உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, May 30, 2011

புகையிலை எதிர்ப்பு தினம்

மே 31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

புகையிலை என்றதும் நம் சிந்தைக்கு வருவது சிகரெட்.

இது பலருடைய வாழ்க்கையை புகைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.

ஆண்களைப்போல சில பெண்களும் இன்று புகைப்பதை ஒரு மாடனாக கருதுகிறார்கள்.
ஸ்டைலுக்காக புகைக்கப்படும் பழக்கம் நாளடைவில் வலுவாகி புகைக்காமல் இருக்கமுடியாத சூழலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.
தற்போது ஐடி துறை கால் சென்டர்களில் பணிப்புரியும் இளம் பெண்களிடம் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் வேலையின் பளுவாலும் பசியை மற்றும் உடல் பருமனை குறைப்பதற்கும் புகைக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

சில காலங்களுக்கு முன் விமானத்தில் புகைப்பதற்கு அனுமதியளித்திருந்தார்கள் இன்று விமான நிலையத்தில் கூட புகைப்பதற்கு அனுமதி இல்லை.சில விமான நிலையங்களில் தனி அறையை புகைப்பதற்கு ஒதுக்கியிருந்தாலும் அங்கு சென்று புகைப்பதைவிட ஒரு இரண்டுநிமிடம் நின்று வந்தால்போதும் சிகரெட் குடித்த உணர்வோடு வந்துவிடலாம் அந்தளவு புகைமூட்டமாக இருக்கும்.

முன்னையவிட தற்போது அதிகமான விழிப்புணர்வு புகையிலையின் கெடுதலைப்பற்றி வந்திருக்கிறது பல நாடுகள் பொது இடங்களில் புகைப்பதை தடை செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தோனேஷியாவில் இந்த தடை அமுலில் இருந்தாலும் அதிகமானோர் பொது இடங்களில் புகைக்கிறார்கள்.

இதெல்லாம் மற்றவர்களின் ஆய்வு என்னைப்பற்றிய ஆய்வை நான் சொல்லவேண்டும் ஆரம்பத்தில் நான் புகைக்க ஆரம்பித்தேன் மெல்ல மெல்ல புகை என்னை புகைக்க ஆரம்பித்தது.

புகைக்கும் பழக்கம் எங்கு தொடங்கியது என்று என்னிடம் நீங்கள் கேட்டால் நட்பு என்று சொல்வேன்.ஆம் நண்பர்களுடன் ஜாலியாய் தினம் ஒரு சிகரெட் என்று துவங்கிய பழக்கம் அது வளர்ந்து தினம் ஒரு பாக்கெட் (20) என்ற கணக்கில் சில நேரங்களில் சந்தோசமான துக்ககரமான நேரங்களில் கொஞ்சம் அதிகமாகவே புகைத்து என்நேரமும் என் உடலைப்போல் ஆன்மாவைப்போல் என் கூடவே இருந்து இடது பேண்ட் பாக்கெட்டை ஆக்கிரமிப்பு செய்து தனி இடத்தை என்னிடம் பெற்றிருந்தது.

திருமணத்திற்கு பின் எனது மனைவி என்னிடம் சிகரெட்டை விடும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டிருக்கிறார்.அப்போதெல்லாம் என் மனைவிக்கு கோபம் உண்டாக்குவதற்காக நீ எனக்கு இரண்டாவது மனைவி என்பேன் எப்படி என்றால் உன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னிருந்தே நான் புகைத்துக் கொண்டிருக்கிறேன் அதனால் முதல் மனைவி சிகரெட் என்பேன்.

புகைப்பதற்கு எத்தனையோ காரணங்களை கூறியிருக்கிறேன் ஆனால் அத்தனையும் உண்மையல்ல என்பது புகைப்பவர்களுக்கு தெரியும்.

எனது குழந்தைகள் என்னிடம் இந்த பழக்கத்தை விடுங்களேன் என்று கேட்கும்போது உள்ளுக்குள் வெட்கப்பட்டிருக்கிறேன்.இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை விடமுடியாமல் தவிக்கின்றோமே எப்படியாவது விடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்ததே தவிர அதைவிட்டுவிடுவதற்கு மனம் தயாராக இல்லை.

பொது நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் பழக்கமுடைய எனக்கு நான் பழகக் கூடிய நண்பர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத்தவிர பல நண்பர்கள் புகைப்பதில்லை.புகைத்துவிட்டு நண்பர்களின் பக்கத்தில் அமரும்போது அவர்களின் முகம் சுளிவதை காணும் என் மனசு வலியை சுமந்திருக்கிறது.வாயை பினாயிலிட்டு கழுகினாலும் சிகரெட்வாடை போவதில்லை.


