உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, December 14, 2009

உதவி செய்வோம் உதவி செய்த எண்ணத்தை உதவி செய்திடுவோம்


மனிதனுக்கு பிரதானமாக இயங்குவது மூளை. அதன் உதவியால் உடலின் செயல்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உதவி என்பது இல்லாமல் போனால் இந்த உலகமே ஸ்தம்பித்து விடும். இயக்கமே இல்லாமல் போய்விடும்.அதனால் உதவி என்பது வாழ்க்கையின் அச்சாணியாக இருக்கிறது.

மனிதர்களுக்குள் உதவி செய்துக் கொள்வது மனிதநேயத்தையும் பரஸ்பர அன்பையும் வளர்க்கும். ஆனால் அந்த உதவியே ஒரு மனிதனுக்கு உபத்திரமாக மாறும் போது அவனின் மனோநிலை எப்படி எல்லாம் பாதிக்கப்படும் என்பதை அனைவருமே உணர்ந்திருப்போம்.

ஒருவருக்கொருவர் உதவிகள் இல்லாத வாழ்க்கை ஒருவருக்கும் இல்லை .

நாம் நம் உடன் பிறந்தவர்களுக்கு,நண்பனுக்கு,உறவுகளுக்கு,ஊரார்களுக்கு, தெரிந்தவர்களுக்கு, தெரியாதவர்களுக்கு என்று உதவிகள் பல செய்துக் கொண்டிருப்போம்.

சிலர் எதிர்ப்பார்ப்புகளை மனம் நிறைய சுமந்துக் கொண்டு பெயருக்காகவும், புகழுக்காகவும், மரியாதையை எதிர்நோக்கியும் உதவிகள் செய்வார்கள். அந்த உதவிகள் அனைத்தும் ஏமாற்றத்தை தரும்போது அளப்பெரிய வேதனையை சுமந்துக் கொண்டிருப்பார்கள்..

ஒருவருக்கு கடன் கொடுத்தால் அந்தக் கடனை நாம் எழுதி வைத்திருப்பது வழக்கம். கடன் பெற்றவர் திரும்ப அதை செலுத்தி இருப்பார் அதை வரவும் வைத்திருப்போம்; ஆனால் அவருக்கு செய்த அந்த உதவியை நாம் என்றும் மறப்பதில்லை.செய்யப்படும் உதவிகள் செய்தவரிடம் எதிர்பார்ப்பின் மனோநிலையை உருவாக்குகிறது.

உதவி பெற்றவரிடமிருந்து ஏதோ ஒரு வகையில் ஒரு பிரதிபலனை மனம் எதிர்நோக்குகிறது. முகம்தெரியா ஒருவருக்கு செய்த உதவியை நம் எண்ணத்தில் 'செய்தோம்' என்ற செயலை பதிவாக்கி வைத்திருப்போமே தவிர, அந்த முகந்தெரியா நபரிடமிருந்து பிரதிபலனை நம் மனம் எதிர்பார்ப்பதில்லை.
இப்படி பலருக்கு செய்யப்பட்ட உதவிகளை காலங்கள் பல கடந்தாலும் நம் எண்ணத்திலிருந்து கடக்காமல் வரிசைப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

இன்று உதவிப் பெற்ற நண்பன் நாளை அவன் பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டால் அவன் என்னை மதிக்கவில்லை திமிர் பிடித்துவிட்டது என்னால் தான் இந்தளவு வளர்ந்தான் என்று இன்னொரு நண்பரிடம் நாம் புலம்பி மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருப்போம்.

ஏதோ ஒன்றை நண்பனுக்கு உதவியாக கொடுத்துவிட்டு, அதை மீண்டும் பெற்றும் விட்டு நம் மனம் சஞ்சலப்படுவதின் காரணமென்ன?

நாம் கொடுத்தது பொருளை அல்லது பணத்தை மட்டுமல்ல, அதன் கூடவே எதிர்ப்பார்ப்பையும் கொடுத்திருக்கிறோம். அவரிடமிருந்து நாம் கொடுத்த பொருள் அல்லது பணம் திரும்ப வந்து விட்டது. ஆனால் நம் எதிர்பார்ப்பு மட்டும் அவரிடம் பாக்கியாக தொக்கிக் கொண்டு நிற்கிறது. அந்த பாக்கி நாம் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் நன்றி உள்ள நாயாக வாலை ஆட்டிக் கொண்டே நிற்கவேண்டும் என்று நம்மனம் எதிர்ப்பார்க்கிறது. அவர் நம்மைக்கண்டு வாலை ஆட்டாத போது
மன உலச்சலைச்சலும் வலியும் நம் மனம் ஏற்படுத்துகிறது.

