உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, September 29, 2009

சாந்தம் நிறைந்த சலாலாஹ்

புதிய சுற்றுலாவிற்கு போவதற்கு முன் இந்த தொடரை எழுதச் சொன்ன பாசத்திற்குரிய பதிவர்களுக்கு ஒரு சல்யூட் பண்ணிட்டு துவங்குகிறேன்…

சிம்மபாரதி
ச.செந்தில்வேலன்
தமிழ் 144
சென்ஷி
அன்புடன் மலிக்கா

இந்த ஐவரும் அடுத்தசுற்றுலா தொடரை நீங்கள் தொடங்கலாம் என்று தைரியமாக பச்சைக் கொடி காண்பித்து உற்சாகமூட்டிய இளகிய மனசுக்காரங்க…உங்கள் வாழ்த்துக்களை சத்தாக எடுத்துக் கொண்டு இதோ புறப்படுகிறேன்… உங்கள் ஐவருக்கும் … நன்றி.!


சென்ற ஆண்டு விடுமுறையின்போது சுற்றிப்பார்க்க எங்கே போகலாம் என்று யோசித்தேன். இது மலேசியாவுக்கு முன்னால…
ஜூன் மாதம் முழுவதும் எனது விடுமுறை தினங்கள். அமீரகத்தில் ஜூன் கோடைக்காலம்.
வளைகுடா முழுவதும் கோடைதான்.ஆனால் சில வளைகுடா நாடுகளில் கோடையில் குளிரும் இடமும் இருக்கிறது. அது எங்கே.?

ஆம் மஸ்கட் நாட்டில் யெமன் எல்லைக்கு அருகில் உள்ள சல்லல்லாஹ் என்ற நகரம் .ஜூன் இறுதியிலிருந்து செப்டம்பர் வரையில் அங்கு மிதமான மழையும் குளிரும் இருக்கிறது. என்ற செய்தி அறிந்து பயணத்திற்கு தயாரானேன்…
வழக்கம் போல் வீட்டு அம்மணியுடனும் குட்டிஸ்களுடன் தான் .

மஸ்கட் சம்பந்தமான செய்திகளை சேகரித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளலாம்…அது அமீரகத்தில் வாழக்கூடிய தமிழ் அன்பர்களுக்கு பயன் தரலாம்…என்ற ஒரு சின்ன ஆசைங்க… அவ்வளவு தான்…

மலேசியா அமீரகத்திலிருந்து தூரம் .அதனால பெரிய தொடராக சென்றது இது பக்கம் என்பதினால் சின்னதாக முடிக்கலாம்னு ஆசை… ஆசைக்கு அளவில்லை… ஆனால் பேராசையல்ல.

மஸ்கட் அமீரகத்துக்கு பக்கத்து நாடாக இருப்பதால் பலருக்கு விடுமுறைகளை கழிப்பதற்கு ஏற்றதாக இருக்கலாம்.

துபாய் நகரிலிருந்து சல்லல்லாஹ் சுமார் 1600 கிமீ தூரத்தில் இருக்கிறது. இது மஸ்கட் நாட்டைச் சார்ந்தது. இந்த நாட்டுக்குச் செல்ல மஸ்கட் தூதரகத்தில் (எம்பாஸியில்) விசா பெறவேண்டும்.
அமீரகத்தில் பர்துபாயில் கவுன்சிலிங் பகுதியில் நம் இந்திய தூதரத்திற்கு அருகில் மஸ்கட் தூதரகம் உள்ளது.
இந்தியர்கள் மஸ்கட் தூதரகத்தில் விசா பெறவேண்டும். அதற்கான தொகை 30 திரஹம் மட்டும். குழந்தைகளுக்கு இலவசமாக விசா அடித்து தருகிறார்கள். காலைவேலையில் நாம் சென்றால் அரைமணிக்குள் விசா அடித்து தந்துவிடுகிறார்கள். கையில் சில்லரையோடு செல்லுங்கள்.

அமீரகத்திலிருந்து வாகனத்தில் செல்லக்கூடியவர்கள் மஸ்கட் எல்லையில் விசா வாங்கிக் கொள்ளலாம் என்று அலட்சியமாக செல்லவேண்டாம் பலர் திருப்பிவிடப்பட்டிருக்கிறார்கள் . ஆதலால் தூதரகத்திலேயே விசா வாங்கிச் செல்வது டென்ஷனைக் குறைக்கும்.
தங்களின் சொந்த வாகனத்தில் செல்பவர்கள் மஸ்கட்டுக்கான இன்சூரன்ஸை தங்களின் வாகன காப்பீட்டு அலுவலகத்தில் பெற்று செல்லலாம் அல்லது மஸ்கட் எல்லையில் (பார்டர்) காப்பீடு அலுவலகம் உள்ளது அங்கும் பெறலாம். அங்கு பெருவதில் ஒரு வாரத்திற்கு மட்டும் 100 திரஹம் வசூலிக்கிறார்கள்.

நான் சொந்த வாகனத்தில் செல்லவில்லை. துபாய்லிருந்து தினம் மதியம் மூன்று மணிக்கு கல்ப் டிரான்ஸ்போர்ட் கம்பெனியின் பேருந்து புறப்படுகிறது. அதில் சல்லல்லாஹ் போய் திரும்ப வருவதற்கு 180 திரஹம் ஒரு நபருக்கு கொடுக்கவேண்டும். இருக்கையில் அமரக்கூடிய குழந்தையாக இருந்தாலும் 180 கட்டாயம் வாங்கிவிடுகிறார்கள்.

இந்த பேருந்து துபாய் கோல்டு சூக் மீன் மார்கெட் அருகிலிருந்து புறப்படுகிறது. இதன் அலுவலகம் கோல்ட் லேண்ட் கட்டிடத்திற்கு அருகில் உள்ளது. இந்த பேருந்து மட்டுமல்ல. மஸ்கட் அரசு பேருந்து துபாய் டனாட்டா அலுவலகத்திற்கு பின் உள்ள நிறுத்தத்திலிருந்து தினம் மதியம் 2.30 மணிக்கு இரு பேருந்துகள் புறப்படுகின்றன. விலையில் வித்தியாசம் இல்லை.

மதியம் மூன்று மணிக்கு புறப்பட்டால் அடுத்தநாள் காலை 9 மணிக்கு சல்லல்லாஹ் சென்றடையலாம். சுமார் 16 மணிநேரங்கள் நாம் பயணம் செய்யவேண்டி இருக்கிறது.
இவ்வளவு தூரம் பயணம் செய்யக்கூடிய நாம் அங்கு பார்க்ககூடிய இடங்கள் நமக்கு திருப்தி அளிக்கக் கூடியதாக இருக்கிறதா.?
என்றக்கேள்வி நம் மனதில் தோன்றலாம்… நியாயமானதே.

அதைப்பற்றி கொஞ்சம் விரிவாகப்பார்க்கலாமா…?

உங்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்க்காக தொடராகவே தொடரலாமே…!