எனது ஆன்மீக குருவைக்காண குடும்பத்துடன் சென்றபோது புகைப்பதை சொல்லக்கூடாது என்று நான் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதையும்மீறி எனது குழந்தைகள் நான் புகைப்பதை அவர்களிடம் கூறிவிட்டார்கள்.

என் குரு ஆச்சரியமாக என்னைப்பார்தார்கள் உங்களுக்கு இந்த பழக்கமிருக்கிறதா? நம்பிள்ளைகள் இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபடமாட்டார்கள் தங்கள் மனதை இதில் லயிக்கசெய்து பாழாக்கிக் கொள்ளவேண்டாம் அதனால் வரக்கூடிய தீமைகளை எடுத்துக் கூறினார்கள்.

அவர்களிடம் என்னைப்பற்றிய குறையை கூறும்போது நான் கூனிக்குறுகி விட்டேன்.
எப்படியாவது விட்டுவிடுகிறேன் என்று நான் கூறினாலும் மனம் சம்மதிக்கவில்லை.

மனிதன் ஏதோ ஒன்றுக்கு கட்டுப்படவேண்டும் அந்தக் கட்டுப்பாடு இல்லை என்றால் நூலறுந்த பட்டத்தைப் போன்று அவனுடைய வாழ்க்கை இருக்கும்.

குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டால் அதனால் வரக்கூடிய நன்மைகள் எனக்குத்தானே இருந்தாலும் ஈகோ சும்மா இருப்பதில்லை மனைவிச் சொல்லி இதை விடவேண்டுமா? அல்லது நீ பெற்ற குழந்தைகள் சொல்லி விடவேண்டுமா? இப்படி விடாமல் புகைத்துக் கொண்டிருப்பதற்கு பல காரணங்களை மனம் கற்பித்தாலும் அறிவு அதை ஏற்றுக் கொள்வதில்லை.

புகைக்கக் கூடியவர்களுக்கு புகைப்பதினால் பல தீமைகள் இருக்கிறது என்பது தெரிந்துதான் இருக்கிறார்கள் ஆனால் அந்த தீமை அவர்களைத் தண்டிக்காத வரையில்.
ஆனால் தண்டிக்கப்படும்போது அதை துண்டித்துவிடுவார்கள் தண்டனைக்காக காத்திருக்க வேண்டுமா?.

ஒரு செயலை தொடரும்போது மனம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை அதை தொடச்சியாக்கும்போது அது பழக்கமாகிறது.அந்த பழக்கம் வழக்கமாகி வாழ்க்கையாகிறது.

இப்படி தொடரப்படுவதுதான் எந்தப்பழக்கமும்.

(அந்தப்பழக்கத்திலிருந்து விடுப்பட்டு சரியாக சொல்ல வேண்டுமானால் 2010 ஏப்ரல் 10 தேதி இரவு 9.30 மணிக்கு புகைப்பதை விட்டுவிட்டேன்.50 தினங்களை புகைக்காமல் கடத்தியும் விட்டேன்.வாடை இன்னும் வீசிக்கொண்டு தானிருக்கிறது இருந்தாலும் நான் போராட புறப்பட்டுவிட்டேன்.)

புகைப்பதில் நுழைந்த பலர் அதிலிருந்து மீண்டுவருவது கடினம் என்று தங்களுக்குள் ஒரு எண்ணத்தை வழுவாக வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை.
நானும் அப்படிதான் இருந்தேன் எனது குரு கேட்டார்கள் உங்கள் மனதை உங்களால் வெல்ல முடியும் விட்டுப்பாருங்கள் உங்கள் மனோசக்தியை உணர்வீர்கள் என்றார்கள்.

என்மனதை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தூக்கி வீசினேன் இந்த ஐம்பது தினங்களில் அந்த நினைவு வரும்போதெல்லாம் நம் மனதை வெல்லவேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொள்கிறேன் அந்த எண்ணத்திற்கு மத்தியில் இந்த சிகரெட் வலுவிழந்து வருகிறது.

ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீளக்கூடியவர்களின் மனோசக்தி அவர்களுக்கு அதிகரிக்கிறது அவர்களால் எதையும் வைராக்கியத்துடன் செய்து சாதிக்கமுடியும் என்பதை இந்த ஐம்பது தினத்தில் நான் கற்றுக் கொண்டுவரும் அனுபவப்பாடங்கள்.

அந்த பழக்கத்தை விட்டதினால் எனது குடும்பம் சந்தோசமடைகிறது நானும் சந்தோசமடைகிறேன் என்னுள் இருந்த புகைக்கும் எண்ணம் இல்லாதபடியால் அவ்வபோது நண்பர்களைவிட்டு விலகி புகைத்துவிட்டு வரும் அந்த நிமிடங்கள் இன்று மீண்டுருக்கிறது ச கநண்பர்களுக்கு மத்தியில் இன்று நானும் புகைக்காதவனாக காட்சியளிக்கிறேன்.

