‘தாத்தா எழுந்திறிங்க’ என்று பேரன் பாசித் கூப்பிட்டதை பொறுட்படுத்தாமல் விட்டத்தைப்பார்த்துக் கொண்டு படுத்திருந்தார் உஸ்மான்பாய்.
எழுந்திருங்க என்று கூப்பிடுவது ஆஸ்பத்திரி போவதற்கு பதினைந்து வருடங்களாக எல்லாம் மருந்தும் சாப்பிட்டாச்சு ஆனால் இரண்டு காலிலும் உள்ள புண் மட்டும் குணமாகவில்லை.
இப்பவும் பேரன் அதுக்குதான் கூப்பிடுகிறான் என்பது தெரிந்திருந்தாலும் ஆஸ்பட்டல் போவதற்கு மனசு அலுப்புதட்டியது.
‘உடம்பு சரியில்லையா’ என கரசனையோடு அவரருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டே அவர் நெற்றியில் கைவைத்து சுடுகிறதா என்று பார்த்தான் பாசித்.
உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு மனசுதான் சரியில்ல என்று பேரனிடம் கூறுவதற்கு அவரிடம் தைரியமில்லை.
எந்த குறையும் இல்லாமல் தன்னை பேணிகாத்து வரும் பேரனிடம் மனசு சரியில்லை என்று கூறினால் அவனால் தாங்க முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தார்.
‘தாத்தா நேரமாகுது ஆஸ்பத்திரியில கூட்டமாகிடும் கிளம்புங்க’ என்று துரிதப்படுத்தினான் பாசித்.
பேரனின் நச்சரிப்புக்காக அவன் மனம் திருப்திக்காக புறப்பட்டார் உஸ்மான் பாய்.
‘அம்மாவை பார்க்க எப்போ போறே?' கேட்டார் உஸ்மான்.
“அம்மாவை பார்த்து வந்து இரண்டு நாள்தானே ஆச்சு எப்பவும் அம்மாவைப் பற்றியே அதிகமா எனக்கு ஞாபகம் மூட்டிக்கிட்டு இருக்கீங்க... அப்பாவுடன்தானே அம்மா இருக்காங்க நான் வேலைக்காக வேண்டி இப்படி தூரமா குடும்பத்துடன் இருக்கிறதுனால உங்களை துணைக்கி வைத்துக் கொண்டு வார விடுமுறையில நான் போகலைன்னாலும் வம்பிப்பா என்னை போகச்சொல்லி கட்டாய படுத்துறீங்...சில நேரம் எனக்கு எரிச்சலாக இருக்கு.”என்றான்
‘தாயை பார்ப்பதற்கு உனக்கு எரிச்சலாக இருக்கா’? கேட்டார் உஸ்மான்.
‘பார்பதற்கு இல்ல...நீங்க இப்படி அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பதற்கு’ என்றான்.
மருத்துவமனையில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.வரிசையில் உஸ்மானை அமரவைத்துவிட்டு பாசித் பெயர் பதிவு செய்ய சென்றான்.
வயதான மூதாட்டி ஒருவரை கைத்தாங்களாக ஒருவர் அழைத்துவர அங்கு அமர்வதற்கு இருக்கை காலியாக இருக்கவில்லை.அழைத்து வந்தவர் சுற்றும் முற்றும் பார்க்க பலரும் குழந்தைகளுடனும் வயதானர்களாகவும் இருந்தார்கள் உஸ்மான் பாய் சடாரென எழுந்து தன் இருக்கையில் அமரும்படி சைகை செய்தார்.
‘வேண்டாம்ங்க இப்படி தரையிலேயே உட்கார வைக்கிறேன’; என்று மூதாட்டியை அமைத்து வந்தவர் கூற
“தரையில வேண்டாம் சில்லுன்னு இருக்கும் இருக்கையில அமரவையுங்கள்” என்று கூறி தன் கைத்தடியின் துணையுடன் எழுந்து செவிற்றில் சாய்ந்து கொண்டார் உஸ்மான்.
மூதாட்டி கைகூப்பி நன்றி கூறினார்.
‘ஆத்தா நான் போய் டோக்கன் வாங்கியாறேன்’ என்று அழைத்துவந்தவர் உரக்க கூறிவிட்டு சென்றார்.
அவர் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றார் உஸ்மான்.
இந்த மூதாட்டி அவருடைய தாயாகதானிருக்கும் எப்படி அனுசரனையுடன் நடந்துக் கொள்கிறார் என்று அவரை நோக்கிய எண்ணம் பறந்தது.
உஸ்மானை நோக்கி வந்த பாசித் உஸ்மான் நிற்பதைக் கண்டு
“ஏன் தாத்தா நிக்கிறீங்க உங்கள உட்காரவச்சிட்டுதானே போனேன்” என்று கேட்க
“வயசானவங்க உட்காரட்டுமேன்னு நான் நின்னுகிட்டேன்” என்றார்.
