உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, December 4, 2010

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 - தொடர் 2


இளமைப் பருவம் அதாவது 17 முதல் 21 வயது வரையில் உள்ள இளைஞர்கள், இளைஞிகளிடம் கவனமாக பெற்றோர்கள் இருக்கவேண்டும்; அந்த வயதில் எடுக்கக்கூடிய முடிவுதான் அவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த வயதில் இளைஞர்கள் பெரும்பாலோர் தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்தில் தங்களது பெற்றோர்களுக்கு ஒன்றும்தெரியாது என்ற எண்ணத்தில் மிதப்பார்கள்.

இளைஞிகளோ தங்களைவிட அழகான பெண்கள் இந்த உலகில் யாரும் இல்லை என்ற மனோநிலையில் அடிக்கடி தங்களை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடிமுன் நின்று தங்களின் அழகை இரசித்துக் கொண்டு நிற்பார்கள்.
என்று மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் ஒருமுறை தனது உரையில் கூறினார்.

பெற்றோர்கள் என்செயல்களை கவனிக்க வேண்டிய வயதில் அவர்களிடமிருந்து வெகுதூரத்தில் நான் சம்பாதிப்பு என்ற பெயரில் இருந்துக் கொண்டிருந்தேன்.

இறைவனின் கருணையினால் எனக்கு கிடைத்த நல்ல நட்பும், எனது பெற்றோர்கள் நல்ல சூழ்நிலையில் வளர்த்த வளர்ப்பும், எனது மனோநிலையில் நல்ல சிந்தனைகள் தோன்றிக் கொண்டுடிருந்தன.

அந்த சிந்தனையின் தூண்டுதலே நல்ல நூல்களை படிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டேன்.

பருவ வயது குறும்புகள் நிறையவே என்னிடம் இருந்தது.

ஒரே வீட்டில் என்னுடன் ஹவுஸ்பாயாக சீர்காழியை அடுத்த கோவில்புத்தூரைச் சார்ந்த அன்சாரி என்பவரும் வேலைப்பார்த்தார். நாங்கள் ஒரே வயதுடையவர்கள் அதனாலேயே எங்களுக்குள் அடிக்கடி போட்டிகள் நிறைய வரும்.

ஒருமுறை காலைநேரம் அரபு முதலாழி எங்கள் இருவரையும் அழைத்து காரில் பழங்கள் இருக்கிறது எடுத்துவாருங்கள் என்று அனுப்பிவைத்தார்.இருவரும் சென்று பழங்களை தூக்கிவருவதற்கு முன் ஒரு வாழைப்பழத்தை அன்சாரி சாப்பிட்டார், அதைப்பார்த்த நானும் ஒன்றை சாப்பிட்டேன், மீண்டும் அவர் இன்னொரு பழத்தை சாப்பிட்டார், உனக்கு இரண்டா நானும் சாப்பிடுகிறேன் என்று இப்படி போட்டி போட்டு அந்த இடத்தில் ஒருடஜன் பழத்தை சாப்பிட்டு முடித்தோம்.

பழங்களை கொண்டு வந்து வைத்ததும் அரபி எங்களை பார்த்தார். ஒருடஜன் வாழைப்பழம் குறைகிறதே என்று கேட்க; அன்சாரி என்னை கையை காண்பிக்க, நான் அவரைக் காண்பிக்க, அரபி எங்கள் இருவரையும் முறைக்க, இப்படி உண்பதிலிருந்து, உடுத்துவது வரையில் எங்களுக்குள் போட்டிகள் நிகழ்ந்துக் கொண்டே இருந்தது.

