உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, March 21, 2011

துரிதமாக ஒரு பயணம் துருக்கி வரையில்...

குறிப்பு - இது தொடரல்ல நீளமான பதிவு

துருக்கி இஸ்தாம்புலில் நடக்கவிருக்கும் தங்க நகைகளின் 2011 கண்காட்சியை காண்பதற்கும், புதிய டிசைன்களை தேர்வு செய்வதற்கும் நான்கு தினங்கள் அலுவலக பணியாக நான் சென்றிருந்தேன்.

பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னோடு துபாயிலிருந்து எமிரேட்சில் இஸ்தாம்புலுக்கு பயணம் செய்தார்கள். பல இந்தியர்களும் அதில் இருந்தாலும் சில தமிழர்கள் தமிழில் பேசிய சப்தம் கேட்கவே எனக்குள் பரவசம், நான் தனிமைப்பட்ட உணர்வை அந்த தமிழர்களின் பேச்சு நீக்கியது. அவர்கள் யார்? என்ன ஏது என்ற விபரமோ, அறிமுகமோ செய்துக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் உரையாடிய தமிழ் என்னை சந்தோசப்படுத்தியது, நம்பிக்கை ஊட்டியது ஆம் தாயோடு பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது நமது தாய்மொழி.

விமானத்திலிருந்து இந்த பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன் எமிரேட்சில் எந்த நாட்டுக்கு பயணம் செய்தாலும் தமிழ் படம் இரண்டு ஒளிபரப்புகிறார்கள் அட்டவணைப்படி இந்த மாதம் ஜக்குபாய், அசல் இரண்டு படங்களைப் பார்த்தேன்.

இதன் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து பதிவுசெய்கிறேன்.
என்னை அழைப்பதற்கு எங்கள் நட்புக் கம்பெனியின் ஊழியர் நண்பர் ஆர்தோ துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் வந்திருந்தார்.விமான நிலையத்தில் வெப்பத்தை உணர்ந்த நான் வெளியில் வந்ததும் குளிரை சுவாசித்தேன். ஆம் 17 டிகிரி இது சாதாரணம் என்கிறார்கள் துருக்கியர்கள் மைனஸ் எல்லாம் வருமாம்.

மாலை 6.00 மணிக்கு துருக்கி விமான நிலையத்திலிருந்து நான் தங்கப்போகும் வாவ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். விமான நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தான் வாவ் ஹோட்டல் இதற்கு எதிர்புறம் தான் நகை கண்காட்சியின் அரங்கம் இருக்கிறது எளிதாக ஐந்து நிமிடத்தில் நடந்துவிடலாம்.

ஹோட்டலில் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அதிகநேரம் எடுக்கவில்லை சில நிமிடங்களில் 17 வது மாடியின் அறை சாவியை தந்தார்கள்.

அறையின் ஜன்னல் வழியாக கிழக்கு பகுதி துருக்கியை காணமுடிந்தது சாலைகளில் வாகனங்கள் எந்தநேரமும் சென்றுக்கொண்டே இருந்தன சில தருணங்களில் வாகன நெரிசல் டிராபிக் இருந்தது.


இரவு 8.00 மணிக்கு அறையிலிருந்து ஹோட்டல் உணவகத்திற்கு வந்தேன் துருக்கி நாட்டு உணவுதான் வைத்திருந்தார்கள் சுவையாகதான் இருக்கும் ஆனால் சுவைப்பதற்கு பசி அவ்வளவாக இல்லை அருகில் சூப்பர் மார்கெட் இருக்கிறதா என்று வினவினேன்.நான் மறந்துபோன பல்பேஸ்ட் வாங்குவதற்கு.

நடக்கும் தூரத்தில் ஏதும் இல்லை சில மைல்கள் போகனும் மெட்ரோ இரயிலை உபயோகப்படுத்துங்களேன் என்றார்கள்.

என்னை அழைப்பதற்கு வந்த நண்பர் ஆர்தோ தனியாக செல்ல வேண்டாம் ஏமாற்றுவார்கள் என்று கூறிவிட்டு போன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது.இருந்தாலும் ஒரு குருட்டு தைரியத்தில் ஹோட்டலில் இருந்து புறப்பட்டேன்.

மெட்ரோ ஸ்டேசன் வரையில் நடப்பதற்கு 7 நிமிடங்கள் ஆகின விளக்கு வெளிச்சம் ஏதும் இல்லை மனமெல்லாம் பயம் இருந்தாலும் ஒரு நம்பிக்கை அவ்வபோது தைரியத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.ஏதும் நடக்காது அப்படி நடந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.
மெட்ரோ ஸ்டேசன் வந்துவிட்டேன் எந்த ஸ்டேசனில் இறங்குவது எந்தப்பக்கம் போகும் இரயிலில் ஏறுவது குழப்பம்.
டிக்கெட் எடுக்கும் மெசின் அருகில் நின்று கொண்டிருந்தேன்.இரவு நேரம் என்பதால் ஒன்று இரண்டு நபர்கள் தான் வருவதும் போவதுமாக இருந்தார்கள் .நான் நிற்பதை பார்த்து விட்டு இருவர் துருக்கி மொழியில் விசாரித்தார்கள் நான் ஆங்கிலத்தில் பேச அவர்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கொஞ்சம் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் பேசினார்கள் சூப்பர்மார்கெட் போகவேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவர்களும் இரண்டு ஸ்டேசனுக்கு பிறகு இறங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

