உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, August 8, 2010

வடமாநில சுற்றுலா - 5


ஹோட்டல் வாகன ஓட்டியை இரயில் நிலையத்தில் என் பெயர் எழுதிய பலகையுடன் நிற்கின்றானா எனத் தேடினேன் கிடைக்கவில்லை.
எனக்குள் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.புரோக்கர் நம்மை ஏமாற்றிவிட்டானோ? என எனக்குள் குழம்பிக் கொண்டு குடும்பத்தார்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று எனது நண்பர் ஹாஜாவை அழைத்து விபரத்தை கூறினேன்.

அவரும் என்னைப்போலவே நம்மை ஏமாற்றி விட்டார்களா? அவன் கொடுத்த ஹோட்டல் எண்ணுக்கு டெலிபோன் செய்து பாருங்கள் என்றார்.அதுவும் செய்தாகிவிட்டது மணி அடிக்கிறது ஆனால் யாரும் டெலிபோனை எடுக்கவில்லை.

புரோக்கருக்கு டெலிபோன் செய்தேன் பேசினான் கேட்டேன் எங்களை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை என்றேன் நீங்க எந்த ஸ்டேஷனில் இருக்கீங்க என்று கேட்டான்.

நிஜாமுதீன் என்றேன்

புதுடெல்லி ஸ்டேஷனில் இறங்கி இருக்கனும் அங்கே போங்க என்றான்.அப்போது மணி இரவு 11.15. இந்நேரத்திற்கு பிறகு புதுடெல்லி ஸ்டேஷனுக்கு செல்வதைவிட டெக்ஸி பிடித்து ஹோட்டலை தேடலாம் என ஏரியா பெயரைச்சொல்லி போகச் சொன்னேன் 500 ரூபாய் கேட்டான் பேரம் பேசப்பட்டு 400 க்கு சரியானது.

30 நிமிடத்திற்கு பின் பஹர்கான்ஜ் ஏரியா வந்தது பல நூறு விடுதிகள் அரச்சாசன் ரோட்டில் இருக்கின்றன ஆனால் எங்களுக்கு முன்பதிவு செய்த விடுதி மட்டும் கிடைக்கவில்லை ஓட்டுனரும் விடுவதாக இல்லை சந்து பொந்து என தேடி அசந்து போனார் இருந்தாலும் விடுவதாக இல்லை விசாரித்து சரியாக அந்த விடுதியை கண்டுப்பிடித்தார்.

ஹோட்டலுக்குள் நுழைந்ததுமே மேலாளரை அழைத்து வாகனம் அனுப்புவதாகச் சொல்லி எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏன் அனுப்பவில்லை டெலிபோன் செய்தேன் எடுக்கவும் இல்லை எனக் கேட்டேன்.
சாரி சார் எங்களுக்கு மூன்று ரூம்கள் மட்டும் புக் பண்ணச் சொல்லி தகவல் வந்தது அவ்வளவு தான் டெலிபோன் ரிப்பேரில் இருக்கிறது என்றார்.

அழைக்க வருவார்கள் என்பதெல்லாம் புரோக்கர் சொன்ன பொய்கள் அப்போதுதான் நாம் ஹோட்டல் புக் செய்வோம் என 5ஸ்டார் வசதிகளை வார்த்தைகளாய் நம்மிடம் உதிர்க்கின்றார்கள் என்பது புலப்பட்டது.

ஹோட்டலில் நாம் தங்குவதற்கு நம்மைப்பற்றிய விபரத்திற்கு ஐடி கேட்டார்கள்
பான் கார்டு கொடுத்தேன் வாங்க மறுத்துவிட்டார்.ஏன் எனக்கேட்டதற்கு இந்த டெல்லியில் பான் கார்டு யாரும் வாங்க மாட்டார்கள் ஓட்டு அட்டை அல்லது பாஸ்போர்ட் காப்பி ரேஷன் கார்டு இவை இருந்தால் கொடுங்கள் என்றார்.

