உங்கள் வருகைக்கு நன்றி...

Tuesday, February 21, 2012

கபீர்தாசரின் காந்தன் காதல்


என் நண்பர் திருச்சி சையது சில நூல்கள் எழுதியும், தொகுத்தும் உள்ளார். அதில் சமீபத்தில் வெளியீட்ட “கபீரின் 100 பாடல்கள்” என்ற நூலை எனக்கு தந்தார்.
படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது 100 பாடல்களும் நம்மிலே சுய சிந்தனையை ஏற்படுத்தக்கூடிய வரிகள்… இந்த பாடல்களை படிக்கும்போது எனக்கு நினைவில் தோன்றிய நபி மொழி
“தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிவான்”
இறைவனை அறியவேண்டுமானால் மனிதன் தன்னை அறிய வேண்டும் என்ற தத்துவத்தையே அந்த நூல் கூறுகிறது.

கபீர்தாசன் என்று பெயர் வைத்திருக்கும் இவர்
வாழ்ந்த காலம் (கி.பி.1398 - 1518) இவருடைய கவிஞானங்கள் இந்தி பக்தி இலக்கியத்தில் தனி சிறப்புக்குரியதாகும்.
கபீர் என்பது அரபிச் சொல்லாகும் அதற்கு பெரியது என்று பொருளாகும். பெரியது என்பது இறைவனைக் குறிப்பிடுகிறது

இவரை சிறுவயதில் ஓர் இஸ்லாமிய நெசவாளர் எடுத்து வளர்த்ததாக கூறப்படுகிறது. மனைவியோடும், குடும்பத்தோடும் இஸ்லாமியச் சூழலில் நெசவுத் தொழிலைச் செய்து வாழ்ந்த இவர் இளமை முதலே இறைநேயம் உடையவராய் விளங்கினார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது.

இவருடைய பாடல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் பேராசிரியர் எழில்முதல்வன் எளிய தமிழில் நமக்கு தந்துள்ளார்.
கபீர்தாசரின் சிந்தனையை அறிவதற்கு இந்நூல் வாய்ப்பை அளித்திருக்கிறது. அதிலிருந்து சில வரிகள்..

ஓ!
பணியாளனே என்னை நீ எங்கே தேடுகிறாய்?
இதோ நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.

நான் திருக்கோயிலிலும் இல்லை மசூதியிலும் இல்லை காஃபாவிலும் இல்லை கைலாயத்திலும் இல்லை.

நான் சடங்குகளிலோ அவை சார்ந்த சம்பிரதாயங்களிலோ இல்லை. யோகப் பயிற்சியிலோ துறவிலோ இல்லை.

நீ என்னை நாடும் உண்மை ஆர்வலனாக இருப்பின் உடனடியாகக் காணமுடியும். கண்ணிமைப் போதிலோ கைநொடிப் போதிலோ என்னைச் சந்திக்க முடியும்.
கபீர் கூறுகிறார். ஓ சாதுவே இறைவன் உயிரினுக்கும் உயிராக விளங்குகிறான்.!

இறைவனைப் பற்றி மிகத் தெளிவாக இந்த கவிதை வரிகள் கூறுகிறது. இறைவனை நாம் எங்கே தேடுகிறோம் என்பதை இக்கவிதை சொல்கிறது.
இதையே திருமறையில் “உம் பிடரி நரம்பிற்கும் மிக சமீபமாக இருக்கிறேன்” என்று இறைவன் கூறியுள்ள நுன்மைமிக்க
அந்த திருவசனம் நம் சிந்தையில் நிழலாடுகிறது.

ஒவ்வொரு கவிதையிலும் இறைக்காதலை வெளிப்படுத்தியுள்ளார். கவிதையின் இறுதி வரிகளில் கபீர் சொல்கிறார் என்ற “நச்” வரிகள்..

சில உதாரண கவிதைகளையும் விளக்கத்திற்காக கூறியுள்ளார்

ஆறும் அதன் அலைகளும் ஒரே நுரைத்திரள் கொண்டனவே. அங்ஙனம் இருக்க ஆறும் அலைகளும் வேறு வேறாக முடியுமா?

