உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, August 4, 2010

வடமாநில சுற்றுலா - 4


தாஜ்மஹால் உள்ளே நுழைந்ததும் மனம் பரவசத்துடன் மகிழ்ந்தது, அந்த அழகைக் கண்கள் கண்டு பருகி, இதயத்திற்கு இரசனையை இதமாக அனுப்பிக் கொண்டிருந்தது.

என்னிடம் உள்ள சோனி சைபர்சாட் கேமிரா தனக்குள் தாஜ்மஹாலை அடக்குவதற்கு, விழுங்குவதற்கு ஆர்வப்பட்டு விழுங்கியது.

தாஜ்மஹாலுக்குள் மூவி கேமரா அனுமதி இல்லை என நண்பர் ஹாஜாவின் மூவி கேமராவை பாதுக்காவலர்கள் வாங்கி வைத்துக்கொண்டனர்.(திரும்பி செல்லும்போது கொடுத்துவிடுகிறார்கள்)

என்னிடமுள்ள சோனி சைபர்சாட்டில் மூவியும் எடுக்கலாம் என்பது பாதுகாவலர்களுக்கு தெரியாது. புகைப்படத்துடன் மூவியையும் அதிகமாக எடுத்தோம்.

தாஜ்மஹாலுக்கு கோடைக் காலத்தில் செல்லக்கூடியவர்கள் காலில் அணிவதற்கு உறை (சாக்ஸ்) மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.காலணிகள் அனுமதி இல்லாததால் பலிங்கு தரையில் வெறுங்கால் சூடேறுகிறது குழந்தைகள் வெறுங்காலுடன் அவதிப்படுவார்கள்.

மாலை நேர வெய்யிலில் எங்களின் தாஜ்மஹால் சுற்றுலா சுறுசுறுப்புடன் இருந்தது.

தாஜ்மஹாலின் உள்ளே நுழையுமுன் அந்த வாயில் இருபக்க மதில் சுவருகளில் திருக் குர்ஆனின் வசனங்கள் பதிக்கப்பட்டிருக்கிறது.உள்ளே நுழைந்ததுமே இரு கல்லரைகள் இருந்தன.தாஜ்மஹாலின் நுழைவாயிலை கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

ஷாஜகான் மும்தாஜ் அடக்கஸ்தளம் என்றார்கள்.ஆனால் தாஜ்மஹாலின் கீழ்தளத்தில் தான் ஷாஜகான் மும்தாஜின் உண்மையான கல்லரைகள் இருக்கின்றன.மேல்தளத்தில் இருப்பது டம்மி என்பதுதான் உண்மை.

தாஜ்மஹாலின் உட்புறத்தில் நல்ல காற்றோட்டமாக இருக்கிறது.அங்கு நீண்டநேரம் நிற்பதற்கு மனம் எண்ணினாலும் அன்று இரவே டெல்லி புறப்படவேண்டி இருந்ததால் அவசரப் பார்வைகளாய் பார்த்து வந்தோம்.

தாஜ்மஹாலின் பின்புறம் யமுனை ஆற்றங்கரையோரம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.இந்த யமுனையின் வரலாறு மிகப்பெரியதுபோல இந்த ஆற்றின் தூரமும் நீளமானது.சுமார் 1500 கி.மீ தூரம் இந்த ஆற்றின் நீளம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் தாஜ்மஹால் அதன் பின் பக்கமாக அமைந்திருக்கிறது.அந்த ஆற்றங்கரையை உ.பி.அரசு தூய்மைப்படுத்தி அழகுபடுத்தினால் இந்திய தூய்மையை நிலைநாட்டிய பெரும் பெயரை அந்த அரசு பெற்றுச் செல்லும்.(ஆள்பவர்களுக்கு பெயரைவிட பொருளே முக்கியமாக இருக்கிறது)

இரவு நேரத்தில் நிலவின் வெளிச்சத்தில் தாஜ்மஹாலைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்குமாம்.ஆனால் பாதுகாப்பைக் கருதி மாலை 7.00 மணியுடன் பார்வையாளர்களுக்கு தாஜ்மஹால் அடைக்கப்படுகிறது.

காதிகிராப்ட் கடைகளில் பெரிய உருவத்தில் தாஜ்மஹாலை செய்து நிலவின் வெளிச்சத்தில் தாஜ்மஹால் எப்படி இருக்கும் என்பதை விளக்கின் வெளிச்சத்தில் காண்பிக்கிறார்கள்.தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் அதே பலிங்கு கற்களால் இந்த தாஜ்மஹாலை செய்து கண்ணாடி கூண்டுக்குள் சிறை வைத்திருக்கிறார்கள்.பல வடிவங்களில் விற்பனையும் செய்கிறார்கள்.
நாமும் வாங்கினோம்.விலையில் பேரம் இல்லை.நீங்கள் காணும் இந்த புகைப்படம் அந்த கடையில் எடுத்தது.

சிலமணி நேரங்கள் தாஜ்மஹாலுடன் கழித்தாலும் அந்த பலிங்கு கற்களில் அமர்ந்து சிலநிமிடங்கள் உடலை சாய்த்தும் பார்த்தேன்.அங்கு வீசிய மாலை தென்றல் என்னை தழுவியபோது எனக்கு சுகமா அல்லது அதற்கு சுகமா என்பது தெரியவில்லை.