இந்த மெட்ரோவில் என்னைத் தவிர அனைவரும் குளிருக்காக வேண்டி ஜாக்கெட் அணிந்திருந்தார்கள் அந்த ஒன்றே என்னை அன்னியனாக அனைவருக்கும் மத்தியில் காட்டிக்கொடுத்தது. எந்த நாடு என்று என்னை விசாரித்தார்கள் இந்தியா என்றேன் இஸ்தாம்புல் எப்படி இருக்கிறது? கேட்டார்கள் நல்ல மனிதர்கள் வாழக்கூடிய நகரம் என்றேன் கை குலுக்கினார்கள்.

அவர்களிடமிருந்து விடைப்பெற்று ஸ்டேசனில் இறங்கினேன். மெட்ரோவில் எந்த ஸ்டேசனில் ஏறி இறங்கினாலும் ஒரு லிரா 75 குருஸ் ஒரே தொகைதான். (துருக்கியின் பணத்திற்கு லிரா என்றும் காசுக்கு குருஸ் என்றும் அழைக்கிறார்கள்) இறங்கி ஸ்டேசனின் வெளியில் நடந்தேன் அப்படியே நமது சிங்கார சென்னையின் நினைவைத் தந்தது.பிளாட்பாம் கடைகள் ஏராளம் இருந்தது கூட்டம் நெரிசல் இருந்தது ரோட்டைக் கடப்பதற்கு பாலத்தின் வழியாக நடந்தேன் பாலத்தின் இரு பக்கங்களிலும் கடைகள் இருந்தன.கடந்துச் சென்றேன் உணவகங்கள் வரிசையாக இருந்தது அதன் அமைப்பு கிட்டத்தட்ட தமிழர்களின் உணவகங்கள் போலவே அமைந்திருந்தது.

அதைப்பார்த்ததும் மனசுக்கு சென்னையில் இருப்பதைப்போன்ற உணர்வு இருந்தது.

இன்னும் தஞ்சைப் பகுதியில் இஸ்லாமியர்களை துலக்கர்கள் என்று அழைப்பதுண்டு. அது துருக்கியிலிருந்து வணிகத்திற்காக இந்தியா வந்து குறிப்பாக தமிழகத்தில் அதிகமான வணிகம் செய்தவர்கள் துருக்கியர்கள்.காலப்போக்கில் தமிழகத்திலேயே அவர்கள் தங்களின் வாழ்கையை அமைத்துக் கொண்டு நிரந்தரமாக தங்கினார்கள் அவர்களை துருக்கர்கள் என்று அழைத்து வந்தனர் நாளடைவில் அது துலக்கர் என்று மறுவி விட்டது.அந்த துருக்கியர்கள் வடிவமைத்த உணவகங்கள்தான் இன்றும் நமது தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது.

துருக்கியில் சமதளமான தெருக்கள், சாலைகள் இல்லை மேடு, பள்ளம் நிறைந்தாக இருக்கிறது. நான் நடந்துச் சென்ற அந்த தெருவின் எல்லையில் ஒரு சூப்பர்மார்கெட் இருந்தது பல்பேஸ்ட் வாங்கிக் கொண்டு கிங் பர்கரில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மெட்ரோவை நோக்கி நடந்தேன். சரியாக நான் இறங்க வேண்டிய ஸ்டேசனில் இறங்கி ஹோட்டலுக்கு வந்துச் சேர்ந்தேன்.

மறுதினம் அதிகாலையில் துபாயில் கண்விழிப்பதைப் போன்றே 6.00 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது காலை தொழுகையை நிறைவு செய்துவிட்டு லெப்டப்புடன் அனுபவங்களை பதிவு செய்ய தொடங்கினேன்.

நகை கண்காட்சி நடக்கும் அரங்கத்திற்கு புறப்பட்டேன் காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்தது.சில நிமிடங்கள் நடந்தேன் அரங்கத்தின் வாயிலில் சரியான கூட்டம் அதனால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தது. விசிட்டர்கள் தங்களை பதிவு செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசிட்ங் கார்டு கொடுக்க வேண்டும் இதைக் கொடுத்து விசிட்டர் நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும் இதைப் பெறுவதற்கு சுமார் மூன்று மணிநேரம் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தோம். எனக்கு முன்னால் சில தமிழ் முகங்கள் நின்றுக் கொண்டிருந்தன பரிச்சயமில்லாதவர்கள் இருந்தாலும் அவ்வபோது எங்களின் பார்வை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவிதம் நீயும் தமிழனா நானும்தான் என்பதை போல இருந்தது.

