உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, December 22, 2009

எகிப்து பேரழகி பேசும் தமிழ் அழகு


DANA
எனது இலக்கிய ஆர்வத்தின் ஊடாக பல நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது எனக்கு சந்தோசமான விசயம்.சென்ற ஆண்டு எனது கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு முன் அறிமுகமானார் திருவிடச்சேரி எஸ்.முஹம்மது பாருக். இவர் துபாய் தீவாவில்(Dewa) கணக்கு அதிகாரியாக பல ஆண்டுகளாய் பணிபுரிந்து வருபவர். ஈமான் என்ற அமைப்பில் தணிக்கையாளராக செயல்பட்டு வருபவர்.

பழகுவதற்கு நல்ல மனிதர்.பல அமைப்புகளின் விழாக்களில் பேச அழைத்தால் சுறுக்கமாக தெளிவாகப்பேசக் கூடியவர். இந்தளவில் தெரிந்துக் கொண்ட எனக்கு அவர்களின் குடும்பத்துடன் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது.
இவரின் துணைவியாரின் சாதனையை சொல்வதற்குதான் இந்தக் கட்டுரை.

வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழக்கூடிய தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் ஒரு பாடமாக உள்ள பள்ளிகளைத் தேடி குழந்தைகளை சேர்ப்பவர்கள் மிகக் குறைவு என்று தான் சொல்லவேண்டும்.பலரும் ஆங்கிலம் மட்டும் தன் குழந்தைப் படித்தால் போதுமானது என்ற கருத்தில் இருப்பதால் தங்களின் இல்லங்களில் கூட குழந்தைகளிடம் தமிழ் பேசுவதை தவிர்த்து ஆங்கிலம் பேசி வருகிறார்கள்.

அமீரகத்தில் கிரஸண்ட் இங்கிலீஸ் ஹைஸ்கூலில் பத்தாம் வகுப்பு வரையில் தமிழ் பாடத் திட்டத்தை வைத்துள்ளார்கள் என்று அதன் தலைமை ஆசிரியர் கலீபுல்லா கூறியபோது ஆச்சரியமாக இருந்தது.வரும் வருடங்களில் மேல் நிலை வகுப்புகளுக்கும் தமிழ் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக கூறினார். அந்தப் பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு நல்வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன்.(எனது இரு பெண்பிள்ளைகளும் அந்தப் பள்ளியில்தான் படித்து வருகிறார்கள்)

S.முஹம்மது பாருக் உடன் டானா(DANA)

எஸ்.முஹம்மது பாருக் அவர்களின் குடும்பத்தார் துபையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். கீழ்தளத்தில் எகிப்து நாட்டைச் சார்ந்த அகமது முஹம்மது ரிஸ்வான்னும் அவரது மனைவி ஜஹானும் அவர்களின் மூன்று பெண் குழந்தைகளும் அவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர்களின் மூன்றாவதாக பிறந்த டானா என்ற இரண்டுமாத பெண் கைக் குழந்தை அவர்களின் மனதை கொள்ளைக் கொண்டாள் . அடிக்கடி அந்த டானாவைப் பார்ப்பதற்கு பாருக் மகள் வருவார்.

குழந்தை டானாவிடம் ஏற்பட்ட அன்பினால் தன் வீட்டுக்கு அடிக்கடி தூக்கி வந்து விளையாடுவதும் அந்தக் குழந்தையிடம் தமிழில் பேசுவதுமாய் வளர்ந்த டானாவிற்கு தற்போது வயது எட்டு. இன்று டானா சுத்தமான தமிழில் உரையாடுகிறாள்.
உரையாடுவதுமட்டுமல்ல தினமும் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதும் அந்தக் கதைகளை பாருக் துணைவியாரிடம் சொல்வதுமாய் இருக்கிறாள். சின்னத்திரை நட்சத்திரங்களும் திரைப்பட நாயகர்கள் நாயகிகள் என பிரபலங்கள் அனைவரையும் தெரிந்து வைத்திருக்கிறாள்.