Tuesday, September 22, 2009

தொடரை மணக்கவைத்த பதிவர்கள்


மனம் கவர்ந்த மலேசியா 20 தொடரை எழுதுவதற்கு ஊக்கம் தந்த பதிவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை சமர்பிக்கின்றேன்.
முதல் தொடரை எழுதியவுடன் பஹ்ரையினிலிருந்து பாண்டியன் என்ற நண்பர் இமெயிலில் தொடர்புக் கொண்டு சிங்கை மலேசியா தூதரக துபாய் தொலைபேசி எண்களையும் தூதரகத்தில் சில சந்தேகங்களையும் என்மூலமாக கேட்டு விபரம் வாங்கிக் கொண்டார். அது எனக்கு திருப்தியைத் தந்தது.
இது எத்தனை தொடர் எழுதுவது என்ற குறிப்பு இல்லாமலேயே சுற்றுலாவில் பதிந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.

இந்த தொடரின் முதல் பின்னூட்டமிட்டவர் தாரிக் முஹம்மது இவர் தொடந்து பதிவை வாசித்து வந்துள்ளார் என்றே நினைக்கிறேன். இன்னொருமுறையும்
பின்னூட்டமிட்டவர்.

இந்த தொடருக்கு சிறுகதை எழுத்தாளர் திருச்சி சையது அவர்கள் ஒவ்வொரு
தொடரையும் படித்து விட்டு தொலைபேசி மூலமும் நேரடியாகவும் உற்சாகமளித்தார்.

கீழைராஸா - இதற்கொரு தூண்டுகோளாக இருந்தார் என்றே சொல்லவேண்டும்.

ராஜாகமால் - அவ்வபோது குறை நிறைகளை பகிர்ந்துக் கொள்வோம் .

அது ஒரு கனாக் காலம் - சுந்தர் ராமன் - தொடரை பின்தொடந்தவர்.

.செந்தில்வேலன் - உலகம் சுற்றும் வாலிபராக இருந்தாலும் என்னுடைய சுற்றையும் இரசித்தவர்.

நட்புடன் ஜமால் - நல்ல ரசனைக்காரர்… இரசித்துப் படிக்கக்கூடியவர். இவரின் பின்னூட்டம் உந்துதலை தந்தது.

வந்தியத்தேவன் - மூன்றுமுறை வாழ்த்துக்கூறியவர்.

டொன் லீ - இவரம் பயணக்கட்டுரை எழுதியவர் எனக்கும் ஊக்கமளித்தவர்.

வடுவ+ர் குமார் - வாழ்த்துச் சொன்னவர்.

எனது தந்தையின் சிங்கப்பூர் வாழ்க்கையை தொடரில் படித்துவிட்டு நெகிழ்ந்தவர்கள்.

கலையரசன்
புருகானி
சையதுஅலி மௌலானா

இன்னும் மேலே சொன்ன பதிவர்களும்.

பல புதிய பதிவர்களை இந்த தொடர் எனக்கு அறிமுகம் தந்தது.

இனியவன் என் உலகநாதன்
சென்ஷி
கல்ப் தமிழன்
சுப.நற்குணன்
ஆர்வி
அமுதா கிருஷ்ணா
துபாய் ராஜா
ஜோய்
மை பிரண்ட் -

இவங்க மலேசியா மாணவி… தங்கள் நாட்டைப்பற்றி எழுதியதற்கு நன்றி சொன்னவங்க.

தமிழினி
.நம்பி
நாஞ்சில் பிரதாப்
முத்தையன்
சுரேஷ் -

இவர் தொடரை புக்மார்க்கில் சேமித்து படித்துவருவதாகவும் அவருடைய மலேசியா பயணத்திற்கு இத் தொடர் உதவியாக இருப்பதாகவும் கூறியவர்.

ரிஸ்னா- இலங்கை இலக்கிய நண்பி தொடரை ரசித்து படித்தவர்.

ஆசிப்மீரான் (அண்ணாச்சி)
துபாய் பதிவர்களின் இப்தார் நிகழ்ச்சியின்போது அறிமுகத்தில் மனம்கவர்ந்த மலேசியா பதிவர் என்று அறிமுகப்படுத்தினார்.

இத்தனை பதிவர்களையும் பாலமாக இருந்து இணைத்த
தமிழ்மணம்-
தமிழிஷ் -
திரட்டி-
தமிழ 10 .

இவ்வளவு உள்ளங்களும் இணைந்து என் உள்ளத்தை உற்சாகப்படுத்தியது எனக்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது.

பதிவுலக அன்பர்கள் இதயத்தையே தந்தவர்கள்
உற்சாகத்தையா தரமாட்டார்கள்
-என்ற நம்பிக்கையில் இன்னொரு பயணக்கட்டுரையைத் தொடரலாமா…? என்ற கேள்வி என்னுல் எழுகிறது.
பாசமிக்க பதிவர்களின் பதிலை பொருத்தே பொறுத்திருக்கிறேன்………

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை அன்புடன் சமர்ப்பிக்கின்றேன்… நன்றி…நன்றி…நன்றி…!

Saturday, September 19, 2009

மனம் கவர்ந்த மலேசியா...20 (நிறைவு)


நாங்கள் சாப்பிட்டுவிட்டு புறப்படுவதற்கு தயாரானோம் அப்போது எங்களைத்தேடி படகுகாரன் வந்து விட்டார். கடும்கோபத்துடன் கத்தினார்.
நல்ல வேளை எனக்கு மலாய் மொழிதெரியாததால் அவர் என்னச் சொல்கிறார் என்பது விளங்கவில்லை.
ரெஜாக்கிடம் கேட்டேன்… நாம் ஒரு மணிநேரத்துல திரும்பிவிடுவோம்னு சொன்னதுனால படகை இங்கேயே போட்டுவிட்டு நமக்காக காத்துள்ளார். நமக்கு நேரமாகும் என்று கூறியிருந்தால் அவர் கரைக்குச்சென்று வேறு சவாரி பார்த்திருப்பார்.என்றார்.
அப்படியா..? நமக்கு தெரியாது தானே… அவரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு சமாதானமானோம்…எங்களை கரையில் கொண்டுவந்து விட்டார்.
அங்கிருந்து பழைய மலாக்கா நகரத்தை காரில் அமர்ந்தவாறே கண்டு ரசித்தோம்.
ஹைவேயில் ரம்புத்தான் பழங்கள் விற்பனை செய்கிறார்கள். அதில் மஞ்சள் நிறம் சிவப்புநிறம் என்று இரு நிறங்களுடைய பழங்கள் விற்பனை செய்தார்கள்.
ஐந்து திரஹத்துக்கு (ரிங்கிட்) சுமார் 2 கொத்து தந்தார்கள். 2கிலோக்கு மேல் இருக்கும்.

