உங்கள் வருகைக்கு நன்றி...

Friday, February 24, 2012

தந்தைக்கு ஒரு தாலாட்டு

ஒரு நாட்டின் தலைவர் மரணமடைந்தால் நாடே துக்கத்தை அனுஷ்டிக்கும். ஒரு வீட்டின் தலைவன் இறந்தால் அந்த குடும்பமும் அதன் உறவுகளும் துக்கத்தை அனுபவிக்கும். நம் வாழ்க்ககையில் நம் குடும்பத்தில் நம் உறவினர்களில் யாரோ ஒருவரின் மரணத்தை நாம் சந்தித்திருப்போம் அதன் தாக்கம் நம் மனதை பாதித்திருக்கும் அப்படித்தான் என் வாழ்க்கையிலும் என் தந்தையைப் பற்றிய இடுக்கைதான் இது.

2004 ஜூன் எனது விடுமுறை மாதம் ஆண்டு தோறும் இந்த மாதத்தில் தான் துபாயிலிருந்து தாயகம் செல்வேன். முந்தைய ஆண்டில் எனது மனைவி குழந்தைகளை தாயகத்திலே விட்டுவந்திருந்தேன். வெளிநாட்டு வாழ்க்கையில் விடுமுறையில் தாயகம் செல்வதென்பது இமயமலை உச்சியில் ஏறிய சந்தோசத்தைப் போல மனம் மகிழ்ச்சியின் பிரவேசமாகவே இருக்கும்.

எத்தனை அறிவியல் வளர்ச்சி வளர்ந்திருந்தாலும் நம் உறவுகளை நேரில் கண்டு உண்டு
பேசி சிரிப்பதைப் போல் உள்ள மகிழ்வு எதிலும் இல்லை.

மாலை ஐந்து மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இல்லம் வந்து சேர்ந்த என்னை என் தந்தை கட்டி தழுவி வரவேற்றார். இதுவே கடைசி தழுவல் என்பது எங்கள் யாருக்கும் தெரியாத இறை இரகசியமாக இருந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக சிங்கையிலே தனது வாழ்க்கையை கழித்தவர் என் தந்தை. சக்கரைநோயின் தாக்குதலினால் காலில் புண் ஏற்பட்டு அதையும் பொருட்படுத்தாமல் அலட்சியமாகவே சிங்கையில் வணிகம் புரிந்த என் தந்தையை வழுக்கட்டாயமாக மருத்துவ மனையில் சீனர்கள் சேர்த்து விட்ட போது மருத்துவர்கள் ஒரு காளை வெட்டி எடுக்கவேண்டும் என்று கூறிய போதுதான் நோயின் தாக்குதலை உணர்ந்திருந்தார்.
அதுவரையில் அவர் உள்ளத்திலும் எண்ணத்திலும் நோயின் பாதிப்பு இல்லை. குடும்பத்தின் மீது அவர் வைத்திருந்த அதீத பாசம் மட்டுமே இருந்தது.


சிங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியறிந்து சிங்கைக்கு விரைந்தேன் தன்னந்தனியே மருத்துவமனையில் படுத்துக் கிடந்த என் தந்தையை இரண்டாவது நாளில் அதிகாலை ஐந்து மணிக்கு உறக்கத்திலிருந்து அவர் கண்விழித்த போது அவரருகில் நான் நின்றதைக் கண்டதும் அவர் முகத்திலும் கண்களிலும் பெருக் கெடுத்த கண்ணீர். இந்த மரம் காய்த்து ஒய்ந்திடுச்சிப்பா இனி காய்க்காது என்று சொல்வதைப் போல்…

உங்க விதையில் முளைத்த மரங்கள் உங்களை சுமக்கும் என்ற ஆறுதலோடு என் தந்தையின் கரங்களைப் பற்றி பிடித்த நான் …

வந்துட்டேன் கவலை வேண்டாம் என்ற போது
துபாயிலேந்து எப்போ வந்தே ?
வந்து ஒரு மணிநேரமாச்சு என்றதும்
என்னை எழுப்பி இருக்கலாமே என்றார்.

ஐம்பதாண்டு சிங்கை வாழ்க்கையில் என் தந்தைக்கு அதிகமான தொந்தரவுகளை கொடுத்துருக்கிறேன். உறக்கத்தில் கூட இனி தொந்தரவு செய்யக் கூடாது என்ற உணர்வில் இருந்தேன் என்பதை என்னால் இங்கு எழுதத்தான் முடிந்தது.