டானாவிடம் அம்மா யார் என்று கேட்டால் பாருக் துணைவியாரைத்தான் காட்டுகிறாள்.
அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட டானா தனது பள்ளிப் படிப்பும் அரபாக இருக்க தனது வீட்டில் தனது பெற்றோர்களுடன் அரபு பேசுகிறாள். குழந்தைகளுடன் விளையாடும்போது ஆங்கிலத்திலும் பாருக் வீட்டில் மட்டும் சுத்தமான தமிழ் பெண்ணாய் காட்சி அளிக்கும் டானா மிகவும் அழகான பெண்.
மற்றவர்களுடன் பேசும்போது கூட ரொம்பவும் மரியாதையுடன் பேசுவதும் நம் தமிழ் கலாச்சாரத்தை டானாவிற்கு கற்றுக் கொடுத்த பாருக் துணைவியாரின் தமிழ்பற்றை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தான் பெற்ற குழந்தையை பராமரிப்பது போல் டானாவின் மேல் அளவிலா அன்பை வைத்துள்ளார். பாருக் தம்பதியருக்கு ஒரு பெண்குழந்தையும் இருக்கிறது.
வெளியில் எங்கு சென்றாலும் டானாவிற்கு மறக்காமல் ஏதாவது திண்பண்டங்கள் வாங்காமல் வருவதே இல்லை. டானாவை விட்டு அவர்களாலும் பிரிந்து இருக்கமுடியவில்லை.வீட்டில் எந்த தேவை வைத்தாலும் டானா இல்லாமல் எதையும் செய்வதில்லை என்று பாருக் துணைவியார் கூறுகிறார்கள்.

சென்ற ஈத்விடுமுறையில் பாருக் குடும்பத்தினருடன் எனது குடும்பத்தார்களும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தார்களுடன் மஸ்கட் சென்று ஒருநாள் தங்கி வந்தோம். அந்த சமயத்தில் பாருக்கின் துணைவியார் டானாவை நினைவு கூர்ந்துக் கொண்டே இருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அதன் நிமித்தம் சில தினங்களுக்கு முன் பாருக் அவர்களின் இல்லத்திற்கு டானாவை சந்திக்க எனது குடும்பத்தார்களுடன் சென்றிருந்தேன்.

விளையாடிக் கொண்டிருந்த டானா பாருக் கூப்பிட்டதும் ஓடிவந்து நின்றாள். என்னை அறிமுகம் செய்ய கைகுலுக்கிய டானாவிடம் நீ நலமா என்றேன். அவள் புன்முறுவலுடன் நலம் என்றாள். எனது குழந்தைகளிடமும் கைக் குலுக்கிக் கொண்டாள். கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வருகிறேன் என்று பாருகிடம் கூறிவிட்டு செல்ல சற்று நேரத்தில் வீட்டுக்குள் வந்தாள் டானா.

நான் டானாவிடம் பேசினேன் புன்முறுவலுடன் பதில் பேசினாள். உன்னைப் பற்றி வலைதளத்தில் எழுதப்போகிறேன் அதனால் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று கூறியதும் சில வினாடிகளில் பாருக் மகளாரிடம் சென்று தலை சீவிக் கொண்டு ரெடியானாள்.

புதிதாக என்னைக் கண்டதால் அவளுக்கு வெட்கம்.அரபு பிள்ளைகள் அதிகம் வெட்கப்படுவதில்லை டானாவை பொருத்தவரையில் அரபு குலமாக இருந்தாலும் தமிழர்களிடம் பழுகும் போது தமிழ் கலதச்சாரம் அவளிடம் நிறைந்திருப்பதை காணமுடிந்தது.

