உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, October 6, 2011

கல்லூரி மாணவிகளோடு கிஸ்கிந்தா


நீண்ட நாட்களுக்கு பிறகு...

தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர் எழுதி, அதை தொடர முடியாமல் படர்ந்து விட்டேன். இந்த சோர்வு எல்லோருக்கும் வரலாம், ஆனால் இந்த நாட்களை வீணாக்கி விடவில்லை வீணையாக்கி விடுவேன்.

எழுதுவது ஒரு கலை நம்மருகில் பதில் பேசாத நண்பனை அமரவைத்து, நம் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பது போல, எண்ணத்திற்கும், எழுத்திற்கும் மத்தியில் எது வேண்டுமானாலும் சிந்திக்கலாம், எழுதலாம், எழுதியதை சிதறாமல் திருத்தலாம் திருந்தலாம் எழுத்து மனித வாழ்க்கையின் வடிகால்.


அந்தக் கால்கள் எங்கெல்லாம் நடந்ததோ, நலிந்ததோ, ஒடிந்ததோ, மடிந்ததோ அவைகள் அனைத்தும் பலருடைய வரலாறாக வீருகொண்டு எழுந்து பலருக்கு அது படிப்பினையாக இன்றும், என்றும் விளங்கிக் கொண்டிருப்பது நம் பாரதத்தில் மட்டுமல்ல பறந்த உலகெங்கிலும்…

இப்ப என்னதான் சொல்ல வறீங்க என்று நீங்கள் கேட்பதை உணர்கிறேன்.

தினம், தினம் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை நிறைய சொல்லலாம், நிறையச் சொல்லி உங்களை மறைய வைப்பதை விட, குறையச் சொல்லி உங்களுடன் நானும் விரைய வருகிறேன்… இதை முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் தலைப்பின் தொடர்ச்சியாக எண்ணுகிறேன்.

இந்த முறை விடுமுறையில் தாயகம் சென்றிருந்தபோது என் குழந்தைகளுடன் “தீம்பார்க்” செல்ல தீர்மானித்தோம்.
இன்னும் கிராம புறங்களில் “தீம்பார்க்” உருவாக வில்லை. தொலைக்காட்சி விளம்பரங்களில் அதை பார்த்துக் கொண்டிருக்கும் கிராமவாசிகள் இன்னும் அதைப் பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் குட்டையில், குளத்தில் குளிக்கும் சுகம் இந்த பார்க்குகளில் கிடைக்குமா? சில பெருசுகள் விட்ட பெருமூச்சு… (குட்டையில் குளத்தில் இப்போ தண்ணீர் இல்லையே) சில ஆண்டுகளில் கிராம புறங்களிலும் “தீம்பார்க்” உருவாகலாம்.

துபாய் செல்ல என்னை வழியனுப்பும்போது இரு தினங்களுக்கு முன்பாகவே சென்னைக்குச் சென்று "தீம்பார்க்" போக முடிவெடுத்தோம்.

மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு ரதிமீனா சொகுசு பேருந்தில் செல்ல வேண்டுமென்பது அம்மணியின் நீண்டநாள் விருப்பம். அது நிறைவேற்றப்பட்டது.

திங்கள் காலையில் "பாஸ்ட் டிரேக்" நிறுவனத்தின் காரை அமர்த்திக் கொண்டு எங்கள் குழு புறப்பட்டது அதில் எனது சகலை பையனும் (கல்லூரி மாணவர்) நான் செல்லாத இடமான “குயின்லேண்ட்” செல்ல தீர்மானித்தேன்.

பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செல்ல வேண்டும் என்று ஓட்டுனருக்கு உத்தரவிட தாம்பரத்தில் வங்கிப்பணியை முடித்துக் கொண்டு பத்து மணிக்கு புறப்பட்டு பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று சேரும்போது 11 மணியை தாண்டி விட்டது.

சென்ற காரில் ஏசி இல்லாததினால் ஜஶலையிலும் அக்னி நட்சத்திரம் போல சென்னையின் தட்பவெட்பம் எங்களை வறுத்துக் கொண்டிருந்தது.

