உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, September 10, 2009

மனம் கவர்ந்த மலேசியா...19

ஏசியின் குளிர் அதிகாலையே என்னை எழுப்பி விட்டது… இருட்டாக இருந்ததால் ஜன்னலை திறந்தேன் மழை தூறிக் கொண்டிருந்தது.
ரொம்ப நேரமாக பெய்துக் கொண்டிருக்கும் போல…மழையைப் பார்த்ததும் மனம் மகிழ்ந்தேன்…
என்குட்டிஸ்களை எழுப்பி மழையைக் காண்பித்தேன். அவர்களும் சந்தோசத்துடன் விழித்து கிளம்பி …அப்பக்கூட எட்டு மணிஆச்சுங்க….
இந்த முறை நாங்க ரெடி…ரெஜாக் லேட்…எட்டுமணிக்கு மழைக்குள்ளயே எங்கள் மலாக்காப் பயணம் தொடங்கியது…
ரெஜாக் அவருடைய நண்பர் ஒருவரைக் கூட்டிவந்தார் பேச்சு துணைக்கு.
பெரும்பாலும் தமிழர்களும் தமிழ்இஸ்லாமியர்களும் மலாக்கா என்றால் அங்குள்ள புலாவ் பெசார் தீவில் அமைந்திருக்கும் தர்ஹாவின்நினைவு தான் அவர்களுக்கு வரும்.
500 ஆண்டுகளுக்கு முன் மலாயா ஜாவா பிரதேசங்களுக்கு இஸ்லாமிய பிரச்சாரம் புரிய வந்த ‘சய்யிதுஸ் ஸாதாத் சுல்தானுல் ஆரிஃபீன் அஷ்ஷெய்கு இஸ்மாயில் இப்னு அப்துல் காதிர்(ரஹ்)’ என்ற மகான் ஈராக் பாக்தாத் நகரிலிருந்து வந்தவர்கள்.
அவர்களின் அடக்கஸ்தளமே மலாக்கா புலாவ் பெசார் தீவின் அமைந்திருக்கும் தர்ஹாவாகும்…
இந்த மாகான் முஹம்மது நபி (ஸல் அலை) அவர்களின் 18 வது வழித்தோன்றலில் உதித்தவர்கள் என்று அவர்களின் சரித்திரம் சொல்கிறது.
இந்த தர்ஹாவிற்கு மதம் கடந்த மனிதர்கள் நேர்ச்சையின் நிமித்தமாய் வந்து போகிறார்கள்… பலரின் வேண்டுதல்கள் நிறைவேறுவதால் என் நேரமும் மக்கள் வந்து போகிறார்கள்.
மலேசியாவிற்குள் மலாக்கா வழியாக இந்த மகானின் மூலம் இஸ்லாம் நுழைந்தது என்று அவர்களின் வாழ்க்கை குறிப்பு கூறுகிறது…

பல நூறு ஆண்டுகளுக்கு முன் போர்சுக்கள் மலாக்காவில் நுழைந்து கிருஸ்துவத்தை பரப்பினர்… மலேசியாவின் முதல் தேவஆலயம் என்றால் அது மலாக்காவில் உள்ள ஆலயமேயாகும்.
இன்று சுற்றுலா தளமாக போர்சுக்களால் கட்டப்பட்ட தேவஆலயம் விளங்குகிறது…
மலாக்காவின் விமான நிலையம் சிலுவைப் போன்ற வடிவத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

நான் சுமார் காலை 11 மணிக்கெல்லாம் மலாக்கா போட்ஹவுஸ் வந்துவிட்டோம்…அப்பவும் மழைத்தூறிக் கொண்டுதானிருந்தது… போட்ஹவுஸே வெறிச்சோடி இருந்தது… போட் ஹவுஸ் அருகிலேயே பெரிய மீன் மார்கெட் இருக்கிறது. இங்கு மாலை நேரத்தில் மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
அந்த மீன்களை சுட்டும் தருவார்கள். ஆனால் சுட்டு சாப்பிடுகிற வாய்ப்பு இல்லாமல் போனது எனக்கு வருத்தமே…

ஒரு சிறிய மோட்டார் படகை வாடகைக்கு பேசினோம் அங்கிருந்து புலாவ் பெசார் தீவுக்கு சுமார் 30 நிமிடத்தில் செல்வதற்கு 100 கீமிட்டர் வேகத்திற்கும் மேல் சென்று இறக்கி விடுகிறார்கள். போய் வருவதற்கு 100 ரிங்கிட் கேட்டார்கள். லைப் ஜாக்கெட்டெல்லாம் போட்டுக்கிட்டுதான் படகில் உட்காந்தோம்.

மெல்ல படகை நகர்த்தி மெதுவாக கொஞ்ச தூரத்திற்கு ஒட்டிச்சென்று அதன் பின் போன வேகத்தை என்னால் விவரிக்க முடியவில்லை… இதுவரையில் நான் மோட்டார் படகில் இவ்வளவு வேகம் சென்றதில்லை. எனது குழந்தைகள் ரொம்பவும் பயந்து விட்டார்கள் நானும் உள்பட….