பெரும்பாலோருக்கு தாய்மொழி என்பது ஒன்று தான் ஆனால் டானாவிற்கு இரண்டாக இருக்கிறது. தமிழ் பேசுவதற்கு பிரியப்படுகிறாள். அவளின் பெற்றோர்கள் இதற்கு எப்படி சம்மதித்தர்கள் என்று பாருக் துணைவியாரிடம் கேட்டேன்.
அவர்கள் ஒன்றுமே சொல்லவில்லை தனது மகள் இன்னொரு மொழியை கற்றுக் கொள்வதில் அவர்களுக்கு சந்தோசம்தான். காலையில் பள்ளிக் கூடம் சென்று விட்டு வந்ததுமே எம்புள்ள அம்மா என்று கூப்பிட்டபடி வந்துவிடுவாள். அவளுக்கு கோழிகறி ரொம்பவும் பிடிக்கும்.நான் கோழிக்கறி ஆக்கும்போதெல்லாம் எம்மகளை கூப்பிட்டு கொள்வேன்.தமிழ்நாட்டு உணவு மீது என்புள்ளைக்கி ரொம்ப பிரியம் என்று பாருக் துணைவியார் கூறினார்.

டானா மீது பாருக் குடும்பம் வைத்திருக்கும் அன்பு டானாவிடம் தெரிகிறது.
தமிழை தாய்மொழியாய் கொண்ட தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஆங்கில மோகத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எகிப்து நாட்டின் பேரழகிக்கு தமிழை ஊட்டி வளர்த்த பாருக் துணைவியார் நம் அனைவர் நெஞ்சிலும் நிற்கிறார்கள்.

உடல் நலம் சரியில்லாத நிலையில் டானாவை தன் பிள்ளைப் போல் பாவித்துவரும் பாருக் துணைவியார் அவர்கள் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல் அருளால் சுகமடைந்து எந்த நோயுமின்றி நீடோடி வாழ வேண்டுமாய் இறைஞ்சுகின்றேன்.

காலம் கடந்தாலும் டானா தமிழையும் பாருக் குடும்பத்தையும் மறந்திட மாட்டாள். பசுமரத்தாணியாய் தன்பிஞ்சு மனதில் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் பதித்து வைத்திருக்கிறாள்.

டானாவை அமீரகத்தில் இயங்கும் தமிழ் அமைப்புகள் தங்களின் விழாக்களில் மேடை ஏற்றி அவளுக்கு உற்சாகம் வழங்க முன் வர வேண்டுமாய் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

25 comments:

அண்ணாமலையான் said...

தமிழ் பற்று ரொம்ப பிடித்தது.. அழகு டானாவிற்கும் சேர்த்து பிடியுங்கள் ஓட்டு... வாழ்க தமிழ்...

puduvaisiva said...

வணக்கம் இஸ்மத்

நல்ல பதிவு
மற்றும் எஸ்.எம்.முஹம்மது பாருக் குடும்பத்திற்கு வாழ்துகள்.

அடுத்தமுறை டானாவின் தமிழ் பேச்சை சிறு வீடியோவாக இனையுங்கள்.

Thenammai Lakshmanan said...

டானாவின் தமிழ்ப் பேச்சு பற்றிய பதிவு அற்புதம் இஸ்மத்

gulf-tamilan said...

புதுவை சிவாவை வழிமொழிகிறேன் !!!

செ.சரவணக்குமார் said...

அருமையா எழுதியிருக்கீங்க சார், டானாவுக்கு அன்பும் வாழ்த்தும்.

Hakkim Sait said...

வார்த்தைக‌ள் இல்லை பாராட்ட‌, அருமை... ஓட்டுப் போட்டாச்சு த‌ல‌

ஊமைய‌ன்

ஷங்கி said...

சுவாரஸியம். இங்கே, தமிழ் பள்ளியில் நல்ல கூட்டம். நி்றையப் பேர் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள்.

Anonymous said...

நல்லதொரு பகிர்வு அண்ணாச்சி.

