உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, October 7, 2012

நான் என்னை அறிந்தால்...

மீள் பதிவு
அமீரக வாழ்க்கை எனக்கு படிப்பியலில் ஆர்வத்தைக் கொடுத்தது. சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ஜெயகாந்தன், சிவசங்கரி, பாலகுமாரன், அப்துற்றஹீம், எம்.எஸ்.உதயமூர்த்தி, கவிகோ, கவியரசு, மு.மேத்தா இன்னும் பலரின் எழுத்து என்னை எழுத தூண்டுவதற்கு காரணமாகியது.

தத்துவங்களை படிக்கும்போது மனதில் ஒருவித ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும்.சிறுவயதில் திருக்குர்ஆனின் தமிழாக்கம் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. என் செயல்களில் திருப்பத்தைக் கொடுத்தது. பைபிளிலும் பகவத்கீதையும் ஆழமாக சிந்திக்க வைத்தது. அதன் தாக்கங்களே எனக்கு ஆன்மீகத்தை அறிமுகம் செய்தது.

ஆன்மீகம் என்றால் அதில் ஈடுபடுபவர்கள் தாடிவைத்து, காவி உடுத்தி, வணக்கத்திலேயே சதாக் காலமும் வாழவேண்டும் என்றும், குடும்பப்பற்று இன்றி எந்நேரமும் இறைசிந்தனையோடு இருக்கவேண்டும் என்றும், பலர் எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஆன்மீகத்திற்கு உடைமாற்றம் தேவை இல்லை மன மாற்றம் தான் தேவை.
ஆன்மீகம் என்றால் பலருக்கு பயம். பயத்தைக் கொடுப்பது ஆன்மீகமல்ல அதை தெளிவுபடுத்துவதே ஆன்மீகம். அது அறிவுக் களஞ்சியம் அது அன்பை ஊற்றெடுக்க வைக்கும் அமுதசுரபி. மனிதனை மனிதனாக வாழவைக்கும் வழிகாட்டி.

வாழ்க்கையே வணக்கம் என்கிறான் இறைவன்.அந்த வணக்கமான வாழ்க்கையை புரிந்துக் கொள்வதற்கு ஆன்மீகத்தின் ஞானம் உதவி புரிகிறது.

ஆன்மீகத்தின் நுழைவாயிலில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. எத்தனையோ நூல்களை படித்தும் என்னிடம் பதில் இல்லாமல் போனது எப்படி? ஏட்டு கல்வியில் கிடைக்காத பதில்கள் ஞானக்கல்வியில் கிடைக்கிறது.

ஞானிகள் அதிகம் யோசிக்கக் கூடியவர்கள். ஒரு கருத்தை கூறினால் அதில் பலவிதமான பொருள்கள் இருக்கும். பல ஞானக்கதைகளை வாசிக்கும் போது அது நமக்கு வெளிச்சப் படுத்துகிறது.

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப்பற்றிய விளக்கம் அந்த விளக்கம் தான் ஞானம்.
விஞ்ஞானிகள் எதையும் ஆராய்ந்து கூறும் போது உலகம் உடனே ஏற்றுக் கொள்ளும். ஆனால் மெய்ஞ்ஞானி ஒன்றை கூறினால் இந்த உலகம் யோசிக்கும். காரணம் அறியாமை ,விளங்காமை.

ஞானம் வெளியிலிருந்து தொடங்கப்படுவதல்ல.தன்னிடமிருந்து ஆரம்பிக்கப் படுவது. சுய சிந்தனையை தன்னில் ஏற்படுத்தக் கூடியது. ஞானம் கற்பதில் என்ன பயன் இருக்கிறது? என்ற சிந்தனை அதனுள் நுழையுமுன் என்னிடம் எழுந்தது.

ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவரானதால் உங்களுக்கு என்ன பயன்? என்று கேட்பதைபோல் தான் ஞானமும் என்று விளங்கப்படும் போது உணரப்பட்டேன்.

இந்த உலகில் எத்தனையோ விதமான அறிவுகள் படித்துக் கொடுக்கப்படுகின்றன அவைகளெல்லாம் பொருளீட்டலை மையமாக வைத்தே போதிக்கப்படுகிறது. ஆனால் மனிதனைப் பற்றி படித்துக் கொடுக்கப்படுவது தான் ஆன்மீகஞானம்.

