலத்திலேயே தரப்பட்டிருந்தால் செய்யப்பட்டிருந்தால் அவரே கம்பியூட்டரை கண்டுப்பிடித்திருக்க வேண்டும் டிவியை கண்டுப்பிடித்திருக்க வேண்டும் ஆனால் அப்படியா இல்லை…

ஒரு சிப் மாதிரி தயார் செய்து நமக்குள்ளே வைத்துவிட்டான்.
ஓவ்வொரு காலத்திலும் வருபவர்கள் ஒவ்வொன்றாய் கண்டு பிடித்து இந்த பஞ்சபூதங்களையும் ஆள்வார்கள்; அதற்கு அடையாளமாகத்தான் மலக்குகளைப் பார்த்து சஜ்தா செய்யச் சொல்கிறான்.அப்படி என்றால் என்ன அர்த்தம் அவனுக்குள்ளே நான் இருக்கிறேன் என்பது குறிப்பு.
சஜ்தா செய்யச் சொன்னது ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களை அல்ல.
ஊதினானே ஆவி அதனுல் அவன் இருக்கிறான்.ஆகவே நான் உள்ளே இருந்து ஆளுவேன் இவன் நாளை உலகை ஆளுவான் அதற்கு ஆளுகின்ற பொதுக் கட்டளைக்கு கீழ்படியவேண்டும் படிவீர்கள் என்று கூறுகிறான்.

இரத்தம் சிந்தும் கூட்டத்தையா படைக்கிறாய்…? குழப்பம் விளைவிக்கும் கூட்டத்தையா நீ படைக்கிறாய் என மலக்குகள் நினைத்தார்கள்.மனிதப் படைப்புகளிலிருந்து நாங்கள் மேலானவர்கள் எங்களை விட்டு விட்டு எப்படி நீ படைக்கலாம் என மலக்குகள் நினைத்துக் கொண்டார்களே அதற்கு பதிலாக இறைவன் மலக்குகளை அழைத்து இவைகள் எல்லாம் என்ன…? சொல்லுங்கள் என்றான்…
மலக்குகள் எங்களுக்கு தெரியாது என்றார்கள். நீ என்ன சொல்லித்தந்தாயோ எதைக் கற்றுத் தந்தாயோ அதைத் தவிர வேறொன்றும் தெரியாது..என்றார்கள்.
சொந்தமாக கற்றுக் கொள்ளத் தெரியாது ஆனால் மனிதனுக்கு சொந்தமாக கற்றுக் கொள்ளத் தெரியும். மலக்குகளை விட பெரிய ஆட்கள்.
அல்லாஹ் அழைத்தான் ஆதம் அலைஹிவஸல்லாம் வந்தார்கள் இவை என்ன என்று கேட்டான்.ஒவ்வொன்றையும் கடகட வென கூறினார்கள்.
மலக்குகளைப்பார்த்து அல்லாஹ் சொன்னான் இப்பொழுது தெரிகிறதா..?என்று.மலக்குகள் உணர்ந்தார்கள் நம்மை விட பெரிய சக்தி வாய்ந்த படைப்பு மனிதன் என்று.

நீ மனிதனா..? என்று இறைவன் கேட்கிறான் யாரைப்பார்த்து கேட்கிறான் மாட்டைபார்த்தா கேட்கிறான் மனிதனைப் பார்த்து தானே கேட்கிறான்.
நமக்கும் சந்தேகமாக இருக்கு… மனிதனாக பிறக்கும் ஒருவன் வடிவத்தில் மனிதனாக பிறக்கின்றான் கடைசியில் யாராவது ஒருத்தர் மனிதன்னா இவன் தான் மனிதன் என்று சொன்னால் தான் அவன் மனிதன்.
இறப்பதற்கு முன்னாடி யாரையாவது கூப்பிட்டு அவன் கேட்கவேண்டும் நான் யார்…? மனிதனா…!
பலர் மனிதனாக ஆகாதபோது கவிஞராவதெப்படி..இந்த சிந்தனைகள் மனிதனுக்கு வரவேண்டும்.

இந்த சிந்தனைக்கு வருபவர் சாதாரண கவிஞன் அல்ல கவிஞர்களிலிருந்து உயர்ந்தவர்கள் அவர்களை கவிஞானி என்று சொல்கிறோம்.உலகத்தில் அதிகமாக உலக கவிஞர்களால் பாராட்டப் படுகின்றவர்களெல்லாம் ஞானக்கவிஞர்கள் தான்;.

