
காலம் பொன்போன்றது என்பது பழமொழி ஆனால் அது வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய வழியும் கூட.பலருக்கும் நேரந்தவறியதினால் ஏற்பட்ட கஸ்டங்கள் நிறையவே இருக்கும்.
குறிப்பிட்ட நேரத்தில் செல்லாததால் வேலையை இழந்திருப்பார்கள் சிலர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாததால் உயிரும் போயிருக்கும்.
இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நேரத்தை மதிக்காத காரணத்தினால் பலருக்கு தவறிபோயிருக்கிறது. இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
சில வருடங்களுக்கு முன் பதினைந்து தினங்கள் விடுமுறையில் தாயகம் செல்ல ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து ஏர்அரேபியா பட்ஜட்விமானத்தில் டிக்கேட் போட்டிருந்தேன். இரவு 10.45 க்கு விமானம் புறப்படும் நேரம். பயணிகள் மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இருக்கவேண்டும் என்பது விதிமுறை.
நான் துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு செல்வதற்கு எனது மைத்துனரிடம் ஏழு மணிக்கு வரச் சொல்லியிருந்தேன். அவர் ரென்ட்டிய காரில்(Rent a car) பணிப்புரிவதால் அவரிடம் எப்போதும் கார் கைவசம் இருந்துக் கொண்டிருக்கும்.
அன்று காலையிலிருந்து மிதமான மழை பெய்துக் கொண்டிருந்தது.மதியம் ஒரு மணிக்கெல்லாம் பணியிலிருந்து அறைக்கு வந்தும் விட்டேன்.மழை நின்றபாடில்லை மாலை ஐந்து மணிக்கு எனது மைத்துனருக்கு டெலிபோன் செய்து ஆறுமணிக்கெல்லாம் நீ வந்துவிடு என்றேன்.
தற்போது கையில் கார் இல்லை ஏழுமணிக்கு தான் கார் வரும் வந்ததும் வருகிறேன் என்றார்.நானும் சரி எப்படியும் ஏழு மணிக்கு வந்துவிடுவார் ஏழுக்கு புறப்பட்டாலும் எட்டு அல்லது ஒன்பது மணிக்குள் விமான நிலையம் சென்றுவிடலாம் புறப்படுவது 10.45க்குத்தானே என்று அலட்சியமாக இருந்தேன்.
மணி 6.45 ஆகிவிட்டது மைத்துனருக்கு டெலிபோன் செய்தேன். இன்னும் கார் வரவில்லை ஏதோ ஓரிடத்தில் டிராப்பிக்கில் மாட்டி இருக்கிறார் அதனால் காரை எதிர்பார்க்க வேண்டாம் என்றார். எனக்கு கோபம் வந்தது இதை முன்னாடியே நீ சொல்லி இருக்கலாமே என்று அவரிடம் நொந்துக் கொண்டு அவசரமாக டெக்ஸியை தேடினேன். அன்று மழை பெய்ததால் எல்லா டெக்ஸியும் பயணிகளுடன் சென்றது கிடைக்கவில்லை.
உடனே எனது பக்கத்திலுள்ள நண்பரிடம் தொடர்புக் கொண்டு அவருடைய காரை எடுத்துக் கொண்டு போக எனது மைத்துனரை அழைத்து நாங்கள் புறப்படுவதற்குள் மணி 7.35தை தாண்டி விட்டது.

துபாய் ஷார்ஜா பிரதான சாலையில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்க அதனால் பல கார்கள் அதில் சிக்கி ஸ்டார்ட் ஆகாமல் திணறிக் கொண்டிருந்தது. அதனால் டிராப்பிக் ஜாம் மாலை ஐந்து மணியிலிருந்து பல வழிச் சாலைகளும் அடைப்பட்டு ஆங்காங்கே கார்கள் பல மைல் தூரத்திற்கு நின்றுக் கொண்டிருந்தன.