மாலை கேஎல் நகரம் வந்து சேர்ந்தோம்… இறுதிகட்ட ஷாப்பிங் நடத்தினோம்… இந்தமுறை தெரு சந்தைக்கு சென்றோம். அங்கு வாரவாரம் ஒவ்வொரு தெருக்களில் சந்தைக்கூடுகிறது. இதில் எல்லாவிதமான பொருட்களும் விற்பனைச் செய்கிறார்கள். விலை மலிவுதான்.
சில கிடைக்காத பொருட்கள் கூட இங்கு கிடைக்கும். கவனமாக பார்த்து வாங்க வேண்டும். பழைய பொருட்களையும் கூட புதுசென்று நம் தலையில் கட்டிவிடுவார்கள்.
இந்த தெருசந்தையை சுற்றி விட்டு புறப்பட்டுவிட்டோம்… அதிகாலை 4.30 மணிக்கு ஏர்போர்ட் புறப்பட்டாக வேண்டும் என்பதால் 10 மணிக்கு முன் விடுதிக்கு வந்துவிட்டோம். சாமான்களை யெல்லாம் சரி செய்து வைத்துவிட்டு உறங்கினோம்.
அதிகாலை 4.15 கெல்லாம் ரெஜாக் டெலிபோன் செய்தார். கீழே வந்துவிடுங்கள். இன்னும் 5 நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றார்.
எனது குட்டிஸ்களை கிளப்புவதற்கு கொஞ்சம் சுனக்கம் கடைசி நிமிடத்தில் கொஞ்சம் பரபரப்பு என்னிடம் காணப்பட்டது.
குட்டிஸ்களின் கைகளில் அவர்களுக்கான பேக்கை கொடுத்துவிட்டு நான் இரண்டை எடுத்துக் கொண்டு என்மனைவி அவங்க பேக்கை எடுத்துக் கொள்ள சொல்லி விட்டு ரூமிலிருந்து வெளியில் வந்தேன்.
ரெஜாக் தயாராக நின்றார்… சாமான்களை ஏற்றினோம்… சரியாக 4.40க்கு புறப்பட்டோம். ரூம் காலி செய்யவில்லை. ரெஜாக் செய்துக் கொள்வதாய் கூறினார்.


கேஎல் நகரிலிருந்து விமான நிலையம் 65 கிலோ மீட்டர் தூரம்… காலைநேரம் என்பதால் வாகன நெரிசல் இல்லை.
நாங்கள் திருச்சி செல்கிறோம்.எங்களின் விமான நேரம் காலை 7.45 மணி… ஏர்ஆசியா விமானம்… இந்த விமானத்தில் பயணிக்கக் கூடியவர்கள் 3 மணிநேரம் முன்னாடியே விமானநிலையத்தில் இருக்கவேண்டும். ஏர் ஆசியாவிற்காக தனி விமான நிலையம் கேஎல்லில் வைத்திருக்கிறார்கள். 7 கிலோ எடைகொண்ட பேக்கை மட்டும் தான் கையில் வைத்துக் கொள்ளலாம். 15 கிலோ மட்டும் எடை இலவசம் அதற்கு மேல் உள்ள எடைகளுக்கு பணம் கட்டியாக வேண்டும். நாங்கள் நான்கு பயணிகள் அதற்கு தகுந்தமாதிரி எடைகளை சரி செய்து வைத்திருந்தேன்… இதோ விமான நிலையம் வரப்போகிறது… உங்களை யெல்லாம் விட்டு பிரியப்போகிறேன்…
ஓரு சந்தேகம் மனதில் தோன என்மனைவியிடம் கேட்டேன்…
உன்னுடைய பேக்கை நீ எடுத்துக் கொண்டாயா…?
எது சிவப்பு பேக்கையா…? நான் எதையும் கையில் எடுக்கவில்லை என்று கூற…ஒரு நிமிடம் நெருப்பு சுட்டது போல் இருந்தது…
ரெஜாக்கிடம் கொஞ்சம் வண்டிய நிறுத்துங்கள் எட்டு பேக் இருக்கனும் பார்த்துக் கொள்வோம் என்று பார்த்தால் ஒரு பேக் மிஸ்ஸிங்…அது என்னுடைய துணைவியாரின் துணிமணிகள்…ரூமிலேயே விட்டுவிட்டார்கள்.
பரபரப்பு அதிகமானது… நீ…நான்…அது…இது….ஒருவரையொருவர் காரணங்காட்டி காரணம் கூறி… சரி இப்ப என்ன செய்வது…
ரெஜாக் பேந்த பேந்த எங்களையேப் பார்த்தார்… விமான நிலையம் வருவதற்கு இன்னும் எவ்வளவு நேரமாகும் என்றேன்… இதோ 10 நிமிடத்தில் சென்று விடலாம் என்றார் அப்போது மணி 5 .25… எங்கள் விமானம் 7.45க்கு …
சுறுசுறுப்பாக யோசனை செய்தேன்…ரெஜாக்கிடம் அண்ணே இதுக்கு ஒரே வழி நீங்கள் தான் உங்களால் மட்டும் தான் முடியும்… நீங்க விடுதிக்கு போய் அந்த பேக்கை எடுத்து வந்திடுங்கள்… நான் அதற்குள் போர்டிங் போட்டு ரெடியாக இருக்கிறேன் என்றேன்…
நான் போய் திரும்ப வேண்டுமென்றால் ஒன்னரை மணிநேரம் ஆகுமே…வரும்போது டிராப்பிக் ஏதுமிருந்தால் நேரம் போய்விடுமே என்றார்… இல்லண்ணே எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க வந்திடலாம் ப்ளீஸ்…இந்த உதவியை செய்யுங்கள் என்று அவரிடம் கேட்டதும்… அவரும் சரி என்று புறப்பட்டார்.

ஏர் ஆசியா கவுண்டருக்கு சென்றேன் … மிஸ்ஸிங்ஆன பேக்கின் எடை 15 கிலோ அதை கணக்கு செய்து தான் எடை வைத்திருந்தேன்… இப்போது சின்ன குலறுபடி நிகழ்ந்திட்டது… இந்த ஒரு பேக்கினால் எங்களின் மனங்கள் மௌனமாகின… சரி… சிறப்பாக சுற்றுலா முடித்துவிட்டு போகும் நேரத்தில் இப்படியா என்று வருத்தம்… எடைகளை சரி செய்து கவுண்டரில் போட்டு போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டேன்… காலையிலிருந்து எதுவும் சாப்பிட வில்லை. காபிவாங்கி நாங்கள் அனைவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு குடித்துக் கொண்டிருக்கையில் ரெஜாக் போன் செய்தார்… விடுதிக்கு வந்துவிட்டேன் அந்த பேக் ரூமில் தான் இருக்கிறது என்று அவர் சொல்லும் போது மணி காலை 6.35.
எங்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது அது எங்கள் முகத்தில் தெரிந்தது… இருந்தாலும் என் உறவினருக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன். அப்படி நாங்கள் மிஸ்பண்ணினால் அதை கார்கோ மூலம் அனுப்பி வைத்திடவும்… ஒகேயும் அவர் சொல்லி விட்டார். என்மனைவிக்கு நிறைய ஆறுதல் கூறினேன்… என்னுடைய எல்லா டிரஸ்சும் அதிலே தாங்க இருக்கு…என்று வருத்தப்பட்டார்…

நேரம் நகர்ந்துக் கொண்டிருந்தது… காலை 7 மணி ஆகி விட்டது நான் தயாராய் நின்றுக் கொண்டிருக்கிறோம்… ரெஜாக் வரவில்லை… 7.05 தாண்டியது 7.10 க்கு அவரின் கார் வேகமாக வந்தது… அவசரமாய் எடுத்துக் கொண்டு நன்றிதழும்ப அவரைப்பார்த்து கைகுலுக்கி இமிக்கிரேஷனை நோக்கி விரைந்தேன்… அங்கு பெரிய வரிசை நிற்க… மீண்டும் பதட்டம்… அது முடிய 7.35 ஆகி விட்டது… அதற்குள் எங்கள் பெயரைச் சொல்லி அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்… முச்சு வாங்க ஒடினோம்… கடைசி பயணி நாங்கதான்…
விமானத்தில் ஏறி எங்கள் இருக்கையில் வந்து அமர்ந்ததும் தான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது… விமானம் புறப்படும் அந்த சில நொடிகளில் மீண்டும் ரெஜாக்குக்கு டெலிபோன் செய்து நன்றி கூறினேன்…
எனது இருபது கால பயணத்தில் இதுபோன்ற சம்பவம் இதுவே முதல் தடவை…
விமானம் ஆகாயத்தில் இறக்கை வரித்து பறக்க நானும் பதிவர்களுக்கு இந்த சம்பவங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டுமே என்ற சிந்தனையில் பறந்தேன்….

