உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, January 19, 2012

தொல்.திருமாவளவனுடன் அமீரகத் தோழர்கள் சந்திப்பு


அமீரகத்தில் நான்கு தினங்கள் சுற்றுப் பயணமாக ஊடகத்துறையை தங்களுக்கென அமைத்துக் கொள்வதற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வருகைப் புரிந்திருந்தார்.

தாய்மண் வாசகர் வட்டத்தின் சார்பாக அவருக்கு துபாய் கராமாவில் உள்ள சுவிஸ்ட் ஸ்டார்பவனில் 18/1/2012 அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்நிகழ்சிக்கு நண்பர் குத்தாலம் அசரப்அலி அவர்களுடன் சென்றிருந்தேன். தொல்.திருமாவளவனுடைய சொற்பொழிவை அதிகம் நான் கேட்டதில்லை. தலித்துக்கள் முன்னேற்றத்திற்காக சட்டம், சமூகம், அரசியல் என பாடுபடக்கூடிய செயல் வீரர் என்பதை அறிந்திருக்கிறேன்.

பல அமைப்புகளிலிருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் துவக்கம் ஏழு மணி என்று அழைப்பு கொடுத்திருந்தனர்; ஆனால் ஏழு மணிக்கு பலர் வரவில்லை சொன்ன நேரத்திற்கு திருமாவளவன் வந்துள்ளார்; ஆனால் ஆட்கள் வராததினால் அரை மணி நேரத்திற்குள் மற்றொரு வேலையை முடித்து விட்டு வந்துவிட்டார் திருமா.
நேரத்தின் மீது அவர் கொண்டிருக்கும் பேணுதலை அறிய முடிந்தது.

அதே போன்று மேடையில் அமரும்போது தனது கட்சிக்காரர்களை மட்டும் அமரச் செய்யாமல் தன்னுடன் குத்தாலம் அசரப்அலியையும் அமர வைத்து இஸ்லாமிய சகோதரர்களுடன் நாங்கள் சமத்துவமாக சகோதரத்துமாக நட்புத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை அவர் வாய்வழி சொல்லாமல் நிலைநாட்டினார்.

தொல்.திருமாவளவனின் உரை மனம் திறந்த மடலாகவே இருந்தது. வளைகுடாவில் வாழும் தமிழர்களின் பிரச்சனைகள் மற்றும் நலனுக்காக எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் வயலார் ரவி ஆகியோருடன் பேசி இருப்பதாக கூறினார். சவூதி அரேபியா ஜித்தாவில் பாதிக்கப்பட்ட 200 க்கும் அதிகமான தமிழர்களை மீட்பதற்கு முயற்சி எடுத்து மீட்டுள்ளார் என்பதை தெரிவித்தார்.
என்னோடு S.M.பாரூக் மற்றும் ஹனீபா

இந்திய ஊடகங்கள் எங்கள் கட்சிகளின் நலப் பணிகளை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்ல மறுக்கிறது காரணம் நாங்கள் தலீத் என்பதற்காகவா? தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம் ஊர்களில் நான்கு தினங்கள் முகாமிட்டு ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, நேரடியாக பாதிப்புகளை கண்டு உரிய நிவாரணங்கள் பெறுவதற்கு போராடி இருக்கிறோம் இதை எந்த ஊடகம் செய்தியில் வெளியிட்டது? ஒரு பண்டிகையின் காலத்திலும் கூட வாழ்த்துச் செய்தியை பத்திரிக்கைகாரர்களை அழைத்து சொல்லும்போதும் கூட அனைவரும் அந்த செய்தியை வெளியிடுவதில்லை இருட்டடிப்பு செய்கிறார்கள்.

திருவாரூர் செல்லும் வழியில் ஒரு பத்து நிமிடங்கள் காரை நிறுத்தி காரிலிருந்தவாறு புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் கை அசைத்த தலைவரின் காட்சியை நாள் முழுவதும் அவர்களின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

நேற்று வந்த கட்சிகளின் செய்திகளை முதல் பக்கத்தில் முதல் வரியில் போடக்கூடிய ஊடகங்கள் அவர்களுக்கு முன்பிருந்தே இயங்கக் கூடிய எங்கள் கட்சி செய்திகளை இரண்டாம் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுவது ஏன்? (ஒரு சீனியாரிட்டி கிடையாதா?)

கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களின் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும் என பல முறை கலைஞரிடம் மனு கொடுத்துள்ளேன் ஆனால் இன்று வரையில் அதை நிறைவேற்ற வில்லை ஆனால் எங்கள் விடுதலை சிறுத்தை அமைப்பு சார்பாக நான்கு ஆண்டுகளாக கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களின் பெயரில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு விருது வழங்கி வருகிறோம். அதுமட்டுமல்ல ஆண்டுதோறும் நோன்புக் காலங்களில் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பதற்கு பல கட்சிக்காரர்களை அழைப்பார்கள் ஆனால் நாள் முழுவதும் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கட்சியின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் என்று இஸ்லாமியர்களுடன் தங்களுக்கு இருக்கும் இணக்கத்தை சொல்லிக் காண்பித்தார்.

