உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, May 24, 2011

எழுத்தாளன் வறிஞனாகிறான்

அமீரகத்தில் எனது 30 வருட வாழ்க்கையை அனுபவத் தொடராக எழுதிவந்தேன். அவ்வபோது சரியாக தொடரை தொடாததினால் அது தடைப்பட்டு போயிருக்கிறது. கூடுமானவரையில் எனக்கு நிகழ்ந்த அனுபவங்களை பதிவிட்டிருக்கிறேன். மனிதர்களின் சிந்தனையில் ஏற்படக்கூடிய மாற்றங்களும், இயற்கையின் மாற்றங்களும்தான் காலத்தின் மாற்றமாகிறது.

அமீரக வாழ்க்கையில் அறிமுகமானவர்களில் கீழக்கரையைச் சார்ந்த ஒரு பெரியவர் எனக்கு செய்த உபதேசம் நீ எழுதுவதை விட்டுவிடு! நன்றாக சம்பாதிக்கனும் என்றார்.
அவர் ஏன் அப்படி சொன்னார் என்று நான் யோசித்துப் பார்த்தேன் புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களில் பெரும்பாலோர் வறுமையில்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், மறைந்தும் இருக்கிறார்கள்.

அவர் மேலும் சொன்னார் எழுத்தாளர் அப்துற் றஹீம் அவருடைய கடைசிக் காலத்தில் பொருளாதாரத்தில் எப்படி எல்லாம் கஸ்டப்பட்டார் என்பது உனக்கு தெரியுமா? நான் அவருக்கு உதவி செய்திருக்கிறேன் என்றார்.
தன்னம்பிக்கை தரக்கூடிய நூல்களை தமிழகத்தில் அறிமுகம் செய்தவர் அப்துற் றஹீம். அவருடைய பல நூல்களை நான் வாசித்திருக்கிறேன். அவருடைய வார்த்தைகளை எனது அறையின் சுவற்றில் எழுதியும் வைத்திருந்தேன்.

“எழுத்து என்ற இரக்கமற்றத் துறையில் நுழைந்த எவரும் துவக்கத்தில் எல்லாவிதமான கஸ்டங்களையும் நஷ்டங்களையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்கவேண்டும்.”

இந்த வரிகள் என்னை செம்மைப்படுத்திருக்கிறது. ஆனால் எழுத்தை எனது பொழுதுபோக்காக எண்ணியதால் முழு நேரம் அது என்னை ஆட்படுத்தவில்லை. ஒருவேலை முழுநேர எழுத்தாளனாக மாறியிருந்தால் எனது எழுத்தின் போக்கும், எனது வாழ்க்கையின் போக்கும் மாறியிருக்கும். நான் எழுத்தை விற்க துவங்கியிருப்பேன். அந்த விற்பனையில் கிடைக்கக்கூடிய வருமானம் இன்றைய நவீன உலகிற்கு பற்றாமலேயே போயிருக்கலாம் அல்லது கவிபேரரசு வைரமுத்துவை போல தமிழ் கை நிறைய பணத்தை அள்ளியும் கொடுத்திருக்கலாம்.

எழுத்துலகில் பணக்கார கவிஞன் ஒருவரைத்தான் என்னால் இங்கு அடையாளம் காட்டுவதற்கு முடிந்திருக்கிறது.

தமிழகத்தில் எழுத்தை நம்பி வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை இன்னும் வறுமைக்கோட்டுக்குள்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தே அந்த பெரியவர் எனக்கு உபதேசம் செய்தார். அவரின் உபதேசம் கேட்கும் நேரத்தில் நான் வேலை இழந்திருந்தேன். எழுதுகிற அளவுக்கு என்னிடம் இலக்கணம் இல்லை. சிலவு செய்யுமளவு என்னிடம் பொருள் களமுமில்லை இருந்தாலும் அவருடைய அந்த வார்த்தை நெஞ்சுறுதியாகி விட்டது.

அந்த தருணங்களில் எழுதி வெளியிட்ட நூல்கள் நல்ல நண்பர்களிடம் என்னை கொண்டுச் சென்றது. அந்த நண்பர்களின் முன்னேற்றமும் நான் படித்த தன்னம்பிக்கை நூல்களும் எனக்கு வழிகாட்டியது.

அந்த வழிகாட்டல் பொருள் சேர்க்கும் எண்ணத்தையும், நல்ல சிந்தனையையும் கொடுத்தது. பொருளே வாழ்க்கையாகிவிடவும் முடியாது அதில் பொருள் இருக்கவேண்டும் அல்லவா? பொருளுடன், அருளும் இணையும் போதுதான் சேர்த்த பொருளுக்கு பொருள் இருக்கும்.

அப்படி கிடைத்ததுதான் ஆன்மீகம். ஆன்ம பாட்டை மனிதனுக்கு சுய சிந்தனையை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஆன்மீகம் என்பது வாதம் புரிவதற்கும் பிறருக்கு போதிப்பதற்கும் அதன் பொருளை தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது. அதனால்தான் உலக நாடுகள் பலவற்றிலும் அமைதியின்மை நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

சுயசிந்தனை செய்யாத எதுவுமே ஆன்மீகம் அல்ல அது லௌகீகம் அது புறசிந்தையை மட்டுமே தூண்டும் அகத்தை விளங்காது அதன் கருத்தை மனம் ஏற்காது. இப்படிப்பட்டவர்கள் தங்களை தாங்களே அமைதிப்படுத்திக் கொள்ள முடியாது. இவர்கள் எப்படி இந்த சமுதாயத்தை ஒன்றுப்படுத்தஇ அமைதிகாக்க வைக்க முடியும். இவர்களால் பல பிரிவுகளை வேண்டுமானால் உண்டாக்க முடியும் பிரிந்தவர்களை ஒன்று படுத்த முடியாது.

ஆன்மாவை படிப்பதற்கு நிறைய விசயங்கள் இருக்கின்றன அதை கற்பதற்கு பல்கலைகழகங்கள் இல்லஈ ஆன்மீகக் கூடங்கள் இருக்கிறது. எதையுமே கற்றுத் தெரிந்தவரிடமிருந்தே கற்க வேண்டும் அதனால் தான் இன்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பொருளீட்ட வந்த இடத்தில் பொருளுடன் அருளும் ஈட்டுவதற்கு நட்புகள் துணைப் புரிந்தன. எனது எழுத்தின் போக்கு திசைமாறுவதை நான் உணர்கிறேன்.

இறைவனைப்பற்றி பேசக்கூடியவர்களுமஈ எழுதக்கூடியவர்களும் இறைவனை விளங்கியவர்களல்ல. இறையைப் பற்றி பேசாதவர்கள் நாத்தீகருமல்ல. ஒவ்வொரு மனிதனும் இறைவனின் படைப்புதான் அவனை அறிவதற்கு தன்னைவிட இன்னொன்று சிறந்ததல்ல இதை விளங்கி சிந்தித்தாலே பல அறிவுகள் விளக்கங்கள் தன்னிடமே கிடைக்கும்.

இப்படிப்பட்ட ஞானங்களையும் இந்த அமீரகத்தில் என்னால் சம்பாதிக்க முடிந்தது. அதனால் எழுதுவோம் நம்மிடம் வறுமை வராதவாறு.!

No comments:

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....