உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, January 2, 2011

பாதுகாப்பில்லாத சுதந்திரத்தாய்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் 2011 ல் புதுப்பொலிவுடன் நாம்மலர்வோம்…

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 9

இது ஒரு பாலை அனுபவம்

அவசரமாக விமானம் மீண்டும் துபை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது ஏதோ சிறிய பிரச்சனை அதை ஒருமணி நேரத்தில் சரிசெய்துக் கொண்டு நமது பயணத்தை தொடரவோம் என்று அறிவிப்பு செய்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்குப்பின் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் ஓய்வு எடுங்கள் என்று கூறி இறக்கிவிட்டார்கள். ஓய்வில் அமர்ந்த எனக்கு உறக்கம் வரவே உறங்கிப்போனேன் சில மணிநேரங்கள் நன்றாக உறங்கிய எனக்கு திடீரென விழித்துப் பார்க்க என்னுடன் விமானத்தில் வந்த ஒருவரையும் அங்கு காணவில்லை.

ஆஹா…நம்மள தவிக்கவிட்டுட்டு பறந்துட்டாங்களேன்னு என்னை நானே நொந்துக் கொண்டு செய்வதறியாது திண்டாடி அங்குமிங்கும் அழைந்த எனக்கு ஒரு பெரிய வரிசையில் பயணிகள் நிற்பதைக் கண்டு எனக்கு நிம்மதி பிறந்தது.

அந்த வரிசையில் நானும் என்ன ஏது என்று கேட்காமல் நின்றேன். இறுதியாக அந்த வரிசை எங்களின் பாஸ்போர்ட்களை சேகரித்துக் கொண்டிருந்தது அப்போதுதான் வாய்திறந்து ஏன் என்று கேட்க விஸா கேன்சல் ஆகாதவர்கள் தங்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டு மதியம் 2.00 மணிக்கு வந்தால்போதும் என்று அதிகாலை 4.00 மணிக்கு கூறினார்கள்.

நானும் பலரைப்போல பாஸ்போர்ட்டை கொடுத்து விட்டு நண்பன் சிகாபுதீன் ரூமிற்கு சென்று கதவைதட்ட அவன் திறப்பதற்கு அஞ்ச பல சத்தியங்களை சொல்லி திறந்துவிடக்கோரி திறந்த அவனுக்கு பெருத்த ஆச்சர்யம் அதிர்ச்சி.

நடந்த விசயங்களை சொன்னதும் மதியம் சாப்பாட்டைக் கொடுத்து என்னை மீண்டும் விமானம் நிலையம் அனுப்பி வைத்தான். மாலை ஆறுமணிக்கு விமானத்தில் அமர்ந்து அது புறப்படுவதற்கு முன் டமாரென சப்தம் வரவே பயணிகள் கூச்சலிட்டார்கள் மீண்டும் அந்த விமானம் ஓரங்கட்டப்பட்டு விமான நிலையத்திற்குள் அனைவரையும் போகச் சொல்ல அப்போதுதான் பலரும் சப்தமாக பேசினார்கள்.

வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பார்களே அப்படி வாய்உள்ளவர்கள் ஏர்லைசன்கார்களிடம் சண்டைபிடித்து வேறு விமானத்தில் பறந்தார்கள். என்னைப்போன்ற வேடிக்கை மனிதர்கள் சிலர் எப்போதும்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
அடுத்தது என்ன என்பதை தெரிந்துக் கொள்ள முயற்சி செய்தேன் ஏர்லைன்ஸ் பணிப்பெண் கூறினாள் இன்று இரவு நீங்கள் அனைவரும் தங்குவதற்கு ஹயாத் ரிஜென்ஸி ஹோட்டல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இன்னும் சற்று நேரத்தில் உங்களை அழைத்துச் செல்வோம் நாளை காலையில் அமெரிக்காவிலிருந்து புதிய விமானம் வருகிறது அதில் நீங்கள் அனைவரும் பத்திரமாக அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்றார்கள்.

அவ்வளவு பெரிய ஹோட்டலில் தங்குவதற்கு ஆசையோ ஆவலோ என்னிடம் இல்லை ஆனால் இப்படியொரு வாய்ப்பை இறைவன் தந்திருக்கிறான் அதை மறுக்க முடியுமா என்ன?
எனது நண்பனுக்கு மிக்க சந்தோசம் அவனே இந்த ஹோட்டலில் தங்கியதைப்போன்ற உணர்வைப்பெற்றான்.

ஹயாத் ரிஜென்ஸி ஹோட்டலின் சுழற்சி உணவகத்தில் இரவு உணவருந்திவிட்டு துபையின் அழகை கண்டபோது இருட்டாகவே இருந்தது. அன்று இருண்டு போயிருந்த பலருடைய வாழ்க்கைக்கு துபை ஒளிகொடுத்து இன்று பிராகசப்படுத்திக் கொண்டிருக்கிறது தன் நகரத்தைப்போல என்றாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வளர்ச்சி என்பது அவர்கள் சென்ற வழியைப்பொருத்தும் இருக்கிறது.

மறுநாள் காலை 8.00 மணிக்கு எங்களை மீண்டும் விமான நிலையம் அழைத்துப்போக புதிய விமானம் அமெரிக்காவிலிருந்து காலை 10.00 மணிக்கு வந்து எங்களை பம்பாய் நகரத்தில் கொண்டுச் சேர்த்தது இத்தனை ஆண்டு அனுபவத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்ததில்லை.
அங்கிருந்து சென்னை வந்துச் சேர்ந்தது பெரும்பாடு சென்னையிலிருந்து தனி ஆளாக வீடு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஏதோ அரபு நாட்டுல காசு ரோட்டிலே கிடந்து பொறுக்கிட்டு வருகிறமாதிரி நின்னவன், போறவன், பார்த்தவன், பேசினவன்னு காசை கறப்பதிலேயே குறியாக இருந்தார்கள். இதுமாதிரி சிமரங்களிலிருந்து விடுபடுவதற்குதான் உறவினர்கள் தங்கள் ஊர்களிலிருந்து வாடகைக் கார் அல்லது சொந்த வாகனத்துடன் வந்து அழைத்துச் செல்கிறார்கள்.

தற்போது சில டிராவல்ஸ்கள் அந்த வேலைகளை செய்துக் கொண்டும் வருகிறது. பாதுகாப்பு என்பது பிழைக்கபோன இடத்தில் கிடைக்குமளவு நம் சுதந்திர தாய் நாட்டில் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம்.

இது முப்பது ஆண்டுமுன்னாடி நடந்தது மட்டுமல்ல இன்றும் தனிமனித பாதுகாப்பு என்பது நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இது போன்ற பல உண்மைகளை இன்னும் பார்ப்போம்…

2 comments:

வடுவூர் குமார் said...

துபை - இன்னும் இருட்டு அகலவில்லையா? கேட்கவே வருத்தமாக இருக்கு.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

பிரமாதமான எழுத்துநடை.

//ஏதோ அரபு நாட்டுல காசு ரோட்டிலே கிடந்து பொறுக்கிட்டு வருகிறமாதிரி நின்னவன், போறவன், பார்த்தவன், பேசினவன்னு காசை கறப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.//

நிதர்சனமான உண்மை.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....