உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, December 26, 2010

ஆடும் பொறுமையும்

சென்ற 24/12/2010 துபாய் வானலை வளர் தமிழ் இலக்கிய அமைப்பின் தமிழ்தேரின் 47வது மாதஇதழ் வெளியீட்டு விழாவில் எனது இலக்கிய நண்பர் கீழைராஸா தனது உரையிலே நான் எழுதிவரும் இந்த பாலை அனுபவ கட்டுரையைப் பற்றி அறிமுகம் கொடுத்தார்.
அவர் கூறிய சிலவரிகள் “எதையும் மறைக்காமல் எழுதிவருகிறார் நானாக இருந்தால் மறைத்துதான் எழுதி இருப்பேன்” - என்று என்னைவிட வெளிப்படையாக அவர் சொன்னவிதம் அவரை உயரப்படுத்தியது.

மறைத்து எழுதினால் அதில் அனுபவம் வெளிப்படாது கற்பனை மிகைத்து கதையாக இருக்கும். எதை மறைப்பது? மறைக்குமளவு அதில் என்ன இருக்கிறது. மறைக்கப்பட வேண்டிய விசயங்கள் எத்தனையோ அம்மணமாக உலாவரும்போது அம்மணமாக சொல்லவேண்டிய விசயங்களுக்கு ஏன் பட்டுத்திரை? தமிழ்தேர் நிகழ்ச்சியில் அறிமுகம் தந்தமைக்கு நன்றி ராஸா.

* அத்திக்கடை சிகாபுதீன் எனக்கு டெலிபோன் செய்து பேசினான். இவன் பேசும்போது
நாசூகா எழுதக்கூடாதா? என்றான்.
செய்த வேலையை சொல்வதில் என்ன நாகரிகம்? நாம் நாகரிகமாக செய்தவேலைகள்தானே அது! இன்று வேலைமாறினாலும் நம்முடைய நினைவில் அது மறையவில்லையே. அதை நினைத்துப்பார்க்கும்போது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது நண்பா!
*************************************************************************************

எனக்கு 30 அமீரகத்திற்கு 39

இது ஒரு பாலை அனுபவம்

நண்பன் சிகாபுதீன் வேலைசெய்யும் அரபியின் உறவினர்ருக்கு ஆள் தேவைப்பட்டதால் அங்கு பணியில் அமர்ந்தேன். இது வீட்டுவேலை அல்ல ஆட்டு மந்தை அதாவது ஆடு வியாபாரம்.
துபாய் ஹமரியா போர்ட் பக்கத்தில் ஆட்டுச் சந்தை இருந்தது பெரும்பாலும் இதில் ஈரானியர்கள் தான் அதிகமாக வேலைசெய்தார்கள் அதில் சில இந்தியர்களில் நானும் ஒருவன்.

ஆட்டுமந்தையில் என்னுடன் பணிப்புரிந்த மதுக்கூர் ஜலீல் இவரை எனது அரபி கேப்டன் என்று தான் அழைப்பார். இவரை மதுக்கூர் மக்கள் எம்ஜியார் என்று அழைப்பார்கள். இவர் எம்ஜிஆரின் தீவிர விசிறி அதனாலேயே இவருக்கு இந்த செல்லப்பெயராம். ஏதாவது நான் எழுதிக் கொண்டே இருப்பதினால் என்னை குருஜி என்று அழைக்கும் பழக்கம் கேப்டனிடம் இருந்தது. இப்பவும் இவர் துபையில் தான் இருக்கிறார் சில தருணங்களில் சந்தித்துக் கொள்வதுண்டு இப்பவும் அதே குருஜி தான்.

பலநாடுகளிலிருந்து ஆடுகள் இறக்குமதி செய்து வணிகம் செய்வோம். பெரும்பாலம் இந்தியா குஜராத்திலிருந்தும் பாக்கிஸ்தானிலிருந்தும் தான் ஆடுகள் அதிகமாக கப்பலில் வரும்.

இந்திய ஆட்டைவிட பாக்கிஸ்தான் ஆடு விலை அதிகம்; அதேபோல் இந்திய ஆட்டைவிட ஆஸ்தேரிலியா ஆட்டின்விலை குறைவு; ஆஸ்தேரிலியா ஆடு கம்பளி போர்த்தியதைபோல இருக்கும் ஆனால் கொழுப்பு ரொம்ப அதிகம் அதனாலேயே இந்தியர்களை அவ்வபோது தாக்குகிறது.

ஹவுஸ்பாய் வேலையைவிட இந்த வேலை பிடித்தமானதாக இருந்தது வெளிஉலகை பார்க்க ஏதுவாக இருந்தது. தீர்க்கதரிசிகள், மகான்கள் எல்லாம் பெரும்பாலும் ஆடுகள் மேய்த்திருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன்; பொறுமையுடையவர்கள் மட்டுமே ஆடுகள் மேய்க்க தகுதியானவர்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்துக் கொண்டேன் அதனாலேயே நீண்டநாள் இந்த வேலையில் நீடிக்கவில்லை.

இந்த பணிகளுக்கிடையே முதன்முதலாக 23வது வயதில் “டெலிபோன் டைரி” என்ற நாவலை எழுதினேன். இது முழுக்க முழுக்க ஆட்டு மந்தைகளுக்கிடையில் எழுதப்பட்ட துப்பறியும் நாவல்.

அதை நூல் வடிவில் கொண்டுவருவதற்கு மயிலாடுதுறை அசோகன் என்ற ஆசிரிய நண்பர் பெரிதும் உதவினார். இன்று அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை அவருடைய தொடர்பு தொடரவுமில்லை. அந்த நாவல் நூலாக கொண்டு வந்து துபையில் பல கடைகளில் விற்பனைக்கு போட்டுள்ளேன். அந்த நூல் சிலரை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் மாற்றி இருக்கிறது.

