உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, January 17, 2010

தமிழ்மணம் 2009 விருதும் அமிதமான சந்தோசமும்

பிரபலமான தமிழ்மணம் என்ற இணையதள வலைப்பதிவு இதழ் பலராலும் எழுதப்பட்ட 7000 பதிவுகளை உள்ளடக்கி சராசரியாக தினம் 350 இடுக்கைகளை பல நாடுகளிலிருந்து தமிழ் எழுத்தார்வலர்களால் எழுதப்பட்டு அதை அனைவராலும் வாசிக்கப்பட்டும் வருகிறது.

ஒவ்வொரு ஆண்டு இறுதியில் தமிழ்மணத்தில் எழுதப்பட்ட பதிவுகளில் அந்தாண்டின் சிறந்த பதிவு என வலைப்பதிவர்களாலும் வாசகர்களாலும் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுத்த பதிவுகளை முதல் இரண்டு என்ற பரிசின் அடிப்படையில் அறிவிக்கப்படுகிறது.

தமிழ்மணம் 2009 விருது இந்த ஆண்டு நடந்தேறியதில் மொத்தம் 16 பிரிவுகளில் 500 க்கும் அதிகமான இடுக்கைளுக்கு மேல் கலந்துக் கொண்டுள்ளன. இதில் முதல் கட்ட வாக்கெடுப்பு பதிவர்களுக்காக மட்டும் வைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு பிரிவுக்கும் பத்தும் பன்னிரெண்டும் என்ற கணக்கில் தேர்வு செய்யப்பட்டது.

இந்த தேர்வில் நானும் கலந்து எனது இரு கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தேன்.
முதல் கட்ட வாக்கெடுப்பில் ஒரு கட்டுரை மட்டும் பொருளாதாரத்தைப் பற்றி நான் எமுதிய தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும் என்ற தொடர் கட்டுரை மட்டும் வலைப்பதிகளால் வாக்குகளிட்டு தேர்வு பெற்றது.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் வாசகர்களும் பதிவர்களும் ஒருங்கிணைந்து வாக்குகளித்து எனது பொருளாதார கட்டுரைக்கு முதல் பரிசை பெற்று தந்துள்ளார்கள். மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது.

அமீரகத் தமிழ் பதிவர்களில் நகைச்சுவை பிரிவில் முதல் பரிசைப் பெற்ற நண்பர்கள் குசும்பன் ஆதவன் இவர்களும் இடம் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

எழுத்துலகில் நான் பிரவேசிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.
ஒன்று படிப்பியலும் பல நூல்களும் பல எழுத்தாளர்களின் எழுத்துக்களும் எனக்குள் என்னை தேடவைத்தது.
இரண்டு அந்த தேடுதலில் கிடைத்தவர்கள்தான் எனது ஆன்மீக குரு. அவர்கள் என்னை எனக்கு காண்பித்து தந்தார்கள்.

எழுதுகின்றளவுக்கு கல்லூரிவாசம் இல்லை என்றாலும் ஏதோ திக்கி திணறி முட்டி மோதி எதையாவது எழுதவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றியமைத்த பாதையில் இதைத்தான் எழுதவேண்டும் என்ற ஒரு கோட்பாட்டை எனக்குள் உருவப்படுத்தியது என்றால் அது என் குருவிடம் நான் கற்றுக் கொண்ட ஞானம்.
என்னை இவ்வுலகிற்கு ஞானியாக காண்பிப்பதற்குகாக அல்ல. எடுத்த பிறவியில் மனிதனாக வாழ்வதற்கு.

பத்திரிக்கை உலகை நம்பிக்கொண்டிருந்த காலங்களில் காதலிக்கு கடிதம் கொடுத்துவிட்டு பதில் வருமா வராதா என்று பதட்டத்துடன் காத்திருப்பதுபோல் பத்திரிக்கையில் பிரசுரமாகுமா ஆகாதா என்ற பரிதவிப்பு ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஏற்படுத்தியது.

இன்று இணையதளங்களில் படைக்கப்பட்ட படைப்புகளை பத்துநிமிடங்களுக்குள் பத்தாயிரம் கண்கள் மேய்ந்து விடுகிறது அறிவு ஆய்ந்துவிடுகிறது. இணையதளத்தில் இலவசமாக கோகில் வலைப்பூக்கள் என்ற நிலத்தை தந்ததால் இன்று பலரோடு நானும் அதில் எழுத்து பயிர்களை அறுவடை செய்ய முடிகிறது.

வலைதளத்தின் வருகையால் இன்று பலரும் பல நாடுகளிலிருந்து எழுத்துலகில் வெகு இலகுவாக தூரங்களை கடந்து தமிழ் அழுதை ஆர்வத்துடன் அருந்துகிறார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலரும் பல விதமான கருத்துக்களை எழுதுகிறார்கள்.பலர் எழுத்துப் போர்களை நடத்துகிறார்கள்.
யாருக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவரவர்களுக்கு அவரவர்கள்தான் கட்டுபாடாக எழுதவேண்டும் இருக்கவேண்டும் என்ற நிலையில் இணையதள வலைதளத்தின் வளர்ச்சி இருந்துவருகிறது.

ஒவ்வொரு வலைப்பதிவர்களையும் வசிகரித்த எழுத்துக்களுக்கு அவரவர்கள் எழுதியவர்களை ஊக்கப்டுத்தும் முகமாக விருதுகளையும் பின்னூட்டங்களில் பாராட்டுகளையும் கொடுத்துக் கொண்டிருப்பது எழுத்துலகின் ஆரோக்கியத்தை காட்டுகிறது.

எனது வலைதளத்தில் சுற்றுலா கட்டுரைகளை தொடராக எழுதி வந்தேன் அதன் நிமித்தம் உலகம் சுற்றும் வாலிபன் என்ற முதல் விருதை அன்பிற்குரிய நண்பர் அமீரகப்பதிவர் நாஞ்சில் பிரதாப் வழங்கி என்னை உற்சாகமூட்டியதை நினைவுகூர்ந்து நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

வானலை வளர் தமிழ் அமைப்பின் மூலம் கவிஞராக அறிமுகமாகி என் இதயத்தில் இடம் பிடித்த அமீரகப்பதிவர்களின்
தளபதி குறும்பட இயக்குனர் கீழைராஸா எனக்களித்த இன்ட்ரஸ்டிங் பிளாக்விருதும் என்னை உற்சாகப்படுத்தியது என்று கூறுவதில் பெருமையடைகிறேன். நண்பர் கீழைராஸாவிற்கு மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

கவிஞர் அன்புடன் மலிக்கா இவரும் வானலையில் வளம் வரும் நீரோடை. ஐந்து நபர்களுக்கு வழங்கியதில் எனக்கும் “2009 பிளாக்கர் அப்ரிக்ஸன் விருதை அளித்து ஊக்கமளித்த அன்பு சகோதரி மலிக்கா அவர்களுக்கு மனமிக்க நன்றியை உரித்தாக்குகிறேன்.

