உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, April 6, 2011

தரம் தரமாக இருக்கும் வரையில் தரத்தை யாராலும் குறைக்க முடியாது!

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 14

இது ஒரு பாலை அனுபவம்

ஹவுஸ்பாய் பணியிலிருந்து முதன்முதலாக வியாபாரத்தில் சேல்ஸ்மேன் பணிக்கு மாற்றத்தை கொடுத்தவன் நண்பன் சிஹாபுதீன்.

பூதமங்கலம் அப்துல்கரீம் சிஹாபுதீனுக்கு தெரிந்த நண்பர். அவர் பணிப்புரியும் இமிட்டேசன் ஜீவல்லரி கடையில் எனக்கு வேலைகிடைக்க துபாய் அல்குரேயர் சென்டருக்குள் நுழைந்தேன்.
அப்போது எனக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் மனமெல்லாம் மனைவியின் மணம் வீசியது.காதல் என்னிடம் கதை படித்தது.

என்ன வாழ்க்கை இது இப்படிதான் வாழ வேண்டுமோ என்றெல்லாம் மனம் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் புதிய அறிமுகங்களை நான் எழுதிய நாவல் டெலிபோன்டைரி எனக்கு கொடுத்தது.

அல்குரேயர் சென்டருக்குள் ஐநூறுக்கும் அதிகமான கடைகள் இருந்தன.பல கடைகளில் விற்பனையாளர்களாக தமிழர்கள் பணிபுரிந்தார்கள்.

அப்படித்தான் ஜெய்னா ஜீவல்லரியில் பணிப்புரிந்த மூவருடைய அறிமுகம் கிடைத்தது. ஆயங்குடி இனியவன் ஹாஜிமுஹம்மது, கீழக்கரை அபுதாஹிர், அத்திக்கடை ஹாஜா.
இனியவனின் சந்திப்பு இலக்கியம் சார்ந்திருந்தது அந்த தருணத்தில் நம்பிக்கை என்ற கையேட்டு பத்திரிக்கையை துவங்கினார் அதில் என்னை இணைத்துக் கொண்டார் அதில் கவிதைகள் எழுதினேன். ஆனால் இனியவனின் வேகம் அசுரமானதாக இருந்தது.
இன்று அவர் டோஹா கத்தாரில் பணியில் வணிகத்தில் தலைசிறந்து விளங்குகிறார் பன்மொழிகளை கற்று பலரிடமும் பழகுகிறார் அவரிடம் தமிழ்தாகம் தழைத்திருந்தது அத்தருணங்களில் எனது மெய்ஞ்ஞானசபைக்கு அழைத்துச் சென்றேன் ஆனால் மெய்ஞ்ஞானம் மறைந்துக் கொண்டு அவரிடம் கேள்வி ஞானம் முன்னின்றது.அதனால் தான் சொன்னேன் ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

கீழக்கரை அபுதாஹிர் என் எழுத்தின் மூலமே இணைந்தவர் என் வாழ்க்கையின் திருப்பு முனை இவர்தான். இவருடைய நண்பர் ஹிலால் முஹம்மதின் அறிமுகம் பெற்றுத்தந்தார். பணிமுடிந்த தருணங்களில் இரவில் ஒன்றுக்கூடுவோம் ஞானம் பேசுவோம் அவர்களுக்கு மத்தியில் நான் இளையவன் ஆனாலும் அதிகமாக பேசி இருக்கிறேன்.

அந்த ஞான நட்புதான் நகைக்கடையில் பணியமர்த்தி தந்தது என்று கூறுவதில் சந்தோசமடைகிறேன்.

நட்பு எல்லோருக்கும் உண்டாகலாம் ஆனால் எப்படி உண்டானது என்பதை பொருத்தே அந்த நட்பின் வலிமை நிறைந்திருக்கும் மனதில் என்றும் மலர்ந்திருக்கும். ஆனால் எனக்கு இவர்களிடம் மெய்ஞ்ஞானத் தேடலில் அதைப்பற்றிய வாதாடலில் உண்டானது.

ஞானம் நாடியவர்களுக்கு தான் கிடைக்கும்.

நம் கையில் கிடைத்திருக்கும் கல்லை கூலாங்கல் என தூக்கி வீசுவதற்கு எத்தனிப்போம் ஆனால் மகான்கள் அதில் வைரம் இருப்பதை உணர்த்துவார்கள்.
நாம் இறைவனை எங்கேயோ தூரமாக வைத்திருப்போம் ஆனால் மகான்கள் இறைவனை நம் பிடரியின் நரம்பிற்கும் சமீபமாக இருப்பதை உணர்த்துவார்கள்.