எண்ணத்தில் எதையெல்லாம் எழுதிவைக்கின்றோமோ அவைகளை நாம் டெலிட் செய்யவேண்டும். இல்லையெனில் அது மனதில் வைரஸாக மாறி வலியை உண்டுப்பண்ணிக் கொண்டே இருக்கும் இந்த வலிக்கு யாரும் காரண கர்தாவாக முடியாது. அவரால் இவரால் தான் எனக்கு இந்த நிலமை ஏற்பட்டது என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வேதனையை அனுபவித்துக்கொண்டிருப்பது அவரல்ல நாம் தான்.

எண்ணம்போல் வாழ்வு என்று சொல்வதும் இதற்குத்தான். நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம் .

ஒருவருக்கு உதவி செய்வது நல்ல எண்ணம்தான் செய்த அந்த உதவியை எண்ணத்தில் வைத்துக் கொள்ளாமல் அதையும் உதவி செய்துவிட்டால் எந்த மனக்கஸ்டமும் நம்மை வந்தடையாது.

எண்ணம் என்பது ஒரு சதுரப்பரப்பான நிலம்; அதில் நாம் எதை விதக்கின்றோம் என்பது முக்கியம். மலர்களை விதைத்தால் நறுமணத்தை சுமப்போம். முட்களை வளர்த்தால் அதன் குத்தலின் வலியை சுமப்போம்.

நம்மிடம் உதவிப் பெற்றவர்கள் செய்தவர்களை மறந்துவிட்டார்கள் என்பதற்காக செய்தவர் எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாதுதானே?.அந்த பாதிப்பை ஏற்படுத்துவது அவரவரின் எண்ணங்கள் தானே?

சிலர் பலருக்கு செய்த உதவிகளை அப்படியே மறந்திருப்பார்கள். உதவிப் பெற்றவர் அவரிடமே செய்த உதவியை நன்றி மறவாமல் நினைவுப் படுத்தும்போது அப்படி நான் செய்தேனா என்று மறந்த நிலையிலே வினவுவார்கள்.அப்படியானவர்கள் எந்த சஞ்சலத்திற்கும் ஆளாகுவதில்லை.

எதிர்ப்பார்புகள் எந்தநேரத்திலும் ஏமாற்றத்தை தரலாம் அப்படி தரப்படும் ஏமாற்றங்களை ஏற்றும் கொள்ளும் மனபக்குவம் நம்மில் எத்தனைபேரிடம் இருக்கிறது.?

6 comments:

Anonymous said...

அன்பு நண்பர் இஸ்மத்,

1. எளிமையான அதே நேரம் வலுவான பதிவு

2. என்னவோ தெரியவில்லை. பின்னூட்டம் இட முடியவில்லை. அந்த comment window என்னுடைய ஏதோ ஒரு security setting ஆல் வேலை செய்ய மறுக்கிறது.

3. alignment - both sides justified செய்திருக்கிறீர்கள், அதனால் சில வாக்கியங்களுக்கிடையே பாய் போட்டு படுக்கலாம் போன்ற gap. left justified செய்து விடுங்களேன்.

நன்றி

லாரன்ஸ்

malar said...

'எண்ணம் என்பது ஒரு சதுரப்பரப்பான நிலம்; அதில் நாம் எதை விதக்கின்றோம் என்பது முக்கியம். மலர்களை விதைத்தால் நறுமணத்தை சுமப்போம். முட்களை வளர்த்தால் அதன் குத்தலின் வலியை சுமப்போம்.''''

நீங்கள் கூறுவது முரிலும் உண்மை

ஆனால் நம்மிடம் உதவி பெற்று நம் பின்னால் நம்மை பற்றி பேசுபவர்களை நினைத்தால் தாங்கி கொள்ள முடியவில்லை

கிளியனூர் இஸ்மத் said...

லாரன்ஸ்....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மலர்.!..நம்மிடம் உதவி பெற்றவர்கள் நம்மைப்பற்றி அவதூறு பேசினாலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தததை நம் எண்ணத்திலிருந்து எடுத்துவிட்டால் நம்மை பாதிக்காது....உங்கள் வருகைக்கு நன்றி.

ஸாதிகா said...

//எண்ணம் என்பது ஒரு சதுரப்பரப்பான நிலம்; அதில் நாம் எதை விதக்கின்றோம் என்பது முக்கியம். மலர்களை விதைத்தால் நறுமணத்தை சுமப்போம். முட்களை வளர்த்தால் அதன் குத்தலின் வலியை சுமப்போம்.//அருமையான
வரிகள்,அற்புதமான அலசல்.

cheena (சீனா) said...

நல்ல சிந்தனை அன்பின் இஸ்மத்

உதவி செய்து விட்டு அதனைப் பற்றிய சிந்தனையை விட்டுவிடவேண்டும். ஆம் விட முயலுவோம்.

நல்வாழ்த்துகள்

கிளியனூர் இஸ்மத் said...

ஸாதிகா,
சீனா
எனது எல்லா இடுக்கைகளையும் படித்து உற்சாகமூட்டும் உங்களுக்கு மிக்க நன்றி.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....