பரிசுப் பெற்ற கட்டுரையை எழுதுவதற்கு தூண்டுதல் தந்த பதிவர் பராரி அவர்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

இணையதள இதழான தமிழ்மணம் பல ஆண்டுகளாக வலைதள பதிவர்களை ஒருங்கிணைத்து எழுதுபவர்களை ஊக்கவித்து வருவது வழக்கமாக கொண்டிருக்கிறது. தமிழுலகிற்கு ஆற்றிவரும் தொண்டாக செய்துவருகிறது. இந்த ஆண்டில் நானும் போட்டியில் பங்கெடுத்து எனது படைப்பிற்கு பதிவர்களும் வாசகர்களும் வாக்களித்து முதல் இடத்தை பெற்று தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.அத்துடன் தமிழ்மணம் குழுவினருக்கும் நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

சிங்கை நாதனுக்கு இதயம் தந்த நல்லுள்ளங்கள் நிறைந்த வலைஉலகில் நானும் இருக்கிறேன் என்று எண்ணும்போது மனம் நிறைகிறது.

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கூறி பின்னூட்டமிட்டவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கும் நன்றி !நன்றி ! நன்றி!

முதல் பரிசுப் பெற்ற “தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்” தொடர் கட்டுரையை நூலாக அச்சில் வெளியிட உள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

இந்த இடுக்கையை வாசித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

Wednesday, January 13, 2010

பாக்ஸர் நாயின் காதல் பிரிவு

பிராணிகள் வளர்ப்பதில் மனிதர்களில் பலருக்கு மித்த ஆர்வம். செல்லப் பிராணியாக நாய் பூனை அதிகமானவர்களின் இல்லங்களில் அவர்களின் உள்ளங்கங்களில் வாழ்ந்துக் கொண்டு வருகிறது.

பெற்ற பிள்ளையை பேணுவதைப்போல வீட்டு பிராணிகளை சிலர் பேணி வளர்க்கிறார்கள். பிராணிகள் எப்பவுமே நன்றி உள்ளவைகள். அவைகளிடம் நாம் அன்பு செலுத்தி விட்டால் நம்மை விட பல மடங்கு அன்பை நம்மேல் பொழிந்துக் கொண்டிருக்கும்.

நம் வீட்டில் வளர்கக் கூடிய பிராணிகள் பெருசுகளுக்கு பிடிக்காமல் எங்கேயாவது கொண்டுப் போய் விட்டு வரச் சொல்வார்கள். நாமும் சில மைல் தூரத்தில் விட்டு வருவோம் மறுநாள் நம் வீட்டுவாசலில் வந்து நிற்கும். அதற்கு எப்படி வழி தெரிந்தது என்று நானும் சின்ன வயதில் திகைத்திருக்கிறேன்.
மோப்பம் பிடித்தே நம் வீட்டுக்கு வந்துவிடும்.

நான் வளர்த்த நாய்குட்டியைப் பற்றி நன்றி உள்ள ஜீவன் என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன் எழுதி இருந்தேன். வளர்ப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவம். இந்த இடுக்கை என்னுடன் பணிப்புரியும் சிரியா நாட்டைச் சார்ந்த ராமி ஜப்ரியின் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை உங்களுக்கு பகிரப்போகிறேன்.

எனக்கு அவருடன் கிட்டதட்ட இருபது வருடகாலத் தொடர்பு இருக்கிறது அதனால் அவருடைய அனுமதி பெறாமலேயே அவர் வளர்த்த பிராணிகளைப் பற்றி எழுதப்போகிறேன்.

15 ஆண்டுகளுக்கு முன் அவரும் அவருடைய மனைவியும் பூனை வளர்த்து வந்தார்கள். ஒரு பூனையின் மீது இருவர் காதல் கொண்டனர். இருவரும் மாறி மாறி அந்த ப+னைக்கு வயிற்றை புடைக்க வைப்பார்கள். அதன் வாழ்நாளில் பசி என்பதே என்ன என்று தெரியாத அளவுக்கு உணவு கொடுப்பார்கள்.

சூப்பர் மார்கெட் சென்றால் வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவதை விட்டுவிட்டு பூனைக்கு எது பிடிக்கும் என்ன கொடுக்கலாம் என்றும் பூனையைப் பற்றிய நூல்கள் என்ன வந்திருக்கிறது என்றும் தேடுவார்கள். அந்த பூனையும் இந்த இருவர்களின் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தது.

ராமி தம்பதியனருக்கு குழந்தை இல்லை கணவனும் மனைவியும் பணிப்புரிகிறார்கள். இருவருமே தங்களின் பணி முடிந்ததும் அங்கு இங்கென்று சுத்தாமல் பூனைக்காக வேண்டி வீட்டுக்கு வந்துவிடுவார்கள்.

ஒருநாள் கணவன் மனைவிக்கிடேயே பிரச்சனை வந்தது. அந்த பிரச்சனை வளர்ந்து விவாகரத்து வரை போனது. கணவனும் மனைவியும் பிரியக் கூடிய தருணம் வந்தபோது பூனை யாரிடம் இருப்பது என்ற கேள்வி அவர்களுக்குள் எழவே மனைவி தன்னிடம் தான் இருக்கவேண்டும் என்று போராடினார். கணவரும் போராடினார். இந்த பிரச்சனை அவர்களின் உறவினரிடம் வந்தது.
பிறந்த குழந்தை யாரிடம் வளர்வது என்ற சர்ச்சையைத்தான் நாம் பார்த்திருக்கிறோம் இங்கு பூனை யாரிடம் வளரவேண்டும் என்ற சர்ச்சை வளர்ந்தது. மனைவியிடம் ஒரு வாரமும் கணவரிடம் ஒரு வராமும் வைத்துக்கொள்ளும்படி தீர்ப்பு கூறப்பட்டது.

ஒரு வாரம் என்பது இருவருக்குமே மிகுந்த மனக்கஸ்டத்தை கொடுத்தது. நாளடைவில் மனைவி அந்த பூனையை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டார்.
இதை ராமியால் தாங்க முடியவில்லை அதை பெரிய இழப்பாக கருதினார். அந்த சமயத்தில் அவருடைய நண்பர் கூறிய ஆறுதலும் ஒரு நாய்குட்டியை வாங்கி நீ தனியே வளர்த்துக் கொள் என்ற வார்த்தையும் அவருக்கு பலமாக இருந்தது.

மறுநாளே ஜெர்மனி நாட்டைச் சார்ந்த “பாக்ஸர்” இன குட்டியை 25000 ரூபாய்க்கு வாங்கி வந்தார். இந்த சின்ன குட்டி இவ்வளவு விலையா ? என்றேன் இதன் வளர்ச்சி பெரிதாக இருக்கும் என்றார். அந்த சின்னக்குட்டி நான் பணிப்புரியும் அலுவலகத்தில் அங்கும் இங்கும் அழைந்தது. நான் தூக்கி மடியில் வைத்துக் தடவிக்கொள்வேன்.அதனுடைய ரோமம் மிருதுவாக இருந்தது. கருப்பும் காவியும் கலந்த நிறத்தில் அழகாக இருந்தது. அந்த குட்டிக்கு ரோக்கி என்று பெயரிட்டார்.

சிலமாதங்கள் கழித்து அந்த நாயை காண ராமியிடம் கூறினேன். ஒரு தினம் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. ஒரு கன்னுக்குட்டி அளவு வளர்ந்திருந்தது. கழுத்திலே பட்டைக்கட்டி வார் போட்டிருந்தார். முன் கால் இரண்டையும் தூக்கி அவரின் இடுப்பில் வைத்து அவரின் மோவாயை மோப்பிக்கும். அந்த தருணத்தில் ஆறடி ஆள் நிற்பது போல் காட்சி அளிக்கும்.அதன் வால் வெட்டுப்பட்டதைப் போல் சிறியதாக இருந்தது. “பாக்ஸர்” இன நாய்களின் வால் சிறிதாகவே இருக்கும்.