இஸ்லாமிய கவிஞர்களில் கூட ஞானக் கவிஞர்களாக புகழப்படுபவர்கள் யாரென்றால் மௌலான ஜலாலுதீன் ரூமி அவர்கள்.
காரணம் பாரசீகத்தின் கவிஞரல்லவா…!படைபடையாக இருக்கிறார்கள்.ஆனால் மௌலானா ஜலாலுதீன் ரூமி அவர்கள் ஞானத்தினுடைய உச்சத்தின் ஒலியை பிரகாசத்தை கவிதைகளாக வடித்தார்கள்…பிரமிக்க வைக்கிறது. உலகத்தில் எந்த புத்தக கடைக்கு சென்றாலும் மாதத்திற்கு ஒன்று மௌலானா ஜலாலுதீன் ரூமி அவர்களைப் பற்றிய புத்தம் வெளிவருகிறது.இவர்களின் நூலை படித்துதான் இஸ்லாத்தை பலர் நேசிக்கிறார்கள். இன்று உலகம் ஞானக்கவிஞர்களால் தான் பிழைக்கிறது.

அந்த வகையிலே தமிழ்நாட்டில் ஞானக்கவிஞர்கள் மிகக் குறைவு.பழைய ஞானக்கவிஞர்கள் இருந்தார்கள் பீர்முஹம்மது அப்பா குனங்குடி மஸ்தான் சாஹிப் போன்ற ஞானக்கவிஞர்கள் ஏராளமான இலக்கியங்கள் சூபி தத்துவத்தை நமக்கு சொல்லித் தந்தார்கள்.இன்னும் சொல்லப்போனால் சூபிஞானிகள் மூலமாகத்தான் நமக்கு இஸ்லாமே வந்தது.

இறைநேசச் செல்வர்கள் என்று சொல்கிறோமே அவர்களெல்லாம் யார்…? சூபி ஞானிகள்…அவர்கள் மூலமாகத்தான் நாமெல்லாம் சுத்தமடைந்து இன்று முஸ்லீம் என்று சொல்லிக் கொள்கிறோம்…இல்லை யென்றால் எந்த சகதியோடு சகதியாக கிடந்திருப்போமோ…நமக்கு நன்றி வேண்டாமா…? எவ்வளவு சுத்தம் செய்து முஸ்லீம் என்று சொல்லிக் கொள்ள பெருமை கொடுத்துள்ளார்கள்…இப்படிபட்ட ஒரு சேவையை செய்திருக்கிறார்கள்.ஆனால் இடையில் பெரிய இடைவெளி வந்துவிட்டது…
அது எந்தளவு என்றால் கவிதையே ஹராம் என்று சொல்லும்மளவு…
குர்ஆன் கண்டிக்கிறது ஹதீஸ் கண்டிக்கிறது என்று கவிதைகளை படிக்க விடமறுக்கிறார்கள்…குர்ஆனை ஒழுங்காக புரிந்துக் கொள்ள மாட்டேன்கிறார்கள்.

மூன்று கவிஞர்களை ஆஸ்தான கவிஞர்களாக ரசூல் ஸல் அலைஹி வஸல்லாம் அவர்கள் தன் பக்கத்திலேயே வைத்திருந்தார்கள்.மஜ்திலேயே கவிதைகள் அரங்கேற்றிப் படிக்க சொன்னார்கள்..கவிஞர்களுக்கு பொன்னாடை போர்த்துவதை ரசூல் ஸல் அலைஹி வஸல்லாம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.

கவிதைகளில் ஞானம் வெளிப்படுகிறது என்று பெருமானார் (ஸல் அலை) அவர்கள் கூறிய ஹதீஸ்பல இருக்கிறது…இதைப்பற்றி பேசவேண்டுமானால் நேரம் போதாது நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டி இருக்கிறது.

கவிஞர் கிளியனூர் இஸ்மத் அவர் எழுதிய கவிதை நூலில் ஏகத்துவ மெய்ஞான சபை என்ற தலைப்பிட்ட கவிதையில் கூறுகிறார்.

மதமற்ற மதமாகிய
மெய்ஞானத்தை
சுவைப்பவர்கள்
என்கிறார்
ஞானம் என்ன செய்கிறது என்றால் கீழ்நிலையில் மதமுற்று இருப்பதை வெளியில் கொண்டு வருகிறது. அகண்ட உண்மை என்ற ஒரு மாபெரும் சக்தியை திரட்டுகிறது. ஞானிகளில்
இஸ்லாமியஞானி கிருத்துவஞானி இந்துஞானி என்று வித்தியாசம் கிடையாது. உண்மைக்கு வித்தியாசம் கிடையாது.
அதேபோல் இன்னொரு இடத்தில் கூறுகிறார்

இவர்கள்
ஞானம் பயில்வது
ஞானியாவதற்கல்ல
மனிதனாக வாழ்வதற்கு
என்கிறார்
ஞானியாகி காட்டுக்கு போய்விடுவதற்கல்ல. நாம் யார் என்று தெரிந்தால் மனிதனாகலாம். மனிதனாவதற்கு ஞானம் உதவுகிறது என்று கவிஞர் இஸ்மத் அழகாக கூறுகிறார்.
அடுத்து ஒரு கவிதையில்
மனிதா நீ என்பது யார்…?