நிறைவு நன்றி……….

மனம் கவர்ந்த மலேசியாவை மனக்கவைத்த பதிவர்களுக்கு நன்றி கூறும் நேரம் அடுத்த பதிவில்நாங்கள் திருச்சி செல்கிறோம். தொடரும்

Sunday, September 13, 2009

பினாமி பதிவர்கள்....


அரசியல்வாதிகளின் சொத்துக்கு தான்பினாமி . பெரிய பணக்காரர்களின் சொத்துக்கும் பினாமி இருக்கிறார்கள் ஆனால் இணையதள வலைப்பூக்குமா பினாமி என்று ஆச்சிரியப்பட வேண்டாம்.
எழுத்துளலகில் தாள்களில் எழுதியக் காலம் மாறி இப்போது இணையத்தில் கணினிமூலம் எழுதுவதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அலுவலகங்களில் பத்திரிக்கைள் வார மாத இதழ்கள் வாசித்தகாலம் போய் இப்பொழுது இணையத்தில் அனைத்தையும் பார்க்க படிக்க ஏதுவாக இருப்பதால் தங்களின் படைப்புகளை பலரும் இணையத்தில் பதிவிட பரவசம் கொள்கிறார்கள்.

பத்திரிக்கைகளுக்கு தங்களின் படைப்புகளை அனுப்பி அது பிரசுரமாகி விமர்சனங்கள் வருவதற்குள் ஒரு பெண் கற்பம்தரித்து குழந்தைப் பெற்றுவிடலாம். ஆனால் இணையத்தில் பதிவுப்போடப்பட்ட அடுத்தவினாடியே விமர்சனங்களை காணக்கூடிய வாய்ப்பு இருப்பதால் எழுத்தார்வமிக்க பலர் இணையத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். 3000 பேர்களுக்கு அதிகமாக இணையத்தில் வலைப்பூவில் பதிவிடுவதாக கூறப்படுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

சிலருக்கு கணினி வசதியிருக்கிறது எப்படி வலைப்பூவை ஆரம்பிப்பது என்று அதைப்பற்றி தெரிந்து எழுதக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சிலருக்கு கணினி இருந்தும் வலைப்பூ ஆரம்பிப்பது அவர்களுக்கு கடினமாத்தெரிவதால் தங்களின் நண்பர்கள் மூலம் தங்களின் படைப்புகளை வலைப்பூவில் பதிவிடுகிறார்கள்.
இது ஒரு உதவியாக அந்த நண்பரகள் அவர்களுக்கு செய்வது உண்டு. சிலநேரங்களில் அவர்களுக்கு எரிச்சலாகக்கூட இருக்கலாம். தங்களுடைய படைப்புகளை பதிவிடும் தருணத்தில் இதுபோன்ற பினாமிகளின் தொந்தரவால் தங்களின் பணிகள் பாதிக்கப்படுவதும் தங்களுடைய நேரங்களை அவர்களுக்காக சிலவிடப்படுவதும் அவர்களுக்கு சிரமங்களைத் தரலாம்.

புதிதாக வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வப்படக் கூடியவர்கள் தங்களின் நண்பர்களிடம் எப்படி பதிவிடுவது என்று விளக்கமாக கேட்டு அதை எழுதி வைத்துக் கொண்டு தாங்களே பதிவிட முன்வரவேண்டும். அதனால் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் நண்பர்களின் தயவை நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் நினைத்தபடி உங்களின் வலைப்பூவை அமைத்துக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் கடினம்போன்று தெரிந்தாலும் நீங்கள் பழக பழக அது மிக எளிமையாகத் தெரியும்.
உங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை எழுதிவைத்துக் கொண்டு உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள் கண்டிப்பாக சொல்லித்தருவார்கள்.
உங்கள் நண்பர்கள் சொல்லுவதை அப்படியே எழுதிக் கொள்ளுங்கள். அடிக்கடி ஒரே விசயத்தை பலமுறைக் கேட்காதீர்கள் உங்கள் நண்பர்கள் எரிச்சலடைவார்கள்.

இதை நான் சொல்வதினால் ஏதோ நாலுபேருக்கு நான் பினாமி என்று நினைத்திடவேண்டாம்… அப்படி ஆர்வப்படும் சில நண்பர்களுக்கு பினாமியா இருந்து சொல்லிக் கொடுத்துவிட்டு வருவதில் நான் மகிழ்ச்சிக்கொள்கிறேன்.
ஆனால் எப்போதுமே பினாமியாக இருப்பது கடினம்.
அதனால் கற்றுக்கொள்ளுங்கள் … கற்கும்போது கடினமாத்தெரியலாம் கற்றுக்கொண்டால் எதுவுமே எளிமைதான்…!

Thursday, September 10, 2009

மனம் கவர்ந்த மலேசியா...19

ஏசியின் குளிர் அதிகாலையே என்னை எழுப்பி விட்டது… இருட்டாக இருந்ததால் ஜன்னலை திறந்தேன் மழை தூறிக் கொண்டிருந்தது.
ரொம்ப நேரமாக பெய்துக் கொண்டிருக்கும் போல…மழையைப் பார்த்ததும் மனம் மகிழ்ந்தேன்…
என்குட்டிஸ்களை எழுப்பி மழையைக் காண்பித்தேன். அவர்களும் சந்தோசத்துடன் விழித்து கிளம்பி …அப்பக்கூட எட்டு மணிஆச்சுங்க….
இந்த முறை நாங்க ரெடி…ரெஜாக் லேட்…எட்டுமணிக்கு மழைக்குள்ளயே எங்கள் மலாக்காப் பயணம் தொடங்கியது…
ரெஜாக் அவருடைய நண்பர் ஒருவரைக் கூட்டிவந்தார் பேச்சு துணைக்கு.
பெரும்பாலும் தமிழர்களும் தமிழ்இஸ்லாமியர்களும் மலாக்கா என்றால் அங்குள்ள புலாவ் பெசார் தீவில் அமைந்திருக்கும் தர்ஹாவின்நினைவு தான் அவர்களுக்கு வரும்.
500 ஆண்டுகளுக்கு முன் மலாயா ஜாவா பிரதேசங்களுக்கு இஸ்லாமிய பிரச்சாரம் புரிய வந்த ‘சய்யிதுஸ் ஸாதாத் சுல்தானுல் ஆரிஃபீன் அஷ்ஷெய்கு இஸ்மாயில் இப்னு அப்துல் காதிர்(ரஹ்)’ என்ற மகான் ஈராக் பாக்தாத் நகரிலிருந்து வந்தவர்கள்.
அவர்களின் அடக்கஸ்தளமே மலாக்கா புலாவ் பெசார் தீவின் அமைந்திருக்கும் தர்ஹாவாகும்…
இந்த மாகான் முஹம்மது நபி (ஸல் அலை) அவர்களின் 18 வது வழித்தோன்றலில் உதித்தவர்கள் என்று அவர்களின் சரித்திரம் சொல்கிறது.
இந்த தர்ஹாவிற்கு மதம் கடந்த மனிதர்கள் நேர்ச்சையின் நிமித்தமாய் வந்து போகிறார்கள்… பலரின் வேண்டுதல்கள் நிறைவேறுவதால் என் நேரமும் மக்கள் வந்து போகிறார்கள்.
மலேசியாவிற்குள் மலாக்கா வழியாக இந்த மகானின் மூலம் இஸ்லாம் நுழைந்தது என்று அவர்களின் வாழ்க்கை குறிப்பு கூறுகிறது…