சாதிக்க முடியும் என்னாலும் சாதிக்க முடியும் ஆம் நான் இமயத்தை தொடவில்லை ஆனால் என்வீட்டு இதயங்களை தொட்டுவிட்டேன்.

மீள்வதற்கு வழிதந்த என்குருவிற்கும் என்குடும்பத்தார்கள் எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.
-------------------------------

இவ்வளவு தூரம்வரை நீங்கள் வாசித்தவை சென்ற ஆண்டு மே 31ம் தேதி எழுதிய பதிவு. ஆனால் இந்த பதிவுக்கு பிறகு இன்று வரையிலும் நான் சிகரெட் குடிக்கவில்லை. குடிக்கவேண்டும் என்ற எண்ணம் அவ்வபோது வந்தாலும் கூட அந்த எண்ணத்தை ஏதேனும் தின்பண்டங்கள் பக்கம் கவனத்தை திருப்பிவிடுகிறேன்.

எனது நண்பர்கள் உறவினர்கள்கூட நான் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று கூறியபோது நம்பவில்லை ஆச்சரியம் அவர்களுக்கு எப்படி? என்று கேட்டார்கள் கூறினேன் மனம் வைத்தால் நம்மை நாமே வெல்ல முடியும் என்பதை என் குரு எனக்கு மெய்பித்து காண்பித்திருக்கிறார்கள்.

இன்று பல தொலைக்காட்சிகளில் புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு நிக்கோடின் போன்ற மாத்திரை மருந்துகளை அறிமுகம் செய்கிறார்கள். இவைகளை வாங்கி உண்டு விடுவதைவிட புகைப்பதை நீங்கள் மாற்று மருந்து இல்லாமல் நிறுத்திப்பாருங்கள் சில தினங்களில் உங்கள் மனதளவில் ஒரு சக்தியை புத்துணர்ச்சியை உணர்வீர்கள். என்றுமில்லாத ஒரு சுறுசுறுப்பு உங்களிலே ஏற்படும். அந்த சுறுசுறுப்பே உங்களின் எண்ணத்தை புகைப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவைத்துவிடும்.

புகைக்கும் எண்ணம் வந்தால் எதையாவது சாப்பிடுங்கள் கொஞ்ச நாட்கள் அப்படி சாப்பிடுவதினால் உங்கள் உடல் பருமன் கூடும் பின் நாட்களில் பருமனை குறைத்துவிட முடியும்.

இவைகளை எல்லாம் படித்தோ அல்லது கேட்டோ இங்கு பதிவு செய்யவில்லை இந்த 13 மாதங்களில் நான் கண்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

நண்பர்களே!
உங்களாலும் முடியும் நீங்களும் சாதனையாளர்தான் புகைப்பதை விட்டுப்பாருங்கள் உங்களின் தனித்தன்மையை உணர்ந்துக் கொள்வீர்கள் வாழ்த்துக்கள்!

Tuesday, May 24, 2011

எழுத்தாளன் வறிஞனாகிறான்

அமீரகத்தில் எனது 30 வருட வாழ்க்கையை அனுபவத் தொடராக எழுதிவந்தேன். அவ்வபோது சரியாக தொடரை தொடாததினால் அது தடைப்பட்டு போயிருக்கிறது. கூடுமானவரையில் எனக்கு நிகழ்ந்த அனுபவங்களை பதிவிட்டிருக்கிறேன். மனிதர்களின் சிந்தனையில் ஏற்படக்கூடிய மாற்றங்களும், இயற்கையின் மாற்றங்களும்தான் காலத்தின் மாற்றமாகிறது.

அமீரக வாழ்க்கையில் அறிமுகமானவர்களில் கீழக்கரையைச் சார்ந்த ஒரு பெரியவர் எனக்கு செய்த உபதேசம் நீ எழுதுவதை விட்டுவிடு! நன்றாக சம்பாதிக்கனும் என்றார்.
அவர் ஏன் அப்படி சொன்னார் என்று நான் யோசித்துப் பார்த்தேன் புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களில் பெரும்பாலோர் வறுமையில்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், மறைந்தும் இருக்கிறார்கள்.