என் அலுவலகத்திற்கு சில நேரங்களில் ரோக்கியை அழைத்து வந்தாலும் அது ராமியுடன் தான் நிற்கும் நாங்கள் அதன் அருகில் செல்வது கிடையாது அதன் தோற்றமும் வளர்த்தியும் எனக்கு பயத்தை அளித்தது. ஒரு முறை ராமியிடம் நீ மறைவாக இருந்துக் கொள் ரோக்கி என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்றேன். அதுபோல மறைந்துக் கொண்டார். ஆனால் ரோக்கியோ அங்கும் இங்கும் அலைமோதியது ராமியைத்தேடி எல்லா இடத்திலும் அழைந்து இறுதியாக கழிவறை கதவளை சுறண்ட ஆரம்பித்தது. ராமி அங்குதான் மறைந்துக் கொண்டிருந்தார். அவரைப் பிரிந்து ரோக்கியாலோ ராமியாலோ இருக்க முடியாது என்ற நிலை அவர்களுக்குள் வளர்ந்து வந்துக் கொண்டிருந்தது.

ஒருமுறை ராமியின் தாயார் சிரியாவிலிருந்து வந்திருந்தார்;. இவர் நாய் வளர்ப்பது அவருக்கு பிடிக்கவில்லை. நேரடியாகவே ராமியிடம் கூறினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உன் மீது புகார் சொல்கிறார்கள் நீ நாய் வளர்ப்பது சரி அல்ல அதை விற்றுவிடு அல்லது எங்காயவது போய் விட்டு விடு என்று கூற ராமிக்கு வந்ததே கோபம் நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு என்று கோபமாக பேசி விட்டு அலுவலகம் வந்து விட்டார். சில மணி நேரங்கழித்து ராமியின் தாயார் தொலைபேசி செய்து உனது ரோக்கி எங்கோயோ ஒடிப்போயிடுச்சி என்று சொன்னதும் அலுவலகத்திலிருந்து அவசரமாக காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினார்.
அங்கே அவருடைய தாயார் மட்டும் ரொம்பவும் சோகமாக நின்றார்கள். ராமி நம்பிவிடுவார் என்று.

என்ரோக்கியை எங்கே விட்டே என்று காட்டுகத்து கத்தினார். அந்த கட்டிடத்தில் தங்கிருந்த அத்தனை பேரும் இவரின் பிளாட் வாசலில் கூடி விட்டார்கள். தான் யாரிடம் பேசுகிறோம் என்றுக் கூட தெரியாமல் தன் தாயை வாய்க்கு வந்தபடி பேசினார். இந்த சூழ்நிலையை அவரின் தாயார் எதிர்பார்க்கவில்லை தன் மகன் ரோக்கியின் மீது வைத்திருக்கும் வெறித்தனமான அன்பைக் கண்டு பயந்தே விட்டார். இதற்கு மேல் மூடிமறைத்தால் இவன் ஏதாவது செயயக் கூடும் என்பதை உணர்ந்தவராய் அவரின் உறவினர் வீட்டில் அடைத்து வைத்திருக்கும் உண்மையைக் கூறினார்.

அந்த நிமிடமே தனது தாயை அழைத்துச் சென்று ரோக்கியை மீட்டு கொண்டு வந்தார். மறுநாளே தன் தாயை சிரியாவிற்கு அனுப்பி விட்டார். ஓராண்டு காலம் கழித்து விடுமுறைக்காக சிரியா செல்வதற்கு ராமி தயாரானார். அந்த சமயம் ரோக்கியை கூடவே அழைத்துப்போக விருப்பமில்லை. தனது தாயார் ஏதாவது செய்து விடுவார் என்ற பயத்தில் எந்த நண்பர்களும் அதை வைத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லாததினால் நாய்களை பராமரிக்கும் பள்ளியில் 15 தினங்களுக்கு விட்டுச் செல்ல விசாரித்தார்.

நாய் பராமரிக்கும் பள்ளியில் ராமி அணிந்திருக்கும் துவைக்காத உடையுடன் நாயை ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். அந்த உடையை நாயுடன் வைத்திருப்பார்கள். அந்த உடையிலிருந்து வரும் வாடையை நாய் முகர்ந்து தனது எஜமான் பக்கத்திலேயே இருப்பதாக எண்ணிக் கொள்ளும் என்றும் விளக்கம் கொடுத்தார்கள்.

அதன்படி செய்து விட்டு சிரியா சென்ற ராமிக்கு ஒரே வாரத்தில் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. ரோக்கி இறந்து விட்டது என்று நாய் பராமரிக்கும் பள்ளியில் கூறியதும் அடுத்த சிலமணி நேரங்களில் பறந்து வந்தார்.

ரோக்கியை விட்டு சென்றதும் அது உணவருந்த வில்லை ரொம்பவும் சோகத்துடனே இருந்தது. மற்ற நாய்களுடன் பழகவிட்டும் அது தனித்தே இருந்தது. ஒவ்வொரு நாளும் அதனுடைய செயல்பாடுகள் குறைந்து இறந்து விட்டது என்று மருத்துவ சான்றிதழ் கொடுத்தார்கள்.

தன் எஜமானிடம் கொண்ட காதலால் ரோக்கிக்கு அவர் பிரிவை தாங்கும் சக்தியை இழந்து விட்டது.

ராமி கதறினார் அவருடைய துக்கத்தை யாருடைய ஆறுதலினாலும் மீளவைக்க முடியவில்லை. பல மாதங்களுக்கு பின் இன்றும் ரோக்கியின் புகைப்படத்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இறந்தது நாய்தானே என்று அவரால் எளிமைப் படுத்த முடியவில்லை . அவ்வபோது இந்த சம்பவங்களை அவர் மறந்திருந்தாலும் இந்த இழப்பு பெரிய அளவில் அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Monday, January 11, 2010

குளிர் காலச்சுற்றுலா


அமீரகம் துபாயிலிருந்து சுமார் 125 கிமீ தொலைவில் உள்ளது அல் அய்ன் என்ற சிறிய நகரம். இது அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நகரத்தில் சுற்றுலாவினர்களை கவரும் வண்ணம் பல இடங்கள் இருக்கிறது. அல்அய்னில் பிரதானமாக விளங்குவது ஜிபில் ஹபீட்(jebel hfeet) என்ற மலையடிவாரம். இந்த மலையின் உயரம் சுமார் 4000 அடி 21 வளைவுகள் 11.7 கிமீ தூரம். இந்த மலையின் உச்சியில் ஸ்டார் ஹோட்டல் உள்ளது. சுற்றுலா பயணியர்களின் வாகனங்களை சுமார் 1000 நிறுத்துவதற்கு செப்பனிட்டு அழகுப் படுத்தியிருக்கார்கள். இந்த மலையின் உச்சியில் நின்றுக் கொண்டு அல் அய்ன் நகரமுழுவதையும் காணமுடிகிறது. ஓமான் நாட்டு எல்லைகளையும் காணலாம்.