பல நூறு ஆண்டுகளுக்கு முன் போர்சுக்கள் மலாக்காவில் நுழைந்து கிருஸ்துவத்தை பரப்பினர்… மலேசியாவின் முதல் தேவஆலயம் என்றால் அது மலாக்காவில் உள்ள ஆலயமேயாகும்.
இன்று சுற்றுலா தளமாக போர்சுக்களால் கட்டப்பட்ட தேவஆலயம் விளங்குகிறது…
மலாக்காவின் விமான நிலையம் சிலுவைப் போன்ற வடிவத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

நான் சுமார் காலை 11 மணிக்கெல்லாம் மலாக்கா போட்ஹவுஸ் வந்துவிட்டோம்…அப்பவும் மழைத்தூறிக் கொண்டுதானிருந்தது… போட்ஹவுஸே வெறிச்சோடி இருந்தது… போட் ஹவுஸ் அருகிலேயே பெரிய மீன் மார்கெட் இருக்கிறது. இங்கு மாலை நேரத்தில் மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
அந்த மீன்களை சுட்டும் தருவார்கள். ஆனால் சுட்டு சாப்பிடுகிற வாய்ப்பு இல்லாமல் போனது எனக்கு வருத்தமே…

ஒரு சிறிய மோட்டார் படகை வாடகைக்கு பேசினோம் அங்கிருந்து புலாவ் பெசார் தீவுக்கு சுமார் 30 நிமிடத்தில் செல்வதற்கு 100 கீமிட்டர் வேகத்திற்கும் மேல் சென்று இறக்கி விடுகிறார்கள். போய் வருவதற்கு 100 ரிங்கிட் கேட்டார்கள். லைப் ஜாக்கெட்டெல்லாம் போட்டுக்கிட்டுதான் படகில் உட்காந்தோம்.

மெல்ல படகை நகர்த்தி மெதுவாக கொஞ்ச தூரத்திற்கு ஒட்டிச்சென்று அதன் பின் போன வேகத்தை என்னால் விவரிக்க முடியவில்லை… இதுவரையில் நான் மோட்டார் படகில் இவ்வளவு வேகம் சென்றதில்லை. எனது குழந்தைகள் ரொம்பவும் பயந்து விட்டார்கள் நானும் உள்பட….

மழைத்தூறல் கொஞ்சம் குறைந்து இருந்தது…படகிலிருந்து இறங்கியதும் படகோட்டி நீங்க எவ்வளவு நேரத்துல வருவீங்கன்னு கேட்டார்… உடனே ரெஜாக் … ஒரு மணி நேரத்துல வந்திடுவோம்னு சொன்னதும் படகு காரர் சரி அப்படின்னா நான் இங்கதான் இருப்பேன் நீங்க வந்திடுங்ன்னு கூற… சரி என்று சென்றோம்.

தர்ஹாவிற்கு அருகில் பள்ளிவாசல் இருக்கிறது. நான் அங்கு சென்று மதியத் தொழுகையை தொழுதுவிட்டு பக்கத்தில் உள்ள தர்ஹாவிற்கு குடும்பத்துடன் செல்ல தாயாரானோம்… வரும் வழியில் தர்ஹா பிரார்த்தனைக்கு ரெஜாக்கின் தமிழ் நண்பர் 10 கிலோ அரிசி வாங்கிவந்தார்…பலர் நேர்ச்சை செய்துக் கொண்டு பல பொருட்களை கொண்டு வருவார்களாம்…

தர்ஹாவிற்குள் போகும்போது மழைத்தூறல் லேசாக இருந்துக் கொண்டிருந்தது ரெஜாக் சொன்னார் தரை வழுக்கும் பார்த்து வாருங்கள் என்று.
என்குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு மெல்ல நடந்தேன்…
தர்ஹாவில் ஜியாரத்தை (பிரார்த்தனையை) முடித்துக் கொண்டு வெளியில் வந்தோம்.
என் சின்ன மகளை கையில் பிடித்தவாறு படியில் இறங்கினேன். முதல்படியிலிருந்து இரண்டாவது படியில் காலை வைத்ததும் அது வழுக்கிவிட பிடிப்பதற்கு எந்த முகாந்தரமும் இல்லாத நிலையில் இன்னொருகாலும் வழுக்க இரண்டுகாலும் என் கட்டுப்பாட்டை இழக்க நான் நிலைத் தடுமாறி இரண்டாவது படியில் சருக்கி மல்லாக்க 3வது 4வது படிகளைக் கடந்து தரையத் தொட்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒடிவர என்குழந்தைகள் பதர என்னை சமாளித்துக் கொண்டு மெல்ல எழுந்தேன்.
நடுமுதுகில் பலமான அடி எல்லாம் உள்காயம் போல் தெரிந்தது… எல்லோரும் துக்கம் விசாரித்தார்கள்.
ஒரு மலாய்காரர் என்முதுகில் தேய்த்து விட்டார். இப்படி வழுக்கி விழுந்தது என்வாழ்க்கையில் மிகக்குறைவுதான்.

கொஞ்சநேரம் அங்கு அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு பிறகு புறப்பட்டேன். இந்த தர்ஹாவில் கேரளத்து மலையாள சகோதரர்களைக் கண்டேன் மலாய்கார்கள் சீனர்கள் தமிழர்கள் இவர்களை கண்டேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் நான் சென்றிருந்தபோது மலாக்கா தர்ஹாவிற்கு போகவேண்டும் என்ற எண்ணத்தை என் உறவினர் எற்படுத்தினார். அது இப்போது நிறைவேறியது.

நாங்கள் தர்ஹாவைவிட்டு கிளம்பும்போது பக்கத்தில் உணவு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் உணவருந்தி விட்டு செல்லுங்கள் என்று கூறினார்கள்.


நாங்கள் அங்கு சென்று மதியஉணவு சாப்பிட்டோம்… ஆட்டுக்கறி ரசம் என்று நம்ம ஊர் சாப்பாடு மாதிரி நல்ல ருசியாக இருந்தது. சாப்பிட்டு விட்டு எவ்வளவு தொகை என்று கேட்க … இது இனாம் இங்கு வரக்கூடியவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. வரக்கூடியவர்கள் கொண்டு வரும் பொருட்களில் உணவுகளை சமைத்து வழங்குகிறார்கள்.
நம்மஊர் தர்ஹாபோல் இல்லை…ஆம் நம்மூர் தர்ஹாக்களில் ஆட்கள் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் அங்கேயே தங்கியிருப்பார்கள். இங்கு தங்குவது இல்லை. அதை பராமரிப்பவர்களின் குடும்பங்களும் அதில் வேலைப்பார்ப்பவர்களும் மட்டும் தான் அங்கு தங்கி இருக்கிறார்கள்…

இந்த புலாவ் பெசார் தீவே மிக அமைதியாக காணப்பட்டது.

