உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, November 24, 2009

நன்றி உள்ள ஜீவன்


எனது சின்னஞ்சிறு காலம் அது. 1979 க்கு முன்…
நாய்குட்டிகளின் மேல் அளவுகடந்த பாசம்.நாய் குட்டிகளை எங்கும் கண்டு விட்டால் அதை தொட்டுப்பார்த்து தடவிப் பார்க்காமல் வரவே மாட்டேன்.தடவும் போது அதனுடைய உடல் மிக மென்மையாக இருக்கும்.அதை அப்படியே எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இருக்கும்போது தாயின் மடியில் படுத்ததைப் போன்ற உணர்வில் அந்த குட்டி விரல்களை நாவினால் நக்கிவிடும். நம்முடைய உடலின் வெப்பம் அதற்கு குளிர் காய்வது போன்று இதமாக இருக்கும்.

ஒருமுறை எனது மாமாவின் வீட்டுக்கு சென்றிருந்தேன் அங்கே இரு நாய் குட்டிகள் இருப்பதைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.அதை தூக்கி வைத்துக் கொண்டேன். வெளியிலிருந்து வந்த மாமா இந்த நாய்குட்டியின் தாய் இறந்து விட்டது நேற்றுதான் ராமு கொண்டு வந்து கொடுத்தான் என்றார்.

அவர் இரண்டு நாய் குட்டிகளை காண்பித்து உனக்கு எது பிடித்திருக்கிறது என்றார்.செங் கல்லின் நிறத்தில் இருந்த குட்டியை காண்பித்தேன்.இதை நீ வீட்டுக்கு எடுத்துப்போ இது ஜாதி நாய் என்றார்.

எனக் கு வியப்பாக இருந்தது நாய்களுக்கும் ஜாதி இருக்கிறதா என்று .?என் மனசுக்குள் கேட்டுக் கொண்டு… இது என்ன ஜாதி என்று மாமாவிடம் கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டே நீ நினைக்கின்ற ஜாதி இல்ல தெருநாய் மாதிரி இல்லாம இது வளர்ந்ததும் ஆடு மாதிரி பெரிசாக இருக்கும் நல்லா சாப்பாடு கொடு உங்க ஊட்டுக்கு காவலா இருக்கும் என்றார்.

புதிதாக கட்டப்பட்ட எங்கள் வீடு தெருவிலிருந்து தள்ளி வாகனங்கள் செல்லக்கூடிய சாலையோரத்தில் தனியாக இருந்தது. மாலை ஆறு மணிக்கெல்லாம் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு எட்டுமணிக்குள் உறங்கி விடுவோம்.தெருவுடன் இருந்தால் அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருப்பார்கள் உறங்குவதற்கும் நேரம் எடுத்துக் கொள்ளும் .அக்கம் பக்கம் யாருமில்லாத தனியான வீடு என்றால் அந்த தனிமையில் பயமும் சேர்ந்துக் கொள்ளும்.அந்த பயத்தில் வாழ்வதே பெரிய பயம்.

மாமா தந்த நாய்குட்டியை பையில் போட்டு சைக்களின் ஹேண்ட்பாரில் மாட்டிக் கொண்டு சைக்கிளை ஓட்டிக் கொண்டு எங்கே நாய்குட்டிக்கு அடிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மெதுவாக வந்தேன். வரும் வழியெல்லாம் தலையை தூக்கிக் கொண்டு முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு மெல்லிய குரலால் முனங்கிக் கொண்டே வந்தது.அந்த குட்டியின் சகோதரனை பிரித்துவிட்டேன் என்ற ஏக்கத்துடன் முனங்கியது.

வீட்டுக்கு வந்ததும் எனது தாயார் நாய் குட்டியைப் பார்த்துவிட்டு இதை எங்கிருந்து பிடித்துவந்தே பிடித்து வந்த இடத்திலேயே விட்டுட்டுவாடா என்று கத்தினார்.

எனக்குத் தெரியும் என்தாயார் நாய் வளர்பதற்கு சம்மதிக்க மாட்டார்கள் .ஒரு முறை எங்கள் வீட்டில் வளர்ந்த பூனை திருட்டு தனமாக பாலை குடித்து விட்டது என்பதற்காக அதை சாக்கில் காட்டி இரண்டு மைல் தூரத்தில் விட்டுவரச் சொன்னார்கள். அதை விடும் போது அந்த பூனை என் கால்களை சுற்றி சுற்றி வந்தது நான் ஒட்டமாய் பூனையை விட்டு ஓடியதும் அதுவும் என் பின்னாலேயே ஒடி வந்ததும் அதை விரட்ட விரட்ட போகமறுத்ததும் சைக்கிளில் வேகமாக நான் நான் தப்பி வந்ததும் நன்றாக நினைவிருக்கிறது.