நான் இவ்வளவு பேசினேனே அதை சாராக பிழிந்து கவிஞர் பேசுகிறார்.
மனிதா
உன்னை மனிதனென்று நீ
என்றாவது உணர்ந்ததுண்டா…?
உணர்வதற்குரிய வாய்ப்பு
உனக்கு
கிடைத்ததுண்டா…?

பூமியில் இந்த உலக வாழ்க்கையிலே நாம் நம்மைபற்றி உணர நேரம் கிடைக்க வில்லை. சாப்பிடுகிறோம் பொருள் தேடுகிறோம் மீண்டும் சாப்பிடுகிறோம் பொருள் தேடுகிறோம் கிட்டதட்ட இயந்திர தனமான வாழ்ககை. மனிதன் பொருள் தேடிக்கொண்டே இருக்கிறான் அவன் இறக்கும்வரையில். பொருள் தேடக்கூடாது என்பதல்ல அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது…வாழ்க்கை முழுமையும் அதற்காக சிலவு செய்யக் கூடாது.
அடுத்த வரியில் இஸ்மத் கூறுகிறார்
படைக்கப்பட்ட நீ
உன்னைப் பற்றி
தெளிவில்லாத போது
உன்னைப் படைத்த
இறையை நீ
எப்படி தெளிவாய்
விளங்கிருப்பாய்…
மிக பயங்கரமான கேள்வி இது
பெரிய மனிதன் மாதிரி இவன் தத்துவம் பேசுகிறான் பழகுகிறான் முதலில் நீயாரென்று தெரியுமா உனக்கு…? நீ யாரென்றே தெரியவில்லை உன்னைப் பற்றி விளக்கமில்லை நீ இறைவனைப்பற்றி எப்படி விளங்கிருப்பாய் என்று ஆணித்தரமாக கேட்கிறார்.
அதனால்தான் இறைவனைப் பற்றிய கருத்துரைகள் மனிதனிடம் தவறாக இருக்கிறது அதைப்புரிந்துக் கொள்வது கடினம்.
அடுத்த வரியில் கூறுகிறார்
மனிதா
மதத்தை நேசிக்குமளவு
மனிதர்களை
உனக்கு வாசிக்க தெரியவிலை;லை
நேசம்
மதத்திற்கு தேவையில்லை
மனிதனுக்குத் தேவை…
என்கிறார்.
இன்றைய்ய நிலையில் மதம் என்றால் கெட்டவார்த்தையாக மாற்றி விட்டார்கள். ஒருவரை யொருவர் இகழ்வது பகைப்பது அழிப்பது …இது தான் இன்றைக்கு மதம்.
மதம் மனிதனை மனிதனாக்கும் பட்டரை என்கிறார்
இதை புரிந்துக் கொண்டால் மதக்கலவரம் ஏற்படாது. ஏந்த மதமும் இன்னொரு மதவாதியை பகைக்க சொல்லவில்லை மனிதர்களை மனிதர்களாக்குவது தான் மதத்தினுடைய்ய வேலை.அப்படி இல்லாமல் ஒருவரை யொருவர் பகைவர்களாக ஆக்குகிறது என்று சொன்னால் கோளாறு மதத்தில் இல்லை மனிதனிடம் தான் அவன் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை.
நல்ல தருணத்தில் ஒரு சிறந்த நூலை நல்ல சிந்தனையுடன் கவிஞர் கிளியனூர் இஸ்மத் வெளியிட்டிருக்கின்றார்.
இஸ்மத் அவரை வாழ்த்துகின்றேன் இன்னும் மென்மேலும் நல்ல ஆன்மீக கவிதைகளை நலமாக படைத்து மனிதர்களுக்கு உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்று புரியவைத்து ஒவ்வொருவரையும் உயர்த்துகின்ற மாபெரும் கடமையை அவர் தொடர்ந்து செய்திடவேண்டி வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி…!

Thursday, July 16, 2009

வாழ்த்துக்களுடன்.....

வாழ்த்துக்களுடன்.....