தொடரும்….

Wednesday, September 9, 2009

தொடர்பதிவின் தொடர்ச்சி.......

புதிய தொடர்பதிவை தொடங்குவதற்கு நண்பர் துபாய்ராஜா ஆசைப்பட்டார்…ஏதும் வம்புல மாட்டிவிடாதீங்கன்னு சொன்னேன்…அதெல்லாம் இல்ல ஈஸிதான்னார்… அவரைத் தொடர்ந்து என்னை தொடர்பதிவெழுத அழைத்தது செல்வனூரான் தங்கராசு நாகேந்திரன்…இவர் மாட்டிவிட்ட நாலு பேருல நானும் ஒருத்தன்…
ரொம்ப ஈஸியா பதில் சொல்லிருக்கேன்…?(கஸ்டப்பட்டு பொய் சொல்லிருக்கேன்)

இதுல நாலு பிரபல பதிவர்களை நானும் மாட்டி விட்டிருக்கேன்… யாம் பெற்ற கஸ்டம் அவர்களும் பெறனும்ங்குற நல்ல எண்ணத்துல…அவர்களின் அனுமதியில்லாமல் அழைத்திருப்பதால் பெரிய மனசுப்பண்ணி (உண்மைய சொல்லப்போறங்கல) அவசியம் தொடர்பதிவு எழுதும்படி கேட்டுக் கொள்கிறோம்ல…..
இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.


முதலில் அன்னை மொழியிலிருந்து தொடங்குவோம்....


1. அன்புக்குரியவர்கள் : மாதா பிதா குரு தெய்வம்

2. ஆசைக்குரியவர் : என்னை நம்பி வந்த மனைவி

3. இலவசமாய் கிடைப்பது : பதிவுலக நட்பு

4. ஈதலில் சிறந்தது : கொடுப்பது.

5. உலகத்தில் பயப்படுவது : நயவஞ்சகன்

6. ஊமை கண்ட கனவு : எனக்கு விளங்காது

7. எப்போதும் உடனிருப்பது : ஆன்மா

8. ஏன் இந்த பதிவு : புதிய நட்பின் புலம்பல்

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : நல்ல குரு கிடைப்பது

10.ஒரு ரகசியம் : இருப்பதெல்லாம் இறையே… இதை மறுப்பதில் இல்லை நிறையே

11.ஓசையில் பிடித்தது : ஹ_…ஹ_....

12.ஔவை மொழி ஒன்று : அறம் செய்ய விரும்பு

13.(அ)ஃறிணையில் பிடித்தது: ம்மா..என்றழைக்கும் பசு


1. A – Avatar (Blogger) Name / Original Name :நிகழ்வுகளின் நிழல்கள் 6வது அறிவு கிளியனூர் இஸ்மத்

2. B – Best friend? : மனசுக்கு பிடிச்சா எல்லாருங்க

3. C – Cake or Pie? : Cake கேக்கலையே


4. D – Drink of choice? எப்பவும் தேன்…அதனால தேனீர்5. E – Essential item you use every day? மனசு….அது உறங்காதே

6. F – Favorite color? கலரா இருக்குனும்னு ஆசை….ஆனால்…நீலம்தான் எனக்கு புடிச்சக் கலரு

7. G – Gummy Bears Or Worms : நான் என்ன அந்த மாதிரி ஆளா

8. H – Hometown? -மயிலாடுதுறை.


9. I – Indulgence? – இதுக்கு நான் இன்னா சொல்றது


10. J – January or February? - இது நான்பிறந்தமாதம் இல்லிங்க

11. K – Kids & their names..ளவ்உஸ் ஸனிய்யா / முஜ்ஹிரா

12. L – Life is incomplete without?மனைவியிடம் அடிவாங்காமல்..

13. M – Marriage date? – ஏங்க அந்த தேதிய ஞாபகபடுத்துறீங்க…

14. N – Number of siblings? நான்-னை விளங்கி நாம் வாழ்ந்தால் நான் உனக்கு சகோத(ரி)ரன் நீ எனக்கு சகோத(ரி)ரன்

15. O – Oranges or Apples? மஞ்சள் நிறத்து மேனி

16. P – Phobias/Fears? மனுசன் மாதிரி நடிப்பவர்களைக் கண்டால்

17. Q – Quote for today? இறைவனை நம்பு… கடமையைச் செய்

18. R – Reason to smile? வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகும்னு

19. S – Season? கோடையும் வாடையும்..


20. T – Tag 4 People?- ஜெசீலா (டீச்சரம்மாங்குறதுனால...... முதலிடம்)

கீழை ராஸா (அமீரகபிரபல பதிவர்)

சிம்மபாரதி(பேருக்கு வலைப்பூ…...இப்ப வச்சேன்ல ஆப்பு)

ராஜாகமால்(வெளியில வாங்க......கவிஞரே)

21. U – Unknown fact about me? அப்படியா…! என்னப்பற்றியா…?

22. V – Vegetable you don't like? நான் அப்படி சொல்லலையே

23. W – Worst habit?வம்புல மாட்டி விடாதீங்க

24. X – X-rays you've had? ஏன்…மண்டையில ஏதாவது இருக்கான்னு தெரிஞ்சுக்கனுமா

25. Y – Your favorite food? நெத்திலி கருவாடு

26. Z – Zodiac sign? இது என்ன நம்பறது இல்ல

Saturday, September 5, 2009

டிப்டாப்பும்...லவ்டாப்பும் (சிறுகதை)


அழைப்பு மணி சினுங்கியது…

அடுக்கலையில் வேலையாயிருந்த சித்ரா தன் ஈரக்கைகளை துணியில் துடைத்துக் கொண்டு …சுவற்றுக் கடிகாரத்தைப் பார்த்தாள்.
மணி 5.48

யாராக இருக்கும்…? அவர் ஆறுமணிக்கு தானே வருவார்…
தனக்குள்ளே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்…

குமார் நின்றுக் கொண்டிருந்தான்…
குமாரைக் கண்டதும் சித்ராவிற்கு முகம் மலர்ந்தது…

“வாங்கண்ணா …வாங்க…எங்களையெல்லாம் மறந்திட்டிங்களா…?
அண்ணிவரலைய்யா”…?கேட்டாள்.

“இல்லம்மா… நா ஒரு வேலைய்யா வந்தேன்.அந்த வேலையோடு உங்களையும் பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன்…எங்கே ரவி …?
இன்னும் அலுவலகத்திலிருந்து வரலைய்யா”…?-குமார் கேட்டான்.

