உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, January 13, 2010

பாக்ஸர் நாயின் காதல் பிரிவு

பிராணிகள் வளர்ப்பதில் மனிதர்களில் பலருக்கு மித்த ஆர்வம். செல்லப் பிராணியாக நாய் பூனை அதிகமானவர்களின் இல்லங்களில் அவர்களின் உள்ளங்கங்களில் வாழ்ந்துக் கொண்டு வருகிறது.

பெற்ற பிள்ளையை பேணுவதைப்போல வீட்டு பிராணிகளை சிலர் பேணி வளர்க்கிறார்கள். பிராணிகள் எப்பவுமே நன்றி உள்ளவைகள். அவைகளிடம் நாம் அன்பு செலுத்தி விட்டால் நம்மை விட பல மடங்கு அன்பை நம்மேல் பொழிந்துக் கொண்டிருக்கும்.

நம் வீட்டில் வளர்கக் கூடிய பிராணிகள் பெருசுகளுக்கு பிடிக்காமல் எங்கேயாவது கொண்டுப் போய் விட்டு வரச் சொல்வார்கள். நாமும் சில மைல் தூரத்தில் விட்டு வருவோம் மறுநாள் நம் வீட்டுவாசலில் வந்து நிற்கும். அதற்கு எப்படி வழி தெரிந்தது என்று நானும் சின்ன வயதில் திகைத்திருக்கிறேன்.
மோப்பம் பிடித்தே நம் வீட்டுக்கு வந்துவிடும்.

நான் வளர்த்த நாய்குட்டியைப் பற்றி நன்றி உள்ள ஜீவன் என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன் எழுதி இருந்தேன். வளர்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவம். இந்த இடுக்கை என்னுடன் பணிப்புரியும் சிரியா நாட்டைச் சார்ந்த ராமி ஜப்ரியின் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை உங்களுக்கு பகிரப்போகிறேன்.

எனக்கு அவருடன் கிட்டதட்ட இருபது வருடகாலத் தொடர்பு இருக்கிறது அதனால் அவருடைய அனுமதி பெறாமலேயே அவர் வளர்த்த பிராணிகளைப் பற்றி எழுதப்போகிறேன்.

15 ஆண்டுகளுக்கு முன் அவரும் அவருடைய மனைவியும் பூனை வளர்த்து வந்தார்கள். ஒரு பூனையின் மீது இருவர் காதல் கொண்டனர். இருவரும் மாறி மாறி அந்த ப+னைக்கு வயிற்றை புடைக்க வைப்பார்கள். அதன் வாழ்நாளில் பசி என்பதே என்ன என்று தெரியாத அளவுக்கு உணவு கொடுப்பார்கள்.

சூப்பர் மார்கெட் சென்றால் வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவதை விட்டுவிட்டு பூனைக்கு எது பிடிக்கும் என்ன கொடுக்கலாம் என்றும் பூனையைப் பற்றிய நூல்கள் என்ன வந்திருக்கிறது என்றும் தேடுவார்கள். அந்த பூனையும் இந்த இருவர்களின் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தது.

ராமி தம்பதியனருக்கு குழந்தை இல்லை கணவனும் மனைவியும் பணிப்புரிகிறார்கள். இருவருமே தங்களின் பணி முடிந்ததும் அங்கு இங்கென்று சுத்தாமல் பூனைக்காக வேண்டி வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.

ஒருநாள் கணவன் மனைவிக்கிடேயே பிரச்சனை வந்தது. அந்த பிரச்சனை வளர்ந்து விவாகரத்து வரை போனது. கணவனும் மனைவியும் பிரியக் கூடிய தருணம் வந்தபோது பூனை யாரிடம் இருப்பது என்ற கேள்வி அவர்களுக்குள் எழவே மனைவி தன்னிடம் தான் இருக்கவேண்டும் என்று போராடினார். கணவரும் போராடினார். இந்த பிரச்சனை அவர்களின் உறவினரிடம் வந்தது.
பிறந்த குழந்தை யாரிடம் வளர்வது என்ற சர்ச்சையைத்தான் நாம் பார்த்திருக்கிறோம் இங்கு பூனை யாரிடம் வளரவேண்டும் என்ற சர்ச்சை வளர்ந்தது. மனைவியிடம் ஒரு வாரமும் கணவரிடம் ஒரு வராமும் வைத்துக்கொள்ளும்படி தீர்ப்பு கூறப்பட்டது.

