உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, December 21, 2009

மகான்கள்...நவீன மகான்கள்.!


பிறந்ததிலிருந்து எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தைச் சார்ந்தோ அல்லது ஒரு கொள்கையை பின்பற்றியோ வளர்க்கப்பட்டிருக்கின்றோம்.வெகு சிலர்தான் தாங்கள் ஏற்ற சமயத்தை, கொள்கையை தங்களின் சுயசிந்தனைக்கு பரிசீலனைச் செய்து அதன் அகம், புறங்களை ஆழமாக ஆய்ந்து, அதன் மெய்களை உணர்ந்து சமயங்களை அல்லது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அல்லது மாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள்.

தேடல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத உள்ளுணர்வு. தேடப்படுவதில் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறோம். பலருக்கு பொருளாக இருக்கும், சிலருக்கு அருளாக இருக்கலாம் இன்னும் சிலருக்கு காதல் இப்படி நிறைய இருக்கும். யாருக்கு எது தேவையோ அதைத் தேடிக் கொள்கிறோம்.

ஆன்மீகத்தேடல் என்பது எல்லோருக்கும் ஏற்படுவதல்ல. ஏற்படாததற்கு காரணமும் இருக்கிறது தங்களுடைய அன்றாட நடைமுறை வாழ்க்கையில் சில செயல்பாடுகளை கைவிடப்பட வேண்டி இருக்கலாம் என்ற பயத்திலேயே பலர் ஆன்மீக சிந்தனையின் பக்கம் நெருங்குவதில்லை.

ஆனால் ஆன்மீக குருமார்களின் உரையாடல்கள், கட்டுரைகள், நூல்கள் இன்று பலரால் வாசிக்கப்படுகிறது, நேசிக்கப்படுகிறது. விலகிச் சென்றவர்கள் இப்பொழுது திரும்பிப் பார்க்கிறார்கள் விரும்பி ஏற்கிறார்கள் அதற்கு உறுதுணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஊடகங்கள்.போதிக்கக் கூடியவர்களில் பலர் நவின மகான்களாகவே இருக்கிறார்கள்.

சாதரண மனிதர்களிலிருந்து சாமானிய மனிதர்கள் வரை இன்று மகான்களின் சந்திப்புக்காக காத்திருக்கிறார்கள். சந்திக்கப்படுபவர்கள் எல்லாம் மகான்களா?
மகான்களை எதற்காக சந்திக்க வேண்டும்?

இறைத் தேடலினால் சூஃபிகளையோ, மகான்களையோ பலர் சந்திப்பதில்லை. இந்த உலக ஆதாயத்தின் நிமித்தத்தினால், தங்களின் இல்வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தேவையினால், பிரச்சனைகளினால் மகான்களை சந்திக்க செல்கிறார்கள்.

செல்லக் கூடியவர்களின் பிரச்சனைகள் உலகதாயமாக இருப்பதினால் பதில் சொல்லக்கூடியவர்கள் மட்டும் முற்றும் துறந்த முனிவராக இருப்பார்களா என்ன?
கள்ளத்தனமும், வில்லத்தனமும் கொண்டவர்களால் உண்மைத்தனமான மகான்களை எப்படி அடையாளங் காணமுடியும்.?

குடும்பப் பிரச்சனைக்கு கோவிலுக்கு செல்வதைவிட குடும்பத்தார்களுடன் கூடி பேசினால் பிரச்சனை முடிந்துவிடும் அல்லவா? பிரச்சனை எங்கிருக்கிறதோ அங்கு பேசுவதை விட்டு விட்டு எங்கோ போய் பேசிக் கொண்டிருந்தால் பிரச்சனை எப்படித் தீரும்?

நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை எல்லோரும் நம்புகின்றோம்; நம்பிக்கைக்குரிய அந்தசக்தியை வாழ்நாள் முழுவதும் நம்பிக் கொண்டே இருக்கின்றோமே தவிர அதை அறிந்திட முனைவதில்லை. அந்த அறியாமைதான் பல நவீன மகான்களிடம் நம்மை சிக்கவைக்கிறது. உண்மையான இறைத்தேடல் இருந்தாலே சிறந்த குருவிடம் மகானிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும்.

மகானைப்பற்றி யாரும் கூறினால் அவர் என்ன அதிசயத்தை நிகழ்த்தக் கூடியவர் என்பதை சொல்லக்கூடியவரின் விரிவுரையில் கேட்பவரின் செவிகள் நம்பமறுக்கும் அளவிற்கு கைகளைத் திறந்தால் மலர் வருகிறது, மணம் வருகிறது, வாயைத் திறந்தால் ஆப்பிள் வருகிறது, அல்வா வருகிறது என்றும் அடுக்குவார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து ஞானத்தைத் தவிர மற்ற அனைத்தும் வெளிவருவது அதிசயமில்லை.

இன்று பல மகான்கள் என்று சொல்லக்கூடியவர்களிடமிருந்து உண்மையைத்தவிர மற்ற எல்லாமும் வருகிறது என்பதுதான் உண்மை.
மகான்களிடம் அதிசயத்தைத் தேட வேண்டுமா? அறிவைத் தேட வேண்டுமா? என்பது பலருக்கு தெரிவதேவே இல்லை.

பெரும்பாலும் தோற்றங்களைக் கண்டு ஏமாந்து விடுகிறோம்; காவியும், தாடியும் பலரின் மனதை நம்பவைத்துவிடுகிறது. சில அபாரமான செயல்களைக் கண்டு மனதை ஒப்படைத்து விடுகிறோம்; அவரை மகானாக ஏற்றுக் கொண்டு விடுகிறோம்.பிரச்சனைகளை கொட்டிவிடுகிறோம், நோய்களை சுட்டிக்காட்டுகிறோம். மருத்துவத்தினால் குணமடைய வேண்டிய பிணிகளை மகான்களினால் குணப்படுத்த முயலுகிறோம்.

