உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, October 1, 2009

சாந்தம் நிறைந்த சலாலாஹ்...2

சலாலாஹ் அதுஒரு சுற்றுலாத்தளம். வளைகுடா கோடையில் சுற்றுபுற நாடுகளிலிருந்து பல லட்சமக்கள் இங்கு வந்து போகிறார்கள்.
வரலாற்று சின்னங்களும், அவதாரபுருஷர்களின் அடக்கஸ்தளங்களும் இங்கு இருக்கிறது.திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் சில ஆதாரங்கள் இந்த ஊரிலும் இருக்கிறது...
5000 ஆண்டு பலமைமிக்க பல்கீஸ் அரண்மனையும், ஆழ்கிணறு யுசுப் நபியை போட்ட கிணறும், அய்யுப் நபியின் அடக்கஸ்தளமும், அவர்கள் நோய்யுற்ற பொழுது உடலைசுத்தம் செய்து அந்த நீரிலிருந்து குணமடைந்த கிணறும், அதில் இன்றுவரையில் ஊறிக் கொண்டிருக்கும் நீரும், சாலிஹ் நபியின் அடக்கஸ்தளமும், இம்ரான் நபியின் அடக்கஸ்தளமும், கேரளத்து மன்னர் சேரமான் பெருமான் அவர்களின் அடக்கஸ்தளமும், அதைச்சுற்றி ஐந்து கிமீ தொலைவிற்கு கேரளாப்போன்றே காட்சியளிக்கும் அழகும், இவைகளுடன் காந்த மலையும்,ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அமைதியான அழகிய பீச்சும்,இப்படி பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது.
சுற்றி மலைகள் நடுவே சலாலாஹ் நகரம் மலையில் ஏறி நின்று இந்த நகரமுழுமையையும் பார்த்துவிடலாம்.

இங்கு இஸ்லாமிய வரலாற்று சின்னங்களாக அதிகம் இருக்கிறதே அதனால் இஸ்லாமியர்கள் மட்டும் செல்வவேண்டும் என்று எண்ணிவிட வேண்டாம்.
மலையின் மீது மோதி நம்மை போர்த்திக் கொள்ளும் போர்வை மேகங்களுடன் நாம் உறவாடலாம். அந்த சூழலில் நம் மனம் பெறும் அமைதியை வார்த்தை இங்கு தணிக்கைச் செய்துக் கொள்கிறது.

நாங்கள் துபாயிலிருந்து மதியம் பேருந்தில் புறப்பட்டோம். அல்அய்ன் பார்டர் வழியாக பேருந்து சென்றது… ஹத்தா பார்டர் வழியாகவும் செல்லலாம்.
இரவு உணவுக்காக இரண்டு இடங்களில் பேருந்து நிருத்தப்படுகிறது.
விடியற்காலை யெமன் நாட்டுக்கு செல்லக்கூடியவர்களுக்காக சலாலாஹ்விற்கு 100 கிமீ தொலைவிற்கு முன்னால் பேருந்து நிறுத்தம் இருக்கிறது .அங்கு அரைமணிநேரம் நிறுத்தம் உண்டு.
பின் அங்கிருந்து புறப்பட்டு மெல்ல மெல்ல மலையில் ஏறுகிறது சுமார் 25 கிமீ தொலைவு ஏறியிருக்கும் பாதையே தெரியவில்லை. மேகங்கள் வழிமறைக்க பேருந்து நின்றது. அந்தக்காட்சி ஆனந்தமாக இருந்தது… அதேநேரத்தில் மலைகளின் பல்லத்தாக்கை பார்த்தால் பகீர் உணர்வு…

நாங்கள் சென்ற நேரம் மிதமான மழை. அன்புடன் உங்களை வரவேற்கிறோம் எனச் சொல்வது போல இருந்தது.
காலை 9 மணிக்கு சலாலாஹ் வந்தடைந்தோம். எங்களுக்காக புதிய நண்பர் காத்திருந்தார். துபாய் நண்பர் மூலம் அறிமுகமானவர்.
நாங்கள் தங்குவதற்கு விடுதி ஏற்பாடு செய்திருந்தார். நாள் ஒன்றுக்கு 100 திரஹம்.
இன்னும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இந்த விடுதியின் வாடகை 500 லிருந்து 800 வரை நாள் ஒன்றுக்கு வசூலிப்பார்களாம்.
நாங்கள் சென்ற நேரம் சீசனின் ஆரம்பம். மதியம் வரையில் ஒய்வெடுத்துக் கொண்டு மதியத்திற்கு பின் புறப்பட்டோம்.
அங்கு பிரைவேட் டெக்ஸி அதாவது சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்கள் அனுமதி பெறாமல் உறவினரைப்போல் அழைத்துப்போவார்கள்.அதிகமானோர் கேரளத்து சகோதரர்கள்.