“ஏன்ன வயசானவங்களா? அப்ப நீங்க வயசுப்பையனா...? உங்களுக்கே ஒரு ஆள் தூக்கிவிடனும் ஏன்தான் இப்படி இருக்கீ;ங்களோ தெரியல.சரிவாங்க டாக்டர் ரூமுக்கு போவோம்” என்று அழைத்துச் சென்றான் பாசித்.
வழக்கம்போல் புன்னகையுடன் வரவேற்றார் டாக்டர்
“பாய் ! எப்படி இருக்கீங்க புண்ணு ஆறி இருக்கா காலை ஸ்டுல் மேலே வைங்க” என்று காலைப்பார்த்தார்.புண் ஆறுவதற்கு பதிலாக அதிகமாக இருப்பதுபோல் டாக்டருக்கு தெரிந்தது.
“என்ன பாய் புண்ணு அதிகமா தெரியுதே ஒழுங்கா மருந்து சாப்பிட்டீங்களா? மருந்து போட்டீங்களா?” ஏன்று கேட்க... பாசித் முந்திக் கொண்டு வேலாவேலைக்கி சரியா நான்தான் சார் மருந்து கொடுக்கிறேன் என்றான்.
உஸ்மானைப் பார்த்து “பாய் கவலைப் படாதீங்க எப்படியும் குணப்படுத்திடுறேன் அடுத்தமாசம் பெங்களுருல பெரிய ஆஸ்பட்டலுக்கு பல நாட்டிலிருந்து டாக்டர்கள் வர்றாங்க நானும் போறேன் நீங்களும் வந்தீங்கன்னா மற்ற டாக்டர்களோடு கலந்து சரிபண்ணிடலாம்” என்று டாக்டர் கூறியதும்
பாசித் உடனே ‘நிச்சயமா கூட்டிவாரேன்’ என்றான்.
உஸ்மான் சிரித்துக் கொண்டே ‘அதெல்லாம் சரி வராது வேண்டாம்’ என்றார்.
“நோயாளி ஒத்துழைச்சாத்தான் நோயை குணப்படுத்த முடியும்” என்று டாக்டர் கூறியபோது
“குணமாகக் கூடிய நோயாக இருந்தா எப்பவோ குணமாகி இருக்கும் இது குணமாகாது சார் என்காலோடு போட்டி போட்டு உங்க நம்பிக்கையை கெடுத்துக்காதீங்க... வேண்டாம்னு சொன்னாலும் என் பேரனும் விடமாட்டேங்குறான்” என்றார்.
“தாத்த ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க டாக்டர் எப்படியும் குணப்படுத்திவிடுவார்” என்று நம்பிக்கை குரல் கொடுத்தான் பாசித்.
ஆஸ்பட்டலைவிட்டு புறப்பட்டனர்.
மூதாட்டியை சைக்கிள் ரிக்ஷாவில் அமரவைத்து அழைத்துவந்தவர் சைக்கிளை மிதிக்கலானார்.
அதைக் கண்ட உஸ்மான் கண்களில் கண்ணீர் கரைபுரண்டது
'தாத்தா ஏன் அழறீங்க' பதட்டத்துடன் பாசித்கேட்க
'தூசிப்பா' என்று கண்களை துடைத்தபடி குனிந்து நடந்தார்.
பேரன் என்மேல் வைத்திருக்கும் அன்பைப் போல் என்தாயிடம் நான் வைத்திருந்தால் எனக்கு இந்த நிலமை வந்திருக்குமா? கட்டியவளின் கட்டளைக்கா பத்துமாசம் சுமந்த வயிற்றை எட்டி உதைத்த கால்களுக்கு இந்த தண்டனை சிறியதுதான்.
ஏத்தனை டாக்டர்கள் பார்த்தாலும் மருந்துகள் கொடுத்தலும் இந்த நோய் தீராது என்தாய் மன்னிக்காதவரையில்.
5 comments:
கலங்க வைத்த முடிவு.
கதையின் தலைப்பு "காலடியில் நரகம்" என்று வைத்திருக்கலாமே அண்ணாச்சி....
காலம் கடந்த ஞானம் தான் சிலருக்கு.ஆனால் பலன்?
சரியான முடிவுதான்.
தாயின் காலடியில் சொர்க்கம் என்று கருத்து மாறிடாமல் இருப்பதற்குத்தான் இந்த தலைப்பு ராஜா...உங்கள் கருத்துக்கு நன்றி...
சகோதரி சாந்தி உங்கள் கருத்துக்கு நன்றி
கதை கலங்க வைத்துவிட்டது.நூறு சதவிகிதம் உண்மை.
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....