குயிண்லேண்டை கண்டதும் எனது குட்டீஸ்களுக்கு மித்த சந்தோசம் காரில் அமர்ந்துக் கொண்டே நீச்சலடித்தார்கள். காரைவிட்டு இறங்கி கவுண்டருக்கு சென்றால் அங்கு பெரிய பலகை தொங்கியது இன்று விடுமுறை.

இதைக் கண்டதும் கடும் கோபம் எனக்கு. அங்கு நின்ற காவலரிடம் முன் அறிவிப்பு இல்லாமல் இப்படி விடுமுறைன்னு போட்டிருக்கீங்களே எவ்வளவு தூரத்திலிருந்து எவ்வளவு சிலவு செய்துக் கொண்டு வந்திருக்கிறோம். என்ன சார் இது? என்ற கேட்டபோது மூன்று மாதமாக திங்கள்கிழமை விடுமுறைன்னு அறிவிச்சிருக்கிறோம் என்று கூறினார்.

விசாரிக்காமல் வந்தது நம் தவறு அல்லது இணைய தளத்திலாவது பார்த்திருக்க வேண்டும் தவறை உணர்ந்து உடனே காரை தாம்பரம் கிஸ்கிந்தாவிற்கு திருப்பச் சொன்னேன். அங்கு செல்லுமுன் கிஸ்கிந்தாவிற்கு தொலைபேசி செய்து உறுதி செய்த பின்னரே அங்கு சென்றோம்.

இதை முதலிலேயே செய்திருக்கலாமே குயிண்லேண்ட்டை விட பல்லாவரம் பக்கத்தில் உள்ள கிஸ்கிந்தா போயிருந்திருக்கலாம். இன்னும் சென்னையிலுள்ள தீம்பார்க் எதையும் குட்டீஸ்கள் பார்த்ததில்லை..ஆனால் உங்க ஆசைக்கு தான் குயிண்லேண்ட் முடிவு செஞ்சீங்க இப்ப பாருங்கன்னு... அம்மணி அப்படியே உண்மைய சொல்ல அசடு வழியாமல் சிரிக்க முயன்று தோற்றுப்போனேன்.

பொதுமக்கள் புழங்கக்கூடிய பொழுதுபோக்கு இடங்களில் என்று விடுமுறை என்பதை டெக்ஸி ஆட்டோ நிர்வாகம் தெரிந்து வைத்து பொதுமக்களுக்கு உதவி செய்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும் என்பதை அந்தத் தருணத்தில் உணர்ந்தேன்.(எப்பவும் நமக்குன்னு வரும்போது இப்படி யெல்லாம் யோசிப்போம்)


பகல் ஒரு மணிக்கு கிஸ்கிந்தா உள்ளே நுழைந்தோம் பொதுவிடுமுறை நாள் இல்லை என்பதால் கூட்டம் மிகக்குறைவு.. இந்த நாட்களை தேர்வு செய்து ஒரு கல்லூரி பட்டாளம் இளஞ்ஞிகள் கூட்டமாக வருகைத் தந்திருந்தனர்.

இவங்களெல்லாம் காலேஜில படிக்கிற புள்ளைங்கதானேன்னு அம்மணி கேட்க ஆமா சொன்னேன்.

இன்னைக்கு திங்கள்கிழமை காலேஜி இருக்குமே அவங்க போகலையா? துணைவியார் கேட்க;வேணும்னா அவங்களிடம் கேட்டுச் சொல்லவா என்று நான் கேட்பதற்குள் எனது சகலையின் மகனார் பதில் கூறினார் காலேஜி கட் அடித்திட்டு வந்திருக்காங்க என்றார்.
என்னப்பா அனுபவம் பேசுதோ என்றேன். அவரும் சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்.

பெற்றவர்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்றக் கனவில் மிகையாக சிலவு செய்து படிக்க வைக்கிறார்கள் ஆனால் பிள்ளைகள் கல்லூரி வாழ்க்கையில் கிடைக்கும் புதிய நட்பில் சிலர் தங்களின் பெற்றோர்களின் கனவை மறந்து விடுகிறார்கள். குழுவாக வந்திருந்த அந்த மாணவிகளைப் பார்த்ததும் ஒரு கிளிக் எடுக்க தோன்றியது. அம்மணி அவர்களை விசாரித்த வகையில் அந்தக் குழுவில் யாருக்கோ பிறந்தநாளாம் அதற்கு ட்ரீட்...அதன் மதிப்பு ஒருநாள் படிப்பு அது இழப்பு... இந்த இழப்புகளின் வலிகள் இவர்களுக்கு இப்போது தெரிவதில்லை இது தாங்கும் வயது.