நாங்களும் நெரிசலில் மாட்டி தவித்துக் கொண்டிருந்தோம். இன்ஜ் பை இன்ஜ்சாக கார் நகர்ந்தது. நேரம் கடந்துக் கொண்டிருக்க அந்தக் குளிரில் எனக்கு நன்றாக வேர்வை வேர்த்தது.
விமானத்தை பிடித்துவிடுவோமா என்ற சந்தேக கேள்வி என்னுள் எழுந்தது. இது பட்ஜெட் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றால் நம்முடைய பணம் திரும்ப கிடைக்காது இதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.
ஒருவழியாக டிராப்பிக்கை கடந்து விமான நிலையத்தை அடைந்தபோது நேரம் 10.30மணி.சென்னை கவுண்டர் மூடப்பட்டிருந்தது அங்கயே உள்ள ஏர்அரேபியா அலுவலகத்திற்கு சென்றேன் கூட்டமாக இருந்தது என்னைப்போலவே பலரும் டிராப்பிக்கில் மாட்டி தாமதமாகத்தான் வந்துள்ளார்கள். சென்னை செல்லக்கூடியவர்கள் 15 நபர்கள் இருந்தோம்.
அதிகாரியிடம் பேசினோம் விமானம் புறப்பட இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கிறது அதனால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் சரியான நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் மழைப்பெய்வதால் இன்னும் ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
நொந்துபோய் அமர்ந்திருந்தோம் விமானத்தை விட்டது ஒருபுறம் என்றாலும் பணம் திரும்பக் கிடைக்காதே என்ற வருத்தம் மறுபுறம்.என்ன செய்வது என்று என்னையே நான் நொந்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஏர்அரேபியா விமான அதிகாரி எங்களை அழைத்து உங்கள் அனைவருக்கும் இந்த மழையின் காரணமாக விமான டிக்கேட்டை மறுபடியும் பயணிக்கும் வாய்ப்பை கொடுக்கின்றோம் நாளை உங்கள் தொலைபேசிக்கு அழைப்பு வரும் உங்கள் பயணத்தேதியை உறுதி செய்துக் கொள்ளுங்கள் என்றார் தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போனதே என்று நிம்மதியுடன் மகிழ்சியாக வீட்டுக்கு புறப்பட்டோம்.
முப்பதாண்டு அனுபவத்தில் இது போன்ற நிகழ்வு இரண்டாவது முறையாக இரண்டு மாதங்களுக்கு முன் ஜெட்ஏர்வேஸ்சில் ஏற்பட்டது.
நானும் துணைவியாரும் அவசரவேலையாக சென்னைக்கு கிளம்பினோம் 11.30 மணி விமானத்திற்கு 10.30மணிக்கு ஜெட் விமான கவுண்டருக்கு வந்துவிட்டோம் ஆனால் கவுண்டர் குளோஸ் செய்துவிட்டோம் என்று கூறிவிட்டார்கள்.இது எங்களுடைய அலட்சியம் தான் காரணம் இம்முறை மழை இல்லை.
சரியானபடி நேரத்தை மதித்திருந்தால் நமது பயணமும் சரியானபடி நடந்திருக்கும் அலட்சியத்தினால் பயணமும் ரத்தாகிவிட்டது மன உலைச்சல் இரத்த அழுத்தம் தேவையில்லாத குழப்பம் இத்தோடு முடிந்துவிட்டதா
நம்மை அழைப்பதற்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் காத்துக்கிடக்க அவர்களுடைய நேரம் அவர்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனத்தின் வாடகை இப்படி சூழலையே இந்த நேரம் தவறுவதினால் மாற்றிவிடுகிறது.
இது பயணத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பொறுந்தும்.
கொடுத்த வாக்கையும் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தையும் சரியாக பின் பற்றவேண்டும்.
கண்டிப்பாக இந்த கட்டுரை எனக்கு நானே எழுதிக்கொண்டது.