“வர்ர நேரம்தான்னே…நீங்க உள்ள வாங்க”…-அழைத்தாள் சித்ரா

வரவேற்ப்பறையில் அமர்ந்தான் குமார்…

“அண்ணாக்கு காபி தானே”…?-சித்ரா கேட்டாள்

“ரவி வரட்டுமே” …-என்றான் குமார்

“ஏன் ரவி வராமே காபி குடிக்க மாட்டிங்களோ”…கேட்டுக் கொண்டே ரவி நுழைந்தான்…

“வாடா ரவி எப்படிஇருக்கே …உங்களை யெல்லாம் பார்த்து நாளாச்சி” …-என்று குமார் முடிப்பதற்குள்…

“பரவாயில்லையே… எங்கே..! கல்லூரியோடு நட்பு முடிந்திடுமோன்னு நினைச்சேன்…ஞாபகம் வச்சிருக்க”…பேசிக்கொண்டே தனது சட்டையின் பித்தான்களை ரவி கழற்றினான்…

சித்ரா அடுக்கலைக்குள் காபி போடச் சென்றாள்…

ரவி தனது அலுவலக உடைகளை கழற்றி விட்டு கைலியும் பனியனுடன்
கையில் பல் பிரஷ்சுடன் கழிவரைக்குச் சென்று வந்தான்.

“என்னடா ரவி இப்பபோய் பல் துலக்கிட்டு வர்ரே”…?-கேட்டான் குமார்

பல் தெரியாமல் சிரித்து விட்டு தனது அறைக்குச் சென்று உடை மாற்றி வந்தான் ரவி…

குமார் ரவியை உற்றுப்பார்த்;தான்…

“ஏண்டா …இப்படி பாக்குறே”…?-ரவி கேட்டான்.

“இல்ல நீயும் அண்ணியும் எங்கயாவது வெளியில போறீங்களா”…?-குமார் கேட்டான்…

“ஏன்கேக்குற”…?-ரவிக்கேட்டான்

“இல்ல நீயும் அண்ணியும் டிப்டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு வெளியில கிளம்புர போலத் தெரியுது …இந்த நேரத்துல நான் தொந்தரவு கொடுத்திட்டேனோன்னு தோனுது”…-குமார் சொன்னான்..

ரவி சிரித்துக் கொண்டு … “ஏன் வெளியில போனாத்தான் டிப்டாப்பா ஆடை அணியனும்மா…?வீட்டிலிருந்தா அலங்காரமா இருக்கக் கூடாதா”…?-கேட்டான் ரவி…

குமார் வியப்போடு பார்த்தான்.. தான் தவறாகக் கேட்டு விட்டோமோ என்ற உணர்வோடு… “அது இல்ல ரவி…இப்பதான் ஆபீஸ் விட்டு வந்தே...! …வந்த வேகத்துக்கு மறுபடியும் ஆபீஸ் கிளம்புறா மாதிரி டிரஸ் பண்ணியிருக்கிறதனால தான் கேட்டேன்…நா ஏதும் தப்பா கேட்டுவிட்டேனா”…?-குமார் கேட்டுக் கொண்டான்…

“இப்படி டிரஸ் பண்றது என் மனைவிக்கும் எனக்கும் பிடிக்கும் .அலுவலகம் போறப்ப மட்டும் யாருக்காகவோ அலங்கரித்துக் கொண்டு
வீட்டுக்கு வந்ததும் அலங்கோலமா இருந்தா மனைவியோட மனசு எப்படி இருக்கும்”;…ரவி பேசிக்கொண்டிருந்தான் சித்ரா காபி தந்தாள்..

“தன் கணவனை அழகா பார்க்க எந்த மனைவிக்கு தான்
பிடிக்காது…அவங்க மனசுக்குள்ள நாம தானே கதாநாயகன்…அவங்க ஆசைப்படுற அத்தனை ஹீரோவையும் நம்ம உருவத்துல தான் பார்க்கனும்…தன் மனைவி தன் கண்ணுக்கு அழகானவளாக குணமானவளாக மணமானவளாக இருக்குனும்னு எதிர்பார்க்கிறோமில்ல …அது மாதிரி
அவங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும் தானே”…?-காபி குடித்துக் கொண்டான் ரவி…

“அது மட்டுமல்ல ஒரு நாளைக்கி மூனு முறை பல் துலக்குறேன்…நான் பேசும் போது என் வாயுடைய துர் நாற்றம் என் மனைவிக்கு முகம் சுளிக்க வைக்கக் கூடாது…இது மாதிரி சின்ன சின்ன விசயங்கல்ல கவனமா இருந்தா இல்லறம் நல்லறமா இருக்கும்”;….-ரவி கூறியதை ஆழமான சிந்தனையோடு கேட்டான்….தன்னைக் கண்டு அவ்வபோது தன் மனைவி சிடுசிடுப்பதின் காரணம் விளங்கியவனாய் புறப்பட்டான் குமார்….!