இந்த வயதில்தான் இவர்களால் இப்படி இருக்க முடியும் இந்த வயதுக்காரர்கள் தங்களின் முடிவே சரியானதாக தீர்மானிக்கக் கூடியவர்கள். பெற்றோர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை அவர்கள் அந்தக் காலத்து மனுசிகள் என்ற எண்ணத்தை வைத்திருப்பவர்கள்.

எனது சிந்தனை அவர்களை சுற்ற ஆரம்பித்துவிட்டது... சுற்றியது போதும் எனக்கு திரை இட்டுக் கொண்டேன். இந்த வயதில் நானும் அப்படித்தான் ஆனால் இனம்தான் வேறு.

கிஸ்கிந்தாவிற்கு பத்து ஆண்டுகளுக்கு முன் வந்துள்ளேன் ஆனால் இப்போது பல மாற்றங்கள் செய்திருக்கிறார்கள்.சென்னை குற்றாலத்தில் குளிக்கும்போது அதே உணர்வு ஏற்பட்டது தண்ணீரின் வேகம் குற்றாலத்தை நினைவூட்டியது. இப்போது சுனாமி என்ற பேரலையை அமைத்திருக்கிறார்கள். அனைவரையும் கரையோரம் அமரவைத்து அந்த பேரலை நம்மீது வேகமாக அடிக்கும்போது ஒருகனம் பிரமிப்பு மற்றும் திகைப்பு ஏற்படுகிறது அதற்கு சைடீஸாக பறவைகளின் சப்தம் காற்றின் ஒலி என ஒலிபெருக்கியில்... த்திரில்லாக இருந்தது... எனது குட்டீஸ்கள் நன்றாக தண்ணீரில் விளையாடினார்கள்.

மாலை நாங்கள் அனைவரும் கலைத்து யோயிருந்தோம் மெரினா போகலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போது மழை பெய்ய ஆரம்பித்தது "அடடா மழைடா அட மழைடா" பாட்டை இரசித்ததுபோல மழையுடன் விடுதியை நோக்கி நாங்கள்...!

4 comments:

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு.

படங்களும், பதிவும் அருமை அண்ணாச்சி.

கிளியனூர் இஸ்மத் said...

நண்பா!துபாய்ராஜா எப்படி இருக்கீங்க? எங்கு இருக்கீங்க? நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை வலையில் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது... வாழ்த்துக்கள் வருகைக்கு நன்றி.

ஸாதிகா said...

//அதன் மதிப்பு ஒருநாள் படிப்பு அது இழப்பு... இந்த இழப்புகளின் வலிகள் இவர்களுக்கு இப்போது தெரிவதில்லை இது தாங்கும் வயது.//சரியாக சொன்னீர்கள்.

//
இந்த வயதில்தான் இவர்களால் இப்படி இருக்க முடியும் இந்த வயதுக்காரர்கள் தங்களின் முடிவே சரியானதாஆக தீர்மானிக்கக் கூடியவர்கள். பெற்றோர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை அவர்கள் அந்தக் காலத்து மனுசிகள் என்ற எண்ணத்தை வைத்திருப்பவர்கள்.//உண்மை வரிகள்.

//எனது சிந்தனை அவர்களை சுற்ற ஆரம்பித்துவிட்டது... சுற்றியது போதும் எனக்கு திரை இட்டுக் கொண்டேன். //உங்கள் பதிவைப்படித்ததும் எனக்கும்தான்.

மூன்றாவது படத்தில் இருப்பவர் உங்கள் மகளா?போஸ் அமர்க்களமாக உள்ளதே!

கிளியனூர் இஸ்மத் said...

ஆம்! மூன்றாவது படத்தில் இருப்பது எனது இரண்டாவது மகள் 4ம் வகுப்பு படிக்கிறாள் படு சுட்டி...மிக்க நன்றி சகோதரி ஸாதிகா

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....