ஞானவேட்கை இருந்தாலேயொலிய அதைப்பற்றி பேச அல்லது அதைக் கேட்கமுடியாது.மகான்களிடம் படித்துக் கொண்டிருப்பவர்கள் தான் ஞானிகள்.
அந்த ஞானவேட்கை நிறைந்தவர்களாக திகழ்ந்தவர்கள் சகோதரர்கள் ஹிலால் மற்றும் அபுதாஹிர் இருவரும்.

நான் பணிப்புரிந்த அல்குரேயரில் பணி இழந்த போது ஹிலால் மற்றும் அபுதாஹிர் அவர்கள் என்னை நகைக்கடையில் பணியமர்த்த என்னிடம் ஒப்புதல் கேட்டார்கள். இரண்டு தினங்கள் அவகாசம் கேட்டேன். என்னிடம் பயம் நிறைந்திருந்தது என்னை தரம் குறைத்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தது.அச்சமயத்தில் ஹிலால் அவர்களின் தைரியமான வார்த்தைகள்தான் இன்றுவரையில் நகைக்கடையில் நடமாட வைத்துக்கொண்டிருக்கிறது.

நாம் தரமாக இருக்கும் வரையில் யாராலும் நம்தரத்தை குறைத்துவிட முடியாது வேண்டுமானால் உரசி பார்க்கலாம்.

நல்ல நட்புதான் ஒரு நல்லவேளையை பெற்றுத்தந்திருக்கிறது.தங்கக் கடையில் நுழைந்ததும் எங்களின் சந்திப்பில் இடைவெளி ஏற்பட்டது அது எனக்கு பணியினால் ஏற்பட்ட பளுவினாலும் ஹிலால், அபுதாஹிர் அவர்களுக்கு இறைத்தேடலின் சிந்தனையிலும் இடைவெளி நீண்டது.

ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் அவ்வபோது முகமுன் சந்திக்கொள்வோம் ஆனால் ஹிலால் அதிகமான பொருள் சம்பாதித்தளவு அருளையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். போதுமென்ற மனம் நிறைந்ததால் தனது இறை(காதல்) நேச வாழ்க்கைக்காக அமீரக வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தாய் மண்ணில் நிரந்தரமாக பாதம் பதித்துவிட்டார்.

அபுதாஹிர் அவர்கள் பி.பி.ஜீவல்லரியை நிர்வகித்து வருகிறார் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது நேற்றைய தினம் அவரை சந்தித்து உரையாடினேன். எங்களின் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டோம்.

இப்படிபட்ட தூய்மையான நண்பர்களை கிடைக்க செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஞானம் கற்றுக் கொள்ளுங்கள் நாம் ஞானியாக அல்ல மனிதனாக வாழ்வோம்.!

தொடர்வோம்...

6 comments:

Sankar Gurusamy said...

//ஞானவேட்கை இருந்தாலேயொலிய அதைப்பற்றி பேச அல்லது அதைக் கேட்கமுடியாது.//

சத்தியமான வார்த்தைகள்.

http://anubhudhi.blogspot.com/

கிளியனூர் இஸ்மத் said...

மிக்க நன்றி

ஜோதிஜி said...

கடைசி வரிகள் அற்புதம். நிஜ வாழ்வில் கடை பிடித்துக் கொண்டிருப்பதும் கூட.

nidurali said...

நல்ல கட்டுரை .படித்து பயன் அடைந்து கொள்வது மிகவும் சிறப்பு . மற்றவருக்கும் அனுப்பி வாழ்வில் வளம் நாட முயல்வது நல்லது. உழைப்பின் நலன் உழைத்தவரின் அனுபவம் பேச வைக்கும்.முயற்சி முன்னேற்றத்தின் வழி காட்டி,வாசற்படி.

கிளியனூர் இஸ்மத் said...

//கடைசி வரிகள் அற்புதம். நிஜ வாழ்வில் கடை பிடித்துக் கொண்டிருப்பதும் கூட.//

ஜோதிஜி உங்களின் இந்த வரிகள் சந்தோசத்தை அளிக்ககிறது.

கிளியனூர் இஸ்மத் said...

நீடுர் அலி அண்ணன்! உங்களைப்போன்ற மூத்தவர்களிடமிருந்து நற்சொல்பெறுவது நலமே எனக்கு மிக்க நன்றி.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....