உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, December 21, 2010

வேதம் தந்த வேகம்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர்- 7

இது ஒரு பாலை அனுபவம்

தாயகத்தை விட்டு வந்து இரண்டு ஆண்டுகளை கடத்தி விட்டேன் ஆனால் சம்பாதிப்பு ஒன்றும் பெரிதாக இல்லை பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவல் ஆர்வமும் இல்லை அலைச்சல் தான் அதிகம் இருந்தது என்றாலும் இளம் கன்றுக்கு களைப்பு தெரியவில்லை.

இந்த நேரத்தில் சரியாக எனக்கு யாரும் வழிகாட்டவுமில்லை அப்படிபட்டவர்களை நான் சந்திக்கவுமில்லை.

அந்த இளம்வயதில் யாருடைய கட்டுப்பாட்டையும் அறிவுரையும் ஏற்றுக்கொள்ளும் மனோ நிலை எனக்கு இல்லை ஆனால் மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்தக்கூடிய வழியில் என் வழி இல்லை.
இப்படி இல்லை இல்லை என்று நாத்திகர் மாதிரி சொன்னாலும் ஏதும் இல்லாமல் இல்லை என்று சொல்லவில்லை.அதாவது இருந்தால்தானே எதையும் இல்லை என்று சொல்லமுடியும்.

வெறும்பாறையில் தான் சிற்பம் இருக்கிறது என்பார்கள் நான் பாறையாக இருக்கிறேன் என்னை செதுக்குவது யார்?

இதோ அன்னையின் மடியில் சப்பி பால் குடித்திக் கொண்டிருக்கும் சிசுவிடம் சப்பினால்தான் பால் வரும் என்ற வழிகாட்டலை சொல்லிகொடுத்தது யார்?

இப்படி வழிகாட்டல் என்னிடமே வைத்துக்கொண்டு எனக்கு யாரும் வழிகாட்டவில்லை என்று இங்கு நான் புலம்புவது எவ்வளவு பெரிய அபத்தம்.
என் பிடரியின் நரம்பிற்கும் மிக சமீபமாக இப்பவனைவிட எனக்கு சமீபம் வேறு யார் இருக்கமுடியும்?

மேல்நோக்கியே சிந்தனையையும், எண்ணத்தையும் வளர்க்க பழக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான் இறைவா என்ற வார்த்தை வெளியில் வந்த உடனே கைகள் ஆகாயத்தை நோக்குகிறது. உலகக் கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஆன்மக் கல்விக்கு கொடுக்கப்படாததால் அனாச்சாரங்களும், அவநம்பிக்கைகளும் சமுதாயத்தில் மலிந்துவிட்டன.

துபை நைப் தமிழ்பஜாரில் ஒரு வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருநபர் கையில் திருக்குர்ஆன் இருந்தது அது குர்ஆன்தானா என்று உறுதி செய்வதற்கு அவரை அனுகியபோது அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் என்று அவர் கூறியதும் என்னை மீறிய ஆவல் அதை ஆட்கொண்டது அதை எனக்கு கொடுக்கும்படி கேட்டபோது அதை இந்தியாவிலிருந்து வரவழைத்தது என்றும் இதற்காக நீண்டநாட்கள் காத்திருந்ததாகவும் அந்த சகோதரர் கூறவே அதே ஆவல் என்னிடம் மிளிர்வதைக் கண்டு அந்த சகோதரர் என்னிடம் குர்ஆனைக் கொடுத்துவிட்டார்.

அன்று எனக்கு கிடைத்த ஆனந்தத்தை இங்கு வரிகளில் வார்த்தைகளில் கொண்டுவர முடியவில்லை. வீட்டு வேலையின் ஓய்வு நேரங்களில் திருக்குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை வாசிக்கத் தொடங்கினேன்.

அதுவரையில் அலட்சியமாக இருந்த தொழுகை அச்சத்தை ஏற்படுத்தியது.பொழுது போக்கு பட்டியலில் இருந்த சினிமாவிற்கு திரையிடப்பட்டது. தமிழ் குர்ஆன் என்னை ரொம்பவும் பயமுறுத்தியது. ஐந்து நேரத்தொழுகையை கண்ட நண்பன் சகாபுதீனுக்கு ஆச்சர்யம் அவ்வபோது அவனிடம் ஆலிமாக நடந்துக் கொண்டேன்.

எனது அரபு என்னிடம் மிக மரியாதையாக நடந்துக் கொள்ள ஆரம்பித்தார். இறைவணக்கம் என் இதயத்தை சுத்தம் செய்தது மனம் போனபோக்கில் சென்ற சிந்தனைக்கு கடிவாளம் போடப்பட்டது.

ஒருநாள் எனது அரபு மகளுக்கு முதல் பிரசவத்தின் வலி ஏற்பட திருக்குர்ஆனிலிருந்து சூரத்துல் மரியத்தை (அத்தியாயம்) ஓதி தண்ணீர் கேட்டார்கள்.ஓதிக் கொடுத்தேன். என் மீது அவர்களுக்கு நன் நம்பிக்கையை திருக்குர்ஆன் பெற்றுத்தந்தது.

