உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, May 30, 2011

புகையிலை எதிர்ப்பு தினம்

மே 31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

புகையிலை என்றதும் நம் சிந்தைக்கு வருவது சிகரெட்.

இது பலருடைய வாழ்க்கையை புகைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.

ஆண்களைப்போல சில பெண்களும் இன்று புகைப்பதை ஒரு மாடனாக கருதுகிறார்கள்.
ஸ்டைலுக்காக புகைக்கப்படும் பழக்கம் நாளடைவில் வலுவாகி புகைக்காமல் இருக்கமுடியாத சூழலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.
தற்போது ஐடி துறை கால் சென்டர்களில் பணிப்புரியும் இளம் பெண்களிடம் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் வேலையின் பளுவாலும் பசியை மற்றும் உடல் பருமனை குறைப்பதற்கும் புகைக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

சில காலங்களுக்கு முன் விமானத்தில் புகைப்பதற்கு அனுமதியளித்திருந்தார்கள் இன்று விமான நிலையத்தில் கூட புகைப்பதற்கு அனுமதி இல்லை.சில விமான நிலையங்களில் தனி அறையை புகைப்பதற்கு ஒதுக்கியிருந்தாலும் அங்கு சென்று புகைப்பதைவிட ஒரு இரண்டுநிமிடம் நின்று வந்தால்போதும் சிகரெட் குடித்த உணர்வோடு வந்துவிடலாம் அந்தளவு புகைமூட்டமாக இருக்கும்.

முன்னையவிட தற்போது அதிகமான விழிப்புணர்வு புகையிலையின் கெடுதலைப்பற்றி வந்திருக்கிறது பல நாடுகள் பொது இடங்களில் புகைப்பதை தடை செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தோனேஷியாவில் இந்த தடை அமுலில் இருந்தாலும் அதிகமானோர் பொது இடங்களில் புகைக்கிறார்கள்.

இதெல்லாம் மற்றவர்களின் ஆய்வு என்னைப்பற்றிய ஆய்வை நான் சொல்லவேண்டும் ஆரம்பத்தில் நான் புகைக்க ஆரம்பித்தேன் மெல்ல மெல்ல புகை என்னை புகைக்க ஆரம்பித்தது.

புகைக்கும் பழக்கம் எங்கு தொடங்கியது என்று என்னிடம் நீங்கள் கேட்டால் நட்பு என்று சொல்வேன்.ஆம் நண்பர்களுடன் ஜாலியாய் தினம் ஒரு சிகரெட் என்று துவங்கிய பழக்கம் அது வளர்ந்து தினம் ஒரு பாக்கெட் (20) என்ற கணக்கில் சில நேரங்களில் சந்தோசமான துக்ககரமான நேரங்களில் கொஞ்சம் அதிகமாகவே புகைத்து என்நேரமும் என் உடலைப்போல் ஆன்மாவைப்போல் என் கூடவே இருந்து இடது பேண்ட் பாக்கெட்டை ஆக்கிரமிப்பு செய்து தனி இடத்தை என்னிடம் பெற்றிருந்தது.

திருமணத்திற்கு பின் எனது மனைவி என்னிடம் சிகரெட்டை விடும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டிருக்கிறார்.அப்போதெல்லாம் என் மனைவிக்கு கோபம் உண்டாக்குவதற்காக நீ எனக்கு இரண்டாவது மனைவி என்பேன் எப்படி என்றால் உன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னிருந்தே நான் புகைத்துக் கொண்டிருக்கிறேன் அதனால் முதல் மனைவி சிகரெட் என்பேன்.

புகைப்பதற்கு எத்தனையோ காரணங்களை கூறியிருக்கிறேன் ஆனால் அத்தனையும் உண்மையல்ல என்பது புகைப்பவர்களுக்கு தெரியும்.

எனது குழந்தைகள் என்னிடம் இந்த பழக்கத்தை விடுங்களேன் என்று கேட்கும்போது உள்ளுக்குள் வெட்கப்பட்டிருக்கிறேன்.இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை விடமுடியாமல் தவிக்கின்றோமே எப்படியாவது விடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்ததே தவிர அதைவிட்டுவிடுவதற்கு மனம் தயாராக இல்லை.