ஒருமுறை குருநாதரிடம் ஓரு கேள்வி கேட்கப்பட்டது. பாவம் என்பது என்ன?

மனிதன் தன்னை தான் அறியாமல் இருப்பது தான் பாவம் என்று பதிலுரைத்தார்கள். ஒரு வரி பதிலாக இருந்தாலும் இதில் ஓராயிரம் விளக்கம் இருக்கிறது.

ஒரு மனிதன் இறைவனைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து களைத்து போய் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறான். அருகிலிருந்த மனிதர் அவருக்கு களைப்பு நீங்க உணவு கொடுத்திருக்கிறார். உணவை உண்டதும் மீண்டும் இறைவனைத்தேட புறப்பட்டார். புறப்பட்டவரிடம் எங்கே செல்கிறீர்? என்று உணவு தந்தவர் வினவ நான் இறைவனைத் தேடி போய் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.

இறைவனின் முகவரி என்னிடம் இருக்கிறது நீங்கள் அலையவேண்டாம் என்றார். உண்டவனுக்கோ ஆச்சரியம்…எங்கு இருக்கிறான் சொல்லுங்கள்?, என்று ஆர்வத்துடன் கேட்க அவரை அமைதிப்படுத்தி அமரவைத்தார்.

ஐயா! ஒன்றை அறியவேண்டுமானால் அதைப்பற்றி தெரிய வேண்டும். தெரிவது எப்படி? தெரிந்தவரிடம் கேட்க வேண்டும். இறைவனை அறியவேண்டுமானால் இறைவனின் படைப்பை அறியவேண்டும். நீயே இறைவனின் படைப்புதானே உன்னை நீ அறிய முற்படு நீ தேடும் இறைவனை நீ காணலாம் என்றார். இந்த அறிவுதான் குருவாக நிற்கிறது.
கையிலே வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகின்ற கதைதான்.
பொறியியல் கல்லூரியில் மருத்துவம் படிப்பது எப்படி.? எதையும் சரியானவர்களிடம் சார்ந்தால்தான் நம்மை சரிசெய்துக் கொள்ள முடியும்.

ஞானத்தேடல் உள்ள மனிதனிடம் குருத்தேடல் இருக்கும். அறிந்தவரிடமிருந்து தான் அறிவைப் பெறமுடியும். குரு என்பது அறிவு . இந்த உலகமே குருத்துவமாக தான் இருக்கிறது.

ஒன்றிலிருந்து புறப்பட்டதுதான் இந்த உலகம் இரண்டு என்பது பேதம். இரண்டு ஒன்றாகும் போது அங்கு ஏற்படுவது ஏகத்துவம் . ஆதமும் ஏவாளும் (ஹவ்வா)ஒன்றிணைந்தபோது மனிதம் உற்பத்தியானது. அந்த வழிமுறைதான் நேற்றும், இன்றும், நாளையும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம். குழந்தையிடம் எந்த பாரபட்சமுமில்லை. நாமும் குழந்தையாக இருந்துதானே வளர்ந்திருக்கிறோம் நம்மிடமும் தெய்வத்தன்மை இருக்கவேண்டுமே இருக்கிறதா? இருக்கிறது அது மறைந்திருக்கிறது. இருந்தது எப்படி மறைந்தது?

நாம் படித்த நூல்களை அடிக்கி வைத்து வருகிறோம் நிறைய புத்தகங்கள் நம்மிடம் சேர்ந்துவிட்டன என்னென்ன நூல்கள் இருக்கிறது என்பதே சில நாட்களில் மறந்தும் போய்விடுகிறது. ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடுவதற்கு அடுக்கிவைத்த நூலை ஒவ்வொன்றாக எடுத்து இடமாற்றுவோம். நாம் தேடும் நூல் அடியில் இருக்கிறது இதை கண்டுபிடித்து எடுப்பதற்கு அடுக்கப்பட்டிருந்த அத்தனை நூட்களையும் எடுக்கவேண்டி இருந்தது அல்லவா? அதுபோல்தான் நாம் குழந்தையாக இருந்தபோது தெய்வத் தன்மையில் இருந்தோம் நாம் வளரவளர புத்தகங்களை அடிக்கியது போல நம் மனதில் அடிக்கி வைக்கப்பட்ட அத்தனையும் கிளறவேண்டும், தேடவேண்டும் தேவையானதை வைத்துக் கொண்டு தேவையற்ற எண்ணங்களை சிந்தனைகளை களையவேண்டும் அப்படி களையப்படும்போது தேடப்படுவது கிடைக்கும்.

