உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, November 30, 2009

தாயிற் சிறந்ததொரு வேலையுமில்லை…

வறுமையின் கைகளில் சிக்கிவிடாமல் தப்பித்துக் கொள்வதற்கும் வளமான வாழ்க்கையின் கோட்டைக்குள் நுழைந்து விடுவதற்கும் பலர் கனவுகளுடன் கரைக்கடந்து வளைகுடாவில் வளம்வருகிறார்கள்.

தேடி வந்த வேலையை விடாமல் எந்த பணியிலும் தன்னை உட்படுத்திக் கொண்டு ஊதியத்தைப் பற்றி உணர்வில்லாமல் உண்மையான ஊழியனாகவே உழைத்துக் கொண்டு ஊருக்கு போவதும் வருவதுமாய் பலர் வாழ்ந்துக்கொண்டு வருகிறார்கள்.

ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் தங்களின் வாழ்வியலில் எப்போதும் தேவை இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.நண்பர்களிடம் கடன் வாங்கிய வழக்கத்திலிருந்து மாறிப்போனவர்கள் இன்று வங்களின் கடன் அட்டைகளில் அட்டைகளாய் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்பவும் போல் காலை 9 மணிக்கு வேலைக்கு வரக் கூடிய நாங்கள் சென்ற ஆண்டு நவம்பர் 18-அன்றும் வந்தோம்.
கணக்கராக நகைக்கடையில் பணிப்புரியும் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த தாவூது பணிகளுக்கிடையே பரப்பரப்பாக இருந்தார்.அவரின் செல் போன் அழைத்ததை எடுத்து அவர் பேசுகையில் அவரின் முகம் மாறிப்போனது. கொஞ்ச நேரத்தில் கண்களிலிருந்து அடை மழையைப் போல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவரால் பேசமுடிய வில்லை.

அவரின் எதிர்மேஜையில் அமர்ந்திருந்த நான் என்னாச்சு என்று பதட்டத்துடன் கேட்க ஐந்து நிமிடம் அவர் எதுவுமே பேசாமல் இருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார்.

இன்று காலை அவருடைய தாயார் காபி அருந்திக் கொண்டிருக்கும் போது மயக்கமாகி சாய்துவிட்டதாகவும் திருவாரூர் மருத்துவ மனையில் பார்க்க இயலாது என தஞ்சைக்கு அழைத்து போவதாகவும் அவரின் மனைவி கூறியிருக்கிறார்.

இந்த செய்தியை அவர் சொல்வதற்குள் பல நிமிடங்கள் நீண்டிப் போனது .துக்கம் அவரை பேசவிடாமல் கண்களில் மட்டும் கண்ணீரை கொட்டச் செய்துக் கொண்டிருந்தது.

தாயகத்தில் குடும்பத்தினர்களுடன் வாழும்போது பிரச்சனைகள் எரிமலையாய் வெடித்தாலும் அவைகளை பதட்டமில்லாமல் பதப்படுத்தும ;நம் மனம் கடல் கடந்து உறவுகளைப்பிரிந்து வாழக்கூடியவர்களுக்கு வீட்டில் யாருக்கேனும் தலைவலி என்றாலும் கூட என்னமோ ஏதோ என அன்று முழுவதும் ரணமாகித்தான் போகிறது மனம்.

பிரிவு கடந்தவைகளை அசைபோட வைத்து மனிதர்களை ஆழமாக நேசிக்க வைக்கிறது.

சற்று நேரத்திற்குள் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் செய்திபரவவே பலரின் ஆறுதல்களும் அறிவுரைகளும் அவரைச் சூழ்ந்தன.

மேலாளர் விசாரித்தார் தாவூதால் செய்தியை சொல்ல முடியவில்லை.உதவிக்கு நான் பேசினேன்.

15 தினங்கள் அவசர விடுறையில் தாவூது ஊருக்கு ஊருக்கு அனுப்பப் பட்டார். வீட்டுக்கு இவர் ஒரே பிள்ளை தந்தை இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தன.தன் தாயின் சகோதரரின் மகளை திருமணம் முடித்து 4 ஆண்டுகளில் இவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்.

நகைக்கடையில் 9 ஆண்டுகளாக பணிப்புரிந்து இப்போது தான் கொஞ்சம் தன் வாழ்க்கையின் தேவைகளை நிரப்பிக் கொண்டு வந்தார்.ஆனால் சேமிப்பு என்று பார்த்தால் இன்னும் கடனில் தான் கணக்கிருக்கிறது.

மருத்துவர் பரிசோதித்துவிட்டு அவரின் தாய்க்கு மூளையில் சின்னப் பிரச்சனை இருக்கிறது அதனால் வலது பக்கத்தின் செயல் துண்டிக்கப்
பட்டிருக்கிறது.அவர்களின் நினைவும் 50 சதவீதம் குறைந்திருக்கிறது அவர்களால் நடக்கவும் பேசவும் இயலாது என்று பெரிய பட்டியல் போட்டு கூறினார்.