பொது நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் பழக்கமுடைய எனக்கு நான் பழகக் கூடிய நண்பர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத்தவிர பல நண்பர்கள் புகைப்பதில்லை.புகைத்துவிட்டு நண்பர்களின் பக்கத்தில் அமரும்போது அவர்களின் முகம் சுளிவதை காணும் என் மனசு வலியை சுமந்திருக்கிறது.வாயை பினாயிலிட்டு கழுகினாலும் சிகரெட்வாடை போவதில்லை.


எனது ஆன்மீக குருவைக்காண குடும்பத்துடன் சென்றபோது புகைப்பதை சொல்லக்கூடாது என்று நான் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதையும்மீறி எனது குழந்தைகள் நான் புகைப்பதை அவர்களிடம் கூறிவிட்டார்கள்.

என் குரு ஆச்சரியமாக என்னைப்பார்தார்கள் உங்களுக்கு இந்த பழக்கமிருக்கிறதா? நம்பிள்ளைகள் இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபடமாட்டார்கள் தங்கள் மனதை இதில் லயிக்கசெய்து பாழாக்கிக் கொள்ளவேண்டாம் அதனால் வரக்கூடிய தீமைகளை எடுத்துக் கூறினார்கள்.

அவர்களிடம் என்னைப்பற்றிய குறையை கூறும்போது நான் கூனிக்குறுகி விட்டேன்.
எப்படியாவது விட்டுவிடுகிறேன் என்று நான் கூறினாலும் மனம் சம்மதிக்கவில்லை.

மனிதன் ஏதோ ஒன்றுக்கு கட்டுப்படவேண்டும் அந்தக் கட்டுப்பாடு இல்லை என்றால் நூலறுந்த பட்டத்தைப் போன்று அவனுடைய வாழ்க்கை இருக்கும்.

குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டால் அதனால் வரக்கூடிய நன்மைகள் எனக்குத்தானே இருந்தாலும் ஈகோ சும்மா இருப்பதில்லை மனைவிச் சொல்லி இதை விடவேண்டுமா? அல்லது நீ பெற்ற குழந்தைகள் சொல்லி விடவேண்டுமா? இப்படி விடாமல் புகைத்துக் கொண்டிருப்பதற்கு பல காரணங்களை மனம் கற்பித்தாலும் அறிவு அதை ஏற்றுக் கொள்வதில்லை.

புகைக்கக் கூடியவர்களுக்கு புகைப்பதினால் பல தீமைகள் இருக்கிறது என்பது தெரிந்துதான் இருக்கிறார்கள் ஆனால் அந்த தீமை அவர்களைத் தண்டிக்காத வரையில்.
ஆனால் தண்டிக்கப்படும்போது அதை துண்டித்துவிடுவார்கள் தண்டனைக்காக காத்திருக்க வேண்டுமா?.

ஒரு செயலை தொடரும்போது மனம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை அதை தொடச்சியாக்கும்போது அது பழக்கமாகிறது.அந்த பழக்கம் வழக்கமாகி வாழ்க்கையாகிறது.

இப்படி தொடரப்படுவதுதான் எந்தப்பழக்கமும்.

(அந்தப்பழக்கத்திலிருந்து விடுப்பட்டு சரியாக சொல்ல வேண்டுமானால் 2010 ஏப்ரல் 10 தேதி இரவு 9.30 மணிக்கு புகைப்பதை விட்டுவிட்டேன்.50 தினங்களை புகைக்காமல் கடத்தியும் விட்டேன்.வாடை இன்னும் வீசிக்கொண்டு தானிருக்கிறது இருந்தாலும் நான் போராட புறப்பட்டுவிட்டேன்.)

புகைப்பதில் நுழைந்த பலர் அதிலிருந்து மீண்டுவருவது கடினம் என்று தங்களுக்குள் ஒரு எண்ணத்தை வழுவாக வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை.
நானும் அப்படிதான் இருந்தேன் எனது குரு கேட்டார்கள் உங்கள் மனதை உங்களால் வெல்ல முடியும் விட்டுப்பாருங்கள் உங்கள் மனோசக்தியை உணர்வீர்கள் என்றார்கள்.