இந்த மலை அடிவாரத்தின் அடியில் ஒரு பசுமை கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கிராமத்தின் அழகே அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஓடைகள். இது வெண்ணீர் ஓடை ஆம். நான்கு புறமும் மலைகள் நடுவில் இந்த பசுமை கிராமம். வெண்ணீர் ஓடையில் கால்களை நனையவிட்டு அமர்ந்து ஓய்வெடுக்கலாம். குழந்தைகள் இந்த ஓடையில் விளையாடுவார்கள். சிலர் சறுக்கி விழுந்தும் இருக்கிறார்கள்.

நண்பர் சிராஜ்

இந்த வெண்ணீர் இயற்கையாகவே பூமியிலிருந்து வருகிறது. இந்த வெண்ணீரில் குளிப்பவர்களுக்கு மூட்டுவலி குறையும் என்று சில வயதானர்கள் கூறுகிறார்கள்.
குளிப்பதற்காக ஆண் பெண் தனித் தனிநீச்சல் குளங்கள் அமைத்து வைத்துள்ளார்கள். 5 திரஹம் குளியலுக்கான கட்டணம்.

குளிர் காலத்தில் குளிப்பதற்காகவேண்டியே பலரும் செல்வதைபோல் எனது குடும்பமும் எனது நண்பர் சிராஜ் குடும்பமும் கிளம்பினோம். புல முறை சென்றிருந்தாலும் இந்த முறை முதலில் அல் அய்னில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம்.


புதிய வரவாக ஆப்பிரிக்காவிலிருந்து வெள்ளை சிங்கம் வந்திருக்கிறது அதைக்காண மக்கள் கூட்டம். நாங்கள் காலை 11 மணிக்கு மிருகக் காட்சி சாலையினுல் நுழைந்தோம்.

அன்னப் பறவைகளும் வண்ணப் பறவைகளும் எங்களை வரவேற்றது. பல வகையான குரங்கின வகைகள். வால் இல்லாமலும் வாலோடும். நம் நாட்டு குரங்குகளும் வாழைப்பழத்தை காட்டியதும் பல் இளிக்க ஆரம்பித்தது.
வாழைப்பழத்தை கொடுக்கலாம் என்று கை நீட்ட குரங்கும் கை நீட்ட இடையிலே இன்னொரு கை நீட்டியது செக்யூரிட்டி(பாது காவலர்) கொடுக்கக் கூடாது என்று.
அந்த குரங்குகள் செக்யூரிட்டியை பார்த்த பார்வை மொவன நான் வெளியில வந்தா உன்னை கொதரிடுவேன்ன்னு சொல்றாமாதிரி உர் உர்னு உருமிக் கொண்டு பார்த்தது.

செக்யூரிட்டியின் கட்டுப்பாட்டையும் மீறி சில குழந்தைகள் சிப்ஸ்களை குரங்களுக்கு தூவிக் கொண்டிருந்தார்கள்.

சிங்கம் புலி நரி பாம்பு முதலை ஒட்டகச்சிவிங்கி ஆமை மான் இப்படி பல வகையான மிருகங்கள் பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு பராமரித்து வருகிறார்கள்.


நுழைவுக்கட்டணம் 15 திரகம் குழந்தைகளுக்கு 5 திரகம் வீதம் பெறுகிறார்கள்.

மாலை 6.30 மணிக்கு பறவைக் காட்சி ஸ்பெஷல் ஷோ காண்பிக்கிறார்கள்.

அமீரகத்தின் தேசிய பறவையான ராஜாளியை வைத்து அது செய்யக் கூடிய சாசகங்கள் பார்பதற்கு பிரமிப்பாக இருந்தது. நல்ல பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

அவ்வளவு கூட்டத்திலும் அந்தப் பறவை காவலர்களின் கைகளில் மட்டும் வந்து அமர்கிறது.

மிருகக்காட்சி சாலையினுள் உணவு விடுதிகள் இருக்கின்றன.


ஆப்பிரிக்காவிலிருந்து வந்த விருந்தாளி வெள்ளை சிங்கத்தை காணமுடியவில்லை. அவர் காலையில் பத்து மணிக்கு வந்து விட்டு மதியம் 1 மணிக்கு கூண்டுக்குள் போய்விடுவாராம். இது தெரியாமல் குரங்குகளின் சேட்டைகளை பார்த்துக் கொண்டு நேரத்தை அதிகம் சிலவு செய்து விட்டோம்.


அமீரகத்தில் வாழக்கூடிய தமிழன்பர்கள் பெரும்பாலானோர் இந்த மிருக்காட்சி சாலைக்கு வந்திருப்பார்கள். அப்படி வராதவர்கள் அவசியம் வந்து பார்க்கலாம்.

இரவு 7 மணிக்கு மிருகக்காட்சி சாலையிலிருந்து புறப்பட்டு ஜபீல்அபீத் என்ற வெண்ணீர் ஊற்றுக்கு சென்றோம். வெண்ணீர் குளத்தில் குளிப்பதற்கு இந்த குளிர் காலம் தான் ஏற்றது. அதில் குளித்தவர்கள் அதன் சுகத்தை அனுபவிக்க அடிக்கடி வருவார்கள். (நான் அடிக்கடி குளித்து அனுபவிக்கறதுனால சொல்றேன்)

இந்த குளிர்கால சுற்றுலா வெதுவெதுப்பாக இருந்தது.


இதெல்லாம் நம்மக் கேமராவுல சிக்கியது



உன் தொல்லை இங்கேயுமான்னு





Sunday, January 3, 2010

உங்களுக்கு பிடித்திருந்தால்


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.

தமிழ்மணத்தில் 2009-ல் பதிவர்களால் இடுக்கைளிடப் பட்ட அனைத்து கட்டுரைகள் கதைகள் கவிதைகள் மொழி சமுதாயம் பொருளாதாரம் இப்படி பதினாறு தலைப்புகளில் வரிசைப் படுத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இரண்டு எனது கட்டுரைகளில் ஒன்று மட்டும் முதல் கட்ட வாக்கெடுப்பில் பொருளாதாரம் தலைப்பில் தங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும; என்ற தொடர் கட்டுரையை பல வாசகர்கள் தேர்வு செய்து இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு தகுதி பெற வைத்துள்ளார்கள்.

வாக்குகளை வழங்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

தற்போது இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பு தமிழ்மணத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது இது ஜனவரி 12 ம்தேதி வரையில் நடக்கும்.

வாசகர்கள் ஆர்வத்துடன் படித்து தரமான கட்டுரைகளை தேர்வு செய்வது படிப்பாளிகளின் கடமையாக இருக்கிறது. நல்லக் கருத்துக்களை நாம் வரவேற்று ஊக்கப்படுத்துவது வலைப்பதிவர்களுக்கு பெரும் ஆதரவும் ஊக்கமுமாக இருக்கிறது என்பதை நினைவுப் படுத்துகிறோம்.

தங்க நகைகள் வாங்குவதில் நாம் எப்படி ஏமாற்றப்படப்படுகிறோம் என்பதைப் பற்றியும் எப்படி வாங்கப்படவேண்டும் என்ற வழிகளையும் அதன் தரத்தை பற்றியும் வைரத்தைப்பற்றியும் தொடராக நான் எழுதிய கட்டுரைதான்
தங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும; இதை நீங்கள் வாசித்து உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்கினை தமிழ்மணத்தில் சேர்ப்பிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

//பிரிவு: பொருளாதாரம் வணிகம் தொடர்பான கட்டுரைகள்//

வாக்களிப்புக்கு முன் உங்கள் சுய விபரங்களை தமிழ்மணத்தில் சேர்க்க வேண்டும்.