ஒருநாள் இரவு சாப்பாட்டுக்குப் பின் பழங்கள் சாப்பிடும் போது போட்டி வளர்ந்து ஒரு காட்டன் ஆரஞ்சு பழமும் காலியாகிவிட, காலையில் அரபுக்காரர் சாப்பிட்ட தோல்களை எல்லாம் வரிசையாக பரப்பி வைத்து “சூஆதா” என்று அரபுமொழியில் என்னஇது என்று கேட்க, நாங்கள் இருவரும் காட்டிலிருந்து பிடித்துவந்த குரங்கு குட்டியைப்போல பேந்த பேந்த விழிக்க, அந்த நேரத்தில் எனது நண்பன் அத்திக்கடை சிஹாபுதீன் அங்கு வர, அவனைக் கூப்பிட்டு இதோ பாரு உனது நண்பர்கள் எப்படி சாப்பிட்டு இருக்காங்க பாரு என்று காண்பிக்க..

டேய்! எனக்கு வெட்கமாக இருக்குடா! என்று என் நண்பன் சொல்ல, எல்லாம் அன்சாரியினால வந்துச்சு; நான் ஒன்னு சாப்பிட்டா அவன் இரண்டு சாப்பிடுகிறான், அவன் ரெண்டு சாப்பிட்டானேன்னு நானும் ரெண்டு சாப்பிட்டா அவன் மூனு சாப்பிடுகிறான் என்று நண்பனிடம் விளக்கம் கொடுக்க, அவன் எங்கள் இருவரையும் திட்ட இப்படியே திண்டிங்கன்னா சம்பளம் கொடுக்க மாட்டான் ஜாக்கிரதை என்று எச்சரித்தான்.

உணவு சமைப்பதில் ஒருநாள் நானும் ஒருநாள் அன்சாரியும் செய்யவேண்டும் இது அரபுகாரரின் கட்டளை.யார் சமைக்கிறார்களோ அவர் தான் சாப்பாட்டை பறிமாற வேண்டும். இந்த பறிமாற்றத்தில் அரபுகளுக்கு வைப்பதற்கு முன்னாடியே ஒருதட்டையில் சாப்பாட்டை வைத்து நல்ல துண்டுகளாக கோழி வருவல் அல்லது மீன் வருவல் என்றால் சோற்றுக்கு அடியில் மறைத்து ஒரு துண்டும் சோற்றுக்கு வெளியில் ஒரு துண்டும் வைப்பது எங்கள் இருவரின் அப்போதைய போட்டிச் செயல்.

ஒருநாள் மதியம் நான் சமைத்த மீன் வருவல். முன் சொன்னதுபோல சோற்றுக்கு அடியில் ஒரு துண்டும் சோற்றுக்கு மேல் ஒருதுண்டும் வைத்து எடுத்து போய் எங்கள் ரூமில் அன்சாரிவைத்துவிட்டு வர வேலைகளை முடித்துக் கொண்டு நாங்கள் இருவரும் சாப்பிட செல்ல எனது தட்டையில் சோற்றுக்கு வெளியில் வைத்த மீன் துண்டு காணமல்போக அன்சாரியிடம் கேட்க எனக்கு தெரியாது என்று சொல்ல அவன் தட்டையை பரிசோதிக்க அவன் கோபப்பட அந்த பதினெட்டு வயதில் நாங்கள் இருவரும் சோற்றுதட்டையுடன் கட்டி புரல சப்தம் கேட்டு அரபுகள் ஓடி வர ஒன்னுமே நடக்காத மாதிரி நாங்கள் மேல்மூசு;ச கீழ்மூச்சு வாங்கி நிற்க அங்கு இரைந்து கிடந்த சோற்றைப் பார்த்துவிட்டு அரபுகள் எங்களை திட்ட என் தட்டையில் வைத்த மீன் வருவளை பூனை தூக்கிச் சென்ற செய்தியை அரபு கிழவி சொல்ல நாங்கள் ஒருவரை ஒருவர் கடிந்துக் கொள்ள இப்படி சென்ற அந்த இளமைக் காலத்தை நான் எப்படி மறப்பேன்.