அப்படி என்ன பெரிய விசேசமான நூல்ன்னு நினைக்கிறீங்களா? எந்த விசேசமுமில்ல இவனெல்லாம் நாவல்ன்னு எதையோ கிறுக்கிருக்கான்னு என்னை விமர்சித்து புனைப்பெயரில் கடிதம் எழுதிய தஞ்சைக்கு அருகில் வல்லத்தைச் சேர்ந்த ஷேக்அப்துல்லா துபையில் நல்ல நண்பனாக மாறினார். எனது நாவலைக்கண்டு அவர் ஒரு கவிதை நூல் வெளியிட்டார்.

எனது சகோதரனின் திருமணத்திற்காக மற்றும் விடுமுறையை கழிப்பதற்கும் தாயகம் செல்ல தயாரானேன் சென்னைக்கு நேரடி விமானம் அப்போது இல்லை.

பம்பாய் (மும்பை) வழி செல்வதற்கு PANAM AIRLINE சில் பயணச்சீட்டு தயாரானது.(இப்போது இந்த விமானச் சேவை இல்லை) இரவு 10.30 மணிக்கு என்னை வழியனுப்ப வந்த நண்பன் சிகாபுதீன் மற்றும் சில நண்பர்களுடன் விமான நிலையத்தில் உடமைகளை எடைபோட்டு விமானத்தில் அமர்வதற்கான இருக்கை எண் அட்டையை பெற்றுக் கொண்டு நண்பர்களிடமிருந்து பிரியா விடைப்பெற்று செல்லுமுன் சிகாபுதீன் சொன்னான் "டேய் எங்க வீட்டுக்கு மறக்காமல் போய்வரனும்" என்று சம்பர்தாயமாக அவன் கூறினாலும் அவனுடைய வீட்டுக்கு வாங்கித்தந்த சாமான்களை கொடுப்பதற்கு மட்டுமல்ல சிகாபுதீனின் அன்பு தகப்பனார் செவத்தப்பிள்ளை முஹம்மது ஹனீபா அவர்களின் அன்பை கடிதத்தின் மூலம் பெற்றவன் என்பதினாலும் அவரை தந்தையாக நான் எண்ணுவதனாலும் கட்டாயம் சென்று வருவேன் என்ற உறுதி மொழியுடன் நண்பர்களிடமிருந்து விடைப்பெற்று சுங்க பரிசோதனைக்கு தாயகம் செல்கிறேன் என்ற சந்தோச எண்ண அலையில் சென்றேன்.

என்னை வழியனுப்பிவிட்டு கனத்த மனதுடன் நண்பர்கள் வீடு திரும்பினார்கள். நான் எல்லா சோதனைகளிலிருந்தும் விடுபட்டு விமானத்தில் அமர்ந்தேன். குறித்த நேரத்தில் விமானம் புறப்பட்டது அரைமணி நேரம் பறந்திருப்பேன் உணவு வழங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென நிறுத்திவிட்டு எல்லோரையும் பெல்ட் போடும்படி அறிவுறுத்தினார்கள் விமானப் பணிப் பெண்களிடம் ஒருவித பதட்டம் தெரிந்தது.

அவசரமாக விமானம் மீண்டும் துபை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது…

ஏதோ பிரச்சனை இருக்கு தொடர்வோம்….

6 comments:

Unknown said...

நல்ல வேளை
//விமானப் பணிப் பெண்களிடம் ஒருவித பதட்டம் தெரிந்தது//
என்று நிறுத்திவிட்டாமல்
//அவசரமாக விமானம் மீண்டும் துபை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது…//
என்று சேர்த்து ’திக்திக்’ குறைத்தீர்கள்.

ஹுஸைனம்மா said...

ம்ம்.. மேலும் ஒரு மகானைப் பெறும் பாக்கியம் இந்தப் பூமிக்கு இல்லை போல... :-)))

அப்போவெல்லாம் அரபியாவிலிருந்து, மும்பை வந்து, பின் சென்னை, பின்னர்தான் ஊர் -இல்லையா?

கிளியனூர் இஸ்மத் said...

கதீம் அண்ணே! அந்த விமானத்துல பயணம் செய்த என்னை விட நீங்க ரொம்ப பயந்துட்டீங்க போங்க.

கிளியனூர் இஸ்மத் said...

சகோதரி ஹுஸைனம்மா!இதையெல்லாம் நா எழுதி நீங்க வாசிக்கனும்னு விதி இருக்கும்போது எப்படி இந்த பூமி இன்னொரு மகானை தாங்கும்...சரிதான்...நன்றி.

ஸாதிகா said...

//எதை மறைப்பது? மறைக்குமளவு அதில் என்ன இருக்கிறது. மறைக்கப்பட வேண்டிய விசயங்கள் எத்தனையோ அம்மணமாக உலாவரும்போது அம்மணமாக சொல்லவேண்டிய விசயங்களுக்கு ஏன் பட்டுத்திரை?// சகோ இப்படியெல்லாம் சிந்திப்பது அனைவராலும் இயலாதது.உஙகள் நேர்மையையும்,துணிச்சலையும் நினைக்கும் பொழுது பாராட்டாமல் இருக்க இயலவில்லை.

//அவசரமாக விமானம் மீண்டும் துபை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது…
// ம்ம்..அப்புறம்....

கிளியனூர் இஸ்மத் said...

சகோதரி உங்களின் ஆழமான படிப்பியல் என்னை வியக்க வைக்கிறது...நன்றி

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....