வைத்தியருக்கும் மகான்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும்
ஜோசிருக்கும் மகான்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும் நிறைந்திருப்பதினால் மகான்யார் ? மகன் யார்? என்ற வித்தியாசம் தெரியாதவர்களாய் இருக்கிறார்கள்.

ஒரு சூஃபி கூறினார்
அறிவைத் தேடுபவர் ஆயிரத்தில் ஒருவர்; குருவைத் தேடுபவர் கோடியில் ஒருவர்; கருவை அறிந்தவரை காண்பதும் அறிது என்று.

இன்று மகான்களாக, மகரிசிகளாக, மார்க்க வித்தகர்களாக பல பட்டங்களோடு பவனி வருபவர்கள் கருவை அறிந்தவர்களா? என்ற கேள்விகள் நம்முள் எழுவதே இல்லை என்றால் நம்மில் அதைப்பற்றிய தேடலோ, அறிவோ இல்லை என்பது தானே உண்மை.

வேதத்தை வைத்து எவ்வளவு வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்யலாம் வியாக்கியானம் செய்பவர்களெல்லாம் கருவை அறிந்தவர்களா?

மகானிடமிருந்து பெறவேண்டிய அறிவை நாம் பெறவேண்டுமே தவிர
நம்மிடமுள்ள குப்பைகளை அவரிடம் கொண்டிக் கொண்டிருந்தால்
எதையும் பெற்று வரமுடியாது.

ஒரு மகானிடம் சென்று நாம் அறிவுப் பெறவில்லை என்றால் நம்மிடம் அறிவுத்தேடல் இல்லை என்பதா? மகானுக்கு இல்லை என்பதா?
மகானுக்கு இல்லை என்பதை அறிந்து கொள்ளக் கூடிய அறிவு நம்மிடம் இருந்தால் …மகான் யார்?

இன்று பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் அறிவைத்தேடி குருவை நாடியவர்கள் குருவுக்கு கட்டுப்படவேண்டும் அப்போதுதான் நம் அறிவுத்தேடல் நிறைவு பெறும்.
குருவை மிஞ்சுபவர்களாக இருந்தால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.
அறிவுத்தேடலின்றி வேறு ஏதும் தேடுபவர்களாக இருந்தால் கருவை அறிந்த மகான்களிடம் நிலைத்து நிற்க முடியாது. விரட்டப்படுவார்கள் அல்லது விலகிச்செல்வார்கள்.

உண்மையான மகானைத் தேடுங்கள்…உண்மையைத் தெளிவுபெறுங்கள்….!

2 comments:

Anonymous said...

நட்புக்கு வணக்கம்.

இஸ்மத் தோட்டத்தில் இன்றைய புது மலர் அல்லது புது பதிவு. பார்க்க அழகாகவும், நுகர மணமாகவும், சுகிக்க சிந்தனையாகவும் மலர்ந்திருக்கிறது.


//// பிறந்ததிலிருந்து எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தைச் சார்ந்தோ வளர்க்கப்பட்டிருக்கின்றோம்.வெகு சிலர்தான் தங்களின் சுயசிந்தனைக்கு பரிசீலனைச் செய்து அதன் அகம், புறங்களை ஆழமாக ஆய்ந்து, கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அல்லது மாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள்.////

மிக சரியான அணுகுமுறை. இந்த தெளிவு ஏற்பட்டால் என் மதம் தான் பெரியது, அடுத்த தெல்லாம் வேஸ்ட் எனும் முரட்டுத் தனம் வராது. நாம் சார்ந்தது நல்லது, எனும் சாந்தம் விதைக்கும்.

/// தேடல் என்பது இன்றியமையாத உள்ளுணர்வு. பலருக்கு பொருளாக இருக்கும், சிலருக்கு அருளாக இருக்கலாம் இன்னும் சிலருக்கு காதல்.

ஆன்மீகத்தேடல் எல்லோருக்கும் ஏற்படுவதல்ல.

நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை எல்லோரும் நம்புகின்றோம்; நம்பிக்கைக்குரிய அந்தசக்தியை வாழ்நாள் முழுவதும் நம்பிக் கொண்டே இருக்கின்றோமே தவிர அதை அறிந்திட முனைவதில்லை. அந்த அறியாமைதான் பல நவீன மகான்களிடம் நம்மை சிக்கவைக்கிறது. உண்மையான இறைத்தேடல் இருந்தாலே சிறந்த குருவிடம் மகானிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும்.////

இரு வழி.... நாமே தேடிக் கொள்வது, இன்னொன்று குருவின் துணையுடன்.

குருவுடன் தேடுவது எளிது. ஆணித்தரமான கருத்து. ரொம்ப நல்லது.


//// உண்மையான மகானைத் தேடுங்கள்…உண்மையைத் தெளிவுபெறுங்கள்… /////

சரி. மகானை தெரிவது எப்படி. புரிந்து கொள்வது எப்படி. களைகளை கழைந்து விளைகளை அடைவது எப்படி. சராசரி மனிதனுக்கு சில ஆலோசனையும் சொல்லலாமே.

வெறும் பிரச்சனை மட்டும் சொல்லாது தங்களுக்கு தெரிந்த தீர்வாய் சிலவற்றை கிள்ளிப் போடுக்களேன்...

-லாரன்ஸ்

ஸ்வாமி ஓம்கார் said...

நல்ல கருத்துகள். ஆனால் சில வரிகளை எதிர்காலத்தில் மாற்றி யோசிப்பீர்கள் என நினைகிறேன்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....