பான் கார்டு எடுப்பதற்கு நமது ரேஷன்கார்டு பாஸ்போர்ட் காப்பி இவைகளை ஆதாரமாக கொண்டுதான் பான்கார்டு மத்தியஅரசு வழங்குகிறது ஆனால் அந்த பான் கார்டுக்கு மத்தியில் மதிப்பில்லை.வடமாநிலங்களுக்கு செல்லக்கூடியவர்கள் பாஸ்போர்ட் காப்பி அல்லது ஓட்டு அட்டை இவைகளை ஐடியாக உபயோகப்படுத்துங்கள்.

என்னிடம் பாஸ்போர்ட் காப்பி இருந்தது அதை ஐடியாக கொடுத்தேன்.

அந்த ஹோட்டலில் தரமும் இல்லை அதற்கு ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கலாம்.ஆனால் நாங்கள் தங்கி இருந்த பஹர்கான்ஞ் ஏரியாவில் எல்லா தரத்திலும் ஹோட்டல்கள் உள்ளன.

புதிதாக டெல்லி வரக்கூடியவர்கள் புதுடெல்லி ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து 15 நிமிடங்களில் பஹர்கான்ஞ் ஏரியாவுக்குள் நுழைந்து அரக்காசன் ரோட்டிற்கு வந்துவிடலாம்.தங்களுக்கு பிடித்தமாதிரி ஹோட்டல்களை தேர்வு செய்து தங்கிக்கொள்ளலாம்.

அல்லது இரயில் டிக்கேட் இணையதளத்தில் பதிவு செய்யும் போது அதே தளத்தில் ஹோட்டல்களையும் நம் வசதிக்கேற்ப பதிவு செய்துக் கொள்ளமுடியும்.

இவ்வளவும் தெரிந்தும் இணையத்தில் புக்செய்யாமல் அலட்சியமாக இருந்தது என்தவறு என்பதை அனுபவரீதியாக உணர்ந்தேன்.

மூன்று ஏசி ரூம்கள் தந்தார்கள் அதில் ஒரு ரூமில் ஏசி இருந்ததே தவிர குளிர்ந்த காற்று இல்லை.புகார் செய்தும் பலனில்லை அந்த ரூமை காலி செய்து இரு ரூம்களில் தங்கிக் கொண்டு சாவியை ரிசப்ஸனில் கொடுத்தேன் அவர் வாங்க மறுத்தார்.
நீங்க மூன்று ரூம்கள் புக் செய்துருக்கீங்க என்றார் ஆமா ஆனால் ஏசி வேலை செய்யவில்லையே என்றதும் அவர் மீண்டும் பழைய பல்லவியே பாடினான் எனக்கு சரியான கோபம் வந்தது அந்த ரூமின் சாவியை அவனிடமே கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன்.
மொழி தெரிந்த நம்மிடமே இப்படி நடக்ககூடிய இவர்கள் மொழி தெரியாதவர்களிடம் எப்படி எல்லாம் நடப்பார்கள்.

டெல்லி செல்வதற்கு முன் சில நண்பர்கள் அடித்த எச்சரிக்கை மணியை அனுபவரீதியாக ஒவ்வொரு சம்பவத்திலும் கண்டுக் கொண்டேன்.

வந்த அசதியில் நல்ல உறக்கம் காலையில் 9.00 மணிக்கு டெல்லி சைடுசீன் பார்ப்பதற்கு பேருந்து தயாரானது.அதற்கு முன் டெல்லியிலிருந்து ஜெய்பூருக்கு செல்வதற்கு இணையதளத்தில் டிக்கேட் பதிவு செய்வதற்கு புரோச்சிங் சென்டருக்கு சென்றேன் சர்தார்ஜி உற்சாகமாய் வரவேற்று ஐடி கேட்டார் பான் கார்டு கொடுத்தேன் வாங்க மறுத்துவிட்டார் ஆக டெல்லியில் எந்த இடத்திலும் பான் கார்டுக்கு மதிப்பே இல்லை அந்தளவு பான் கார்டை தவறாக விநியோகிக்கப் பட்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்துக் கொள்ளமுடிந்தது.