இதுமட்டுமல்ல இன்னும் இருக்கிறது அன்சாரிக்கு சிலவை உண்டாக்க வேண்டும் என்று எனது நண்பன் சிஹாபுதீனிடம் கூற ஆமா எப்படி வைப்பது என்று யோசிக்கையில் அவனுடைய தம்பி ஊரிலிருந்து துபாய் வர இருந்த நேரம் அப்போதெல்லாம் நம்தமிழ்நாட்டு கிராமங்களில் தபால் ஆபிசைத் தவிர தொலைபேசி வேறு எங்கும் இருக்காது. அந்த சமயங்களில் டெலிகிராம் தந்தி கொடுப்பது வழக்கம்.

துபாயிலிருந்து ஊருக்கு செல்வதாக இருந்தாலும் வருதாக இருந்தாலும் நம்மை அழைப்பதற்கு தந்திக் கொடுப்போம் அதைப் பார்த்துதான் ஏர்போர்ட் சென்று அழைத்து வருவது வழக்கம்.

அன்சாரியின் தம்பி துபாய் வந்து இறங்கி ஏர்போரட்;டிலிருந்து அன்சாரி வேலைப்பார்க்கும் அரபு வீட்டுக்கு டெலிபோன் செய்வதை போல சிஹாபு இடம் நீ டெலிபோனில் பேசனும் என்று கூறி செட்டப் செய்தோம்.

மதியம் 3 மணிக்கு எங்களுக்கு ஒய்வு நேரம் அந்த நேரத்தில் சிஹாபுதீன் போன் செய்து அன்சாரியிடம் அவன் தம்பி பெயரைச் சொல்லிப் பேச அன்சாரி பதட்டத்துடன் ஏர்போர்ட்டிலேயே இரு கொஞ்ச நேரத்தில் நான் வந்திடுகிறேன் என்று கூறி பரப்பரப்பாக என்னிடம் செய்தியைச் சொல்லிவிட்டு வா ஏர்போர்ட் போகலாம் என என்னை ஆர்வத்துடன் கூப்பிட சரி சிஹாபுதீனையும் அமைத்துப்போவோம் என்று நான் சொல்ல பக்கத்து தெருவில் வேலைப்பார்க்கும் சிஹாபுதீனை அழைத்துக் கொண்டு டெக்ஸி பிடித்து ஏர்போர்ட் வரும் வரையில் நானும் சிஹாபுதீனும் ஒருவரை யொருவர் பார்த்து சிரித்துக் கொண்டு வந்துச் சேர்ந்தோம்.

நாங்கள் ஏன் சிரிக்கின்றோம் என்று யூகிக்க முடியாத அன்சாரி உண்மையாகவே தனது தம்பி ஏர்போர்ட்டில் நிற்பதாக எண்ணி அங்கும் இங்கும் விமான நிலையத்தில் அலைந்ததைப் பார்த்த எங்களுக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது.

அந்த நேரத்தில் ஏர் இந்தியா விமானமும் பம்பாயிலிருந்து வந்திருந்தது. ஒருமணி நேரத்திற்குப் பின் அன்சாரி ஒரு நபருடன் எங்கள் அருகில் வந்தான்....

தொடர்வோம்......

12 comments:

Anonymous said...

intersting

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

{வரலாற்றுச்} சம்பவங்கள் சுவையாய் செல்கின்றது.
''மீதி வாழைப்பழம் இந்தா இருக்கு; குறையுதே
ஒரு டஜன், எங்கே?''
''அந்த ஒன்னுதான் இது!''