Wednesday, September 2, 2009

மனம் கவர்ந்த மலேசியா...18

காலை டிபன் முடித்துவிட்டு கிளம்ப 10 மணியாகி விட்டது. கார் நெரிசல் அதிகம் காணப்பட்டன… அலுவலக நேரமென்பதால் மக்கள் நடமாட்டமும் அதிகம் …காலையிலேயே சூடு அதிகமிருந்தது. கேஎல் நகரத்திலிருந்து கெந்திங் ஐலாண்ட் சுமார் 50 கீமி தூரம் என்றார். மலைமீது ஏறியதும் குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு குளிரை சுவாசிக்க முடிந்தது…கெந்திங் ஐலாண்டிற்கு ரோடு வழியாகவும் கேபில் கார் மூலமும் செல்லலாம்… செல்லும் மலைப்பாதைகளில் சின்ன சின்ன குட்டி கிராமங்கள் இருக்கிறது அங்கு தங்குவதற்கு விடுதிகள் நிறைய இருக்கின்றன. கெந்திங் ஐலாண்ட் 6000 அடி உயரத்திற்கு மேல் அமைத்திருக்கிறார்கள்…உலகிலேயே அதிக அறைகள் கொண்ட ஹோட்டல் கெந்திங் ஐலாண்ட் ஹோட்டல் தான். இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது… அந்த அறைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா…? 6100 … ம்… அதனால்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது… கெந்திங்கில் என்ன இருக்கிறது…? குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விளையாடக் கூடிய இடமன்னும் சொல்லலாம் அல்லது அங்கு நிகழக்கூடிய சீதோசனம் வானிலை மாற்றங்களை கண்டு ரசிக்கலாம் மழைத் துளிகளை முகத்தில் மோதவிடலாம் மேகக்கூட்டங்களோடு மிதமான வெப்பத்தில் குளிர் காயலாம்… இப்படி மனம் ரசிக்கும் இயற்கை அங்கு இருக்கிறது. கெந்திகிங் அவுட்டோர் கேம்ஸ்ன்னு 20 க்கும் மேல் வைத்திருக்கிறார்கள். காலை 10 மணி முதல் மாலை 6 மணியுடன் அவுட்டோர் கேம்ஸ் முடிஞ்சுடும் அவுட்டோர் மாதிரி இன்டோர் கேம் விளையாட பெரிய பிளாசா இருக்கிறது அதன் உள்ளே… பல விதமான எலக்ட்ரானிக் விளையாட்டுகள் இருக்கின்றன… இதற்கு காலை 8 மணிமுதல் இரவு 12மணிவரை என நேரம் நிர்ணயித்திருக்கிறார்கள். இதற்கு தியிம் பார்க் என்று சொல்கிறார்கள்… இன்னும் இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம்னு சிலர் சொல்லலாம் அந்த மாதிரி ஆட்களுக்கு கசினோ சூதாட்ட கிளப் இருக்கிறது … அங்கு செல்வதற்கு உடைக் கட்டுப்பாடு இருக்கிறது அதற்கான பிரத்தியேகமான உடையணிந்து தான் செல்லவேண்டும் என்று கூறுகிறார்கள்… இரண்டு விதமான கசினோ இருக்கிறது ஒன்று ஸ்டார் வேர்ட் இன்னொன்று கெந்திங் ஐலாண்ட் கசினோ … இதற்கு சீனர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். நாங்கள் கெந்திங் வந்து சேர்ந்தோம்… அங்கு பல விடுதிகள் இருந்ததினால் ரெஜாக்கிடம் கேட்டேன்… கேஎல் சிட்டியில் ஹோட்டல் போட்டதற்கு பதிலாக இங்கு போட்டு இரண்டு நாள் தங்கிவிட்டு போயிருக்கலாமேன்னு…? ஆமாம்… நான்கூட அப்படித்தான் நினைச்சேன்னார்… அட அட மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்டேன்…இங்கு விடுதி வாடகை அதிகம் இல்லை நாம் இணையத்தின் மூலமாக பதிவு செய்துக் கொள்ளலாம்… அவுட்டோர் கேம் உள்ளே செல்வதற்கு டிக்கேட் எடுத்துவிட்டோம்… ரெஜாக்… நான் வரவில்லை நீங்க என் மகளை மகனைஅழைத்துப்போங்கள் என்று கூறினார். ஏன் ஏற்கனவே இங்கு வந்திருக்கிறீங்களான்னு கேட்டேன்… இல்லை இது குழந்தைகள் விளையாடுறது நான் காரிலேயே இருக்கிறேன் நீங்கள் போய் பார்த்துட்டு வாங்கன்னார். இது குழந்தைங்க விளையாடுற இடம்தான் அப்ப நான் என்ன குழந்தையா…? வாங்கண்ணே நாமல்லாம் குழந்தைங்க தானே… இந்த குழந்தைகளுக்காக தானே இவ்வளோ கஸ்டப்பட்டு சம்பாதிக்கிறீங்க அந்த குழந்தைகளின் சந்தோசத்தை அவங்க முகத்துல பாருங்க… அதப்பாக்குறப்ப நாமலும் சந்தோசப்படலாம்…இன்று ஒரு நாள் குழந்தையாக மாறிடலாம்… என்று அவருக்கு பூஸ்ட் கொடுத்த பிறகு வந்தார்… முதலில் இராட்டினம் இதில் குட்டிஸ்கள் ஆர்வத்துடன் ஏறினார்கள்… அவர்களின் கூச்சல் நமக்கு ஒரு வித பயத்தைக் கொடுத்தது.

அடுத்தது சாக்லேட் வீடு இதனுல் சென்று கிளிக்…கிளிக் செய்தேன். கப் அன் சாசர் இதில் தான் ரெஜாக்கை அமரவைத்து நான் ஆனந்தப்பட்டேன் மனுஷன் எல்லாத்தையும் மறந்திட்டு குழந்தைகளுடன் எவ்வளவு மகிழ்சியா விளையாடினார்… அடுத்தது போட்ஹவுஸ் சென்றோம் . என்மகளும் ரெஜாக் மகளும் தனியாகவே மிதிப் படகில் சென்றார்கள். அவுட்டோர் கேமில் நல்ல கூட்டம் இருந்தது… சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டனர்… ஒவ்வொன்றாய் விளையாடிக் கொண்டு வரும்போது திடிரென்று நல்ல வெயில் அடிக்க அவ்வளவு நேரக் குளிருக்கு அந்த வெயில் இதமாக இருந்தது… கொஞ்ச நேரத்திலெல்லாம் வெயில்போய் ஒரே மேகமூட்டம்… எதிரே உள்ள கெந்திங் ஹோட்டலையே மறைத்து விட்டது…அதை அப்படியே எனது கைபேசியில் படம் பிடித்தேன் நான் பார்க்காத புதிய விளையாட்டுகள் நிறைய இருந்தது… ஒரு சிலவற்றில் நான் ஏறினேன்… ஆனால் குட்டிஸ்கள் எல்லாவற்றிலும் ஏற வேண்டும் என்ற ஆவலில் இருந்தார்கள்… ஆனால் எங்களுக்கு பயம்… அப்படியும் ஒரு சில விளையாட்டில் அவர்கள் ஆசைப்பட்டாலும் நாங்கள் அனுமதிக்கவில்லை. மதியம் 4 மணிக்கு பிறகு மழைபெய்யத் தொடங்கியது அவுட்டோர் கேம் அனைத்தையும் நிறுத்தினார்கள்… நல்லமழை அதைப்பார்க்க பார்க்க சந்தோசமாக இருந்தது. மெல்ல நடந்தோம் இன்டோர்கேம் போகலாம்னு புறப்பட்டோம் … அஙகு ஒரு சிலவற்றை மட்டும் பார்த்து விட்டு விளையாடிவிட்டு கிளம்பலாம் என்றார் ரெஜாக் அப்போது மணி 5.30 மணியிருக்கும். இன்னும் நகரத்திற்குள் பார்க்க வேண்டிய இடம் இருக்கிறது இப்போது கிளம்பினால்தான் போய் சேருவதற்கு ஒரு மணி நேரத்தை தாண்டும் என்றார்… குழந்தைகளுக்கு அதை விட்டு கிளம்ப மனம் இல்லை… என் மகள் அழுதே விட்டால்… அவளை சமாதானம்பண்ணி அழைத்துப் போனேன். இங்கு ரூம் போட்டு தங்கியிருக்க வேண்டும் … இது தெரியாமல் போய் விட்டது…! கேஎல் நகரத்தில் உள்ள பெட்ரோனஸ் இரட்டைக் கோபுரத்தைக்காண சென்றோம்…இது 452 மீட்டர் 1492 அடி உயரம் கொண்ட கட்டிடமாகும் இந்த கட்டிடத்தின் அழகே தனி அழகுதான். அந்தக் கோபுரத்தில் மேலே ஏறிப் பார்க்கலாம். ஆனால் காலைநேரத்தில் அங்கு அப்பாய்மெண்ட் டிக்கேட் கொடுத்து நேரமும் அவர்கள் கொடுப்பார்கள் இதை வாங்குவதற்கு மிகப் பெரிய கூட்டம் வரிசையில் நிற்கும். ஒரு நாளைக்கு இவ்வளவு பேர்கள் தான் என எண்ணிக்கை வைத்திருக்கிறார்கள்… மேலே சென்று பார்க்கக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. நாளை ஒருநாள் மட்டும் தான் நாளை மறுநாள் ஊருக்கு புறப்படனும் அதுவும் விடியற்காலை . அதனால் நாளை மலாக்க என்ற ஒரு கிராமத்திற்கு காலையில் செல்ல இருக்கிறோம் அது கேஎல்லிருந்து சுமார் 180 கீமி தூரம் என்றார் ரெஜாக்… அதனால் எங்களின் நகர சுற்றை முடித்துக் கொண்டு விடுதிக்கு புறப்பட்டோம்…! நாளை சந்திப்போம்….