இரவு 8.00 மணிக்கு தாஜ் எக்ஸ்பிரஸ் இரயிலில் ஆக்ராவிலிருந்து டெல்லி செல்வதற்கு புரோக்கர் மூலம் டிக்கேட் பெற்றதில் ஒரு டிக்கேட்டுக்கு 100 ரூபாய் அதிகம் கொடுக்கப்பட்டது.இதை முன்னாடியே திட்டமிட்டு இணையதளத்தில் எடுத்திருக்க வேண்டும் தவறிவிட்டேன் அந்த தவறுக்கு 1000 ரூபாய் நஷ்டம்.(செல்லக் கூடியவர்கள் முன்கூட்டியே டிக்கட்டுகளை பதிவுசெய்து வைத்திருப்பது நலன்)

டெல்லி புறப்படுவதற்கு முன் அங்கு செல்வதைப்பற்றி துபாய் பதிவர் சென்ஷி தந்த சில விபரங்கள் எனக்கு உதவியாக இருந்தது நண்பருக்கு நன்றி.

பனிக்கர் டிராவல்ஸ் ஆல் இந்தியாவில் தங்களின் சேவைகளை இணையதள மூலம் செய்துவருகிறார்கள்.அவர்களிடம் வாகன வசதி நன்றாக இருக்கிறது.
இணையதளத்தின் மூலம் நமது சுற்றுலாவை பதிவுசெய்ய வேண்டும்.பனிக்கர் விபரங்களை அவர்களுடைய தளத்தில் இதை சொடிக்கினால் தெரிந்துக் கொள்ளலாம்.

ஆக்ராவிலிருந்து டெல்லி புறப்படுவதற்கு முன் எங்களது புரோக்கர் டெல்லியில் தங்குவதற்கு ஹோட்டல் நாங்களே தயார் செய்கிறோம் உங்களை டெல்லி நிஜாமுதீன் ஸ்டேஷனில் அழைப்பதற்கு எங்கள் ஆட்கள் தயாராக இருப்பார்கள் என்றும் மறுதினம் டெல்லியை சுற்றிப் பார்ப்பதற்கு வாகன வசதி பனிக்கர் டிராவல்சை விட சிறப்பானதாக குளிர் சாதன வசதியுடன் தயார் செய்வதாகவும் கூறி எங்களிடமிருந்து 40 சதவீதம் தொகையை பெற்றுக் கொண்டு அதற்கான இரசீதுகளை தந்தார்.

இரவு 8.00 மணிக்கு தாஜ் எக்ஸ்பிரஸ் இரயிலில் உட்கார்ந்து செல்லக் கூடிய இருக்கையில் அமர்ந்து இரவு பத்து முப்பது மணிக்கு டெல்லி நிஜாமுதீன் ஸ்டேஷன் வந்தடைந்தோம்.வரும் வழியிலேயே குழந்தைகள் உறங்கி விட்டார்கள் எங்களுக்கும் நல்ல அசதி இருந்தது.

இதற்கு முன் டெல்லி வந்ததுமில்லை ஸ்டேஷனில் கூட்டம் அதிகமாக இருந்தது கூட்டம் குறையும் வரையில் காத்திருந்து மெல்ல பிளாட்பார்ம் படிகள் ஏறி பயணிகள் ஓய்வு அறை பகுதிக்கு வந்து அனைவரையும் அமரவைத்துவிட்டு எங்களை அழைக்க வந்த ஹோட்டல் வாகன ஓட்டி என்பெயர் தாங்கிய பலகையை வைத்து நிற்பார் எனத் தேடினேன்.

சிலர் நின்றார்கள் அதில் என்பெயர் இல்லை இங்கு அங்கு என தேடினேன் ஆள்யாரும் அப்படி நிற்கவில்லை.எனக்குள் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

சந்தேகம் தொடரும்..

6 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

துப்பறியும் தொடர்கதைக்கேயுரிய
சஸ்பென்ஸ் வைத்து, 4-ஆம் பகுதியை
நிறுத்துகிறீர்களே, புரோக்கர் ஆள்
வந்தாரா, வரலியா, அப்புறம்???

Prathap Kumar S. said...

தாஜ்மகால் படங்கள் இன்னும் போட்டிருக்கலாமே இஸ்மாத் பாய்...
அடுத்தபதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

ஸாதிகா said...

இலவசாமாக எங்களை தாஜ்மகால் காட்டி விட்டீர்கள்.வர்ணனை காணும் பொழுது நீங்கள் சிறந்த எழுத்தாளர் என்று அடித்து சொல்கின்றது.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.பிரதாப் சொல்வது போல் இன்னும் படங்களை பகிர்ந்திருக்கலாம்.

அப்துல்மாலிக் said...

நானும் தொடர்கிறேன்..

கிளியனூர் இஸ்மத் said...

நிஜாம்... ரொம்ப ஆர்வமாக இருப்பதுபோல தெரியுது....ஆர்வத்திற்கு நன்றி...

நாஞ்சில்... நிறைய படங்கள் போடுவதற்கு முயற்சி செய்கிறேன்...அப்படி நிறைய போட்டால் நன்றாகவா இருக்கும்...நன்றி

சகோதரி ஸாதிகா... சிறந்த எழுத்தாளர்னு சொன்னீகளே...அது என்னைத்தானா?...
ஒரு நிமிசம் இருங்க..சுத்தியும், முத்தியும் பாத்துக்கிறேன்..யார் காதுலயாவது விழுந்திடப் போகிறது....உங்கள் விருதுக்கு நன்றி....

மாலிக்... தொடருங்கள்...தொட்டுவிடுவோம்...நன்றி

Digistaan said...

DIGISTAAN is one of the leading Digital Marketing course in Delhi & providing the best digital marketing institute in Delhi with 100% job assistance.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....