என்மனதை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தூக்கி வீசினேன் இந்த ஐம்பது தினங்களில் அந்த நினைவு வரும்போதெல்லாம் நம் மனதை வெல்லவேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொள்கிறேன் அந்த எண்ணத்திற்கு மத்தியில் இந்த சிகரெட் வலுவிழந்து வருகிறது.

ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீளக்கூடியவர்களின் மனோசக்தி அவர்களுக்கு அதிகரிக்கிறது அவர்களால் எதையும் வைராக்கியத்துடன் செய்து சாதிக்கமுடியும் என்பதை இந்த ஐம்பது தினத்தில் நான் கற்றுக் கொண்டுவரும் அனுபவப்பாடங்கள்.

அந்த பழக்கத்தை விட்டதினால் எனது குடும்பம் சந்தோசமடைகிறது நானும் சந்தோசமடைகிறேன் என்னுள் இருந்த புகைக்கும் எண்ணம் இல்லாதபடியால் அவ்வபோது நண்பர்களைவிட்டு விலகி புகைத்துவிட்டு வரும் அந்த நிமிடங்கள் இன்று மீண்டுருக்கிறது ச கநண்பர்களுக்கு மத்தியில் இன்று நானும் புகைக்காதவனாக காட்சியளிக்கிறேன்.

சாதிக்க முடியும் என்னாலும் சாதிக்க முடியும் ஆம் நான் இமயத்தை தொடவில்லை ஆனால் என்வீட்டு இதயங்களை தொட்டுவிட்டேன்.

மீள்வதற்கு வழிதந்த என்குருவிற்கும் என்குடும்பத்தார்கள் எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.
-------------------------------

இவ்வளவு தூரம்வரை நீங்கள் வாசித்தவை சென்ற ஆண்டு மே 31ம் தேதி எழுதிய பதிவு. ஆனால் இந்த பதிவுக்கு பிறகு இன்று வரையிலும் நான் சிகரெட் குடிக்கவில்லை. குடிக்கவேண்டும் என்ற எண்ணம் அவ்வபோது வந்தாலும் கூட அந்த எண்ணத்தை ஏதேனும் தின்பண்டங்கள் பக்கம் கவனத்தை திருப்பிவிடுகிறேன்.

எனது நண்பர்கள் உறவினர்கள்கூட நான் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று கூறியபோது நம்பவில்லை ஆச்சரியம் அவர்களுக்கு எப்படி? என்று கேட்டார்கள் கூறினேன் மனம் வைத்தால் நம்மை நாமே வெல்ல முடியும் என்பதை என் குரு எனக்கு மெய்பித்து காண்பித்திருக்கிறார்கள்.

இன்று பல தொலைக்காட்சிகளில் புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு நிக்கோடின் போன்ற மாத்திரை மருந்துகளை அறிமுகம் செய்கிறார்கள். இவைகளை வாங்கி உண்டு விடுவதைவிட புகைப்பதை நீங்கள் மாற்று மருந்து இல்லாமல் நிறுத்திப்பாருங்கள் சில தினங்களில் உங்கள் மனதளவில் ஒரு சக்தியை புத்துணர்ச்சியை உணர்வீர்கள். என்றுமில்லாத ஒரு சுறுசுறுப்பு உங்களிலே ஏற்படும். அந்த சுறுசுறுப்பே உங்களின் எண்ணத்தை புகைப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவைத்துவிடும்.

புகைக்கும் எண்ணம் வந்தால் எதையாவது சாப்பிடுங்கள் கொஞ்ச நாட்கள் அப்படி சாப்பிடுவதினால் உங்கள் உடல் பருமன் கூடும் பின் நாட்களில் பருமனை குறைத்துவிட முடியும்.

இவைகளை எல்லாம் படித்தோ அல்லது கேட்டோ இங்கு பதிவு செய்யவில்லை இந்த 13 மாதங்களில் நான் கண்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

நண்பர்களே!
உங்களாலும் முடியும் நீங்களும் சாதனையாளர்தான் புகைப்பதை விட்டுப்பாருங்கள் உங்களின் தனித்தன்மையை உணர்ந்துக் கொள்வீர்கள் வாழ்த்துக்கள்!

1 comment:

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....