உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, December 1, 2010

எனக்கு 30 அமீரகத்துக்கு 39

டிசம்பர் 2 இது ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அமீரகத்தின் தேசியதினநாள் ஆனால் எனக்கும் அமீரகத்திற்கும் உறவு ஆரம்பித்தநாள் 1980 டிசம்பர் 2 அப்போது எனக்கு வயது 17.

கல்லூரிக்குள் பதிக்க வேண்டிய கால்களை பாலைவனத்தில் பதித்த அந்த வயதில் என்னிடம் எது இருந்திருக்கும் என்று இன்று நினைவுப் படுத்திப் பார்க்கின்றேன்.

அன்னை ஊட்டிய அமுதத்துடன் அன்னை மொழியாம் தமிழ்மொழியைத் தவிர ரொம்பவும் குறைவான ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு எந்த தைரியத்தில் வந்தேன் என்பது இன்னும் தெரியவில்லை.

வீட்டுவேலைக்கு பெண்கள் மட்டுமல்ல நான் அமீரகம் வந்தபோது என்னைப்போன்ற தமிழ் இளைஞர்கள் பெரும்பாலோர் ஹவுஸ்பாய்கள் தான். இதை இங்குபதிவு செய்வதில் நான் வெட்கப்படவில்லை.

முன் அனுபவமே இல்லாத எனக்கு இந்த வேலையை கற்றுக் கொள்வதற்கு கஸ்டமாக இருக்கவில்லை வேலையுடன் அரபு மொழியையும் கற்றுக் கொண்டேன்.

துபாய் விமானநிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது கண்ணெதிரே தெரிந்த பெரிய கட்டிடம் டிரேட் சென்டர்.(இன்று அது சிறிய கட்டிடமாக ஆகிவிட்டது) எங்கு பார்த்தாலும் மணல் திட்டுகள்.


இந்த 30 ஆண்டுகளில் அமீரகத்தின் வளர்ச்சி அபரிமிதமானது.பாலைவனத்தின் மணல் சோலைவனமாக சொர்க்க பூமியாக மாறிப்போனது.இந்த மாற்றத்திற்கு கடுமையான உழைப்பை இந்தியர்களைப் போல பலநாட்டவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

பாலைவனம் மட்டும் சோலைவனமாக மாறும்போது அதைமாற்றியவர்களின் வாழ்க்கையும் சோலைவனம்தான்.

எத்தனையோ வீடுகளில் கன்னியர்கள் கரையேறினார்கள் பலர் கடனிலிருந்து விடுதலையடைந்தார்கள் வாடகை வீடு சொந்த வீடானது வாகனங்கள் சொந்தமாகின விளைநிலங்கள் வீட்டுமனைகளாகின வங்கிக் கணக்குகள் அதிகரித்தன வாழ்க்கையில் ஆடம்பரங்களும் ஆர்பரித்தன இத்தனையும் இந்த வளைகுடாவிற்குள் நுழைந்தவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல் அன்னிய சிலவானி அதிகரிப்பில் அவர்களின் நாடுகளும் வளம்மடைந்துக் கொண்டிருக்கிறது.

இந்த முப்பது ஆண்டுகளில் என் நிலை என்ன?
கல்லூரி கற்றுத்தரவேண்டிய பாடங்களை பாலைவனம் கற்றுத்தந்தது.
ஹவுஸ்பாய் வேலை ஆனால் அதுதான் எனக்கு கற்றலின் ஆர்வத்தை கற்றுத்தந்தது எனக்குள் தேடலை ஏற்படுத்தியது தாய்மொழியை தழுவதற்கு தடம் அமைத்தது.


அமீரகத்தில் 1980-ல் அறிமுகமான முதல் நண்பன் அத்திக்கடை சிஹாபுதீன் இவனிடமிருந்து கற்றுக் கொண்டது பொறுமை பெற்றுக் கொண்டது நட்பு. அவனுடைய நண்பன் அஜீஸ்ரஹ்மான் சென்னைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான் இவன் நட்பை கடிதங்களில் வளர்த்து வளமாக்கினேன்
இவர்களின் தொடர்புகள் இன்றுமிருக்கிறது.

ஹவுஸ்பாய்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பண்டிகையாய் இருக்கும் அன்று மதியத்திற்கு பிறகு அரைநாள் விடுமுறையுடன் பத்து திரஹம் சிலவுக்கு தருவார்கள் நண்பனுடன் அல்சாப் தியேட்டரில் தமிழ்படம் பார்க்க ஆர்வத்துடன் செல்வோம். வரிசையில் நின்று டிக்கேட் எடுக்கும் பழக்கும் 3ஜி காலத்திற்குள் வந்தும்கூட அன்றும் மரபு மாறவில்லை.