அவர் மேலும் சொன்னார் எழுத்தாளர் அப்துற் றஹீம் அவருடைய கடைசிக் காலத்தில் பொருளாதாரத்தில் எப்படி எல்லாம் கஸ்டப்பட்டார் என்பது உனக்கு தெரியுமா? நான் அவருக்கு உதவி செய்திருக்கிறேன் என்றார்.
தன்னம்பிக்கை தரக்கூடிய நூல்களை தமிழகத்தில் அறிமுகம் செய்தவர் அப்துற் றஹீம். அவருடைய பல நூல்களை நான் வாசித்திருக்கிறேன். அவருடைய வார்த்தைகளை எனது அறையின் சுவற்றில் எழுதியும் வைத்திருந்தேன்.

“எழுத்து என்ற இரக்கமற்றத் துறையில் நுழைந்த எவரும் துவக்கத்தில் எல்லாவிதமான கஸ்டங்களையும் நஷ்டங்களையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்கவேண்டும்.”

இந்த வரிகள் என்னை செம்மைப்படுத்திருக்கிறது. ஆனால் எழுத்தை எனது பொழுதுபோக்காக எண்ணியதால் முழு நேரம் அது என்னை ஆட்படுத்தவில்லை. ஒருவேலை முழுநேர எழுத்தாளனாக மாறியிருந்தால் எனது எழுத்தின் போக்கும், எனது வாழ்க்கையின் போக்கும் மாறியிருக்கும். நான் எழுத்தை விற்க துவங்கியிருப்பேன். அந்த விற்பனையில் கிடைக்கக்கூடிய வருமானம் இன்றைய நவீன உலகிற்கு பற்றாமலேயே போயிருக்கலாம் அல்லது கவிபேரரசு வைரமுத்துவை போல தமிழ் கை நிறைய பணத்தை அள்ளியும் கொடுத்திருக்கலாம்.

எழுத்துலகில் பணக்கார கவிஞன் ஒருவரைத்தான் என்னால் இங்கு அடையாளம் காட்டுவதற்கு முடிந்திருக்கிறது.

தமிழகத்தில் எழுத்தை நம்பி வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை இன்னும் வறுமைக்கோட்டுக்குள்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தே அந்த பெரியவர் எனக்கு உபதேசம் செய்தார். அவரின் உபதேசம் கேட்கும் நேரத்தில் நான் வேலை இழந்திருந்தேன். எழுதுகிற அளவுக்கு என்னிடம் இலக்கணம் இல்லை. சிலவு செய்யுமளவு என்னிடம் பொருள் களமுமில்லை இருந்தாலும் அவருடைய அந்த வார்த்தை நெஞ்சுறுதியாகி விட்டது.

அந்த தருணங்களில் எழுதி வெளியிட்ட நூல்கள் நல்ல நண்பர்களிடம் என்னை கொண்டுச் சென்றது. அந்த நண்பர்களின் முன்னேற்றமும் நான் படித்த தன்னம்பிக்கை நூல்களும் எனக்கு வழிகாட்டியது.

அந்த வழிகாட்டல் பொருள் சேர்க்கும் எண்ணத்தையும், நல்ல சிந்தனையையும் கொடுத்தது. பொருளே வாழ்க்கையாகிவிடவும் முடியாது அதில் பொருள் இருக்கவேண்டும் அல்லவா? பொருளுடன், அருளும் இணையும் போதுதான் சேர்த்த பொருளுக்கு பொருள் இருக்கும்.

அப்படி கிடைத்ததுதான் ஆன்மீகம். ஆன்ம பாட்டை மனிதனுக்கு சுய சிந்தனையை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஆன்மீகம் என்பது வாதம் புரிவதற்கும் பிறருக்கு போதிப்பதற்கும் அதன் பொருளை தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது. அதனால்தான் உலக நாடுகள் பலவற்றிலும் அமைதியின்மை நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

சுயசிந்தனை செய்யாத எதுவுமே ஆன்மீகம் அல்ல அது லௌகீகம் அது புறசிந்தையை மட்டுமே தூண்டும் அகத்தை விளங்காது அதன் கருத்தை மனம் ஏற்காது. இப்படிப்பட்டவர்கள் தங்களை தாங்களே அமைதிப்படுத்திக் கொள்ள முடியாது. இவர்கள் எப்படி இந்த சமுதாயத்தை ஒன்றுப்படுத்தஇ அமைதிகாக்க வைக்க முடியும். இவர்களால் பல பிரிவுகளை வேண்டுமானால் உண்டாக்க முடியும் பிரிந்தவர்களை ஒன்று படுத்த முடியாது.

ஆன்மாவை படிப்பதற்கு நிறைய விசயங்கள் இருக்கின்றன அதை கற்பதற்கு பல்கலைகழகங்கள் இல்லஈ ஆன்மீகக் கூடங்கள் இருக்கிறது. எதையுமே கற்றுத் தெரிந்தவரிடமிருந்தே கற்க வேண்டும் அதனால் தான் இன்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பொருளீட்ட வந்த இடத்தில் பொருளுடன் அருளும் ஈட்டுவதற்கு நட்புகள் துணைப் புரிந்தன. எனது எழுத்தின் போக்கு திசைமாறுவதை நான் உணர்கிறேன்.