மழைத்தூறல் கொஞ்சம் குறைந்து இருந்தது…படகிலிருந்து இறங்கியதும் படகோட்டி நீங்க எவ்வளவு நேரத்துல வருவீங்கன்னு கேட்டார்… உடனே ரெஜாக் … ஒரு மணி நேரத்துல வந்திடுவோம்னு சொன்னதும் படகு காரர் சரி அப்படின்னா நான் இங்கதான் இருப்பேன் நீங்க வந்திடுங்ன்னு கூற… சரி என்று சென்றோம்.

தர்ஹாவிற்கு அருகில் பள்ளிவாசல் இருக்கிறது. நான் அங்கு சென்று மதியத் தொழுகையை தொழுதுவிட்டு பக்கத்தில் உள்ள தர்ஹாவிற்கு குடும்பத்துடன் செல்ல தாயாரானோம்… வரும் வழியில் தர்ஹா பிரார்த்தனைக்கு ரெஜாக்கின் தமிழ் நண்பர் 10 கிலோ அரிசி வாங்கிவந்தார்…பலர் நேர்ச்சை செய்துக் கொண்டு பல பொருட்களை கொண்டு வருவார்களாம்…

தர்ஹாவிற்குள் போகும்போது மழைத்தூறல் லேசாக இருந்துக் கொண்டிருந்தது ரெஜாக் சொன்னார் தரை வழுக்கும் பார்த்து வாருங்கள் என்று.
என்குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு மெல்ல நடந்தேன்…
தர்ஹாவில் ஜியாரத்தை (பிரார்த்தனையை) முடித்துக் கொண்டு வெளியில் வந்தோம்.
என் சின்ன மகளை கையில் பிடித்தவாறு படியில் இறங்கினேன். முதல்படியிலிருந்து இரண்டாவது படியில் காலை வைத்ததும் அது வழுக்கிவிட பிடிப்பதற்கு எந்த முகாந்தரமும் இல்லாத நிலையில் இன்னொருகாலும் வழுக்க இரண்டுகாலும் என் கட்டுப்பாட்டை இழக்க நான் நிலைத் தடுமாறி இரண்டாவது படியில் சருக்கி மல்லாக்க 3வது 4வது படிகளைக் கடந்து தரையத் தொட்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒடிவர என்குழந்தைகள் பதர என்னை சமாளித்துக் கொண்டு மெல்ல எழுந்தேன்.
நடுமுதுகில் பலமான அடி எல்லாம் உள்காயம் போல் தெரிந்தது… எல்லோரும் துக்கம் விசாரித்தார்கள்.
ஒரு மலாய்காரர் என்முதுகில் தேய்த்து விட்டார். இப்படி வழுக்கி விழுந்தது என்வாழ்க்கையில் மிகக்குறைவுதான்.

கொஞ்சநேரம் அங்கு அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு பிறகு புறப்பட்டேன். இந்த தர்ஹாவில் கேரளத்து மலையாள சகோதரர்களைக் கண்டேன் மலாய்கார்கள் சீனர்கள் தமிழர்கள் இவர்களை கண்டேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் நான் சென்றிருந்தபோது மலாக்கா தர்ஹாவிற்கு போகவேண்டும் என்ற எண்ணத்தை என் உறவினர் எற்படுத்தினார். அது இப்போது நிறைவேறியது.

நாங்கள் தர்ஹாவைவிட்டு கிளம்பும்போது பக்கத்தில் உணவு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் உணவருந்தி விட்டு செல்லுங்கள் என்று கூறினார்கள்.


நாங்கள் அங்கு சென்று மதியஉணவு சாப்பிட்டோம்… ஆட்டுக்கறி ரசம் என்று நம்ம ஊர் சாப்பாடு மாதிரி நல்ல ருசியாக இருந்தது. சாப்பிட்டு விட்டு எவ்வளவு தொகை என்று கேட்க … இது இனாம் இங்கு வரக்கூடியவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. வரக்கூடியவர்கள் கொண்டு வரும் பொருட்களில் உணவுகளை சமைத்து வழங்குகிறார்கள்.
நம்மஊர் தர்ஹாபோல் இல்லை…ஆம் நம்மூர் தர்ஹாக்களில் ஆட்கள் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் அங்கேயே தங்கியிருப்பார்கள். இங்கு தங்குவது இல்லை. அதை பராமரிப்பவர்களின் குடும்பங்களும் அதில் வேலைப்பார்ப்பவர்களும் மட்டும் தான் அங்கு தங்கி இருக்கிறார்கள்…

இந்த புலாவ் பெசார் தீவே மிக அமைதியாக காணப்பட்டது.

தொடரும்….

2 comments:

Suresh said...

I read all the 19 posts wow , even i am planning to tour with my family, this inspired a lot. Thanks a lot for a wonderful series of posts, i have bookmarked all

கிளியனூர் இஸ்மத் said...

சுரேஷ்.....19 பகுதியையும் படித்ததாக சொன்னீர்கள்...நன்றி....உங்களுடைய பயணம் இனிமையாக அமைய பிரார்த்திக்கிறேன்... வாழ்த்துக்கள்....

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....