எப்படி தேடுவது என்பதை சொல்லிக் கொடுப்பவர்தான் குரு. நம் முகத்தை நமக்கு காட்டும் கண்ணாடி போல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்தான் முதல் குருவாக இருக்கிறாள். தாய்க் கல்விக்கு பின்தான் கல்விக்கூடங்கள் மற்ற அனைத்தும்.

எதையும் கற்றுக் கொடுக்கப்படாமல் ஒரு குழந்தை வளர்ந்தால் அது மிருகமாகிவிடும். மிருகத்திற்கு ஒன்றை கற்றுக் கொடுத்தால் அது மனிதனாக முடியாது. படைப்புகளில் மிக சிறந்த படைப்பு மனிதன் என்கிறான் இறைவன்.

மனிதனிடம் எல்லா குண அதிசியங்களும் இருக்கின்றன. அதனால்தான் அவனுக்கு அதிகமாக போதனை தேவைப்படுகிறது.

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு ஞானஅறிவுத் தேவை…அந்த அறிவு மனிதனிடம் இருக்கிறது அதை அடையாளப்படுத்தவே குருத்துவம் தேவைப்படுகிறது.

பொருள் வாங்கச் சென்றவர்கள் கடையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடாது வாங்கப்போகும் பொருளில் குறியாக இருப்பது போல் குருவிடம் சென்றவர்கள் ஞானத்தை பெறுவதில் குறியாக இருக்கவேண்டும் குருவிடம் குறையை தேடிக் கொண்டிருந்தால் நிறைவு பெற முடியாது.

31 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

இந்த இடுக்கைக்கு பின்னூட்டம் இடுவதை ஆனந்தமாக கருதுகிறேன்.

அக்பர் said...

தெளிவான மற்றும் தெளிவு கொடுக்க கூடிய கட்டுரை.

இது முழுக்க முழுக்க உங்க சொந்த எழுத்தாக(பிரதி எடுத்ததாக இல்லாமல்)) இருப்பின் உங்களைப்போன்ற பதிவர்கள் பதிவுலகளில் இருப்பதை மகிழ்ச்சியாக உணர்வேன்.

Anonymous said...

really it is fantastic article - rajakamal

கபீஷ் said...

மிகவும் நல்ல பதிவு. உங்களது பெரும்பாலான பதிவுகளைப் போல :-)

ஷங்கி said...

நல்லாருக்கு! வாழ்த்துகள்.

கிளியனூர் இஸ்மத் said...

ஸ்வாமி ஓம்கார் அவர்களே உங்களின் வருகையினால் நானும் ஆனந்தமடைகிறேன் நன்றி.

அக்பர் அவர்களே இந்த கட்டுரை எனது அனுபவத்தின் பிரதிபலிப்பு நகல் அல்ல. உங்களின் வருகைக்கும் ஆழமான சிந்தனைக்கும் மிக்க நன்றி.

ராஜாகமால் உங்களிடமிருந்தும் இதுபோன்றதொரு கட்டுரையை எதிர்பார்க்கிறேன் வருகைக்கு நன்றி.

கபீஷ் தொடர்ந்து எனது பதிவுகளை படித்துவருவதில் மிக்க மகிழ்ச்சி....உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ஷங்கி உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Barari said...

neengal advaitham patri solvathaal omkaarukku nitchayam pidikkum.advaitham pondra soofiyisam nichchayamaana vazi kedu.

கிளியனூர் இஸ்மத் said...

பராரி அவர்களே அத்வைதம் வழிக்கேடல்ல அதைப் புரியாதவர்களுக்கு அது வழிக்கேடு....திருக்குர்ஆனே அத்வைதத்தை தானே போதிக்கிறது.

cheena (சீனா) said...

அன்பின் இஸ்மத்

இடுகை படித்தவுடன் ஒரு மன நிறைவு ஏற்படுகிறது - ஆன்மீகம் என்பது என்ன என்று நன்கு விளக்கப் பட்டிருக்கிறது. உன்னை அறிந்தால் .... அதுதான் ஆரம்ப நிலை - எப்படி அரிவது - குருவிடம் செல்ல வேண்டுமா - ஆம் செல்லலாம் - இல்லையேல் நல்ல நூலகளைப் படிக்க வேண்டும்.