எனது சகோதரர் திருமணத்திற்கு செல்ல விடுமுறைக்கிடைத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின் தாயகம் செல்ல தேதி முடிவானது. தாயகம் செல்ல அனைவருக்கும் துணிமணிகள் வாங்க பட்ஜெட் போட்டபோதுதான் பொருளாதாரத்தில் எனது பலஹீனம் என்ன என்பதை யோசிக்க முடிந்தது. நான் நினைத்தமாதிரி எனது குடும்பத்தினருக்கு சமான்கள் வாங்கமுடியவில்லை அப்படி வாங்க வேண்டுமானால் அதற்காக வாங்கப்படுகின்ற கடனை அடைக்க இரண்டு ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்ற கணக்கு புரிந்தது.

விளையாட்டுதனமான வாலிப வாழ்க்கையில் எதிர்கால லட்சியங்கள் என்னவென்று கேட்டால் ஒரு தீர்மானமும் இல்லாத நிறைய சம்பாதிக்கனும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லக்கூடிய இளைஞர்களை இன்றும் நான் பார்க்கிறேன்.

எல்லோருக்கும் பணக்காரனாக வாழ லட்சியமிருக்கிறது ஆனால் அவர்களில் பத்துகோடி சம்பாதிக்கனும் என்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய வாலிபர்கள் படித்தவர்களில் கூட குறைவாகதான் இருக்கிறர்கள்.

வாலிபம் தொடரும்....

5 comments:

mohamedali jinnah said...

படிப்பு வேறு, அறிவு வேறு. படிப்பு பணக்காரனாக வேண்டும் என்ற காரியத்திற்காக அல்ல . பணம் வாழ்வின் வசதிகளை அதிகமாக்கலாம் ஆனால் அது மகிழ்வினை தந்து விடாது .கல்வி தேடுவது வாழ்வின் அடிப்படை.ஆனால் இன்று படித்தவன் குற்றம் செய்வதில்தான் திறமையுடன் உள்ளான் . நல்ல பண்பு ,குணம் கண்டறியாத கல்வி குப்பை . இறை அன்பு ,மார்க்கம் காட்டிய வழி குழுந்தை பருவ முதல் சொல்லித் தரப் பட வேண்டும் .சீன தேசம் சென்றாயினும் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.
பயன் தரும் கல்வி ,அறிவு என்பது சுய நலம் கொண்டதல்ல .அது மனித நேயம் கொண்டது .குடும்ப நலமும் மனித நேயத்தில் அடங்கும். தர்மம் அடுபங்கரையிலிருந்து ஆரம்பமாகின்றது .
பணம் நாடி மற்ற நாடு செல்வோர் தன் குடும்பம் விடுத்து சென்று தம் மக்கள் மழலை மொழி இழப்பவர்களில் கல்வி கற்றவரையும் ,படித்தவரையும் காணலாம் .

கிளியனூர் இஸ்மத் said...

நீங்கள் சொன்ன கருத்து சரியானதே நன்றி.

ஹுஸைனம்மா said...

//பட்ஜெட் போட்டபோதுதான் பொருளாதாரத்தில் எனது பலஹீனம் என்ன //

பட்ஜெட் போட்டாதான், வரவுக்குள் செலவு நிக்கும்; அவசியமெனில் வரவைப் பெருக்கவும் வழி தேடுவோம்.

உங்களுக்கு திருக் குர் ஆன் தந்த நபரைத் தற்போது காண்பதுண்டா? இச்சம்பவத்தை நினைவுகூர்வதுண்டா?

கிளியனூர் இஸ்மத் said...

எனக்கு திருக்குர்ஆன் கொடுத்த நபரை தற்போது நான் கண்டதில்லை.இச்சம்பவம் என் மனதில் ஆழப் பதிந்ததினால் மட்டுமே என்னால் இங்கு நினைவுகூற முடிந்தது உங்கள் வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா.

ஸாதிகா said...

//அதனால்தான் இறைவா என்ற வார்த்தை வெளியில் வந்த உடனே கைகள் ஆகாயத்தை நோக்குகிறது.//உண்மை வரிகள் சகோ.

//இப்படி வழிகாட்டல் என்னிடமே வைத்துக்கொண்டு எனக்கு யாரும் வழிகாட்டவில்லை என்று இங்கு நான் புலம்புவது எவ்வளவு பெரிய அபத்தம்.
என் பிடரியின் நரம்பிற்கும் மிக சமீபமாக இப்பவனைவிட எனக்கு சமீபம் வேறு யார் இருக்கமுடியும்?
// இளையவர்களுக்கு நல்லதொரு படிப்பினையை,வழிகாட்டலை ஏற்படுத்தக்கூடிய வரிகள்.

//விளையாட்டுதனமான வாலிப வாழ்க்கையில் எதிர்கால லட்சியங்கள் என்னவென்று கேட்டால் ஒரு தீர்மானமும் இல்லாத நிறைய சம்பாதிக்கனும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லக்கூடிய இளைஞர்களை இன்றும் நான் பார்க்கிறேன்.
// நிதர்சனமான உண்மை.இந்த போக்கு இளையவரகளிடத்தில் மாறி விசாலமாக,ஆழ்ந்து சிந்தித்து,இலட்சியங்களுடன் வாழ்ந்து,இலட்சியத்தை நோக்கியே பயணித்து வருவார்களாயின் நல்லதொரு சமூகம் உருவாகும்.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....