என் தாயாரிடம் மாமாதான் தந்தார் நம்ம வீட்டுக்கு காவலாக இருக்கும் இது ஜாதி நாய்குட்டின்னு சொன்னார் என்றேன்.நம்ம வீட்டுக்கு காவல் என்றதும் என் தாய் மனம் இறங்கி சரி சரி கொல்லைப் பக்கத்துல விடு என்றார்.

தினமும் காலையில் பள்ளிக்கு செல்லுமுன் காபி குடிப்போம்.அந்த சமயங்களில் எனது சகோதரர்களிடமும் சகோதரியிடமும் ஒரு டம்ளரில் ஆளுக்கு கொஞ்சம் காப்பி ஊத்துங்க என்று கேட்டு வாங்கிஅம்மாவிற்கு தெரியாமல் நாய்குட்டிக்கு காபி கொடுப்பது வழக்கம்.அதே போல் உணவும். கறி சோறாக இருந்தால் எலும்பைப் போடாமல் என்பங்கு கறியை போடுவேன்.என் தாயாருக்கு தெரிந்ததும் திட்டுவார்கள்.

கொல்லை புறத்தில் ஒரு சின்ன வீடு கட்டி அதில் பழைய துணிகளைப் போட்டு உறங்க வைப்பேன்.அந்த நாய்குட்டிக்கு கழுத்தில் மணிகட்டி அழகு பார்த்தேன்.
அதற்கு பெயர் வைக்க யோசனை செய்த போது மாமா வீட்டில் வேலைப்பார்க்கும் ராமுதானே இந்த குட்டிகளை கொண்டுவந்தார் அதனால் அவர் பெயரையே ராமு என்று வைத்து அழைத்து வந்தோம்.

நாளடைவில் அது எங்கள் குடும்பத்தினருடன் இணைந்துக் கொண்டது எல்லோரிடமும் அன்பாக இருக்கும். வாசலுக்கும் கொல்லைக்குமாக அழைந்துக் கொண்டிருக்கும்.அக்கம் பக்கத்தில் சென்று அதற்கு சில நண்பர்களை தேடிக் கொண்டது.எங்கு சென்றாலும் ராமு என்று அழைத்தால் அது யாருடன் இருந்தாலும் எனது குரலை கேட்டதும் ஒடி வந்துவிடும்.

இரண்டுவருடங்களில் நான் துபாய் பயணம் கிளம்பவேண்டிய சூழ்நிலை உருவானது. எனது உறவுகளை பிரிந்தேன் அந்த உறவில் நான் வளர்த்த நாய்குட்டியும். நான் பிரியும்போது அது குட்டியல்ல வயசுக்கு வந்த இளம் நங்கை ஆம் அது பெண் குட்டி.

வெளிநாடு வந்து ஒரு ஆண்டுக்குள் அது இரண்டு குட்டிகளை ஈன்றது என்று என்தாயார் கடிதத்தில் எழுதி இருந்தார்கள்.எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது.ஆனால் அந்த சந்தோசம் நீடிக்கவில்லை . அடுத்த கடிதத்தில் நான் வளர்த்த நாய் இறந்து விட்டது என்றும் இரவில் வீட்டு வாசலில் காவலுக்கு இருந்த சமயத்தில் ரோட்டில் சென்ற காரில் அடிப்பட்டு காலையில் நாங்கள் பார்க்கும் போது அது இறந்து கிடந்தது என்று வருத்தமாக அம்மா எழுதிஇருந்தார்கள்.அது ஈன்ற குட்டியை பத்திரமாக பார்த்துவருகிறோம் என்றும் எழுதி இருந்தார்கள்.

அந்த செய்திக்கேட்டு பெரிதும் மனம் கஸ்டப்பட்டேன் எனது நண்பர்களிடம் ராமு குட்டியின் வாழ்க்கை வரலாறை கூறி ஆறுதல் அடைந்தேன்.

எனது விடுமுறையில் தாயகம் சென்றேன். அப்போது தொலைபேசி வசதி எங்கள் வீட்டில் இல்லை. தந்தி கொடுத்திருந்தேன்.நான் கொடுத்த தந்தி கிடைக்காததால் என்னை அழைப்பதற்கு யாரும் சென்னை விமான நிலையத்திற்கு வரவில்லை.
நானே தனியாக பஸ்சை பிடித்து மயிலாடுதுறை வந்து இறங்கியபோது அதிகாலை மூன்று மணி.அங்கிருந்து எனது கிராமத்திற்கு வாடகைக்காரில் வந்து இறங்கினேன்.

வீட்டின் காம்பவுண்ட் கேட் சாத்தப்பட்டிருந்தது.வீட்டு வாசலில் விளக்கும் எரியவில்லை.இருளாக இருந்தது கேட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றதும் குபீரென இரண்டு நாய்கள் என்மேல் பாய்ந்தது. கையில் வைத்திருந்த சூட்கேஸ்சை தவறவிட்டேன்.


