உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, February 1, 2011

ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 13
இது ஒரு பாலை அனுபவம்
1987 -லில் விற்பனைக்கு வந்த கற்பனைக் கதைகள் என்றொரு சிறுகதை தொகுப்பை துபையில் வெளியிட்டேன். இந்த நூல் தமிழகத்தின் பல ஊர்களைச் சார்ந்த நண்பர்களின் அறிமுகத்தை கொடுத்தது ஆனால் எனது ஊரைச் சார்ந்த சகோதரர் முஹம்மது சபீர்ருடைய அறிமுகமும் கிடைத்தது; இந்த அறிமுகம்தான் என்னை ஞானப் பாட்டைக்கு அழைத்துச் சென்றது.

புதிய கொள்கையில் தீவிரமாக இருந்த எனக்கு முஹம்மது சபீர் காட்டிய ஞானப்பாட்டை என்னை யோசிக்க வைத்தது.

நம்பிக்கை என்பது இரண்டு விதம் ஒன்று நன்னம்பிக்கை இரண்டாவது மூடநம்பிக்கை ஆனால் நாம் எந்த நம்பிக்கையில் இருக்கிறோம் என்பது அவரவர் அறிவுக்கே விட்டுவிடலாம் காரணம் இது எனது பாலைப் பயணம்.

எந்த நம்பிக்கையில் நான் இருந்தேன் என்ற வினா ஞானப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவுப்படுத்தியது.இந்த தெளிவுக்காக இரண்டு ஆண்டுகள் முழுமையாக சிலவு செய்திருக்கிறேன்.

ஏனெனில் என் மனப்பாட்டையில் நான் எதையெல்லாம் விளங்கி வைத்திருந்தனோ அதையெல்லாம் நானே அழிக்கவேண்டியதாகி விட்டது. கணக்கு தவறு என்றால் அழித்துதானே ஆகவேண்டும்.

படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு பலர் படைத்தவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.வணங்கிவிட்டால் போதும் கடமையை முடித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் நானுமிருந்தேன்.

இறைவன் எண்ணத்தில் இருக்கிறானா? அல்லது என்னிடமும் இருக்கிறானா(?) என்ற கேள்வி என்னைப்பற்றி நான் அறியும்போது எழுந்த சந்தேகங்கள். இறைவன் மேலானவன் என்பதற்காக ஆகாயத்தில் அமர்ந்திருப்பதாக பலரைப்போல் நானும் மேலேப் பார்த்த காலமும்முண்டு.

இறைவனின் அசலான பெயரை உச்சரிக்கும் பலர் இன்னும் கற்பனையாகத்தான் அவனை வைத்திருக்கிறார்கள்.அஸ்திவாரம் சரியாக இல்லாததினால்தான் இன்றும் பல அமைப்புகளாய் ஒன்றுமையில்லாமல் உலகளவில் சாந்தியாளனாக திகழவேண்டியவர்கள் தீவிரமாக வாழ்கிறார்கள்.

எதையுமே பயில்வதற்கு ஒருவர் வேண்டும் அந்த ஒருவர் குருவாக விளங்க வேண்டும் அந்த குருவிடம் தன்னைபடிக்க வேண்டும் தன்னைப்படிக்காமல் வேறு எதைப்படித்தாலும் அதில் சாந்தம் இருப்பதில்லை சாந்தமில்லா மனிதனிடம் மனிதம் நிலைப்பதில்லை.
ஞானம் என்பது கடல் அள்ள அள்ள வந்துக்கொண்டே இருக்கும் தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஏனெனில் மனிதன் ஒரு புதையல்.தன்னிடம் இருப்பதை விட்டுவிட்டு வெளியில் தேடுகிறான்.

அப்படி வெளியில் இருந்த என்னை உள்ளுக்குள் அழைத்த நண்பர் முஹம்மது சபீரை நான் எப்படி மறப்பேன்.இவர் படித்தவர் தன்னையும் இன்னும் படித்துக் கொண்டிருப்பவர் ஞானத்தையும் ஆனால் வங்கியின் மேலாளராக வளைகுடாவைச் சுற்றி பல நாடுகளில் பணிப்புரிந்தாலும் கனடா இவரை தனது பிரஜையாக்கி தற்போது அவர் அங்கே தொழிலதிபராக திகழப்போகின்றவர் அவருடைய வளமான வாழ்விற்கும் நிறைவான மனதிற்கும் வாழ்த்துக்கள்.

ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படி கிடைத்தவர்கள் அதைப்பயிலாமல் சென்றால் அவர்களின் வாழ்க்கையில் சாந்தி நிலைப்பதில்லை.

எதையும் புதிதாக கேள்விப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனம் அவ்வளவு எளிதில் வருவதில்லை.பல ஆராய்ச்சிகள் பலரிடம் அதைப்பற்றிய வாதங்கள் செய்து விதண்டாவாதங்களும் செய்வோம் அப்படித்தான் ஞானப்பாட்டையின் ஆரம்ப நாட்கள்.

நான் விளங்கி வைத்திருந்த வாதங்கள் தலைக்குனிந்தது மரத்தின் வேர்களைக் காணவேண்டுமானால் தோண்டித்தான் பார்க்கவேண்டும் மரத்திற்கு வேரே இல்லை என்பது மடமை அப்படித்தான் பல விசயங்களை தோண்டாமலேயே விதண்டா வாதம் செய்தேன்.
இதற்கெல்லாம் பதிலளித்தார் சபீரின் நண்பர் மதுக்கூர் முஹம்மது காலீது. (பின் நாட்களில் எனக்கும் நண்பரானவர்)

ஹவுஸ்பாய் பணியில் ஓய்வு நேரத்தில் முஹம்மது காலீது அலுவலகத்திற்கு சென்றுவிடுவேன்.அந்த சமயத்தில் அவரின் அலுவலகத்தில் அவர் மட்டுமே இருப்பார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக தினமும் எங்களின் வாதங்கள் தொடந்தது.
ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் இருவரும் வாதம் புரிந்துள்ளோம்.
ஞானப்பாட்டைக்கு கைகாட்டியவர் முஹம்மது சபீர் அதனுள் அழைத்துச் சென்றவர் முஹம்மது காலீது அவர்கள்.

இவர்கள் இருவரின் நட்பு இறைவன் எனக்களித்த கொடை.

அமீரகம் என்னை ஆளாக்குவது தொடர்வோம்…

No comments:

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....