இறைவனைப்பற்றி பேசக்கூடியவர்களுமஈ எழுதக்கூடியவர்களும் இறைவனை விளங்கியவர்களல்ல. இறையைப் பற்றி பேசாதவர்கள் நாத்தீகருமல்ல. ஒவ்வொரு மனிதனும் இறைவனின் படைப்புதான் அவனை அறிவதற்கு தன்னைவிட இன்னொன்று சிறந்ததல்ல இதை விளங்கி சிந்தித்தாலே பல அறிவுகள் விளக்கங்கள் தன்னிடமே கிடைக்கும்.

இப்படிப்பட்ட ஞானங்களையும் இந்த அமீரகத்தில் என்னால் சம்பாதிக்க முடிந்தது. அதனால் எழுதுவோம் நம்மிடம் வறுமை வராதவாறு.!

Thursday, May 19, 2011

தங்கச் சந்தையை மிஞ்சும் வெள்ளி


சென்ற ஆண்டு அக்டோபரில் தங்கம் விலை இன்னும் ஏறுமா இறங்குமா? என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன் அந்த சமயத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் (31.10 கிராம்) 1380 டாலர் விற்பனையாகிக் கொண்டிருந்தது. ஏழு மாதத்திற்குப் பின் அதிகபட்சம் 1550 டாலரை தொட்டுவிட்டு தற்போது 1496 – 1510 இடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறது.அந்த பதிவில் 1500 டாலர் தொட்டுவிடும் என்ற நிபுணர்களின் கருத்தையும் ஆணித்தரமாய் கூறியிருந்தேன்.

தங்கத்தைப் பற்றிய எனது பதிவுகளை படித்துவிட்டு சிலர் முதலீடு செய்தனர் அவர்களுக்கு 175 லிருந்து 200 சதவீதம் லாபம் கிடைத்திருக்கிறது என்பதை கூறிக்கொள்கிறேன்.

இப்பொழுது தங்கத்தில் முதலீடு செய்யுமளவு என்கையில் பணம் அதிகம் இல்லை என்று சொல்லக்கூயவர்களுக்கு தங்கத்தையும் விட அதிகம் லாபம் தரக்கூடிய தங்கத்தின் தோழர் வெள்ளியைப் பற்றிய விபரத்தை இங்கு காண்போம்.

உலோகத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது மக்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பண முதலைகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும் அதனால் அவர்களின் போக்குக்கு சந்தையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.அதனால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது இதைப் பயன் படுத்தி நாமும் முதலீட்டாளராக மாறிக் கொண்டால் லாபம் பெறலாம்.

வெள்ளிப் பக்கம் யாருமே அதிகம் செல்லாமல் சென்ற ஆண்டுவரையில் இருந்தார்கள் அப்போது அதன் விலை அவுன்ஸ் 18 – 19 டாலர் என்ற ரீதியில் விற்பனையாகிக் கொண்டிருந்தது.

சென்ற ஆண்டின் CHAT

இந்த ஒராண்டுக்குப் பின் 48.48 டாலர் வரை சென்றது கிட்டதட்ட ஒரே ஆண்டிற்குள் 155 சதவீதம் வரை விலை ஏற்றம் நிகழ்ந்திருக்கிறது ஏன் இப்படி என்று கேட்கிறீர்களா? எல்லாம் பணமுதலைகளின் திருவிளையாடல்.அவர்கள் நினைத்தால் மண்ணைக்கூட சாக்குகளில் அள்ளி மூட்டை 100 டாலர் என்று சொல்லி விற்பார்கள் இப்பொழுது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.

அவுன்ஸ் 48.48 டாலர் வெள்ளியின் விலை உயர்ந்ததும் நம்மைப்போன்ற சிறு முதலீட்டாளர்கள் வெள்ளியின் பக்கம் கவனத்தை திருப்ப முதலைகளோ தங்களிடம் உள்ள வெள்ளியை 50 சதவீதம் விற்பனை செய்ய சந்தை சரிந்திருக்கிறது.
இன்னும் வெள்ளியின் விலை உயரும் என்ற எண்ணத்தில் அவுன்ஸ் 48.48 டாலரில் வாங்கியிருந்தவர்கள் தங்களிடம் பணமிருந்தால் தற்சமயம் 34 டாலரில் இருக்கும் வெள்ளியை வாங்கி ஆவ்ரேஜ் செய்துக் கொள்ளலாம்.