ஒவ்வொரு விசிட்டர்களையும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்கிறார்கள் அதன் நகலை நுழைவுச் சீட்டாக தந்தார்கள்.இந்த கண்காட்சிக்காக பல நாடுகளிலிருந்து பார்வையாளராகவும் சிலர் அங்கு ஸ்டால் அமைத்து வர்த்தகம் செய்வதற்கும் வருகைப் புரிந்திருந்தார்கள்.

இத்தாலி நாட்டில் ஆண்டு தோறும் பிப்ரவரியில் நகை கண்காட்சி நடக்கும் அதுதான் பிரமாண்டமாக இருக்கும் அதற்கு அடுத்தபடியாக துருக்கி இஸ்தாம்புலில் இந்த ஷோ இதில் நமது இந்திய சகோதரர்கள் குஜராத்திகள் வெள்ளி நகைகள் மற்றும் கலர் கற்கள் வைத்து ஸ்டால் அமைத்திருந்தார்கள்.

ஒரு இந்தியரின் ஸ்டாலில் புத்தகமாக இருந்தது அருகில் சென்று விசாரித்தேன் அவர் கூறினார் நகைகளின் டிசைன்கள் அடங்கிய நூற்கள் மற்றும் பல ஆங்கில சிற்றிதழ்களில் புதிய வடிவத்தில் வெளியான நகைகளின் டிசைன்கள் அடங்கிய இந்த நூல்களை மட்டுமே விற்பனை செய்கிறார் மும்பையைச் சேர்ந்த சகோதரர்.

பெரும்பாலானவர்கள் பார்வையாளர்களுக்கு தங்களின் டிசைனின் கேட்டலாக்குகளை அழகான பைகளில் வைத்து தங்கள் ஸ்டாலின் முன் வைத்துவிடுகிறார்கள் தேவையானவர்கள் அதை எடுத்துச் செல்லலாம். அனைத்து ஸ்டால்களிலுமே இனிப்பு வகைகளை வைத்து வரக்கூடிய பார்வையாளர்களை உபசரிக்கிறார்கள்.

பெரும்பாலான ஸ்டால்களில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பார்வையாளர்களுடன் ஆங்கிலம் மற்ற மொழிகளை உரையாடுவதற்கு துருக்கிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் பிள்ளைகளை உலாவரச் செய்துள்ளார்கள் சிலர் தங்களின் நகைகளை அந்த இளம் பெண்களுக்கு அணிவித்து அதன் அழகை கண்டு ஆர்டர்களை பெறுவதற்கும் ஸ்டாலின் வாயில் நிறுத்தி இருந்தார்கள்.நாம் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக அவர்கள் பதில் சொல்வதில்லை அந்த ஸ்டாலின் உரிமையாளரிடம் கேட்டு பதிலளிக்கிறார்கள் பெரும்பாலன துருக்கியர்களுக்கு ஆங்கிலமொழி தெரியவில்லை.

நகைகண்காட்சி நடக்கும் அந்த அரங்கம் மிக நீளம் அகலமுமானது ஆதலால் பகுதி பகுதியாக பிரித்து வைத்திருக்கிறார்கள் முழுவதையும் சுற்றி பார்க்க கால்கள்தான் வேண்டும் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகளும் உணவகங்களும் இருக்கின்றன.

நான் சுற்றி பார்த்தவரையில் புதிய டிசைன்கள் சில இருந்தன அவைகள் எடைக்குறைவாகவும் கற்கள் இல்லாத டிசைனாகவும் அனைவரும் எளிதில் வாங்கக் கூடிய டிசைனாகவும் பார்த்து தேர்வு செய்து வைத்துள்ளேன் அதன் செய்கூலி அதிகமாக இருக்கிறது முதல் சுற்று பேச்சுவார்த்தை அந்த வணிகருடன் முடித்துள்ளேன் இரண்டாவது சுற்று பேச்சு வாரத்தை நாளை நடத்துவேன் இதற்கிடையில் எனது கம்பெனியின் நிறுவனரும் நாளை கண்காட்சிக்கு பார்வையிட வருகிறார் அவருடன் கலந்து இறுதியாக ஆர்டர் செய்வோம்.

மாலை ஏழு மணியுடன் கண்காட்சி அரங்கம் மூடப்படும் மீண்டும் மறுநாள் காலை 10.00 மணிக்கு திறப்பார்கள்.அன்று மாலை மழை பெய்திருந்தது இரவு ஆர்த்தோ துருக்கி நண்பர் எனக்கும் அவருடைய வாடிக்ககையாளர்களான துபாய் மஹல்லாத்தி ஜூவல்லரியில் பணிப்புரியும் இந்தியர்களுக்கும் விருந்தளித்தார். அங்குள்ள உணவகங்கள் பெரும்பாலும் பெரிதாகவே அமைத்திருக்கிறார்கள். ஒரு உணவகத்திற்குள் சென்றால் சுமார் 500 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்கு இடவசதிகள் இருக்கின்றன.