உங்களின் வருகைக்கு நன்றி.!

Wednesday, December 30, 2009

சென்னையும் என்னையும் சுற்றிப்பார்க்கச் சென்றேன்.!

சென்னையை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனக்குள் அதிகம் இருந்தது. ஆனால் எப்படி போய் பார்ப்பது யார் அழைத்துச் செல்வார்கள் என்றுதான் புரியவில்லை.

படிக்கும் காலங்களில் அதிகமாக ஊர் சுற்றமுடியாது. பள்ளியை காரணம் காண்பித்து பயணங்கள் நிராகரிக்கப்படும போது மனசு கஸ்டப்படும்.

குழந்தைகளுடன் எங்கயாவது வெளியூருக்கு பயணம் புறப்பட்டால் அந்த குழந்தைகளுக்கு குதுகுலமாக இருக்கும். குழந்தைகள் பயணத்தை பெரிதும் விரும்புவார்கள்.

பயணங்கள் முடிவதில்லை ஒவ்வொரு மனிதரும் பயணித்து கொண்டுதானிருக்கிறோம். இடம் விட்டு இடம் பெயர்வதுமட்டுமல்ல பயணம் .புறம் விட்டு அகத்தை சிந்திப்பதும் பயணம் தான் இது ஆத்ம பயணம்.

புறப் பயணங்களில் தேடிச் செல்வது எப்படி கிடைக்கிறதோ அது போல
அகப் பயணத்தில் தேடப்படுவதும் கிடைக்கிறது. எதையும் தேடினால்தான் கிடைக்கும் என்பது உயிர்களின் நியதி.

இப்போ நான் சொல்ல வருகிற விசயம் அகப்பயணமல்ல.புறப் பயணம் !
இது பல ஆண்டுகளுக்கு முன் சின்ன வயதில் நான் செய்த பயணம்.எல்லா நிகழ்வுகளிலும் ஆன்மீகம் கலந்துதான் இருக்கிறது. ஆன்மா இல்லாத நிகழ்வு பயணம் எங்கும் நடப்பதில்லை.

சென்னைத் தேடல் என் மனதுள் ஆழமாக பதிந்து இருந்தது. ஒருநாள் பக்ரீத் பண்டிகைக்கும் சில தினங்களுக்கு முன் எனது பெரியம்மா வீட்டில் 500 ரூபாய் பணமும் கொஞ்சம் கறியும் கொடுத்து வர அம்மா கூறினார். பெரியம்மா வீடு 40 கிமீ.

நானும் கொடுப்பதற்கு புறப்பட்டு சென்று விட்டேன். செல்லும்போதே மனதில் சென்னையின் தேடல் வழுவானது. பெரியம்மாவிற்கு கொடுக்கவேண்டிய பணம் கையில் இருந்ததினால் அந்தப் பணத்தில் சென்னையை பார்த்து வந்துவிடலாம் என்ற சிந்தனை உசுப்பேத்தியது. கையில் கறி இருக்கிறதே அதை என்னச் செய்வது என சிந்தனையிடம் கேட்டபோது அதை பெரியம்மாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பிடலாம் என்று மனசு சொல்ல அப்படியே நடந்தது.

எனது தகப்பனார் சிங்கப்பூரில் இருந்ததினால் அவர் தாயகம் வரும்போது அழைப்பதற்கு சென்னைக்கு எனது உறவினர்கள் தான் செல்வார்கள் நானும் செல்கிறேன் என்றால் அம்மா விட மாட்டார்கள். பள்ளிக்கூடம் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டுவார்கள். அந்த தாக்கமே என்னை தனியாக செல்லவைத்திருக்கிறது.

மயிலாடுதுறையிலிருந்து இரவு 12 மணி இரயிலில் சென்னைக்கு புறப்பட்டேன் . வீட்டில் அம்மா தேடுவார்கள் என்ற எண்ணமோ அதனால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய சிரமம் எவ்வளவு மன உளச்சல் எவ்வளவு என்ற கணக்கெல்லாம் எனக்கு தெரியவில்லை என்பதை விட சிந்தனை செய்யவில்லை என்பதுதான் சரி.

இரயிலில் செல்லும்போது ஒரு தம்பதி எனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர். என்னுடன் பேசிக் கொண்டு வந்தார்கள். எதற்காக சென்னை செல்கிறாய் என்று அவர்கள் கேட்ட போது எனது தந்தை சிங்கப்பூரிலிருந்து வருகிறார் அவரை அழைக்கப்போகிறேன் என்று பொய்யை கூறினேன்.
எக்மோர் ஸ்டேசன்தான் கடைசி என்பது தெரியாமல் எக்மோர் வந்தும் இரயிலில் அமர்ந்திருந்தேன். எனது எதிரில் இருந்த தம்பதியினர் இறங்கலையா என்று கேட்க நான் சென்னையில தான் இறங்கனும் என்று கூற அப்படி ஒரு ஸ்டேசன் இருக்குமோ என்ற சந்தேகத்திலேயே அவர்கள் இறங்கினார்கள்.

சற்று நேரத்தில் போர்ட்டர் ஏன் தம்பி உட்காந்திருக்கீங்க லக்கேஜ் இருக்கா என்று கேட்க இல்லீங்க சென்னையில தான் இறங்கனும்னு சொன்னதும் தம்பி நீ புச்சா ன்னு கேட்க நான் பேந்த பேந்த விழிச்சு ஆமான்னு சொன்னதும் இதான் மெட்ராசுன்னு சொல்லி இறக்கி விட்டாங்க.

எக்மோரை சுற்றிப் பார்த்து விட்டு நடந்தேன் . சென்னையின் நெரிசல் என்னை இரசிக்க வைத்தது. எங்கும் கூட்டம் யாரிடமும் எதையும் கேட்க பயம். ஏன்னை சென்னை வாசியாய் காண்பித்துக் கொள்ள கேப்பெல்லாம் வாங்கி தலையில் மாட்டிக் கொண்டேன். எங்கேச் செல்வது என்று புரியவில்லை நடந்தேன் நடந்துக் கொண்டே அண்ணாசமாதி வந்தேன். அதைப் பார்த்ததும் நாம் மெட்ராசுலதான் இருக்கிறோம் என்ற உணர்வு சந்தோசத்தைக் கொடுத்தது. இன்றும் தமிழகத்தில் எத்தனையோ மனிதர்கள் சென்னையை பார்க்காதவர்களாக பலர் தன்னையும் பார்க்காதவர்களாக வாழ்ந்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.


பர்மா பஜார் சென்று கேமரா வாங்கி மீண்டும் அண்ணா சமாதி வந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். செல்லும் வழியில் சட்டமன்றத்தைப் பார்த்தேன் அந்த ரோட்டில் அதிகம் வாகன நெரிசல் இல்லை. இரவு வந்தது அதனூடே தூக்கமும் வந்தது. எங்கு தூங்குவது என்று புரியவில்லை. கால் போன போக்கில் நடந்த போது ஹோட்டலில் தங்கலாம் என்ற யோசனையில் திருவல்லிக்கேணியில் ரூம் போட்டு தங்கி விட்டு காலையில் எழுந்து குளித்துவிட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் தஞ்சாவூர் போகலாம் என்று முடிவு செய்து பஸ்டாண்ட் வந்தேன்.