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//முன் சொன்னதுபோல சோற்றுக்கு அடியில் ஒரு துண்டும் சோற்றுக்கு மேல் ஒருதுண்டும் வைத்து எடுத்து போய் எங்கள் ரூமில் அன்சாரிவைத்துவிட்டு வர வேலைகளை முடித்துக் கொண்டு நாங்கள் இருவரும் சாப்பிட செல்ல எனது தட்டையில் சோற்றுக்கு வெளியில் வைத்த மீன் துண்டு காணமல்போக அன்சாரியிடம் கேட்க எனக்கு தெரியாது என்று சொல்ல அவன் தட்டையை பரிசோதிக்க அவன் கோபப்பட அந்த பதினெட்டு வயதில் நாங்கள் இருவரும் சோற்றுதட்டையுடன் கட்டி புரல சப்தம் கேட்டு அரபுகள் ஓடி வர ஒன்னுமே நடக்காத மாதிரி நாங்கள் மேல்மூசு;ச கீழ்மூச்சு வாங்கி நிற்க அங்கு இரைந்து கிடந்த சோற்றைப் பார்த்துவிட்டு அரபுகள் எங்களை திட்ட என் தட்டையில் வைத்த மீன் வருவளை பூனை தூக்கிச் சென்ற செய்தியை அரபு கிழவி சொல்ல நாங்கள் ஒருவரை ஒருவர் கடிந்துக் கொள்ள இப்படி சென்ற அந்த இளமைக் காலத்தை நான் எப்படி மறப்பேன்.//

எவ்வளவு பெரிரிரிய்ய்ய்ய வாக்கியம்?!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சிஹாபுதீன் போன் செய்து அன்சாரியிடம் அவன் தம்பி பெயரைச் சொல்லிப் பேச அன்சாரி பதட்டத்துடன் ஏர்போர்ட்டிலேயே இரு கொஞ்ச நேரத்தில் நான் வந்திடுகிறேன் என்று கூ//

நிறையத்தான் குறும்பு செய்துள்ளீர்கள்.
இதுவே, உங்கள் தம்பி (?) ஏர்போர்ட்டிலிருந்து
பேசுவதாக, அன்சாரி திட்டம் போட்டு,
உங்களுக்கு ஃபோன் வந்திருந்தால்...
# ஒரு கற்பனை!

கிளியனூர் இஸ்மத் said...

//இதுவே, உங்கள் தம்பி (?) ஏர்போர்ட்டிலிருந்து
பேசுவதாக, அன்சாரி திட்டம் போட்டு,
உங்களுக்கு ஃபோன் வந்திருந்தால்...\\

நம்பி இருக்கவே முடியாது ஏன்னா என்தம்பிக்கு அப்போ நான் விசா எடுக்கவில்லையே.

கிளியனூர் இஸ்மத் said...

என்ன நிஜாம்! பெரிய்ய்ய்ய்ய பின்னூட்ட வரலாறு நீங்க படைக்கின்ற மாதிரி இருக்கு.

கிளியனூர் இஸ்மத் said...

ஐயா எனிமௌஸ்! இன்ட்ரஸ்டிங்க இருப்பதாக எழுதிருக்கீங்க மிக்க நன்றி; உங்க பேரையும் சொல்லி இருக்கலாம்.!

கிளியனூர் இஸ்மத் said...

ஒருடஜன் வாழைப்பழத்துக்கு சேம்பில் ஒன்னுதான் நிஜாம்!
நம்மஊரு பூம் வாழைப்பழம் மாதிரி சின்னதாக கற்பனை பண்ணிடுவாங்களோன்னு தான் சிக்கோட்டா படத்த போட்டேன்...அதையும் விட மாட்டிறீங்களே

Unknown said...

இஸ்மத், ஒரு ‘தலைப்புப் புரட்சி’ நடக்கப்போவதென்னவோ உறுதியாகிவிட்டது. ’எனக்கு 30 அமீரகத்திற்கு 39’ தொடர் முடியும் காலத்தில் ‘எனக்கு 31 அமீரகத்திற்கு 40’ என்று மாறலாம். அந்த அளவுக்கு அனுபவப் பரிமாறல்கள் இருக்கும்போல் தெரிகிறதே.. வாழ்க! வளர்க!! தொடர்க!!!

ஸாதிகா said...

அனுபவம் சுவாரஸ்யத்துடன் நல்ல படிப்பினையையும் தோற்றுவிப்பதாக உள்ளது.தொடருங்கள் சகோதரர்.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி சகோதரி ஸாதிகா

பாத்திமா ஜொஹ்ரா said...

funtastic

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....