துருக்கி உணவு மிகவும் சுவைமிக்கதாக இருக்கிறது கத்தரிக்காய் என்றாலே எனக்கு பிடிக்காது ஆனால் அதே கத்தரிக்காயை இவர்கள் சமைத்து வைத்திருந்த விதம் மிகவும் ருசியாக இருந்தது பச்சை காய்கறிகளை மிகவும் பக்குவப்படுத்தி ருசியை கூட்டி செய்திருக்கிறார்கள் மாமிசங்களும் மிருதுவாகதான் இருந்தன ஆனால் பச்சை காய்கறியின் மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் எனக்குள் துருக்கியர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.

உணவுக்கு துருக்கியர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் ஒரு பொருளை ஒரேமாதிரி சமைப்பதில்லை பலவிதமான ருசிகளில் சமைத்து அந்த பொருளை விரும்பாதவர்களையும் விரும்ப வைக்கக் கூடிய தந்திரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் விரைவில் உணவுக்காக ஒரு ஷோ ஏற்பாடு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.( அப்படி ஒரு ஷோ நடத்தினால் எவ்வளவு சிலவானாலும் சரி கண்டிப்பாக அம்மணியை அழைத்துக் கொண்டு வந்துவிடுவேன்.)

விருந்துக்கு வந்த ஆர்த்தோ வாடிக்கையாளர்களான ஹைதராபாத்தைச் சார்ந்த சகோதரர்கள். இவர்கள் ஏற்கனவே எனக்கு பரிட்சையமானவர்கள்தான் அவர்களும் துபை கோல்டு மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் ஒன்றாக சந்தித்து உணவருந்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

இரவு உணவருந்திவிட்டு வரும் வழியில் நல்ல மழைபெய்தது அதனுடன் குளிரும் சேர்ந்து எங்களை குளிரவைத்தது.விடுதிக்குள் வந்து வெப்பமூட்டும் மெஷினின் காற்றை அறைக்குள் நிரப்பி உறங்கினேன்.

விடிந்தது பொழுது எனது அறையின் ஜன்னல் வழியாக காலைக்கதிரவனின் உதயத்தையும் கனமில்லாத கருணையாக பெய்துக் கொண்டிருந்த மழையையும் என்னால் கண்டு ரசிக்க முடிந்தது.


வழக்கம்போல இரண்டாம் நாளாக கண்காட்சி அரங்கத்திற்கு சென்றேன் முதல் நாள் கூட்டத்தைவிட இன்று கொஞ்சம் அதிகமாக இருந்தது.இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஜூம்ஆ தொழுகைக்கு செல்லவேண்டுமே எப்படி எங்கு யாருடன் செல்வது என்ற சிந்தனை அதிகாலையிலிருந்தே இருந்துக் கொண்டிருந்தது.

துருக்கியின் மிகவும் பிரபல்யமான சுல்தான் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை புரியவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது ஆனால் இன்று எனது கம்பெனியின் நிறுவனர் அதாவது முதலாழி வருகிறார் என்னை கண்காட்சியில் சந்திப்பதாக கூறியிருந்தார் எந்த நேரத்தில் தொலைபேசியில் தொடர்புக் கொள்வார் என்று தெரியாததினால் அங்கு சென்று வருவதற்கு காலம் போததாது என்று தெரிந்ததால் இன்னொரு வாய்ப்பை எதிர்பார்த்து என்எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

கண்காட்சியை வலம் வந்துக் கொண்டிருந்தபோது துபாயில் அசினா ஜூவல்லரியில் பணிப்புரியும் தமிழ் நண்பர்கள் அய்யுப் மற்றுமொருவர் நின்றுக் கொண்டிருக்க அளவிலா ஆனந்தத்துடன் இரண்டு தினங்களுக்குபிறகு அவர்களுடன் தமிழில் பேசுவதற்கு வாய்ப்பாக இருந்தது. சில நிமிடங்களில் அவர்களும் விடைப்பெற்று சென்றார்கள்.

ஹால் எண் 3-ல் ஜூம்ஆ தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுப்பு செய்தார்கள் குழப்பத்துடன் இருந்த நான் மகிழ்ச்சியுடன் தொழச்சென்றேன்.ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கு தொழுதக் காட்சி மனதில் பிரமாண்டத்தை தோற்றிவித்தது.

சரியாக தொழுகை முடிந்து சில நிமிடங்களில் எனது கம்பெனியின் பாஸ் என்னை அழைக்க அவரைச் சந்தித்தேன்.நேற்று நான் நகைகளை தேர்வு செய்த கம்பெனிகளுக்கு பாஸ்சுடன் சென்று எங்களின் ஆர்டர்களை உறுதி படுத்திக் கொண்டோம் அதில் ஒரு சப்ளையர் இன்று இரவு தங்கள் கம்பெனி நடத்தும் பேஷன் ஷோவிற்கும் அங்கு நடக்கும் இரவு விருந்துக்கும் எங்களை அழைத்தார் அவர் தந்த இன்விட்டேசனை பெற்றுக் கொண்டு சில மணி நேரங்கள் என்னுடன் உலாவந்த பாஸ் அவருடைய நண்பர்களை கண்டதும் என்னிடமிருந்து விடைப்பெற்றார் நாளை சந்திப்போம் என்று!