அந்த தாய் கண்விழித்த போது தன் எதிரே நின்றுக் கொண்டிருந்த மகனின் முகத்தைக் கண்டதும் சந்தோசத்தில் ஏதோ பேச முயற்சித்தார் ஆனால் பேச்சு வரவில்லை.ஊமையரைப் போல் கை அசைத்தார்கள்.
தாயின் கையை பிடித்து அம்மா நான் வந்து விட்டேன் நீ கலைப்படாதே உன்னை குணப்படுத்தி விடுவேன் என்று தன் மகன் கூறியதைக் கேட்டதும் அந்த தாய் தன் நோயையும் மறந்து சிரித்தார்.

15 தினங்கள் விடுமுறையில் சென்றவர் 2 மாதங்கள் கடந்தும் அவர் வரவில்லை.தொடர்புக் கொண்டு பேசினேன்.

இப்போதுதான் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அம்மாவை அழைத்து வந்துள்ளேன். என்தாயை பார்த்துக் கொள்வதற்கு எனக்கு ஆட்கள் இல்லை நான் மருந்து மாத்திரைகள் கொடுத்தால் மட்டுமே அவர்கள் சாப்பிடுகிறார்கள் என் மனைவியோ மற்ற யாரும் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள். நான் மருந்து வாங்க கடைக்கு சென்று விட்டால் அவங்களைவிட்டுவிட்டு நான் துபாய் போய் விட்டதாக எண்ணி அழுகிறார்கள்.

சின்ன பிள்ளைக்கு பணிவிடை செய்வது போல அவங்களுக்கு எல்லாமே செய்துவருகிறேன்.படுத்த படுக்கையிலேயே மலஜலம் போகிறார்கள்.அதையும் நான் தான் எடுத்து சுத்தம் செய்து வருகிறேன்.என்கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் யாரையும் நம்பி என்தாயை ஒப்படைத்து விட்டு வர எனக்கு மனமில்லை.சம்பாத்தியம் எப்போது வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.என் தாயைவிட எனக்கு வேறொன்றும் பெரிதாக தெரியவில்லை என்று தாவூது கூறியபோது என் கண்கள் பணித்தன.

எத்தனைபேருக்கு இது போன்றதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.கிடைத்த வாய்ப்பை எத்தனைபேர் தாய்க்காக தன்னை அர்பணித்திருக்கிறோம்.
இவரைப் போன்றவர்கள் இருக்கும் இந்த காலத்தில் முதியோர் இல்லங்களும் இருக்கத்தான் செய்கிறது.

5 மாதங்கழித்து துபாய் வந்தார் தன்வேலையை ராஜினாமா செய்வதற்கு.சரியாக ஐந்து நாட்களில் தன் அலுவலக விசா கேன்சலேசனை முடித்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

ஆனால் சில மாதங்களில் மீண்டும் வருவார் என
அவரின் வருகைக்காக எங்கள் அலுவலம் இன்றும் காத்திருக்கிறது.

10 comments:

சென்ஷி said...

படித்ததும் ஏதும் சொல்ல முடியவில்லை இஸ்மத்ஜி.. நண்பரின் தாயார் முழுமையாய் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்...

ஹுஸைனம்மா said...

நெகிழவைக்கிறது நண்பரின் தாய்ப்பாசம். எல்லா மகன்(ள்)களின் மனதிலும் பாசம் இருக்கிறது. சிலருக்கு கடமை(ன்)கள் கட்டிப்போடுகின்றன.

இறைவன் காக்கட்டும் எல்லாரையும்.

அது ஒரு கனாக் காலம் said...

I don't have words to express my feelings, hope your friend's mission succeeds quickly and his mother recover fully soon . Inshaallah

Barari said...

THAYAI KAAPPATRA THUDIKKUM DAWOODAI PONDRA THAIPPASAM ULLA THNAYARKALUM IRUKKIRAARKAL.ITHAI PONDRU THAYAI THIRUMBI KOODA PARKKATHA THARUTHALAIKALUM IRUKKATHTHAAN SEIKIRAARKAL.DAWOODIN THAYAR NALAM PERA IRAIVANIDAM PIRARTHANAI SEIKIREN.

சந்தனமுல்லை said...

மிகவும் அருமையான இடுகை! ..அவரது அன்னையின் உடல்நலம் பெற எனது பிரார்த்தனைகள்!

வினோத்கெளதம் said...

நெகிழ வைத்த இடுகை..

செ.சரவணக்குமார் said...

ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை நண்பரே, கண்கள் ஈரமாயின. நண்பரின் தாயார் விரைவில் உடல்நலம் தேறிட நாம் அனைவரும் வேண்டிக்கொள்வோம்.

Anonymous said...

நெகிழ வைக்கிறது. அவர் தாயார் விரைவில் பூரண குணம் அடைய வேண்டிக்கொள்கிறேன்.

ரோஸ்விக் said...

பாவம் அவருக்கு இது கடினமான சூழ்நிலை :-(
மிகவும் வருத்தமாக உள்ளது. இன்றைய காலக் கட்டத்தில் குழந்தைகள் குறைவாய் பெற்றுக்கொள்கிறோம்... விலைவாசி உயர்வையும், மற்ற பிற காரணங்களையும் காட்டி....இது போன்ற சூழ்நிலைகளில் நமக்கு உதவ ஆள் இல்லாமல் சிரமப் பட வேண்டியதாகிறது...

அவரது தாயார் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

கிளியனூர் இஸ்மத் said...

வருகைத்தந்த அனைவருக்கும் நண்பரின் தாயாருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.!

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....