சென்னையில் பிட்பாக்கேட் அடிப்பார்கள் என்று சினிமாவில் பார்த்ததால் மணிபர்சை மட்டும் பனியனுக்குள் போட்டுக் கொண்டேன். தஞ்சை பஸ்சில் அமர்ந்ததும் கண்டெக்டர் டிக்கேட் கொடுக்க நான் பர்சை எடுக்க பனியனுக்குள் கையை விட்டால் பர்சைக் காணவில்லை. பதறிப்போனேன் கையில் வைத்திருந்த பெட்டியிலும் தேடிவிட்டேன். கிடைக்கவில்லை என்ன தம்பி பர்சை அடிச்சுட்டாங்களான்னு கண்டக்டர் கேட்டதும் எனக்கு அழுகை வந்துவிட்டது. பஸ் இன்னும் புறப்படவில்லை பலர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் செய்தி பரவவே எல்லோரும் எனக்காக இறக்கப்பட்டார்கள். ஐயோ பாவம் சின்ன பையனா இருக்குறான் இவனிடம் பர்சை அடிச்சுருக்காங்களேன்னு அனுதாபப்பட்டார்கள்.

இறங்கி தேடிப்பாரு ன்னு ஒருவர் அட்வைஸ் பண்ண முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் என்னைக் கூப்பிட்டார். உன் பேரென்ன எந்த ஊரு என்று விசாரித்தார். நான் அழுதுக் கொண்டே ஊர் பெயரைச் சொன்னதும் பர்சுல எவ்வளவு பணம் வைத்திருந்தாய் எனக்கேட்டார். 300 ரூபாய்கு அதிகம் என்றேன்.நீ தனியாவா வந்தே எனக்கேட்டார் ஆமாம் என்றதும் அவர்கையில் வைத்திருந்த பையிலிருந்து எனது பர்சை எடுத்துக் கொடுத்தார். பஸ்சுக்குள்ள தான் கிடந்தது என்றதும் எனக்கு சந்தோசமாக இருந்தது.

என் மீது அனுதாப்பட்ட எல்லோரும் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள். பர்சை எடுத்துக் கொடுத்த நல்ல மனிதர் எல்லோராலும் பாராட்டுப் பெற்றார்.

தஞ்சையில் வந்து இறங்கி எங்கு செல்வது என்று தெரியாமல் கடைத்தெருக்களில் சுற்றி விட்டு இரவு மாநகராட்சி விடுதியில் தங்கி விட்டு காலையில் புறப்பட்டு கும்பகோணம் சென்றேன்.அங்கும் இப்படித்தான் ஒரே நாளில் மீண்டும் சென்னைக்கு கிளம்பினேன் இன்னொரு முறை பார்க்கவேண்டும் என்ற ஆவல் என்பதைவிட கையில் காசு இருந்தது. சரியான பைத்தியக்காரனா இருப்பான் போலிருக்கேன்னு நீங்க நினைக்கலாம்.

பைத்தியம்தான் குறிக்கோள் இல்லாத பயணம் செய்பவர்களும் வாழ்க்கையை வாழ்பவர்களும் பைத்தியம்தான்.

நாலு காசு சம்பாதிச்சா அதன் வலி என்னன்னு தெரியும் என்று சொல்வார்கள். அப்பா சம்பாதிச்ச காசுல பெத்தவங்களுக்கு வலியை மட்டும் கொடுத்திட்டு என்னை மாதிரி ஊர்சுற்றியவர்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.சரியான வழிக்காட்டல் இல்லாமையே இது போன்ற நிகழ்வுகள் நடந்தேறுகிறது.

ஒருவழியாக காசு கறைய கறைய சில தினங்களில் உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அப்போது தான் தெரிந்தது நான் காணாமல் போய்விட்டதாக என்னைத் தேடி பல ஊர்களுக்கு அழைந்ததும் பெருநாளையும் கொண்டடாமல் துக்கம் அனுஷ்டித்ததும் எல்லாவற்றையும் உறவினர்கள் கூற அந்த நிமிடமே ஒரு ஆளை அனுப்பி நான் கிடைத்துவிட்டேன் என்ற செய்தியை எங்க வீட்டுக்கு சொல்லி அனுப்ப எனக்கு பயம் வந்தது.

உறவினர்களில் சிலர் என்னைப் பாராட்டினார்கள் இந்த வயசுல இவ்வளவு தைரியமா நீ மெட்ராஸ் வரைக்கும் தனியா போய் விட்டு வந்திருக்கிறே உனக்குள்ள துணிச்சல் யாருக்கும் வராதுப்பா என்றும் …
சிலர் நீ யெல்லாம் ஒரு புள்ள இதுவே என் புள்ளயா இருந்தால் வெட்டி காவுக் கொடுத்திருப்பேன் என்று சிலரும் சலித்தனர்.

எல்லோருடைய பேச்சையும் புதுப் பெண்ணைப்போல் தலைக்குனிந்து கேட்டுக் கொண்டு பதில் சொல்லாமல் நின்றிருந்தேன்.தவறு செய்தால் தலைக் குனிந்துதானே ஆகவேண்டும்.

சில தவறுகள் செய்யும் போது அது தவறாகத் தெரிவதில்லை செய்ததற்கு பிறகு தான் தெரியும். காரணம் அனுபவயின்மையும் அறிதலின்மையும்.

வாழ்க்கையும் கிட்டதட்ட என் கதைமாதிரிதான். வாழ்க்கை பயணத்தில் சம்பாதிப்பைதான் பலர் வாழ்க்கை என்கிறோம். அதற்காக வேண்டி எதையும் இழக்க தயாராக இருக்கிறோம்.

தேடித்தேடிப் பயணிக்கிறோம் பொருள்களை குவிக்கிறோம் ஆனால் தேடப்பட்டதில் நிறைவு கண்டோமா ?. கைத்தடியை குடையென்று ஏந்தினால் நனைந்து விடுவோம் அல்லது காய்ந்து விடுவோம். ஆனால் குடையை கைத்தடியாக பயன்படுத்தலாம். குடைன்னு நான் சொல்வது அகப் பயணம்.

புறப்பயணம் பொருளைக் கொடுக்கும் அகப்பயணம் அமைதியைக் கொடுக்கும்
எல்லோரும் பொருள்தேடுவது சந்தோசமாக வாழ்வதற்கு ஆனால் சந்தோசம் எதில் இருக்கிறது.?

Saturday, December 26, 2009

வானலையில் கலந்த நீரோடை


அமீரகம் துபாயில் ஐந்தாண்டுகளாய் இயங்கிவரும் வானலை வளர் தமிழ் அமைப்பு கவிஞர்களை உருவாக்கியும் எழுத்துலகில் ஆர்வமுள்ளவர்களை ஊக்கவித்தும் வருகிறது.
சுவிஸ்டார் பவன் உணவகத்தின் உரிமையாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் மாதந்தோரும் ஒன்றுக் கூடல் நிகழ்வும் அதன் நிமித்தம் சிறப்பு விருந்தினர்களை அழைத்து அவர்களை கௌரவித்து தமிழ்த்தேர் என்ற தனிச்சுற்று பத்திரைக்கையும் வெளியீட்டு வருகிறது.