நாளை வெளியில் சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்த எனது திட்டத்தில் இடி விழுந்ததினால் உடனடி தீர்மானம் செய்தேன் இப்பவே புறப்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்துவிடாலாம் எனது குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வேறு வாங்கவேண்டும் என்பதினாலும் சந்தர்பத்தை கிடைத்த நேரத்தை நழுவவிடாமல் மாலை 6.00 மணிக்கு புறப்பட்டேன்.

இஸ்தாம்புல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நான் அங்கிருந்து கிராண்ட் பஜார் என்று அழைக்கும் பழைமை வாய்ந்த அந்த மார்க்கெட்டிற்கு டெக்ஸியில் செல்வதாக இருந்தால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஆகும் என்றார்கள் காரணம் டிராபிக். ஆனால் மெட்டோவில் சென்றால் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம் என்றதும் நான் மெட்ரோவை தேர்வு செய்தேன்.

ஸ்டேசனில் நின்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் கிராண்ட் பஜார் செல்ல வேண்டும் எந்த ஸ்டேசனில் இறங்கனும் என்று கேட்டேன் அவருக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியவில்லை ஆனால் அவர் அருகில் நின்றுக் கொண்டிருந்த துருக்கியர்களிடம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறீர்களா என்று கேட்டு இருவரை அழைத்துவந்து என்னிடம் பேச வைத்தார்.

நான் போகவேண்டிய இடத்தை சொன்னதும் செல்லும் வழியில் இன்டர்சேன்ஜ் இருக்கிறது நீங்கள் இன்னொரு இரயில் மாறவேண்டும் என்று கூறிவிட்டு நான் கிராண்ட் பஜாரை கடந்து தான் செல்கிறேன் அந்த நிறுத்தத்தில் உங்களை இறக்கிவிடுகிறேன் என்றதும் துருக்கியர்களின் பண்பாட்டை எண்ணி மிகைத்தேன்.

மேட்ரோவிலிருந்து இன்டர்சேன்ஜில் மற்றொரு ஸ்ட்ரீட் மெட்ரோவிற்கு மாறினேன் இந்த ரெயில் கார் பஸ் போகும் ரோட்டிலேயே சில இடங்களில் மட்டும் செல்கிறது பெரும்பாலான இடங்களில் தனிச் சாலையில் செல்கிறது.

மேட்ரோ எந்தந்த ஸ்டேசனில் நிற்கும் என்ற இடத்தின் பெயர்களைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள் அதில் நான் ஏறிய ஸ்டேசனையும் இறங்க வேண்டிய ஸ்டேசனையும் துருக்கி நண்பர்கள் காண்பிக்கவே அதை துருக்கி மொழியிலேயே ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டேன்.கிராண்ட் பஜாரில் இறங்கி எந்தப் பக்கம் போக வேண்டும் என்று தெரியாமல் நடந்தேன் எதிரில் பழைமையான பிரமாண்டமான பள்ளிவாசல் தெரிய அதனுள் சென்றேன் அது சுல்தான் பள்ளி தொழுதேன் வேலைபாடுகள்நிறந்த கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. அதை பார்த்துவிட்டு மார்கெட் பக்கம் நடந்தேன் மிக நீளமான தெரு இரு பக்கங்களிலும் கடைகள் இந்த பகுதி வர்த்தகர்கள் அரபி மொழியும் ஆங்கிலமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு பொருளுக்கு விலைக்கேட்டால் நமது மொழியை வைத்தே நாம் சுற்றுலாவாதி என்பதை மோப்பம் பிடித்து விலையை அதிகமாக கூறுகிறார்கள் இங்கு பேரம் பேசிதான் பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது.

துபாய் மார்கெட்டை ஒத்துப்பார்த்தோமேயானால் துருக்கி மார்கெட் விலை அதிகம் என்றே கூறலாம். பொருட்களின் தரம் நல்லதரமானதாகவே தெரிந்தது அதனாலேயே விலை அதிகம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

இரவு ஒன்பது மணிவரையில் சுற்றிவிட்டு மீண்டும் மெட்ரோ பயணம் ஆனால் யாரிடமும் வழி கேட்கவில்லை வந்த வழியை தெரிந்துக் கொண்டேன் வரும் வழியில் குளிர் என்னை நன்றாக நோவ புடைத்தது.

இன்று மூன்றாவது தினம் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது ஹோட்டல் அறையில் வெப்பக்காற்று இயந்திரம் இருப்பதால் வெளியில் சீதோசனம் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை காலை 10.30 க்கு கண்காட்சி அரங்கத்திற்கு புறப்பட்டேன் ஹோட்டலை விட்டு வெளியில் வந்தேன் ஜில்லென்று என்னை வைத்து குளிர் சாதனப்பெட்டியில் திணித்ததைப் போன்று இருந்தது நான் விடும் மூச்சு காற்று புகையாகவே வெளியில் வந்தது இன்று 7 டிகிரி குளிர்.

கண்காட்சி அரங்கில் உலாவந்தபோது சவுதிஅரேபிய நாட்டைச் சேர்ந்த எங்களின் வாடிக்கையாளரை சந்தித்தேன் என்னைக் கண்டதும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்னுடனேயே கண்காட்சி அரங்கத்தில் உலாவந்தார்கள்.