ஆண்பிள்ளைகள் பெற்றால் நிறைய சம்பாதித்து போடுவார்கள் என்ற கனவு பல பெற்றோர்களிடம் இருக்கிறது. சம்பாதித்து போடுகிறார்களோ இல்லையோ பெற்றோர்களை பேணுகின்றார்களா ? என்பதே இன்றைய காலக்கட்டத்தில் கேள்விக் கணைகளாக இருக்கிறது.

ஐந்து ஆண்மக்களையும் இரு பெண் மக்களையும் பெற்றிருந்தாலும் எங்களை யெல்லாம் பெண்பிள்ளைகளை வைத்து காப்பதுபோல் தான் காத்து நின்றார்.
சுயமாக பறப்பதற்கு இறக்கைகள் முளைத்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.

சிங்கையில் எந்த உறவினர்களின் வீட்டுக்கும் அடிக்கடி செல்லாதவர். நடைபாதை கடையிலேயே தனது இளமைக்கு விடைக் கொடுத்தவர். அவருக்கு தெரிந்ததெல்லாம் சிங்கையின் விமான நிலையமும் தான் தங்கிருக்கும் வாடகை வீடு மட்டுமே. தனக்காக வாழ்ந்ததை விட தனது குடும்பத்திற்காக வாழ்ந்த வாழ்க்கை அதிகம்.

பொருள் சம்பாதிக்கலாம் சிலவும் செய்யலாம் மீண்டும் சம்பாதிக்கலாம் ஆனால் இளமையை சிலவு செய்யத்தான் முடியுமே தவிர சம்பாதிக்க முடியுமா?

ஓரு ரூபாயாக இருந்தாலும் அதை ஒரு லட்சமாக எண்ணி சேமிக்கும் குணங்கொண்டவர் அதனால் தான் அந்த ஒரு ரூபாய் பல லட்சங்களாய் கோடிகளாய் என் தந்தையின் பெயரை இன்றும் உச்சரித்துக்கொண்டிருக்கிறது.
என் தந்தை J.கமாலுதீன்

இந்த கடையை நிறுவுவதற்கு அவர் பட்டக் கஸ்டங்கள் எவ்வளவு இதோ இந்த கடையை நான் கலைந்துக் கொண்டிருக்கின்றேனே இந்த கடை ஈட்டித்தந்த வருமானத்தில் வளர்ந்தவன் தானே நான் எங்கள் குடும்பம். ஐம்பதாண்டு கால கூட்டை ஐம்பது நிமிடங்களில் கலைத்துவிட்டேனே… இவைகளை பார்க்கமல் எனது தந்தை மருத்துவ மனையில் இருந்தார். அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இவைகளை என்னால் செய்திருக்க முடியுமா? அவரால் அதனைக் காணத்தான் முடியுமா?நான் கலைத்தது கடையல்ல என் தந்தையின் கனவு.

பதிவு பெரியதாக இருப்பதினால் இதன் தொடர்ச்சியை நாளை வாசிக்கலாமே...

தொடர்வோம்...


6 comments:

நட்புடன் ஜமால் said...

தந்தை தான் எல்லா பிள்ளைகளுக்கும் முதல் ஹீரோ, பிள்ளைகள் தான் கடைசி வில்லன் எல்லா தந்தைகளுக்கும் ...

அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து ...

கோவி.கண்ணன் said...

உங்கள் தந்தையின் மீதான பாசமும் உருக்கமும் உங்கள் எழுத்துகளில் நன்கு வெளிப்பட்டுள்ளது.

கிளியனூர் இஸ்மத் said...

//தந்தை தான் எல்லா பிள்ளைகளுக்கும் முதல் ஹீரோ, பிள்ளைகள் தான் கடைசி வில்லன் எல்லா தந்தைகளுக்கும்//

உண்மையான வார்த்தை நன்றி ஜமால்

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி கோவிக்கண்ணன்

abu haashima said...

வருத்தமான விசயம்தான். சிங்கப்பூர் நம்மவர்களின் சொர்க்கபுரியாக திகழ்ந்த நாடு. ஆனால்... அந்த சொர்கத்தில் வாழ்ந்தவர்கள் அனுபவித்த வேதனை சொல்லில் அடங்காது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல் அவர்கள் ஊரில் வாழும் நாட்களில் தங்கள் துன்பங்களை யாரிடமும் சொல்வதில்லை. வேதனையை விழுங்கி விட்டு சந்தோசங்களை மட்டுமே சிந்துவார்கள். உங்கள் வாப்பாவும் அப்படித்தான். தியாகிகள். அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நன்மைகளை தரட்டும்.

viyasan said...

நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு. கடவுள் உங்களின் கவலைகளைப் போக்குவார்.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....