ஒரு வாரம் என்பது இருவருக்குமே மிகுந்த மனக்கஸ்டத்தை கொடுத்தது. நாளடைவில் மனைவி அந்த பூனையை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டார்.
இதை ராமியால் தாங்க முடியவில்லை அதை பெரிய இழப்பாக கருதினார். அந்த சமயத்தில் அவருடைய நண்பர் கூறிய ஆறுதலும் ஒரு நாய்குட்டியை வாங்கி நீ தனியே வளர்த்துக் கொள் என்ற வார்த்தையும் அவருக்கு பலமாக இருந்தது.

மறுநாளே ஜெர்மனி நாட்டைச் சார்ந்த “பாக்ஸர்” இன குட்டியை 25000 ரூபாய்க்கு வாங்கி வந்தார். இந்த சின்ன குட்டி இவ்வளவு விலையா ? என்றேன் இதன் வளர்ச்சி பெரிதாக இருக்கும் என்றார். அந்த சின்னக்குட்டி நான் பணிப்புரியும் அலுவலகத்தில் அங்கும் இங்கும் அழைந்தது. நான் தூக்கி மடியில் வைத்துக் தடவிக்கொள்வேன்.அதனுடைய ரோமம் மிருதுவாக இருந்தது. கருப்பும் காவியும் கலந்த நிறத்தில் அழகாக இருந்தது. அந்த குட்டிக்கு ரோக்கி என்று பெயரிட்டார்.

சிலமாதங்கள் கழித்து அந்த நாயை காண ராமியிடம் கூறினேன். ஒரு தினம் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. ஒரு கன்னுக்குட்டி அளவு வளர்ந்திருந்தது. கழுத்திலே பட்டைக்கட்டி வார் போட்டிருந்தார். முன் கால் இரண்டையும் தூக்கி அவரின் இடுப்பில் வைத்து அவரின் மோவாயை மோப்பிக்கும். அந்த தருணத்தில் ஆறடி ஆள் நிற்பது போல் காட்சி அளிக்கும்.அதன் வால் வெட்டுப்பட்டதைப் போல் சிறியதாக இருந்தது. “பாக்ஸர்” இன நாய்களின் வால் சிறிதாகவே இருக்கும்.

என் அலுவலகத்திற்கு சில நேரங்களில் ரோக்கியை அழைத்து வந்தாலும் அது ராமியுடன் தான் நிற்கும் நாங்கள் அதன் அருகில் செல்வது கிடையாது அதன் தோற்றமும் வளர்த்தியும் எனக்கு பயத்தை அளித்தது. ஒரு முறை ராமியிடம் நீ மறைவாக இருந்துக் கொள் ரோக்கி என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்றேன். அதுபோல மறைந்துக் கொண்டார். ஆனால் ரோக்கியோ அங்கும் இங்கும் அலைமோதியது ராமியைத்தேடி எல்லா இடத்திலும் அழைந்து இறுதியாக கழிவறை கதவளை சுறண்ட ஆரம்பித்தது. ராமி அங்குதான் மறைந்துக் கொண்டிருந்தார். அவரைப் பிரிந்து ரோக்கியாலோ ராமியாலோ இருக்க முடியாது என்ற நிலை அவர்களுக்குள் வளர்ந்து வந்துக் கொண்டிருந்தது.

ஒருமுறை ராமியின் தாயார் சிரியாவிலிருந்து வந்திருந்தார்;. இவர் நாய் வளர்ப்பது அவருக்கு பிடிக்கவில்லை. நேரடியாகவே ராமியிடம் கூறினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உன் மீது புகார் சொல்கிறார்கள் நீ நாய் வளர்ப்பது சரி அல்ல அதை விற்றுவிடு அல்லது எங்காயவது போய் விட்டு விடு என்று கூற ராமிக்கு வந்ததே கோபம் நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு என்று கோபமாக பேசி விட்டு அலுவலகம் வந்து விட்டார். சில மணி நேரங்கழித்து ராமியின் தாயார் தொலைபேசி செய்து உனது ரோக்கி எங்கோயோ ஒடிப்போயிடுச்சி என்று சொன்னதும் அலுவலகத்திலிருந்து அவசரமாக காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினார்.
அங்கே அவருடைய தாயார் மட்டும் ரொம்பவும் சோகமாக நின்றார்கள். ராமி நம்பிவிடுவார் என்று.