முதல்தினம் பரிச்சயமில்லாத தமிழ் முகங்களை கண்ட நான் அவர்களை இப்பொழுது நேருக்கு நேராக ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம். கொஞ்சமும் தாமதிக்காமல் ஆங்கில மொழியில் பேசாமல் நேரடியாக நீங்க எந்த ஊர் என்று தமிழில் என்னை விசாரிக்க நான் பதில் சொல்ல எங்களின் விசிட்டிங் கார்டுகளை பரிமாறிக்கொண்டோம்.

கோயமுத்தூரிலிருந்து ஐந்துபேர்கள் இந்த கண்காட்சியை காண்பதற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். இவர்கள் நகை பட்டறைகள் வைத்திருக்கிறார்கள் இந்த கண்காட்சியில் புதிய டிசைன்களை காண்பதற்கும் அவர்களின் டிசைன்களை காட்டுவதற்கும் வருகைப் புரிந்ததாக கூறினார்கள் மகிழ்வுடன் கை குலுக்கிக் கொண்டு விடைபெற்றோம்.
மாலை பேஷன் ஷோவிற்கு அழைத்த சப்ளையரின் அழைப்புக்கு போக முடியவில்லை என்னுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சவுதியர்கள் இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள். போகும் வழியில் ஷாப்பிங் மால் சென்றோம் கூட்டம் அதிகமாக இருந்தது அது வாரத்தின் இறுதி நாள் சனிக்கிழமை இரவு விடிந்தால் விடுமுறை என்பதால் மக்கள் தங்களின் நேரத்தை மாலில் கழித்தனர். ஓவ்வொரு பொருளின் விலையை பார்த்தால் அங்குள்ளவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை நமக்குதான் எக்சேன்ஜ் ரேட் எகுறுகிறது சுற்றினோமே தவிர ஒன்றும் யாரும் வாங்கவில்லை.


எங்களை இரவு விருந்துக்கு அழைத்துச் சென்ற சப்ளையர் ஒன்னரை மீட்டர் கபாப் ஆர்டர் செய்து திகைப்பூட்டினார். நம்ம ஊரில் விஜிபியில் நீளமான மெகா தோசையை அறிமுகம் செய்திருந்தார்களே அதுபோல ஒன்னரை மீட்டர் நீளத்திற்கு கபாப் அதாவது ஆட்டுக்கரியை அரைத்து இன்னும் சில பொருட்களை கலந்து அதை நெருப்பில் சுட்டு இப்படி வைத்தார்கள். கபாப் சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் இது நீளம் பெரிது எப்படி இவ்வளவு பெரிய காபாபை சாப்பிடப்போகிறமோ என்று ஆச்சரியப்பட்ட எனக்கு அரைமணியில் காளியாகிபோனது ஆச்சரியமாக இருந்தது.

இரவு 12 மணிக்கு இஸ்தாம்புல்லை காரில் அமர்ந்து சுற்றிப்பார்த்தேன் சுமார் இரண்டு கோடி மக்கள் இஸ்தாம்புல் நகரத்தில் வாழ்கிறார்கள். இதில் ஒரு பகுதி ஆசிய கண்டமாகவும் ஆற்றின் பாலத்தை கடந்து மறுபுறம் ஐரோப்பிய கண்டமாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு பெண்கள் இளம் தலைமுறைகள் பெரும்பாலோர் நமது இந்திய கலாச்சாரமான மூக்குத்தி அணிவதையும் புகைப்பதையும் புதிய நாகரீகமாக கருதுகிறார்கள்.
ஐரோப்பிய கலாச்சாரம் இவர்களிடம் அதிகம் தென்பட்டாலும் ஒரு எல்லைக்குள் நிற்கிறார்கள் துருக்கிய இஸ்லாமிய நாடு என்பதால் 90 சதவீதத்தினர் இஸ்லாமியர்களாக வாழ்வதினால் இஸ்லாமிய கட்டுப்பாட்டுக்குட்பட்டு வாழ்கிறார்கள்.

நான்காம் நாளான இன்று பகல் 12 மணிக்கு எனது துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு ஹோட்டலை செக்அவுட் செய்துவிட்டு விமானநிலையத்தை நோக்கி புறப்பட இருக்கிறேன் இதுவரையில் ஹோட்டல் அறையிலிருந்து பதிவு செய்துக் கொண்டிருக்கிறேன் .
இனி துருக்கி விமான நிலையத்தில் நேரம் கிடைத்ததால் இதோ உங்களுடன்…
பெரிய விமான நிலையமாகவும் டூட்டி ப்ரீ கடைகள் தனித்தனியாகவும் இருக்கிறது.

பல மணிநேரங்கள் டிரான்சிட் பயணிகளாக அமர்ந்து இருப்பவர்களுக்கு ஐந்து ஈரோவில் இயந்திர மசாஜ் செய்துவிடுகிறார்கள்.