மீண்டும் வெள்ளியின் விலை உயர வாய்ப்பிருக்கிறது. பணமுதலைகள் வெள்ளியை அடுத்தக் கட்ட உயரத்திற்கு கொண்டுச் செல்ல ஆயத்தமாகி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 100 டாலரை கடக்கலாம்.

தங்கத்தின் போக்கு அதிவேகமாக இருப்பதால் ஏழைகள் வெள்ளியின் பக்கம் செல்வது இயல்பே.ஆதலால் தங்கத்தை காட்டிலும் வெள்ளி தற்போது அதிகமான லாபத்தை தந்துக் கொண்டிருக்கிறது.

34 டாலருக்கு தற்போது நீங்கள் வெள்ளியில் முதலீடு செய்தால் 3 மாதத்திற்குள் 15 லிருந்து 20 சதவீதம் லாபம் பெற சாத்தியம் இருக்கிறது என்று நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.

வெள்ளிச் சந்தை விரைவில் தங்கச் சந்தையை முதலீட்டில் மிஞ்சும் என்பது நிதர்சனமாகப்போகும் உண்மை.

ஆதலால் உலோகத்தில் முதலீடு செய்யும் அன்பர்கள் தங்களின் முதலீட்டை வெள்ளியின் பக்கம் திருப்பலாம்.

Thursday, May 5, 2011

சக்கரை வியாதிக்கு சகசமான வைத்தியம்இன்று சர்க்கரை வியாதி என்பது சர்வசாதரணமாகி விட்டது யாரைப் பார்த்தாலும் கேட்டாலும் தங்களுக்கு அந்த நோய் இருப்பதாகவே பெரும்பாலோர் கூறுகிறார்கள்.உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது.ஆனால் நம் பாரத நாட்டில் சுமார் இரண்டு கோடி மக்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

பெரும்பாலோருக்கு தங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதே தெரியாமல் உடம்பை பரிசோதனையும் செய்யாமல் அதைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் இந்த வியாதியால் அவதிப்பட்டு வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள்.

முதலில் சர்க்கரை வியாதி என்றால் என்ன? என்பதை சுறுக்கமாக தெரிந்துக்கொள்வோம்.
நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து கிடைக்ககூடிய குளுக்கோஸ் எரிபொருளாக மாறுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது. குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.

இது சர்க்கரை வியாதி இல்லாதவர்களின் உடல் நிலை. ஆனால் அந்த நோய் இருக்கும்போது ஏற்படக்கூடிய மாற்றங்கள்

குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது. வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை
ஏனெனில்
1. இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.
2. இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை
3. எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.
எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.

அதனால் நமது உடம்பில் செயற்கையாக ஆங்கில வைத்திய முறையில் தினம் மாத்திரைகள் அல்லது ஊசிகளின் மூலம் இன்சுலினை செலுத்தி சர்க்கரையை குறைத்துக் கொள்கிறோம்.
இது சர்க்கரை வியாதி உள்ள எல்லோரும் தினம் தினம் செய்துக் கொண்டிருக்ககூடிய நிகழ்வு.

சில தினங்களுக்கு முன் எனது நண்பர் M.E.Sஅபுதாஹிர் பைஜி அவர்கள் சர்க்கரை வியாதியை இயற்கை வைத்தியத்தின் மூலம் ஒருவர் குணப்படுத்துகிறார் என்று ஒரு துண்டு பிரச்சாரத்தை காண்பித்தார்கள்.

படத்தின் மீது கிளிக் செய்தால் பெரிய எழுத்தில் படிக்கலாம்

அதை முழுவதையும் வாசித்துப் பார்த்தேன். “சர்க்கரை நோய்க்கு எளிய இயற்கை மூலிகை மருந்து” - என்று தலைப்பிட்டு விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இந்த விளம்பரம் நோய்க்கு சிகிச்சை பெற்றவர் கொடுத்திருக்கிறார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் துர்க் என்ற ஊரில் பாபா ஷேக் இஸ்மாயில் என்பவர் இந்த வைத்தியம் முறையை செய்துவருகிறார்கள்.பல மாநிலத்திலிருந்து மக்கள் அவரைத்தேடிச் சென்று அவர் தரும் மருந்தை உட்கொள்கிறார்கள்.குணம்பெருவதாக கூறுகிறார்கள்.

அந்த மாநிலத்திற்கு நாம் எப்படி செல்ல வேண்டும் என்ற விபரங்களும் துண்டு பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வைத்தியத்தின் சிறப்பு என்ன வென்றால் பாபா தரக்கூடிய சூரண மருந்தை ஓரிருமுறை மட்டுமே சாப்பிட்டால் போதுமானது சர்க்கரை அளவு குறைந்துவிடும்.என்கிறார்.