இது வரையில் 44 தலைப்புகளில் கவிதைகள் அரகேற்றப்பட்டிருக்கிறது. சமயங்கள் சார்பற்ற தமிழ் ஆர்வம் கொண்ட அன்பர்கள் சங்கமிக்கும் அமைப்பு இது என்று கூறுவதில் பெருமிதம் கொள்ளலாம்.

புலவர் ஜின்னா அளிக்கும் விருதை தன் கணவருடன் பெரும் மலிக்கா


இந்த அமைப்பில் 25.12.2009 அன்று நடந்த மாதாந்திர நிகழ்வில் கவிஞர் திருமதி மலிக்கா பாருக் அவர்களுக்கு விருது ஒன்றை தனிப்பட்ட முறையில் சிறுகதை எழுத்தாளர்கள்; ஷேக்மதார், திருச்சி சையது, கமால் ஆகியோரும் அவர்களுடன் இலங்கை புலவர், காவியத்திலகம் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்களும் இணைந்து வழங்கி திருமதி மலிக்காவை உற்சாகமூட்டினார்கள்.

திருமதி மலிக்கா பாருக் எழுதிய கவிதைகளைப் பற்றியும் புலவர் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்கள் அவருக்கு பிடித்த கவிதைகளை வாசித்து கவிஞரைப் பாராட்டினார்.

திருமதி மலிக்கா பாருக் அவர்கள் நீரோடை என்ற தனது வலைதளத்தில் கவிதைகளை எழுதிவருபவர். நூறு கவிதைகளை இதுவரையில் எழுதிஉள்ளார். விரைவில் கவிதை நூல் ஒன்றை வெளியிட உள்ளார்.

சமூகம் சார்ந்த கவிதைகளை அதிகம் எழுதிவருபவர்.இவரின் எழுத்துநடையும் சொல்லவரும் கருத்து நடையும் படிப்பவருக்கு எளிதில் விளங்கிக் கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.

இவர் வானலை வளர் தமிழ் அமைப்பில் அங்கத்தினராக இருந்து வருகிறார். மற்றும் அமீரகப்பதிவர் வட்டத்திலும் வலம் வருபவர்.இவரின் எழுத்து திறமைக்கு
தனியொரு விழாவினை விருது வழங்கியவர்கள் செய்திருந்தால் இன்னும் மெருகூட்டப்பட்டிருப்பார் என்பது எனது ஆதாங்கம்.

நானும் வானலை வளர் தமிழின் அங்கத்தினர் என்றாலும் அவரை அந்த அமைப்பின் சார்பாகவும் அமீரகப்பதிவர்களின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

மென்மேலும் இன்னும் நிறைய கவிதைகளை எழுதி பல விருதுகளை பெறவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.

புலவர்ஜின்னா, பாருக், மலிக்கா

கவிஞர் திருமதி மலிக்கா அவர்களின் எழுத்துப் பணிக்கு முக்கியமான முதல் உற்சாகர் என்றால் அவருடைய அன்புக் கணவர் பாருக் அவர்கள்.அவருடைய தூண்டுதலும் மலிக்காவின் எழுத்துக்கும் விருதுக்கும் காரணமாக இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.

திருமதி மலிக்காவை போன்ற வலைதள பெண்எழுத்தாளர்கள் அமீரகத்தில் நிறைய பேர்கள் இருந்தாலும் சில பெண்பதிவர்களின் எழுத்தும் அவர்களின் மேடைப் பேச்சும் என்னை பாதித்திருக்கிறது.
அப்படிப்பட்டவர்களில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி ஜெஸிலா ரியாஸ் இவரின் பேச்சாற்றல் அமீரகத் தமிழர்கள் நன்கு அறிவார்கள் பல மேடைகளை கலக்கியவர் பல விருதுகளை வென்றவர்.
மற்றும் ஐந்தரைப் பெட்டி ஹுசேனம்மா அவர்களின் எதார்த்த எழுத்து நடை பல பதிவர்களை கலக்கிருக்கிறது என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்.

அந்த வரிசையிலே கவிஞர் திருமதி மலிக்கா அவர்களும் இடம்பெறுகிறார் என்கின்ற போது அவரை உளமாற வாழ்த்தி இன்னும் நிறைய எழுதி பதிவுலகில் விருதுகள் பல பெற வேண்டும் என்பது அமீரகப்பதிவர்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.

திருமதி மலிக்கா அவர்களுக்கு உற்சாகமூட்டி விருது வழங்கிய நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

Tuesday, December 22, 2009

எகிப்து பேரழகி பேசும் தமிழ் அழகு


DANA
எனது இலக்கிய ஆர்வத்தின் ஊடாக பல நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது எனக்கு சந்தோசமான விசயம்.சென்ற ஆண்டு எனது கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு முன் அறிமுகமானார் திருவிடச்சேரி எஸ்.முஹம்மது பாருக். இவர் துபாய் தீவாவில்(Dewa) கணக்கு அதிகாரியாக பல ஆண்டுகளாய் பணிபுரிந்து வருபவர். ஈமான் என்ற அமைப்பில் தணிக்கையாளராக செயல்பட்டு வருபவர்.

பழகுவதற்கு நல்ல மனிதர்.பல அமைப்புகளின் விழாக்களில் பேச அழைத்தால் சுறுக்கமாக தெளிவாகப்பேசக் கூடியவர். இந்தளவில் தெரிந்துக் கொண்ட எனக்கு அவர்களின் குடும்பத்துடன் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது.
இவரின் துணைவியாரின் சாதனையை சொல்வதற்குதான் இந்தக் கட்டுரை.

வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழக்கூடிய தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் ஒரு பாடமாக உள்ள பள்ளிகளைத் தேடி குழந்தைகளை சேர்ப்பவர்கள் மிகக் குறைவு என்று தான் சொல்லவேண்டும்.பலரும் ஆங்கிலம் மட்டும் தன் குழந்தைப் படித்தால் போதுமானது என்ற கருத்தில் இருப்பதால் தங்களின் இல்லங்களில் கூட குழந்தைகளிடம் தமிழ் பேசுவதை தவிர்த்து ஆங்கிலம் பேசி வருகிறார்கள்.

அமீரகத்தில் கிரஸண்ட் இங்கிலீஸ் ஹைஸ்கூலில் பத்தாம் வகுப்பு வரையில் தமிழ் பாடத் திட்டத்தை வைத்துள்ளார்கள் என்று அதன் தலைமை ஆசிரியர் கலீபுல்லா கூறியபோது ஆச்சரியமாக இருந்தது.வரும் வருடங்களில் மேல் நிலை வகுப்புகளுக்கும் தமிழ் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக கூறினார். அந்தப் பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு நல்வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன்.(எனது இரு பெண்பிள்ளைகளும் அந்தப் பள்ளியில்தான் படித்து வருகிறார்கள்)

S.முஹம்மது பாருக் உடன் டானா(DANA)

எஸ்.முஹம்மது பாருக் அவர்களின் குடும்பத்தார் துபையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். கீழ்தளத்தில் எகிப்து நாட்டைச் சார்ந்த அகமது முஹம்மது ரிஸ்வான்னும் அவரது மனைவி ஜஹானும் அவர்களின் மூன்று பெண் குழந்தைகளும் அவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர்களின் மூன்றாவதாக பிறந்த டானா என்ற இரண்டுமாத பெண் கைக் குழந்தை அவர்களின் மனதை கொள்ளைக் கொண்டாள் . அடிக்கடி அந்த டானாவைப் பார்ப்பதற்கு பாருக் மகள் வருவார்.