டூட்டிப்ரீயில் எதை வாங்கினாலும் ஈரோவின் விலையை தான் லேபிளில் இருக்கிறது.
துருக்கி நாடு சுற்றிப்பார்க்ககூடிய வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் நிறைந்த நாடு ஆனால் விலைவாசி தங்கும் அறைவாடகை மற்றும் டெக்ஸ உணவு இவைகளை துபாயுடன் இணைத்து பார்க்கும்போது விலை துருக்கியில் அதிகமாக இருக்கிறது.

சுற்றுலாவில் நாட்டமுடையவர்கள் பட்ஜெட் விமானத்தில் துருக்கி ஒருமுறை வந்து போகலாம் மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரையில் கோடைகாலமாக இருக்கும் மற்ற மாதங்களின் சீதோசனம் குளிரும் வாடைக்காற்றுமாக இருக்கும் தொழில் விசயமாக நான் துருக்கி வந்திருந்தாலும் பார்க்கவேண்டிய பழைமைமிக்க மியூசியத்தை மிஸ் பண்ணின வருத்தம் என்னிடம் இருக்கத்தான் செய்கிறது குடும்பத்துடன் வரவேண்டுமென்ற ஆவலும் இருக்கிறது.

இறைவன் நாட்டமிருந்தால் இன்னொருமுறை துருக்கி வருவேன்.!
இந்த பதிவை துருக்கியில் எழுதத்துவங்கிஅங்கேயே நிறைவு செய்துவிட்டு விமானத்தில் ஏறப்போகின்றேன்.

துருக்கியின் இணையதளத்தில் பிளாக்ஸ்போட்டிற்கு தடை செய்துள்ளார்கள் இதை போஸ்ட் செய்வதற்கு முயற்சித்தேன் முடியவில்லை துபாயிலிருந்துதான் இதை போஸ்ட் செய்வேன்.
இவ்வளவு தூரம் ஆர்வத்துடன் படித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியை சமர்பிக்கின்றேன்.

29 comments:

குசும்பன் said...

பாய் வழக்கம் போல் பதிவு அருமை...என்ன இந்த முறை அலுவல் விசயமாக சென்றதால் சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்களை பற்றியவிவரங்கள் மிஸ்ஸிங்.

அப்புறம் கண்காட்சியிலிருந்து எனக்கு அன்பளிப்பு கொடுக்க வாங்கி வந்திருக்கும் வைரம் பதித்த 500000திர்ஹாம் மதிப்புடைய கைக்கெடிகாரத்தை வந்து வாங்கிக்க நேரம் இல்லை...பத்திரமாக வைத்திருங்கள், இரு தினங்களில் வந்து வாங்கிக்கிறேன்:)))

கிளியனூர் இஸ்மத் said...

வாங்க வாங்க குசும்பா உங்களின் அன்பளிப்பு ரெடியாக இருக்கு தனியா வாங்க நன்றி.

ஜோதிஜி said...

நீளம் அகலம் என்று யோசிக்காமல் நினைத்த நடந்த அத்தனை நிகழ்வுகளையும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். நிச்சயம் உங்களைப் போன்றவர்களால் என்னுடைய வலைபதிவுகள் வாசிக்கும் பழக்கம் இன்னமும் இருக்கிறது என்பதும் உண்மை. நன்றிங்க.

துருக்கி ஆய்த்த ஆடை எதிர்பார்க்கும் தரம் அதிகம். ஆனால் கொடுக்கும் விலை குறைவு. பெரும்பாலும் இலங்கையை நம்புகிறார்கள். ஆமாம் ஏன் இடுகையை அனுமதிக்கவில்லை. இதைப்பற்றி விபரங்கள் அடுத்த முறை எழுதவும்.

ஆரூர் முனா செந்திலு said...

அட பிரமாதம் போங்க. அசத்திடீங்க. உண்மைலேயே நல்லா இருக்கு.

R.Ravichandran said...

Good posting

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி ஜோதிஜி முயற்சிக்கிறேன்.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி ஆரூர் முனா செந்திலு

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி ஆர்.ரவிச்சந்திரன்

nidurali said...

Maasha-Allah
You are the gifted person.
Jazakallah Khayran

JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an Arabic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness." Although the common Arabic word for thanks is shukran (شكراً), jazakallahu khayran is often used by Muslims instead in the belief that one cannot repay a person enough, and that Allâh Ta'ala is able to reward the person best.

மாயவரத்தான்.... said...

நல்லதொரு பயணக் கட்டுரை!

வடுவூர் குமார் said...

மனைவி பேச்சுக்கொடுத்தாலும் விடாமல் படித்து முடித்தேன்.வெஜிடேரியன் என்றால் படாதபாடு படனும் என்று நினைக்கிறேன்.

nidurali said...

மனம் துடிக்கின்றது எனது(நமது ) வலைப்பூவில் மறுபதிப்பு செய்ய .சிறுது நாள் சென்று அவசியம் செய்துவிடுவேன் .
உடன் செய்வது முறையல்ல

abdur said...

Super Sir....

Barari said...

ஆனந்த விகடனில் மணியன் எழுதும் பயண கட்டுரை போல் மிக சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துகள்.

கீழை ராஸா said...