மாலைநேரம் மேகமூட்டங்கள் மலைகளை மோதிக்கொண்டு நின்றன… அந்த மலைகளை நோக்கி எங்கள் வாகனம் சென்றது. ரோடெல்லாம் கோலம்போட தண்ணி தெளித்ததைப்போல் ஈரமாக இருந்தது. மேகம் சூழ்ந்துக் கொண்டதால் முன்னால் செல்லக்கூடிய வாகனத்தையும் எதிரே வரக்கூடிய வாகனத்தையும் பார்ப்பது கடினமாக இருந்தது…
மலையில் சின்ன சின்ன கடைகள் இருந்தன… அங்கே ஒட்டகங்களின் கறி டிக்காவாக சுட்டு விற்கப்படுகிறது.

நகரிலிருந்து இந்த மலைக்கு 30 நிமிடங்களில் சென்று விடலாம். துபாய் வாகன நெரிசல் போல் அங்கு இல்லை.
அந்த மலையின் மேல் சென்றதும் குளிர்ந்தது… முதலில் நபி அய்யுப் அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு சென்று பார்த்தோம்… அவர்களின் வரலாறு என்நினைவுக்குள் நிழலாடியது. அருகில் பள்ளிவாசலும் வரக்கூடியவர்கள் ஒய்வெடுக்க கூடாரங்களும் இருந்தன.

மலைகள் பசுமையாக இருப்பது மூன்று மாதத்திற்கு மட்டுமே என்கிறார்கள்.
பச்சை நிற சேலையைக் கட்டியதுபோல மலைகள்.
நபி அய்யுப் அவர்கள் குளித்த கிணறு மலையின் அடிவாரத்தில் இருந்தது. அங்கு வாகனங்கள் செல்வதற்கு அப்போது தான் வழிகள் அமைத்துக் கொண்டிருந்தார்கள். (இதற்கு முன் மலையிலிருந்து கயிறுக்கட்டி அதன் வழியாக இறங்கி பார்க்கவேண்டுமாம்) ஆதலால் நடந்தோம் கிணறு நம்ம ஊர் கிணறு போல் இல்லை. சிறு குட்டைமாதிரி தற்போது இருக்கிறது. மலைகளின் துவாரங்களிலிருந்து நீர் வருகிறது. அந்த தண்ணீரை பாட்டல்களில் பிடித்து குடிக்கிறார்கள். சிலர் புனிதமாக எண்ணி சிலர் தாகத்திற்கு ஆக தண்ணீர் குடித்தார்கள் நானும்.


சிலமணி நேரங்கள் அங்கிருந்து விட்டு வரலாற்று மனிதப் புனிதர்களின்
அடக்கஸ்தளங்களை பார்க்கச் சென்றோம்.

பாரத்துவிட்டு மற்ற இடங்களை காலையில் சென்று பார்க்கலாம் என விடுதிக்கு சென்று விட்டோம்.

5 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல அறிமுகம். தொடருங்கள் :)

சிம்மபாரதி said...

//ரோடெல்லாம் கோலம்போட தண்ணி தெளித்ததைப்போல் ஈரமாக இருந்தது. //

//பச்சை நிற சேலையைக் கட்டியதுபோல மலைகள்.//

நல்ல கற்பனையான வர்ணனைகள்....

//பாரத்துவிட்டு மற்ற இடங்களை காலையில் சென்று பார்க்கலாம் என விடுதிக்கு சென்று விட்டோம். //
என்று நீங்கள் சென்று விட்டீர்கள்.. ஆனால் நாங்கள் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறோம்.. அத்தனை அருமையான பதிவு...

சிம்மா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சலாலாஹ்...2 ஆம் பகுதி,
படிக்கவே குளுமையாக
இருக்கிறது.

அடுத்த பகுதி...?

கிளியனூர் இஸ்மத் said...

ச.செந்தில்வேலன்
கவிஞர் சிம்மபாரதி
நிஜாமுதீன்

நீங்க தள்ளுகிறீர்கள் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்...நன்றி

குசும்பன் said...

இஸ்மத் பாய் பழைய பதிவுகளுக்கு போக வசதியாக கொஞ்சம் சைட் பாரில் லிங் கொடுங்களேன்.

நம்ம டூர் புரோகிராமை இங்கு போட்டு விடலாமா?:))

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....