நைப்ரோட் தமிழ் பஜாரில் மாலை 6.00 மணியிலிருந்து திருவிழா கூட்டம்போல் எங்குப் பார்த்தாலும் பிரமச்சாரிகளின் கூட்டமும் கூச்சலுமிருக்கும் மொத்த இந்தியாவையும் வெள்ளிக்கிழமை நைப் பஜாரில் கண்டுகளிக்கலாம்.

இரவு பத்து மணிக்குள் மீண்டும் ஹவுசுக்குள் பாய்கள் சென்றுவிடவேண்டும் நண்பர்களுடன் ஊர்கதைகளை ஒவ்வொருவரும் பறிமாறிக் கொள்வோம் ஊரில் இருக்கும் நண்பர்களின் கடிதங்கள் தங்களையும் ஹவுஸ்பாய்களாக அழைத்துக் கொள்ள வேண்டுவார்கள் விசாவிற்கு பேரம்பேசப்பட்டு வியாபாரம் நடக்கும்.

படிக்க வேண்டிய 17 18 வயது நிரம்பிய இளைஞர்கள் பறப்பதற்கு ஆசைப்பட்டு ஹவுஸ்பாய் வேலைகளில் அகப்பட்டு அவதிப்பட்டவர்களின் கதைகள் ஏராளம்.

அரபிகளின் அடக்கு முறைகளும் மனிதாபிமான மற்ற செயல்முறைகளும் சிலருக்கு முதலாழியாக வாய்த்திருக்கிறது அவர்களின் கதைகளைக் கேட்டால் கண்களில் கண்ணீரல்ல செந்நீர் வரும்.

ஹவுஸ்பாய் வாழ்க்கையில் எனது ஒய்வுநேர பொழுதுபோக்கு புத்தகம் வாசித்தலாக இருந்தது வார இதழ்களை தவறால் வாசிப்போம் சில நேரங்களில் சிறுவயதில் அம்மா சொன்ன கதைகளை நினைவுப் படுத்தி எழுதுவேன்.

அந்த எழுத்துப்பழக்கம் எழுத்தாளனாகவேண்டும் என்ற எண்ணத்தை துளிரவிட்டது.1979 – 80 களில் தமிழகத்தில் பெரும்பாலான இஸ்லாமிய இல்லங்களில் டேப்ரிக்காடரில் கிஸாக்கள் ஒலித்துக் கொண்டிருந்தது இரவு நேரத்தில் அந்த கிஸாக்களை அம்மாவுடன் கேட்பேன் அந்தத் தருணங்களில் மனம் பதிவு செய்த கதைகளை நினைவுப் படுத்தி கதைகளாக எழுதினேன்.

1984 –லில் டெலிபோன்டைரி என்ற நாவலை 140 பக்கங்களில் எழுதி புத்தகமாக்கி துபாயில் தமிழ் கடைகளில் விற்பனைக்கு போட்டேன் அதற்கு விளம்பரம் செய்யவேண்டி அல்சாப் தியேட்டரில் சிலேடு போட்டேன்.

இந்த நாவல் பல நண்பர்களை அறிமுகப்படுத்தியது.எல்லா தரப்பு நண்பர்களுடன் நட்பு இருந்தாலும் மனம் எல்லா நட்புகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருமுறை வெள்ளிக்கிழமை தமிழ்பஜாரில் ஒருநபர் கைகளில் சில புத்தகங்களை வைத்துக் கொண்டு நின்றார் அது என்கண்களை உருத்தியது அவரிடம் சென்று அந்த நூல்களை எங்கு வாங்குனீர்கள் என்று கேட்க ஊரிலிருந்து வரவழைத்தேன் என்றார் படிப்பதற்கு தருகிறீர்களா? என்று கேட்டதும் என்கையில் உள்ள புத்தகங்களை வாங்கிக் கொண்டு கொடுத்தார் அது பெரியவர் ராம்மூர்த்தி என்பவர் எழுதிய மனமே நீவா என்ற நூல்.

இந்த நூல் என்னிடம் ஒரு மாற்றத்தை தேடலை கொடுத்தது.

குறிப்பு – முப்பதாண்டு அமீரக வாழ்க்கை அனுபவங்களை தொடராக தொடர்கிறேன்.

11 comments:

அரவிந்தன் said...