ஏர்போர்ட்டிலிருந்து பயணம் சொல்லி கிளம்பி விட்டாலும்...கூடவே அழைத்துச் சென்று துருக்கியை காட்டியிருக்கிறீகள்...அருமையான கட்டுரை...நீங்கள் குளிரில் செல்லும் போது குளிரை அனுபவித்து, ஒன்றரை மீட்டர் கபாபை தங்களுடன் பகிர்ந்துண்டு, பயணம் முழுதும் தங்களுடன் பயணித்த உணர்வைத் தரும் வகையில் இந்தக் கட்டுரை இருந்தது...நன்றி கலந்த வாழ்த்துக்கள்..பாய்..

நாஞ்சில் பிரதாப்™ said...

இஸ்மத் பாய் கலக்குறீங்க போங்க...:))
மெட்ரோல் ஏறிப்போய் பேஸ்ட் வாங்கிட்டு வந்த ஒருத்தர் நீங்களத்தான் இருக்க முடியும்...:))

Mohamed Faaique said...

இன்றுதான் முதலில் உங்கள் பதிவை படிக்கிறேன். நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ஒவ்வொரு இடத்தையும் விவரித்திருப்பது நன்றாக இருக்கிறது. நன்றி

கக்கு - மாணிக்கம் said...

Very good experiences. Thanks for sharing.

Oomaiyan said...

இஸ்மத் பாய் பயணக்கட்டுரை அருமையாக இருந்தது. இந்த பயணக்கட்டுரை நாங்களும் துருக்கி சுற்றிப்பார்த்த அனுபவத்தை தந்தது.. அருமை...

Rajakamal said...

it was like a running comentry. very nice, keep it up.

அபுல் கலாம் ஆசாத் said...

இதுல லைக் போட்டுட்டு போக முடியாதா :-)நல்ல கட்டுரை.

கிளியனூர் இஸ்மத் said...

நீடுர் அலி அண்ணன்
மாயவரத்தான்
வடுவூர் குமார்
அப்துர்
பராரி
கீழைராஸா
நாஞ்சில் பிரதாப்
முஹம்மது பாகிஹ்
கக்கு - மாணிக்கம்
ஊமையன்
ராஜாகமால்
அபுல்கலாம் ஆசாத் (அண்னே நலமா?)
உங்கள் அத்தனை பேரையும் நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நெகிழ்ச்சி
வருகைக்கு நன்றி.

கிளியனூர் இஸ்மத் said...

பாஸ்போர்ட் இன்றி விசா இன்றி, பயணச் செலவு பைசா இன்றித் துருக்கிக்கு இலவசமாக அழைத்துச் சென்றதற்கு நன்றி, இஸ்மத் அவர்களே !

-ஷேக் சிந்தா மதார்
நன்றி

பிரயாணக் கட்டுரை யென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு இக்கட்டுரை ஒரு உதாரணம். மிக நன்றாக இருக்கின்றது. தொடரந்து விடாமல் வாசிக்கத் தூண்டும் இலகுவான அழகிய மொழிநடை. அடுத்தமுறை போகும்போது உங்களுடனேயே வந்துவிடலாம் போன்ற உணர்வூ. இலங்கையன் என்றவகையில் ஒரு குறைபாடு. ஆங்கிலப் பதங்களைத் தமிழாக்கி இருக்கலாம். கட்டாயம் இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட வேண்டும். காவியமாக்கிவிடுவோமா வாழ்த்துகள்.!

-ஜின்னாஹ்

காவியம் படைப்பது உங்களுக்கு காப்பி குடிப்பதுபோலல்லவா ஆங்கில வார்த்தைகளை இனி வரும் கட்டுரைகளில் தவிர்த்துக் கொள்கிறேன்.நன்றி

சுல்தான் said...

வழக்கம் போலவே அருமையான கட்டுரை அழகான படங்களுடன்.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி சுல்தான் பாய்

NIZAMUDEEN said...

துருக்கியிலேயே முதல் நாள், இரண்டாம் நாள் என்று
தினம்தினம் எழுதி, துருக்கியிலேயே நிறைவு
செய்தது, சுவை!

NIZAMUDEEN said...

பெரிதாய் இருந்தாலும் சுறுசுறுப்பாய் இருந்தது.
இடையிடையே படங்கள் காரணம்!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

பதிவும், உங்களின் நேரடி வர்ணனை போன்ற விளக்கமும் அருமை சகோ

அ.மு.அன்வர் சதாத் said...

நானும் துருக்கி யில் நடந்த நகை கண்காட்சிக்கு சென்றுவந்தேன்,
இந்த கட்டுரை மூலம்.
அருமையான எழுத்துக்கள்.
இஸ்மத் அண்ணே அவசியம் ஒரு முழு பயணக்கட்டுரை எழுதுங்கள்.
புத்தகமாகவே போடலாம்.
எனக்கு கல்கண்டுவில் திரு.லேனா தமிழ்வாணன் எழுதிய பயணக்கட்டுரைகள் ஞாபகம் வந்தது.
அருமை
அன்புடன்.
அ.மு.அன்வர் சதாத்

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....