தாவிய நாய்கள் என்னை முகர ஆரம்பித்து இரண்டு கால்களை என் இடுப்பில் வைத்து நாவினால் நக்க ஆரம்பித்தது . நான் அதன் பிடரியை தடவியபடி ராமுவின் பிள்ளைகளே நலமா என்று குலம் விசாரித்துக் கொண்டு என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன் என் கால்களை சுற்றி சுற்றி முகர்ந்தது. சிறிது நேரத்தில் எனது தாயார் விளக்கைப்போட்டு கதவை திறந்தார்கள். என்னைக் கண்டதும் ஆனந்தமடைந்தார்கள்.

அவர்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி எப்படி கேட்டைத்தாண்டி உள்ளே வந்தாய். நம் வீட்டுப்பக்கம் வெளியாட்கள் யாருமே வரமுடியாது . சாலையில் செல்பவர்கள் கூட நம் வீட்டுப் பக்கம் வந்தால் நாய்க்கு பயந்தே செல்வார்கள் என்றார்கள்.

நான் வளர்த்த நாய் இறந்து விட்டது. அது ஈன்ற குட்டியை நான் பார்த்ததும் இல்லை அதனுடன் பழகியதுமில்லை. ஆனால் என்னை எப்படி நான் வளர்க்காத நாய்கள் அடையாளம் கண்டது.?

நாய் நன்றி உடையது என்போம்.நாம் வளர்க்கக்கூடிய நாய் மட்டும் நன்றி உடையதல்ல அதனுடைய வம்சமே நம்மிடம் நன்றி உடையதாக இருக்கும்.

தாய் நாய் யாருக்கெல்லாம் நன்றி பாராட்டியதோ அதன் குட்டிகளும் அதன் வசம்சங்களும் அவர்களுக்கு நன்றி பாராட்டும். அதனால் தான் நன்றி உள்ள ஜீவன் நாய் என்கிறோம்.
ஆனால் நாயின் குணம் மனிதனிடம் மிகைத்திருக்கிறது குரைப்பதற்கு மட்டும்.!

10 comments:

malar said...

அமீரஹா நேரப்படி மணி 3 :13

உங்கள் பதிவும் நல்ல இருந்தது .
''''தனிமையில் பயமும் சேர்ந்துக் கொள்ளும்.அந்த பயத்தில் வாழ்வதே பெரிய பயம்'''

உண்மைதான்

malar said...

உங்கள் பதிவில் மணி தவறான நேரத்தை காட்டுகிறது

அது ஒரு கனாக் காலம் said...

அருமையான / நெகிழ்வான பதிவு , டைரெக்டர் பாலாவும் இது போல் தான் நினைவுகளில் சொல்லீஇருப்பார். ( வளர்ப்பு பிராணிகளை பற்றி ) .

ஜீவன்பென்னி said...

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு படிக்கும் போது. எங்கள் வீட்டிலும் நாய்,பூனை,கிளி எல்லாமே வளர்த்தோம். ஒவ்வோன்றும் இறந்துபோகும் போது நான் அழுதுவிடுவேன். இவங்களோட சிறப்பே நம்ம வீட்ல ஒரு ஆளா மாறிடிவாங்க. அதனால அவங்களோட பிரிவையும் தாங்கமுடிவதில்லை.

கோபிநாத் said...

நெகிழ்சியான பகிர்வு..

கீழை ராஸா said...

அருமையான பதிவு...மனதை மிகவும் கவர்ந்த பதிவுகளில் இதுவும் ஒன்று...கலக்குங்க
இதுக்காக என்னிடம் நீண்ட நாள் இருப்பில் இருந்து வந்த "INTRESTING BLOG " விருதை தங்களுக்கு தருவதில் பெருமை கொள்கிறேன்...தொடர்ந்து கலக்குங்க...

கீழை ராஸா said...

அருமையான பதிவு...மனதை மிகவும் கவர்ந்த பதிவுகளில் இதுவும் ஒன்று...கலக்குங்க
இதுக்காக என்னிடம் நீண்ட நாள் இருப்பில் இருந்து வந்த "INTRESTING BLOG " விருதை தங்களுக்கு தருவதில் பெருமை கொள்கிறேன்...தொடர்ந்து கலக்குங்க...

கிளியனூர் இஸ்மத் said...

பின்னூட்டமிட்ட
மலர்,
அது ஒரு கனாக் காலம்,
ஜீவன் பென்னி,
கோபிநாத் மற்றும்
ஆஸ்கார் விருதை அள்ளித்தந்த
தளபதி கீழை ராஸாவுக்கும் மிக்க நன்றி.!

ஹுஸைனம்மா said...

நெகிழ்வாய் இருந்துது வாசிக்க. இப்பவும் அவை தங்கள் வீட்டில் இருக்கின்றனவா?

கிளியனூர் இஸ்மத் said...

உங்க வருகைக்கு நன்றி ஹ+ஸைனம்மா.....இப்போது இல்லை....

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....