அன்பின் இஸ்மத்,

தொடரை படிக்க மிக்க ஆவலோடு இருக்கிறேன்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Admin said...

வாழ்த்துக்கள்....

கடந்த வாழ்க்கையினை என்றும் நினைவில் வைத்திருப்பவர்கள் ஒரு நாளும் தோற்றதில்லை... இன்னும் இன்னும் உங்கள் வாழ்க்கையும் எழுத்துப்பணியும் சிறக்க என் இதயபூர்வ வாழ்த்துக்கள்!!

- சர்ஹூன் முஹம்மது -
- அபு தாபி -

Rajakamal said...

very rare pepople remembering the past life, you r the one of them, god bless you.

ஸாதிகா said...

சகோதரர் ,அமீரக அனுப்பவத்தை எளிமையுடன் எடுத்தியம்பி மனதினை நெகிழ்வைத்து வீட்டீர்கள்.//எத்தனையோ வீடுகளில் கன்னியர்கள் கரையேறினார்கள் பலர் கடனிலிருந்து விடுதலையடைந்தார்கள் வாடகை வீடு சொந்த வீடானது வாகனங்கள் சொந்தமாகின விளைநிலங்கள் வீட்டுமனைகளாகின வங்கிக் கணக்குகள் அதிகரித்தன வாழ்க்கையில் ஆடம்பரங்களும் ஆர்பரித்தன இத்தனையும் இந்த வளைகுடாவிற்குள் நுழைந்தவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல் அன்னிய சிலவானி அதிகரிப்பில் அவர்களின் நாடுகளும் வளம்மடைந்துக் கொண்டிருக்கிறது/// வரிகள் இனி வரும் இளையவர்களுக்கு கண்டிப்பாக பூஸ்ட் கொடுக்கும்.கஷ்டப்பட்டால்த்தான் மேன்மை அடைய முடியும் என்பதை அழகாய் சொல்லி விட்டீர்கள்.தொடருங்க்கள்.

mohamedali jinnah said...

கருவிலேயே கரு கிடைக்க தாயின் பிரார்த்தனையால் உங்களுக்கு எழுதனையும் கட்டுரையாக வடிக்க
முடிகின்றது , அன்புடன் வாழ்த்துகள் .
இள வயதில் மாப்பிள்ளை, வயது தொடர அழகு கூடுகின்றது. என்றும் இளமை ,எழுத்திலும், பார்வையிலும் .வாரிசை கூட்டி வளமாக வாழுங்கள் .

Prathap Kumar S. said...

இஸ்மத் பாஸ் இப்போதைய நவநாகரீக அமீரகத்தில் இருக்கும் எனக்கு நீங்கள் சொல்வதை படிக்கும்போது ஆசசர்யமாக இருக்கிறது. புத்தகம் வெளியிட்டது, ஸ்லேடு போட்டது...hahah...சுவாரஸ்யம்...
இன்னும் எழுதுங்க...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நீங்கள் கற்றுக் கொண்டதை
எங்களுக்கும் கொடுங்கள்;
நாங்களும் கற்றுக் கொள்கிறோம்.

எஸ்.கே said...

சுவாரசியமாக உள்ளது!

கிளியனூர் இஸ்மத் said...

என்னை உற்சகப்படுத்திய
அரவிந்தன்,
துயரி சர்ஹூன் முஹம்மது,
ராஜாகமால்,
சகோதரி ஸாதிகா,
நீடுர் அலி,
நாஞ்சில் பிரதாப்,
நிஜாமுதீன்,
எஸ்.கே

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//வரிகள் இனி வரும் இளையவர்களுக்கு கண்டிப்பாக பூஸ்ட் கொடுக்கும்.கஷ்டப்பட்டால்த்தான் மேன்மை அடைய முடியும் என்பதை அழகாய் சொல்லி விட்டீர்கள்.தொடருங்க்கள்.//

ரிப்பீட்டு.

சகோ இஸ்மத், அருமையான, எளிமையான எழுத்து நடை. இன்ஷா அல்லாஹ் முடிந்தால் நான் உங்கள் நாவலை படிக்கிறேன். உங்களின் இந்த அனுபவத்தையே பலருக்கு பாடமாக சொல்லலாம் போலிருக்கு. ஏனென்றால் அமீரகத்திற்கு வந்து வீட்டு வேலையில் மாட்டிக் கொண்டோமே என்று புலம்புபவர்களுக்கு மத்தியில் நாவல் வெளியிடுவது என்பது கேட்பதற்கே புத்துணர்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) மிக்க நன்றி

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....