இடுகை அருமை - அழகாகச் செல்கிறது. ஞான நூல்களைப் படிக்கப் படிக்க அறிவும் ஞானமும் வளரும்

நல்வாழ்த்துகள் இஸ்மத்

அது ஒரு கனாக் காலம் said...

very well written, nice article... thank you so much.

Barari said...

NANBAR ISMATH MANITHANUM THEIVAMAKALAM ITHU ADVAITHAM.THEIVATHTHIRKKU NIKAR ETHUVUMILLAI ITHU QURAN.

கிளியனூர் இஸ்மத் said...

பராரி அவர்களே...!
ஆதியும் நானே, அந்தமும் நானே, உள்ளே இருப்பதும் நானே,வெளியே இருப்பதும் நானே, என்றும் காலமாக நான் இருக்கிறேன், என்றும் நீங்கள் எங்கு திரும்பினாலும் என்னையே பார்க்கின்றீர் என்று குர்ஆன் கூறுகிறது.

Barari said...

IRAIVAN ENGUM IRUPPATHILLAI ENGUM AVAN PARVAI THAN IRUKKIRATHU AVAN KANKAANIPPU IRUKKIRATHU.ENGUM IRUKKIRAAN ENDRU KALLAIYUM MANNAIYUM IRAIVAN PADAIPPUKALAIYUM VANANGUM SEYAL THAAN ADVAITHAM.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல ஆழமான சிந்தனைகள்

மணிமகுடத்தில் உள்ள மனிதனுக்கு மாறாது உள்ளம்

ஷாகுல் said...

நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!!

கிளியனூர் இஸ்மத் said...

பராரி, சீனா, அதுஒரு கனாக் காலம், ஸ்டார்ஜன், ஷாகுல்... உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

மிக அருமையான கட்டுரை.

அதிலும் தலைப்பு மிக மிக பிடித்தது

பொதுவாகவே நிறைய இடங்களில் பார்த்து/கேட்டதுண்டு எதை சொல்வதாயிருந்தாலும் அடுத்தவரை நோக்கியே விரலும் வார்த்தைகளும் நீளும் - நீங்கள் சொல்லியிருப்பது மிக அழகு.

--------------------------------

உங்கள் கட்டுரையை உங்கள் பெயருடன் எனது வலைப்பூவில் வெளியிடுகிறேன், அனுமதி இருக்கும் என்ற நம்பிக்கையில் ...

சந்தனமுல்லை said...

ஜமாலின் இடுகை வழியாக வந்தேன். நல்லாருக்கு உங்க அனுபவ பகிர்வு!

எம்.எம்.அப்துல்லா said...

//பராரி அவர்களே அத்வைதம் வழிக்கேடல்ல அதைப் புரியாதவர்களுக்கு அது வழிக்கேடு....திருக்குர்ஆனே அத்வைதத்தை தானே போதிக்கிறது //

உண்மை!உண்மை!உண்மை!

என்னை உங்களில் தேடுங்கள் என்ற அல்லாவின் இறைமறை வார்த்தையின் மற்றொரு வடிவம், அர்த்தம் அத்வைதம்.

SUFFIX said...

சிந்திக்க வேண்டிய பதிவு இஸ்மத், மனிதன் தன்னை உணர்ந்தாலே போதும் மற்றவ்ர்களின் மேல் ஏற்படும் வெறுப்பு உணர்வுகள் குறையும். பெரும்பாலான நல்ல சிந்தனைகள் நமது பகுத்தறிவினை சரியான முறையில் ஒருமுகப்படுத்தும்ப்போது தேவையான விடை கிடைத்தே விடுகிறது. நல்ல பகிர்வு. இறைவனின் அருள் என்றென்றும் தங்கள் மீது நிழவுட்டுமாக. தங்களை அறிமுகப் படுத்திய நண்பர் ஜமாலுக்கும் நன்றி.

பேனாமுனை said...

இந்த கட்டுரை முழுக்க முழுக்க இஸ்லாத்திற்கு எதிரானது,சகோதரர்களே,சைத்தான்களின் வலையில் விழுந்துவிடாதீர்கள்.