அலைகள் மேலெழும் போதும் தண்ணீர். அது கீழே விழும் போதும் தண்ணீர்தான். சொல்லுங்கள் ஐயா வேறுபாடு என்ன இருக்கிறது?

அலைகள் என்று பெயர் பெற்றிருப்பதாலேயே அது தண்ணீரல்ல என்று யாராவது கருதுவார்களா?

தனிமுதலாம் பிரம்மத்தினுள் உலகங்கள் யாவும் மணிமிடைப் பவளம்போல் கோக்கப்பட்டுள்ளன. ஞானக்கண் உடையோர்க்கு இது ஜெபமாலையாகவே காட்சிதரும் என்கிறார்.

இறைவன் எங்கோ தனித்து இல்லை அனைத்திலும் சூழ்ந்துள்ளான் ஒவ்வொரு பொருளிலும் ஞானக் கண்ணுடன் பார்த்தால் இறைவனை கண்டுக் கொள்ள முடியும் ஜாதிமத வேறுபாடுகளினால் பிளவுபட்டிருக்கும் மனித சமுதாயம் ஒர் உண்மையிலிருந்து வெளியானவை நாமரூபங்களில் வேறுப்பட்டிருந்தலும் உண்மை ஒன்றுதான் என்பதையே கூறுகிறார்.

ஒருவர் இறைஞானத்தை யாரிடமிருந்து எப்படி பெறுவது அதை போதிக்கக் கூடிய குரு எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறார்.

ஓ!
சகோதரனே ஓர் உண்மையான குருநாதருக்காக என் இதயம் ஏங்கி நிற்கிறது. அவரே உண்மை அன்பாம் கோப்பையை முற்றிலும் நிரப்பி தானும் பருகி எனக்கும் தருகிறார்.

என் விழிகளை மறைக்கும் படலத்தை விலக்கி பிரம்மத்தைத் தரிசிக்கும் பார்வையை வழங்குகிறார்.

அவர் தன்னுள்ளே அண்டங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். மீட்டப்படாத பரம்பொருளின் இராகத்தை நான் செவிமடுக்கும்படி செய்கிறார்.

சுகமும் துக்கமும் ஒன்றே என எனக்கு உணர்த்துகிறார். அன்பில் தோய்ந்த சொற்களால் என் இதயத்தை நிரப்புகிறார்.

கபீர் சொல்கிறார்… பாதுகாப்பான புகலிடம் நோக்கிப் பரிவோடு அழைத்தேகும் குருநாதரைப் பெற்றவனே பயமற்றவன் பாக்கியவான் என்று கூறுகிறார்.

மனித வாழ்க்கையில் எந்த ஒரு செயலும் குருயின்றி நடப்பதில்லை ஒவ்வொன்றிலும் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது.
குரு என்பது மனித வாழ்க்கையின் வழிகாட்டல்.

கபீர்தாசன் போன்ற ஞானிகளும், சூஃபியாக்களும் இன்றும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேடல் உள்ளவர்களின் கண்களுக்கு மாத்திரமே தென்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை!

நல்லதொரு நூலை வெளியீட்ட அன்பு நண்பர் திருச்சி சையது அவர்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் தந்த பேராசிரியர் எழில்முதல்வன் அவர்களுக்கும்தமிழ்அலை இஷாக் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

6 comments:

Sankar Gurusamy said...

இந்த கபீர் தாசரின் பல பாடல்கள், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பிலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

பிரம்ம சூத்திரத்தின் சாரத்தை கவிநடையில் அழகாக அனுபவித்து அவர் எழுதி இருப்பது சிறப்பாக இருக்கிறது..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி சங்கர் குருசாமி

Rajakamal said...

very good information keep it up

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி ராஜாகமால்

ananthako.blogspot.com knowledge sharing said...

kabeer oru seer thiruththavaathi enre kooralam.avarathu sila eeradikalai naan knowledge sharing --ananthako.blogspot.com il tamilil eluthi ullen.neengal eluthiyathu kabeer paadal. eeradi enpathu dohaiyin tamil.very good.

கிளியனூர் இஸ்மத் said...

Thanks Ananthako

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....