ரேஷன்கார்டு பாஸ்போர்ட் ஓட்டு அட்டை இவைகளை பெறுவதற்கு நாம் நேரடியாக ஆஜராகவேண்டும் ஆனால் பான் கார்டு பெறுவதற்கு எந்த அரசுஅதிகாரியிடமும் நேரடியாக காணவேண்டிய அவசியமில்லை ஆதலால் பான் கார்ட் பெறுவதில் பல தில்லுமுல்லுகள் இருப்பதாக இதைப்பற்றி விபரம் தெரிந்த ஆசாமி கூறினார்.

இனி வரக்கூடிய காலங்களில் எந்த கணக்கு திறப்பதற்கும் பான் கார்டு அவசியம் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கும் வேலையில் மத்தியில் அந்த பான் கார்டை எவருமே சீண்டுவதில்லை என்பதும் அதை பெறுவதற்கான வழிகளை எளிதாக வைத்து அயல்நாட்டினரும்கூட ஒரு சில பேப்பர் காப்பிகளை கொடுத்துவிட்டு தானும் இந்திய பிரஜைதான் என்று ஐடியை காண்பிக்கக் கூடிய அளவில்தான் பான் இருப்பது ஆச்சரியமான விசயம்
பங்கு வர்த்தகத்தில் நுழைபவர்களுக்கு பான் கார்டு கட்டாயம் ஆனால் அதை பெறுவதில் பாதுகாப்பின்மை நிறைந்திருக்கிறது வெகுவிரைவில் வல்லரசாகப் போகும் நம் இந்தியா இந்த விசயத்தில் அலட்சியமாக இருப்பது மிகவும் கவலையை அளிக்கிறது.

டெல்லி சைடுசீன் பார்ப்பதற்கு ஆக்ராவில் ஹோட்டல் புக் செய்தபோதே இதற்கும் சேர்த்து புக் செய்திருந்தோம்.எங்களை பேருந்திற்கு அழைத்துச் செல்வதற்கு ஒரு ஆள் வந்திருந்தான் அவனை பின் தொடர்ந்தோம்.

பேருந்து தயாராக நின்றது ஆனால் இதிலும் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம்.

ஏமாற்றம் தொடரும்....

5 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எனக்கும் ஏமாற்றம்தான். நீங்கள்
என்ன ஏமாற்றப்பட்டீர்கள் என்று
அறியலாம் என எண்ணினால்,
தொடரும் என்று போட்டு
தற்காலிகமாக
என்னை ஏமாற்றிவிட்டீர்களே!
அடுத்தது என்ன?

Prathap Kumar S. said...

hahaha..இஸ்மத் நீங்க ஏமாற போனீங்களா...சுத்திப்பார்க்க போனிஙகளா? :)

ஆனால் ரொம்ப உஷாரா இருக்கவேண்டும என்பது தெரிகிறது. அடுத்து ஏமாற்றத்தையும் எழுதுங்க:))

கிளியனூர் இஸ்மத் said...

நிஜாம் வருகைக்கு நன்றி....ஏமாற்றம்தான் வாழ்க்கையின் அனுபவங்களை கற்றுதருகிறது...

நாஞ்சில்...சுற்றுலா என்பது ஏமாற்றமும் உள்ளடக்கியதுதான்...நன்றி...

அப்துல்மாலிக் said...

உஷாரா இருக்கனும் போல, யாரையும் சந்தேகப்பார்வியினூடே இருக்கனும் போல

நல்ல பகிர்வு தொடருங்க

கிளியனூர் இஸ்மத் said...

அப்துல்மாலிக்....அதற்காக போலிஸ் மாதிரி இருக்கவேண்டாம்..வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....