குடுகுடுப்பை said...

ஆபிரகாமிய மதங்களுக்கிடையேயான ஆதிக்கப்போரில்தான் உலகம் அழியும் என உறுதியாக நம்புபவனாகிய எனக்கு உங்களின் இந்தப்பதிவு மதங்கள் அனைத்தும் ஆன்மீகப்பாதையை தேர்ந்தெடுத்தால் மக்கள் நல்ல நிலையை அடைவார்கள் என்று உணர்த்துகிறது.

வாழ்க பல்லாண்டு..

அபுஅஃப்ஸர் said...

நல்ல பதிவு.. நிறைய விளக்கம்

S.A. நவாஸுதீன் said...

மிக அருமையான இடுகை. தெளிவான விளக்கம், தேவையற்ற வர்ணமில்லாமல் இயல்பாக கூறி இருப்பது மேலும் சிறப்பு.

கிளியனூர் இஸ்மத் said...

ஜமால் அண்ணே உங்கள் வலைப்பூவில் போட்டதற்கு மிக்கநன்றி.

சந்தன முல்லை உங்கள் வருகைக்கு நன்றி.

எம்.எம்.அப்துல்லா உங்கள் கருத்துக்கு நன்றி.

ஷபி உங்கள் கருத்துக்கு நன்றி.

பேனா முனை உங்கள் புரிதல் தவறானது.

குடுகுடுப்பை உங்கள் கருத்துக்கு நன்றி.

அபுஅப்ஸர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எஸ்.எ.நவாஸ+தீன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவி.கண்ணன் said...

// கிளியனூர் இஸ்மத் said...
பராரி அவர்களே அத்வைதம் வழிக்கேடல்ல அதைப் புரியாதவர்களுக்கு அது வழிக்கேடு....திருக்குர்ஆனே அத்வைதத்தை தானே போதிக்கிறது.
//

இஸ்மத்,

நீங்கள் தெரிந்து எழுதியது போல் தெரியவில்லை, அத்வைததிற்கு இறைவன் என்று தனித்து எதுவும் கிடையாது, ஒள்ளொளி உணர்ந்தவர் அனைவரும் இறைவன் அல்லது பிரம்மம் என்பது அத்வைதம். இஸ்லாம் விஷிட்டாத்வைதம் அதாவது இறைவனும் இறைவனின் படைப்புகளும் ஒன்று அல்ல என்னும் சித்தாந்தம், அத்வைதம் இணை வைக்கும், விசிட்டாத்வைதம் இணைவைக்காது, இஸ்லாத்தில் இணை வைக்க அனுமதி இல்லை. உங்கள் கருத்தை மறுபரிசீலனை பண்ணுங்கள். மற்றபடி உங்கள் கட்டுரை மற்ற பகுதிகள் நன்றாக வந்திருக்கு.

கோவி.கண்ணன் said...

ஏகத்துவமும் அத்வைதமும் ஒன்று அல்ல

கிளியனூர் இஸ்மத் said...

கோவிக்கண்ணன் அவர்களே வருக.
அத்வைதத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர் என்றே எண்ணுகின்றேன்.இஸ்லாத்தைப் பொருத்தவரையில் மூன்றுவித கருத்துக்கள் இருக்கிறது.
1.துவைதம்
2.விசிஷ்டாத்வைதம்
3.அத்வைதம்
சூபிக்களின் வாழ்க்கைமுறை அத்வைதம்.அதற்கு திருகுர்ஆனில் சில வசனங்களை ஆதாரமாக கூறுகிறார்கள்.
இதைப்பற்றி விரிவாகதிக்க இமெயில் தொடரலாம் என்று கருதுகிறேன்.
எனது முகவரி எனது வலைப்பூவில் உள்ளது. தொடர்புக் கொள்ளவும்.
நன்றி

Mrs.Menagasathia said...

மிக நல்ல பதிவு!!

ஒ.நூருல் அமீன் said...

நல்ல கட்டுரை. இன்னும் அதிகம் நீங்கள் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி சகோதரர் ஒ.நூருல் அமீன்
//இன்னும் அதிகம் நீங்கள் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள். //

இன்ஷாஅல்லாஹ் உங்கள் வேண்டுகோலை அல்லாஹ் கபூல் செய்வானாக...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....