என்ரோக்கியை எங்கே விட்டே என்று காட்டுகத்து கத்தினார். அந்த கட்டிடத்தில் தங்கிருந்த அத்தனை பேரும் இவரின் பிளாட் வாசலில் கூடி விட்டார்கள். தான் யாரிடம் பேசுகிறோம் என்றுக் கூட தெரியாமல் தன் தாயை வாய்க்கு வந்தபடி பேசினார். இந்த சூழ்நிலையை அவரின் தாயார் எதிர்பார்க்கவில்லை தன் மகன் ரோக்கியின் மீது வைத்திருக்கும் வெறித்தனமான அன்பைக் கண்டு பயந்தே விட்டார். இதற்கு மேல் மூடிமறைத்தால் இவன் ஏதாவது செயயக் கூடும் என்பதை உணர்ந்தவராய் அவரின் உறவினர் வீட்டில் அடைத்து வைத்திருக்கும் உண்மையைக் கூறினார்.

அந்த நிமிடமே தனது தாயை அழைத்துச் சென்று ரோக்கியை மீட்டு கொண்டு வந்தார். மறுநாளே தன் தாயை சிரியாவிற்கு அனுப்பி விட்டார். ஓராண்டு காலம் கழித்து விடுமுறைக்காக சிரியா செல்வதற்கு ராமி தயாரானார். அந்த சமயம் ரோக்கியை கூடவே அழைத்துப்போக விருப்பமில்லை. தனது தாயார் ஏதாவது செய்து விடுவார் என்ற பயத்தில் எந்த நண்பர்களும் அதை வைத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லாததினால் நாய்களை பராமரிக்கும் பள்ளியில் 15 தினங்களுக்கு விட்டுச் செல்ல விசாரித்தார்.

நாய் பராமரிக்கும் பள்ளியில் ராமி அணிந்திருக்கும் துவைக்காத உடையுடன் நாயை ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். அந்த உடையை நாயுடன் வைத்திருப்பார்கள். அந்த உடையிலிருந்து வரும் வாடையை நாய் முகர்ந்து தனது எஜமான் பக்கத்திலேயே இருப்பதாக எண்ணிக் கொள்ளும் என்றும் விளக்கம் கொடுத்தார்கள்.

அதன்படி செய்து விட்டு சிரியா சென்ற ராமிக்கு ஒரே வாரத்தில் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. ரோக்கி இறந்து விட்டது என்று நாய் பராமரிக்கும் பள்ளியில் கூறியதும் அடுத்த சிலமணி நேரங்களில் பறந்து வந்தார்.

ரோக்கியை விட்டு சென்றதும் அது உணவருந்த வில்லை ரொம்பவும் சோகத்துடனே இருந்தது. மற்ற நாய்களுடன் பழகவிட்டும் அது தனித்தே இருந்தது. ஒவ்வொரு நாளும் அதனுடைய செயல்பாடுகள் குறைந்து இறந்து விட்டது என்று மருத்துவ சான்றிதழ் கொடுத்தார்கள்.

தன் எஜமானிடம் கொண்ட காதலால் ரோக்கிக்கு அவர் பிரிவை தாங்கும் சக்தியை இழந்து விட்டது.

ராமி கதறினார் அவருடைய துக்கத்தை யாருடைய ஆறுதலினாலும் மீளவைக்க முடியவில்லை. பல மாதங்களுக்கு பின் இன்றும் ரோக்கியின் புகைப்படத்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இறந்தது நாய்தானே என்று அவரால் எளிமைப் படுத்த முடியவில்லை . அவ்வபோது இந்த சம்பவங்களை அவர் மறந்திருந்தாலும் இந்த இழப்பு பெரிய அளவில் அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2 comments:

பாலா said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்! :)

498ஏ அப்பாவி said...

நன்றி ​கெட்ட மனித​ரை விட நாய்கள் ​மேலடா! - என்ற பாடல் வரிதான் நி​னைவிற்கு வருகின்றது இந்த பதி​வை படிக்கும் ​​பொழுது...

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....