வைத்தியர் பாபா ஷேக் இஸ்மாயில்

அவர் கூறும் அறிவுரைகள்

1. மருந்து சாப்பிட்டப் பின் தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு தண்ணீர் உணவு புகைத்தல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

2. நான்கு மணிநேரம் கழித்தப்பின் நீங்கள் ஒதுக்கிவைத்த இனிப்பு சாப்பாடு அனைத்தும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.

3. உணவில் புளி கத்தரிக்காய் மாங்காய் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு சேர்த்துக் கொள்ளக்கூடாது.

4. மருந்துக் குடித்தப்பின் ஏற்படும் உமிழ்நீர் மற்றும் ஒமட்டலுடன் கூடிய உமிழ்நீர் ஆகியவற்றை கண்டிப்பாக துப்பக்கூடாது.

5. இருமல் ஏற்பட்டு அதனால் வரும் சளியினை துப்பலாம்.

6. வீட்டிற்குச் சென்றப்பின் சர்க்கரை அளவு உயர்வு தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் நீங்கள் பயன்படுத்தி வந்த சர்க்கரை மாத்திரைகளை உட்கொண்டு அதன் பின் சுத்தமாக சர்க்கரை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.முப்பது நாட்கள் கழித்து உங்கள் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துக் கொள்ளவும். பரிசோதனையில் சர்க்கரை நார்மல் அளவிற்கு குறைந்திருப்பதை காண்பீர்கள்.

7. இன்சுலின் பயன்படுத்துபவர்கள் சூரண மருந்தை இரண்டு முறை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

8. மாத்திரை மருந்து சாப்பிடக்கூடியவர்கள் ஒருமுறை சூரணமருந்தை எடுத்துக் கொண்டால் போதுமானது.

என்று இப்படி பாபா ஷேக் இஸ்மாயில் அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்கள்.

இவைகள் எல்லாம் உண்மைதானா?அல்லது பணம் பண்ணும் வழியா? என்ற சந்தேகமும் நமக்கு தோன்றவே செய்தன. வரக்கூடியவர்களிடம் டோக்கன் முறையில் பெயர்களை பதிவு செய்வதற்கு முப்பது ரூபாயும் பாபா கொடுக்கக் கூடிய மருந்துக்கு 120 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. என்று பிரசுரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

நண்பர் அபுதாஹிர் அவர்களுக்கு சர்க்கரை இருப்பதினால் அதற்கான மாத்திரைகள் தினம் சாப்பிட்டு வருகிறார்கள் இந்த துண்டுப் பிரச்சாரத்தைப் பார்த்ததும் சட்டீஸ்கர் சென்று வருதற்கு துபாயிலிருந்து ஆயத்தமானார்கள்.
அப்போது நான் கேட்டுக் கொண்டவிசயம்
வைத்தியர் பாபாவை புகைப்படம் எடுத்துவாருங்கள் சென்று வரக்கூடிய விபரங்களையும் சேகரித்து வாருங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கினங்க அதற்கும் மேலாகவே சகோதரர் அபுதாஹிர் அவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி அதற்கான சிலவுகள் என்று பல விபரங்களையும் சேகரித்து வந்துள்ளார்கள்.

இனி நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜி அவர்கள் கூறுவதைக் கேட்போம்.

துபாயிலிருந்து டெல்லி அங்கிருந்து ராய்பூர் விமானம் மூலம் வந்திறங்கினேன்.அங்கிருந்து துர்க் செல்வதற்கு 40 கி.மீ தூரம்.
(தமிழகத்திலிருந்து வரக்கூடியவர்கள் சென்னை சென்ட்ரலிருந்து கோர்பா-6327 எக்ஸ்பிரஸ் இரயிலில் நேரடியாக துர்க் வாரம் இருமுறை செல்கிறது அதில் வரலாம்) புதன்காலையில் துர்க் வந்தடைந்தேன்.

அப்பொழுது என் உடம்பில் சர்க்கரை அளவு 360 இருந்தது.வியாழன்கிழமை அதிகாலை எழுந்து இறைவணக்கத்தை முடித்துக் கொண்டு வெறும் வயிறுடன் தண்ணீர் கூட அருந்தாமல் ஜூம்மா பள்ளிவாசலுக்கு வந்தேன்.பள்ளியில் வைத்துதான் மருந்து தருகிறார்கள்.

பல மாநிலத்திலிருந்து வைத்தியத்திற்காக பலரும் வருகிறார்கள் குறிப்பாக தமிழகத்திலிருந்து இந்த வைத்தியமுறை தெரிந்தவர்கள் வருகிறார்கள். நீண்ட வரிசை நின்றது மற்றவர்களைப் போல நானும் வரிசையில் அமர்ந்து சென்றேன்.

