
அமீரகத்தில் கோடைக்காலம் துவங்கியாச்சு வேர்வைக்காக நடக்க வேண்டிய அவசியமில்லை சும்மா இரண்டு நிமிடம் நின்றாலே நம் உடைகள் வேர்வையால் நனைந்து விடும். இந்த ஆண்டு கோடையின் துவக்கம் கொடூரகமாக இருக்கிறது.ஜஶலை முதல் வாரத்திலிருந்து பள்ளிகளுக்கு இரண்டு மாதங்கள் விடுமுறை துவங்க இருக்கிறது.
குழந்தைகள் கோடைக்கால விடுமுறையில் அமீரகத்தில் இருப்பதை விரும்புவதில்லை. தங்களின் நாட்டிற்கு செல்ல மிகவும் விரும்புகிறார்கள். நாங்கள் குடும்பத்துடன் ஆண்டுதோறும் இந்தியாவிற்கு சென்று விட்டு ஒரு மாதத்தில் நான் அமீரகத்திற்கு மீண்டு விடுவேன். ஆனால் எனது குடும்பத்தார்கள் இரண்டு மாதம் முழுசாக அங்கு இருந்து விட்டு தான் வருவார்கள்.
ஒரு மாறுதலுக்காக எனது துணைவியார் இந்த ஆண்டு தாயகம் செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால் நான்காவது படிக்கும் எனது இளைய மகளோ கட்டாயமாக ஊருக்கு போய்தான் ஆகவேண்டும் என்று கூறினாள். ஏன் போகனும் என்று கேட்டதற்கு உறவுகளை பார்க்க வேண்டும் அதாவது பாட்டிம்மா அத்தாவுடைய அம்மா அம்மாவுடைய அம்மா இவர்கள் தங்கள் பேரன் பேத்திகளுக்கு கொடுக்ககூடிய அன்பை இந்த குழந்தைகள் மிஸ் பண்ண விரும்புவதில்லை. அதுமட்டுமில்லை உறவுக்காரர்களின் குழந்தைகளுடன் விளையாடுவது ஊர்சுற்றுவது இப்படி நிறைய விசயங்களுக்காக இந்த குழந்தைகள் தாயகத்தை பெரிதும் விரும்புகிறார்கள்.
இவர்களுக்கா வேண்டி ஆண்டுதோறும் தாயகம் சென்று வருவது வழமையாக இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு நம்தாய் நாட்டின் இயல்பையும் இயற்கையையும் காட்டவேண்டியது பெற்றோர்களின் கடமையாகவும் இருக்கிறது. அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்பு நம் நாட்டில் இல்லை என்றாலும் நம் தாய்நாட்டின் சுவாசத்தை வளரும் குழந்தைகளுக்கு நாம் ஊட்டியே ஆகவேண்டும். வளைகுடா போன்ற நாடுகளில் எத்தனை ஆண்டுகள் பணிப்புரிந்தாலும் அந்த நாட்டின் குடியுரிமைப் பெற்றவராக நாம் ஆகமுடியாது. எந்த நேரத்திலும் நாம் நம் தாய் நாட்டிற்கு அனுப்பப்படுவோம் என்பது நிதர்சனம். அதை உணர்ந்து நாம் குழந்தைகளை தயார்படுத்த வேண்டும்.
சென்ற ஆண்டு அமீரக கோடைவிடுமுறையில் வடஇந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்ட எனது பிள்ளைகள் தங்களின் பாடத்தில் படித்ததை நேரடியாக காண்கின்ற போது அளவிலா ஆனந்தம் கொண்டார்கள்.
சுற்றுலா பெற்றோர்களுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. குழந்தைகளுடன் நாம் வாழ்ந்தாலும் குழந்தைகளுடன் நாம் முழு நேரத்தை கழிப்பதில்லை ஆனால் சுற்றுலா நமது முழு நேரத்தை குழந்தைகளுடன் கழிப்பதற்கு வாய்ப்பைத் தருகிறது. நம் வசதிக்கேற்ப ஆண்டுதோறும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதினால் பணம் சிலவானாலும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.
இந்த ஆண்டு கேரளா பக்கம் சுற்றுலா சென்றுவர உள்ளேன் வழக்கம் போல சுற்றுலா பதிவு எழுதுவேன்.
நிறைய திட்டங்களுடன் இந்த விடுமுறை நாட்களை கழிப்பதற்கு ஆயத்தமாகி உள்ளேன் எனது திட்டங்கள் இறைவனின் அருளால் நலமாய் நடந்தேர தாங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.

எப்பொழுதும் விடுமுறையில் ஊருக்கு செல்லும்போது உறவினர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்கு அமீரகத்திலிருந்து சாமான்களை வாங்கி கட்டிக்கொண்டு அதற்கு தனியாக லக்கேஜ் சார்ஜ் கொடுத்தும் சில நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் கஸ்டம்ஸில் தீர்வை கட்டியும் பெரிய போராட்டம்போல வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ( இப்போதும் சிலர் இப்படிதான் வருகிறார்கள்) ஆனால் சமீபகாலமாக எல்லா சாமான்களும் சென்னையிலேயே அமீரக விலைக்கும் அதைவிட குறைவாகவும் கிடைக்கிறது.
பெண்களுகான ஆடைகள், சிறுவர், சிறுமிகள், ஆண்களுக்கான சட்டை, டவுசர் இப்படி அனைத்துமே அங்கு கிடைப்பதால் நாம் அமீரகத்தில் அலைந்து திரிந்து பொருளை வாங்கிக் கொண்டு ஏர்போர்ட்டில் லக்கேஜ் கட்டி பணத்தை விரயம் செய்வதை விட, சென்னையில் தி நகருக்கு சென்று சில மணி நேரங்களில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு அழகாக வீடுபோய் சேர்ந்துவிடலாம்.
இதனால் நமக்கு நேரம், மனஉலச்சல், பணவிரயம் எல்லாம் மிச்சப்படும்.

என்னத்தான் இருந்தாலும் எங்க கிராமத்து பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. கட்ட விலக்கமாறாக இருந்தாலும் கப்பல் விலக்கமாறாக இருக்கனும்னு சொல்லுவாங்க. நாம மாறினாலும் இந்த பழமொழி மாறாது.
இந்த பதிவிற்கு பின் ஊர் சென்று பதிவு எழுதலாம் என எண்ணமிருக்கிறது அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப. மயிலாடுதுறை பதிவர்களை சந்திக்க ஆவல் தொடர்புக் கொள்ளுங்கள். 9486718827 இம் மாதம் 20 தேதிக்குபின் மொபைல் ரிங் ஆகும்.நன்றி