குழந்தை டானாவிடம் ஏற்பட்ட அன்பினால் தன் வீட்டுக்கு அடிக்கடி தூக்கி வந்து விளையாடுவதும் அந்தக் குழந்தையிடம் தமிழில் பேசுவதுமாய் வளர்ந்த டானாவிற்கு தற்போது வயது எட்டு. இன்று டானா சுத்தமான தமிழில் உரையாடுகிறாள்.
உரையாடுவதுமட்டுமல்ல தினமும் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதும் அந்தக் கதைகளை பாருக் துணைவியாரிடம் சொல்வதுமாய் இருக்கிறாள். சின்னத்திரை நட்சத்திரங்களும் திரைப்பட நாயகர்கள் நாயகிகள் என பிரபலங்கள் அனைவரையும் தெரிந்து வைத்திருக்கிறாள்.


டானாவிடம் அம்மா யார் என்று கேட்டால் பாருக் துணைவியாரைத்தான் காட்டுகிறாள்.
அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட டானா தனது பள்ளிப் படிப்பும் அரபாக இருக்க தனது வீட்டில் தனது பெற்றோர்களுடன் அரபு பேசுகிறாள். குழந்தைகளுடன் விளையாடும்போது ஆங்கிலத்திலும் பாருக் வீட்டில் மட்டும் சுத்தமான தமிழ் பெண்ணாய் காட்சி அளிக்கும் டானா மிகவும் அழகான பெண்.
மற்றவர்களுடன் பேசும்போது கூட ரொம்பவும் மரியாதையுடன் பேசுவதும் நம் தமிழ் கலாச்சாரத்தை டானாவிற்கு கற்றுக் கொடுத்த பாருக் துணைவியாரின் தமிழ்பற்றை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தான் பெற்ற குழந்தையை பராமரிப்பது போல் டானாவின் மேல் அளவிலா அன்பை வைத்துள்ளார். பாருக் தம்பதியருக்கு ஒரு பெண்குழந்தையும் இருக்கிறது.
வெளியில் எங்கு சென்றாலும் டானாவிற்கு மறக்காமல் ஏதாவது திண்பண்டங்கள் வாங்காமல் வருவதே இல்லை. டானாவை விட்டு அவர்களாலும் பிரிந்து இருக்கமுடியவில்லை.வீட்டில் எந்த தேவை வைத்தாலும் டானா இல்லாமல் எதையும் செய்வதில்லை என்று பாருக் துணைவியார் கூறுகிறார்கள்.

சென்ற ஈத்விடுமுறையில் பாருக் குடும்பத்தினருடன் எனது குடும்பத்தார்களும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தார்களுடன் மஸ்கட் சென்று ஒருநாள் தங்கி வந்தோம். அந்த சமயத்தில் பாருக்கின் துணைவியார் டானாவை நினைவு கூர்ந்துக் கொண்டே இருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அதன் நிமித்தம் சில தினங்களுக்கு முன் பாருக் அவர்களின் இல்லத்திற்கு டானாவை சந்திக்க எனது குடும்பத்தார்களுடன் சென்றிருந்தேன்.

விளையாடிக் கொண்டிருந்த டானா பாருக் கூப்பிட்டதும் ஓடிவந்து நின்றாள். என்னை அறிமுகம் செய்ய கைகுலுக்கிய டானாவிடம் நீ நலமா என்றேன். அவள் புன்முறுவலுடன் நலம் என்றாள். எனது குழந்தைகளிடமும் கைக் குலுக்கிக் கொண்டாள். கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வருகிறேன் என்று பாருகிடம் கூறிவிட்டு செல்ல சற்று நேரத்தில் வீட்டுக்குள் வந்தாள் டானா.

நான் டானாவிடம் பேசினேன் புன்முறுவலுடன் பதில் பேசினாள். உன்னைப் பற்றி வலைதளத்தில் எழுதப்போகிறேன் அதனால் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று கூறியதும் சில வினாடிகளில் பாருக் மகளாரிடம் சென்று தலை சீவிக் கொண்டு ரெடியானாள்.

புதிதாக என்னைக் கண்டதால் அவளுக்கு வெட்கம்.அரபு பிள்ளைகள் அதிகம் வெட்கப்படுவதில்லை டானாவை பொருத்தவரையில் அரபு குலமாக இருந்தாலும் தமிழர்களிடம் பழுகும் போது தமிழ் கலதச்சாரம் அவளிடம் நிறைந்திருப்பதை காணமுடிந்தது.

பெரும்பாலோருக்கு தாய்மொழி என்பது ஒன்று தான் ஆனால் டானாவிற்கு இரண்டாக இருக்கிறது. தமிழ் பேசுவதற்கு பிரியப்படுகிறாள். அவளின் பெற்றோர்கள் இதற்கு எப்படி சம்மதித்தர்கள் என்று பாருக் துணைவியாரிடம் கேட்டேன்.
அவர்கள் ஒன்றுமே சொல்லவில்லை தனது மகள் இன்னொரு மொழியை கற்றுக் கொள்வதில் அவர்களுக்கு சந்தோசம்தான். காலையில் பள்ளிக் கூடம் சென்று விட்டு வந்ததுமே எம்புள்ள அம்மா என்று கூப்பிட்டபடி வந்துவிடுவாள். அவளுக்கு கோழிகறி ரொம்பவும் பிடிக்கும்.நான் கோழிக்கறி ஆக்கும்போதெல்லாம் எம்மகளை கூப்பிட்டு கொள்வேன்.தமிழ்நாட்டு உணவு மீது என்புள்ளைக்கி ரொம்ப பிரியம் என்று பாருக் துணைவியார் கூறினார்.

டானா மீது பாருக் குடும்பம் வைத்திருக்கும் அன்பு டானாவிடம் தெரிகிறது.
தமிழை தாய்மொழியாய் கொண்ட தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஆங்கில மோகத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எகிப்து நாட்டின் பேரழகிக்கு தமிழை ஊட்டி வளர்த்த பாருக் துணைவியார் நம் அனைவர் நெஞ்சிலும் நிற்கிறார்கள்.

உடல் நலம் சரியில்லாத நிலையில் டானாவை தன் பிள்ளைப் போல் பாவித்துவரும் பாருக் துணைவியார் அவர்கள் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல் அருளால் சுகமடைந்து எந்த நோயுமின்றி நீடோடி வாழ வேண்டுமாய் இறைஞ்சுகின்றேன்.

காலம் கடந்தாலும் டானா தமிழையும் பாருக் குடும்பத்தையும் மறந்திட மாட்டாள். பசுமரத்தாணியாய் தன்பிஞ்சு மனதில் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் பதித்து வைத்திருக்கிறாள்.

டானாவை அமீரகத்தில் இயங்கும் தமிழ் அமைப்புகள் தங்களின் விழாக்களில் மேடை ஏற்றி அவளுக்கு உற்சாகம் வழங்க முன் வர வேண்டுமாய் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.