மருந்தை குவளையில் போட்டு கலக்குகிறார் பாபா


பாபா அவர்கள் மூலிகை மருந்தை எடுத்து உள்ளங்கையில் வைத்து குவளையில் பாலுடன் கலந்து கொடுத்தார் அதைக் குடித்தேன் கடுமையான கசப்பும் துவப்பும் இருந்தது.இந்த மருந்தை குடித்த உடன் தண்ணீர் குடிக்கலாம். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்து இனிப்பு மற்றும் உணவு உண்டேன்.
புளி மாங்காய் கத்தரிக்காய் இவைகள் கலக்காத உணவு அங்கு தயாரித்தும் கொடுக்கிறார்கள்.
நம் வசதிகேற்ப அங்கு தங்கிக் கொள்ளலாம் மூன்று தினங்கள் தங்கி இரண்டு தினங்கள் மட்டும் மருந்து சாப்பிட்டேன் மூன்றாவது தினம் துபாய் புறப்பட்டு விட்டேன். பாபா தரக்கூடிய மருந்து அங்கே மட்டுமே சாப்பிடக் கொடுக்கிறார் மற்றபடி அதை பொட்டலம் போட்டு வீட்டுக்கு எடுத்துப்போக கொடுப்பதில்லை அனுமதியுமில்லை.

அங்கு தங்கிருந்த மூன்று தினங்களில் சர்க்கரையை பரிசோதித்து பார்க்கவில்லை. துபாய் வந்ததும் பரிசோதனை செய்து பார்த்ததில் சர்க்கரை எப்பவும் போல 360 அதிகமாகவே இருந்தது.எப்பவும் சாப்பிடக்கூடிய சர்க்கரை மருந்து ஒருதினம் எடுத்துக் கொண்டேன்.

ஆனால் முன் இருந்ததை போல் அல்லாமல் தற்போது உடலில் சோர்வு இருக்கவில்லை சர்க்கரை அதிகமானால் பல்வலி கோபம் ஏற்படும் அந்த வலியும் இல்லை பதட்டம் கோபம் இருக்கவில்லை மாறாக உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

இந்த மருந்து சாப்பிட்டு இன்றுடன் பதினைந்து தினங்களுக்கும் அதிகமாகிவிட்டது. இந்த நாட்களில் தினம் உட்கொள்ளவேண்டிய சர்க்கரை மருந்தை ஒருநாள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளேன்

நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜியுடன் பாபா மற்றும் அவர் நண்பர்கள்

தற்போது பரிசோதித்து பார்த்தவரையில் சர்க்கரை 360 லிருந்து 250க்கு குறைந்திருக்கிறது பலருக்கு நார்மலாக இருப்பதாக கூறுகிறார்கள்; ஆனால் எனது உடல் நிலைக்கு இன்னும் சில தினங்களில் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. என்று புத்துணர்ச்சியுடன் அபுதாஹிர்பைஜி கூறுகிறார்கள்.

சர்க்கரை வியாதிக்கு பலவிதமான வைத்திய முறைகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் இந்த வைத்தியமுறை எளிமையாக இருக்கிறது. பாபா கொடுப்பது மூலிகை மருந்து அதை உட்கொள்வதால் சர்க்கரை வியாதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறுகிறார்கள்.

பாபா வசிக்கும் துர்க்கில் நமது நண்பர் உள்ளுர்வாசிகளிடம் பாபாவைப் பற்றி விசாரித்தும் இருக்கிறார்.அவர் வைத்தியத்தைப் பற்றி சிலர் நம்பிக்கையும் சிலர் அவநம்பிக்கையும் கொண்டுள்ளார்கள்.

இன்றுவரையில் பாபா தனது வைத்தியத்தை எதிலும் விளம்பரங்கள் செய்யவில்லை கேள்விஞானத்தில் சென்று அவரைப்பார்த்து மருந்துண்டு குணம் தெரிந்தவர்கள் மற்றவர்களிடம் கூறுவதை வைத்தே பலரும் அங்கு சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜி அவர்களை ஒரு முன்னோட்டம் பார்த்த வரையில் பாபாவின் வைத்தியத்தில் நம்பிக்கை தெரிகிறது.அதனால்தான் இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு பதிவு செய்கிறேன்.

இன்னுமொரு நண்பர் துர்க் செல்வதற்கு ஆயத்தம் மேற்க்கொண்டுள்ளார்.

வேறு ஏதும் விபரம் வேண்டுபவர்கள் நேரடியாக பாபாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு விவாதிக்கலாம்.

முக்கிய அறிவிப்பு
இங்கு சென்றுவந்த நண்பருக்கு இன்று வரையில் (2013 அக்டோபர்) சர்க்கரை வியாதி குணமாக வில்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.