தமிழுக்கு அமுதென்று பெயர். (எகிப்திய குழந்தை) அமுதே தமிழ் பேசுவதை என்னவென்று சொல்ல...

டானாவுக்கும்,திரு.பாருக் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.
(அண்ணாச்சி, நானும் இங்கு எகிப்துல நிறைய பேருக்கு தமிழ் கத்து கொடுத்துட்டிருக்கேன். :)) )

- துபாய் ராஜா

சிம்மபாரதி said...

சீறியதொரு தமிழ்ப்பணி.... வாழ்த்துக்களும்... வணக்கங்களும் மதிப்புமிகு பாரூக் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும்....

ஏன் நம்ம அமைப்பிலயே டானா-வை கூப்பிட்டா என்ன....?

குடுகுடுப்பை said...

நல்ல பகிர்வு, நானும் குழந்தைக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிறேன்.

தமிழில் பேச மறுக்கிறாள், இதனைப்பார்க்கும்போது கண்டிப்பாக ஒருநாள் பேசிவிடுவாள் என்று தோன்றுகிறது

Anonymous said...

நண்பர் இஸ்மத்தின் வலைப்பூ எப்பவும் தரமான சிந்தனை தூவும் பூக்களை மலர வைக்கும்.

இன்று சில கண்ணீர்த் துளிகளை பிரசவிக்கிறது.

ஏன் என்று தெரியவில்லை. படித்த போது அழுகை வந்தது.

தமிழா, தாயா, பாசமா, உணர்வா என தெளிவாய் தெரியவில்லை. வாஞ்சையுடன் வடித்த இந்த பதிவுக்கு நன்றியும் பாராட்டும்.

அல் அய்ன் சென்றதை பற்றி எழுதிய போது, நான் இப்படி எழுதினேன்....

//// நிற்கும் போது, இன்னோரு துணுக்குற்ற‌ ச‌ம்ப‌வ‌ம்.

சாரலில் நனைய விரும்பி ஒரு அரேபிய தம்பதியினர் ஒரு வ‌ய‌தே ஆன குட்டி பாப்பா என எங்கள் அருகே.

குழந்தை ரோஜா பூ போல‌ இருந்த‌து. திடிரென்று சின்ன‌ வாய் திறந்து த‌ண்ணீ என்ற‌து. அரேபிய அப்பா பாட்டில் தந்ததும் குடித்தது. ஆடிப் போய் விட்டோம்.

பின்ன‌ர் க‌வ‌னித்த‌ போது கூட‌ அப்பா அம்மா அர‌பியில் பேசுகிறார்க‌ள். யோசித்து யோசித்து ம‌ண்டை காய்ந்து விட்ட‌து, சற்று நேர‌த்தில் ப‌ணிப் பெண் வ‌ரும் வ‌ரை.
ந‌ம்மைப் போல் நிற‌த்தில் வந்தவள் தமிழச்சியாக இருக்க சாத்தியம் இருந்ததால், த‌மிழ் மொழி ப‌ர‌விய‌ வித‌ம் க‌ண்டு பெறுமை கொண்டோம்.

எடி ஊர அப்பாக்களும், பங்கா ரப்பாக்களும் உணராத தமிழ் தண்ணீர் தாகம் அரேபிய அப்பாக்கு புரிந்து விட்டதே. அடங்கொம்மா.... ///////

- லாரன்ஸ்

குசும்பன் said...

பாருக் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்!

Jazeela said...

'சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்' என்பதிற்கு டானாவே சிறந்த சான்று. பாரூக் அவர்களின் குடும்பத்தாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

Unknown said...

வழி இஸ்லாம், மொழி தமிழ்
உலகத்தமிழ் குடும்பம்
தமிழனாய் இருப்போம்

அப்துல்மாலிக் said...

ஆச்சரியம் ஆனால் உங்கள் பதிவின் மூலம் உண்மையறிந்தேன்.. திரு பாரூக் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்

இதுமாதிரி திரு பாரூக் அவர்களின் மகள் அராபிக் பேசுகிறதா?