தமிழர்களிடம் ஒற்றுமை என்பது இல்லை; முல்லை பெரியார் விசயத்தில் கேரளா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர்களிடம் உள்ள ஒற்றுமை, 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர்களிடம் இல்லை. முல்லை பெரியார் விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தில்தான் இருக்கிறார்கள் ஆனால் அந்த கருத்தை பிரதமரிடம் வலியுறுத்துவதற்கு தனித்தனியே செல்கிறார்கள் எல்லா கட்சிகளும் ஒன்றாக செல்லலாம் என அழைத்தால் யாரும் முன்வரவில்லை என தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தினார்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையைப் பற்றி கேட்டபோது நாங்கள் அணு சக்திக்கு எதிரானவர்கள் ஆனால் மின் சக்திக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை ஆணித்தரமாகக் கூறினார்.

ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலையை 2020 க்குள் மூடப்போவதாக செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் ஏன் மூடவேண்டும்? அணு உலையின் கழிவுவை 15ஆயிரம் ஆண்டுகள் வரை பாதுகாக்க வேண்டுமாம். இல்லையெனில் மிகப்பெரிய ஆபத்துகள் மனித இனத்திற்கு இருக்கிறது. இன்று நாம் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்கா வரக்கூடிய புதிய முறையினருக்கு மிகப்பெரிய ஆபத்தை கொடுத்துவிட்டு போக வேண்டுமா? மின் சக்தி தயாரிப்பதற்கு மாற்று வழிகள் எவ்வளவோ இருக்கிறது காற்றாலை, சூரிய வெப்பத்திலிருந்தும் தயாரிக்கலாம்.

அணு உலையின் மூலம் கிடைக்கக் கூடிய பலன் வெறும் இரண்டரை சதவீதம் மட்டுமே? அணு உலையின் மூலம் அணு குண்டகள் தயாரிப்பதற்காக அணு உலைகளை அரசுகள் பயன்படுத்துகின்றன.

எப்படி இருந்தாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் அரசு செயல்படுத்தும். இந்த அணு மின் நிலையத்தை முதலில் கேரளா கொச்சியில் போடுவதற்கு இடமெல்லாம் தேர்வு செய்து முடிவானது ஆனால் கேரள மக்கள் அதை எதிர்க்கவே தமிழகத்தில் கூடங்குளத்தை தேர்வு செய்தார்கள். அப்போது அதை பத்து பேர்கள் கொண்ட ஒரு குழு மட்டுமே எதிர்த்தார்கள். வேறு யாரும் எதிர்க்கவில்லை. இன்று பலரும் எதிர்பதற்கு காரணம் அதில் அரசியலும் இருக்கிறது வியாபாரமும் இருக்கிறது.

ரஷ்யாவுடன் உள்ள அணுமின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு இத்தாலியுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. என்று வெளிப்படையாக பேசினார்.

ஈழத்தமிழர்களின் கேள்விகளும் கேட்டார்கள். தமிழ் மற்றும் தமிழ் தேசியம் இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவுப் படுத்தினார்.
குத்தாலம் அசரப்அலி

இந்நிகழ்ச்சியின் இறுதியில் குத்தாலம் அசரப்அலி பேசுகையில் கேரளர்களிடம் ஒற்றுமை இருந்ததினால் அணுமின் நிலையம் அங்குவரவில்லை தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாததினால் கூடங்குளம் இன்று பிரச்சனையாக இருக்கிறது என்று கூறினார்.

ஒரு அரசியல் தலைவரை பார்த்த திருப்பதியை விட ஒரு மனித நேயமிக்க மனிதரை சந்தித்த திருப்தியுடன் நன்றியுரையைக் கேட்களாளேன்.

3 comments:

NIZAMUDEEN said...

கேரளா பிரச்னை செய்கிறது என்றால் தமிழக, புதுவையின் 40 எம்.ப்பீ.க்களும் (ஒன்றிணையாமல்) பிரச்னை செய்கிறார்கள்.

Basheer Ahamed said...

excellent.

Basheer Ahamed said...

Dear Gentleman, Here not only 25 MPs but also CM and Ex CM (opposition leader) joined for M.Periyar issue. Weather it is possible in Tamil Nadu either this century or ....?. 1989 our friends fought for Koodangulam issue. That time one girl child age was 8 fought for this issue. Now she also fought at the age of 24. we have evidence . If you want I will send.-Basheer , Cochin

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....