அப்படியில்லையெனில் இதிலிருந்து தெரிகிறது தமிழ் எவ்வளவு இழகுவானது என்று

நல்ல பகிர்வு

ஹுஸைனம்மா said...

ஆச்சர்யமான விஷயம்தான். டானா தமிழ் பேசுவதற்கு திருமதி. ஃபாரூக் அவர்கள் அவள் மீது காட்டிய பாசம்தான் காரணம். படிப்பதை விட, ஒரு மொழி பேசுபவரோடு கலந்து பழகிவிட்டால் அம்மொழியில் சரளமாக உரையாடலாம். லாரன்ஸ் கூறும் உதாரணமும் சான்று.

ஃபிலிப்பைன்ஸின் தகலாக் பேசும் அரபிக் குழந்தைகளும் உண்டு.

நம் இந்தியப் பிள்ளைகளும் ஒண்ணாங் கிளாஸ் முதல் பன்னெண்டாங் கிளாஸ் வரை ஹிந்தியும், அரபியும் படிச்சாலும் ஒரு வாக்கியம் முழுசா பேசத் திணர்றதைப் பாக்கணும்!!

nerkuppai thumbi said...

மனதை நெகிழ வைத்த பதிவு.

துளசி கோபால் said...

அருமை. டானாவுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள். கூடவே ஃபாரூக் மனைவிக்கு இனிய பாராட்டுகள்.

கிளியனூர் இஸ்மத் said...

வருகைத்தந்த வாழ்த்துக்கள் கூறிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இன்னும் இடுக்கையை படித்துவிட்டுப்போன பாசத்திற்குரிய தமிழ்பற்றாளர்களுக்கும் மிக்க நன்றி....

எஸ்.முஹம்மது பாருக் குடும்பத்தினர் உங்களின் வாழ்த்துக்களை வாசித்து விட்டு உங்களின் அன்பை கண்டு நெகிழ்ந்து விட்டார்கள்....உங்களின் அனைவருக்கும் அவர்கள் நன்றியினை சமர்பிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.....

K.MURALI said...

அருமையான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு.
முரளி

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

என்ன எழுதுவது? மனம் நெகிழ்ந்திருக்கும் போது. நல்ல பதிவு.
அன்புடன்
க.நா.சாந்தி லக்ஷ்மன்

கிளியனூர் இஸ்மத் said...

கே.முரளி
கா.நா.சாந்திலெஷ்மணன்
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

Unknown said...

Hi Ismath
it's really nice hear this message witch the other country child is speaking over mother tong. why you not call Dana for Tamil association and should appreciate this Egypt Queen,
please consider about Simma's word ( am sorry I cannot type Tamil from my office) and do the need full please,

elango said...

நீங்கள் dana பற்றி எழுதியது மிகவும் அருமையாக யுள்ளது.தமிழ் தெரிந்த அந்த எகிப்து இளம் குயிலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய பாராட்டுக்களை அந்த குழந்தைக்கு தெரியப்படுத்துங்கள். இளங்கோ

Unknown said...

MashaaAllah! Its indeed its surprising to know an Egyptian child speak Tamil so fluently. There are many points in this message. The kindness & friendliness of Mr. Farooks family mingling wt neighbours which give chance for Egyptian to allow their child to mingle with Mrs.Farook. Unlike the normal case The whole hearted motherly affection of Mrs.Farook win the Dana's heart and its grate her own Egyptian mother didn't come across it. And its just not the tamil language but the child has leaned nice way of talking and the good manners too. Dear Mr.Ismath - thank you and may Allah bless you for bringing out this message to us to think over. My wishes to Mrs.Mr.Farook and to the Egptian family and to the wonderful kid Dana may Allah bless her wt more intelligence and every success. I pray to Allah for Mrs.Farook to get well soon from her illness.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....